12. தீராத விளையாட்டுப் பிள்ளை!
பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - பாரதியார் எழுதி, சித்ரா பாடியது
மற்ற கலைஞர்கள் பாடியது/இசைத்தது பதிவின் இறுதியில்!
தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன்
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை. (தீராத)
1. தின்னப் பழங்கொண்டு தருவான்; - பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் - அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)
2. தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;
மானொத்த பெண்ணடி என்பான் - சற்று
மனமகிழும் நேரத்திலே கிள்ளி விடுவான். (தீராத)
3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னை
அழஅழச் செய்துபின், "கண்ணை மூடிக்கொள்;
குழலிலே சூட்டுவேன்" என்பான் - என்னைக்
குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான். (தீராத)
4. பின்னலைப் பின்நின்று இழுப்பான்; - தலை
பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;
வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத)
5. புல்லாங் குழல்கொண்டு வருவான்! - அமுது
பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;
கள்ளால் மயங்குவது போலே - அதைக்
கண்மூடி வாய்திறந்தே கேட் டிருப்போம். (தீராத)
6. அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;
எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்
எங்களைச் செய்கின்ற வேடிக்கை யொன்றோ? (தீராத)
7. விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்
வேலையென்றால் அதைக் கேளா திழுப்பான்;
இளையாரொடு ஆடிக் குதிப்பான்; - எம்மை
இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். (தீராத)
8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளி
அத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே,
எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்
யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத)
9. கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன்; - பொய்ம்மை
சூத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன்;
ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத)
திரைப்படங்களில்:
பட்டம்மாள் - ஆர்.சுதர்சனம் = படம்: வேதாள உலகம்
கர்நாடக இசை/ஹிந்துஸ்தானி/மெல்லிசை:
Nityashree
Bombay Sisters
Unni Krishnan
Flute - N.Ramani
Nadaswaram - Sheikh Chinna Moulana Saheb
Guitar - Prasanna
Clarinet - AKC Natarajan
Veenai - Balachander
Saxophone - Kadri Gopalnath
மார்கழி 8 - கீழ்வானம் வெள்ளென்று - எட்டாம் பாமாலை.
இன்று திருப்பாவையில் "மிக்குள்ள பிள்ளைகளும்" என்று வருவதால், இந்த பிள்ளைப் பாட்டு!
எழுதியவர்: சுப்ரமணிய பாரதியார்
ராகம்: கேதாரம்
தாளம்: கண்ட ஜதி - ஏக தாளம்
12 comments :
அருமையான பாடல்.
//சழக்கன்;// - அப்படின்னா என்னங்க?
தீந்தமிழில் தீராத விளையாட்டு பிள்ளையான கண்ணனை பாடிய பாரதி...
படிக்க படிக்க அருமை...
கொத்ஸ்
வாங்க! ஊருக்குக் கிளம்பலையா? இன்னும் தமிழ்மணத்தில் தான் வாசமா? :-))
சழக்கன் = கபடன்/வஞ்சகன்
சாத்திரம்,சழக்குன்னு பொதுவாச் சொல்லுவாங்க இல்லையா, திட்டுவதற்கு! அது தான் இது!
சழக்கனேன் உனைச் சார்ந்திலேன் = திருவாசகம்
சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன் சங்கு சக்கரம் ஏந்து கையனே = பெரியாழ்வார்.
பாரதியார் கண்ணனைத் திட்டுகிறார் செல்லமாக!
//சாத்வீகன் said...
தீந்தமிழில் தீராத விளையாட்டு பிள்ளையான கண்ணனை பாடிய பாரதி...//
வாங்க சாத்வீகன்! நன்றி!
//சழக்கன் = கபடன்/வஞ்சகன்//
நன்றி கே.ஆர்.எஸ்.
இன்னும் கிளம்பலை. :)
பாரதியாரின் பாட்டு கேட்டாலே இனிக்கும். புதுசா வந்த திரைப்படங்களில் இந்தப் பாட்டு வந்திருந்தால் அதையும் போடுங்களேன்.
மிக அருமையான பாடல் இது இரவிசங்கர். மிகப் பிரபலமான பாடலும் கூட. இதுவரை இதனை இசைக்கலைஞர்கள் பாடியே கேட்டிருக்கிறேன். திருமணங்களிலும் கோவில் திருவிழாக்களிலும் நாதஸ்வரக் கலைஞர்கள் இசைத்துக் கேட்டிருக்கிறேன். ஆனால் இணையத்தில் இசைக்கருவிகளில் இந்தப் பாடலை இசைத்துக் கேட்பது இதுவே முதல் தடவை. எல்லாவற்றையும் ஒரே இடத்தில் வந்து அனுபவிக்கும் படி செய்யும் உங்கள் சேவை உன்னதமானது. மிக்க நன்றி.
பாரதியின் இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. முதல் காரணம் இது தீராத விளையாட்டுப் பிள்ளையைப் பற்றியது. இரண்டாவது இது பாரதியார் எழுதியது. :-) ஒவ்வொரு வரியும் பாசுர வரிகளைப் போல் தித்திக்கும்.
பல முறை குழந்தைக்குத் தாலாட்டாகப் பாடும் பாடல் இது.
//Anonymous said...
பாரதியாரின் பாட்டு கேட்டாலே இனிக்கும். புதுசா வந்த திரைப்படங்களில் இந்தப் பாட்டு வந்திருந்தால் அதையும் போடுங்களேன்.//
நன்றி அனானிமஸ்!
படம் பேர் சொன்னால் தேடலாம்.
//குமரன் (Kumaran) said...
மிக அருமையான பாடல் இது இரவிசங்கர். மிகப் பிரபலமான பாடலும் கூட.....ஆனால் இணையத்தில் இசைக்கருவிகளில் இந்தப் பாடலை இசைத்துக் கேட்பது இதுவே முதல் தடவை. எல்லாவற்றையும் ஒரே இடத்தில் வந்து அனுபவிக்கும் படி செய்யும் உங்கள் சேவை உன்னதமானது. மிக்க நன்றி.//
நன்றி குமரன்!
//பல முறை குழந்தைக்குத் தாலாட்டாகப் பாடும் பாடல் இது.//
தாலாட்டாகவும் இதைப் பாடலாமா? சரி சரி...நீங்கள் பாடி இருப்பீர்கள் என்று தெரிகிறதே :-)
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவா என்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்
கிழக்கே வானம் வெளுத்துவிட்டது. எருமைகள் விடிந்த பிறகு மேய்ச்சலுக்குச் செல்லும் முன் வீட்டருகே இருக்கும் புற்களை
மேய்வதற்காக பரவி நிற்கின்றன பார். மற்ற பெண்கள்
நோன்பு செய்வதற்குப் போய்க்கொண்டிருந்தார்கள். அவர்களைப் போகாமல் தடுத்து உன்னை
கூவி எழுப்ப வந்து நின்றோம். குதூகலமுடைய
பெண்ணே எழுந்திடுவாய். கண்ணனின் பெருமைகளைப் பாடி அவன் அருள் பெற்று
குதிரையின் வாயைப் பிளந்தவனை, கம்சனால் ஏவிவிடப்பட்ட மல்லரைக் கொன்ற
தேவாதி தேவனைச் சென்று நாம் வணங்கினால்
ஆகா என்று நாம் வந்த காரியத்தை ஆராய்ந்து அருளுவான்.
//சழக்கன் = கபடன்/வஞ்சகன்// நன்றி கே.ஆர்.எஸ். இன்னும் கிளம்பலை. :)
புல்லாங்குழல் கொண்டு வருவான் - என்று இல்லையே.
மூலத்தில்
*புள்*ளாங் குழல்கொண்டு வருவான்
என்றுதானே உள்ளது