Monday, December 18, 2006

7. குழந்தை கண்ணன் என்றால் குறும்பல்லவா!!

குழந்தை கண்ணன் என்றால் குறும்பல்லவா
அழகான அவன் செயல்கள் அமிழ்தல்லவா..
பழகவே அவனும் நல்ல தோழனல்லவா
வழங்கும் தமிழில் நானும் அதைச் சொல்லவா...

(குழந்தை கண்ணன்..)

வெண்ணை பானை உடைத்து சிரிக்கின்றான்
உண்டிவில் கொண்டு தயிர்பானை தகர்க்கின்றான்
அண்ணன் பலராமன் பலசொல்லி கேளாதவன்
கண்ணன் குறும்புகளில் என்றும் குறையாதவன்

(குழந்தை கண்ணன்..)


அரக்கரை அழித்திடவே அவனும் வந்தான்
அரவம் ஒன்றின்மேல் நடமாடி நின்றான்
உரலொன்றில் அன்னைதான் கட்டி வைத்தால்
மரம்மோதி ஆங்கே மோட்சம் தந்தான்.

(குழந்தை கண்ணன்..)

தின்ன இவன் மண்கொண்டான் என்றே
அன்னை கேட்க வாய்திறந்து வையகம்
தன்னை காட்டியவன் மயங்க வைத்தான்.
இன்னும் என்னென்ன இவனே செய்வான்.

குன்றொன்றை அவனும் குடையாய் கொண்டான்
கன்றுபசுக்கள் யாவிற்கும் அபயம் தந்தான்.
இன்றுஇக் கண்ணன் யாது செய்வான்
என்று யாவரையும் நோக்கச் செய்தான்.

குழந்தை கண்ணன் என்றால் குறும்பல்லவா
அழகான அவன் செயல்கள் அமிழ்தல்லவா...

***

பாவைத்திருநாளில் சாத்வீகனின் பாமாலை.
மார்கழி 3 - ஓங்கி உலகளந்த - மூன்றாம் பாமாலை

9 comments :

VSK said...

"குறும்பு" மாதத்தில்,
அகில உலக குறும்பனான, "கண்ணனை" எங்களுக்கெல்லாம் கவிதையின் மூலம் காட்டி மகிழ்வித்தமைக்கு நன்றி!

G.Ragavan said...

அருமையான பாடல். சந்த நயம் மிகுந்து சிறப்பாக அமைந்திருக்கிறது. சாத்வீகன், சிறப்பாக எழுதியிருக்கின்றீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

எளிமையான அற்புதப் பாடல்.

கண்ணன் அருகில் இருப்பது இனிக்கிறது.

மதுமிதா said...

குழந்தை கண்ணனின் குறும்பு என்றும் ரசிக்கத்தக்கது
அருமையான பாடல் சாத்வீகன்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இன்றுஇக் கண்ணன் யாது செய்வான்
என்று யாவரையும் நோக்கச் செய்தான்//

முத்தாய்ப்பான வரிகள்!
நன்று சாத்வீகன்!

Anonymous said...

All the songs and pictures are really nice. Thodarga ungaL thiruppaNi (don't have access to english-tamil translator, so writing in English).

Nanri,
Kumaresh

குமரன் (Kumaran) said...

Thanks Kumaresh.

குமரன் (Kumaran) said...

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயல் உகள
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய்

ஓங்கி வளர்ந்து மூவுலகங்களையும் அளந்த உத்தமனாம் எம்பெருமானின் திருப்பெயர்களைப் பாடி

நாங்கள் நம் திருப்பாவை நோன்பிற்கு என்று சொல்லி உறுதி எடுத்துக் கொண்டு (சங்கல்பித்துக் கொண்டு) நீராடினால்

தீமைகள் எல்லாம் நீங்கி நாடு முழுவதும் மாதம் மும்முறை மழை பொழிந்து

ஓங்கி வளர்ந்து நிற்கும் பெருஞ் செந்நெல். அவற்றின் ஊடே கயல் மீன்கள் துள்ளும்.

குவளைப்பூ மொட்டில் புள்ளிகளையுடைய வண்டு தூங்கும்.

தயங்காமல் அருகில் அமர்ந்து பெருத்த முலைகளைப் பற்றி

பிழிந்து எடுக்க பாலைப் பொழிந்து குடங்களை நிறைக்கும் வள்ளல்களான பெரும்பசுக்கள்.

நீங்காத செல்வம் எங்கும் நிறைந்திருக்கும்.

Anonymous said...

அருமையான பாடல்! நன்றி

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP