கிளியே....குழறிக் குழறி அழைத்தாயோ?
என்னவோ எல்லாரும் அரங்கன் திருமால் ஆயிரம் நாமங்கள் ஆழ்வார்கள் ஆண்டாள் அப்படீன்னு மட்டுமே இங்க பேசிட்டே இருக்கீங்களே மார்கழில ஒரு மாசிலா ஜீவனை யாராவது நினச்சிப்பார்த்தீங்களா?! அது மட்டும் இல்லேன்னா அரங்கனாவது திருவரங்கக்கோயிலாவது!
அதை கே ஆர் எஸ் மறப்பார் ராதாவும் மறப்பார்! அதைத்தவிர பாக்கி எல்லாரையும் எல்லாத்தியும் பத்தி மார்கழில எழுதுவாங்க! நல்லவேளை ஆண்டாள் அதை தன்னோட ஒரு பாட்டுல கூவி அழைச்சா தோழியை அழைக்கிறமாதிரி! அதெப்படிங்க அழகான அதை மறக்கலாம்?
அழகா இருப்பதால்தான அதை ஆண்டாள் கையில் வச்சிருக்க்கா மீனாட்சியும் அதுக்கு இடம் கொடுத்திருக்கா! ஓ என்ன அதுன்னு கண்டுபிடிச்சிட்டீங்கதானே? ஆமாம் கிளிதான் அது!தத்தைன்னும் சொல்வாங்க தூயதமிழ்ல!
இடிந்த அரங்கன் கோயிலைத் தர்மவர்மனுக்கு கிளி தான் காட்டிக் கொடுத்தது! கிளி மண்டபம் அதனால்தான் அரங்கத்தில் இருக்கு முன்னெல்லாம் தூணுக்குத்தூண் கூண்டு கட்டி கிளிகளை அதில் அடைச்சிருப்பாங்க ரங்கா ரங்கான்னு ஜோரா கத்தும் அவையெல்லாம். இப்போ சில வருஷங்களா கிளிமண்டபம் மட்டும் இருக்கு கிளிகள் இல்லை.
சரி ஆண்டாளுக்கு கிளி ஏன்?
அந்த காலத்தில் உயர்குடிப்பெண்கள் எல்லோருமே கிளிகளை வளர்ப்பது ஒரு இனிய பொழுதுபோக்கா இருந்ததாம்!
ஓர் அழகான காட்சி.
விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் மரத்தில் உள்ள குயிலை ஆண்டாள் பார்க்கிறாள். கூவி அழைத்து கண்ணனை வரவழைத்தால் இதோ என் கையில் இருக்கும் கிளியை உன் தோழி ஆக்குவேன் என்கிறாள்.
இன்னடிசிலோடு பாலமுதூட்டி
எடுத்த என் கோலக்கிளியை
உன்னோடு தோழமை கொள்வன் குயிலே
உலகளந்தான் வரக்கூவாய்!
ஆண்டாள் அப்போது தோளில் கிளியை வைத்திருக்கலாம்
*** *** ***
ஆண்டாளின் கிளிக்குச் சொல்லப்படும் இன்னொரு கதை: ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், ‘என்ன வரம் வேண்டும்?’ என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், ‘இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது
ஒருவேளை கிளியிடம் கண்ணனின் நாமத்தை சொல்லித் தந்தால் எந்நேரமும் அதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கும்.. காதுக்கும் இனிமையாக இருக்கும் என்று ஆண்டாள் நினைத்திருப்பாளோ ? பெண் மனசு பெண்ணுக்குத்தானே தெரியுமாம்?!
கிளி ஜோசியம் போலத் தான் இதுவும்! ஒரு சுவையான Myth! கிளி எடுத்துக் கொடுக்கும் சீட்டில் எப்படி மனம் மயங்குதோ, அது போலவே கிளி சொல்லும் கண்ணன் நாமத்திலும் மனம் மயங்குதுன்னு கே ஆர் எஸ் முன்ன என் பதிவில் வந்து இப்படி சொல்லி இருக்கார்!
ஆண்டாள் கிளி விடு தூது எழுதலை! ஒன்லி மேக விடு தூது, குயில் விடு தூது! கிளி சொன்னதை மட்டுமே தான் சொல்லும்! சமயத்தை அனுசரித்துப் பேசத் தெரியாது! அதைத் தூதா அனுப்பி, அது கண்ணன் வீட்டில், வருங்கால மாமியார் கிட்ட மாட்டிக்கிட்டு ஏதாச்சும் உளறிடுச்சின்னா? அதான் நோ கிளி விடு தூது! (இதுவும் தகவல் உபயம்--கே ஆர் எஸ்)
கூட்டி லிருந்து கிளியெப்போதும்
கோவிந்தா. கோவிந்தா. என்றழைக்கும்,
ஊட்டுக் கொடாது செறுப்பனாகில்
உலகளந் தான். என் றுயரக்கூவும்,
நாட்டில் தலைப்பழி யெய்தியுங்கள்
நன்மை யிழந்து தலையிடாதே,
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்
துவரா பதிக்கென்னை யுய்த்திடுமின்
-நாச்சியார் திருமொழி
ஆண்டாள் எனும் சோலையில் அருகம்புல்லாய்க்கூட இருக்க இயலாத நிலையில் ஆர்வம் காரணமாகவும் மார்கழில கிளிக்கு ஒரு பாடல் எழுதி அதைப்பெருமைப்படுத்த வேண்டும் என்றும் ஏதோ தெரிஞ்சதை எழுதி மெட்டும் போட்டு பாடியும் படுத்திருக்கேன் கேட்டு சொல்லுங்க என்ன?!
பாட்டு..
அரங்கா அரங்கா என அழைக்கும்
அழகுக்கிளியே நமஸ்காரம்(ஸ்ரீ)
மரங்கள்மீதும் மதில்கள்மீதும்
வானமளாவும் கோபுரத்தும்(ஸ்ரீ)
சோலைப்பசுமை தன்னிலவன்
சொக்கும் வனப்பைக்கண்டாயோ?
கோலக்கிளியே அவனை நீ
குழறிக் குழறி அழைத்தாயோ?(ஸ்ரீ)
நீலவானக் கருமுகிலில்
நிமலன் நிறத்தை நினைத்தாயோ?
காலமுற்றும் அவனருளக்
கனித்துக் கனிந்து விளித்தாயோ?(ஸ்ரீ)
தென்றல் காற்று சிரிக்குங்கால்
தேவன் குரலைக் கருதினையோ?
இன்றே வருவாய் எனவுருகி
இரங்கி இரங்கி அழைத்தாயோ?(ஸ்ரீ)
கரிய துளசி வனத்தினிலே
கண்ணன் மனத்தை உணர்ந்தாயோ?
உரியாய்! உடனே வா வென்றே
உருகி உருகி இசைத்தாயோ?(ஸ்ரீ)
மாவின் தளிரைக் கோதுகையில்
மாலின் அதரம் எண்ணினையோ?
ஆவியனையான் அணைத்திடவே
ஆசை பெருக அழைத்தாயோ?(ஸ்ரீ)
*****************************************************************
















