Showing posts with label பாப்பா ராமாயணம். Show all posts
Showing posts with label பாப்பா ராமாயணம். Show all posts

Monday, April 11, 2011

பாப்பா ராமாயணம்


 பாப்பா ராமாயணம்
(பன்னிரண்டாம் பகுதி)

(ஸ்ரீராமநவமி எனும் புனிததினமான இன்று, முதல் பகுதியிலிருந்து இந்த பன்னிரண்டாவது பகுதிவரை ஒருவரிவிடாமல் ஒருமுறை படிப்பவர்கள், 1008 முறை ராமநாம உச்சாரணம் செய்த  திருப்தியையும் பெறலாம்)


யுத்தகாண்டம்


  விபீஷணர் வன்முறை வெறுப்பவராம்;
தர்மத்தைக்    கடை    பிடிப்பவராம்.

   அண்ணனைத் திருத்திட முயன்றனராம்;
      பாசத்தால்  பொறுமையாய் இருந்தனராம்.

நீதிநெறியை            நினைவூட்டினராம்;
சீதையை     விடுவிக்க வேண்டினராம்

தம்பியை தசமுகன் வெறுத்தனராம் ;
சீதையை        விடுவிக்க மறுத்தனராம்.

விபீஷணர் வேந்தனைத் துறந்தனராம;
ராமரைச்      சந்திக்க    விரைந்தனராம்.




நாயகனைப்    புகலடைந்தனராம்;
நடந்ததை அவருக்கு நவின்றனராம்.

   அனைவரும்    கற்கள் சுமந்தனராம்.      .
             பாலம்    அமைக்க  முனைந்தனராம்;                 


  அணிலாரும் மண் தந்து உதவினராம்.
அதன் செயலை ராமர் புகழ்ந்தனராம்.



அன்பாய்      அணிலைத்    தடவினராம்;
முதுகில் முக்கோடுகள் பதித்தனராம்.

அனைவரும் பாடுபட்டுழைத்தனராம்;
கடல்மேல்     பாலம்   அமைத்தனராம்.



சுலபமாய்க்     கடலைக் கடந்தனராம்;
லங்காபுரிதனை     அடைந்தனராம்.

  ராவணன் சேனையை அனுப்பினராம்;
  வானரருடன்     போர்  தொடுத்தனராம்.

     இந்த்ரஜித்  லக்ஷ்மனனைத் தாக்கினராம்;
    மூர்ச்சித்து லக்ஷ்மணன் சாய்ந்தனராம்.



மருத்துவர்     நாடியைப்  பார்த்தனராம்;
  சஞ்சீவினி      மூலிகை  வேண்டினராம்.

அனுமன்       வடதிசை       பறந்தனராம்;.
   சஞ்சீவினிமலை  கொண்டு வந்தனராம்.

லக்ஷ்மணன்   புத்துயிர்       பெற்றனராம்;
         கொடியோரைப் போரிட்டுக் கொன்றனராம்.

   தசமுகன்  தலைகள்   தாழ்ந்தனராம்.
   தாளாத்   துயரத்தில்  ஆழ்ந்தனராம்.

     சினத்துடன்   போர்க்களம் புகுந்தனராம்;
     ராமருடன்   கடும்போர்  புரிந்தனராம்.

     ராமர்   பாணமழை    பொழிந்தனராம்;
     ராவணன்   வலிமை   இழந்தனராம்.




தீயோனை    ராமர்       வீழ்த்தினராம்;
தூயரை இன்பத்தில் ஆழ்த்தினராம்.

   ஜானகி பதியோடிணைந்தனராம்.        
                    ஆனந்தக்  கடலில் நீந்தினராம்.                          



           விபீஷணனை   ராமர்  அழைத்தனராம்;
          இலங்கையின் வேந்தனாயமர்த்தினராம்;

அனைவரும் இலங்கை துறந்தனராம்;
அயோத்தி   நோக்கிப்    பறந்தனராம்.




       பரதன்  அண்ணனை அணைத்தனராம்;
   அரச பொறுப்பை ஒப்படைத்தனராம்.

ராமரை வசிஷ்டர் அழைத்தனராம்;
            அரியணையில் சீதையோடமர்த்தினராம்.

பட்டாபிஷேகம் செய்வித்தனராம்;
அனைவரும் கண்டு களித்தனராம்.





 ராமர் ஆட்சிப்பொறுப்பேற்றனராம்
    நீதிதவறாமல்      நாடாண்டனராம்.      

          மக்களும் குறையின்றி வாழ்ந்தனராம்;
           'ராம ராஜ்யம் '   என்று புகழ்ந்தனராம்.     

ராம ராம ஜெய ராஜாராம்;
  ராம ராம ஜெய சீதாராம்.

ராம ராம ஜெய ராஜாராம்;
ராம ராம ஜெய சீதாராம்.
----------

Sunday, April 10, 2011

பாப்பா ராமாயணம்


பாப்பா ராமாயணம்
(பதினொன்றாம் பகுதி) 

சுந்தரகாண்டம் (பாகம்-8 )

சர்க்கம்-49 முதல் - 68 வரை
அரக்கனை அனுமன் ஏறிட்டனராம்;
    வலிமையுணர்ந்து வியப்புற்றனராம்.

           ப்ரஹஸ்தன் அனுமனை அணுகினராம்;
''ஏன் வந்தாய்?'' என வினவினராம்.

மாருதி மன்னனை நோக்கினராம்;
    தன் நிலையைத் தெளிவாக்கினராம்.

          ராமரின் பெருமையைப் பகர்ந்தனராம்;
அவரது வீரத்தைப் புகழ்ந்தனராம்.

''சீதையின் பதி''எனக் கூறினராம்;
      சீதையை விடுவிக்கக் கோரினராம்.

                 மோஹத்தால் மன்னன் மதி கெட்டனராம்;
                    ''குரங்கைக்கொல்''என்றாணை இட்டனராம்.   

     தசமுகன் தம்பி விபீஷணராம் ;           
    ''தவறு தூத வதம்''என்றனராம்  .           

  நீதிதனை நினைவூட்டினராம்;              
                  நன்மொழியால் மனம் மாற்றினராம்.               

                      அரக்கன்  சினம் சற்று தணிந்தனராம்;                 
                    மரணதண்டனையைக் குறைத்தனராம்.           

                         தீச்சொல்லால் அனுமனைத் தூற்றினராம்;           
                வாலினைக் கொளுத்திடக் கூறினராம்.          

               அரக்கரும் அனுமனைப் பிடித்தனராம்;           
         வாலைத் தீஇட்டுக் கொளுத்தினராம்.       

       மாருதி கட்டைக் களைந்தனராம்;              
            எரிந்திடும் வாலுடன் அலைந்தனராம்.          


      லங்காபுரிதனைக் கொளுத்தினராம்;
      கிஷ்கிந்தா செல்லக் கிளம்பினராம்.

தாயை எண்ணித் தயங்கினராம்;
       ''தீயுண்டதோ?''எனக் கலங்கினராம்.

             அன்னையை தரிசிக்கத்துடித்தனராம்;
         அசோகவனத்துக்கு விரைந்தனராம்.

நாயகியைக் கண்ணுற்றனராம்;
       நிம்மதிப் பெருமூச்சு விட்டனராம்.

''தீயைத்தீ சுடுமோ?'' என்றனராம்;
நெஞ்சார வாழ்த்தி நின்றனராம்.

       அன்னையிடம் விடை பெற்றனராம்;
            அண்ணலைக்காணப் புறப்பட்டனராம்.


கடலைத் தாவிக் கடந்தனராம்;
நண்பரைநோக்கி நடந்தனராம்.

வானரத்தோழரைக் கூடினராம்;
           சீதையைக் கண்டதாய்க் கூறினராம்.

                கூட்டமாய்     ராமர்முன் சென்றனராம்;
          ''கண்டேன் சீதையை!'' என்றனராம்.

               ராமரின்   மகிழ்ச்சியைக் கண்டனராம்;
                  அளவில்லா ஆனந்தம் கொண்டனராம்.

             நடந்ததை விவரமாய் விளக்கினராம்;
   சீதை கூறியதை உரைத்தனராம் .

        சூடாமணிதனைக் கொடுத்தனராம்;
             ராமர் அதைக்கையில் எடுத்தனராம்.

            மார்புடன் அதனை அணைத்தனராம்;
               சீதையைக்கண்டாற்போல் களித்தனராம்.
                                                                                                                   

              அன்புடன் அனுமனைத் தழுவினராம்;
               கண்ணீரால் அவனுடல் கழுவினராம்.




                        சீதையின் நிலையெண்ணிக் கலங்கினராம்;
     பேதையை மீட்கக் கிளம்பினராம்.

(ராம ராம ஜெய.....சீதாராம்)
       

Saturday, April 09, 2011

பாப்பா ராமாயணம்-(பத்தாம்பகுதி)


பாப்பா ராமாயணம்-(பத்தாம்பகுதி)

சுந்தரகாண்டம்-(பாகம்-7 )

சர்க்கம்-43  -முதல் - 48 - வரை


  அஞ்சனிமகன் மனம் மகிழ்ந்தனராம்;
மண்டப   உச்சியில்  அமர்ந்தனராம்.

''மாருதி நான்''   என  முழங்கினராம்;
     ''வாயுவின் மகன்''  என விளக்கினராம்.

பேருரு    எடுத்துத் தோன்றினராம்;
    ''ராமர்க்கே ஜெயம்''எனக் கூவினராம்.

காவலர் கூவலைக் கேட்டனராம்;
கேசரிமைந்தனைத்  தூற்றினராம்.

பலபெருமாயுதம்   ஏந்தினராம் ;       
         அனுமனை முற்றிலும் சூழ்ந்தனராம்.      

ஆயுதங்கொண்டு   தாக்கினராம்;         
           மாருதி தூண் ஒன்றைத்தூக்கினராம்.         

  வேகமாய்ச் சுழற்றியடித்தனராம்;          
         பகைவரைக் கொன்று ஒழித்தனராம்.          

                     ப்ரஹஸ்தனின் மகனிதை கண்டனராம்;               
          'ஜம்புமாலி'    என்பதவன் பெயராம்.             

                       அனுமன்மேல் பாணமழை பொழிந்தனராம்;           
                  அஞ்சனிமகன் வெகுண்டெழுந்தனராம்.             

              இரும்புலக்கையொன்றை வீசினராம்;            
         எதிரியைக்கொன்று வீழ்த்தினராம்.             

      செய்திகேட்டு வேந்தன் சீறினராம்;             
ஏழு  அரக்கர்களை ஏவினராம்.               

   ஏழ்வரும்   மந்திரி புத்திரராம்;                 
            மழையென அம்புகள் பெய்தனராம்.                

                வானரர் வலிமையைக் காட்டினராம்;                
                       அனைவரையும் அடித்துப் போட்டனராம்.               

                      கொடியோரைக் கொன்று குவித்தனராம்;               
            தகவலறிந்த மன்னன் தவித்தனராம்.             

       தசமுகன் துயரத்திலாழ்ந்தனராம்;               
            படைத்தலைவர்களைக் கூட்டினராம்.           

             அவர்களில் ஐவரைத் அழைத்தனராம்;            
                குரங்கைப்பிடித்துவரப் பணித்தனராம்.              

       ஐவரும் படையுடன் கிளம்பினராம்;         
       அனுமனைப்பிடிக்க முயன்றனராம்.          

     பாய்ந்து படுகாயப் படுத்தினராம்;              
      மாருதி கடும்போர் தொடுத்தனராம்.         

ஐவரையும் வதம் செய்தனராம்;            
தோரணவாயில்       எய்தினராம்.           

                  தசமுகன்  நிலைகுலைந்தலைந்தனராம்;            
           தன்மகன்  அக்ஷனை அழைத்தனராம்.            

                     அனுமனை வதம் செய்யப் பணித்தனராம்;             
                  அக்ஷனும்          ஆயுதமெடுத்தனராம்.                


வானரருடன்  போர் புரிந்தனராம்;       
       பாணங்கள் சரமாரிப் பொழிந்தனராம்.     

        வாயுபுத்திரன் கொதித்தெழுந்தனராம்;      
                 அக்ஷனைக் கால்களிடைப் பிடித்தனராம்.      

கைகளால் உயரத்தூக்கினராம் ;        
பலமுறை சுழற்றி வீசினராம்.           

       விழுந்த அரக்கன்மகன்  மாண்டனராம்;       
மாருதியும்  வாயில் மீண்டனராம்.      

     அறிந்தமன்னன் மனம்பதைத்தனராம்;  
          அதிர்ச்சியால் செயலற்றிருந்தனராம்.      

இந்திரஜித் அவனது புத்திரராம்;        
                 இந்திரனைப் போரில் ஜெயித்தவராம்.             

                     ராவணன்      மகனை      அழைத்தனராம்;          
                          அனுமனை       அழித்திட       அனுப்பினராம்.            

            இந்த்ரஜித் ஆயுதங்கள் எடுத்தனராம்;       
                  அனுமனைவதம் செய்யத் துடித்தனராம்.      

                 ப்ரம்மாஸ்திரந்தனைத் தொடுத்தனராம்;      
  வாயுபுத்ரன்மேல் விடுத்தனராம்       

           அனுமன் கட்டுண்டு விழுந்தனராம்;         
              பொறுமையாய் கட்டுபட்டிருந்தனராம்.      


                  கட்டவிழ்வதை அவர் உணர்ந்தனராம்;     
     கட்டுண்டதுபோல் நடித்தனராம்.    

              மன்னர்முன் சமர்ப்பிக்கப் பட்டனராம்;
    ''யார்?''என வினவப்பெற்றனராம்.

          ''தூதன் நான் ''என்றவர் நவின்றனராம்
        ''சுக்ரீவர்   அனுப்பினர் '' என்றனராம்.

(ராம ராம ஜெய...சீதாராம்)

Friday, April 08, 2011

பாப்பா ராமாயணம் (ஒன்பதாம்பகுதி)


            பாப்பா ராமாயணம் (ஒன்பதாம்பகுதி)

    சுந்தரகாண்டம்-(பாகம்-6 )

சர்க்கம்-  38 -முதல் - 42  - வரை
        அனுமன் ''அடையாளம்'' கேட்டனராம்;
''ராமர்க்கு அளிப்பேன்''என்றனராம்.

     சீதை முன்னினைவினிலாழ்ந்தனராம்;
கண்ணீரால் துகில் நனைந்தனராம். 

     நிகழ்ந்ததை அனுமர்க்குக் கூறினராம்;
  பதிக்கு நினைவுறுத்தக் கோரினராம்.

          குடிலொன்றிலவள் அமர்ந்திருந்தனராம்;
மடியில் ராமர் துயின்றிருந்தனராம்.

காகம் ஒன்றைச் சீதை கண்டனராம்;
       தேகத்தை அது கொத்தத் துடித்தனராம்.

உதிரத்தினாலுடை நனைந்தனராம்;
அதனால் பதி துயில்கலைந்தன ராம்.

        நிகழ்ந்ததை அறிந்தவர் வெகுண்டனராம்;
         தர்ப்பாசனப்புல்லொன்றை எடுத்தனராம்.

புல்லைக் கணையாக்கி எய்தனராம்;
                   காகத்தின் கண்ணொன்றைக் கொய்தனராம் .

      இதனை அனுமன் செவி மடுத்தனராம்;
     நினைவுறுத்த வாக்கு கொடுத்தனராம்.

சீதை சூடாமணி களைந்தனராம்;      
பதியிடமளித்திடப் பணித்தனராம்.
   

வீரர் சூடாமணி பெற்றனராம்;      
         விரலில் அதையணிந்து நின்றனராம்.

    வைதேகியின் பதம் பணிந்தனராம்;
வலம் வந்தே கரங்குவித்தனராம்.

              அண்ணலை மனத்தால் துதித்தனராம் ;
ஆனந்தக்கண்ணீர் வடித்தனராம்.

(ராம ராம ஜெய ......சீதாராம்)

அன்னைக்கு தைரியமூட்டினராம்;
அபலைக்கு ஆறுதல் கூறினராம்.

         வானரர் வலிமையை விளக்கினராம்;
'உதவுவர்'என வாக்களித்தனராம்.

      'வெற்றி உறுதி' என முழங்கினராம்;
         'அழிவர் அரக்கர்'என மொழிந்தனராம்.

                               துணிவினைத் துணைகொள்ளத் தூண்டினராம்;
                   கவலையைக் களைந்திட வேண்டினராம்.

           வைதேகி உத்சாகம் அடைந்தனராம்;
               வாழ்த்தி விடைகொடுத்தனுப்பினராம்.

           அனுமன் வேகமாய்த் தாவினராம்;
    மரங்களைப் பிடுங்கி  வீசினராம்.


  மண்டபங்கள்பல இடித்தனராம்;
     அசோகவனத்தை அழித்தனராம்.

             கோட்டை வாயிலில் அமர்ந்தனராம்;
             அரசனைக் காணக் காத்திருந்தனராம்.

          ஓசையால் அரக்கியர் விழித்தனராம்;
         வனத்தின் அழிவினை அறிந்தனராம்.

        வானரச்செயல் என உணர்ந்தனராம்;
        வேந்தனுக்குரைக்க விரைந்தனராம்.

செவியுற்ற ராவணன் சீறினராம்;
           குரங்கைக் கொன்றுவிடக்  கூறினராம்.

கிங்கரர் ஆயுதமெடுத்தனராம்;      
 அஞ்சனி மகனை அடித்தனராம்.    

             கோபத்தால் மாருதி கொதித்தனராம்;     
கோர உருவம் எடுத்தனராம்.         

''ராமர்க்கே வெற்றி'' என்றனராம்;  
   தோரண வாயிலில் நின்றனராம்.    

இரும்பு உழல்தடி எடுத்தனராம்;    
    தாக்கிய கிங்கரரை அடித்தனராம்.     

    அடிபட்டனைவரும் இறந்தனராம்;      
அரசன் செவியுற்றதிர்ந்தனராம்.         

       ப்ரஹஸ்தனின்  மகனை ஏவினராம்;      
       ''குரங்கைக் கொல்''எனக் கூவினராம்.     

(ராம ராம ஜெய ....சீதாராம்)

Thursday, April 07, 2011

பாப்பா ராமாயணம்(எட்டாம்பகுதி)


              பாப்பா ராமாயணம்(எட்டாம்பகுதி)

                    சுந்தரகாண்டம்(பாகம்-5 )

சர்க்கம் -28-- முதல்  -37-    வரை
  மரத்தினை  மைதிலி நெருங்கினராம்;  
            கரத்தால் கிளையொன்றைப் பிடித்தனராம்.

  முடியினைக் கயிறாய் முறுக்கினராம்;
     தூக்கிட்டுக்கொள்ளத் துணிந்தனராம்.      

   நாதனை நெஞ்சினில் நினைத்தனராம்.
  நற்சகுனம் பல கண்டனராம்.                   

(ராம ராம ஜெய ....சீதாராம்)

இடக்கண் துடிப்பதை உணர்ந்தனராம்;
இடப்புயமுந்துடிப்பதுணர்ந்தனராம்.       

இடத்தொடையுந்துடிக்க நின்றனராம்;
ஆடை நழுவிடக் கண்டனராம்.             

சகுனங்களால் மனம் மகிழ்ந்தனராம்;  
நடக்கும் நல்லதென நினைத்தனராம்.

கலக்கமும் கவலையும் நீத்தனராம்;   
அமைதியால் முகமலர் பூத்தனராம்.    

மாருதி மறைவாய் அமர்ந்தனராம்;     
நிகழ்வதெல்லாம் பார்த்திருந்தனராம்.

உத்தமி உள்ளத்தை உணர்ந்தனராம்;
ஆறுதல் கூறிடத் துடித்தனராம்.           

அரக்கியர் உறங்கிடக் கண்டனராம்;
தக்க தருணமென எண்ணினராம்.     

நம்பிக்கைப் பெறவழி தேடினராம்;   
ராமரின் பெருமையைப் பாடினராம்.

(ராம ராம ஜெய......சீதாராம்)

தனக்குத்தானே பேசிக்கொண்டனராம்;
     சுருக்கமாய் நிகழ்ந்ததை நவின்றனராம்.

      தான்வந்த நோக்கத்தை மொழிந்தனராம்;
செவியுற்ற சீதை நிமிர்ந்தனராம்.          


கவனமாய்ப் பார்வையிட்டனராம்;    
குரங்கொன்றைக் கண்ணுற்றனராம்.

வானரக்குரல்கேட்டு வியந்தானராம்;
       செவியுற்ற செய்தியால் மகிழ்ந்தனராம்.

கனவென்றையம் கொண்டனராம்;   
''துயிலின்றிக் கனவேது?''என்றனராம்.

     தெய்வத்தை மனத்தால் தொழுதனராம்;
   கேட்டவை மெய்த்திட வேண்டினராம்.

மாருதி கீழே இறங்கினராம்;                   
   மைதிலியை மெல்ல நெருங்கினராம்.

    பணிவாய்க் கைகூப்பி வணங்கினராம்;
இனிமையாய்ப் பேசத்துவங்கினராம்.

இதுவரை நடந்ததை விளக்கினராம்;
சீதையின் அச்சத்தைப் போக்கினராம்.

சீதையின் அருகில் சென்றனராம்      
அன்னையோ ஐயம் கொண்டனராம்.

'ராவணனோ?'என பயந்தனராம்;         
அனுமன் அவள்மனமறிந்தனராம்.     

'ராம தூதன் நான்' என்றனராம்;             
ராமர் பணித்ததைப் பகர்ந்தனராம்.  

வைதேகி வினாபல வினவினராம்;
வாயுமகனும் விடையளித்தனராம்.

ராமலக்ஷ்மணரைப் புகழ்ந்தனராம்;
அங்க அடையாளம் பகர்ந்தனராம்.

கணையாழிதனை எடுத்தனராம்;       
ராமரளித்ததெனக் கொடுத்தனராம்.



கணையாழியை சீதை வாங்கினராம்;
            கணவரையே கண்டதுபோல் களித்தனராம்.

   அனுமனின் அன்பால் நெகிழ்ந்தனராம்;
  வீரனின் வலிமையை வியந்தனராம்.

,'வருவாரோ,பதி?'என விசும்பினராம்;  
'காண்பேனோ?' எனக்கதறினராம்.       

கேசரி நந்தனன் குனிந்தனராம்;       
முதுகிலமர்ந்திடக் கூறினராம்.        

     'சுமந்துசெல்வேன்'என உரைத்தனராம்;
அமர்ந்திட அன்னை மறுத்தனராம்.  

    அனுமன் ஐயம் நீக்க  நினைத்தனராம்;
விசுவரூபத்தில்  நின்றனராம்.              



அன்னை அனுமனைப் புகழ்ந்தனராம்;
அவர்மேல் அமரவோ மறுத்தனராம்.  

'பதி மீட்பார்' எனப் பகர்ந்தனராம்;         
       அனுமனுமவள் கற்பை உணர்ந்தனராம்.

(ராம ராம ஜெய...சீதாராம்)

Wednesday, April 06, 2011

பாப்பா ராமாயணம் (எழாம்பகுதி)


             பாப்பா ராமாயணம் (எழாம்பகுதி)

                   சுந்தரகாண்டம் (பாகம்-4 )

சர்க்கம்-21-முதல் -27-வரை


செவியுற்ற சீதை சினந்தனராம்;              
தீயைத் தொட்டதுபோல் துடித்தனராம்.

         அரக்கன்முன் துரும்பினைப் போட்டனராம்;
அதற்கவன் சமமெனக் காட்டினராம்.      

"ராமரே,பதி!"எனக்கூவினராம்;                  
நெருங்கினால் அழிவெனச் சீறினராம்.

'ராமபாணம்'பற்றி விளக்கினராம்;         
"தோல்வி திண்ணம்"என சபித்தனராம்.

   செவியுற்ற ராவணன் வெகுண்டனராம்;
இரண்டுமாத கெடு வைத்தனராம்.        

முடியுமுன் இணங்கிடக் கூறினராம்;  
மறுத்தால் மரணமெனக் கூவினராம்.


அன்னையோ அஞ்சாமல் நின்றனராம்;
"அழிவுக்கு வழி இது"என்றனராம்.             

கோபத்தால் ராவணன் கொதித்தனராம்;
 அங்குமிங்கும் நிலையற்றலைந்தனராம்.

கோர அரக்கியரை விளித்தனராம்;        
சீதைமனத்தை மாற்றப் பணித்தனராம்.


செல்ல மனமின்றி நகர்ந்தனராம் ;
மாளிகை நோக்கி நடந்தனராம்.      

       அரக்கியர் அன்னையைச் சூழ்ந்தனராம்;
            ராமரை இழிச்சொல்லால் இகழ்ந்தனராம்.

    ராவணனின் புகழ் பாடினராம்;                 
சீதையோ செவிகளை மூடினராம்.    

     அவள்மனத்தை மாற்ற முயன்றனராம்;
தோல்வியடைந்து சலிப்புற்றனராம்.

கடுஞ்சொல் கூறிக் கடிந்தனராம்;      
மைதிலி மென்மனமொடிந்தனராம்.   

தீச்சொல் தாளாது துடித்தனராம்;        
   மௌனமாய்க் கண்ணீர் வடித்தனராம்.

தாயைத் தீயர் பயமுறுத்தினராம்;      
   மன்னனை மணக்க வற்புறுத்தினராம்.

மைதிலி பொறுமை இழந்தனராம்;     
"ராமரே பதி" என முழங்கினராம்.         

சிம்சுபா மரம் நோக்கி நடந்தனராம்.
         தீயோர்  அவளைப்பின் தொடர்ந்தனராம்.



கையினில் ஆயுதம் எடுத்தனராம்;    
கொன்று தின்றுவிடத் துடித்தனராம்.

கண்ட நம்நாயகி கலங்கினராம்;        
ஆயினும் தன்னிலை பிறழ்ந்திலராம்.

அரக்கனை மணந்திட மறுத்தனராம்;  
    கொன்று விழுங்கும்படி உரைத்தனராம்.

    தனது தலையெழுத்தை நொந்தனராம்;
துன்பந்தாங்காது தொய்ந்தனராம்       .

கணவரின் பிரிவால் வருந்தினராம்;
இணையும் நம்பிக்கை இழந்தனராம்.

அரக்கனை எண்ணி நடுங்கினராம்;
உயிர்விட முடிவு எடுத்தனராம்.      



அங்கொரு முதியவள் வந்தனராம்;
திரிசடை என்பது அவள் பெயராம்.

     சீதையின் சிறப்பினை அறிந்தவராம்;
அரக்கியர் ஏச்சினை அடக்கினராம்.

              கனவொன்று கண்டதாய் உரைத்தனராம்;
          கனவினில் நிகழ்ந்ததை விளக்கினராம்.

ராமரைக் கனவினில் கண்டனராம்;
"அரியோ?"என ஐயம் கொண்டனராம்.

வில்லேந்தி ராமர் வந்தனராம்;       
தசமுகனுடன் போர் புரிந்தனராம்.

தோல்வியுற்றரசர் இறந்தனராம்;    
ராமருடன் சீதை இணைந்தனராம்.

அரக்கர் அனைவரும் அழிந்தனராம்.;
    விபீஷணர் வேந்தராய் அமர்ந்தனராம்.


(ராம ராம ஜெய.....சீதாராம்)


Tuesday, April 05, 2011


                   பாப்பா ராமாயணம்(ஆறாம்பகுதி)

                    சுந்தரகாண்டம் -(பாகம்-3 )

            சர்க்கம்-13-முதல்-20- வரை



அனுமன் பொறுமை இழந்தனராம்;
     "கொன்றனரோ?''எனக் கலங்கினராம்.

தேடா இடமெல்லாந்தேடினராம்;   
           வைதேகியைக் காணாது வாடினராம்.   

    அடர்வனமொன்றைக் கண்டனராம்;
'போகா இடம்' என எண்ணினராம்.

 'அசோக வனம்' என அறிந்தனராம்;
புகுந்து தேடிவிட நினைத்தனராம்.

     மனத்தினில் ராமரை வணங்கினராம்;
    வனத்தினை நோக்கி விரைந்தனராம்.

(ராம ராம ஜெய..சீதாராம்)


        'விருட்'டென வனத்தினுள் புகுந்தனராம்;
மரத்துக்கு மரந்தாவி குதித்தனராம்.

  சிம்சுபா மரமொன்றைக்கண்டனராம்;
உச்சிக்குத்தாவிச் சென்றனராம்.        

       அடர்ந்த இலைகளிடை மறைந்தனராம்;
         பார்வையைக்  கீழ்நோக்கித்திருப்பினராம்.

வனமெங்கும் பார்வை இட்டனராம்; 
ஏழையொருத்தி தென்பட்டனராம்.       

அழுக்காடை அணிந்திருந்தனராம்;     
ஆபரணமேதும் அணிந்திலராம்.           


                    அரக்கியரிடை அமர்ந்திருந்தனராம்;              
               நாய்களிடை மானெனத் தெரிந்தனராம்.
                 
        அவளை அனுமன் கண்காணித்தனராம்;
'சீதையே'என அனுமானித்தனராம்.

தாயை விடுவிக்கத் தவித்தனராம்;
ராமருடன் சேர்க்கத் துடித்தனராம்.

இணைந்து தரிசிக்க விரும்பினராம்;
ராமநாமத்தை ஸ்மரித்தனராம் .       

(ராம ராம ஜெய ....சீதாராம்)

அனுமன் சிந்தனையிலாழ்ந்தனராம்;
  'முயற்சி வெற்றி'என மகிழ்ந்தனராம்.

             அன்னையின் கோலத்தைக் கண்டனராம்;
அளவற்ற துயரங்கொண்டனராம்.     

             'பொறுமையில் பூமி'யென உணர்ந்தனராம்;
தக்க தருணம் பார்த்திருந்தனராம்.   

மரக்கிளையில் சாய்ந்தமர்ந்தனராம்;
    மனத்தினுள்  ராமரை நினைத்தனராம்.

(ராம ராம ஜெய ....சீதாராம்)

சந்திரன் ஒளிக்கதிர் பரப்பினராம்;       
மாருதி பார்வையைத் திருப்பினராம்.


        தலைவியுந்தெளிவாய்த் தெரிந்தனராம்;
சுற்றிலும் அரக்கியர் இருந்தனராம்.

  கோரப்பல்,கூர்நகங் கொண்டவராம்;
சீதைக்குக் காவலாய் நின்றனராம்.

    மான்போல் மைதிலி மருண்டனராம்;
தீயெனக் கற்பினில் திகழ்ந்தனராம்.

அனுமன் தரிசித்து மகிழ்ந்தனராம்;
ஆனந்தக் கண்ணீர் உகுத்தனராம்.  

வேத ஒலியைச் செவிமடுத்தனராம்;
விடியற்காலை என உணர்ந்தனராம்.

அரசன் ஒலிகேட்டு விழித்தனராம்;     
வைதேகியைக்காணத் துடித்தனராம்.

ஆடையாபரணம் அணிந்தனராம்;      
ஜானகியைக் காண விரைந்தனராம்.

பலரும் புடைசூழச் சென்றனராம்;     
குலமகளை அணுகி நின்றனராம்.     

தூயவள் தேகத்தை மறைத்தனராம்;
த்யானத்தில் தரைமேலமர்ந்தனராம்.

நாதனை மட்டுமே நினைத்தனராம்;
நோக்கிய ராவணன் திகைத்தனராம்.

     அன்னையை அரக்கன் நெருங்கினராம்;
அழிவினை நோக்கி நகர்ந்தனராம்.



ராமரை இகழ்ந்து ஏசினராம்;       
சீதையைப் புகழ்ந்து பேசினராம்.

       தன்னை மணந்திடத் தூண்டினராம்;
       ராமரைத் துறநதிட வேண்டினராம்.

(ராம ராம ஜெய.....சீதாராம்)










Monday, April 04, 2011


பாப்பா ராமாயணம் -(ஐந்தாம்பகுதி)


                     சுந்தரகாண்டம் -(பாகம்-2 )

சர்க்கம் -1-இரண்டாம்பகுதி- அனுமன் சமுத்திரம் தாண்டுதல்



சிம்ஹிகா என்றோர் அரக்கியராம்;
   பறந்திடுமனுமனை நெருங்கினராம்.

  கொழுத்த குரங்கெனக்கண்டனராம்;
விழுங்கிப் பசியாற எண்ணினராம்.

       பாய்ந்தே அனுமனைப் பிடித்தனராம்;
பிளந்தவாயினில் திணித்தனராம்.

கடுகென அனுமன் சுருங்கினராம்;
                              அரக்கியின் தொண்டையில் இறங்கினராம்.                  

மார்பினை நகத்தால் கிழித்தனராம்;
             அரக்கியைக் கொன்று ஒழித்தனராம்.             

           மீண்டும் விண்ணோக்கி விரைந்தனராம்;
       இலங்கையை நோக்கிப் பறந்தனராம்.

                     இலங்கையின் எல்லையை நெருங்கினராம்;
                லம்பாகிரிமேல் இறங்கினராம்.               

                            -----------------------------------------------------------------------

சர்க்கம்-2 முதல்  12 வரை

இரவில் நகர் புக எண்ணினராம்;
      வடதிசை வாசலை நண்ணினராம்.

   அரக்கக் காவலரைக் கண்டனராம்;
          தேகத்தைச் சுருக்கிக் கொண்டனராம்.

மெதுவாய் ஊர்ந்து நகர்ந்தனராம்;
                              மதில்மேல் ஏறி அமர்ந்தனராம்.                                  

             இலங்கிணி இலங்கையின் காவலராம்;     
            மதில்மேல் அனுமனைக் கண்டனராம்.     

அற்பக்குரங்கென நினைத்தனராம்;
அனுமனை ஓங்கி அறைந்தனராம்.

சினத்தால் மாருதி சிவந்தனராம்.;
    'பெண்ணினம்'என்றே  தயங்கினராம்.

      முட்டியால் மெதுவாய்க் குத்தினராம்;
வலியால் இலங்கிணி கத்தினராம்.

              அனுமனின் வலிமையை உணர்ந்தனராம்;
      நகர்புக அனுமதியளித்தனராம்.         

     மாருதி நகரினுள் புகுந்தனராம்;          
           மன்னனின் அரண்மனை அடைந்தனராம்.

அந்தப்புரத்துள் நுழைந்தனராம்;       
சீதையைத்தேட விழைந்தனராம்.    

விண்ணில் சந்திரன் சிரித்தனராம்;
     தண்ணொளிக்கதிரை  விரித்தனராம்.

அரக்கியர் உறக்கத்திலாழ்ந்தனராம்;
     அரக்கரும் போதையில் வீழ்ந்தனராம்.

சீதையை மாருதி தேடினராம்;          
பேதையைக் காணாது வாடினராம்.

அரண்மனையுள்ளே சென்றனராம்;
மாபெரும் மாளிகை கண்டனராம்.

அங்கோர் விமானம் பார்த்தனராம்;
புஷ்பகவிமானம் எனப்பெயராம்.



வேகத்தில் காற்றென அறிந்தனராம்;      
தேவர்க்கும் அரிதெனத் தெளிந்தனராம்.

அழகிய மாளிகை கண்டனராம்;            
உறங்கும் பெண்கள் தென்பட்டனராம்.

துயிலும் தசமுகனைக் கண்டனராம்;
"மலையோ"என ஐயமுற்றனராம்.       

பேரழகு பெண்ணைக் கண்டனராம்;
"சீதை இவரே!''என எண்ணினராம்.

சற்றே யோசனை செய்தனராம்;     
      ''துயில்வாரென் தாயல்ல" என்றனராம்.

பானசாலைதனில் புகுந்தனராம்;   
மது,மாமிசங்களைக் கடந்தனராம்.

      ஒவ்வொரு மூலையும் கூர்ந்தனராம்;
      சீதையைக் காணாது சோர்ந்தனராம்.

கேசரிநந்தனர் கலங்கினராம்;          
"மாண்டனரோ?"என மயங்கினராம்.

அங்குலம் விடாது சலித்தனராம்.;
               அலைந்து களைத்து மனஞ்சலித்தனராம்.    

           ஊக்கத்தை வளர்த்திட முயன்றனராம்;     
ராமநாம ஜபம் செய்தனராம்.          

(ராம ராம ஜெய......சீதாராம்)

                                       ---------------------------------------------------


                           







                              









   






  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP