Showing posts with label *மாடு மேய்க்கும் கண்ணே. Show all posts
Showing posts with label *மாடு மேய்க்கும் கண்ணே. Show all posts

Monday, July 23, 2007

மாடு மேய்க்கும் கண்ணே !

கண்ணன் பாடல்களில் எனக்கு ஆர்வம் மிகக் காரணம் என் அன்னை. வேளைகளில், ஏதாவதொரு கண்ணன் பாடலை முணுமுனுத்தபடியிருப்பாள். இதன் நீட்சி, கண்ணன் பாடல்களில் எனக்கும் எப்போதும் விருப்புண்டு. ரவிசங்கர் இந்தப்பதிவைத் தொடங்கிய காலத்திலிருந்து பார்த்தும், பாடல்களைக் கேட்டும் வருகின்றேன். மிக அழகான பாடல்களெல்லாம் பதிவாகியுள்ளன.

இவை பற்றிக் கதைக்கும் வேளைகளிலெல்லாம், ரவிசங்கர் , நீங்களும் கண்ணன் பாடல் பதிவில் பங்குகொள்ளலாமே என்பார். நானும் எப்படியாவது தவிர்த்துக்கொண்டுவிடுவேன். என் தப்பித்தல் தந்திரத்தை புரிந்து கொண்டோ என்னவோ, என் பெயரையும் பதிவில் இணைத்து அழைப்பு அனுப்பிவிட்டார் ரவி. இதற்கு மேலும் தவிர்க்க முடியாதென்பதால் இதோ நானும்...

கண்ணனைப் பலருக்கும் பிடிப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்று எண்ணிய போது, அவனை புனிதக் கடவுளாக அல்லாது, குறும்புகளும், குறைகளும் கொண்ட மனிதனாகக் கொண்டாட முடிகிறதென்பது ஒரு காரணமாகவிருக்குமோ என்று கூட எண்ணத்தோன்றியது. ( அடிக்க வந்தீடாதீங்கப்பா..:-)

கண்ணனை மாடு மேய்பவனாக, யதுகுல பாலனாகப் பார்த்து ரசிக்கும் இந்தப்பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. பிரபல கர்னாடக இசைக்கலைஞர் அருணாசாய்ராமின் குரலில் இப்பாடலை முதலில் கேட்டபோது, அவரது பாடும் லாவகமும், இசையில் காட்டும் மாறுதல்களும், ரசிக்கத்தக்கதாக இருந்தது. அவ்விசையின்பத்தை இங்கே, உங்களோடினைந்து ரசிக்க வந்துள்ளேன். வாருங்கள்...



ரவிசங்கர்! உங்கள் அன்புக்கு நன்றி. பாடல் உங்களுக்கும், ஏனையோர்க்கும் மகிழ்வு தருமெனில் அதுவே எனக்கும் இன்பம்.

பல்லவி:

யசோதை:
மாடு மேய்க்கும் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்


அனுபல்லவி:

கண்ணன்:
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே


சரணம்:

காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணைய் தரேன்; வெய்யிலிலே போக வேண்டாம்

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

காய்ச்சின பாலும் வேண்டாம்; கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில் திரும்பிடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ? கண்டதுண்டோ சொல்லும் அம்மா?
கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP