Showing posts with label கூரத்தாழ்வான். Show all posts
Showing posts with label கூரத்தாழ்வான். Show all posts

Tuesday, February 02, 2010

ஆயிரத்தில் ஒருவர் !



(குரு ராமானுஜர் இங்கே)





’கூரத்துச் சம்பா
குமரகோட்டத்துக்கீரை
கோபுர வாயிற்படி காற்று
வெள்ளைக்குளத்துத் தீர்த்தம்
வரதரது வாசம்
!

கூரம் என்னும் ஊரின் சிறப்பினை, இந்த நாட்டுப்புறப்பாட்டில் அறியமுடிகிறது.

கூரத்தின் நிலம் மிகவும் செழிப்பானதாம் இதில் விளையும் சம்பா நெல் உயர்ந்ததாக சொல்லப்படுகிறது.

இன்று கிராமமாகக் காட்சி அளிக்கும் கூரம் முன்னொருநாளில் கூரமாநகரமாக திகழ்ந்தது.காஞ்சிக்கு 12கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஊரில் ஸ்ரீராமமிஸ்ரர் பெருந்தேவி தம்பதிகளுக்கு சௌம்யவருஷம் தைமாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் வியாழக்கிழமையில் ஓர் ஆண்குழந்தைபிறந்தது. பிறப்பிலேயே ஸ்ரீவத்சத்தின் புனிதக்குறி விளங்கியதால் ஸ்ரீமன் நாராயணனின் சங்கின் அம்சமாக இருக்குமோ என வியந்து பெற்றோர் குழந்தைக்கு ஸ்ரீவத்ச சின்ஹர் என்று பெயர் சூட்டினர். பிற்காலத்தில் அர்ச்சாவதாரத்தில் ஏனைய ஆழ்வாரகளைப்போல ஈடுபாடு உள்ளது கண்டு இவரை எல்லாரும் ஆழ்வான் என அழைக்கலாயினர் காஞ்சிப்பெருமானின் நட்சத்திரமும் ஹஸ்தமே ஆகும்.

கூரத்தாழ்வார் பொறுமையின் வடிவம். ஒருசமயம் ஆழ்வார் நட்ந்துகொண்டிருக்கையில் வயல்வழி ஓரமாக ஒரு தவளையை பாம்பு விழுங்கிக்கொண்டிருந்தது அந்த தவளையோ இறக்குமுன்பு பரிதாபமாக கத்திக்கோண்டிருந்தது இதுகண்டு அவர் யார்தான் இந்தத் தவளையைக் காப்பார்களோ என நினைத்து மயக்கமாய் விழுந்தாராம் அவருக்கு அவ்வளவு மெல்லிய மனது.


மற்றொருசமயம் ஒருவாழைத்தோட்டத்தில் வழியே சென்றுகொண்டிருந்தபோது ஒருமரத்தில் அப்போதுதான் வாழை இலையை ஒருவன் அறுத்துக்கொண்டு போயிருந்தான் அந்த அறுத்த இடத்தில் நீர் சொட்டிக்கொண்டிருந்தது அதுகண்டு ஆழ்வார் மனம்பொறுக்காமல்மூர்ச்சித்து விழுந்தார் என்று கூறுவர்.

உடையவர் ஒருநாள் ஓர் ஊமையை அழைத்துக்கொண்டு மடத்திற்கு வந்தார்.வந்தவர் நேராக தமது அறைக்குச்சென்றார் பிறகு அந்த ஊமையைப்பார்த்து தனனை விழுந்துவணங்கி திருவடிகளை தலையிலே ஏற்கும்படி செய்கையால் கூற அந்த ஊமையும் திருவடி தஞ்சம் என்று உணர்ந்து அவ்வாறே செய்தான் இதைப்பார்த்த ஆழ்வார் ,’ஐயோ எவ்வளவு சாஸ்திரங்கள் கற்று என்னபயன் ?இந்த ஊமைக்குக்கிடைத்த பாக்கியம் நமக்குக்கிட்டவில்லையே நானும் ஊமையாய் இல்லாமற்போனேனே” என்றுவருந்தினாராம்.

அரங்கனிடம் மோட்சவரம் பெற்று ஆன்ந்தக்கூத்தாடியபடி வந்தவரை கவலையுடன் எதிர்கொண்டார் ராமானுஜர்.

“ஆழ்வானே என்னைவிட்டுப் போகபோகிறீரா? எப்படி மனம் வந்தது என்னைப்பிரிவதற்கு?’

அதற்கு கூரத்தாழ்வார்,” சுவாமி! பரமபதத்தில் புதிதாக வருபவர்களை அங்குள்ள நித்யசூரிகள் அழைத்துக்கொள்வது வழகக்ம்.... தாங்கள் முன்சென்று நான்பின்சென்றால் தாங்கள் என்னைஅழைக்க வேண்டிவரும். தாங்கள் என் குரு! குருவானவர் சிஷ்யனை வரவேற்பது அபசாரமல்லவா? ஆகையால் நான் சென்று, முன்னின்று தங்களைவரவேற்கத் தயாராய் இருப்பேன்” என்றுகூறினார்

கடைசிநேரமும் வந்தது.






(சீடர் கூரேசர் இங்கே)


எதிராஜர் திருமந்திரம் ஓத, ஆழ்வான் தனது தனதுதலையைத் தனது சிறந்த சீடரான பிள்ளை ஆழ்வான் மடியில் வைத்தார். த்னதுதிருப்பாதங்களை சாந்தமே உருக்கொண்டவரும் பொறுமைக்கு பிராட்டிக்கு அடுத்தபடியுமானவராய் கருதப்பட்டவரும் ,அனைவர்க்கும் தயா குணம்படைத்தவரும் கைபிடித்த நாளிலிருந்து கடமை வழுவாது கணவனுக்குக் குறிப்பறிந்து பணிவிடை செய்த உத்தம பத்தினியுமான ஆண்டாள் மடியில் வைத்தார்.

திருமகன்கள் பராசரபட்டரும், வேதவியாசபட்டரும் மற்றும் எம்பாரும் முதலியாண்டவனும் நடாதூர் அம்மானும் கண்ணீர்விட்டபடி நின்றிருக்க தம் குரு ராமானுஜரைப்பார்த்தபடி இரு கைகளையும் கூப்பியபடியே கூரத்தாழ்வார் பரம பதம் அடைந்தார். இத்தகைய பாக்கியம் யாருக்குக்கிடைக்கும்?

மொழியைக்கடக்கும் பெரும்புகழான் வஞ்சமுக்குறும்பாம்
குழியைக்கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண்

என்று திருவரங்கத்தமுதனார் ராமானுஜ அந்தாதியில்குறிப்பிட்டுள்ளார். முக்குரும்பாகிய குழி என்பது, கல்விச்செருக்கு தனச்செருக்கு குலச்செருக்கு என்பதாகும் இம்மூன்றையும் ஒழித்தவர் ஆழ்வான்.

அஷ்டபிரபந்தம் எழுதிய திவ்யகவி பிள்ளைப்பெருமாள் ஐய்யெங்கார், ’அந்தமில் பேரின்பத்து அழிவில்லாத பெருவீட்டில் அழிவில்லாத உடல்பெற்று வாழும் பரமாச்சாரியரான கூரத்தாழ்வான் திருவடிகளை எப்போதும் கூடுவேன்’ என்றுபாடுகிறார்


இன்று(3.02-2010) கூரமாநகரம் ஆழ்வானின் ஆயிரமாவது பிறந்தநாளை கோலாகலமாக் கொண்டாடுகிறது.ஆழ்வானின் அருள்பெறுவோம் ஆனந்த நிலையடைவோம்!

சீராரும் திருப்பதிகள் சிறக்கவந்தோன் வாழியே!
தென் அரங்கன் சீரருளை சேர்ந்திருப்போன் வாழியே!
பாராளும் எதிராசர் பதம்பணிந்தோன் வாழியே!
நாராயணனே நமக்குசரண் என்றான் வாழியே!

பொருள் விரிக்கும் எதிராசர் பொன்னடியோன் வாழியே!
பொன்வட்டில் தனை எறிந்த புகழுடையோன் வாழியே!
ஏராரும் அஸ்தத்தில் இங்கு உதித்தான் வாழியே!
எழில் கூரத்தாழ்வான் தன் இணை அடிகள் வாழியே!



(பாடலுக்கு உதவிய ’கூரத்தாழ்வார்கதை’ எனும் புத்தகத்திற்கு நன்றி)

கூரத்தாழ்வார் திருவடிகளே சரணம்!

_____திருவரங்கப்ரியா--------------

Saturday, January 17, 2009

கூரேசன் சீர் கேளீரோ!

நீங்கள் திருவரங்கம் கோயிலுக்குப்போயிருக்கிறீர்களா

பிரதான வாயில்வழியாக அதாவது ரங்கா ரங்கா கோபுரம்வழியாக திருக்கோவிலில் காலடி எடுத்துவைத்ததுமே உங்களின் வலப்புறத்திலிருக்கும் இருக்கும் முதல்சந்நிதியை ஏறெடுத்துப்பார்த்திருக்கிறீர்களா

அது என்ன பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரின் சந்நிதியா அல்லது

பரமபக்தன் அனுமனின்சந்நிதியா

அல்லது பக்தபிரஹாலதனின் சந்நிதியா

எது என்று கேட்கிறீர்களா

ம்ஹூம் அவர்கள் யாரும் இல்லை.

பகவானுக்குத்தன் அடியார்களை மிகவும் பிடிக்கும்.

ஆனால் அடியாரைநேசிக்கும் அடியாரை அதைவிடப்பிடிக்கும்.

தன் அடியாரை குருவாக ஏற்று அவருக்குத்தொண்டு செய்யும் அடியவர்தான் ஆண்டவனின் மனத்தில் முதலில் இருப்பவர்.

கூரத்தாழ்வாரின் குருபக்திக்கு பலபல சொல்லலாம் . ஒன்றைமட்டும் இப்போது பார்க்கலாம்!


குருவுக்குமுன்பாய் தனக்கு திருநாடு (வைகுந்தம்) ஏக அரங்கனிடம் இறைஞ்சுகிறார் கூரர்.



அரங்கன் வியப்புடன் அவரை நோக்க, அரங்கபெருமானே நான் வைகுண்டத்திற்கு முன்னே சென்று எம்பெருமானை இருகரம்நீட்டிவரவேற்கவேணுமே அதற்குத்தான் என்றபோது அவரது ஆசார்யபக்தியை மெச்சிய அரங்கன் , கூரத்தாழ்வாரின் விருப்பத்திற்கிணங்கி அவருக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் முக்தியளிக்க முன் வந்தார். அதன்படி ராமானுஜருக்கு சுமார் ஏழு ஆண்டுகள் முன்னதாகவே இவ்வுலக வாழ்க்கையைவிட்டு திருமாலிடம் இணைந்தார் கூரத்தாழ்வார்


குருபக்தியில் சிறந்த கூரத்தாழ்வாருக்கே, அரங்கன், அ(ந்த)ரங்கத்தில் உயர்பதவி கொடுத்திருக்கிறான்!

ஆமாம் !கோவிலின் முதல் சந்நிதி கூரத்தாழ்வாருடையதுதான் !

இனி திருவரங்கம் செல்லும்போது கோவிலில் நுழைந்ததும் முதலில் குருபக்தியில் சிறந்துவிளங்கியவரின் திருச்சந்நிதிக்கு சென்றுவாருங்கள்! அரங்கனுக்கு தன் அடியவர்களைக்கணடு வணங்கியபின்னர் தன்னைக்காணவருவதே பிடிக்கும்!

கூரத்தாழ்வாரின் மகிமையைச்சொல்வது என்பது கடலைக்கைக்குள் கொண்டுவருவது என்பதுபோல...சிறு அலையொன்றைமட்டும் இங்கே வீசிச்செல்ல எனக்கு இயலுவதை
பாக்கியமாகக் கருதுகிறேன்!


.


ஸ்ரீ ராமானுசரின் பிரதம சீடரான கூரத்தாழ்வார் காஞ்சீபுரம் அருகே கூரம் என்னும் கிராமத்தில் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். அவரது இயற்பெயர்திருமறுமார்பினன். (ஸ்ரீவத்சாங்கர்).தனது செல்வத்தை ஏழை எளியோர்க்கு வாரிவழங்குவதிலேயே செலவிட்டார்.

அவரது அரண்மனை போன்ற பெரிய மாளிகையில் நள்ளிரவு வரை பெறுங்கள் கொடுங்கள் மகிழுங்கள் என்ற கோஷமே கேட்கும்.

ஒவ்வொரு நாளும் காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயில் திருக்கதவுகள் மூடிய பின் தான் இவரது வீட்டுக் கதவுகள் மூடப்படும். ஆனால்ஒரு நாள் ஊர் திருவிழாவிற்கு செல்ல வேண்டியிருந்ததால் சற்று முன்பாகவே அவர் இல்லக்கதவை மூடிவிட்டார். அந்தக் கதவில் கட்டப்பட்டிருந்த விலைஉயர்ந்த மணிகளின் ஒலி, கதவை சாத்தும்போது கோயில் வரை கேட்கும்.

திருக்கச்சி நம்பிகள் என்பவர் காஞ்சி வரதராசப்பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்து வந்தார் . கூரத்தாழ்வார் வீட்டு மணியொலி வரஜராஜப்பெருமாள் சன்னதி வரை கேட்கவும் பெருந் தேவித்தாயார், சுவாமியிடம் "என்ன! அதற்குள் கோயில் அடைக்கும் சத்தம்.. நடை சாத்த நேரமாகிவிட்டதா?" என்று வினவினாள்.

குழம்பிய சுவாமி தனக்கு சேவை செய்து வந்த திருக்கச்சி நம்பிகளிடம் இதைப் பற்றிக் கேட்க, அவரும் நடந்ததைச் சொன்னார்.

அதைக் கேட்ட பெருமாள், "ஆழ்வானின் செல்வத்திற்கு அத்தனை சிறப்பா? கோயில் கதவு மூடும் முன்னே அவன் வீட்டுக்கதவு மூடப்பட்டதே!" என்றார்

தாயார் நம்பியிடம் உத்தம ஆத்மாவான கூரேசனைதான் காணவிரும்புவதாய் கூறினாள்

இதைக்கேட்ட திருக்கச்சி நம்பி கூரத்தாழ்வாரிடம் இதைப் பற்றிச் சொல்லக் கூரத்தாழ்வார் மனம் வருந்தி “ மகாபாவியான நானா உலகமாதாவை வந்துப்பார்ப்பது! செல்வம் என்ற குப்பையை இத்தனைகாலமும் சேர்த்துவைத்திருந்த நான் நாயினும் கடையேன் எனக்குத்தாயாரை தரிசிக்கும் பாக்கியமும் இல்லை தகுதியும் இல்லை என்றார்.

செல்வம் அல்ல உய்ய வழி” என்பதைப் புரிந்து கொண்டு எல்லாச் செல்வங்களையும் தானம் செய்ய ஆரம்பித்தார். தாயாரின் தாமரைப்பாதம் தரிசிக்க என்னைத்தகுதி உள்ளவனாக ஆக்கிக்கொள்ள இப்போதே என்மனத்தையும் உடலையும் தூய்மையாக்கிக் கொள்கிறேன் என்று
அதற்கு சித்தமானார்.



சிறு வயதிலிருந்தே நிறைந்த கல்வியுடன் நற்பண்புகள் அவரிடம் காணப்பட்டன. எல்லோருக்கும் பிடித்த பாத்திரமாக விளங்கிய அவருக்குத் தகுந்தாற்போல, ஆண்டாள் என்ற பெயர் கொண்ட ஒரு நல்ல குணவதி அவருக்கு மாலையிட்டாள்.

தன் செல்வத்தை எல்லாம் தானம் செய்த பின்னர் குருவைத் தேடிய அவர், ஸ்ரீராமானுஜரைச் சரணடைந்தார். அவருக்குத் தொண்டு செய்து வாழும் எண்ணத்தில் மனைவியிடம் ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீராமானுஜருக்கு சேவை செய்வோம் என்று கூறினார்.

"எத்தனை தூரம் போக வேண்டும். வழியில் எதாவது பயம் உண்டா?"

"மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம்! ஏன் எதாவது எடுத்து வந்திருக்கிறாயா?

"ஆம் சுவாமி,தாங்கள் சாப்பிட என்று ஒரு தங்க வட்டில் கொண்டு வந்திருக்கிறேன்".

அதை வாங்கி வீசி எறிந்தார் ஆழ்வார்.

பின் நீண்ட பயணத்திற்குப் பின் திருவரங்கம் அடைந்து அங்கு ஒரு வீட்டில் தங்கினார்கள். கீழச்சித்திரை வீதியில் தேருக்கு நேராக அமைந்த அந்த வீட்டில் உணவில்லாமல் மூன்று நாட்கள் பட்டினி கிடந்தனர்.

ஆண்டாளம்மாள் தன் கணவர் இப்படிப் பட்டினியாக இருப்பதைப் பார்த்து தவித்துப் போபோய்விட்டாள். அவளுக்குத் தானும் பட்டினி கிடப்பது தெரியவில்லை. நேராக மனதில் ஸ்ரீரங்கநாதனைக் கண்டு பேசினாள், "அப்பா, திருவரங்கனே! உனக்கு மட்டும் மூன்று வேளைகளும் இனிப்புடன் பிரசாதம் போகிறது. உன் பக்தன் இங்கு மூன்று நாட்கள் பட்டினியாக இருப்பது தெரியவில்லையா? நீ மட்டும் அங்கு வயிறாற அமுது உண்கிறாயே!"

என்ன ஆச்சரியம்! உடனேயே கதவைத் தட்டிய ஒரு பரிசாரகன், ஒரு பொட்டலத்தைக் கொடுத்து, "அரங்கன் என்னை அனுப்பி, இதைக் கொடுத்து வரச் சொன்னார்" என்றான். அதைப் பிரித்துப் பார்த்தால் அதில் அரவணைப் பிரசாதம் இருந்தது. ஆண்டாள் அதை எடுத்துத் தன் கணவரிடம் கொடுத்தாள்.

கூரத்தாழ்வார் தன் மனைவியிடம், அரங்கனை வேண்டினாயா என்று வினவ, "ஆம், மூன்று நாட்கள் என் கணவர் பட்டினி கிடக்கிறார். உனக்கு மட்டும் பிரசாதம் போகிறதே என்று ரங்கநாதனிடம் கேட்டேன் " என்றாள்.

அனைத்தையும் விட்டு வந்தபின்னும் அரங்கனிடம் நீ இப்படிவேண்டிக்கொள்ளலாமா சரி இனி இம்மாதிரி செய்யாதே எனச்சொல்லி அவர் அரங்கபிரசாதத்தில் தானும் சிறிது எடுத்துக்கொண்டு மனைவிக்கும் சிறிதுகொடுத்துவிட்டு இரவு முழுதும் திருவாய்மொழியை ஓதியவண்ணமே கழித்தார்.

(பரமனின் பிரசாதம் உண்ட பலனாய் பத்துமாததில் அவர்களுக்கு இரட்டைக்குழந்தைகள் பிறந்தன.
பராசரபட்டர் வியாசபட்டர் என்று பேரறிவும் மிகுந்த ஞானமும்கொண்டஅவர்களைப்பற்றி பிறகுவிவரமாய் எழுத அரங்கன் அருளவேண்டும்!)

சுமார் 12 வருட காலம் கழித்து ராமானுஜரும், கூரத்தாழ்வாரும் காஞ்சியில் சந்தித்தனர். அப்போது ராமானுஜர் காஞ்சிப் பேரருளாளனிடம் வேண்டிக் கொண்டதால், கூரத்தாழ்வார் இழந்த பார்வையை மீண்டும் பெற்றார்.

.
குணங்களில் சிறந்தவரும், ஜீவகாருண்யம், குரு பக்தி, வைராக்யம், பகவத் பாகவத தொண்டு மற்றும் பாண்டித்யம் பெற்றவரும், தான் கண்களை இழக்கக் காரணமாயிருந்த "நாலூரான்' என்பானும் நற்கதியடைய திருமாலிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டவருமான கூரத்தாழ்வாரை வேண்டிக் கொண்டால் நமது கண் பார்வைக் கோளாறுகள் நிவர்த்தியடையும்.

இவ்வருடம் இன்று( 17.1.2009) அமையும் இவரின் அவதார தினம், இவரது ஆயிரமாவது ஆண்டாக அமைகிறது.

கூரத்தாழ்வார் திருவடிகளே சரணம்!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP