முன்னே ஒரு முறை இதே போல் கண்ணன் மேல் ஒரு காவடிச் சிந்து எழுதியிருக்கேன். இன்னொண்ணு எழுத திடீர்னு ஆசை வந்தது. தப்பில்லை தானே? இந்த பாடலை யாரேனும் பாடித் தந்தால் மகிழ்வோம் (கண்ணனும் நானும் :)
துள்ளித் துள்ளி வரும் கண்ணன் தனை அள்ளி அள்ளிக் கொஞ்ச எண்ணும் - எந்தன் கண்ணா மணி வண்ணா மலர் மன்னா கார் வண்ணா இங்கு வாடா முன்னால் வாடா - கட்டி முத்தம் ஒன்று தாடா!
ஓடி வரும் சின்னக் கண்ணன் தனை நாடிச் செல்லும் நெஞ்சம் கொஞ்ச - செல்லக் கண்ணன் அவன் கெஞ்சக் கெஞ்சக் கொஞ்சிக் கொஞ்சிக் கொஞ்சம் மிஞ்சி மறைவான் ஓடி ஒளிவான் - பின்னர் வருவான் இன்பம் தருவான்!
ஆரங்கள் மார்பினில் அசைய மயிற் பீலியும் அதனுடன் இசைய - வண்ணக் கண்ணன் அவன் மண்ணைத் தின்று அன்னை அவள் கண்ணீர் விட சிரிப்பான் சீண்டிக் களிப்பான் - வாய் திறப்பான் உள்ளம் நிறைப்பான்!
கன்னக் குழி தன்னில் வீழும் மனம் கண்ணன் எழில் தன்னில் ஆழும் - அந்தப் பொல்லாதவன் புல்லாங்குழல் துளை தன்னிலே இதழ் சேரவே மலரும் நெஞ்சம் குளிரும் - உயிர் உருகும் கண்கள் பெருகும்!
குட்டிக் கண்ணனை பார்த்ததுமே கட்டிக் கொள்ள ஆவல் பிறக்கிறதல்லவா! நீல வண்ணக் கண்ணனுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!!
பூம்பிஞ்சுப் பாதம் எடுத்து பூப்போல அடிகள் பதித்து பூவைப்பூ வண்ணக் கண்ணன் புவிமகிழ பிறந்து வந்தான்!!
ஏற்கனவே எழுதின ஒரு பாடலை இடலாம்னுதான் வந்திருக்கேன். ஆனாலும் கண்ணனை நினைச்சோன்ன பிறக்கிற கவிதையை தடுக்க முடியல :) பரவாயில்ல, இதை இப்ப முடிக்காம இன்னொரு மழைக்காலத்துக்கு சேமிச்சு வச்சுக்கறேன்!
கண்ணன்னாலே ஒரு தனி சிறப்பு இருக்கு. செல்லக் குழந்தையாகவும், விளையாட்டுப் பிள்ளையாகவும், தோள் கொடுக்கும் தோழனாகவும், உள்ளங்கவர் கள்வனாகவும், கீதாசிரியனாகவும், பரம்பொருளாகவும், இப்படி பல பரிமாணங்கள்ல அவனை சுலபமாக பாவித்துக் கொள்ளலாம்! ஆனா இன்னைக்குதானே அவனுடைய பிறந்த நாள்… அதனால அவனை இன்னைக்கு சின்னக் குழந்தையா மட்டும் பார்த்து கொஞ்சிக்கலாம் :) என்ன சொல்றீங்க?
நம்ம கண்ணன் (கேஆரெஸ்) முருகனருள் 100-வது பதிவுக்காக முருகன் மேல ஒரு காவடிச் சிந்து எழுதியிருந்தார். அதை பார்த்து எனக்கும் ஒரு காவடிச் சிந்து எழுதணும்னு ஆசை வந்தது, அப்போதான், “ஏங்க்கா, கண்ணன் காவடி சிந்து ஒண்ணு எழுதுங்களேன்; கண்ணன் பாட்டுல போடலாமே”ன்னு சொன்னார். அதன்படி எழுதின பாடல்தான் இங்கே.
இந்த பாடலை உற்றுக் கவனிச்சீங்கன்னா ஒரு ரெண்டு அல்லது மூணு இடத்துல கேஆரெஸ் உடைய முத்திரை (சுத்தத் தமிழ்ல சொன்னா அவருடைய ‘டச்’!) தெரியும் – அவர் இந்த பாடல்ல சில சொற்களை மாற்றியிருக்கார், அதைத்தான் சொல்றேன். எல்லாம் கண்டு பிடிக்க முடியலைன்னாலும், அவருடைய வாசகரா இருக்கவங்க, ஒரு இடம் கண்டிப்பா கண்டுபிடிச்சிரலாம்! எங்கே, சொல்லுங்க பார்ப்போம்!
கண்ணன் என் னும்மன்னன் பிறந்தான் நெஞ்சம் தவழ்ந்தான் - நந்த கோபனின் செல்வனாய் வளர்ந்தான் - அந்த ஆயர் குடி ஆயர் இடை மாயன் அவன் ஆயன் என நடந்தான் வையம் அளந்தான் - அவன் திரிந்தான் லீலை புரிந்தான்
ஆவின் இனங்களை மேய்த்தான் வீடு சேர்த்தான் - கண்ணன் பூவின மாதரை ஈர்த்தான் - வண்ண மலர் கொய்துச் சூடி, அவள் ஆடை கள வாடி சிரிப்பான் பின்னல் பிரிப்பான் - அதை மறைப்பான் மனம் கரைப்பான்
கிண்கிணிச் சலங்கை ஒலிக்க சிந்து படிக்க - கண்கள் குறும்பில் மின்னியே ஜொலிக்க - சின்னக் கண்ணன் அவன் வெண்ணை இதழ் கன்னம் இட்டு மின்னல் எனக் கவர்வான் தின்று மகிழ்வான் - பின்னர் ஒளிவான் பிடி படுவான்
புல்லாங் குழலினை எடுப்பான் கானம் படிப்பான் - புவி எல்லாம் மயங்கிட இசைப்பான் - கன்னல் மொழி பேசும் கண்ணன் அவன் மயிற்பீலி அசைய வருவான் உள்ளம் நுழைவான் - இன்பம் தருவான் தமிழ்ப் பெருமான்!
*** முதல் பதிவே கண்ணன் பிறந்த நாளுக்கு எழுத முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. வாய்ப்பளித்த கேஆரெஸ்ஸுக்கும், கண்ணன் பாட்டு குழுவிற்கும், முக்கியமாய் கார்மேக வண்ணனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
காவடி-ன்னாலே அது முருகனுக்கு மட்டும் தானே! அது எப்படிடா கண்ணனுக்குப் போயி எடுப்பாங்க? எங்கிட்டு எடுப்பாங்க-ன்னு தானே கேக்கறீங்க! மேலே படிங்க! தமிழ்க் கடவுளுக்குக் காவடி எடுக்கும் வழக்கம், தமிழ் மக்களிடையே காலம் காலமாக வந்த ஒன்று! - தெரிஞ்சது தான்!
சரி, தமிழ்க் கடவுள் யாரு? - முருகப் பெருமான்! - மிகவும் சரியான விடை! ஆனா கேள்விக்குண்டான எல்லா விடைகளையும் சொன்னாத் தான் மதிப்பெண்ணு, மதிப்பொண்ணு எல்லாம் கொடுக்கப்படும் :-) இன்னொரு தமிழ்க் கடவுள் யாருன்னும் சொல்லுங்க!
பழந்தமிழ் மக்கள் வணங்கிய இரு பெரும் தெய்வங்கள் சேயோன், மாயோன்! குறிஞ்சிக் கடவுள் = சேயோன் = முருகன் = பெருமான் முல்லைக் கடவுள் = மாயோன் = கண்ணன் = பெருமாள் மற்ற திணைகளான மருதம், நெய்தற், பாலைக்கு எல்லாம் தனித்தனித் தெய்வங்கள் இருந்தாலும், பெரும் தெய்வங்களாக எல்லா இலக்கியங்களிலும் பேசப்படுவது இந்த மாயனும், சேயனும் மட்டுமே!
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் முதற்கொண்டு, சிலப்பதிகாரம் முதலான காப்பியங்கள், பிற்கால இலக்கியங்கள் - என்று எல்லாவற்றிலும் இந்த இருவரின் ஆளுமை அதிகமாகத் தான் இருக்கு! மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் என்பது தொல்காப்பியம்! சிலப்பதிகாரத்திலும் விழாக் காலங்களில் இவர்கள் இருவரின் கோயில்களில் நடக்கும் வழிபாடு பற்றிச் சிறப்பாகப் பேசப்படுகிறது! ஒருவேளை மக்கள் அதிகம் புழங்கிய இடங்களாகக் குறிஞ்சியும் முல்லையும் இருந்திருக்கலாம்; அதனால் தானோ இவர்கள் மட்டும் இத்தனை பெரிதாகப் பேசப்படுகிறார்கள்?
ஆக தமிழ்க் கடவுள் என்றாலே அது மாயோனும், சேயோனும் ஆகிய இந்த இருவருமே தான்! நண்பர் ஜிராவின் உதவியுடன், இது பற்றித் தனி ஆராய்ச்சிப் பதிவாகப் பின்னொருகால் இடுகிறேன்! இராம.கி ஐயாவையும் சில பாடல்களுக்குப் பொருள் கேட்டுத் தெளிய வேண்டும்! இன்னிக்கி காவடி மேட்டருக்கு மட்டும் வருவோம்! சின்ன வயசுல (மூனாங் கிளாஸ்-னு நினைக்கிறேன்) என்னைய திருப்பதிக்குக் கூட்டிக்கிட்டு போயிருக்காய்ங்க வூட்டுல! விளையும் பயிர் தான் முளையிலேயே தெரியுமாமே! சரியான டகால்டி பார்ட்டின்னு அப்பவே என்னை முடிவு கட்டிட்டாங்களாம்! :-)
ஏன்னா....திருப்பதியில நான் அரோகரா அரோகரா-ன்னு கூவிக்கிட்டு இருந்தேனாம்! வர்ற வழியில, திருத்தணியில் ஹால்ட்டு! அங்கிட்டு கோவிந்தா கோவிந்தா-ன்னு கோஷம் போட்டுக்கிட்டு இருந்தேனாம்! நான் கல்லூரி லெவலுக்கு வந்த பின்னும் கூட, இதச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பாங்க எங்க மறைந்த ஆயா!(பாட்டி)
நான் மட்டும் தான் இப்படி டகால்ட்டி பேர்வழின்னு நெனைக்கறீங்களா? நம்மள விட ஒருத்தர் செம டகால்ட்டியா இருக்காரு! ஊத்துக்காடு வேங்கட கவி-ன்னு ஒருத்தரு! அழகான பல தமிழிசைப் பாடல்களை எல்லாம் கொடுத்திருக்காரு! அலைபாயுதே கண்ணா பாட்டு அவர் எழுதினது தான்! ஏ.ஆர். ரஹ்மான் ராயல்டி ஏதாச்சும் கொடுத்தாரான்னு தெரியலை! அவரு கண்ணன் மேலே காவடிச் சிந்து பாடி இருக்காரு!
பொதுவா காவடிச் சிந்து-ன்னா அது முருகனுக்குத் தான்! காவடி எடுக்கும் களைப்பு தெரியாம இருக்க, வழிநடைப் பாடலா இதைப் பாடுவாங்க! செஞ்சுருட்டி இல்லீன்னா சிந்து ராகத்தில் இருக்கும்! சும்மா பாட்டைக் கேட்டாலே போதும், தையத் தையத் தக்கத் தானா - திமி தையத் தையத் தக்கத் தானா -ன்னு கால்கள் தானாவே ஆடும்! அப்படி ஒரு அருமையான காவடிச் சிந்தை, கண்ணபிரான் மேல் பாடி இருக்காரு இந்த ஊத்துக்காட்டுக் கவி! வாங்க...இன்னிக்கி கண்ணன் பாட்டுல, கண்ணனுக்குக் காவடி எடுப்போம்! கண்ணான கண்ணனுக்கு அரகரோகரா!:-)
மேலே மலேசிய பத்து மலைக் காவடிய உத்துப் பாருங்க! என்னாத் தெரியுது? :-)
கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம் தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக் கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென தரமான குழலிசை கேளும் - போன ஆவி எல்லாம் கூட மீளும்! (கண்ணன்)
சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல் தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ் சொல்லிச் சொல்லி இசைபாடும்! (கண்ணன்)
கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை - என்று கண்டதும் வண்டொன்றும் வர்லை இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள் கண்ணன் அன்றி வேறு இல்லேன்! (கண்ணன்)
தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் - என்ன செளக்கியமோ என்று கேட்கும் - அட மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ - மாதவனின் முத்து முடி தனில் சேர்வோம் - அங்கே மெத்த மெத்தப் பேசி நேர்வோம்! (கண்ணன்)
கீழே ஒருத்தரு இந்தப் பாட்டுக்கு நாட்டியம் ஆடறாங்கப்பா! சும்மா கெடைச்சுது யூ-ட்யூப்பில்! சுட்டுப் போட்டுட்டேன்!
ஷைலஜாவுக்குப் புத்தாண்டு சபதம்! அப்புறம் அம்பிக்கு 2007 இல் புடிச்ச பதிவு! சீனா சாருக்கு மொக்கைச் சரம் பதிவு! - எல்லாம் எக்கச் சக்கமாப் பாக்கி இருக்கு! சீனா சார் - இந்தப் பதிவை எல்லாம் ப்ளீஸ், மொக்கையில் கணக்கு எடுத்துக்க மாட்டீங்களா? :-)