Showing posts with label இளையராஜா. Show all posts
Showing posts with label இளையராஜா. Show all posts

Wednesday, August 28, 2013

கண்ணன் பிறந்த இரவு: நாத்திக ஆராரோ!

கண்ணன் பிறந்த இரவு - இன்று! (Aug-28-2013)

எத்தனையோ தாலாட்டுகள் பின்னாளில் பாடினாலும், குழந்தையின் முதல் தாலாட்டு = மோகனத் தாலாட்டு அல்லவா?
அதுவும்... அதை நாத்திகக் கருத்து கொண்டவர் எழுதினால்?:)

அனைவரையும் வம்பிழுக்க வந்த குழந்தைக்கு = ஆத்திகமாவது? நாத்திகமாவது? எல்லாருமே அதற்கு "வெண்ணெய்" தான்! :)


இந்த இரவு மிகவும் கடினமான இரவு, குழந்தைக்கு!
* சிறை விட்டு, ஆற்றைக் கடந்து, ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து, இடி மின்னல், புயல் மழையில்...
* பிறந்ததுமே பயணம் தொடங்கி விட்டது!

உலகத்தையே பயணிக்க வைக்கும் குழந்தை,
இன்று, தானே பயணிக்கிறது!
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒர் இரவில், ஒருத்தி மகனாய் வளர..
விதிப்பவன் தனக்கே விதித்துக் கொண்டான்!!

இன்று கண்ணக் குழந்தைக்குத் தாலாட்டு பாடுபவர் யார்?
= கவிஞர். பெரியாழ்வார்;  படம்: பெரியாழ்வார் திருமொழி:)
= கவிஞர். வைரமுத்து;       படம்: சிப்பிக்குள்-முத்து


முதலில்: ஆத்திகத் தாலாட்டு

பாடுவது:  தமிழ் மொழியில், பிள்ளைத் தமிழ் உருவாக வித்திட்ட பெரியாழ்வார்! என் தோழியின் தந்தை!

உலக அம்மை-அப்பனான, சிவபெருமானே வந்து தாலாட்டுறாராம்;
பாடுவது பெரியாழ்வார்:
பாடப்படுவது: "தேவகி சிங்கம்"; யசோதை இளஞ்சிங்கம் அல்ல:)

உலக முதல்வனையே, "நாராயணா அழேல்" -ன்னு பாட, இவருக்கு எம்புட்டுத் துணிவு இருக்கணும்?
கடவுளை மற, மனிதனை நினை -ன்னு இவரு தான் உண்மையான  நாத்திகரோ?:))

மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி 
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில் 
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் 
மாணிக் குறளனே, தாலேலோ 
வையம் அளந்தானே, தாலேலோ (1) 

உடையார் கன மணியோடு  ஒண் மாதுளம்பூ 
இடை விரவிக் கோத்த எழில் தெழ்கினோடு 
விடையேறு கபாலி  ஈசன் விடுதந்தான் 
உடையாய் அழேல் அழேல் தாலேலோ 
உலகம் அளந்தானே, தாலேலோ (2)

சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும் 
அங்கைச் சரி வளையும் நாணும் அரைத் தொடரும் 
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார் 
செங்கண் கருமுகிலே தாலேலோ 
தேவகி சிங்கமே தாலேலோ (4)

இந்தப் பாட்டை, அரங்கனின் அரையர் ஸ்ரீராம பாரதி அவர்கள், மிக உருக்கமாகப் பாடுவார்கள்!
நான், இங்கு, உன்னி கிருஷ்ணன் அவர்கள் பாடியதை மட்டும் குடுக்கின்றேன்!




அடுத்து: நாத்திகத் தாலாட்டு:

கவிஞர் பகுத்தறிவுக் கவிஞர் தான்! ஆனால் பாசத்தில் குறை வைத்தாரில்லை!

* தன்னையே தாயாக்கிக் கொள்கிறார், பெரியாழ்வார் வழியில்!
கெளசல்யை நானே! யசோதை நானே! மலையன்னை நானே! பார்வதியும் நானே!

* தன்னையே அடியார் ஆக்கிக் கொள்கிறார்!
= ஆழ்வாரும் நானே! கம்பநாடன் நானே! வால்மீகி நானே! தியாகய்யர் நானே!

இதே பாடல், ஸ்வாதி முத்யம் என்ற தெலுங்குப் படத்திலும் சிறப்பாக இருக்கும்!
சுசீலாம்மாவின் தேன் குரலில், இன்று கண்ணக் குழந்தை பயணக் களைப்பு தீரத் தூங்கட்டும்!

படம்: சிப்பிக்குள் முத்து
வரிகள்: வைரமுத்து
இசை: இளையராஜா
குரல்: பி.சுசீலா

லாலி லாலி லாலி லாலி!
லாலி லாலி லாலி லாலி!

வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி!
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி!
குறும்பான கண்ணனுக்குச் சுகமான லாலி!
ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி!

(வரம் தந்த சாமிக்கு)
ஆரி-ராரி ஆரி-ராரோ
ஆரி-ராரி ஆரி-ராரோ

கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே!
யது வம்ச வீரனுக்கு யசோதை நானே!
கரு யானை முகனுக்கு மலையன்னை நானே!
பார் போற்றும் முருகனுக்குப் பார்வதியும் நானே!

(வரம் தந்த சாமிக்கு)
ஆரி-ராரி ஆரி-ராரோ
ஆரி-ராரி ஆரி-ராரோ

ஆனந்தக் கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே!
ஸ்ரீராமன் பாட வந்த கம்ப நாடன் நானே!
ராம ராஜனுக்கு வால்மீகி நானே!
ஆகாய வண்னனுக்குத் தியாகைய்யர் நானே!

(வரம் தந்த சாமிக்கு)

அதே பாடல்: தெலுங்கில் (ஸ்வாதி முத்யம்)

Saturday, July 20, 2013

அரங்க "வாலி" - சீரங்க ரங்க!

வாலி
* இராமாயண வாலி = நம்முடைய பாதி பலம், அவனுக்குப் போய் விடும்!
* கவிஞர் வாலி =  அவருடைய பாதித் தமிழ், நமக்கு வந்து விடும்!

அரங்கன் காலடியில் பிறந்தாலும்
முருகன் வேலடியில் வாழ்ந்தவர்!

அவர் பொன்னுடலுக்கு.. நம் கரம் கூப்பிய அஞ்சலி!




வாலிக்கு மிகவும் பிடித்தமான = திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)!
அந்த அரங்கம் கொஞ்சும் பாடலாக = இந்த அஞ்சலி!

அருமையான வாலி வரிகள்!
சொந்த ஊர்ப் பாசத்துல.. கங்கையை விடப் புனிதமான காவேரியாம்!:))
அப்படியே தமிழை ஊற்றித் தந்திருக்குறாரு!

வாலி, இந்தப் பாடலில், சில ஆழ்வார் பாசுரங்களை, நேரடியாவே எடுத்து ஆண்டிருப்பாரு!

* ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும் 
= "சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்க் திருகுடந்தை" (நம்மாழ்வார்)
* கங்கையின் மேலான காவிரி தீர்த்தம் 
= "கங்கையிற் புனிதமாய காவேரி நடுவில் பாட்டு, பொங்கு நீர் புரந்து பாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள் (தொண்டரடிப்பொடியாழ்வார்)


இந்த இசையில் இளையராஜாவும் பின்னி இருப்பார்; அதுவும் வீணை bit ஒன்னு வரும்!
கோவில் தூண்களை அப்படியே Fast Motion-இல் காட்டுவார்கள்! அப்போ ஒலிக்கும் வீணையை, கொஞ்சம் நிறுத்தி, இன்னொரு முறை கேட்டுப் பாருங்கள்!

அப்படியே அரங்கம் என்னும் சுரங்கத்தில் கிறங்கிப் போவீர்கள்!


பாடலுக்கு முன்னுள்ள தொகையறா: 

(கங்கா சங்காச காவேரி 
ஸ்ரீ ரங்கேச மனோஹரி 
கல்யாண காரி கலுசாரி
நமஸ்தேஷூ சுகாசரி)


சீரங்க ரங்க நாதனி்ன் பாதம் வந்தனம் செய்யடி!
சீதேவி ரங்க நாயகி நாமம் சந்ததம் சொல்லடி!


இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடி,
தென்றல் போல நீ ஆடடி!
மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி, 

தெய்வ பாசுரம் பாடடி!
(சீரங்க)

கொள்ளிடம் நீர்மீது நர்த்தனம் ஆடும்;
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்;
செங்கனி மீதாடும் மாமரம் யாவும்;
ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும்;


அந்நாளில் சோழ மன்னர்கள் - ஆக்கி வைத்தனர் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் - கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே - தெய்வப் பூந்தமிழ்ப் பாயிரம்

(சீரங்க)

கன்னடம் தாய்வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மறுவீடு தென்னகமாகும்!
கங்கையின் மேலான காவிரி தீர்த்தம்
மங்கல நீராட முன்வினை தீர்க்கும்!


நீர் வண்ணம் எங்கும் மேவிட - நஞ்சை புஞ்சைகள் பாரடி
ஊர் வண்ணம் என்ன கூறுவேன் - தெய்வ லோகமே தானடி
வேறெங்கு சென்ற போதிலும் - இந்த இன்பங்கள் ஏதடி

(சீரங்க)

வரிகள்: வாலி
படம்: மகாநதி
குரல்: SPB, மகாநதி ஷோபனா
இசை: இளையராஜா
ராகம்: அம்ச த்வனி




கங்கையின் மேலான காவிரி தீர்த்தம் -ன்னு வாலி எழுதியதற்காக, மதப் பற்றுள்ளவர்கள் யாரும் கோவிச்சிக்க வேணாம்:)
அது வாலி வரி அல்ல! ஆழ்வார் வரி = கங்கையிற் புனிதமாய காவேரி;

ஏன்?

எல்லாரும், "காசி, காசி" -ன்னு சொல்லுவாய்ங்க; மதமும் அப்படித் தான் சொல்லுது!
காசியில் இறக்கணும்; காசியில் கரைக்கணும் -ன்னு எல்லாம், பல மத நம்பிக்கைச் சடங்குகள்! ஆற்றையே சேற்றில் தள்ளும் போக்குகள்!

ஆனால் இம்புட்டு "புனிதம்" மிக்க காசி = 108 திவ்ய தேசமா?
இல்லை!
ஏன் இல்லை?

ஸ்தலம் , மூர்த்தி,  தீர்த்தம், விருக்ஷம் -ன்னு  மத்த எவ்ளோ "புராணங்கள்" இருந்தாலும், அவை திவ்ய தேசங்கள் அல்ல!
ஆழ்வாரின் "ஈரத் தமிழ்" = அதைப் பெற்றால் மட்டுமே திவ்ய தேசம்! இல்லீன்னா வெறும் தேசம்!

கருவறையில் தமிழ் ஒலிக்கும் அரங்கம்!
வேதம் தமிழ்ச் செய்த அரங்கம்!
அந்த அரங்கத்தில் வந்து உதித்த = வாலி வாழ்க!!


இச்சுவை வாலி தந்த, இன்பநல் தமிழை ஏற்று, 
அச்சுவை மோட்சம் ஈவாய், அரங்க மா நகருளானே!

Monday, July 08, 2013

இளையராஜா: என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே?

இளையராஜா இசையில், "இவன்" என்றொரு படம் வந்தது!
பார்த்திபன் படம்!
படத்தில், ராஜாவின் விரல்கள் பாய்ந்து பாய்ந்து மீட்டும் புல்லாங்குழல்!

சிந்து பைரவி முதலான பல படங்களில், இளையராஜா கர்நாடக இசையைத் தந்தாலும்...,
அதை ஓரளவு "மெல்"லிசையாக்கியே ஓட விட்டிருப்பார்; பாடகர்களும் மரபிசைப் பாடகர்கள் அல்லர்!

ஆனால், இந்தப் பாட்டில் =?
அதை, அதாகவே  ஓடவிட்டு, "மரபிலே இசை கொஞ்சும்" ராஜா!

அட, படத்தில், சுப்புடு நடிக்க ஒப்புக் கொண்டதே = ராஜாவுக்காகத் தானே?
இது விமர்சகர் சுப்புடுவின் "வியப்பிலும் வியப்பே"!

* "ரீதி கெளளை" முதற்கொண்டு, பலப்பல ராகங்கள்... ராஜாவின் பாதையில்!
* ஆனால், இந்தப் பாட்டிலோ, "சிம்மேந்திர மத்யமம்";
ராஜாவின் ராகங்கள் -ன்னு ஆய்வே செய்வார்கள் அறிந்தவர்கள்; (நான் அறியாதவன்)

"அசைந்தாடும் மயிலொன்று காணும்" என்கிற பாட்டு போல் களம் அமைக்கும் ராஜா! - என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே?

* வேய் = மூங்கில்
* வேய்ங் குழல் = மூங்கிலால் செய்த குழல்!

உலோகத்திலும் குழல் செய்வாங்க! ஆனா மூங்கில் குழலே = புல்லாங்குழல்!
புல் + ஆம் + குழல்!

மூங்கில் = புல் வகைத் தாவரம் (Bamboo is a type of grass)
அந்தப் புல்லில் + இருந்து + குழைந்து எழுமிசை = புல் + ஆம் +குழல்!



புல்லாங்குழலில் எழுவது = காதலா? காமமா?
* மனதின் இசையா?
* மங்கையைக் கவரவே எழுப்பும் இசையா?

ஏதோ ஒன்னு... ஆனா பெரும்பாலும் அது துன்பத்தில் எழும் இசை!
ஐய்யய்யோ!
கண்ணன் குழலிசை துன்பம் தரக் கூடியதா என்ன?

= ஆடு மாடுகளுக்கெல்லாம் இன்பம் தரும் இசை...
= அவளுக்கு மட்டும் எப்போதும் துன்பம் தரும் இசை...

ஆண்டாள், இன்பத்தில் சங்கையும், துன்பத்தில் குழலையும் பாடுகின்றாள்!

* முதலிரவுக்குக் காத்திருக்கும் பெண்ணாக = சங்கில் நிறைந்திருக்கும் அவன் எச்சில் ருசி
* அவனைக் காணாத பெண்ணாக = புல்லாங்குழலில் குறைந்திருக்கும் அவன் எச்சில் ஈரம்

இப்படியான புல்லாங்குழல்...
இவளையும், இவனையும் என்ன செய்தது?? கேளுங்கள்!




என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே?
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே!

நாளும்...சுக நாதம்...தந்து
அனல் மெழுகாய், இந்த இள மனம் இளகிடவே
(என்னை என்ன செய்தாய்)
-----

என்றும் இசை வேள்வி நடத்துகின்றேன்
என்னுள் என்னைக் கண்டு நல்லின்பம் படைத்து நின்றேன்

வேறு ஞாபகங்கள் வருடாமல் நானிருந்தேன்
யாரோ…?அவன் யாரோ…?
யமுனா நதி தீரத்தில்... அமர்ந்தொரு இசைக் கலையால்
(என்னை என்ன செய்தாய்)

************************************************
மழைக் கம்பி குத்தாமல் இருக்க
குடைக் கம்பியாய் ஒதுங்கினேன்
குடை அல்ல அது; 
உன் குரல் அருவிக் குற்றாலம்

கானம் கேட்க கண் மூடப் போய்க்
காணாமலே போனேன் நான்;
விட்டுக் கூடு பாய்ந்திருப்பேனோ எனத்
தட்டுத் தடுமாறித் தேடிக்
காதுகளால் இரைந்து கிடக்கும்
உன் கால்-அடிவாரம் வந்தடைந்தேன்

அடடா... தாளமிடும் கைக்கும், தட்டப்படும் உன் தொடைக்கும் 
இடையே நான்...
சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டுகொண்டேன்!

ஏதோ காது கொடுக்க வந்தவன், 
வெறும் காதோடு மட்டுமே போகிறேன் போ!
************************************************

மூங்கில் போலே, விளைந்தொரு மங்கை இருக்க
துளைக்கும் வண்டாய், மனதினைத் துளைத்தாய் நீயே!
தூங்கும் யாழாய்த், தனிமையில் தோகை இருக்க
மீட்டும் விரலாய், நரம்பினில் நடந்தாய் நீயே!

வண்ண மலர் உண்டு! வெள்ளி அலை உண்டு!
வருடிடும் காற்றென உலவப் போ!
பற்றும் கொடியொன்று, பசும் புல் மடியுண்டு
நீர்த் துளியைப் போல் தழுவப் போ!

இசைகள் நுழையாத செவிகள் பல உண்டு
உனது திறமைகள் அங்கு பலிக்குமோ?
நீயும் விளையாட நூறு இடம் உண்டு
அனுதினம் வருத்துதல் நியாயமோ?
(என்னை என்ன செய்தாய்)

படம்: இவன்
குரல்: சுதா ரகுநாதன்
வரி: வாலி
இசை: இளையராஜா

சுதா ரகுநாதனின் மரபிசையில் என்றுமே எனக்கு மதிப்புண்டு! சினிமாவிலும் சுதா பாடி இருக்காங்க (மார்னிங் ராகா, மந்திரப் புன்னகை, உளியின் ஓசை, வாரணமாயிரம்...)

தவறாக எண்ண வேண்டாம்;
இந்தப் பாடலை மட்டும் - என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே - சுதா ரகுநாதனுக்குப் பதிலாக...
சுசீலாம்மா (or more than that) வாணி ஜெயராம் பாடி இருந்தால் எப்படி இருக்கும்?

மனசுக்குள் ஒரு பூ பூக்குது! யோசித்துப் பார்க்கிறேன்; அந்தப் புல்லாங்குழலையே கேட்கின்றேன்!


ஒரு சின்னப் பின்னுரை:

என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே? -ன்னு முருகனைக் கேட்க எனக்கு மனசுக்குள்ளொரு ஏக்கம்!

*கோதையோ, ராதையோ = கண்ணனைக் கேட்கலாம்!
*ஆனால் நான் யாரைக் கேட்பது? = முருகனைத் தானே!

ஆனா, முருகன், புல்லாங்குழல் வாசிப்பானா?
வா-சிப்பான்!
"குழலன் கோட்டன் குறும் பல்லியத்தன்" -ன்னு திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் பாடுறாரு!

அதனால் வாசிப்பான்!
அவனை  யாசிப்பேன்!
முருகா - என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே?
முருகா - எனக்கும் உனக்கும் ஒரு இன்பம் இல்லையே!



Monday, August 01, 2011

krs100: தோழி கோதை பிறந்தநாள்!

இன்று....

என் அந்தரங்கத் தோழியின் பிறந்தநாள்!
அந்த-ரங்கத் தோழியின் பிறந்தநாள்! (Aug-02, 2011)!
திரு ஆடிப் பூரத்துச் செகத்து உதித்தாள் வாழியே! Happy Birthday dee, Kothai! :)

உன்னோட கடைசிப் பாட்டு ரொம்ப தொல்லை குடுக்குதுடீ! வரவர தாங்க முடியல! நானும் உன்னைப் போலவே ஆயிருவேனோ-ன்னு பயமா இருக்கு! :(
இது கண்ணன் பாட்டிலே....KRS என்னும் சிறுவனின் 100வது இடுகையும் ஆகும்!
வாழ்விலே பல தருணங்கள், இவளை ஒட்டித் தான் எனக்கு அமைஞ்சிருக்கு!

* என் பிறந்த நாள் ஆகட்டும், வாழைப் பந்தல் கிராமத்துப் பள்ளிச் சேர்க்கை ஆகட்டும்,
* சென்னை திராவிடர் கழக வாசம் ஆகட்டும், TVS நிறுவன வேலை ஆகட்டும்,
* அமெரிக்காவில் ஆற்றிய சொற்பொழிவுகள் ஆகட்டும், பந்தல் பதிவுகள் ஆகட்டும்....
* இனியது கேட்கின் ஆகட்டும்....எட்டாம் வகுப்பில் இவளைப் போலவே பெண் வேடமிட்டு, பள்ளியில் ஆடிய நடனப் புகைப்படம் ஆகட்டும்

...........ஒவ்வொன்றிலும் கோதையின் சாயல் வீசாம இருக்கவே இருக்காதோ? :)

இவள் பிறந்த நாளை ஒட்டி, இவளின் மகுடமான கனவுப் பாட்டை, நனவுப் பாட்டாக....இதோ...கண்ணன் பாட்டிலே!


வாரணமாயிரம் = பல திரைப்படங்களில், பல்வேறு இசையமைப்பாளர்கள் கை வண்ணத்தில் வந்திருக்கு!
ஆனால் அத்தனைக்கும் மகுடமாக, இளையராஜாவின் இசையில்.....கேளடி கண்மணி படத்தில்.....ஜானகி பாடும் ஏக்கமான மெல்லிசை!

சிங்கார வேலனே தேவா போல்.....ஜானகிக்கு அமைந்து விட்ட மிகப் பெரும் நல்லூழ் (அதிருஷ்டம்) என்று தான் சொல்லணும்!
ஏன்-ன்னா வேற யாரும் இதைச் சினிமாவில் முழுக்கப் பாடலை! ஏக்கம் இழையோடும் குரலில் கேட்டுக்கிட்டே பதிவை வாசியுங்கள்!


ஹே ராம் படத்திலும், சிறு சிறு துணுக்குகளாக.....கோயில் அரையர்கள் ஓதும் நடையில் இந்த ஆண்டாள் பாட்டு! இதுவும் இளையராஜே இசையே! விபா சர்மா பாட, அரையர்கள் ஓதுவது!


நாட்டியப் பேரொளி பத்மினி நடனமாடுவது! - செந்தாமரை என்னும் படத்தில்!MSV இசையிலே, பி. லீலா பாடுகிறார்கள்!


** சுசீலாம்மாவும் இந்தப் பாட்டைப் பாடி இருக்காங்க! ஆனால் முதல் இரு வரிகள் மட்டுமே! அப்பறம் Track மாறீடும்! திருமால் பெருமை படத்தில்! இதோ!

** SPB, அதே கேளடி கண்மணியில் பாடுவது!

** வியப்பு என்ன-ன்னா மரபிசை-கர்நாடக இசையில், எவருமே இதை இதுவரை பாடாதது தான்! பிரபல கலைஞர்கள், இதைப் பாடிக் குறையைப் போக்கிக் கொள்ள வேண்டும்!

ஆண்டாள் கல்யாணத்துக்காக, ஷைலஜா அக்கா
பிரத்யேகமாக போட்டு அனுப்பிய, வண்ணக் கோலம் (தண்-மண்டலம்).

இவ்வளவு நாள், சூடிக் கொடுத்த மாலையை, அப்பா கிட்ட கொடுத்து, பெருமாளுக்குப் போட்டாள்! இன்று அவளே தன் கைப்பட, மாலை மாற்றப் போகிறாள்!

* பெரிய திருவடியான கருடன், எங்கள் மாப்பிள்ளையை, வாயு வேகத்தில் பறந்தடித்துக் கொண்டு வர...
* நிகழும் திருவள்ளுவராண்டு 2042 (கர வருடம்), ஆடித் திங்கள் (Aug-02-2011), பூர நட்சத்திரம் கூடிய நன்னாளிலே...

* மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத,
* அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ,
* ஆன்றோர்-சான்றோர்-ஆச்சார்யர்கள் மங்களாசாசனம் பாட
* ஆழ்வார்கள்-நாயன்மார்கள் நாலாயிரப் பாசுரங்களாலும், தேவாரப் பதிகங்களாலும் நல்லாசி கூற,

* மதுரை-வில்லிபுத்தூர், பட்டர் பிரானின் செல்ல மகள் = திருநிறை செல்வி. கோதைக்கும்
* திருநாட்டுத் தலைவன், அமலன் ஆதிப் பிரான் = திருநிறை செல்வன். அரங்கனுக்கும்
எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்குமாய், காதல் திருமணம் இனிதே நடக்கின்ற போழ்தினிலே,

* நீங்கள் எல்லாரும்... சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து,
* முத்துடை தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ் எழுந்தருளி,

* ஆண்டாள்-அரங்கன் இன்னுயிர் இணைகளை,
* பல்லாண்டு பல்லாண்டு என்னுமாறு,
* கண்ணாரக் கண்டு, கையாரத் தொழுது,
* தம்பதிகளை ஆசிர்வதித்து அருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

- இப்படிக்கு,
மாதவிப் பந்தல்: கோதையின் ஆருயிர்-நட்புச் சமூகம்.

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்ட....
நாளை வதுவை மணமென்று நாளிட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தல் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுத...
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகள்பேசி மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி மணமாலை
அந்தரி சூட்ட...
நாற்றிசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்-தன்னை
காப்பு நாண் கட்ட...
கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்திச்
சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு, எங்கும்
அதிரப் புகுத...
(கெட்டி மேளம், கெட்டி மேளம்.....)
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்ற...
வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்துக்
காய்சின மா-களிறு அன்னான் என் கைப்பற்றித்
தீவலம் செய்ய...
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள்பற்றி
அம்மி மிதிக்க...
வரிசிலை வாள்முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கைவைத்து
பொரிமுகம் தட்ட...
குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதி வலம்செய்து மணநீர்
அங்கு அவனோடும் உடன்சென்று அங்கு, ஆனைமேல்
மஞ்சனம் ஆட்ட...
(ஆயனுக்காகத் தான் "கொண்ட மணாவினை")
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயும் நன்மக்களைப் பெற்று மகிழ்வரே!



வாரணமாயிரம் பாசுரத்தில், "கனாக் கண்டேன்" என்னும் சொற்களை எழுத எனக்கு மனசு வரலை!

அவள் வாழ்க்கை வெறும் கனவு-ன்னு நினைச்சிப் பார்க்கக் கூட முடியலை! அதான் "கனாக் கண்டேன்" என்ற சொற்களை எழுதாமல்.....
அப்படியே நிகழ்வாகவே எழுதி விட்டேன்! பாசுரத்தில் கைவைத்து விட்டேன்-ன்னு தவறாக எண்ண வேண்டாம்! அன்பர்கள் மன்னிக்க!

பாம்பணையில், உன் பிஞ்சுக் கால் விரல்கள் அழுத்தி,
பரபர என்று மேல் ஏறி, மால் ஏறி,
எங்கள் செல்வ மகள், தென்னரங்கச் செல்வனைச் சேர்ந்தாள்! சேர்ந்தாள்!



வாரணமாயிரம் சூழ வலஞ் செய்து
ஏரக முருகன் ஏகின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் ஏந்திப் புறமெங்கும்
தோரணம் நாட்ட...


மத்தளம் கொட்ட, நாதசுரம் நின்றூத
முத்துடை தாமம், மாதவிப் பந்தல்கீழ்
மைத்துனன் முருகன், திருத்தாலி கட்டியெனைக்
கைத்தலம் பற்ற...


இன்னைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
என்னை உடையவன், எழில்முருகத் திருநம்பி
முன்னை என் கால்பற்றி, முன்றில் அம்மியின் மேல்
பொன்மெட்டி பூட்ட...

அவனுக்கே என்னை விதிக்கிற்றியே! - நாங்கடவா வண்ணமே நல்கு!!

Tuesday, April 12, 2011

இராமன் கதை கேளுங்கள்! இராமா கனவேமிரா!

கண்ணன் பாட்டு நேயர்கள் அனைவருக்கும் இனிய இராம நவமி வாழ்த்துக்கள்!
இன்றைய கண்ணன் பாட்டு, இராமன் பாட்டு! இராகவன் பாட்டு! அதுவும் இசைஞானி இளையராஜா இசையில்...


சிப்பிக்குள் முத்து (ஸ்வாதி முத்யம்) திரைப்படம் அனைவருக்கும் தெரியும்! அவ்வப்போது கமலஹாசனின் நடிப்புத் திறனை உண்மையாலுமே உரைகல்லால் உறைத்துக் காட்டும் சிலவே சில படங்களுள் இதுவும் ஒன்று! விஸ்வநாத் இயக்கம் அல்லவா!

* அன்று ஒரு இராகவன், வயிற்றில் லவ-குசர்களோடு அவளைக் காட்டுக்கு அனுப்பினான்!
* இன்று சினிமாவில், லவனோடு கூடிய இந்தச் சீதையை இராகவன் கைப்பிடிக்கிறான்!


சற்றே குன்றிய கமல், மகனுடன் விதவையாய் நிற்கும் ராதிகா - இவர்களுக்குள் என்ன பெருசா பொருத்தம் இருக்கு?
= பொருத்தம் இருந்து தானா காதல் வாழ்க்கை மலருது?
* சீதை இராமனை விட மூத்தவள் அல்லவா!
* அவள் பொன், இவன் கரி அல்லவா!

ஆனாலும் ராதிகா படும் துன்பங்களுக்காக, கமல், இராமனிடம் வேண்டுகிறான்(ர்), அல்லாவுக்குத் தீ மிதிக்கிறான்(ர்)! ஆனால் ஒன்றும் நடக்கவில்லை!

பாட்டி, அவளுக்கென்று ஒரு துணை வேண்டுமெனச் சொல்ல, ஒரு விவரமும் புரியாத கமல்...
எம்பெருமானுக்கும் தாயாருக்கும் நடக்கும் திருமாங்கல்ய தாரணத்திலே, அதே தாலியைப் பற்றி அந்தப் பேதைக்குச் சூட்டுவதும்...
இராகவன் சீதையை மணக்கும் காட்சி போலவே, கமல் ராதிகாவை மணக்கும் காட்சி, அழகாகச் சித்தரித்து வரும் சித்திரம்! தெலுங்கில் பாடல் இன்னும் இனிமையாக இருக்கு! = ராமா கனவேமிரா!


ஒரு கதாகாலட்சேபம், நாதஸ்வர-தவில், வில்லுப்பாட்டு, வீணை மட்டல் என்று பலவும் கலந்து, சினிமா இசை + மரபு இசை என்று இணைத்துக் கொடுத்திருப்பார் இளையராஜா!
அதைச் செவ்வனே செய்து முடித்திருப்பார் SPB! சிரிப்பு, சுயம்வரக் கேலி, பக்தி, உருக்கம், திருமாங்கல்ய தாரண ஏக்கம் என்று அத்தனையும் கலந்து...

இதோ, இராம நவமி அன்று அவள்-இராகவன் திருக்கல்யாண வைபோகத்தை...
பாட்டிலே பாவித்துப் பாருங்கள்! - பாவனை அதனைக் கூடில் அவனையும் கூடலாமே!

சாஸ்திர விரோதமான சினிமா என்றெல்லாம் எண்ணாமல்,
அதிலும் எம்பெருமானையே காணும் உள்ளம், அதுவே இராகவனைப் பற்றும் உள்ளம்...
இராமன் கதை கேளுங்கள்! இராமா கனவேமிரா!


(Telugu Version amidst Epic Scenes)


or
(Tamil Version just audio)


ராமன் கதை கேளுங்கள் - ஸ்ரீ
ரகுராமன் கதை கேளுங்கள்!
(ராமன் கதை கேளுங்கள்)

அலங்காரச் சீதை, அழகு அரசாளும் கோதை
அவள் விழிகண்டு, குடிகொண்டு, மணமாலை தந்த
(ராமன் கதை கேளுங்கள்)

(சீதையின் சுயம்வரம் நிச்சயிக்கப்பட்ட நாளிலே,
ஜனகனின் மண்டபத்தில் மாலை ஏந்தி வந்த ஜானகியை,
வெண்ணிலா மண்ணிலா வந்ததென்று மன்னவரெல்லாம் பார்க்க,
ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி...
கண்ணெடுத்துப் பார்க்க மாட்டாரோ என்று கவலை கொண்டார்களாம் சீதாதேவியின் செல்லத்தோழிகள்)

ராமன் கதை கேளுங்கள் - ஸ்ரீ
ரகுராமன் கதை கேளுங்கள்!
(ராமன் கதை கேளுங்கள்)

புலிகளின் பலம் கொண்ட புருஷர்கள் வந்திருந்தார்
யானையின் பலம் கொண்ட வேந்தர்கள் அங்கிருந்தார்
தோளில் மலையைத் தூக்கிய வீரர் வந்தார்
இடிகளைக் கையில் பிடிப்பவர் பலர் இருந்தார்

நடந்தாள்...சீதை நடந்தாள்
விழி மலர்ந்தாள்...சபை அளந்தாள்
வரவு கண்டு, அவள் அழகு கண்டு சிவ
தனுசின் நாணும் வீணை போல அறுந்தது!
(ராமன் கதை கேளுங்கள்)

வில்லொடிக்க அங்கு வந்த வேந்தர் தம் பல்லது உடைபட விழுந்தார் - சிலர் எழுந்தார்
தொடை தட்டி எழுந்தவர்கள் முட்டி தெறித்துவிட சட்டென்று பூமியில் விழுந்தார்
காலும் நோக இரு கையும் நோக தம் தோளது நோகவே அழுதார்
சிலர் இடுப்பைப் பிடித்தபடி சுளுக்கு எடுத்தபடி ஆசனம் தேடி அமர்ந்தார்

ஆஹா வீரமில்லையா, வில்லொடிக்க ஆண்கள் யாரும் இல்லையா?
ஆஹா வீரமில்லையா, வில்லொடிக்க ஆண்கள் யாரும் இல்லையா?
(ராமாய ராம பத்ராய ராமச் சந்தராய நமஹ)

தசரத ராமன் தான் தாவி வந்தான்
வில்லையே ஒரு கண்ணால் பார்த்து நின்றான்
சீதையை மறு கண்ணால் பார்த்து நின்றான்
மறு நொடியில் வில்லெடுத்து அம்பு தொடுத்தான்

படபட படபட படபட படபட
ஒலியுடன் முறிந்தது சிவ தனுசு
அந்த ஒலியுடன் சிரித்தது அவள் மனசு!

ஜெயஜெய ராமா சீதையின் ராமா
ஜெயஜெய ராமா சீதையின் ராமா
தசரத ராமா ஜனகனும் மாமா
தசரத ராமா ஜனகனும் மாமா


சீதா கல்யாண வைபோகமே - ஸ்ரீ
ராமா கல்யாண வைபோகமே!
சீதா கல்யாண வைபோகமே - ஸ்ரீ
ராமா கல்யாண வைபோகமே!

காணக் காண அழகாகுமே
இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே
சீதா கல்யாண வைபோகமே - ஸ்ரீ
ராம கல்யாண வைபோகமே!

ராமனே அதோ பாரப்பா.....
அலங்காரச் சீதை, அழகு அரசாளும் கோதை
அவள் விழிகண்டு, குடிகொண்டு, மணமாலை தந்த
ராமன் கதை கேளுங்கள்!
ராமன் கதை கேளுங்கள்!

படம்: சிப்பிக்குள் முத்து
இசை: இளையராஜா
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் (SPB)
வரிகள்: வைரமுத்து
ராகம்: ரீதி கெளளை


* ஆயிரம் மனஸ்தாபங்கள் இருப்பது போல் தெரிந்தாலும்...
* அவனை விட இவள் மூத்தவளே என்றாலும்...
* அவன் இவளைப் புரிந்து கொண்டானோ, இவள் அவனைப் புரிந்து கொண்டாளோ...
* அவள் கற்பை இவன் சோதித்தானோ, அவன் கற்பை இவள் காத்தாளோ...
* இவள் காடேகினாளோ, இல்லை அவன் தனிமைக் காட்டுக்குள் வாழ்ந்தானோ...

அவனுக்கு இவள்!
இவளுக்கு அவன்!

இந்த இணை ஜோடி மயில்கள்...திவ்ய தம்பதிகள்...இவர்களுக்குப் பல்லாண்டு பல்லாண்டு!

Tuesday, January 25, 2011

பத்ம பூஷண் SPB: வான் போலே வண்ணம் கொண்டு, வந்தாய் கோபாலனே!

முதலில் பத்ம பூஷண் (தாமரை அணிகலன்) விருது பெற்றுள்ள SPB-க்கு இனிய வாழ்த்துக்களைச் சொல்லிப் பதிவைத் துவங்குவோமா?
பத்ம பூஷண் பாலு, கலக்கிட்டீங்க! வாழ்த்துக்கள்!
போன வருசம் ராஜாவுக்கு! இந்த வருசம் உங்களுக்கு! இனிய வாழ்த்துக்கள்! :)

ஆனா இந்த விருதுகளையெல்லாம் தாண்டியும் உங்க சாதனை பேசப்படும்! இது சும்மா அடையாளம் மட்டுமே!
சங்கராபரணத்தில் தொடங்கி...உங்கள் சிரிப்பூ கலந்த பாடல்கள், பலர் நெஞ்சங்களைச் சிலர்க்க வைப்பவை!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மட்டுமல்லாது, பெங்காலி, ஒரியா, பஞ்சாபி-ன்னு கலக்கியவர் நீங்க! இசையமைப்பாளர், நடிகர் என்றும் வேறு வேறு முகங்கள் வேறு உங்களுக்கு!

கண்ணன் பாட்டு அன்பர்கள் சார்பாக, உங்களுக்கு வாழ்த்துக்கள் பாலு!
ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப் போல்

- ஒன்று போதாதா நீங்கள் தந்த கண்ண-இன்பத்துக்கு! வாழ்க!



இன்றைய கண்ணன் பாட்டுப் பாடல் - SPB & அவர் தங்கை SP ஷைலஜா பாடுவது!

குரல்: SPB & SP ஷைலஜா
படம்: சலங்கை ஒலி
வரி: வைரமுத்து
இசை: இளையராஜா
ராகம்: மோகனம்

கேட்டுக்கொண்டே படியங்கள்! ஆரம்பக் குழலிசை ராஜா ஸ்டைல்! அழகான Opening Piece!

வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே, பூ முத்தம் தந்தவனே!
வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே - பல விந்தைகள் செய்தவனே!
(வான் போலே)

மண்ணைத் தின்று வளர்ந்தாயே
துள்ளிக் கொண்டு திரிந்தாயே
அன்னை இன்றிப் பிறந்தாயே
பெண்களோடு அலைந்தாயே

மோகனங்கள் பாடி வந்து, மோக வலை விரித்தாயே
சேலைகளைத் திருடி அன்று, செய்த லீலை பல கோடி
பொன்னான காவியங்கள் போற்றிப் பாடும் காதல் மன்னா
வந்தாய் கோபாலனே, பூ முத்தம் தந்தவனே
(வான் போலே)


பெண்கள் உடை எடுத்தவனே
தங்க குடை கொடுத்தவனே
ராச லீலை புரிந்தவனே
ராஜ வேலை தெரிந்தவனே

கீதை என்னும் சாரம் சொல்லி, கீர்த்தியினை வளர்த்தாயே
கவிகள் உனை வடிக்க, காலமெல்லாம் நிலைத்தாயே
மண்ணில் உந்தன் காதல் எல்லாம்
என்றும் என்றும் வாழும் கண்ணா!
வந்தாய் கோபாலனே, பூ முத்தம் தந்தவனே
!
(வான் போலே)


அன்பர்களுக்கு இனிய குடியரசு நாள் நல்வாழ்த்துக்கள்!
Long Live the Republic! பாரத தேசம் என்று பெயர் சொல்லுவோம்!

Monday, August 30, 2010

ஜப்பானில் கமலஹாசன்: ராதே என் ராதே! வா-ராதே!

"கண்ணன் பிறந்தநாள் செப்-01 தேதி வருதுல்ல? கண்ணன் பாட்டில் தொடர் பதிவுகளாக, இன்னிக்கி ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் இருந்து, கண்ணன் பாட்டு பார்க்கலாமா?"

"அடப்பாவி, ஜப்பானில் கல்யாணராமன் படத்துல-ல்லாம் ஏதுடா கண்ணன் பாட்டு?"

"வா-ராதே! ஆசை தீ-ராதே!-ன்னு ரைமிங்-க்கா இருக்கே ஒரு கண்ணன் பாட்டு!"

"ஆகா! டகால்ட்டிக்கு ஒரு அளவே இல்லீயா? விட்டா கண்ணன், ஜப்பான்-ல தான் கீதையே சொன்னாரு-ன்னு சொல்லிருவ போல இருக்கே!"

"உஷ்ஷ்ஷ்...யக்ஞானான் ஜபான் யக்ஞோ-ன்னு கீதையில் வருது!
ஜபம் செய்யறது பத்தி சொல்ல வரும் சுலோகம்! அந்த ஜபான்-ஐ ஜப்பான் ஆக்கீட்டாப் போச்சு! :) அத அப்பறம் இன்னொரு நாள் வச்சிக்கலாம்! இன்னிக்கி பாட்டு மட்டும் பார்ப்போம்! வா!"

ராதே என் ராதே! வா ராதே!
வாராமல் ஆசை தீராதே!
- இது கண்ணன் பாட்டே தான்! கமல் கையில் புல்லாங்குழல் கூட இருக்கும்! கதாநாயகி பேரும் ராதா தான்! :)



கல்யாணராமன் படத்தில் இன்னிக்கும் ஞாபகம் இருக்கும் ஒரே பாட்டு, "ஆஹா வந்துருச்சி, ஆசையில் ஓடி வந்தேன்" தான்!
ரொம்ப இயல்பா, அழகா அந்தக் காட்சியைப் படமாக்கி இருப்பாய்ங்க! கமல் இடுப்பில் இருந்து பிட் எடுத்து ஸ்ரீதேவியிடம் காதலை ஒப்புவிக்கும் காட்சி!

பதினாறு வயதினிலே சப்பாணி கமலுக்கு அடுத்து, கல்யாணராமன் கமல்.....
சொத்துக்காக வெள்ளந்திக் கமல் கொலை செய்யப்பட...
அண்ணா கமலுக்காக, தம்பி கமல் பழி வாங்கக் கிளம்ப...
அண்ணா கமலின் "சைட்டான" ஸ்ரீதேவியை, தம்பி கமல் கரம் பிடிக்கிறார்! :)

அந்தக் காதலின் தொடர்ச்சியாக, ஜப்பானில் கல்யாணராமன் என்ற அடுத்த படம்!

ஸ்ரீதேவி இறந்து போக, அவர்கள் ஐந்து வயது மகன், அப்பா கமலை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுது! அடடா! கமல் ராசியே ராசி! ஸ்ரீதேவிக்கு அடுத்து ராதா! :)

அண்ணா கமலின் ஆவியும், அந்தப் பையனும் சேர்ந்து, கமல்-ராதாவை ஜோடி சேர்த்து வைக்கும் ஒவ்வொரு காட்சியும், தமிழ் சினிமாவின் அப்போதைய காலகட்டத்தில் புதுமையானது! வித்தியாசமானது! :)

சரி, வாங்க நாம கண்ணன் பாட்டைப் பார்ப்போம்!




ராதே என் ராதே! வா ராதே!
வாராமல் ஆசை தீராதே!
கண்ணே நீ கண்டால் காதல் வாராதா?
பெண்ணே உன் கண்கள் போதை தராதா?
ராதா ராதா என் தாகம் ஆராதா?
(ராதே என் ராதே)

முன் பக்கம் பின் பக்கம் ஏதோ
இன்பங்கள் தென்பட்டதோ!
தென் பட்ட அங்கங்கள் யாவும்
கண் பட்டு புண் பட்டதோ!

நீயும் தோளில் சாயலாம்!
காயம் கொஞ்சம் ஆறலாம்!
நோயும் தீரலாம்!
நீ கொடுக்கும் முத்தங்கள், நான் கொடுக்கும் சத்தங்கள்
மீண்டும் மீண்டும் வேண்ட,
ஆவல் காவல் தாண்ட!


ராதே உன் ராதே, நான் தானே!
கண்ணா நீ கொஞ்சும் நாள் தானே!
கண்ணா நீ கண்டால், காதல் வராதா?
மன்னா உன் கண்கள், போதை தராதா?
கண்ணா கண்ணா, நீ உண்ணும் தேன் நானா?
(ராதே உன் ராதே)

நேற்றந்தி நேரத்தில் பார்த்தேன்
ஆசைகள் வேர் விட்டதோ?
வேர்விட்ட ஆசைக்கு நீதான்
நீர்விட்ட நேரம் இதோ!

நீலம் பூத்த பார்வையில்,
காதல் பூத்த வேளையில்,
நாணம் தோன்றலாம்!
வாடை வந்து தொட்டுத் தான், வாய் வெடித்த மொட்டு தான்
வாசம் வீசும் போது,
அச்சம் மிச்சம் ஏது?

(ராதே என் ராதே)

படம்: ஜப்பானில் கல்யாணராமன்
குரல்: ரமேஷ், எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
வரிகள்: ?


முன் பக்கம் பின் பக்கம் ஏதோ, இன்பங்கள் தென்பட்டதோ! = அடடா, என்ன ஒரு பக்தி ரசம்! :)
நீ கொடுக்கும் முத்தங்கள், நான் கொடுக்கும் சத்தங்கள், கண்ணா கண்ணா, நீ உண்ணும் தேன் நானா?-ன்னு என் தோழி கோதை பாடுறாப் போலவே நினைச்சிக்குவேன்! :)

சரி, சரி, பிறந்தநாள் வாழ்த்து சொல்லீருவோம்!
ஆகா! யாருக்கு? கமலுக்கா? அட கண்ணனுக்குத் தாங்க! :)

Thursday, May 27, 2010

யேசுதாஸ் & மலேசியா வாசுதேவன்: தேடினேன் தேவதேவா-தாமரைப் பாதமே!

காபி அண்ணாச்சி றேடியோஸ்பதி பதிவில் ஒரு புதிர் போட்டிருக்காரு!
அது சம்பந்தமான... ஆனால் புதிருக்கு விடை அல்லாத... பாட்டினை, இன்னிக்கி கண்ணன் பாட்டில் போட்டுருவோமா?

அதுவும் இராகவன் பொறந்த நாள் அதுவுமா, ஒரு பொருத்தமான படம், பொருத்தமான பாட்டு வரிகள்! - ராகவேந்திர ராகவேந்திர "ராகவா"! ராகவேந்திர ராகவேந்திர "ராகவா"! :) தேடினேன் தேவதேவா - தாமரைப் பாதமே!


படத்தில், பாடல் என்னவோ க்ளைமாக்ஸ் பாடல் தான் என்றாலும்,
பாடலின் வரிகளும், ராகமும் = "சுபமான" ஒன்று தான்! ராகம்: "சுப" பந்துவராளி! வைகறையில், வைகைக் கரையில், வந்தால் வருவேன் உன்னருகில் - என்ற மெட்டு போலவே இருக்கும்! தேடினேன் தேவதேவா - தாமரைப் பாதமே!

முன்பு, அதே ராகவேந்திரா படத்தில் வரும், இன்னொரு சூப்பரான பாட்டைக் கண்ணன் பாட்டிலே போட்டிருக்கோம்! = ராம நாமம் ஒரு வேதமே! ராக தாளமொடு கீதமே...
இன்னிக்கி அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் பாடல்! யேசுதாஸின் மாயக் குரலில்! கூடவே மலேசியா வாசுதேவனும் பாடி இருக்காரு!

* யேசுதாஸ், பாடல் வரிகளில் தோய...
* மலேசியா, சரண வரிகளில் தோய்கிறார்!
- குருவேஏஏஏஏஏ சரணம் என்று தோய்கிறார்!

நீ வாழும் இடம் வந்து, நான் சேர வேண்டும்! - என்று ஆழமான உணர்வுகளை, மெல்லிய முகத்தில், மெல்லீதாகக் காட்டி நடிப்பாரு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! வாங்க பாட்டைப் பார்ப்போம்!



குரல்: யேசுதாஸ், மலேசியா வாசுதேவன்
இசை: இளையராஜா
வரிகள்: ?
படம்: ஸ்ரீ ராகவேந்திரா


அழைக்கிறான் மாதவன்! ஆநிரை மேய்த்தவன்!
மணி முடியும், மயில் இறகும்,
எதிர் வரவும், துதி புரிந்தேன்!
மாதவா கேசவா ஸ்ரீதரா ஓம்!

தேடினேன் தேவதேவா - தாமரைப் பாதமே!
வாடினேன் வாசுதேவா - வந்தது நேரமே!


ஞான வாசல் நாடினேன்!
வேத கானம் பாடினேன்!
கால காலம் நானுனை!
தேடினேன் தேவ தேவா - தாமரைப் பாதமே!

காதில் நான் கேட்டது - வேணு கானாம்ருதம்!
கண்ணில் நான் கண்டது - கண்ணன் பிருந்தாவனம்!


மாயனே நேயனே!
மாசில்லாத தூயனே!
ஆத்ம ஞானம்
அடைந்த பின்னும்
தேடினேன் தேவதேவா - தாமரைப் பாதமே!


குருவே சரணம்! குருவே சரணம்!
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
குருவே சரணம்! குருவே சரணம்!


ஞானத் திருமேனி காண வர வேண்டுமே!
சீதப் பூவண்ணப் பாதம் தொழ வேண்டுமே!
பக்தன் வரும்போது பாதைத் தடையானதேன்?
காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதேன்?


தாயாகித் தயை செய்யும் தேவா!
தடை நீங்க அருள் செய்ய வாவா!
நான் செய்த பாவம், யார் தீர்க்கக் கூடும்?
நீ வாழும் இடம்வந்து, நான் சேர வேண்டும்!

குருவே சரணம்! குருவே சரணம்!
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
குருவே சரணம்! குருவே சரணம்!

ராகவேந்திர ராகவேந்திர ராகவா! - குரு
ராகவேந்திர ராகவேந்திர ராகவா!
ராகவா! ராகவா! ராகவா! ராகவா!




பாடலைப் பிரிச்சி மேய்ஞ்சா, பல கருத்துக்கள் உள்ளடங்கி இருக்கும்!
குமரன் வந்து சொல்லட்டும்! சாம்பிளுக்கு ஒன்னு:

ஞான வாசல் நாடினேன்! வேத கானம் பாடினேன்!
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும் தேடினேன் தேவதேவா!


அதான் ஆத்ம ஞானம் அடைஞ்சாச்சே! அப்பறம் என்ன இன்னும் தேடினேன் தேடினேன்-ன்னு தேடுறது? - லாஜிக் இடிக்குதே-ன்னு பாக்கறீயளா? :)

அடுத்த வரியிலேயே விடையும் இருக்கு!
தேடினேன் தேவதேவா - தாமரைப் பாதமே! = திருவடிச் சரணம்! சரணாகதி!

என்ன தான் ஞான வாசல் நாடினாலும்,
வேத கானம் பாடினாலும்...
அவை, அவரவருடைய ஆத்ம அளவில் மட்டுமே=ஆத்ம சாஷாத்காரம்!

ஆனால் அவரவர் ஆத்மாவையும் தாண்டி...
அவரவர் ஆத்மாவுக்கு உள்ளேயும்....
அவரவர் ஆத்மாவுக்கு ஆதாரமாய்....
ஒன்னு இருக்கு!
அது ஆத்மாவுக்கு எல்லாம் ஆத்மா - அந்தராத்மா - பரமாத்மா!

என்ன தான் மாங்கு மாங்கு-ன்னு ஞான கர்ம யோகங்கள் செஞ்சாலும்...
அவை "நம் ஆத்மாவை" மட்டுமே நமக்கு உணர்த்திக் காட்டும்!
அதனால் தான், ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்...இன்னும் தேடினேன்-ன்னு பாடுறாரு!

ஆத்ம ஞானம் அடைஞ்ச பின்னால்?
அம்புட்டு தானா?
ஞான யோகம், கர்ம யோகம் தான் பரமா? முடிஞ்ச முடிவா?
இல்லை!
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்...தேடினேன் தேவ தேவா....எதை?

தாமரைப் பாதமே!
தாமரைப் பாதமே!

சரணம் சரணம் என்னும் சரணாகதி! அதுவே நமக்கு கதி!

ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்...அந்த ஆத்மா "தான் தான்"-ன்னு அப்படியே தான் இருக்கும்!
அதை அவனுக்குச் சமர்ப்பணம் பண்ணி விடுவது தான் = ஆத்ம சமர்ப்பணம் = சரணாகதி!

என்ன தான் ஞான வாசல் நாடினாலும்...வேத கானம் பாடினாலும்...தேடிக்கிட்டே தான் இருப்போம்...
ஆத்ம ஞானம் "அடைந்த பின்னும் தேடினேன்"...

தேடினேன் தேவதேவா
தாமரைப் பாதமே!
தாமரைப் பாதமே!!

Sunday, April 25, 2010

இளையராஜா/யேசுதாஸ்: கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்!

கண்ணன் பாட்டு மக்களே, எனக்கு ஒரு சந்தேகம்! தீர்த்து வைங்க!
இந்தப் பாட்டு கண்ணன் பாட்டு தானே?
"கண்ணனே" நீ வர-ன்னு தானே துவங்குது? :)

இளையராஜாவின் மிக அழகான மெலடிக்களில், இது என்றும் நிலைத்து நிற்கக் கூடியது! வயலினை வச்சிக்கிட்டே ஜால வித்தை காட்டுவாரு ராஜா என்பதற்கு இதுவும் ஒரு சரியான எடுத்துக்காட்டுப் பாடல்!

ராஜா-வின் வயலின் சாகசங்களோடு பாட்டின் கம்பீரத் துவக்கம் - Dont Miss! கூடவே மெல்லீசா ஒரு "டொக் டொக்" சத்தம்....
* பாட்டு ஆரம்பிக்கும் போதும் டொக் டொக்!
* அப்பறம் பாடல் முழுக்கவும் டொக் டொக் கேட்கும் பாருங்க!
அந்த டொக் டொக்-கையே உன்னிப்பா Follow பண்ணீங்கனா....
அதான் என்னோட காதல் துடிப்பு-ன்னு தெரிஞ்சீரும்! :))



(ஆண்குரல் - பச்சையில்; பெண்குரல் - கண்ணனுக்கு பிடிச்ச வயலெட்டில்! :)


காத்திருந்தேன்...

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் - ஜன்னலில் பார்த்திருந்தேன்!
கண்விழித் தாமரை பூத்திருந்தேன் - என் உடல் வேர்த்திருந்தேன்!
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் - மன்னவன் ஞாபகமே!
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் - மன்மத நாடகமே!
அந்திப் பகல், கன்னி மயில், உன்னருகே!
(கண்ணனே நீ வர)

நீலம் பூத்த ஜாலப் பார்வை - மானா? மீனா?
நான்கு கண்கள் பாடும் பாடல் - நீயா? நானா?

கள்ளிருக்கும் - பூவிது பூவிது!
கையணைக்கும் - நாளெது நாளெது?
பொன்னென மேனியும் - மின்னிட மின்னிட!
மெல்லிய நூலிடை - பின்னிடப் பின்னிட

வாடையில் வாடிய
ஆடையில் மூடிய
தேர்...நான்...
(கண்ணனே நீ வர)
பேச வேண்டும்! மெதுவா மெதுவா...

ஆசை தீரப் பேச வேண்டும் - வரவா? வரவா?
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் - மெதுவா! மெதுவா!

பெண் மயங்கும் - நீ தொட நீ தொட!
கண் மயங்கும் - நான் வர நான் வர
அங்கங்கு வாலிபம் - பொங்கிடப் பொங்கிட
அங்கங்கள் யாவிலும் - தங்கிடத் தங்கிட

தோள்களில் சாய்ந்திட
தோகையை ஏந்திட
யார்...?நீ....!
(கண்ணனே நீ வர)
தோள்களில் சாய்ந்திட...


படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
குரல்: யேசுதாஸ் & உமா ரமணன்
வரிகள்: வைரமுத்து
ராகம்: மலைய மாருதம்




தென்றலே என்னைத் தொடு படம் ஒரு வருஷம் மேல ஓடியது-ன்னு நினைக்கிறேன்! பாட்டுக்கும்-காதலுக்காகவே!
சேட்டன் யேசுதாஸோட mesmerizing காதல் குரல்!
உமா ரமணனும் நல்லா கம்பெனி குடுக்கறாங்க! (பூங்கதவே, கஸ்தூரி மானே-ன்னு நிறைய ஹிட் கொடுத்தவங்க உமா!)

ராகம்/மெட்டு எங்கேயோ கேட்டாப் போல இல்லை?
TMS பாட்டு ஞாபகம் வருதா? ஓராறு முகமும் ஈராறு கரமும்....தீராத வினை தன்னை தீர்க்கும்! எக்ஜாக்ட்லி!
அந்த முருகன் பாட்டு ராகமே தான், இந்தக் கண்ணன் பாட்டு ராகமும் கூட! :)
பூப்பூக்கும் மாசம் தை மாசம் என்ற பாட்டும் இதே மெட்டு தான்!

கண்ணா, உனக்கு, உன் பாட்டு பிடிச்சி இருந்தது தானே? :)

Wednesday, September 30, 2009

யமுனே நின்னுட நெஞ்சில்...!



ரு பொற்பொழுதாய் விரிகின்றது அக்காலம்.

வானின் மந்தகாசப் புன்னகை, வரப்போகும் இராச லீலையைக் காண வெட்கப்பட்டு பூத்த பொன் வர்ணம் எனறானது. பிரம்மாண்டமான பிரபஞ்சம் முழுதும் சிவந்த மாதுளை விதைகள் போல் விண்மீன்கள் மின்னத் தொடங்கின. காதலனின் முகத்தை ஒற்றி ஒற்றி தன் நிறம் போல் பூசிக் கொள்ளும் காதலியின் திருமுகம் போல் யமுனா நதி விண்ணின் சிவந்த நிறத்தை தன் மேனியெங்கும் அப்பிக் கொண்டு நகர்ந்தது. மதியத்தின் கதிரவனின் ஆதுரத் தீண்டல்களால் கன்றிப் போய்ச் சிவந்திருந்த பூக்களும், காய்களும், கனிகளும் வீசத் தொடங்கும் மாலைத் தென்றலில் மயங்கி அசைந்து கொண்டிருந்தன. தூர மலை முகடுகளின் உச்சிகளில் மொட்டு விட்ட செந்தாமரை போல் சிவப்புப் பொன்னிறம் பூத்திருந்தது.

பூங்காற்றின் நிலையைத் தான் என்னவென்று சொல்வது? வேணு கான நாயகனின் மதுர நாதத்தை தனக்குள் சுமந்து கொண்டு, போதையில் கிறங்கிப் போன பின் தள்ளாடித் தடுமாறிக் கையில் கிடைத்த பூக்களை எல்லாம் கிள்ளிப் பார்த்தது; பெரும் மரங்களின் கடும் மேனியின் மீதெல்லாம் மோதிக் கொண்டது; ஈரம் பூக்கத் தொடங்கி இருக்கும் மண் மேல் நடந்து, பின் முடியாது, விழுந்து, புரண்டு, கனிந்து, எழுந்து, குப்புறக் கவிழ்ந்து, அசைந்து யமுனா நதிக்கரையில் காத்திருக்கும் கோபிகையர்களுக்கெல்லாம் கண்ணனின் வருகையைக் குழறலாய்க் கூறியது.

விழிகளை இமை எப்போதும் காத்திருக்கும். ஆனாலும் இமை அசந்திருக்கும் போது பார்த்து கண்ணீர் கரை புரண்டு ஓடோடி வரும். போல், காதல் நிரம்பி மனத்தில் ததும்பிக் கொண்டிருக்கும். ஒரு சிறு கீறல், பூங்காற்றின் ஒரு சிறு கூறல் பட்டதும் பொங்கி வழிகின்றது, கோபியரிடமிருந்து..!

அந்த இராசத் திருமகனைக் காணாது விழித்திருக்கும் போதெல்லாம் வீணாய்த் தோன்றுகின்றது என்கிறாள் ஒருத்தி! அந்தக் கார்மேகவர்ணனை நினையாது கழித்திருக்கும் போதெல்லாம் காடுண்ட இருளென நகர்வதேயில்லை என்கிறாள் மாற்றொருத்தி! முட்டி போட்டுக் கொண்டு பால் கறக்கையில், நம்மை முட்டிக் கொண்டு, தாய் மடியை முட்டி, முட்டி அமுதருந்தும் கன்றினைப் போல் எந்நிலையிலும் நினைவுகளை முட்டி, தட்டி கிளம்பி கிறுகிறுக்க வைக்கின்றது அவன் திருமுகம் என்கிறாள் ஒருத்தி! தோப்புகளைத் தாண்டிச் செல்கையில் வீசும் ஊதற்காற்று அவன் திருவாய் ஊதும் காற்று போல் இசை எழுப்பி மேனியைச் சிலிர்க்கச் செய்கின்றது என்கிறாள் மற்றும் ஒருத்தி!

மோகன வர்ணமென எடுத்துப் பூசிக் கொள்கின்றது அவன் பிரிதலில் நான் கொள்ளும் நிறத்தை மாலை வானம் என்றாள் நாணத்தால் சிரம் கவிழ்ந்து, ஒருத்தி! குளிக்கையில் மஞ்சள் அள்ளி பூசுகையில், மனதில் ஒரு சிரிப்பு பூக்கச் செய்கின்றன அவன் விரல்கள் விளையாடிய தடங்கள் என்று வெட்கிக் கூறிச் சிரித்தாள், இன்னும் மஞ்சள் நிறம் கிளைக்கச் செய்யும் புன்னகையோடு ஒருத்தி!

இன்னும் இன்னும் காற்றின் காதுகளுக்கும், யமுனை ஆற்றின் அலைகளுக்கும் மட்டும் சொல்லிக் கொண்ட கதைகளை கோபியர் கூறிக் கொண்டே இருக்க, கண்ணன் அங்கு வந்தான்.

லையாமாருதம் வருகையில் நாணலென்ன செய்யும்? பேரலை காதலுடன் பொங்கி வருகையில் கரையோர வெண் சங்கு என்ன செய்யும்? இரவின் குளிர் இசைப் பாடி வருகையில் கானகத்தின் சிறு கிளைகள் என் செய்ய முடியும்? மதுர கானமென இசைத்துக் கொண்டே அந்தக் கள்ளன் வருகையில், காதலின் மனங்கள் தான் என்ன செய்ய முடியும்?

மெல்ல மெல்ல தன் இதழ்கள் திறக்கையில் சுற்றிக் கொண்டே இருந்த தேனீ, இன்பத்தின் பேரெல்லைக்கே சென்று தேன் துகள் குடத்தில் தலைக் குப்புற விழுதல் போலும், வான் மஞ்சள் இராகங்கள் வாசிக்கையில் நந்தவனத்தின் புஷ்பங்கள் பூத்து கலகலவென சிரித்து மகிழ்தல் போலும், சின்னச் சின்னதாய் அலைகள் வந்து மோதுகையில் சிலிர்த்து சிலிர்த்து கலகலக்கும் கரையோர பூச்சிகள் போலும், அந்த நாத நாயகனின் கானக் காதல் காற்றின் மேனியெங்கும் தடவித் தடவி நிரப்ப, அமிர்த குடத்தில் விழுந்து தத்தளிக்கும் மீன்களாயினர் கோபியர்.

பனித்துகள்களைக் கொண்டையாய் அணிந்து கொள்ள தயார்ப் படுத்திக் கொண்டிருந்த, பச்சைப் பசும்புற்கள் எல்லாம், தரையோடு ஆழப் புதையும் வகையில் யாவரும் ஓடோடி அந்த மாயனைச் சூழ்ந்தனர்.

மேகங்களும் மாமழையும் பெய்யும் போதெல்லாம் தன் வானுயர் மகிழ்வை தோகைகள் வழி சிந்தும் மயில்கள், இப்போது இந்தக் கார்மேகவர்ணனைக் கண்ட மாத்திரத்தில் பெரும் பரவசத்தில் அழ்ந்து சிறகுகள் விரித்து நடனமாடின. புள்ளிமான்களும், பேடைக் குயில்களும், சின்னப் புறாக்களும், பொன் வர்ணப் பறவைகளும் சீச்சுக் கீச்சென்று குரல் எழுப்பிக் கொண்டே எங்கும் பொங்கிப் பறந்தன.

பலவண்ண மலர்கள் பொலபொலவென தங்கள் சந்திரக் காதலனை வரவேற்கப் பூக்கத் தொடங்கின. வெண்ணிலாவின் நிறத்திற்கு முற்றிலும் வேறுபட்ட இந்த கரியனைக் கண்ட மாத்திரத்தில் சற்று குழம்பினாலும், தெளிவுற்று தம் கைகளால் கொப்பி அடிக்கத் தொடங்கின.

கோபியர் மட்டும் சும்மா இருந்தனரா...?

ந்த லீலைக் காதலனின் கன்னங்களைப் பிடித்து இழுப்பதும்; அவன் கைகளின் குழல் போலின்றி சுருண்டு சுருண்டு குழல்களாய் இருக்கும் கருங் கூந்தலை அள்ளி முத்தமிடுவதும்; அவன் கரங்களைப் பிடித்து தம் புறம் இழுத்து அணைப்பதும்; அவன் சிவந்த இதழ்களால் தினம் தினம், நிதம் நிதம் சுவைத்து, அவன் மூச்சுக் காற்றால் உயிர் பெற்று கருவத்தால் இசை பரப்பி, இசை பெறும் குழலாய்த் தாம் ஆக மாட்டோமா என்ற பெருமூச்சோடும்; அவன் மணிமார்பில் தவழும் பூமாலையின் ஒரு பூவாக மாட்டோமா என்ற ஆசையோடும்; அவனோடு விளையாடத் தொடங்கினர்.

அந்த இராச லீலை மன்னனின் விளையாட்டுக்களைத் தான் என்னவென்று சொல்லுவது?

பூக்கள் கிளைத்து மணம் வீசும் கன்னியின் கூந்தலைக் கலைத்துப் போடுகிறான். தன் கன்னத்தில் இதழ் பதிக்க வந்த ஒருத்தியின் முகத்தில் கொட்டி விடுகிறான். தன் குழலைப் பிடுங்க வரும் ஒருத்தியின் கைகளுக்கு அக்குழலாலேயே அடி ஒன்று வைக்கிறான். தன் பின் வந்து அணைக்க முயன்ற ஒருத்தியைப் பயமுறுத்த திடுமென திரும்பிப் பழிப்புக் காட்ட, அந்த மதுரமான திருமுகத்தில் பரவசமுற்று தடரென விழுகின்றாள், அவள்.

கொப்பி விளையாடி மகிழ்விக்கிறான். கைகளைப் பிடித்து சுழலாட்டம் செய்கிறான். நடனம் ஆடுகிறான். முதுகோடு சாய்ந்து கொண்டு பாடுகிறான். ஒருத்திக்கு தலை நிறைய பூக்கள் வைக்கிறான். ஒருத்தியின் தலையின் பூக்களைப் பறித்து, அவளது முகமெங்கும் ஊதுகிறான். நாதப் பெருங்குழலில் உயிர் உருக்கும் பூங்கானம் இசைக்கிறான்.

இராச லீலைகளை மெல்ல மெல்ல அவன் அரங்கேற்றுகையில் வெட்கத்துடன், வீசிக் கொண்டிருந்த குளிர்க்காற்றும் நிறம் மாறத் தொடங்கியது.

சந்திரமதியும் எட்டிப் பார்த்து, கள்ளத்தனத்தோடு சிரிக்க, வெட்கத்தால் கூச்சப்பட்ட கோபியர் உற்சாகப் பரவசத்திலும், உல்லாச சஞ்சாரத்திலும் யமுனையைப் பார்த்துப் பாடத் தொடங்குகிறார்கள்.

'யமுனே நின்னுட நெஞ்சில்.....'

Get this widget | Track details | eSnips Social DNA




***
பாடல் : யமுனே நின்னுட நெஞ்சில்...
மொழி : மலையாளம்
படம் : யாத்ரா
படம் வெளியான ஆண்டு : கி.பி. 1985 :)
கோர்ப்பவர் : இளையராஜா
(குரல்) சேர்ப்பவர் : ஜானகி.எஸ்.
ஈர்ப்பவர் : ஷோபனா மற்றும் பலர்.
பார்ப்பவர் : நீங்கள், மம்முட்டி மற்றும் பலர்.
:)

Wednesday, August 12, 2009

இளையராஜா & பாலமுரளி: சின்னக் கண்ணன் அழைக்கிறான்!

கண்கள் சொல்கின்ற கவிதை - இளம் வயதில் எத்தனை கோடி?-ன்னு ஒத்தை வரியில் கண்ணனையும் காதலையும் ஒரு சேரக் காட்டியவர் இசைஞானி இளையராஜா! - சின்னக் கண்ணன் அழைக்கிறான் என்னும் மனம் மயக்கும் பாட்டில்!
ராஜாவின் இன்னொரு பலமான முகத்தைக் காட்டிய "முதல் பாட்டு" பற்றி இன்னிக்கி பார்க்கலாம் வாங்க! எங்கள் சின்னக் கண்ணனும் ஒரு "இளைய" ராஜா தானே! :)

இன்று கண்ணன் பிறந்தநாள்! (Aug-13-2009)!
ஜன்மாஷ்டமி என்று வடக்கிலும், கோகுலாஷ்டமி என்று ஒரு சிலர் தெற்கிலும் சொன்னாலும்,
கிருஷ்ண ஜெயந்தி என்றோ கண்ணன் பிறந்த நாள் என்றோ சொல்லும் போது தான், அவன் பேரும் அதில் ஒட்டிக் கொண்டு, விழாவுக்கே இனிப்பு சேர்க்கிறது! :)

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணா! Have a sweet & sexy birthday dude! :)
கண்ணா-ன்னு உனக்கு வாழ்த்து சொல்லும் போது,
எனக்கே நான் சொல்லிக்கிறாப் போல ஒரு ஃபீலிங்! :)



முல்லை நிலத் தமிழ்த் தலைவன் = தமிழ்க் கடவுள் = கண்ணன்!

* அக நானூறு வழியில் = நப்பின்னையைத் தழுவினான்! ஏறு தழுவி, வீறு தழுவி, அவளுடல் கூறு தழுவி, இன்பச் சேறு தழுவி, நூறு தழுவல் தழுவிய அழகிய காதல்!

* புற நானூறு வழியில் = தூது சென்று, போரை வென்று, தன் நாட்டு மக்களுக்கென்று தனி நகரமே உருவாக்கினான்! இந்திரனின் மூடப் பழக்க வழக்கம் ஒழித்து, குன்றுக்குப் பூசை கண்டான்! குன்றின் மேல் விளக்காக இன்னிக்கும் ஒளிர்கிறான் இந்தப் பிறந்த நாள் பையன்!

காதல் என்றால் கண்ணன் - கண்ணன் என்றால் காதல் என்று அல்லவா உலக வழக்கில் ஆகிப் போனது? அவன் பிறந்த ராத்திரியில் இருந்து, கடைசி வரை.....அவன் வாழ்க்கை, ஒரு நல்ல தமிழ் சினிமாவைப் போலவே சூடும் சுவையும் குறையாதது! :)



இளையராஜாவைக் கிராம ராஜா என்று பேசிக் கொண்டிருந்த காலம்! அன்னக்கிளி-க்கு அப்புறம் பெரும்பாலும் கிராமியச் சாயல் மெட்டுக்களே போட்டுக் கொண்டிருந்த காலம்!
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி கலக்கிக்கிட்டு இருந்த காலம்......விதம் விதமா வித்தை காட்டுவாரு! ராஜாவுக்கோ அன்னக்கிளி ஹிட் ஆனதால், ஒரு மாறுபட்ட கிராமச் சூழல் பாடல்களுக்குக் கொஞ்சம் வரவேற்பு! அவ்ளோ தான்! ஆனால் அது போதுமா?

பின்னாளில் இசைஞானி-ன்னு சொல்லணும்-ன்னா இன்னும் பல முகங்களைக் காட்டணுமே? அப்போது ராஜாவுக்குக் கைகொடுத்த படங்கள் இரண்டு!

* முள்ளும் மலரும் - மெலடியும் பின்னணியும் பிச்சி வாங்கிய படம்! செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்-ன்னு மெலடி! ராமன் ஆண்டாலும்-ன்னு லைட் குத்து! இப்படி, இயக்குனர் மகேந்திரன் ராஜாவைப் பிழிஞ்சி எடுத்தாரு-ன்னே சொல்லலாம்! இது பற்றி கா.பி. அண்ணாச்சி றேடியோஸ்பதியில் இட்ட சூப்பர் பதிவு இங்கே!

* கவிக்குயில் - சினிமா இசை உலகில், கிளாசிக்கல் முகமும் காட்டினாத் தான் ஒரு மரியாதையே கெடைக்குது! பணத்துக்கும் ஹிட்டுக்கும் மெல்லிசை முகம்-ன்னா, மரியாதைக்கும் "ஞானி" போன்ற சொற்களுக்கும் கிளாசிக்கல் முகம் கொஞ்சம் காட்டணும்! நம்ம கிராம ராஜாவுக்கு அந்த முகம் காட்டத் தெரியுமா? :)

ராஜா-வின் அதி அற்புதமான கிளாசிக்கல் முகம் முதலில் வெளிப்பட்ட பாட்டு - கவிக்குயில் படத்தில் - சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
ஏன்னா அதுக்கு அவரு எடுத்துக்கிட்ட மெட்டு-ராகம் = ரீதி கெளளை!

ரொம்ப ரொமான்டிக் ராகம்! ஆனா அவ்வளவு சீக்கிரம் டைல்யூட் பண்ணவே விடாது! ஸ்வர வரிசையும் ரொம்ப சிக்கலானது! வேணும்-ன்னே அதைக் கையில் எடுத்தார் ராஜா! :)
அதுவும் தன் முதன்முதல் கிளாச்சிக்கல் முயற்சியில்! இதற்கு முன் இதை எடுத்த இசையமைப்பாளர்கள் மிக மிகக் குறைவு! (அ) இல்லவே இல்லை!

ஆனானப்பட்ட எம்.எஸ்.வி கூட மெல்லிய சுகமான ராகங்களைத் தான் அதிகம் கையாண்டாரே தவிர, "சிக்கலான" ராகத்தில் கையைப் போட்டு ரிஸ்க் எடுக்கவில்லை!
சொதப்பிருச்சீன்னா அவ்ளோ தான்! இதுக்குப் பேரே "கன ராகம்"! அம்புட்டு கனமா இருக்கும்! அதை எப்படி லைட் பண்ணுறது? மக்களுக்குப் பிடிக்கச் செய்யறது?

சூடு மேல சூடு போட்டா ஜூரம் போகும்-ங்கிற மாதிரி, ரிஸ்க் மேல ரிஸ்க் போட்டாரு ராஜா! அந்த ரிஸ்க்கான பாட்டைப் பாட, அவர் அழைத்தது யாரை.....................?
மக்கள் செல்வாக்குள்ள எஸ்.பி.பி போன்ற பாடகர்களையா? இல்லை! கச்சேரிப் பாடகர் - பாலமுரளி கிருஷ்ணாவை! ஹா ஹா ஹா! எடுபடுமா?



என்ன தான் பாலமுரளி கச்சேரிப் பாடகரா இருந்தாலும், மென்மையான குரல் கொண்டவர்! புதுசா செஞ்சிப் பார்க்கும் ஆராய்ச்சி மனப்பான்மை உள்ளவர்! தியாகராஜர் பாட்டுகள் சிலவற்றைத் தமிழில் மொழி மாற்றிக் கூடப் பாடியிருக்காரு!

பாலமுரளியின் ஆற்றலைச் சினிமாவில் முதல்ல கண்டுபிடிச்சிப் பாட வைத்ததே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி தான்! "தங்கரதம் வந்தது வீதியிலே, தளிர் மேனி வந்தது தேரினிலே"-ன்னு பாட்டு! கலைக்கோயில் படத்துக்காக சுசீலாம்மாவோடு பாடிய பாட்டு தான் பாலமுரளியின் முதல் சினிமாப் பாட்டு!

அப்பறம் "ஒரு நாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா?"-ன்னு திருவிளையாடல் படத்தில் சவடால் பாலையா பாடுவது! :)
அது பாலமுரளி பாடி ஹிட் ஆச்சி! அப்பறமா குன்னக்குடி, சங்கர் கணேஷ் இசையில் கூடப் பாடி இருக்காரு!
ஆனால் "சின்னக் கண்ணன் அழைக்கிறான்" போல ஒரு மெகா ஹிட் பாலமுரளியே எதிர்பார்க்கவில்லை! அந்தளவுக்கு எல்லாருக்கும் பாட்டு மனப்பாடம் ஆனது! அதான் ராஜாவின் ராசி! :)

இந்தக் கடினமான ரீதி கெளளை ஹிட்டைப் பார்த்துக் கச்சேரிப் பாடகர்களே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு ஆனது!
அந்த உற்சாகத்தில் தான், அதே ரீதி கெளளையில் பின்னாளில் இன்னொரு பாட்டும் போட்டார் = தலையைக் குனியும் தாமரையே! அதுவும் செம ஹிட்! :)

* அப்பறம் இதையே ரஹ்மான் ட்ரை பண்ணிப் பாத்தாரு! = அழகான ராட்சசியே, அடிநெஞ்சில் குதிக்கிறியே! = சரியா வரலை! விட்டுட்டாரு! :)
* யுவன் கூட துள்ளுவதோ இளமை-ல ட்ரை பண்ணாரு! = தீண்டத் தீண்ட மலர்ந்ததென்ன? = சரியா வரலை! அவரும் விட்டுட்டாரு!

ஆக, ரீதி கெளளையைத் தமிழ்ச் சினிமாவில் வெற்றிகரமாக் கையாண்ட ஒரே தல = நம்ம இளையராஜா தான்! :)



கண்ணன்-ராதையின் காதலாக இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம்,
ஒரு மாஸ்டர் பீஸ் பாடலைக் கேட்கும் திருப்தி கிடைக்கும்.
இதே பாட்டை இன்னொரு வெர்ஷனாக, ஜானகி அதே படத்தில் பாடியிருப்பார். ஆனால் பாலமுரளி பாடியது தான் ஹிட்டோ ஹிட்!

இந்தக் கிளாசிக்கல் பாட்டில் வரும் வாத்திய இசைக்கு, ஐரோப்பிய Baraoque இசைப் பாரம்பரியத்தைப் பயன்படுத்தியதாகச் சொல்லுவார்கள்;
ரீதிகெளளை ராகம் ஒரு பக்கம், Baraoque மறு பக்கம்! - ஆனால் ஒன்றை ஒன்று விழுங்காது! பாடல் வரிகளும் விழுங்காது வந்து விழும் இனிய இசை! ராஜாவின் இசை ஆய்வு (experiment) அப்போதே தொடங்கி விட்டது அல்லவா?

எல்லாம் சரி! பாடல் எதோ? - இதோ! மாயனின் லீலையில் மயங்குது உலகம்! நாமும் மயங்குவோம்! வாங்க!

Radha%20Krsna
கண்கள் சொல்கின்ற கவிதை - உன் புன்னகை சொல்லாத அதிசயமா?

* எஸ்.ஜானகி பாடுவது
*** பாலமுரளி கிருஷ்ணா பாடுவது


இந்தப் பதிவிலேயே கேட்க play button-ஐச் சொடுக்கவும்!


கண்ணன் என்றாலே புல்லாங்குழல் தானே! பாடலின் ஓப்பனிங், Flute Bit-ஐ, Baroque-வோடு கேட்கத் தவறாதீர்கள்! :)

சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
ராதையை, பூங் கோதையை,
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடிச்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!


கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி?
என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை!
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை!
(சின்னக் கண்ணன்)

நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா?
உன் புன்னகை சொல்லாத அதிசயமா?
அழகே இளமை ரதமே!
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்!
(சின்னக் கண்ணன்)

படம்: கவிக்குயில்
இசை: இளையராஜா
குரல்: பாலமுரளி கிருஷ்ணா
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
ராகம்: ரீதி கெளளை


கேள்வீஸ் ஒன்லி கேள்வீஸ்:
இதே கவிக்குயில் படத்தில், பாலமுரளி இன்னொரு கண்ணன் பாட்டும் பாடி இருக்காரு! ராஜா இசையில்! என்னா-ன்னு சொல்லுங்க பார்ப்போம்!

சின்னக் கண்ணன் அழைக்கிறான் - காணொளி:


Jaya TV Concert - Yuvan sings his dad's tune! - Sothappal! :))


Airtel Top Singer:


போனஸ்: தலையைக் குனியும் தாமரையே! - அதே சூப்பர் ரீதி கெளளை

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP