Showing posts with label கவிநயா. Show all posts
Showing posts with label கவிநயா. Show all posts

Wednesday, December 25, 2019

கோகுல கிருஷ்ணா

மார்கழி மாதமாவது கிருஷ்ணன் ஞாபகம் வரணும்ல? ரொம்ப நாளாச்சு இந்தப் பக்கம் வந்து...நலந்தானே?

கோகுல கிருஷ்ணா கோகுல கிருஷ்ணா
என்ன உன் லீலையோ?
பால் வெண்ணைய் செய்யும் கோபியர் மீது
என்ன உன் மோகமோ?
(கோகுல)

எத்தனையோ குலமிருந்தும் ஆயர் குலத்தில் பிறந்தாய்
எத்தனையோ செல்வமிருந்தும் வெண்ணெயைத் திருடித் தின்றாய்
உலகைக் காக்க வந்து விட்டு உரலில் கட்டுப் பட்டாய்
ஒன்றுமறியா பிள்ளையைப்போல்பல கள்ளத்தனங்கள் செய்தாய்
(கோகுல)

புல்லாங்குழலை ஊதி ஊதி மனதை மயக்குகின்றாய்
மஞ்சள் ஆடை அணிந்து அழகில் மதனை விஞ்சுகின்றாய்
மயிலிறகைச் சூடும் கிருஷ்ணா, என்னையும் சூடிக் கொள்ளாயோ?
மணி மார்பில் மாலையாகும் பேறு எனக்குத் தாராயோ?
(கோகுல)


--கவிநயா

Sunday, August 13, 2017

முத்தம் ஒன்று தாடா!

அனைவருக்கும் இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள்! குட்டிக் கிருஷ்ணனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!!


சின்னச் சின்னப் பாத மெடுத்து 
செல்லக் கண்ணா வாடா
முத்துப் பவழ வாய் குவித்து
முத்தம் ஒன்று தாடா
(சின்னச் சின்ன)

சுற்றிச் சுழலும் கருவிழி கண்டு
உள்ளம் மயங்குதடா
பற்றிக் கட்டிக் கொஞ்சிஅணைக்க
நெஞ்சம் ஏங்குதடா
(சின்னச் சின்ன)

பாயும் யமுனா நதியை அன்றுன்
பாதம் தொட்டதடா
சீறும் காளிங்கன் தலை மீதுந்தன்
பாதம் பட்டதடா

உன்னைத் தாயாய் எந்தன் சேயாய்
அழைத்தேன் வருவாயோ?
மார்பில் உதைத்துப் பாதம் பதித்து
இன்பம் தருவாயோ?
(சின்னச் சின்ன)


--கவிநயா


Monday, December 15, 2014

காதல் சொன்னானோ?

மால் வண்ணனைப் போற்றும் மார்கழிக்கு வந்தனம்!

சுப்பு தாத்தா பீம்ப்ளாஸ் ராகத்தில் உணர்வுபூர்வமாகப் பாடியதை நீங்களும் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


செக்கச் சிவந்த வானம் போல

செவ்வரளிப் பூவைப் போல

தொட்டுச் சிவந்த மலரைப் போல

வெட்கிச் சிவந்தாயோ, கண்ணே

வெட்கிச் சிவந்தாயோ?



கண்ணன் வந்தானோ, உந்தன்

மன்னன் வந்தானோ, அவன்

கருவிழியால் உன் மனதைத்

திருடிச் சென்றானோ?



மாயம் செய்தானோ, அவன்

மயக்கம் தந்தானோ, அவன்

மயிலிறகாய் உன் மனதை

வருடி விட்டானோ?



காதல் சொன்னானோ, உந்தன்

காதில் சொன்னானோ, அவன்

குழலைத் தொட்ட இதழினால் உன்

இதழைத் தொட்டானோ?



மாலையிட்டானோ, அவன்

மயங்கி விட்டானோ, உந்தன்

கட்டழகுக் கனிச் சிரிப்பில்

கிறங்கி விட்டானோ?



சிலிர்க்க விட்டானோ, கன்னஞ்

சிவக்க விட்டானோ, அவன்

சின்னச் சின்னக் குறும்பு செய்து

சிணுங்க விட்டானோ?



உள்ளந் தொட்டானோ, உந்தன்

உயிரைத் தொட்டானோ, அவன்

உன்னுடனே ஒன்றெனவே

கலந்து விட்டானோ?

--கவிநயா

Friday, August 15, 2014

காளிங்க நர்த்தனம்!

அனைவருக்கும் இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள்!


சுப்பு தாத்தா கானடாவில் அனுபவித்துப் பாடியது இங்கே... மிக்க நன்றி தாத்தா!



திருமுடி மீதினில் மயிலிறகாடிட
கருங்குழல் கற்றைகள் காற்றினில் ஓடிட
சிறுநுதல் தனிலே வியர்வை துளிர்த்திட
கருமணியென விழியிரண்டும் ஜொலித்திட!

மணமலர் மாலையும் மார்பில் அசைந்திட
எழில்மணி யாரங்கள் இசைந்தொளி வீசிட
கருநிற மேனியைக் காளியன் சுற்றிட
ஈரப் பட்டாடை இடையினைப் பற்றிட!

ஜல் ஜல் ஜல் எனச் சதங்கைகள் ஒலித்திட
கொல் கொல் கொல் எனத் தலைகளை மிதித்திட
நஞ்சுடை காளியன் நலிந்து மடிந்திட
செஞ்சடையனைப் போல் களிநடம் புரிந்திட!

வேய்ங்குழலில் விரல் நாட்டியமாடிட
குழலிசை கசிந்து திசையெங்கும் ஓடிட
தத்தித் தோம் என நர்த்தனம் புரிந்திட
திக்கெட்டும் அவன் திருப்பதம் பணிந்திட!

கிருஷ்ணா கிருஷ்ணா கோவிந்தா
கோகுல கிருஷ்ணா கோவிந்தா
பக்த வத்ஸலா கோவிந்தா
பாண்டு ரங்கா கோவிந்தா!

தேவகி நந்தன கோவிந்தா
தேவர்கள் ரட்சக கோவிந்தா
மாதவ தேவா கோவிந்தா யாதவ தீபா கோவிந்தா!

ராதா மாதவ கோவிந்தா
பாமா ருக்மிணி கோவிந்தா
கோபியர் லோலா கோவிந்தா
கோபால கிருஷ்ணா கோவிந்தா!

கோவிந்தா ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா!
 
 
--கவிநயா

படத்துக்கு நன்றி: http://kannan-kadhaigal.blogspot.com/
http://www.dollsofindia.com/product/terracotta-sculpture/vaishnava-kirtaniya-group-krishna-devotees-BX70.html


Tuesday, August 27, 2013

கோகுலத்தில் கோலாகலம்!


கோகுலமே ஒரே நிசப்தமாக இருந்தது. கொலுசுச் சப்தம் கூட பூதாகரமாகக் கேட்பது போல் இருந்ததால், நிசப்தமான இடத்தில் குரலெழுப்பாமல் இரகசியக் குரலில் பேசிக் கொள்வது போல், சப்தம் எழுப்பாமல் கொலுசணிந்த பாதங்களை மெதுவாக எடுத்து வைத்து நடந்தாள், ராகினி.

ராகினி அவள் அம்மாவுடன் கோகுலத்தில் வசிக்கும் அத்தை மகள் லலிதை வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள்.

கிருஷ்ணன் பிறந்தது முதல் கோகுலத்தை விட்டு எங்கேயும் வருவதில்லை, லலிதை. அதனால் அவளை (கிருஷ்ணனையும்) பார்க்கும் ஆவலில், அம்மாவையும் இழுத்துக் கொண்டு இங்கேயே வந்து விட்டாள், ராகினி!

ஆளரவமேயின்றி திறந்து கிடந்த வீடுகளை வியப்போடு வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தார்கள், இருவரும். பகல் நேரத்தில் இப்படி ஒரு நிசப்தமா? கொஞ்சம் அச்சமாகக் கூட இருந்தது இருவருக்கும்.
இதோ… லலிதையின் வீடு!

லலிதையின் வீடும், இவர்கள் பார்த்த மற்ற வீடுகள் போலவே திறந்துதான் கிடந்தது. வீட்டில் யாரும் இருப்பது போலவே தெரியவில்லை. எல்லோரும் எங்கே போயிருப்பார்கள்? ‘லலிதை’ என்று சப்தமாகக் கூப்பிடக் கூட ஒரு மாதிரியாக இருந்தது. உள்ளே சென்று பார்க்கலாம்…


உள்ளே… கூடத்தில்… அவர்கள் கண்ட காட்சி!

ஒரு பெரிய பையன் குனிந்து கொண்டிருக்க, அவன் மீது ஒரு சின்னப் பையன் ஏறிக் கொண்டு, உறியிலிருந்த பானையை எடுத்துக் கொண்டிருந்தான்.

“ஆ!” என்று தன்னையுமறியாமல் சப்தமிட்டாள் ராகினி.

திடீரென்று கேட்ட குரலால் திடுக்கிட்டு, பானையைத் தவற விட்டு விட்டான், அந்த நீல வண்ணச் சிறுவன். பானை கீழே விழுந்து உடைய, அதிலிருந்த வெண்ணெய் வெள்ளை வெளேரன்று பந்து பந்தாய் ஆங்காங்கே சிதறியது. சட்டென்று கீழே குதித்த அவன், ராகினியும் அவள் அம்மாவும் அங்கே வாய் பிளந்து நிற்பதைக் கண்டும் காணாதது போல், சாவகாசமாகக் கீழே உட்கார்ந்து வெண்ணெயைக் கைகள் நிறைய அள்ளி வாய் நிரம்ப வைத்து உண்ண ஆரம்பித்தான். அந்த இன்னொரு சிறுவனையும் உண்ணும்படி சைகை செய்தான்.

“மாட்டிக் கொண்டாயா!”

என்ற உற்சாகக் குரலைக் கேட்டுத் திரும்பினாள், ராகினி.

அங்கு நின்றிருந்தவள், சாட்சாத் அவள் அத்தையேதான்! லலிதையின் அம்மா.

ராகினியையும், அவள் அம்மாவையும் பார்த்தவள், “வாருங்கள் அக்கா, வா ராகினி. உங்களைப் பார்த்ததில் ரொம்பவும் சந்தோஷம். ஆனாலும் உங்களைக் கவனிப்பதற்கு முன், இந்தப் பயலை அவன் அம்மாவிடம் கொண்டு ஒப்புவித்து விட்டு வந்து விடுகிறேன்.”

நீலப் பையன் தப்பிச் செல்ல எந்த அவசரமும் காட்டவில்லை. யாரோ என்னவோ நமக்குச் சம்பந்தமில்லாததைப் பேசுகிறார்கள் என்பது போன்ற பாவனையுடன், குறும்புச் சிரிப்புடன், வெண்ணெயை அள்ளித் தின்று கொண்டிருந்தான்.

“இந்தக் கள்ளக் கிருஷ்ணன் வெண்ணெய் திருடுகிறான் என்று நான் சொன்ன போதெல்லாம் இவன் அம்மா யசோதா என்னை நம்பவே இல்லை. அவனைக் கையோடு பிடித்துக் கொண்டு வா, அப்போது பார்க்கலாம் என்று சொல்லி விட்டாள்! இவனைப் பிடிக்கத்தான் இத்தனை நேரம் ஒளிந்து கொண்டு காத்திருந்தேன்! இதோ இப்போது கையும் களவுமாக மாட்டிக் கொண்டானே!”

என்று சொல்லியபடி, லலிதையின் அம்மா நீலக் கிருஷ்ணனின் ஒரு கரத்தை இறுகப் பற்றி இழுத்துக் கொண்டு, யசோதையின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். ராகினியும், அவள் அம்மாவும் கூடவே, என்ன நடக்கப் போகிறதோ என்ற ஆவலுடன் அவளைப் பின் தொடர்ந்தார்கள்.

இவர்கள் போகும் வழியில் இன்னொருத்தியும் ஒரு கையை நீட்டிப் பிடித்தபடி வந்து கொண்டிருந்தாள். யாரையோ பிடித்திருப்பது போல பாவனை இருந்தாலும், அவளுடன் வேறு யாரும் வருவதாகத் தெரியவில்லை; அவள் மட்டும் வருவதாகவே ராகினிக்குத் தெரிந்தது.

கொஞ்ச தூரம் சென்றதும், இன்னொருத்தியும் அதே போல கையை நீட்டிப் பிடித்தபடி வந்தாள். (அதாவது, ஒருத்தி பிடித்திருந்த கிருஷ்ணனை இன்னொருத்திக்குத் தெரியவில்லை!) இப்படியே ஒவ்வொருத்தியாகச் சேரச் சேர, ஒரு பெரிய கூட்டமே சேர்ந்து விட்டது. பெரியதொரு ஊர்வலம் போல அனைவரும் சேர்ந்து யசோதையின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்கள்!

“யசோதா!”
     “யசோதா!”
             “யசோதா!”

ஆளுக்கொரு குரலெழுப்பிக் கூப்பிட்டார்கள். யசோதா வெளியில் வந்தவள், இத்தனை பெரிய கூட்டத்தைப் பார்த்துத் திடுக்கிட்டாள்.

“என்னடி இது? அத்தனை பேரும் ஒன்றாகச் சேர்ந்து வந்திருக்கிறீர்கள்? அது மட்டுமில்லாமல் எல்லோரும் ஒரு கையை ஒரு பக்கமாக நீட்டிக் கொண்டே வேறு இருக்கிறீர்கள்? எல்லோருக்கும் ஒரே சமயத்தில் கை சுளுக்கிக் கொண்டு விட்டதா?”, முகவாயில் கை வைத்துக் கொண்டு ஆச்சரியமாகக் கேட்டாள். அவளுக்கும் அவர்கள் எல்லோரும் பிடித்திருந்ததாக நினைத்த கிருஷ்ணர்கள் தெரியவில்லை.

“யசோதா! உன் பிள்ளை எங்கள் வீடுகளில் வெண்ணெய் திருடுகிறான் என்று சொன்ன போது நம்ப மாட்டேனென்றாயே? கையோடு பிடித்துக் கொண்டு வா, பார்க்கலாம் என்றாயல்லவா? பார் உன் பிள்ளையை! வெண்ணெய் அள்ளிய கையோடு, அதை உண்ட வாயோடு, அப்படியே பிடித்துக் கொண்டு வந்திருக்கிறேன்! இப்போதாவது நம்புவாயல்லவா?”, லலிதையின் அம்மா, கையில் பிடித்திருந்த கிருஷ்ணனை யசோதையின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினாள்.

“ஆமாம்… பார், நாங்களும் உன் பிள்ளையைப் பிடித்து வந்திருக்கிறோம்”, என்று எல்லோரும் அவரவர் பிடித்து வைத்திருந்த கிருஷ்ணனை யசோதையின் முன்னால் நிறுத்தினார்கள்.

ஒவ்வொருத்திக்கும் தன் கையில் பிடித்திருந்த கிருஷ்ணன் மட்டுமே தெரிந்தான். மற்றவர்கள் கையில் பிடித்திருந்த கிருஷ்ணன் தெரியவில்லை. யசோதைக்கோ இவர்கள் கூட்டி வந்த எந்த கிருஷ்ணனுமே தெரியவில்லை!

இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்ட யசோதைக்குக் கோபம் வந்து விட்டது!

“என்னடி, விளையாடுகிறீர்களா? என் பிள்ளை காலையிலிருந்து எங்குமே போகவில்லை! இப்போது கூட உள்ளே ததியோன்னம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். பார்க்கிறீர்களா?” என்றவள் உள் பக்கம் திரும்பி, “கிருஷ்ணா! கிருஷ்ணா! இங்கே வா!”, என்று உரக்கக் கூப்பிட்டாள்.

“என்னம்மா… கூப்பிட்டாயா?” என்றபடி ததியோன்னமும் கையுமாக கிருஷ்ணன் உள்ளிருந்து வந்தானே பார்க்க வேண்டும்!

வந்திருந்த அத்தனை கோபிகளின் வாயும் அடைத்து விட்டது! “என்ன இது? கிருஷ்ணன் உள்ளே இருந்து வருகிறானே!” என்று தன் கையில் இருந்த கிருஷ்ணனை ஐயத்துடன் பார்த்தார்கள்.

தயிர் வழியும் வாயோடு, உள்ளிருந்து வந்த கள்ளக் கிருஷ்ணன் சிரிக்க, எல்லோருடைய கிருஷ்ணர்களும் வெண்ணெயுண்ட வாயோடு இப்போது எல்லோர் கண்களுக்கும் தெரிய… கோகுலம், ஒரு நொடியில் கோலாகலமானது!

“தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு”,  தளர்நடை இட்டு வருவான்;
பொன்னேய் நெய்யொடு பாலமுது உண்டொரு புள்ளுவன் பொய்யே தவழும்!
மின்னேர்  நுண்ணிடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய்வைத்த பிரானே!
அன்னே  உன்னை அறிந்துகொண்டேன் ; உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே

தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு = இரண்டு விதமாப் பொருள் சொல்லுவார்கள்:
1.   தானும், தன் ஆயிரம் தோழர்களும்-ன்னு = 1000 friends, is too big a number, of the same age group:)
2.   “தன் நேர்” = தன்னைப் போலவே ஆயிரம் பிள்ளைகள்; ஆயிரம் கண்ணன்கள்!!!
தளர்நடை இட்டு வந்து, நெய் உண்டு, உண்ணவே இல்லை-என்று சாதிக்கும், பொய்யே தவழும்
குட்டிக் கிருஷ்ணனைக் கண்டு யசோதையும் அஞ்சுகிறாள்!

“அம்மா, அம்மா! லலிதையோடு நானும் இனி கோகுலத்திலேயே இருக்கிறேனம்மா!” என்று நச்சரிக்க ஆரம்பித்திருந்தாள், ராகினி!

அனைவருக்கும் இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள்!

[நன்றி: பாசுரம், உதவி - KRS என்ற கண்ணபிரான் ரவிசங்கர்]
படத்துக்கு நன்றி: http://artstudio108.com/inspirational/Krsna_stealing_butter.jpg

நன்றி: வல்லமை
 

Thursday, August 08, 2013

உனக்காக!



சிற்றில் ஒன்று கட்டி வைத்தேன்
சின்னக் கண்ணா உனக்காக
சற்றே உன்றன் தண்டைக் காலால்
உதைத்துக் கலைப்பாய் அதற்காக!

வண்ணப் புது சிற்றாடையை
உடுத்தி வந்தேன் உனக்காக
ஆற்று நீரில் நீராடையில்
திருடிச் செல்வாய் அதற்காக!

கடைந்த வெண்ணெய் ஒளித்து வைத்தேன்
கள்ளக் கண்ணா உனக்காக
கறந்த பாலும் திரிந்ததென்று
திரித்துச் சொன்னேன் அதற்காக!

என்னைக் கொஞ்சம் உன்னைப் போல
மாற்றுவாயோ எனக்காக
உனக்குப் பதிலாய் தாம்புக் கயிற்றில்
கட்டுப் படுவேன் அதற்காக!

நிழலைப் போல உன்னைத் தொடர்ந்து
பணிகள் செய்வேன் உனக்காக
உயிரும் நோக உலகுக்கெல்லாம்
உழைத்தாய் கண்ணா அதற்காக!

கட்டுக் கொள்ளாக் காதல் கொண்ட
பேதை இங்கே உனக்காக
மீண்டும் மீண்டும் பிறக்கக் கூடச்
சலியேன் கண்ணா அதற்காக!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.vikatan.com/sakthi/2011/09/ztrlmz/images/p25.jpg

Thursday, June 20, 2013

முத்தம் தாடா கண்ணா!



சின்னச் சின்னச் சின்னக் கண்ணா
கன்னம் மின்னும் மணி வண்ணா
கன்னங் கரு விழி கள்ள விழியாக
வெண்ணெயுண்ட கண்ணா வாடா, வந்து
வெல்ல முத்தம் ஒன்று தாடா!

கற்றைக் குழல் காற்றை அளைய, அதில்
ஒற்றைக் குழல் நெற்றி தயங்க
தோகை மயிற் பீலி வாகாய் அசைந்திட
நேராய் என்னிடத்தில் வாடா, வந்து
ஜோராய் முத்தம் ஒன்று தாடா!

பாதச் சதங்கைகள் கிணுங்க, அதில்
ஏழு ஸ்வரங்களும் மயங்க
மார்பில் தவழ்கின்ற ஆரம் அசைந்திட
மானைப் போலத் துள்ளி வாடா, வந்து
வாயில் முத்தம் ஒன்று தாடா!

தேவர் அசுரரும் வணங்க, அன்னை
யசோதையோ கொஞ்சிப் பிணங்க
ஏழுலோக முன்றன் வாயில் காட்டிய பின்
ஓடி என்னிடத்தில் வாடா, வந்து
கோடி முத்தங்களைத் தாடா!


-கவிநயா

Friday, June 14, 2013

காணாமலே வந்த காதல்!


முதன் முதலாய் என் உள்ளங் கவர்ந்தவனை நேரில் பார்க்கப் போகிறேன். நெஞ்சம் படபடவென்று துடிக்கிறது. அடி வயிற்றில் பட்டாம்பூச்சி படபடக்கிறது. பகலென்றும் பாராமல், இரவென்றும் பாராமல் கண்களைக் கனவுகள் வந்து கவ்விக் கொள்கின்றன. யாரோ என்னவோ செய்கிறார்கள், யாரோ என்னவோ பேசுகிறார்கள் என்று மட்டும்தான் தெரிகிறது. என்ன செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள், என்று ஒன்றும் விளங்கவில்லை. அவனைக் காதலிக்க ஆரம்பித்தது முதலே இப்படித்தான். என்னைப் பைத்தியமாக அடித்துக் கொண்டிருக்கிறான்.

அவனைக் கண்ணால் காணாமலேயே எப்படி இவ்வளவு காதல் வயப்பட்டேன் என்பது எனக்கே புரியாத புதிராகத்தான் இருக்கிறது. அவனை மனதில் எண்ணி எண்ணியே என் மனதிற்கு மிகவும் நெருக்கமாகிவிட்டான். இப்போது என் மனமே அவனென்று ஆகி விட்டது. என் தோழிகள் வந்து என்னைத் தொட்டு ஏதோ சொல்கிறார்கள். பிறகு வெள்ளிக் காசுகளை அள்ளி வீசினாற் போல் கலகலவென்று சிரிக்கிறார்கள். எனக்குத்தான் ஒன்றும் புரியவில்லை. தூக்கத்திலிருந்து எழுந்த குழந்தை போல் நான் விழிப்பதைப் பார்த்து, சிரிப்பு சப்தம் இன்னும்தான் அதிகமாகிறது!

“பாரேன் இவளை… ஒன்றும் தெரியாத பச்சைப் பிள்ளை போல் விழிப்பதை!”

“ஆமாம்… ஒன்றுமே தெரியாதுதான் அவளுக்கு. அவனைத் தவிர!”

“அதெப்படி. நாமெல்லாம் சிறு வயது முதல் இவள் தோழிகள். நம்மிடம் எப்போதாவது இவள் இந்த அளவு அன்பு செலுத்தியதுண்டா?”

“நீயும் காதல் வயப்பட்டிருந்தால் இப்படி ஒரு கேள்வியே கேட்டிருக்க மாட்டாய்!”

“ம்… அப்படி என்னதான் இருக்கிறதோ, இந்தக் காதலில்…” அழகு காட்டி உதட்டை வலிக்கிறாள், அவள்.

“அது மட்டுமில்லையடி. அவனோ எங்கேயோ இருக்கிறான். நாமெல்லாம் எப்போதும் இவள் கூடவே இருக்கிறோம். அதனால்தான் இவள் நம்மைச் சட்டை செய்வதே இல்லை. என்ன இருந்தாலும் தொலைவில் இருக்கும் பொருளுக்குத்தான் மதிப்பு அதிகம்!”

“ம்… அவன் வந்த பிறகு இவள் அவனுடன் போய் விடப் போகிறாள். நாமெல்லாம் சேர்ந்து இருக்க இனி எப்போது வாய்ப்பு கிடைக்குமோ? அது வரையாவது இவள் நம்முடன் சிறிது பேசி, விளையாடி, மகிழ்ந்திருக்கலாமல்லவா?”


இவர்கள் பாட்டுக்குப் பேசிக் கொண்டேயிருக்க, அவை என் செவிகளில் விழுந்தாலும், என் மனதில் பதியவில்லை.

“அவன் எப்படி இருப்பான்? நான் கற்பனையில் கண்டது போலவே இருப்பானா? என்னைக் கண்டதும் என்ன நினைப்பான்? என்னைப் பிடிக்குமோ பிடிக்காதோ அவனுக்கு? நான் அனுப்பிய செய்தி அவனுக்குக் கிடைத்திருக்குமா? காணாமலேயே காதலா என்று அவன் நினைத்து விட்டால் என்ன செய்வது?  அப்படியே நினைக்கவில்லையென்றாலும், என் கடிதத்தை அவன் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளா விட்டால் என் கதி என்னவாகும்?”

“ஏனடி இப்படியெல்லாம் கவலைப்படுகிறாய்? அவன் கட்டாயம் வருவான். உன்னை அப்படியே அள்ளிக் கட்டித் தூக்கிக் கொண்டு போய் விடுவான், பாரேன்!”

அப்போதுதான் உணர்கிறேன், என் மனதிற்குள் நினைப்பதாக நான் நினைத்த அனைத்தையும் வாய் விட்டுப் பேசியிருக்கிறேன் என்று! எல்லாம் இந்தக் கள்வனால் வந்தது. மனதிற்குள் அவனிடம் பொய்க் கோபம் காட்டுகிறேன். இந்தக் கள்ளிகளிடம் நானே இப்படி மாட்டிக் கொண்டேனே… வெட்கத்தால் என் முகமும் கன்னங்களும் சிவந்து சூடாவது எனக்கே தெரிகிறது.

“ஐய... வெட்கத்தைப் பார்! எங்களுக்குத்தான் உன் வண்டவாளமெல்லாம் ஏற்கனவே தெரியுமே!”, செல்லமாக என் கன்னத்தைக் கிள்ளுகிறாள் ஒருத்தி.

“கவலைப்படாதே ருக்மிணி. இந்நேரம் அந்த புரோஹிதர் உன் கடிதத்தை உன் கண்ணனிடம் சேர்த்திருப்பார்… “

“ஆமாம், அந்தக் கடிதத்தில் அப்படி என்னதான் எழுதியிருந்தாய், சொல்லேன்!” என் மனநிலையை மாற்றுவதற்கென்றோ என்னவோ என் தோழி ஒருத்தி கேட்கிறாள்.

“ம்… அப்படி ஒன்றும் சுவாரஸ்யமாக இல்லையடி. நான் என்ன என் மனதில் உள்ள காதலை எல்லாம் கொட்டிப் பக்கம் பக்கமாக எழுதுகிற மனநிலையிலா இருந்தேன்?”

அந்தக் கடிதம் என் மனக் கண்ணில் ஓடுகிறது…

“கிருஷ்ணா, நீயே என் உயிர். உன்னைப் பற்றிக் கேள்வியுற்றது முதல், உன் மீது காதல் கொண்டு, உன்னையே என் மணாளனாக வரித்து விட்டேன். ஆனால் இங்கு எனக்கு வேறு திருமண ஏற்பாடு நடக்கிறது. மணமகளான நான், திருமணத்திற்கு முதல் நாள் குல வழக்கப்படி கௌரி பூஜைக்கு ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். நான் கடிதம் அனுப்பியிருக்கும் என் நம்பிக்கைக்குரிய புரோஹிதருடன் உடனே புறப்பட்டு அங்கு வந்து என்னைக் காப்பாற்று.”

எந்தப் பெண்ணின் முதல் காதல் கடிதமேனும் இப்படி இருக்குமா, என்று எண்ணம் ஓடுகிறது.

நாளைக்குத்தான் கௌரி பூஜை.

அவன் வருவானா?


--கவிநயா






  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP