Showing posts with label வசந்த். Show all posts
Showing posts with label வசந்த். Show all posts

Tuesday, September 19, 2017

திருக்குறுங்குடி.



துளி கொஞ்சம் தாராயோ - வெண்ணெய்த்
துளி கொஞ்சம் தாராயோ..
எலியுடனே காத்திருக்கும் எங்கள்மேல்
அளிகொண்டு கண்ணாநீ...
(துளிகொஞ்சம்)


ஆவினங்கள் அடிசேர ஆனந்த
ஆயர்பாடி குடிசேர மாமலை
கோவர்த்தன கிரி தாங்கி தன்
கோகுலம் காத்த விரலளவு
(துளிகொஞ்சம்)


அடைந்திருக்கும் விழிதிறக்க
அடைந்திருக்கும் வழிதிறக்க
அடைந்திருக்கும் செருக்கழிய
முடைந்திருக்கும் மணமொழிய
கடைந்தெடுத்த ஞான நறுநெய்யில்
(துளிகொஞ்சம்)

அழைப்பாயா?


மோகன மதுபாலா..! மேக வர்ணா..! மோக யதுகிரிநாதா..! மதுரநாதப்ரபு..! வா வா..! எனை அழைக்க! பிரிவிலுழல்கிறேனே, காணவில்லையா? எரிநெய்யாய் எரிகிறேனே, சுடவிலையா? நீயும் நானுமென ஒரு பறவைக்கூட்டில் அமர்ந்து குழலிசைக்க மடிமேல் துயிலக் கூறாயா?

பண்டரிநாதா..! அழகே..! அமுதே..! குழல் குமுகா..! தழல் தழுவிப் புகைகிறேனே? எங்கே சென்றாய்? நீலத்திருமேனி தவழக் கைகளில் அள்ளி அணைத்திடவே ஆசை பெருகுதடா..! ஷ்யாமா! சாரதகுரு! குசேலநண்ப! குருகோவிந்தா! குன்றேறிக் குலம் காத்த கருமணியே! ரதிவிஹாரி..! ரதிபரோபகாரி..! ரதிசாரதி..! ரதிரதிரதி..! அன்னதாதா..! அமுதபாதா! மதுசூதனா! கிரிதரா..! கிருஷ்ணதேவரே...!

பாண்டுரங்கா! பாரதராஜா! மங்கை மணாளா! மீராப்ரேமா! ஆண்டாள் ஆனந்தா! மயில்பீலி மதுரா மன்னா! ப்ருந்தாவனப்ரபு! ராமா! ராதாநாதா..! அய்யா! அம்மா! அண்ணா..! நீயே எல்லாம்..! நீயே எங்கும்..! காணுமிடமெலாம் கண் காணும் கார்முகிலே! நீரும் நீயே! அனலும் நீயே! அங்கும் நீயே! இங்கும் நீயே! எங்கும் நீயே! நானும் நீயே..!

மலர் சொரிந்து நிறைக்கிறேன்! மரெங்கும் சந்தனம் பூசுகிறேன்! மாலே! மதுரையம்பதி அன்னை அண்ணா!  பாற்கடல் பரந்தாமா..! கோவிந்தா! ரங்கா! காவேரி மைந்தா! வா..! வா..! முதற்கரிச்சான் கூவும் முதற்சொல்லே! வானெங்கும் நிறைந்த ஓங்காரமே! முத்தமிட்டுக் கொஞ்சக் கூறாயா? அச்சுதா! தாமோதரா! நாராயணா! அனந்தா! பத்மநாபா! மோகினிரூபா!

தேனே! தென்னனலே! நூறாயிரம் ரூபம் காட்டும் மாயவா! துவாரகையே! பாஞ்சன்யமே! பாலே! கொழு நெய்யே! செழுநுரையே! நிறைமணமே! வல்லபா! தீராப் பெயர்களில் உனை அழைக்க அழைக்க நாவினிமை சொல்லினிமை தமிழினிமை கோடி மடங்கு!

யசோதபுத்ர! பலராம சோதரா! நந்த மைந்த! கோகுலப்ரிய! ஆயர்பாடி ஆவே! வில்லிபுத்தூர் மருகா! ஸ்ரீ ரங்கராஜா! திவ்யபுருஷா! மாலை சூடி அழகேற்றியவளைக் கொண்டு சென்ற ராஜமன்னாரே! போதை தெளியவிலையே! யாதும் தெளிவில்லையே! யாதவ கோவே! கோபாலா! கோபாலா! ஆலிலை அமர்ந்த அன்பே! வாமனா! வா! வா! கேடில் விழுச்செல்வமே! கரி காக்க கருடனேறி வந்த கருணையே!

காதலா! காதலா! கோபியர் கொஞ்சும் ரமணா! கொஞ்சம் வாராயா? கொஞ்ச வாராயா? தஞ்சம் தாராயா? துஞ்சப் பாராயா?

சுதாகரா! சுலோக்‌ஷணா! சுத்தப்ரம்மா! சகல்லோக சத்வமே! சத்யனே! சமுத்ரதேவ! சுகராகா! ஸ்ருதிபாவா! உனுள் எனை உள்ளிழுத்துக் கொள்ள மாட்டாயா? பரிதி மேலெழு கதிரே! பனியென உறிஞ்சிக் கொள்ளாயா? குயிலே! குறும்பே! 

நீலாம்பல் நெடுமலர்.


முற்றத்து மென்மணலில் கட்டிய சிற்றிலைச்
சுற்றத்துத் தோழியர் சூழ்ந்திருக்க - முற்றாய்க்
குறுங்கை அளைந்து குலைத்துப் பறந்த
சிறுவனைக் கண்டாயோ நீ.

"ஏனடி யாரிவன்? கூறடி யார்மகன்?
நானடி தேடினேன் தேய்ந்திட" - "வீணடி,
நீலனோ பாலனோ நீள்தடி ஆயனோ
காலனோ கண்ணனோ பேர்".

கதிரெழும் போதில் நதியலை மீதில்
குதித்துக் களித்து வெளுப்பின் - அதிரூப
மைந்தன் உடையோடு செல்ல இடையினைப்
பைந்தார் மலரால் மறை.

சத்தமின்றிச் சாய்த்தபின் முத்தமிட்டு மீட்டெடுத்தான்
எத்தனவன் எந்தலைவன் எண்ணத்தைப் - பித்தாக்கித்
தித்திக்கும் நாவாலே திக்கெட்டும் தீப்பரவ
வித்தைகள் செய்தான் அவன்.

வெண்கழுத்தில் கண்புதைத்து மென்குரலில் என்னுடலைத்
தண்ணிலவோ தாமரையோ தானொளிரும் - பொன்மணியோ
மின்னொளியோ மீன்விழியோ மீட்பில்லை என்றவனைப்
பெண்ணென்று சூழ்ந்தேன் இனித்து.

கண்ணுண்டான் கள்ளூறும் கன்னியிதழ்க் கொண்டபின்
பெண்ணுண்டான் பொன்முலையில் சொல்புதைத்து - என்னுண்டான்
ஏதுண்டான் என்றறியேன் மண்ணுண்ட வாயாலே
மீதுண்பான் நாளும் இனி.

"நாணிலையோ?" என்றதற்கு "நங்கையிட மன்றென"
"ஏனிலையோ?" என்றதற்கு "ஏடிநீ - நானிலையோ?
தன்னுடலைத் தானறியத் தேவையன்று நாணமே
உன்னுடலில் உள்ளாதல் நான்".


ன்னிசைச் சிந்தியல் வெண்பா::

மாதொரு பாகனும் மால்திரு மார்பனும்
தூதொரு கண்ணனைக் கேட்டது “எப்படி?”
“வேய்ங்குழல் வித்தை!” சிரிப்பு.

Tuesday, July 19, 2016

ப்ரியே...சாரு ஸீலே...

ப்ரியே...சாரு ஸீலே...

ப்ரியே...ப்ரியே.... மனதில் அமரும் சின்னக் குருவியே... கிளை நழுவும் நிழலே... இரவில் நகரும் மெளனமே....

முகம் தூக்கி நீ கொள்ளும் சினமென்ன..? விரல்களைக் கோர்த்துக் கொண்டு திரும்பி அமர்ந்திருக்கும் கோலமென்ன? புறங்கழுத்தில் அலையாடும் சிறுமென்மயிர்களைக் காட்டி நீ புறங்காட்டும் பொழுதென்ன? ப்ரியே...ப்ரியே...

குழலென எழும் என் தவிப்பை நீ அறியமாட்டாயா? என் விரல்கள் தடவும் நீள்குழலை நீ விரவிப் பரந்திருக்கும் நதிக்கரையில் ஊறும் சிற்றெறும்பு என என் மேல் கனிய மாட்டாயா..? குளத்தில் விரிந்திருக்கும் கமலம் மேல் சுற்றி வரும் வண்டென உன் நினைவு மேல் வட்டமிடும் என் உளம் நீ அறியாததா?

ப்ரியே...ப்ரியே... மோதி உடையும் செம்மலர் மணமென நீ வருகையில் என் பீலி திரும்பும் திசையே... மதுவே... மலரிடைத் துகளே... மழையென எழும் கருணையே... பட்டென தழுவும் முகிலே...முகில் கொழுத்த குளிரே...

எழிலே... தழலே... நறுந்தளிர் முகையே... கறந்த வெம்பால் நுரையே... நுரைகெழு சுவையே... பனியே... பனிநனை புடவியே... ப்ரியே...

படர்க்கொடி நுனியாய்த் தத்தளிக்கும் என்னை அறியாயா... கருமையே கனிந்த வெம்மையே... என் விழிக்கெனவெழும் விழிக்கெனவழும் விழிக்கனவெழும் விழிக்கனவழும் ராக்காலங்களில் உலா வரும் புகைத்திரளே... ப்ரியே...


Tuesday, January 13, 2015

தூரிகையால் அவனும் அவளும்.


Thursday, March 14, 2013

கண்ணனைக் காணாதே...

மோக நிலவிதுவே - குளிர்
மோதிக் களித்திடும் இரவினிலே
சோகம் அறிந்திலையோ - கவி
சொன்ன நிலையும் இதுவன்றோ?
போகம் மறந்தினையோ - மது
பொங்கி வழிகின்ற வயதினிலே
தேகம் அழிகிறதே - கண்ணன்
தீண்டும் விரல்நுனி காணாதே!

உண்ணும் நினைப்பிலையே - உடை
உடுத்தும் எண்ணமும் வரவிலையே!
பண்ணை இசைத்திடும் பாங்கியரும்
பாவம் இவளென்று சொல்லினரே!
கன்னம் காயவிலையே - வானில்
காலை மாலை கண்டதிலையே
கண்ணன் உடனுறை காலமெலாம்
கண்கள் தூங்கிப் போனதிலையே!*

கூவி யுனையழைத்து இருள்
கூட்டிலே இருவர் தானமர்ந்து மலர்த்
தூவி மகிழ்ந்திட்டு உடல்
தூரிகை மேல்வரை எழிலுடன்
தாவி உனைக் கட்டி - மனம்
தாங்கொணா இன்பமே போதெலாம்
பாவி சுகித்திருப்பேன், அன்றேல்
பாலை நிலத்துப் பாலொளியாய்
ஆவி பிரிவதன்றோ - உடல்
ஆக்கினை பூமிக் கானதன்றோ!

***
*வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை
ஆரஅஞர் உற்றன கண். (1179)

Monday, November 26, 2012

இராதா மது.



லைக் கரும் குயிலின் கானத்தில் மனம் லயித்திருந்தேன். என் ஜன்னல் கம்பிகளில் நகர்ந்து கொண்டிருக்கும் மாலை பெய்த மழைத்துளிகளின் சர வரிசையில் பிரதிபலிக்கின்றது குயிலின் ஒற்றைக் குரல். இரவின் மென் குளிரில் ஊடுருவி நெஞ்சை அறுக்கும் துயரத்தின் இனிமையை ஸ்ருதி மாறாது படைத்தவனின் பேராணவத்தை யார் வைவது? தூணோரம் நின்றாடும் விளக்கின் திரி கருகிக் கொண்டு செல்கிறது. ஒளிக்குஞ்சுகள் திரியும் அதன் பிறவி இன்னும் சொற்ப கணங்களில் கழிந்து கொண்டிருப்பதை மனமே அறியாயோ?

என் மேலாடையில் நடுங்கிக் கொண்டிருக்கும் நூலாடையே, என் பெருத்த மார்புகளின் கனத்தை எவ்வாறு தாங்குகின்றாய்? பெருமூச்சின் அனல் பட்டுப் பட்டு பட்டுத் தேகம் கரைய எதற்காக நீ என்னை இன்னும் விடாது தழுவுகின்றாய்?

தூரத்து வானத்தில் ஒற்றைப் பெரும் பூவாய் தணிந்து தவிக்கின்ற வெண் பாவாய், என்னுடன் என் இல் ஏக மாட்டாயோ? தெருவெங்கும் தோரணங்கள், தோட்டமெங்கும் மணம் நிறை மலர்கள், மாடத்து ஒவ்வோர் இடுக்கிலும் ஒளிரும் மண் விளக்குகள்... என் பெருந்தனிமையின் ஒரேயொரு சொட்டையாவது காணாமல் ஆக்கி விடாது அலைபாய்வதைக் காண வாராயோ?

உறிகளில் தொங்கும் பானை அடுக்குகளில் ஊற வைத்த மோரும் வெண்ணெய்க் கட்டிகளும் யார் கைகளும் படாமல் அவன் வந்து குழப்பி, உதிர நிறம் ஊறும் அதரங்களில் பூசிக் கொண்டும் தரையெல்லாம் சிந்தி, மேனியெங்கும் பூசிக் கொண்டு உழப்பி இன்புற்று விளையாடுவதைக் கொள்ளாது, மேக ஊர்திகளில் ஏறிப் பயணம் செய்து ஏகாந்தம் நோக்கிச் சென்று தான் என்ன பயன்?

எட்டிப் பார்த்தவள் விட்டுச் சென்ற நீர்த் தாரைகள் கூரை விளிம்புகள் எங்கும் வழிகின்றன. ஆருயிரே...உன்னை எண்ணி எண்ணி ஏங்கி உருகிக் கரைகின்ற என் கண்களைக் கண்டு அவை அழுக்காறு அடைந்துச் மண்ணெங்கும் சேறாக்கி நகர்கின்றனவே...பிரபு, மனமெங்கும் தகிக்கின்ற அக்னித்தாரையை நின் விரல் நுனிகள் குளிரச் செய்து விடும் என்று நீ அறிந்திருந்தும் அருகில் வாராது இருப்பதேனோ?

கறக்காது இருந்தால், கட்டிக் கொள்ளும் பால் என்பதை அறியாதவனா நீ, கோபாலா? என் நெஞ்செங்கும் கட்டிக் கொள்கின்ற உன் ப்ரேமையை நீ அடையாது போனால், பின்னல் அணிந்து நடமிடும் இந்த சிரத்தைச் சுமந்து கொண்டு தான் என்ன செய்வது?

சலசலக்கும் நதிக்கரையில் மடி மீது சாய்ந்து கொண்டு உன் இதழ் பெய்யும் இனிப்பிசையைச் சுவைத்த என் செவிகள் சுமக்கும் தோடுகளில் தேங்கி நிற்பதெல்லாம் அன்று வாங்கி வந்த உன் உறுதிமொழிகள் அன்றோ?

கார்காலமும் வந்தது; மேற்கிலிருந்து குப்பல் குப்பலாய்க் கிளம்பி வந்த கரும்பூதங்கள் நின் நிறத்தைக் கடத்திச் செல்ல விடுவேனா? நீராய்ப் பொழிந்துத் தம்மைக் கரைத்துப் போயின. நாரை நிழல்கள் மிதக்கும் குளக்கரைகளில் ஆம்பல் மலர்களும் ஒற்றைக் காலில் நின்று முன்னிரவில் தூறும் சிறு துளிகளை உண்டு உதிர்ந்தன. பசிய சுவர்களின் முகப்புகளில் விளக்குகளை ஏற்றி வைத்தேன். விழுதுகளை மெல்ல அசைத்துக் கொண்ட ஆலமரத்தில் ஊஞ்சல்களைக் கட்டிக் கொண்டு, முன்னும் பின்னும் போய் வந்தேன், உன் நினைவுகளோடும் நிகழ் காலத்தோடும் தினம் சென்று வருவது போல. ஊதா வானத்தில் அந்தி நிறம் திக்குகளெங்கும் பரவிப் பரவி நாணத்தின் கிளைகளைப் பரப்பியது. தொலைவின் மலைச் சிகரங்களில் சுடர்ந்த செவ்வானம் ஆகாரம் அடங்கா அட்சயப் பாத்திரம் போல் தினம் தினம் ஆனந்தம் அள்ளித்தந்தது. மேலிருந்து ஆழி திறந்து நாளெல்லாம் நனைந்து கிடந்த பாதைகளெங்கும் பசுக்களும் கன்றுகளும் நடந்து சென்ற தடங்களில் பொங்கிய பால் நுரைத்து ஓடியது. முற்றமெங்கும் தேங்கிய மழைத்தேக்கங்களில் முகங்கள் அசைவதைப் பார்த்துப் பார்த்து விரல் களைத்தேன். காலையில் சொட்டும் கூரை மேனிகள், ராவெல்லாம் வானும் மண்ணும் பேசிக் கொண்ட ரகசிய மொழிகளின் மிச்சங்களை உதிர்த்தன. தளும்பிய ஏரிகள் உடையா நின்றன. பீலிகளைத் தாங்கும் மயில்கன்றுகள் மாலை முழுதும் முகில் அரசர்களைக் கண்டுக் கண்டு ஸ்நேகத்தின் ஒலியெழுப்பிக் கூத்தாடின.

குளிர்காலத்தில் காற்றிலே பனி மிதந்தது. இருள் விலகா முன்காலையில் புல் நுனிகளில் முத்தாய்த் துளிகள் சரிந்தன. புகை கிளம்பிய வீடுகளின் முக்காட்டில் ஈரம் இன்னும் மிச்சம் இருந்தது. பால் தெய்வங்கள் தொழுவத்தின் முடுக்குகளில் தூங்கிக் கழித்தன. திண்ணைகளில் போர்வை மூடிய தோழிகளும், வெந்நீர் அழைக்கும் குளியல்களுமாய்க் கழிந்தது.

காற்றில் பனி விலகி, வெயில் வந்தது. குளங்களில் நாங்கள் குதித்தாடினோம். மெல்லிய படர்பரப்பில் தாமரை மலர்கள் விரிந்து எங்களை மறைத்தன. மலர்ந்து வந்த எங்களைக் காற்றின் பொன் கரங்கள் அன்றி, வேறாரும் தீண்டா வெளியில் நீரில் வெளுத்திருந்தோம். வயல்களில் பச்சைகள் அசைந்தாடின. அரும்புகள் கூம்பி, வானத்துப் பேரரசனின் பொன் வரவைத் தேகம் முழுதும் தாழ்த்தி வரவேற்றன. அவனது நகங்கள் பட்டு விரிந்த மொட்டுகள், நிலத்தின் ஆழத்தில் எங்கிருந்தோ அள்ளிக் கொண்டு வந்த நறுமணத்தைத் திசைகளெங்கும் பரப்பின. சொர்ணமாய் நதி ஓடியது. வனத்தில் புது உயிர்கள் உலவின. மனமெங்கும் நிறைந்த காதலைப் போல், பகல் நிரம்பி வழிந்தது. இரவில் வந்த சந்திரனும் பெரு மரங்களின் இலைகளில் வெள்ளம் சிந்திப் போனான்.

காலங்கள் கடந்தன; முகில் நீரானதும், நீர் முகிலானதும் நிற்கவேயில்லை. ஸ்வரூபம் யாவும் காதல் மதுரம் சொறிந்த என் நீலப் பிள்ளையே, எனைக் காண நீ வரவேயில்லை.

இன்னும் உயிர் சுமந்திருக்கும் தேகம் நீ தொடாது தீ விடாத போதாவது வாராயா?

Wednesday, May 09, 2012

புலியைக் கேட்ட பூனையின் மியாவ்...!

தாமரைப் பூந்தாளெடுத்து

தாவிவரும் தங்கரதம்

மேனியிலே வாங்கிக்கொள்ள வாராயோ...

தாமரைப் பூந்தாளெடுத்து

தாவிவரும் தங்கரதம்

மேனியிலே வாங்கிக்கொள்ள வாராயோ...

அவன் பூவிதழில் புன்னகைத்து

புனைவிழியில் புல்லரித்து

புதுமலரில் வண்டெனவே சேராயோ...

புதுமலரில் வண்டெனவே சேராயோ...

கண்ணழகைக் காண்பதற்குக்

காரிருளில் வெள்ளைநிலா

பிள்ளைமுகம் தேடி ஓடி வாராதோ...

வண்ணமயில் தோகை யொன்றை

கண்ணன் முகம் தாங்கியதை

எண்ணமெல்லாம் ஏந்திக் கொண்டு போகாதோ...

எண்ணமெல்லாம் ஏந்திக் கொண்டு போகாதோ...

(தாமரைப் பூந்தாளெடுத்து)

ராதை மனம் கண்டு அந்த

கோதையுடன் மோகனத்தின்

பாதையிலே பாடிவந்தான் கேளாயோ...

தளிர் ஊடி வரும் காற்றின்

குளிர் ஊதலிலே நாதம்தரும்

குழலெனவே கிறங்குகின்றாள் பாராயோ...

குழலெனவே கிறங்குகின்றாள் பாராயோ...

(தாமரைப் பூந்தாளெடுத்து)

முன்னம் வந்த ராத்திரியில்

மூடவந்த முகத்திரையில்

முத்தமழை சிந்துகின்றான் வாங்காயோ...

புலர் வெள்ளி வரும் வேளை வரை

புல்நுனி நீர் தீரும் வரை

புதல்வனைநீ மடியினிலே தாங்காயோ...

(தாமரைப் பூந்தாளெடுத்து)

Wednesday, October 20, 2010

வசந்தின் வசந்தம் - இன்று திருமண விழா!

கண்ணன் பாட்டு அன்பர்களே,
இன்னிக்கி (Oct 20, 2010) நம்ம கண்ணன் குழுவின் அன்பரும், சிறுகதை எழுத்தாளரும்...
கண்ணனின் காதலைக் கவின் தமிழில் பேசி மகிழும் நல்லன்பரும் நண்பருமான...
வசந்த்-இன் வசந்த விழா! திருமண விழா!
ஹேமா என்னும் அன்பான இணைப் பறவையைக் கைபிடித்துக் கால்பிடிக்கும் விழா! :)


வாருங்கள், அனைவரும் மலர் தூவி, அட்சதை தூவி வாழ்த்துவோம்!
இனிய திருமண வாழ்த்துக்கள் ஹேமா வசந்த்!
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!!
செம்புலப் பெயனீர் போல, அன்புடை நெஞ்சம் தாம் கலக்க வாழ்த்துக்கள்!

மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத, முத்துடை தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ், கைத்தலம் பற்ற, கண்ணன் குழலூதி ஆசி வழங்க.....
என் அன்பன் முருகனும் நானும் இனிதே வாழ்த்த, முருகனருள் முன்னிற்க....இனிய திருமண வாழ்த்துக்கள்!!!

இதோ, கல்யாணப் பதிவு! உங்க பதிவே தான்! :)
இதை அங்கே இட்டு, இன்னும் இங்கே இடவே இல்லை! இதோ இன்று இட்டோம்! இட்டும் தொட்டும் கவ்வியும் சிறு கை நீட்டீக் குறு குறு நடந்தும் கண்ணன் உங்கள் திருமணத்துக்கு வருகிறான்! பொன்னாபரணம் தருகிறான்!



பொன்னாபரணம்

ஆயர்பாடி அமைதியாக இருந்தது.

மேற்றிசையில் திரண்டிருக்கும் கரும்முகில்கள், மழையைப் பொழிவதற்குத் தயாராக இருக்கின்றன. சிறிசிறு தாமரை மொட்டுகளும், மலரத் தயாராக உள்ள அல்லி மலரின் மொட்டுகளும், குவிந்து நிற்கின்ற குவளை மலர்களின் முகத்தின் பிம்பங்களும் தெரிகின்ற நீர்க்குளம். தேங்கியிருக்கின்ற குளிர்ந்த நீரைக் குழப்பி விடுகையில், அடியிலிருந்து தெளிந்து வருகின்ற மண்ணின் கரைசல் போல், வீசுகின்ற தென்றல் காற்றில் அசைந்து அசைந்து, கலைந்து கொண்டிருக்கின்றன மேகங்கள்.

இணை இணையாக, பறந்து கொண்டிருக்கும் சிட்டுக் குருவிகளும், வெண் புறாக்களும், ஜோடி நாரைகளும் அம்மேகங்களின் மேனியெங்கும் உரசி உரசிப் பறப்பதைக் காண்கையில், கூட்டமாக உள்ள காகங்களின் இடையே அரிசித் துகள்களைத் தெறித்தது போல் இருக்கும் அல்லவா?

அத்தகைய கரியத் தொகுதியைக் கிழித்துக் கொண்டு அண்ட சராசரமெங்கும் கிடுகிடுங்க, கிளை கிளைத்துப் பாய்கின்ற ஒரு மின்னல் போல், இராதையின் குரல் ஆயர்பாடியுள் பாய்கிறது.

குளிரில் தலையசைத்தவாறே தூங்கிக் கொண்டிருந்த, பெரிய மரங்களின் பூக்கள் படபடப்பாக அவள் இருந்த திக்கை நோக்கின. பின்னே என்ன செய்ய முடியும் அவற்றால்? அமைதியாக வீசிக் கொண்டிருந்த தென்றலும் அவளைப் பார்க்க அவசரமாக வேகமாக ஓடி வந்தால், பூக்களும் அந்தத் திக்கைத் திரும்பித் தான் பார்க்க வேண்டும் அல்லவா?

பொன்னூஞ்சலின் பூங்கயிற்றின் மேனியெங்கும் சின்னச் சின்னதாகப் பூக்கள் தவழ்ந்திருந்தன. வெள்ளை நிறம், சிவந்த நிறம், மஞ்சள் நிறம் என்று வானவில்லின் வர்ணங்களை பெய்கின்ற மழை நீர் கரைத்து தெறித்தால் எவ்வாறு சிதறியிருக்குமோ, அவ்வாறு பலப்பல வர்ணங்களால் பூக்கள் விரிந்திருந்தன. கூடவே பச்சைப் பசிய இலைகள்.

இலைகளுக்கெல்லாம் ஒரு வருத்தம் இருந்து வந்தது. 'வண்ண வண்ணமாக மலர்களைப் படைத்து, அவற்றை மட்டுமே வண்டினங்களைச் சுற்றிவரச் செய்கிறானே! நமக்கு மட்டும் ஏன் ஒரே நிறமாக பச்சை கொடுத்தான்?' என்று.

வெண்பஞ்சின் இழைகளை எல்லாம் எடுத்து, தொகுத்து தம் மேனி மேலெங்கும் வைத்து, தைத்துக் கொண்ட அன்னங்கள் , தமது சிவந்த மூக்குகளால் குளத்தின் குளிர் நீரைத் துழாவின. அவை எதைத் தேடியிருக்கும்? தம் நாசிகளுக்கு நல்ல மோதிரமாக இருக்குமோ? அன்றி, தம் இணைந்த விரல்களுக்கு நல்ல வளையாக இருக்குமோ?

சின்ன சின்ன உயரங்களில் அலைகள் எழுப்பும் கரைகள் வரிசையாக வந்து மோதிக் கொண்டே இருக்கின்றன. காற்றின் மென் தீண்டலுக்கும் தாங்காது நாணி, நழுவி, அவ்விடம் விட்டு நகர அலையலையாய் சென்று சாந்தமடைகின்றன நீர்ச் சுழல்கள்.

வானெங்கும் நீல நிறத் தூறல்கள். அது எவ்வாறு இருந்ததெனில், கடலின் நீரெல்லாம் ஆவியாகி வானை அடைத்துக் கொண்டார்ப் போல் இருந்தது. சோலையின் பாதையில் பூத்திருந்த பலவர்ணப் பூக்களைப் பார்த்து வர, பொன்னூஞ்சலில் அமர்ந்திருக்கும் கண்ணனையும் , இராதையையும் காண்கிறோம்.

வானின் நீல நிறம், குளத்தின் நீல நிறம் இவற்றோடு கலந்த காற்றின் நீல நிறம் கலந்த அந்த அழகன் இருக்கிறான். அந்தபடியால், அவனைக் காண முடிந்திருக்கவில்லை.

மிக அதிகாலையில் வானம் நீல நிறம் உடைத்தாய் இருக்கிறது. பின் மெல்ல, மெல்ல கதிரவன் தன் பொன் கிரணங்களால், நீலத்தைக் களைந்து வெளி வருகிறான். அப்போது வானிலிருந்து கதிர் வருகிறதா, கதிர் வானைத் தாண்டி வருகின்றதா என்ற ஐயம் வருகிறது அல்லவா? அஃதன்ன, இந்த வண்ணன் அணிந்திருக்கும் மஞ்சள் ஆடை அவனது நீலமேனியைப் போர்த்தியிருக்கும் பேரெழிலைக் காண குழப்பம் வருகிறது.

பொன்னாபரணங்களால் தன்னை மேலும் அழகுபடுத்திக் கொள்ளும் அவசியமற்ற அந்த அழகன், கொஞ்சமே கொஞ்சம் நகைகளை அணிந்துள்ளான். அவை மட்டுமா?

சிவந்த கோமேதகங்களும், மின்னுகின்ற வளைகளும், ஜ்வலிக்கின்ற முத்து நகைகளும் தத்தம் வாழ்நாளின் பயனைப் பெறும் வகையில் அவன் மேனியில் அலைபுரள்கின்றன. மார்பில் அணிந்த மணியாரங்களும், கரங்களில் குலுங்கிடும் பொன் வளைகளும், பாதங்களில் புரளும் வெள்ளிக் கொலுசுகளும், தோள்களில் மினுக்கிடும் தொல் அழகிய கணங்குகளும், விரல்களைச் சுற்றி விலையாடும் மோதிரங்களும்... அம்மம்ம... அந்த பேரெழிலனின் எழிலுக்கு முன் நிலவின் முன் மண்டியிட்ட விண்மீன்களாயின எனலாம்.

கண்ணனைக் கொள்ள முடியாத பொன்னிறம் தன் ஆசையை முழுதும் இராதையைக் கொண்டு நிரைவேற்றிக் கொண்டது. பொன் எனவா, மஞ்சள் எனவா இல்லை மாலையில் மறைகையில் கதிர் மிச்சம் வைத்து விட்டுப் போகும் விண்ணொளி எனவா, என்னவென்று சொல்வது இராதையின் அழகை?

இரவின் சாரமெல்லாம் குவிந்து, காற்றில் அலைபாய்கின்ற கருங்கூந்தல், அதில் மின்னல் கூற்றுகள் என மின்னும் மல்லிகைச் சரங்கள், கண்ணனது நீல நிறத்திலேயே குழைந்த நீலப் பட்டாடையை அணிந்திருந்தாள். அவள் இடையை வளைத்திருந்த கண்ணனின் கரங்களோடு போட்டி இட்டது பொன் ஒட்டியாணம். பூ மாலைகள், முத்தணிகள், கருகுமணி மாலைகள் என்று அவளது அழகுக்குக் அழகு செய்தன.

இரு மலர்கள் காற்றில் ஆடுகையில் மொழியும் வார்த்தைகளை பிறர் அறிய முடியுமா? அலையும், கரையும் பேசிக் கொள்ளும் அழகையெல்லாம் யாரேனும் கூற முடியுமா? காதலின் பெரு மெளன வெளியில் பொழிகின்ற அன்பை யார் தான் சொல்ல முடியும்?

காலத்தின் பாதையில் கரையாமல், கல்லின் வார்த்தை போல் நின்று விட்ட இனிய பொழுதுகளை எண்ணி, எண்ணி இராதை பாடுகின்ற பாடல் காற்றை நிரப்பி விடுகின்றது.



பொன்னூஞ்சலில் அமர்ந்திருக்கும் ஹேமா-வசந்த்-திருமண-ஒருமன வாழ்த்துக்கள்! :)

Thursday, July 29, 2010

My Name ISKCON.



மிதந்து கொண்டிருந்த குளிர் மேகங்களை ஊடுறுவி வெண் பட்டுப் போன்ற கதிர்க் கோடுகள் பெங்களூர் வானில் ஒளியை பரவ விட்டுக் கொண்டிருந்தன. நகரம் சனிக்கிழமையும் ஓய்வுறாத சாலைகளில் இயங்கிக் கொண்டிருந்தது. இன்ஸெப்ஷனுக்கும் தில்லாலங்கிடிக்கும் உதிரிக் கூட்டங்கள் தியேட்டர்களுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்க, கெம்பகெளடா பேருந்து நிலையத்தில் நண்பகல் பனிரெண்டு காலுக்கு இறங்கிக் கொண்டேன்.

80 இலக்கமிட்ட பேருந்து ஒன்றில் ஏறிக் கொண்டு, "இஸ்கான்..!" என்று வாங்கிக் கொண்டேன்.

ண்டர்நேஷனல் சொசைட்டி ஃபார் க்ருஷ்ணா கான்ஷியஸ் என்ற பெயரின் சுருக்கமே இஸ்கான். பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா அவர்களால் நிறுவப்பட்ட அமைப்பு இது. பகவான் கிருஷ்ணனையே முழுமுதற்கடவுளாக கொண்டு இயங்குகின்றது. வெளியே பிரபலமாக 'ஹரே கிருஷ்ணா' இயக்கம் என்று சொல்லப்படுகின்றது. உலகெங்கும் பரவியுள்ள இந்த அமைப்பின் பெங்களூர்க் கிளை ராஜாஜி நகர் அருகே இஸ்கான் ஹில் என்றே பெயரிடப்படுள்ள சிறு குன்றின் மேல் அமைக்கப்பட்டிருக்கின்றது. இதை ராதாகிருஷ்ண மந்திர் என்றும் சொல்கிறார்கள்.

மிகத் தெளிவான வரையறுக்கப்பட்ட பாதை இருக்கின்றது. எண்ட்ரியிலிருந்து எக்ஸிட் வரை ஆங்காங்கே அம்புக் குறிகள் நடப்பட்டிருக்கும் பாதை எவர்சில்வர் தண்டுகளால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. தொலைந்து போகும் வாய்ப்பேயில்லை.

கொஞ்சம் மலை ஏறியதும் பாதக் காலணிகள் வைக்கும் இடம் உள்ளது. வரிசையாக அடுக்குகள் உள்ளன. அவற்றுக்குப் பெயர்கள் A, B, C என்று துவங்கி Z தாண்டிப் பின் AA, AB என்று நீள்கின்றது. நெற்றியில் நாமமும், சின்னக் குடுமியும் வெண்ணிற ஜிப்பாவும் அணிந்த இளம்பையன்கள் சிமெண்ட் சுமந்த பாலிதீன் மூட்டையை எடுத்துக் கொடுக்க நாம் நம் செருப்புகளை அதிலே போட்டுக் கொடுத்தால், அவர்கள் காலியாக இருக்கும் அடுக்கில் வைத்து விட்டு நமக்கு டோக்கன் கொடுக்கிறார்கள்.

கொஞ்சம் மேலே ஏறினால், கைகளை கழுவிக் கொள்வதற்குத் தண்ணீர் பைப்புகள். கால்களைக் கழுவிக் கொள்ள பாதையிலேயே ஒரு கிடைமட்ட பைப் வைத்து அதில் சில பொத்தல்கள் இருக்க, குளிர் நீர் கசிந்து படிக்கட்டை முழுக்க நனைத்துக் கொண்டிருக்க, நாம் அந்தச் சிறு நீர்ப்பரப்பில் நனைத்துக் கொள்ளலாம்.

இன்னும் கொஞ்சம் தூரம் வழியிலேயே சென்றால், கம்பித் தடுப்புகள் முடிந்து ஓர் அகன்ற வெளி வருகின்றது. அங்கே நின்று பார்த்தால், நமக்கு முன்னே கோயில் பெரிதாக நின்று கொண்டிருக்கின்றது. ஸ்பீக்கர்கள் 'ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே;' என்று திரும்பத் திரும்பச் சொல்கின்றன. பதிவு செய்யப்பட்டதா அல்லது ஒருவர் மைக் முன் அமர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை.

முதலில் வருவது நரசிம்மர் கோயில். இரணியனைக் கொல்லும் அதே கோபத்துடன் அமர்ந்திருக்கிறார். வரிசையாகச் சென்று பார்த்து வணங்கினேன். மஞ்சள் வெளிச்சத்தின் நடுவில் அத்தனை நகைகளுடன் தெரிந்தார்.

வெளியே வந்து கொஞ்சம் படியேறினால் வெங்கடாசலபதி நிற்கிறார். சொல்ல வேண்டுமா? தகதகதகவென ஜொலிக்கிறார். உண்டியலும் இருந்தது.

சங்கர் தயாள் சர்மா அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த போது திறந்து வைத்த கோயிலாம். கல்வெட்டு சொல்கின்றது.

இன்னும் கொஞ்சம் படிக்கட்டுகள் வழியேறினால் ராதாக்ருஷ்ணர் கோயில்.

மிகப் பெரியதாக இருக்கின்றது. கூம்பு வடிவ உச்சி நம்மைச் சட்டென மிகச் சிறியவனாக உணரச் செய்யும் உயரம். அதன் உடலெங்கும் கண்ணன் ஓவியங்கள். மையத்தில் பிரம்மாண்டமான ஷாண்ட்லியர் மின் விளக்கு ஒன்று தொங்குகின்றது. உயரமான மாடங்களில் எண்ணெய் விளக்குகள். அவை ஏற்றப்படவில்லை. திருவிழாக்களில் திரிபடலாம். டைல்ஸ் தரை. முன்னே பார்த்தால் தங்கக் கோபுரங்களின் கீழே மூன்று பகுதிகள். வலப்புறம் கண்ணன், பலராமன். இடப்புறம் நித்ய கெளரங்கா. கெளரங்கா என்ற பெயர் ஸ்ரீ சைதன்ய மகாப்ரபுவையும், நித்ய என்ற பெயர் அவரது பிரதான சீடரான நித்யானந்த பிரபுவையும் குறிக்கின்றது. மையத்தில் ராதையுடன் கண்ணன். சிலைகளைப் பார்த்தால் வட இந்தியப் பாணி தெரிகின்றது. பூரியில் இருக்கும் பாண்டுரங்கனைப் போன்ற அடையாள உற்சவர்கள்.

இவை பஞ்ச லோகச் சிலைகள் (தங்கம், வெள்ளி, தாமிரம், பித்தளை மற்றும் இரும்பு). இவை கும்பகோணம் அருகில் உள்ள ஸ்வாமி மலையில் தேவஸ்தான ஸ்தபதி மற்றும் அவரது மகனான இராதாகிருஷ்ண ஸ்தபதிகளால் உருவாக்கப்பட்டதாக வலை சொல்கிறது.


நன்றி:: http://api.ning.com/files/7juhZFLXQaSOma8VHkiLhYw06RkJ3QvzFtIrog0bciiaSdWaGz24R6gKDpLiw**MR812kBvA6VcBAEju4kL4N9HM4g8W*x4h/DSCN2682.jpg

தங்கக் கோயில்களை நாம் நெருங்க முடியாது. தர்மதரிசனத்தில் கொஞ்சம் தொலைவிலிருந்து பார்க்கலாம். சிறப்பு தரிசனமும் இருக்கின்றது. வணங்கி விட்டு இடப்புறத்தில் புத்தகக் கடைகள் துவங்குகின்றன. ஆங்கிலம், இந்தி, வங்காளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஒரியா ஏன் சைனீஸிலும் புத்தகங்கள் உள்ளன. இரண்டு குறும் நூல்கள் வாங்கினேன். தமிழில் தான்.

சுற்றி வந்தால் தீர்த்தம் தருகிறார்கள். இதற்கென்றே டிசைன் செய்யப்படுகின்ற தீக்குச்சிக் கரண்டிகள். திரும்பினால் பிரபுபாதா அவர்களின் சிலை இருக்கின்றது. அவருக்கு முன்னே அமர்ந்து தியானம் செய்யத் தளம் இருக்கின்றது. இசைக்கருவிகள் வாசிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மேடைக்கு அருகில் அமர்ந்து கண்ணனைப் பார்த்தேன்.


நன்றி::http://www.iskconbangalore.org/panihati-chida-dahi-festival-2010

'உனக்கு எதற்கு இத்தனை பிரம்மாண்டம்? பசுக்கள் மேய்த்துக் கொண்டிருந்த கரும்பயலே உனக்கு எதற்குத் தங்கக் கோபுரங்கள்? இந்தப் பொன் வர்ணப் பாவாடையும் ஜொலிக்கின்ற புல்லாங்குழலும், மின்னுகின்ற மகுடங்களும் உன்னைக் களைப்படையச் செய்யவில்லையா? இப்படி மஞ்சள் தூண்களுக்குள் உன்னை வைத்துக் கொண்டு என்னிடமிருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ள நீ என் கண்ணன் தானா? இருக்கவே முடியாது. இங்கே உன்னை மஹா செல்வந்தனாக நினைத்துக் கொண்டு அதையும் இதையும் கொடு என்று வேண்டிச் செல்கிறார்களே, இவர்கள் அறிவார்களா நீ ஒவ்வொருவரிடத்திலும் இருப்பதை? நீ வேண்டி இறைஞ்சி நிற்பதெல்லாம் உன் மேலான காதலையும், ஒவ்வோர் உயிரிடத்தும் அன்பையும் கருணையும் அல்லவா? உன்னிடம் எதை வேண்டிக் கொள்வது? நீயே சிறை பிறந்த கள்ளன் அல்லவா? உன்னைத் தெய்வமாக்கி அபிஷேகம் செய்து, குளிப்பாட்டி, அலங்கரித்து மாலை சூட்டிப் பூஜை செய்து எங்கள் மனதிலிருக்கும் ஒரு மாயக் குழந்தையை மறக்கச் செய்ய முடியுமா?'

இராதாக்ருஷ்ணர் கோயிலின் கதவுகளில் மேலிருந்து கீழாகத் தசாவதாரச் சிலைகள். அவற்றின் இரு புறமும் நாரதர், அழகுப் பெண்கள், யானைகள், பறவைகள். யாரும் கவனிப்பதாக இல்லை.

அங்கிருந்து கிளம்பி ஒவ்வொரு தளமாக இறங்க இறங்க மனதிற்குள் கசப்பு அதிகமாகிக் கொண்டே வந்தது. எங்கெங்கு காணினும் வணிகக் கடைகள். சிலைகளும், மாலைகளும், ப்ளாஸ்டிக் பூக்களும், போஸ்டர்களும், காலண்டர்களும், டைரிகளும், மின் அலங்காரங்களும். இல்லை இது என் கண்ணன் கோயில் இல்லை; ஒரு வணிக வளாகம் என்று சொல்லிக் கொண்டே வந்தேன்.

உணவும் விற்கிறார்கள். புளியோதரையும், சிறு மீல்ஸும், மசாலா இட்லி போலிருந்த மராட்டிய இட்லிகளையும் உண்டு விட்டுக் கீழே இறங்கினால் பருப்புச் சாதத்தை அன்னதானம் செய்து கொண்டிருந்தார்கள். அங்கேயும் இரண்டு குப்பிகள் தின்றேன்.

பச்சையாய்க் குளம் ஒன்று காற்றில் அசைந்தாடுகின்றது. வானில் நீர்ப் பொதிகள் உருண்டு கொண்டிருந்தன. எதிரே நகரின் அடுக்குமாடிக் கட்டிடங்களும், கண்ணாடி அலுவலகங்களும் தெரிகின்றன.

கீழே இறங்கி வந்து செருப்பு வாங்கிக் கொண்டு வெளியேறும் போது நான்கு மணி தரிசனத்திற்காகக் கூட்டம் காத்திருந்தது. எதிரே குருவாயூரப்பன் கோயில் ஒன்று சாத்தியிருந்தது. அங்கே தான் என் கண்ணன் நின்று கொண்டிருப்பான் என்று தோன்றியது. திரும்பிப் பார்த்தால், அலங்காரத் திருக்கோயிலின் கோபுர உச்சியில் நடுங்கிக் கொண்டிருந்த மஞ்சள் கொடி காற்றில் 'வாரல் என்பது போல் மறித்துக் கைகாட்டியது' என்று உணர்ந்தேன்.









Saturday, March 13, 2010

வாராதிருப்பானோ...



அந்தி படர்ந்த வானிடை,
ஆம்பல் மலரிடை, யாழுடைத்
தந்தி அதிரும் ஒலியிடைத்
தங்க மதிய மழையிடை
நந்தன் திருமகன் நாயகன்
நாதப் பெருவொளி காண்கிறேன்.
வந்தெனைச் சேருவ தென்று
வருந்தி யழிதல் வெயில்பூ.

மண்ணில் தவழ்ந்த வயதிலும்
மங்கை மலர்ந்த பொழுதிலும்
வெண்ணெய்க் குழையும் இதழ்களை
வேதம் பொழியும் விழிகளை
எண்ணி யுருகி அழுகிறேன்.
ஏங்கி மருகிக் கரைகிறேன்.
கண்ணன் கரங்கள் தழுவிடும்
காலம் வரைநான் தரைமீன்.

ஆண்டாள். அவளுடை நாளில்
அகிலம் தருமெதும் கைக்கொள
வேண்டாள். அரங்கன் அணிந்திடா
வேற்றுவர்க் கார மெனிலதைத்
தீண்டாள். அவன்கைத் தலம்பிடித்
துத்திருப் பெண்ணுறை மாரினை
யாண்டாள். கனவில் களிமனக்
கண்ணனே, வேண்டும் புரைநீர்.

மீரா, கிரிதரன் பாலொரு
மீளா அன்பினை ஏந்தினாள்.
வேறா ருமிசைத் தாலும்
வெளியிடா சொல்லால், அவனுடன்
சேரா திருக்கும் மனதைச்
சுமந்துத் திரியும் கவலையைத்
தீரா வரியால் எழுதிட,
தீனனே, நானோர் உளிக்கல்.

சூடிக் கொடுத்தக் கொடியுமல்ல
சூழ்ந்த நகரப் பெருமானைப்
பாடித் தொடுத்த மொழியுமல்ல
பாதஞ் சரணஞ் செயுவாரைத்
தேடி நடக்கத், திருக்கோயில்
தூணில் அமர்ந்துத் தரிசனைக்கு
வாடிப் பறக்கும் வெளுத்தபுறா
வடித்த வரிகள் கருப்பிள்ளை.

(தொடரும்...)

***

Pic Courtesy :: http://www.dollsofindia.com/dollsofindiaimages/paintings2/religious_poster_QD16_l.jpg

Wednesday, March 10, 2010

குருவாயூரில் ஒரு தினம்.

குறிப்பு :: இக் கட்டுரை 2008ம் ஆண்டில் மார்ச் கடைசியில் சென்ற குருவாயூர்ப் பயணம் பற்றியது. Off the topic-ஆக கண்ணன் பதிவிற்கு இது தரமாயிருக்குமா என்று யோசித்தேன். எனினும் ஒரு முயற்சி செய்து பார்க்கலாமே என்று!

பாதையிலிருந்து விலகி குதிரை போஸ்டர்களில் நின்றாலும், சாட்டைக்காரன் சரியாக ஓட்டிச் சென்று விடுகிறான்.

***


(படம் நன்றி :: விக்கிபீடியா.)

"Your kind attention please. Train number six two one seven from Chennai Egmore to Guruvayur via Alappey is expected to arrive on platform number two at zero hours thirty minutes...."

இருளான தூண்களின் உச்சியில் இருந்த ஸ்பீக்கர்களில் இருந்து காற்றின் அலைகளில் சிதறிய இயந்திரக் குரல், காத்திருக்கலுக்கான மணற்துகள்களைத் தெறித்து விட்டுப் போனது. இந்த இரயில் 23 அல்லது 23:30 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு வர வேண்டியது. தாமதம்.

வாங்கிய பத்திரிக்கைகளை மீண்டும் ஒரு முறை மேய்ந்து விட்டு, செல்லில் பாட்டு கேட்க ஆரம்பித்தேன். இரவு கவிழ்ந்து தம் மீது முகாம் இட்டிருந்ததை எவ்வளவு சொல்லியும் கேளாமல், இமைகள் தள்ளாடித் தள்ளாடி கண்களை மூடத் தடுமாறியதில் தெரிந்தது.

'மறந்து விடாதே. மறந்தும் இருந்து விடாதே. எப்படியாவது இன்று இரவு இந்த வண்டியைப் பிடித்தாக வேண்டும். எனவே தூங்காதே தம்பி தூங்காதே'.

நாளை காலை எப்படியாவது குருவாயூர் அடைந்தாக வேண்டும்.

வ்வாரம் சுற்றுலா எங்கே போவது என்று சிந்தித்துக் கொண்டே பல் குத்திக் கொண்டிருக்கையில், கால் வந்தது. இது Call. உறவினர் குடும்பம் குருவாயூர் செல்வதாக அறிந்தேன். ஆஹா ! ரொம்ப நல்லதாகப் போயிற்று. கண்ணனே நம்மைக் கூப்பிடுகிறான் போலும் என்று மனதுக்குள் விசிலடித்துக் கொண்டே, 'நானும்.. நானும்' என்று ஒட்டிக் கொண்டேன்.

என்ன பிரச்னை என்றால் அவர்கள் ஏற்கனவே பயணச்சீட்டு பதிவு செய்து விட்டார்கள். 'சரி! நான் வேறு ஏதாவது முறையில் சனிக்கிழமை காலை குருவாயூர் வந்து சேர்ந்து விடுகிறேன் என்று உறுதி அளித்தேன்.

பேருந்தா, இரயிலா?

சில முறை பேருந்து வழியாகவே பயணம் செய்து விட்டதால், இம்முறை இரயில் என்று டிக் அடித்தேன். இரயிலில் மீண்டும் அன்ரிசர்வ்டு ப்ளாக்கில் செல்ல வேண்டும் என்ற எண்ணமே கொஞ்சம் திகிலையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.

சரியாக 00:30 மணியளவில் இரண்டாம் பிளாட்பார்ம் வந்தடைந்தது. முன்பே விசாரித்திருந்தேன். கடைக் காரர்கள் 'கூட்டம் எதுவும் அவ்வளவாக இருக்காது. எனவே அமர (அட.. உட்கார..)இடம் கிடைக்க பெரிய அளவில் சிரமம் இருக்காது' என்று கூறி இருந்தார்கள்.

ஆனால், என்ன பரிதாபம்! திருவனந்தபுரத்தில் நிறைய இறங்குவார்கள். இடம் கிடைத்து விடும் என்ற நினைப்பு பணால் ஆனது. எதிர்பார்த்த அளவில் கூட்டம் இறங்கவில்லை...இரங்கவில்லை.

சில ஆண்டுகளாக ஒரு பழக்கம்! இரயிலில் முன் பதிவற்ற பெட்டியில் பயணிக்கையில் சிட்டு பெற பெரிய அடிதடியே நடக்கும். அதில் எதிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன். ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பேன். அந்த சமயங்களில் மனித மனமும், மொழியும் எந்த அளவிற்கு தரை மட்டத்தையும் தாண்டி பாதாளம் அளவிற்கு பாயும் என்று தெரிந்து கொள்ளலாம். அழகுத் தமிழ் மொழியில் சண்டை போடுவதற்கு எத்தனை எத்தனை அற்புதமான வார்த்தைகள் இருக்கின்றன என்பது அவ்வளவு எளிதில் கிடைக்கக் கூடிய வாய்ப்பு அன்றே? அதிலும் முக்கியமாக மதியம் 14:30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை கிளம்பும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸிலும், பின்னிரவு 22:30 மணிக்கு ஈரோடு கிளம்பும் ஏற்காடு எக்ஸ்பிரஸிலும் முன்பதிவற்ற ப்ளாக்குகளில் ஏறி சீட்டு கிடைத்து அமர்ந்து விடுவது என்பது குதிரைக் களைப்பே!

ஆனால் எப்போதும் நான் கவலைப்பட்டதில்லை. கடவுள் எனக்கு இன்று எங்கு சீட்டு கிடக்க வேண்டுமென்று முடிவு செய்திருக்கிறாரோ அங்கு கண்டிப்பாக கிடைக்கும் என்பதில் திடமான நம்பிக்கை உடையவன் ஆதலால், இடம் கிடைப்பது பற்றிய எந்த சிந்தனையும் இன்றி நின்று கொண்டிருப்பேன். நம்ப மாட்டீர்கள், எப்படியும் திருவள்ளூர் செல்வதற்குள் உட்கார இடம் கிடைத்து விடும். இது என் நம்பிக்கையை மேலும் மேலும் இறுக்கப் படுத்தி விடும்.

இன்றும் அப்படித்தான்! ஆனால் அவ்வளவாக அடிதடி எதுவும் நடக்கவில்லை. நானும் நின்று கொண்டிருந்து, பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பின் அங்குமிங்கும் பார்வையை அலை பாய விட்டதில், ஓர் நீள் இருக்கையில் நான்கு பேர் மட்டும் அமர்ந்து உறக்கத்தின் பிடியில் உருண்டு கொண்டிருப்பது தெரிந்தது. மெல்ல அங்கு முனை அமர் நபரை எழுப்பி, மெல்லிய சிரிப்போடு 'கொஞ்சம் நகருங்கள்' என்று மெல்ல கேட்க, இடம் கிடைத்தது. இதில் சிரிப்பு எதற்கு என்றால், இரண்டு காரணங்கள். 1. புன்னகையோடு எதையும் கேட்பதில் மிகப் பெரும்பாலும் கேட்கும் பொருள் கிடைத்து விடும் என்று எங்கோ படித்த ஞாபகம். அப்போதிருந்து கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கும் போது கூட 'கொஞ்சம் சிரிச்ச மாதிரி' முகத்தை வைத்துக் கொள்வது என்று பழக்கப் படுத்திக் கொண்டாயிற்று. இது அலுவலக சூடான தருணங்களைக் கொஞ்சம் cool நிலைக்கு கொண்டு வரவும் உதவுகிறது. 2. அவரே தூங்கிக் கொண்டிருக்கிறார். அவரை எழுப்பி, 'ஒக்காரணும். நகருய்யா' என்றால் யாராக இருந்தாலும் கொஞ்சம் கடியாவார்கள். ஏதாவது முனகிக் கொண்டே தரலாம். அல்லது தரப்படாமலும் போக பெரிய வாய்ப்பு இருக்கின்றது. அதுவும் நேரம் இரவு 1 மணியைத் தொட்டுக் கொண்டிருந்தது. எனவே தான் புன்னகை.

மனித மனம் தான் பெரிய குரங்காயிற்றே! கொஞ்சம் உட்கார இடம் கிடைத்தவுடன், 'இன்னும் கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்தால் தான் என்னவாம். நானும் கொஞ்சம் நல்லா உட்காருவேன் இல்லையா?' என்று நினைத்த கொஞ்ச நேரத்திற்குள் அதிலேயே படுத்துக் கொண்டிருந்த ஒருவர், எழுந்து அமரவே, இன்னும் கொஞ்சம் இடம் கிடைக்க, செளகரியமாக அமர்ந்தேன்.

இதற்கெல்லாம் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா என்ன? இதெல்லாம் அவனது குழந்தைகள் மேல் அவன் காட்டுகின்ற அன்பின் அடையாளம் தானே! இருந்தாலும் 'போனாப் போகின்றது' என்று அவனுக்கு ஒரு நன்றி சொல்லி விட்டு, கொண்டு வந்திருந்த 'ஒரு யோகியின் சுயசரிதத்தை' மீண்டும் ஆரம்பத்தில் இருந்து படிக்கத் தொடங்கினேன்.

எதிரெதிராய் முகம் பார்த்துக் கொண்டே வந்த கழிவறைகளின் அருகிலேயே அழுக்குப் பையோடு நாற்றமும், அழுக்கும் கொண்ட ஒரு பைத்தியக்காரர் / பிச்சைக்காரர். பெரும்பாலும் (அவரது) பயணம் முழுதும் படிக்கட்டுகளிலேயே அமர்ந்து வந்தார். எங்கே இறங்கினார் என்றே தெரியவில்லை. பாதியில் அவரைக் காணவில்லை.

பின் கண்களில் தூக்கம் சொக்கிக் அவ்வப்போது சாய்ந்து, தடாரென விழித்து, எழுந்து, நடந்து ஒருமாதிரி பயணித்துக் கொண்டே வந்தேன்.

வரிசையாகப் பல ஊர்கள். மஞ்சள் ஒளி விசிறியடித்துக் கதிர் எட்டிப் பார்க்க காற்றின் வாசம் எங்கும் 'ச்ச்சும்மா குளிருதுல்ல' என்ற வகையில் பனிப்புகை பரவி இருந்தது. எர்ணாகுளம், திருச்சூர், சாலக்குடி, இரிஞாலக் குடா என்று கடந்து ஏழு மணி நேரத்தில் குருவாயூர் வந்தடைந்து பெருமூச்சிட்டது இரயில்.

பயணம் முழுதும் செல் பாடல்களைக் கேட்டுக் கொண்டே வந்ததில், அடுத்த நாள் நல்ல பலன் கிடைத்தது. பேட்டரி முழுதும் காலி ஆகி விட, தங்கிய லாட்ஜின் பவர் சார்ஜர் ப்ளக் பாய்ண்ட் காலை வாரி விட்டு விட, நாள் முழுதும் செல் தொல்லை இன்றி நிம்மதியாகச் சுற்றினோம்.



தே இரயிலில் உறவினர் குடும்பமும் வர, எல்லோரும் லாட்ஜ் சென்று புதுப்பித்துக் கொண்டோம்.

முதன் முறையாக வேட்டி கட்டப் புகுந்து, அதில் இருக்கின்ற சில Techniques புரியாமல், சரி நாம் fresher தானே என்று லுங்கி கட்டுவது போல் ஓர் இறுக்கி இறுக்கி, மடித்து விட்டு, சுருட்டிக் கொண்டதில் ஓரளவிற்குச் செட்டிலானது. ஆனால் உண்மையாலுமே நல்ல Comfortness இருந்தது. ஆனால் ஒரு கவனத்தை வேட்டி மேல் வைத்துக் கொள்வது அனைவர்க்கும் நலம் பயக்கும்.

நானும் அவ்வப்போது ஒரு நுனியைக் கையில் மடித்துப் பிடித்து, கீழிறக்கி, மடித்து ஒரு கட்டு கட்டி, பின் தாழ இறக்கி என்று நாள் முழுதும் ஒரே 'வேட்டியோடு விளையாடு' தான்...!

இப்போதே அப்பன் கோயிலுக்குச் செல்ல முயன்றால், வரிசையில் பல மணி நேரம் நிற்க வேண்டி வரும் என்று தெரிந்த நண்பர் ஒருவரால் கூறப் பட்டு இருந்ததால், ஓர் ஆட்டோவை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த வேறு சில கோயில்களுக்குச் சென்று விட்டு, மதியம் 12 மணி அளவில் வரிசையில் நின்று கொண்டால், மதியம் 2 மணிக்கு நடை சாத்தும் முன்பு அப்பனை தரிசித்து விடலாம் என்று Planning.

முதலில் இரயில் நிலையத்தை விட்டு வெளியே வரும் போதே பார்த்து வைத்திருந்த பார்த்தசாரதி கோயில்! அங்கு சென்றோம். மூலவர் பார்த்தசாரதி தான். மூலவருக்கு இடது மூலையில் கணபதி. வலது மூலையில் சாஸ்தா. மற்றும் நாகர், பகவதி என்று எல்லாக் கோயில்களிலும் இருப்பது போலவே அனைவரும் இருந்தனர். எல்லோருக்கும் ஒரு ஹாய்!

பின் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்குச் சென்றோம். ஹையா..! இது தெலுங்கு கோயிலு! டீஸர்ட்டை கழட்டலு, வேண்டாம்லு என்று நினைத்துச் சென்றால், போர்டு 'ஹி..ஹி' என்றது. இது வேங்கடப்பன் கோயிலாம். இங்கே இவர் பேர் வேங்கடப்பன். அம்மன் பேர்.. கரெக்ட். வேங்கடம்மன் என்று தமிழில் எழுதி விட்டு, மலையாளத்திலும் இந்தியிலும் பகவதி என்று எழுதி வைத்திருந்தார்கள். பேரில் என்ன இருக்கின்றது?

நாங்கள் போன சமயம் வெடி வழிபாட்டிற்கு ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. நாங்கள் இருக்கும் வரை வெடிக்கவேயில்லை. எல்லா தெய்வங்களையும் சென்று கும்பிட்டு விட்டு, அடுத்த கோயிலுக்குச் செல்ல ஆட்டோவில் ஏறி கொஞ்ச தூரம் சென்ற பின் 'பட...பட...' சத்தங்கள் கேட்டன.



அடுத்து மம்மியூர் சிவன் கோயிலுக்குச் சென்றோம்.

Mummyயூர்..?

இதற்கும் ஒரு விளக்கப் போர்டு இருக்கிறது. 'மஹிமா'-ஊர் தான் மருவி, மம்மியூர் என்றானதாம். ஆனால் முன்னோர்கள் பெரிய தீர்க்கதரிசிகள் தான்!! இப்பெயர்க் காரணம் இன்னோர் இடத்தில் தெளிவானது.

இது கொஞ்சம் பெரிய கோயிலாகத் தான் இருந்தது. குளம், சிவன், விஷ்ணு, அம்மன், கண்பதி, முருகன் (தமிழில் 'முருகன்' என்றும், மலையாளத்திலும் , இந்தியிலும் 'சுப்ரமணியர்' என்று எழுதி இருந்தது. Linguistic Politics..?) என்று எல்லாக் கோயில்களிலும் தரிசனம் செய்து விட்டு, கொஞ்ச தொலைவில் 'ஆனக் கொட்டாரம் உண்டு' என்று அங்கு செல்ல முடிவெடுத்தோம்.

செல்லும் வழியில், கணபதி கோயில் ஒன்றும், பகவதி கோயில் ஒன்றுக்கும் சென்றோம். இந்த பகவதி அம்மன் கோயிலில் அம்மனிடம், சிரித்து தான் பேச வேண்டுமாம். அதாவது ' அத்தைக் குடு! இத்தைக் குடு!' என்று பஞ்சப் பாட்டுப் பாடாமல், 'என்னை இவ்ளோ சந்தோஷமா வெச்சிருக்கியே! ரொம்ப நன்றி! இன்னும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கற மாதிரி செய்!' என்று மகிழ்வாகச் சொல்லி விட்டு வர வேண்டுமாம்.

இந்தக் கோயிலுக்கு தான் உன்னிகிருஷ்ண பணிக்கரின் ஆலோசனைப்படி நம்ம ஊர் அம்மா, யானை காணிக்கை வழங்கினாராம். (இப்போது புரிகிறதா முன்னோர்களின் தீர்க்கதரிசனம், Mummyயூர்!) அது பெரிய அளவில் பிரபலமாகி, மனிஷங்கர் அய்யரை ஓட விட்டு அடித்தது வரை நடந்தது, தெரிந்த கதை!

ஆனக் கொட்டாரத்தில் 65 யானைகள் வரை இருந்தன. எல்லோரும் ஜாலியாக மண் வாரித் தூற்றிக் கொண்டும், நீரில் விளையாடியும், மூங்கில் புற்களை தின்று கொண்டும் இருந்தனர். அவ்வளவு யானைகளையும் அங்கே ஒன்றாகக் காண்பது நன்றாக இருந்தாலும், கொஞ்சம் திகிலாகவும்...!









ஒற்றைக் கொம்பு யானை, கோபத்தைக் கண்களில் காட்டிய யானை, குட்டி யானை என்று பல வகைகளில் இருந்தன. நடுவில் இருந்த ஒரு வீடு பழைய மாடலில் இருந்தது. இங்கு தான் 'வடக்கன் வீரகதா' என்ற மம்முட்டி படம் எடுக்கப்பட்டது என்று முகத்தில் ஒரு பெருமிதமாகச் சொன்னார்கள். எல்லா ஊரிலும் இப்படி ஒரு பெருமிதப் படுவார்கள் போலும்! நாங்களும் 'அடடே! அப்படியா! இங்கே தான் நடந்தாரா? இப்படித் தான் உட்கார்ந்தாரா?' என்று பிரமிப்பு காட்டி விட்டு, வெளி வந்தோம். இதே ரஜினி சூட்டிங் நடந்தது என்றால், 32-ஐயும் காட்டி இருப்பேனோ என்னவோ..?

பின் அறைக்கு வந்து, சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, அப்பன் திருக்கோயிலுக்குச் சென்றோம். பெரிய மலைப்பாம்பு போல் வளைந்து நின்று கொண்டிருந்த ஒரு பெரிய வரிசையில் நாங்களும் இணைந்தோம்.

வெளிர் மஞ்சள் அல்லது சந்தன நிறத்தாலானதும் பட்டு ஜரிகைகள் போட்டதுமான பாவாடை,அதே நிறத்தாலான இறுக்கப் பிடித்த சிறுமிகள் சட்டை, தலைக்கு குளித்து விட்டு ஈரத்தோடோ, காய வைத்தோ, அடிக்கின்ற காற்றில் அலைபாய்கின்ற நீள் கூந்தலை விரித்த படி வைத்து, இரு செவி மடல்களின் மேல் இருந்து, இரு கற்றை முடியை எடுத்து, இணைத்து முடிச்சு போட்டு, ஒரு சன்னமான பாம்பைப் போல் பின்னலிட்டு, நெற்றியில் சின்னக் கீற்றாக சந்தனம் இட்டு உலா வந்து கொண்டிருந்த பூக்களின் கூட்டங்கள், இது 'கடவுளின் சொந்த Country' மட்டும் அல்ல, 'தேவதைகளின் தேசமும்' தான் என்று தெள்ளத் தெளிவாக உணர்த்தியது.



அந்தக் கள்ளன், காதலன் மாயக்கண்ணன் இருக்கும் இடத்தில் கோபியர்கள் கூட்டம் இருப்பது இயல்பு தானே? வேறு எங்கே கோபியர்கள் இருக்க முடியும்? நாம் தான் கோயிலுக்கு வந்திருக்கிறோம். அலைபாயும் மனத்தை, கண்களை கொஞ்சமாவது அடக்க வேண்டியதாகின்றது. என்ன செய்ய? (இந்த வழிசலைப் பற்றியும், கண்களுக்கு அளவிறந்த வேலை கொடுத்ததைப் பற்றியும் இங்கு ரொம்ப பேச வேண்டாம் என்று நினைக்கிறேன் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். மலை நாடு வளம் மிகுத்தது. அவ்வளவு தாங்க..! ;) )

12:30க்கு நிற்க ஆரம்பித்து, மெது மெதுவாக நகர்ந்து உள்ளே செல்ல நேரம் 2 ஆகி விட்டிருந்தது. சுற்றுமுற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டே (சொன்னால் மனம் கேட்டால் தானே..?) வளைவான வரிசைகளில் நடந்து, நகர்ந்து, கோயிலின் உள்ளே சென்று விட்டோம். பின் அங்கு வரிசை கலைந்து முந்தி முந்திச் செல்ல, அங்கே காட்சி அளித்தான் குருவாயூரப்பன்.

சின்னக் கண்ணன் தான். சந்தனக் காப்பு அலங்காரம். அவனது கருவறைக்கு முன்பு பலப் பல விளக்குகள் ஒளியைச் சிந்திக் கொண்டே இருந்தன. இருட்டான கருவறையின் மத்தியில் அபயக் கரம் காட்டி, முகத்தில் மந்தகாசப் புன்னகை பொழிய அந்த அழகுக் கண்ணன் நிற்கிறான். கண்கள் நிரம்ப, மனதில் மகிழ்வு பெருக அவனது திவ்யதரிசனம் கிடைத்தது.

இங்கே 'ஜருகண்டி' எதுவும் அவ்வளவாக இல்லை.

சுற்று வளைவுகளில் சுற்றி வர பிரசாதம் தீர்ந்து விட்டது என்றார்கள்.

'என்ன கண்ணா இது?' என்று மனம் குமைந்த வேளையில், வெல்லப்பாயாசம் கிடைத்தது. பின்னே, அவன் பக்தர்களைச் சும்மா விட்டு விடுவானா என்ன? வெண்ணெய் பிரசாதம் கிடைத்தது. அவனுக்கே பிடித்த வெண்ணெய், நமக்குப் பிடிக்காமல் இருக்குமா? அள்ளி அள்ளி வாயெல்லாம் பூசிக் கொண்டு, விரல்களால் இலையை வழித்து நக்கிக் காலி செய்ததில் Fat கொஞ்சம் அதிகமாகுமே என்ற பயம் புறந்தள்ளப் பட்டது.

உறவினர்கள் மீண்டும் ஒருமுறை அவனை கண்ணார தரிசித்துக் விட்டு வருகிறோம் என்று மீண்டும் வரிசையில் நின்று கொள்ள (அடுத்த நடை திறப்பு 4 மணிக்கு!), நான் 'போதும் ஒருமுறை பார்த்ததே ஒரு ஜென்மத்திற்குத் தாங்கும்' என்று சுற்றக் கிளம்பினேன்.

கோயிலை வலம் வருகையில் கருவறையின் பின்புறம், பெரிய திருக்குளம் என்று பார்த்தேன். தேவசம் போர்டின் புத்தக சாலையில் நுழைந்து சில புத்தகங்கள் வாங்கினேன். கதகளி முக அலங்காரச் சிலை ஒன்று, திருவிழாவின் போது யானை முகத்தில் போர்த்தப் படும் அலங்காரம் ஒன்றின் மாடல், சில குருவாயூரப்பன் படங்கள் என்று கலந்து கட்டி வாங்கியதில் பர்ஸின் கனம் குறைந்தது; மகிழ்வில் மனம் நிறைந்தது.

அடுத்து கிடைத்தனு தான் அற்புத தரிசனங்கள்.

திருக்கோயிலின் பக்கத்தில் இருந்த மேடைக்கு அருகில் இருந்து பாடல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. சரி என்ன அங்கே என்று பார்க்கப் போக, நல்ல நடன நிகழ்வு ஒன்று நடந்து கொண்டிருந்தது.

நான் செல்கையில் 'தோடுடைய செவியன்..' என்று பாடல் ஒலித்துக் கொண்டிருக்கக் கொஞ்சம் பெரிய சிறுமிகள் (10 - 13 வயதிருக்கலாம்) நல்ல நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அவ்வப்போது Sync தப்பினாலும், அதற்கெல்லாம் குறை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.



அடுத்து வந்தது சின்னச் சின்னச் சிறுமிகள் (10 வயதிற்குள்) நடனமாடிய ஒரு மலையாளப் பாடல்! என்ன ஒரு நடனம்! எல்லோரும் குட்டிக் குட்டி கிருஷ்ணன்களாக வேடம் இட்டிருந்தார்கள். நடனம் போகப் போக ஒவ்வொரு குழந்தையும் அந்தக் குறும்பனைப் போலவே ஆளுக்கொரு புறம் ஆடத் தொடங்கினர். சிரத்தில் வைத்திருந்த மயிலிறகு கீழே விழுந்தது; கிரீடம் வழுக்கிக் கொண்டே வந்தது; நடன அசைவை நிறுத்தி அதைச் சரி பண்ண வேண்டியது; நழுவிச் சென்று விட்ட மீண்டும் அருகில் ஆடிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்துச் சரி செய்து கொள்ள வேண்டியது. நடனத்தில் கையில் வைத்திருந்த குழல் பறந்து எங்கோ விழுந்தது;



அந்த குருவாயூரப்பனைக் காண வந்ததில், அவன் 'நான் என்றும் சிறு குழந்தை தான்! என் பால லீலைகளைப் பார்க்கிறாயா?' என்று எனக்குச் சொல்வது போல், இந்தக் குட்டி பாலகிருஷ்ணன்கள் மேடையில் விளையாடி விட்டுச் சென்றார்கள்.

ஆனால் ஒன்று! அத்தனை பேர்க்கும் முன்னால், பாட்டை முடித்து விட்டுத் தான் குழந்தைகள் கிளம்பின. அதற்கே பாராட்ட வேண்டும்.

மற்றொருமுறை அவனைப் பார்க்க வரவில்லையென்று ஏதாவது நினைத்துக் கொள்வானோ என்ற ஒரு சின்ன கேள்வி இருந்தது. 'இல்லை! என்னை இந்தக் குழந்தைகளின் ஆட்டத்தின் வழி பார்!' என்று கூறியது போல் எடுத்துக் கொண்டேன்.



பின் 'அலைபாயுதே' என்று ஒரு சிறுமி சோலோவாக வந்து அரங்கை கலக்கி எடுத்துச் சென்றாள்.

உறவினர்களும் வந்து விட, நேரமாகி விட்டதே என்று அருகில் இருந்த தேவசம் போர்டின் மியூஸியத்திற்கும், ஓர் அரச மரத்தின் அடியில் அமர்ந்து விளக்குகளின் ஒளியில் ஜெகஜ் ஜோதியாக பிரகாசித்துக் கொண்டிருந்த பிள்ளையாருக்கும் (என்ன தான் கணபதி, விநாயகர் என்று சொன்னாலும், இந்த பிள்ளையார் என்றால் தான் மனதிற்கு இன்னும் நெருக்கமாகிறார், எனக்கு.!) ஒரு வணக்கம் சொல்லி, கிளம்பினோம்.

ரவு 9 மணிக்கு அதே குருவாயூர் - சென்னை எழும்பூர் செல்லும் இரயிலில் ஏறிக் கொள்ள, அதிகாலை 3:30 மணி சுமாருக்கு திருவனந்தபுரம் வந்தடைந்தேன். விடைபெற்று, கரியாவட்டம் செல்லும் பேருந்தில் ஏறி, 4:15 மணிக்கு வீட்டை அடைந்தேன்.

மீண்டும் ஒரு முறை குருவாயூர்க் குட்டியைச் சென்று பார்த்து நிதானமாக இரண்டு நாட்களாவது அங்கு இருந்து பல முறை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்த மனத்தை, நித்திரை தேவி தன்வயப்படுத்திக் கொள்ள... Zzzzzz..!

Sunday, December 27, 2009

7.கண்ணன் 'அம்மா' என்றழைத்தல்.



வழ்ந்து தொடங்கிய தங்கப் பகல்மேல்
கவிழ்ந்து மறைத்தது கொண்டல். - அவிழ்ந்த
சுருள்நுரையாய்ப் புட்கள் சுழலாய்ப் பறக்க
வருகின்ற தந்ததிரு நாள்.

கோவினங்கள் காடுதேடி கூட்டமாய்ப் போயின;
பாவினங்கள் கோயிலில் பாடுவர். - ஆவினங்கள்
கட்டியக் கூரைத் தொழுவத்தில் மேய்ந்திடத்
தொட்டிலில் கண்ணன் எழுச்சி.

பக்கம்போய்த் தட்டிக் கொடுத்துப் பாலூட்டிப்
பார்த்துக் கவனமாய் நீராட்டிப் - பாலன்னம்
சோறிட்டுத் தாலாட்டிச் சொக்கி உறங்குமுன்
கூறினான் காதினில் "மா!"

குழல்நாதம் கொஞ்சம் குறுவீணை கொஞ்சம்
கழலுரசல் சேர்த்துக் கனித்தேன், - பழரசம்,

செஞ்சாந்து, யாழிசை, சேரும் அலையோசை
மஞ்சள் குளிரை மயனென்பான் - மிஞ்சியச்

செங்கரும்புச் சாற்றில் சிறுசிறு செம்பருத்தித்
தங்கக் குழம்பைத் தளிர்வாழை - எங்கும்

ஏந்திப் பனிக்கட்டிப் பாறைகள் ஊறிட,
காந்தி ஜொலிக்கும் குயில்மொழி - நீந்தி

எடுத்ததோர் முத்து எலுமிச்சை கோர்த்துத்
தொடுத்ததாம் கண்ணன் குரல்.

***

Image Courtesy :: http://www.netglimse.com/images/events/janmashtami/krishna_bakasura.jpg

Tuesday, December 22, 2009

6.கண்ணன் நடைபழகுதல்.



றங்கும் கதிரவன் வான விளிம்பைத்
திறந்துப் புரவிகள் தேரில் - இறங்கித்
திரைநீலம் யாவையும் தீயாக்கும் போலே
தரைமேல் குழந்தை தவழ்ந்து.

கொத்து மலர்களே கால்கொண்டு கைபதித்துத்
தத்தித்தத் தித்தண்ணீர்ச் சந்திரனாய் - முத்துக்கள்
சிந்திச் சிதறும் திசையெங்கும் சீதளபன்
உந்திபட ஊன்றித் தவழ்ந்து.

பாக்கியம் செய்தன பாத விரல்களின்
நோக்கிய மென்மை நகங்களே - ஆக்கிய
கோடுகள் நந்தன் நிலத்தில் நான்காகத்
தோடுகள் அசையத் தவழ்ந்து.

***

Image Courtesy :: http://members.rediff.com/sirparetn/res/kanna.jpg

5.கண்ணனைத் தாலாட்டல்.



போது நழுவியது; போக்கிடம் இன்றிநிலா
மாது தழுவினாள் மேகத்தை; - சாதுக்கள்
சத்திரம் ஏகினர்; சாமவேளை ஆனது;
ரத்தினமே கண்வள ராயோ.

தேன்வாழப் பூவிருக்கத் தெம்மாங்கு காத்திருக்க
வான்வாழ நீரிருக்க வந்ததென்ன - நான்வாழ
ராசாதி ராசாவா! ரோசா ஒதட்டாலே
பேசாம கண்ணா ஒறங்கு.

மேக்கால வெந்தவெயில் மெல்லமாய்ப் போனதும்
வேக்காட்ட வந்தநெழல் வீழ்த்தியதும் - தேக்கால
செஞ்சவொரு தொட்டிலில் செம்பவளக் கண்ணாநீ
கொஞ்ச கணமேனும் தூங்கு.

யமுனாப் படுகையில் மின்னல் துளிகள்
அமுதன் படுக்கையில் வைரம்! - குமுதம்
மலர்ந்து விரிந்து மதியில் நனையும்;
தளர்ந்து மகனே உறங்கு.

***

Image Courtesy :: http://jsk247.wordpress.com/category/bal-krishna/

Saturday, December 19, 2009

4.கண்ணனுக்குப் பாலூட்டல்.



தாய்மை உணர்ந்த தருணமே, ஏந்திய
சேய்மை விரல்தடவிச் செவ்விதழ் - வாய்மை
படர்ந்துப் பெருகியப் பாலைக் குடிக்கத்
தொடர்ந்துத் தொடர்ந்த கணம்.

அணிந்திடும் ஆரங்கள் மின்னல் ஒளியாம்
கனிந்திடும் அன்னைமார் கொண்டல் - தணிந்திடும்
கண்ணன் பசித்தீக்கு கொட்டும் பனிமழை
தண்ணிய தாயுடை பால்.

மென்விரல் கொண்டகை மெல்லியதாய் ஓர்மாரை
என்குரல் தேங்கத் தடவுவான் - வெண்மணல்
குன்றினில் ஊற்றுப் பெருகும் நேரத்தில்
என்னன்னை எண்ணுகிறேன் யான்.

முகிலில் ஒருபொழுது மூழ்கும் கடலில்,
தகிக்கும் அனலில் மற்றும் - முகிழ்க்கும்
குலைகளாய்ப் பெண்ணாய்க் குழைந்தேன் மகவென்
முலைகளாய்ப் பற்றிய போது.



***

Image Courtesy :: http://the-artist-varma.com/ravivarma_images/rrv3.jpg
and http://www.exoticindiaart.com/artimages/ep20.jpg

Friday, December 18, 2009

3.கண்ணனை அலங்கரித்தல்.



போலே இருப்பதென பேசுவதும் ஏலாது
மாலே மணியன் மகுடமுதல் - காலே
அணிந்த கொலுசு அதுவரை ஆழ்வார்
பணிந்த சுவடு பதிந்து.

ஈரச் சிகைகளை இன்னும் உலர்த்திட்டுப்
பாரம் குறையப் புகைகாட்டி - தீரம்
புகட்டிய பைம்பொன் பதித்த இறகால்
முகமே மின்னும் ஒளிர்ந்து.

கொஞ்சம் பவளம் இடையிடை முத்துக்கள்
எஞ்சும் இடத்தினில் வைரங்கள் - பஞ்சுக்
கழுத்தினைக் கட்டியக் கயிறது பட்டுப்
பழுத்தன கைகள் தடவி.

தங்கப் பதக்கம் கரங்கள் புயத்தினில்
மங்காத ஆரம் மணிக்கட்டில் - பொங்கும்
ஒளித்துளி மின்ன ஒளிரும் வளையம்
மிளிரும் அவன்தன் விரலில்.

பட்டுநூலால் ஓராடை பக்குவமாய்ச் சுற்றிப்பின்
கட்டி இறக்கி முடிச்சிட்டு - சுட்டியின்
குட்டி இடையினை வட்டமாய் வளைத்திடும்
ஒட்டிதொடல் வெட்க அழகு.

பாதம் கொலுசுடன் ஜல்ஜல் எழுப்ப
மீதம் விரல்மோ திரம்வழி - மோதும்
பலவொலி கிண்கிணி கிண்கிணி கன்றுகள்
பலவந்துப் பார்க்கும் இயல்பு.

நெற்றிக்குப் பொட்டிட்டு நீள்புருவம் கண்இமைகள்
சுற்றிலும் மையெழுதிச் சுந்தரனின் - வெற்றித்
திருமுகத்தில் வைத்த வலதுகன்னப் பொட்டு
ஒருமுகமாய்ப் பிள்ளைக்குத் திருட்டி.

மோகனனின் மேனி எழிற்சிதறல், மாமலை
யோகிக்கும் சேர்த்த அலங்காரம் - போதாமல்
புன்னகை செய்யும் பரந்தாமன் கண்டதும்
தன்னையே நீங்கினாள் தாய்.

***

Image Courtesy :: http://dr-narasinha-kamath.sulekha.com/mstore/Dr-Narasinha-Kamath/albums/default/Krishna2.jpg

Thursday, December 17, 2009

2.கண்ணனைக் குளிப்பாட்டுதல்.



சுமந்து கொணர்ந்த சுகமான சாந்தைக்
கமகமக்கும் வாசப் புகையில் - சமப்படுத்திப்

பச்சைப் பயிற்றுமாவில் பாங்காய்க் கலந்திட்டுக்
கச்சை முடிச்சிட்டுக் கண்ணனின் - உச்சியில்

காய்த்த சுடுஎண்ணெய்ச் சேர்த்துச் சுருள்முடியில்
தேய்த்து நுரைத்திட்டாள் தாயாக - வாய்த்த

யமுனைநதித் தீரத்தின் யாதவ அம்மை
அமுதெனப்பால் தந்த யசோதா. - குமுறும்

முகில்வண்ணன் கொஞ்சும் முகுந்தன் முகத்தில்
அகிற்புகை சாற்றி அளவாய்ச் - சகிக்கும்

கடலைமா வைப்பயத்தம் மாவுடன் கூட்டி
உடலில் தடவிட்டு ஊறிக் - குடத்தில்

நதியெடுத்துக் கோபாலன் மேனியைக் கொஞ்சம்
புதிதாக்க ஊற்றிப் புறத்தை - அதிரூபம்

பண்ணுகையில் ரீங்காரம் போலும் அழுவது
மண்ணுயிர்க்கு ஓங்காரம் போல்!

***

Image Courtesy :: http://images.exoticindiaart.com/hindu/little_krishna_gets_a_bath_ha39.jpg

கே.ஆர்.எஸ். சொன்ன ஐடியாவைக் கொண்டு அந்தாதி முயற்சி. கே.ஆர்.எஸ்ஸுக்கு நன்றிகள். :)

Wednesday, December 16, 2009

1.கண்ணன் கோகுலம் வருதல்.

திருமார்கழிப் பிறப்பை ஒட்டி மடலில் சொன்னது போல், முடிந்த அளவுக்குத் தினம் ஒரு வெண்பாப் பூக் கொய்து, மாலையாக்கி ஆண்டாளின் அழகன் தோள் சாற்றும் அதிகப்படியான ஆசையில் எழுத உட்கார்ந்து விட்டேன். வெண்பா இலக்கணத்தைப் பெருமளவுக்குப் பின் தொடர முயல்கிறேன். தவறிருந்தால், ஒரே ஒரு குட்டு குட்டி, திருத்த உதவுங்கள். கவிதை மாதிரி இருக்குமா என்பதை உறுதியாகச் சொல்ல இயலவில்லை.

***

விநாயகர் துதி.



பாடியதில் பைந்தமிழ்! நாடியதில் நற்கல்வி!
கூடியதில் கற்றோர்க் குழாமெனினும் - தேடினேன்
தும்பிக்கை யானைத் துதித்தகைவி டானெனும்
நம்பிக்கை யேந்துகிறேன் நான்.

கலைமகள் துதி.



புன்னகை செய்கிறாள் பூநிறமே நாணிட
வெண்ணிறத் தாமரையில் வேதவல்லி! - அன்னையின்
பாதவிரல் கொண்ட பிரம்மனின் மெட்டியொலி
வேதப் பிரகடனம் கேள்.

கண்ணிலா மாந்தரவர் காட்சியைச் சொல்வதன்ன
கண்ணனைப் பாடும் பணியினை - எண்ணிடாது
களம்புகுந் தேன்யான்! கலைவாணி நீயென்
உளம்புகு வாய்நீயே காப்பு.

குரு வணக்கம்.



மண்ணில் உறங்கும் மழைத்துளி தொட்டபின்
கண்ணைத் திறப்பதால் காணும் - என்னை
உருவாக் கியரறிஞர் அவ்வளவின் நெஞ்சில்
குருவாக் கியமே விதை.

1.கண்ணன் கோகுலம் வருதல்.



கரியதிரை ஒன்று கிழிந்தது போலும்
சரிந்த முகில்கள் இடித்து - வரிந்து

பெருமழை ஆற்றைப் பொழிந்து வழியில்
பருத்த பழுப்புநதி பொங்கக் - கருத்த

இரவின் தடத்தில் இரத்தின பிள்ளை,
விரவின ஈரப் பொழுதில் - பரவின

நந்தர் விரல்களைப் பற்றித் தடவிடத்
தந்தை எனுமோர்த் தகைமையில் - வந்து

நனைக்கும் துளித்துளி நன்முத்துச் சாரல்
அணைக்கத் தடுத்திட, ஆழிப் - பிணைக்கும்

அரவணை ஆதிசேடன் ஆதரவாய்ப் பின்னில்
வரவர கோகுலம் வந்தான் - மரகத

வண்ணனாம் மதுசூதனன் வானிறம் சூடிய
கண்ணனாம் கருமை சுமந்து!

***

Image Courtesy :: http://www.hiddenmeanings.com/krishnaescapes.jpg

Tuesday, December 15, 2009

அப்புறம் என்ன ஆச்சு? - 2.



ளிங்கு வனத்தின் மேல் பாய்ந்த ஒளி வெள்ளம் போல் ஜொலித்துக் கொண்டிருந்தது ஆயர்பாடி.

இன்னும் உக்கிரம் கொள்ளாத சூரியனின் பார்வைகள் தீண்டும் பகுதிகளில் எல்லாம் வெம்மையில் பூத்துக் கொண்டிருந்தது வெயில். கொத்தாய்ச் சிரித்துக் கொண்டிருந்த பச்சை இலைகளைப் பிரித்துக் கொண்டு பாய்ந்து கொண்டிருந்தது பகல் ஒளி. வெள்ளிக் காசுகள் தூவிய போர்வையாய் அசைந்து, அசைந்து ஓடிக் கொண்டிருந்தது யமுனை நதி.

ஆவினங்களை ஓட்டியபடி அருகின் வனம் புகுந்திருந்த நாயகர்களின் வீரக் கதைகளைப் பேசிக் கொண்டு யமுனையின் குளிர்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது கோகுலத்தின் கன்னிப் பெண்களின் குழாம்.

கவனம். இது கன்னியர்களின் அந்தரங்கங்கள் அலசப்படும் இடம். நமக்கு, இங்கே என்ன வேலை? வாருங்கள். நாம் ஊருக்குள் செல்வோம்.

அடடே, அங்கே ஒரே கூட்டமாய் இருக்கின்றதே? என்னவாய் இருக்கும்? வாருங்கள். சென்று பார்ப்போம்.

நானா, உங்களை அழைக்கிறேன்? நம்மையெல்லாம் அழைப்பது ஒரு நாதம். கள்ளினும் பெரும் போதையில் நம்மை ஆழ்த்தும் இந்த குழலோசையின் நாயகன், வேறு யாராய் இருக்க முடியும்? அந்த மாயவனே தான்.

தேன் சொரியும் மலரைச் சுற்றிலும் மது மயக்கத்தில் மனம் கிறங்கிய வண்டுகள் இருப்பது அதிசயமா என்ன? பச்சைப் பசிய மரங்கள் நிரம்பிய காடுகளில் மேகங்கள் தங்கி இளைப்பாறுவதும், களைப்பாறுவதும் இயல்பானதே அல்லவா? இந்த மதுசூதனின் மாயக் கரங்கள் மூடித் திறந்து விளையாடும் புல்லாங்குழலின் இனிய இசையில் மன அமைதியுறாத மானிடர் தாம் உண்டோ?

நாமும் அந்தக் குழுவில் இணைகிறோம்.

யாரென்ன , எவரென்ன , குலமென்ன, கோத்திரமென்ன, இனமென்ன, இவனென்ன என்றெல்லாம் பார்த்தா கதிர் ஒளி தருகின்றது? நதி நீர் தருகின்றது? அது போல், யாரெல்லாம் இங்கே உள்ளார்கள்?

வாழ்வின் கடைசிப் படிகளில் படுத்திருக்கும் கிழவர் முதல், முதல் படிக்கட்டில் முழந்தாள் பதித்திருக்கும் பச்சை மண் வரை இவனது குழல் நாதத்தில் மயங்கி இருக்கிறார்களே!

அல்லி மலர்கள் இதழ் கூம்பியிருந்தாலும், நிலவின் ஒளி அதனைத் தட்டித் தட்டி எழுப்புவதில்லையா? தாமரை வெட்கத்தால் தலை கவிழ்ந்திருந்தாலும், கதிரொளி அந்த சிவந்த முகத்தைக் கரங்களால் அள்ளி முத்தமிட இட செந்தாமரை முகம் இன்னும் சிவந்து பரவசம் கொள்ளுவதில்லையா?

இந்த மாயவனின் மனம் கவரும் குழலின் ஓசையில் நாமும் கலந்து நிற்கிறோம்.

ஆ..! இது என்ன எல்லோரும் கலைந்து ஓடுகிறார்களே!~ யாரத்கு, வருவது?

கையில் கழியோடு யசோதை வருகிறாள்.

"கண்ணா..! இது என்ன , எப்போது நீ இங்கே வந்தாய்? உன்னை சமையலறையில் அல்லவா கட்டிப் போட்டேன்! அடே, மாயப் பயலே? என்னையா ஏமாற்றி விட்டு வந்தாய்! இந்த வெயிலைப் பார்த்தாயா? நெல் மணிகளை வெளியே கொட்டி வைத்தால், நிமிடக் கணக்கிலே அரிசியாய்ப் பொறிந்து போகுமே! இந்த சூட்டில் நீ நிற்கலாமா? நாளை உன்னை மணக்கப் போகும் மகராசி வந்து உன்னை கருப்பாக வளர்த்து விட்டேன் என்று குறை கூறுவாளே! அதற்காகவா நீ திட்டம் போட்டு பகலெல்லாம் வெயிலின் சூட்டையேல்லாம் உன் மேனியோடு தாங்கிக் கொண்டு வருகிறாய்? வா. வீட்டுக்கு! உனக்குப் பிடித்த வெண்ணெய்ப் பலகாரங்கள் செய்து வைத்திருக்கிறேன். இன்னும் நமது தொழுவத்தில் பிறந்த கன்றுக்கும் தராமல் சீம்பாலில் இனிப்புகள் செய்து வைத்திருக்கிறேன். வா, மனைக்கு..! அடே பயல்களா! நீங்கள் விளையாட என் மாணிக்கம் தான் கிடைத்தானா? இரவெல்லாம் இந்தப் பெண்கள் அள்ளிக் கொண்டு போய் கொஞ்சித் தீர்க்கிறார்கள். அவர்களது முத்தங்களையெல்லாம் வாங்கிக் கொண்டு சிவந்த சிறுவனாக வருகிறான். பகலில் நீங்கள் வந்து கூட்டிக் கொண்டு போய் வெயிலில் விளையாடி அவனைக் கருநிறத்துக் கண்மணியாக மாற்றி அனுப்புகிறீர்கள். என் செல்வத்தின் உடல் தான் என்னாவது? இனிமேல் மனைப் பக்கம் வாருங்கள். உங்களையும் இவனுடன் சேர்த்து உரலோடு கட்டிப் போடுகிறேன். பிறகு எங்கும் நகரவியலாது. உங்கள் தாயார்கள் வந்து தயை கூறக் கேட்டாலும் அனுப்ப மாட்டேன். ஆமாம். கண்ணா! இனிமேல் வெளியே வந்து விளையாட மட்டேன் என்று உறுதி கூறு? எங்கே சொல்லு..! அது என்ன வாயில் அடைத்துக் கொண்டு இருக்கிறாய்? எங்கே காட்டு? ஆ.. காட்டு..! ஆ..!"

ஆஹா! இந்த அம்மையின் அன்பையும், ஆதுரமான பேச்சையும் வேறெங்கே காண முடியும்? நாமும் கண்ணனின் லீலையைப் பர்ப்போம்.

புல்லாங்குழலிற்கு உயிர் கொடுத்து உற்சாக உணர்வூட்டும் அந்த செவ்விதழ்களைத் திறந்து காட்டுகிறான். ஆஹா! ஆங்கே காண்பது தான் என்ன!

பிரபஞ்சத்தை அல்லவா காட்டுகிறான். அவன் இங்கே காட்டியதால், பிரபஞ்சத்திலேயே ஒன்றும் இல்லாமல் பஞ்சம் ஆனது போல் உள்ளதே! அவை தான் இங்கேயே உள்ளதே.!

ஏ.. மனமோகனா! அழகிய மணவாளா! மகா பிரபு! உன் கருணையின் வெள்ளத்தையும், மஹாமாயாவின் லீலைகளையும் உன் அன்னை யசோதையே தாங்கிக் கொள்ளவியலாமல் மயங்கி விழுகிறாளே! நாங்கள் என் செய்வோம்?

***

கவிநயா அக்கா, சென்ற பதிவில் கேட்ட 'அப்புறம் என்ன ஆச்சு?'விற்குப் பதில் தெரியாம, '.....ரொம்....பப் பா....வமா முழிச்சுக்கிட்டு நிக்கற' கே.ஆர்.எஸ். போன்ற அப்பாவிகளுக்கு(?) இந்தப் பதிவு சமர்ப்பணம். :)

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP