Showing posts with label *சோலைமலைக் கும்மி. Show all posts
Showing posts with label *சோலைமலைக் கும்மி. Show all posts

Friday, December 29, 2006

19. சோலைமலைக் கும்மி - மார்கழி ஏகாதசி சிறப்புப் பதிவு!

மதுரைப் பக்கம், சோலமல தெரியுங்களா சாமீ?
சோலை மலை = திருமாலிருஞ்சோலை
திருமால் இருஞ் சோலை; அது நறுஞ் சோலை.
இழும் என இழிதரும் அருவி, பழமுதிர்ச் சோலை! திவ்ய தேசம்!

அட, நம்ம அழகர் கோவிலைச் சொல்றீங்களா! கள்ளழகர் தெரியாதா என்ன?
ஆண்டாள் விரும்பிய கள்ளழகன், இந்தக் கோவிலில் இருப்பவன்!
பரமசுவாமி, சுந்தரராஜன் என்று பெயர்; கொஞ்சு தமிழில் கள்ளழகர்!


29567009_tirumaliruncholai

2005112600220301

அவனைப் பற்றிய கும்மிப் பாட்டு ஒன்று கிடைத்தது! எழுதியவர் யார் என்று தெரியவில்லை! ஆனால் அழகர் கோவில், மதுரைப் பக்கம் பரவலாகப் பாடப்படும் கும்மியாம்!
இதை கண்ணன் பாட்டு வலைப்பூவுக்காக அனுப்பினார் நம் நண்பர் மெளலி சார். மதுரையம்பதி என்று பின்னூட்டம் இடுவார்!

இயலுடன் இசை சேர்ந்தால் கொண்டாட்டம் தானே!
யார் பாடித் தருவது என்று யோசித்தேன்; கண்ணனை யாசித்தேன்! பாட்டை வாசித்தேன்!
வாசிப்பதும், வடிவான குரலில் பாடுவதும் ஒன்றாகி விட முடியுமா?

வல்லி சிம்ஹன் என்கிற நம் வல்லியம்மாவைத் தான் நம் எல்லாருக்கும் தெரியுமே!
தற்போது குடும்ப நிகழ்ச்சி ஒன்றுக்காக அமெரிக்கா வந்துள்ளார்.
அவர் பொறுமையா, அழகா, மெட்டு போட்டு பாடிக் கொடுத்துள்ளார்! நீங்களே கேளுங்க!



சோலைமலைக் கும்மி

மாயன் அழகு மலை மேலே - என்றும்
மல்லிகைப் பூ வாசம் வீசுதடி
நாயன் அவன் புகழே பாடி - இள
நங்கை யரே கும்மி அடிங்கடி


நந்தன் மதலையைக் கும்பிடு வோம் - அந்த
நாரணன் தாளையே நம்பிடு வோம்
செந்திரு மார்பனை சுந்தர ராஜனை
செந்தமிழ் பாடியே கும்மி யடி


சாத்தின கதவு திறக் காமல் - என்றும்
சந்தன காப்புக் கலை யாமல்
சத்தியம் காக்கும் கருப்பண்ண சாமியை
சரணம் என்றே ஒரு கும்மி யடி


kallar_ekanthaseva
கள்ளழகர் ஏகாந்த சேவை

தோள் அழகன் அவன் தாளழகன் - முடி
தூக்கிச் சொருகும் குழல் அழகன்
சோலை மலைத் திருமாலை வணங்கியே
சுந்தர ராஜனைக் கும்மி யடி


கண்ணாடிக் கன்னத்தில் வேர்க்கு தடி - உந்தன்
கடைக்கண்ணு எங்கேயோ பார்க்கு தடி
முன்னாடி சாமியை கும்பிடடி பின்னே
முத்துப் போல புருசன் வருவானடி!


நல்ல கணவன் வேண்டி மார்கழி நோன்பு இருப்பது தானே தத்துவம், வழக்கம்!
அன்று ஆண்டாள் செய்ததை, அப்படியே நாட்டுப்புற வழக்கமாக செய்யும் இந்தச் சோலைமலைப் பெண்களைப் பாருங்கள்!
முன்னாடி சாமியை கும்பிடடி பின்னே
முத்துப் போல புருசன் வருவானடி
என்றல்லவா பாடுகிறார்கள்! என்ன அழகான கும்மி!
இன்னொரு முறை கேட்டு, நாமும் பாடி ஆடலாம் வாங்க!


மார்கழி 15 - எல்லே இளங்கிளியே - பதினைந்தாம் பாமாலை.

கண்ணன் பாட்டு வலைப்பூவில் இது போன்ற கூட்டு முயற்சிகள் சிறக்க வேண்டும் என்று அந்தக் கண்ணனையே வேண்டுவோம்!
நன்றி வல்லியம்மா, நன்றி மெளலி சார்!

பல அன்பர்கள், பாடல் வரிகளும், ஒலிச் சுட்டி்களும், தனி மடலில் தந்த வண்ணம் உள்ளார்கள்!
அவர்கள் எல்லார்க்கும் இந்த வைகுந்த ஏகாதசி நன்னாளில் நன்றி!
ஒவ்வொன்றாகப் பதிவில் இடுகிறோம்; இடும் முன்னர் தங்களுக்குத் தனி மடலிலும் தெரியப்படுத்துகிறோம்!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP