Showing posts with label யேசுதாஸ். Show all posts
Showing posts with label யேசுதாஸ். Show all posts

Thursday, May 27, 2010

யேசுதாஸ் & மலேசியா வாசுதேவன்: தேடினேன் தேவதேவா-தாமரைப் பாதமே!

காபி அண்ணாச்சி றேடியோஸ்பதி பதிவில் ஒரு புதிர் போட்டிருக்காரு!
அது சம்பந்தமான... ஆனால் புதிருக்கு விடை அல்லாத... பாட்டினை, இன்னிக்கி கண்ணன் பாட்டில் போட்டுருவோமா?

அதுவும் இராகவன் பொறந்த நாள் அதுவுமா, ஒரு பொருத்தமான படம், பொருத்தமான பாட்டு வரிகள்! - ராகவேந்திர ராகவேந்திர "ராகவா"! ராகவேந்திர ராகவேந்திர "ராகவா"! :) தேடினேன் தேவதேவா - தாமரைப் பாதமே!


படத்தில், பாடல் என்னவோ க்ளைமாக்ஸ் பாடல் தான் என்றாலும்,
பாடலின் வரிகளும், ராகமும் = "சுபமான" ஒன்று தான்! ராகம்: "சுப" பந்துவராளி! வைகறையில், வைகைக் கரையில், வந்தால் வருவேன் உன்னருகில் - என்ற மெட்டு போலவே இருக்கும்! தேடினேன் தேவதேவா - தாமரைப் பாதமே!

முன்பு, அதே ராகவேந்திரா படத்தில் வரும், இன்னொரு சூப்பரான பாட்டைக் கண்ணன் பாட்டிலே போட்டிருக்கோம்! = ராம நாமம் ஒரு வேதமே! ராக தாளமொடு கீதமே...
இன்னிக்கி அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் பாடல்! யேசுதாஸின் மாயக் குரலில்! கூடவே மலேசியா வாசுதேவனும் பாடி இருக்காரு!

* யேசுதாஸ், பாடல் வரிகளில் தோய...
* மலேசியா, சரண வரிகளில் தோய்கிறார்!
- குருவேஏஏஏஏஏ சரணம் என்று தோய்கிறார்!

நீ வாழும் இடம் வந்து, நான் சேர வேண்டும்! - என்று ஆழமான உணர்வுகளை, மெல்லிய முகத்தில், மெல்லீதாகக் காட்டி நடிப்பாரு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! வாங்க பாட்டைப் பார்ப்போம்!



குரல்: யேசுதாஸ், மலேசியா வாசுதேவன்
இசை: இளையராஜா
வரிகள்: ?
படம்: ஸ்ரீ ராகவேந்திரா


அழைக்கிறான் மாதவன்! ஆநிரை மேய்த்தவன்!
மணி முடியும், மயில் இறகும்,
எதிர் வரவும், துதி புரிந்தேன்!
மாதவா கேசவா ஸ்ரீதரா ஓம்!

தேடினேன் தேவதேவா - தாமரைப் பாதமே!
வாடினேன் வாசுதேவா - வந்தது நேரமே!


ஞான வாசல் நாடினேன்!
வேத கானம் பாடினேன்!
கால காலம் நானுனை!
தேடினேன் தேவ தேவா - தாமரைப் பாதமே!

காதில் நான் கேட்டது - வேணு கானாம்ருதம்!
கண்ணில் நான் கண்டது - கண்ணன் பிருந்தாவனம்!


மாயனே நேயனே!
மாசில்லாத தூயனே!
ஆத்ம ஞானம்
அடைந்த பின்னும்
தேடினேன் தேவதேவா - தாமரைப் பாதமே!


குருவே சரணம்! குருவே சரணம்!
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
குருவே சரணம்! குருவே சரணம்!


ஞானத் திருமேனி காண வர வேண்டுமே!
சீதப் பூவண்ணப் பாதம் தொழ வேண்டுமே!
பக்தன் வரும்போது பாதைத் தடையானதேன்?
காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதேன்?


தாயாகித் தயை செய்யும் தேவா!
தடை நீங்க அருள் செய்ய வாவா!
நான் செய்த பாவம், யார் தீர்க்கக் கூடும்?
நீ வாழும் இடம்வந்து, நான் சேர வேண்டும்!

குருவே சரணம்! குருவே சரணம்!
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
குருவே சரணம்! குருவே சரணம்!

ராகவேந்திர ராகவேந்திர ராகவா! - குரு
ராகவேந்திர ராகவேந்திர ராகவா!
ராகவா! ராகவா! ராகவா! ராகவா!




பாடலைப் பிரிச்சி மேய்ஞ்சா, பல கருத்துக்கள் உள்ளடங்கி இருக்கும்!
குமரன் வந்து சொல்லட்டும்! சாம்பிளுக்கு ஒன்னு:

ஞான வாசல் நாடினேன்! வேத கானம் பாடினேன்!
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும் தேடினேன் தேவதேவா!


அதான் ஆத்ம ஞானம் அடைஞ்சாச்சே! அப்பறம் என்ன இன்னும் தேடினேன் தேடினேன்-ன்னு தேடுறது? - லாஜிக் இடிக்குதே-ன்னு பாக்கறீயளா? :)

அடுத்த வரியிலேயே விடையும் இருக்கு!
தேடினேன் தேவதேவா - தாமரைப் பாதமே! = திருவடிச் சரணம்! சரணாகதி!

என்ன தான் ஞான வாசல் நாடினாலும்,
வேத கானம் பாடினாலும்...
அவை, அவரவருடைய ஆத்ம அளவில் மட்டுமே=ஆத்ம சாஷாத்காரம்!

ஆனால் அவரவர் ஆத்மாவையும் தாண்டி...
அவரவர் ஆத்மாவுக்கு உள்ளேயும்....
அவரவர் ஆத்மாவுக்கு ஆதாரமாய்....
ஒன்னு இருக்கு!
அது ஆத்மாவுக்கு எல்லாம் ஆத்மா - அந்தராத்மா - பரமாத்மா!

என்ன தான் மாங்கு மாங்கு-ன்னு ஞான கர்ம யோகங்கள் செஞ்சாலும்...
அவை "நம் ஆத்மாவை" மட்டுமே நமக்கு உணர்த்திக் காட்டும்!
அதனால் தான், ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்...இன்னும் தேடினேன்-ன்னு பாடுறாரு!

ஆத்ம ஞானம் அடைஞ்ச பின்னால்?
அம்புட்டு தானா?
ஞான யோகம், கர்ம யோகம் தான் பரமா? முடிஞ்ச முடிவா?
இல்லை!
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்...தேடினேன் தேவ தேவா....எதை?

தாமரைப் பாதமே!
தாமரைப் பாதமே!

சரணம் சரணம் என்னும் சரணாகதி! அதுவே நமக்கு கதி!

ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்...அந்த ஆத்மா "தான் தான்"-ன்னு அப்படியே தான் இருக்கும்!
அதை அவனுக்குச் சமர்ப்பணம் பண்ணி விடுவது தான் = ஆத்ம சமர்ப்பணம் = சரணாகதி!

என்ன தான் ஞான வாசல் நாடினாலும்...வேத கானம் பாடினாலும்...தேடிக்கிட்டே தான் இருப்போம்...
ஆத்ம ஞானம் "அடைந்த பின்னும் தேடினேன்"...

தேடினேன் தேவதேவா
தாமரைப் பாதமே!
தாமரைப் பாதமே!!

Wednesday, May 05, 2010

கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே !!

இடம்: பெங்களூர்
நேரம்: அழகிய மதிய நேரம்..

காண்பவை: கணினி, கடிகாரம் ஒரு மணி 35 நிமிடம் காட்டிக் கொண்டிருந்தது. பிஸி பேளா பாத்-ம், தயிர் வெங்காயமும்.. கொஞ்சம் காராபூந்தி சேர்த்து.. உண்ட மயக்கம் உண்மையான தொண்டருக்கும் உண்டு என்பதை உணர்த்தும்படி இராகவ் தூங்கிக் கொண்டிருக்கிறன்.


திடீரென்று முதுகில் ஒரு அடி விழுகிறது. டொம்ம்ம்ம். திடுக்கிட்டு விழிக்கும் ராகவ்,

ராகவ்: எவ அவ ??

தலையில் மலர் கிரீடம், கையில் குழலுடன் உள்ள ஒரு கபடதாரி: எவன் அவன்னு கேளுப்பா..


ராகவ்: சரி சரி.. இப்போ என்ன விஷயம்.. ஏதாவது கஸ்டமர் மீட்டிங்கா..

கபடதாரி: நான் உனக்கு கஸ்டமரா.. கஷ்டம்டா முருகா!!

ராகவ்: முருகாவா??? கண்டுபிடிச்சிட்டேன்.. கே.ஆர்.எஸ் தானே நீங்க..

கபடதாரி: சே! கண்ணன் வேஷம் போட்டாலும் கண்டுபிடிச்சுடுறாங்கப்பா..

ராகவ்: ஹி ஹி.. கண்ணன் வேஷம் போட்டா போதுமா.. ராதா ராதான்னு சொல்லிருந்தாலும் நம்பியிருப்பேன்.. முருகா முருகான்னு ஒரு வார்த்தை போதுமே..

கபடதாரி: சரி சரி.. சும்மாதானே இருக்க.. கண்ணன்பாட்டுல ”என்னை”க் கண்டதைப் பற்றி ஒரு பாடல் எழுதேன்..

ராகவ்: அப்படியே ஆகட்டும்.. என் ஞான ஆசார்யரே!!..

கபடதாரி: ஸ்ஸ்ஸ்ஸ்.. முடியல..

ராகவ்: சரி.. பாடல் ஜேசுதாஸ் ஐயாவ பாடச் சொல்லட்டுமா..

கபடதாரி: ம்.. அவரும் இருக்கட்டும்.. அப்புடியே புதுசா ஏதாவது செய்யு.. நான் அடுத்ததா.. ராதாவை போய் பாட்டு போடச் சொல்லி டகால்ட்டி பண்ணணும்.. வரட்டா...

***

கண்ணனைக் கண்டு பலநாட்கள் ஆகிவிட்டதாம் இந்தப் பேதைக்கு.. யாரைக் கேட்பது?? எங்கு போய்க் கேட்பது?? நான் வளர்த்த மல்லிக் கொடியிடம் கேட்போம்.. அதுதான் என் உற்ற தோழி.. என் நிலைமையை கண்ணனுக்கு தன் வாசத்தின் மூலம் கொண்டு சேர்த்து விடும்.

என் மல்லிக் கொடியே எனக்காக தூது செல்வாயா!!.. என் பாடலை கேட்பாயா.


கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!
கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!

கண்மணி வண்ணனின் குழல் ஓசையைக் கேட்டாயோ!
கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!
கண்மணி வண்ணனின் குழல் ஓசையைக் கேட்டாயோ!
கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!

வெண்ணிலாவில் அவன் என்னுடன் களிக்கையில்!
கண்ணே கண்ணே என்று ஆவலுடன் அழைத்த!

கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!
கண்மணி வண்ணனின் குழல் ஓசையைக் கேட்டாயோ!
கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!

எண்ணமெல்லாம் நான் செய்கிறேன் என்றான்!
எண்ணமெல்லாம் நான் செய்கிறேன் என்றான்!
திண்ணம் உன்னை நான் செய்விடேன் என்றான்!

கண்ணிமை மூடினேன்ன்ன்ன்ன்ன்..
கண்ணிமை மூடினேன்.. லலிதா சோதரன்
கண்ணிமை மூடினேன்..லலிதா சோதரன்
கண்முன்னே இருந்தான் எங்கோ மறைந்தான்!

கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!
கண்மணி வண்ணனின் குழல் ஓசையைக் கேட்டாயோ!
கண்ணனைக் கண்டாயோ மல்லிக் கொடியே!

***
ஜனனி அவர்கள் பாடிய கர்னாடிக் ஃப்யூஷன்




ஜேசுதாஸ் ஐயாவின் தேமதுரத் தமிழில்,




Sunday, April 25, 2010

இளையராஜா/யேசுதாஸ்: கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்!

கண்ணன் பாட்டு மக்களே, எனக்கு ஒரு சந்தேகம்! தீர்த்து வைங்க!
இந்தப் பாட்டு கண்ணன் பாட்டு தானே?
"கண்ணனே" நீ வர-ன்னு தானே துவங்குது? :)

இளையராஜாவின் மிக அழகான மெலடிக்களில், இது என்றும் நிலைத்து நிற்கக் கூடியது! வயலினை வச்சிக்கிட்டே ஜால வித்தை காட்டுவாரு ராஜா என்பதற்கு இதுவும் ஒரு சரியான எடுத்துக்காட்டுப் பாடல்!

ராஜா-வின் வயலின் சாகசங்களோடு பாட்டின் கம்பீரத் துவக்கம் - Dont Miss! கூடவே மெல்லீசா ஒரு "டொக் டொக்" சத்தம்....
* பாட்டு ஆரம்பிக்கும் போதும் டொக் டொக்!
* அப்பறம் பாடல் முழுக்கவும் டொக் டொக் கேட்கும் பாருங்க!
அந்த டொக் டொக்-கையே உன்னிப்பா Follow பண்ணீங்கனா....
அதான் என்னோட காதல் துடிப்பு-ன்னு தெரிஞ்சீரும்! :))



(ஆண்குரல் - பச்சையில்; பெண்குரல் - கண்ணனுக்கு பிடிச்ச வயலெட்டில்! :)


காத்திருந்தேன்...

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் - ஜன்னலில் பார்த்திருந்தேன்!
கண்விழித் தாமரை பூத்திருந்தேன் - என் உடல் வேர்த்திருந்தேன்!
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் - மன்னவன் ஞாபகமே!
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் - மன்மத நாடகமே!
அந்திப் பகல், கன்னி மயில், உன்னருகே!
(கண்ணனே நீ வர)

நீலம் பூத்த ஜாலப் பார்வை - மானா? மீனா?
நான்கு கண்கள் பாடும் பாடல் - நீயா? நானா?

கள்ளிருக்கும் - பூவிது பூவிது!
கையணைக்கும் - நாளெது நாளெது?
பொன்னென மேனியும் - மின்னிட மின்னிட!
மெல்லிய நூலிடை - பின்னிடப் பின்னிட

வாடையில் வாடிய
ஆடையில் மூடிய
தேர்...நான்...
(கண்ணனே நீ வர)
பேச வேண்டும்! மெதுவா மெதுவா...

ஆசை தீரப் பேச வேண்டும் - வரவா? வரவா?
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் - மெதுவா! மெதுவா!

பெண் மயங்கும் - நீ தொட நீ தொட!
கண் மயங்கும் - நான் வர நான் வர
அங்கங்கு வாலிபம் - பொங்கிடப் பொங்கிட
அங்கங்கள் யாவிலும் - தங்கிடத் தங்கிட

தோள்களில் சாய்ந்திட
தோகையை ஏந்திட
யார்...?நீ....!
(கண்ணனே நீ வர)
தோள்களில் சாய்ந்திட...


படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
குரல்: யேசுதாஸ் & உமா ரமணன்
வரிகள்: வைரமுத்து
ராகம்: மலைய மாருதம்




தென்றலே என்னைத் தொடு படம் ஒரு வருஷம் மேல ஓடியது-ன்னு நினைக்கிறேன்! பாட்டுக்கும்-காதலுக்காகவே!
சேட்டன் யேசுதாஸோட mesmerizing காதல் குரல்!
உமா ரமணனும் நல்லா கம்பெனி குடுக்கறாங்க! (பூங்கதவே, கஸ்தூரி மானே-ன்னு நிறைய ஹிட் கொடுத்தவங்க உமா!)

ராகம்/மெட்டு எங்கேயோ கேட்டாப் போல இல்லை?
TMS பாட்டு ஞாபகம் வருதா? ஓராறு முகமும் ஈராறு கரமும்....தீராத வினை தன்னை தீர்க்கும்! எக்ஜாக்ட்லி!
அந்த முருகன் பாட்டு ராகமே தான், இந்தக் கண்ணன் பாட்டு ராகமும் கூட! :)
பூப்பூக்கும் மாசம் தை மாசம் என்ற பாட்டும் இதே மெட்டு தான்!

கண்ணா, உனக்கு, உன் பாட்டு பிடிச்சி இருந்தது தானே? :)

Sunday, December 27, 2009

கண்ணன் பாட்டிலே ஒரு மலையாளப் பாட்டு!

அன்பர்களுக்கும் அடியவர்க்கும், பதிவுலகில் பலநாள் கழித்து....அடியேன் வணக்கம்!

இன்று வைகுண்ட ஏகாதசி! (Dec 28, 2009)
மோட்ச ஏகாதசி என்றும் முக்கோடி ஏகாதசி என்றும் சொல்லப்படுவது!

பல இடங்களில் பலவாறு கொண்டாடப்பட்டாலும்,
திருவரங்கத்திலே தமிழ்த் திருநாளாகக் கொண்டாடப்படுவது! = இராப் பத்து!
திருவாய்மொழித் திருநாள்! எம்பெருமான், வடமொழி வேதங்களைச் சற்றே ஓரங்கட்டி, தீந்தமிழ்ப் பாசுரங்களை மட்டுமே இடைவிடாது கேட்கும் நாள்!

திருவாய் மொழிக்கு உருகாதார்
ஒருவாய் மொழிக்கும் உருகார்!



முற்றிலும் தமிழ்ப் பாட்டான கண்ணன் பாட்டிலே,
* கன்னடப் பாடல் - கிருஷ்ணா நீ பேகனே,
* தெலுங்குப் பாடல் - ஷீராப்தி கன்யககு,
* செளராஷ்டிரப் பாடல் - பகவத் நமமூஸ் மெல்லேத் ஜனோ
* வடமொழிப் பாடல் - பாவன குரு/அமர ஜீவிதம்,
* இந்திப் பாடல்கள் - பஸோ மொரே நை னன மேம் நந்தலாலா
* ஆங்கிலம் - The Child in Us (Enigma)
என்று எப்போதாவது ஒன்னு ரெண்டு இதர மொழிப் பாடல்களும் வரும்!

அந்த வரிசையில், இன்று மிகவும் ஏகாந்தமான மலையாளப் பாடல் ஒன்று!
கேட்டுத் தான் பாருங்களேன்!
பொருள் சுமாரா உங்களுக்கே புரிஞ்சிரும்-ன்னு நினைக்கிறேன்! மலையாளமும் தமிழும் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவை அல்லவா?
எந்தா இன்னும் ஓர்க்குன்னு? யான் பறைஞ்சது மனசுலாயோ? ஈ நாள் வரை தமிழ் பாஷையிலே மட்டும் கானம் கழிஞ்சோ? :)

குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல்
வழிகாட்டுக வழிகாட்டுக நாராயண ரூபம்!

இங்கே கேட்டுக் கொண்டே பாடலில் கரையுங்கள்!



குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும்போல்
வழிகாட்டுக வழிகாட்டுக நாராயண ரூபம்!


தளரும் போல் ஆத்மாவாம் பஷூவே நின் நாவில்
அம்ருதம் போல் ஊஊறிடுக நாராயண நாமம்!


நெய்யுண்ணு பீதாம்பரம் ஈ சந்தயகள் ராவாம்
பையெல்லாம் வார்க்குன்னு பால் மாதுரி அல்லோ?

ஓடக்குழல் ஊதுன்னு காடெல்லாம் பகவான்
சுட்டுன்னுரு பீலி திருமுடியோ மழை மேகம்?


கருடன் போல் ஆகாசம் சிறகார் நீடும்போல்
வனமாலைகள் தீர்க்குன்னு மழை வில்லுகள் இப்போல்!

நிறக் கண்ணால் காணுன்னே எங்கெங்கும் சுவாமி
குருவாயூர் அப்பா நின் கிருஷ்ணாட்டம் மாத்ரம்.....

நின் கிருஷ்ணாட்டம் மாத்ரம்
நின் கிருஷ்ணாட்டம் மாத்ரம்



பாடல்: குருவாயூர் ஏகாதசி
தொகுப்பு (Album): வனமாலா
குரல்: K.J.யேசுதாஸ்
வரிகள்: ரமேசன் நாயர்
இசை: P.K.கேசவன் நம்பூதிரி


"குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல்"

= அது என்னங்க "குருவாயூர்" ஏகாதசி? "வைகுந்த" ஏகாதசி-ன்னு தானே எல்லா இடத்துலயும் சொல்லுவாங்க?
கேரளத்தில் மட்டும், அனைத்து ஆலயங்களிலும், ஏன் "குருவாயூர் ஏகாதசி"-ன்னு சொல்லணும்? இத்தனைக்கும், குருவாயூர் பாடல் பெற்ற தலம் கூடக் கிடையாதே! :)

= எல்லாத்துக்கும் ஒரு யானை தாங்க காரணம்!
= வாரணம் தான் காரணம்!
வேண்டுமானால் இங்கே சென்று அந்த தனிக் கதையை வாசித்துக் கொள்ளவும்!

அது சரி, கண்ணன் பாட்டிலே மலையாளப் பாட்டு எப்படி இருந்துச்சி? ஓடக்குழல் ஊதுன்னு காடெல்லாம் பகவான்-ன்னு இருந்துச்சா? :)

இது போன்ற முயற்சிகளை, பன் மலர் மாலைகளை,
கண்ணன் பாட்டு அன்பர்கள் தொடர்ந்து செய்ய வேணுமாய்,
பணிவுடன் கேட்டு, அடியேன் அமைந்து விடுகிறேன்!

பயந்த தனி வழிக்குத் துணை,
வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!
பயந்த தனி வழியில்.....
வழிகாட்டுக வழிகாட்டுக நாராயண நாமம்!!

தளரும் போல் ஆத்மாவுக்கு...
வழிகாட்டுக வழிகாட்டுக நாராயண நாமம்!! அவன் நாராயண நாமம்!!

Thursday, June 26, 2008

100: கிருஷ்ணா நீ பேகனே, வாராய்! - மலைநாடான், குமரன், KRS குரலில்!

கண்ணன் பாட்டு வலைப்பூவின் 100-வது பதிவு இதோ! 100-ஆம் பாடல், மிகவும் பிரபலமான பாடல்!
கிருஷ்ணா நீ பேகனே, பாரோ!
தமிழ் வடிவில், கிருஷ்ணா நீ வேகமாய், வாராய், என்று தந்துள்ளோம்!
மங்கள இசையுடன் துவங்கலாமா? ஷேக் சின்ன மெளலானா அவர்கள் இதே பாட்டை வாசிப்பதை இங்கு கேட்டு மகிழுங்கள்!

இன்னிக்கு பல பதிவர்களின் குரலை எல்லாம் ஒன்னாக் கேக்கப் போறீங்க! இது நாள் வரை அவர்கள் எழுத்தை மட்டுமே படித்த பலருக்கும், இன்னிக்கி பதிவர்களின் குரலைக் கேக்கப் போற அபாயம்! எனவே எச்சரிக்கை! நில், கவனி, பின்னூட்டு! :-)

கிட்டத்தட்ட அதே மெட்டில், தமிழாக்கி உள்ளேன்! அந்தத் தமிழை, மலைநாடான் ஐயாவும், குமரனும் அடியேனும் பாடி உள்ளோம்! இந்த நூறாம் பதிவை, வழி நடத்திச் செல்லப் போவது, நம் ஷைலஜா அக்கா! அவர் பாட்டுக்குத் தரும் முன்னுரை இதோ! Over to Shylaja!



வாராய் நீ வாராய்!- இந்த திரைப் பாடல் எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் இப்படிக் கடவுளை வாராய் நீ வேகமாக வாராய் என்றார் ஒரு பக்தர்! யார் அவர்?

அதற்கு முன், கண்ணனைப் பெரியாழ்வார் எனும் பெரும்பக்தர் எப்படி அனுபவித்துப் பாடினார் என்பதைப் பார்ப்போமா?
கண்ணன், அழகான குழந்தை வடிவோடு பெரியாழ்வாருக்கு சேவை தந்தாராம். அந்த அழகான குழந்தையின் முகம் பார்த்ததும், குழந்தைக்குத் தொட்டில் போட அவருக்கு ஆசை வந்ததாம்.

மாணிக்கங்கட்டி வயிரம் இடைகட்டி ஆனிப்பொன்னால் செய்த வண்னச் சிறுதொட்டில் என்று பாட்டில் அதைச் செய்தார்!
தொட்டிலில் கண்ணனைக் கிடத்தி அவனுடைய பாதக் கமலங்கள் காண வாரீரே என்று பாசுரம் பாடுகிறார்! - 'வையம் அளந்தானே தாலேலோ!' வையம் அளந்த கால் அது!

முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும் தத்திப் பதிந்துத் தலைப் பெய்தாற்போல் எங்கும் பத்து விரலும் மணிவண்னனின் பாதங்கள், ஒத்தி இருந்தவா காணீரே!
ஒத்தார் போலிரூக்கும் விரல்கள்! அந்தப் பாத அழகு! கண்ணனின் திருவடியில் மனம் சரணடைவதை பெரியாழ்வார் இப்படிச் சொன்னார் என்றால் கண்ணன் திருவடி எண்ணுக மனமே என்கிறார் பாரதியும்.

கிருஷ்ணா நீ பேகனே-விலும், அந்த திருவடியைத் தான் வியாசராயர் தன் பாடலில் முதலில் சொல்கிறார் பாருங்கள்!
வியாசராயர் பெரிய மகான். மத்வ மடாதிபதி!
மன்னர் கிருஷ்ண தேவராயரின் அரசவையில் மந்திரியாக விளங்கியவர். ஒரு சமயம் குஹு யோகத்தின் பலனாக மன்னரின் உயிருக்கு ஆபத்து நேர்ந்த போது வியாசராயரே சிம்மாசனம் ஏறி மன்னரின் உயிரைக் காப்பாற்றினாராம்.

"ஸ்ரீக்ருஷ்ண" என்னும் கன்னட முத்திரையுடன், கன்னட மொழியில் பல பதங்களை இயற்றி உள்ளார். இந்த வியாசராயரிடம் தீட்சை பெற்றவர் தான் புரந்தர தாசர்.
வியாசராயா எழுதிய கன்னட மொழிப்பாடல் இந்தக் கிருஷ்ணா நீ பேகனே!
நாமெல்லாம் கடவுளை நோக்கிச் செல்ல விரும்புவோம்! ஆனால் இவரோ க்ருஷ்ணனை வா வேகமாய் வா என்று அன்புக் கட்டளையிடுகிறார்.

அவருடைய மனக்கண்ணில்....


முனியே நான்முகனே முக்கண்ணப்பா!
நம் கண்ணன் குழந்தைக்கு, பெருமாளாகவும்-சிவசக்தியாகவும் அலங்காரம்!



என்னப்பன், பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், தன்னொப்பார் இல்லப்பன்! - அவனே நம் கண்ணன்!
அவனுக்குப் பாடிக் கொடுத்தோம் நற் பாமாலை!
பூமாலை சூடிக் கொடுத்தோமைச் சொல்லு!

மலைநாடான் பாடுகிறார்!



குமரன் பாடுகிறார்!



கேயாரெஸ் குரலில்!



கிருஷ்ணா நீ பேகனே பாரோ
கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!

பேகனே பாரோ முகவன்னு தோரோ
வேகமாய் வாராய், திருமுகம் தாராய்!
(கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்!)

காலாலந்திகே கெஜ்ஜே நீலாத பானவுலி
நீலவர்ணனே நாட்யம் ஆடுத பாரோ

காலிலே கிண் கிணிகள்! கையில் மணிக் கங்கணங்கள்!
நீல வண்ணக் கண்ணா, நடனம் நீ ஆடி வாராய்!

(கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)

ஒடியல்லி ஒடிகெஜ்ஜே பெரலல்லி ஒங்குர
கொரலல்லி ஹாகித வைஜயந்தீ மாலே

இடுப்பிலே ஒட்டியானம், விரல்களில் மோதிரங்கள்
கழுத்திலே தவழ்ந்திடும் வைஜயந்தி வனமாலை!

(கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)

காசி பீதாம்பர கையல்லி கொலாலு
பூசித ஸ்ரீகந்த மையல்லோ லாகம்மா

காசிப் பீதாம்பரமும் கையில் புல்லாங் குழலும்
பூசிய சந்தனம் உன், மேனி எங்கும் மணக்க

(கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)

தாயிகே பாயல்லி ஜகவன்னு தோரித
ஜகதோத் தாரக நம்ம உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா

வாயினில் வையத்தைத் தாயிற்கே காட்டியவா
உலகத்தின் காவலா, நம்ம உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா

(கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)

ராகம்: யாமுன கல்யானீ
தாளம்: சாபு
வரிகள்: வியாசராய தீர்த்தர்
மொழி: கன்னடம்



Back to Shylaja...

வியாசராயரின் மனக்கண்ணில்....
குழந்தைக் கண்ணன் யசோதை வீட்டின் கூடத்தில் தவழ்ந்து ஓடிக் கொண்டிருக்கிறான்.
குழந்தைக்கு எத்தனை சுறுசுறுப்பு! ஓரிடத்தில் இல்லாமல் தவழ்ந்து நகர்ந்து நீஞ்சிச் செல்கிறது.
வியாசராயரால் அவனைப் பிடிக்க முடியவில்லை. அந்தத் திருமுகத்தை அருகில் பார்க்க ஆவலாகிறார்! ஆகவே க்ருஷ்ணா நீ வேகமாய் வா அப்பா என்று கெஞ்சுகிறார்.

வந்தால் மட்டும் போதாதாம்! வேகமாய் நீ வந்து உன் திருமுகத்தைக் காட்டுவாய் என்கிறார்.
முகம் கண்டவுடனேயே மனம் கண்ணனின் திருவடிக்கே செல்கிறது. அங்கே காலில் கொலுசைப் பார்க்கிறார்!
காற்சலங்கையை இங்கு முதலில் குறிப்பிடுவது நம் தாயகத்தில்!
இதற்கு ஓரு கதை உண்டு! சதங்கை மணிஒலி அதிர்ஷ்ட வரவின் அறிகுறி. அந்த ஒலி கேட்டு கெட்டவைகள் ஓடிவிடுமாம்.

கைகளில் நீலமணி கொண்ட கங்கணங்கள் பிடித்துக் கிடக்கிறதாம்..இடுப்பில் ஒட்டியாணம்! கையில் மோதிரம்!
அந்தக் கையால் அருளோ அன்றி குட்டோ அதே பாக்கியம் அல்லவா?

வைஜயந்தி மாலை! அது பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமனின் வெற்றி மாலை!
பக்தனின் இதயத்திலும் அதே வெற்றி உணர்வு ,அதைப் பார்த்த மாத்திரத்தில் வந்து விடாதோ?

காசி! உலகின் பழைய நகரம்! புண்ணீய நகரம். காசிக்கு பனாரஸ் என்றும் பெயர் உண்டு.
பனாரஸ் பட்டு உசத்தியானது, அதைக் கடவுளுக்கு அணியவைத்து அழகு பார்க்கிறார். சிவப்பு நிறப்பட்டு அண்ணலுக்கு உகந்த உடை. அந்த சிவந்த ஆடை, தன் சிந்தையைக் கவந்ததை திருப்பாணாழ்வாரும் அனுபவித்துப் பாடி இருக்கிறார்.

அடுத்து புல்லாங்குழல்!அதன் இன்னிசை ஒலி காற்று வெளியில் அமைதியை பரப்பி மனதை வருடி அங்கே தூய்மையை நிரந்தரமாக்குவது!

சந்தன மரம்! தியாகத்தின் மறுவடிவம். தன்னை அழித்து மணம் தருவது.
பக்தியின் உச்சமே தன்னை மறப்பதும் இழப்பதும் தானே? அதற்கு சந்தனத்தை விட வேறு உதாரணம் சொல்லவும் இயலுமோ? அத்தகைய சந்தனம் மணக்கும் மேனி அழகன்,கண்ணன்!

வாயில் தன் தாயினுக்கு உலகத்தையேக் காட்டியவன் !
உலகத்தைக் காத்து ரட்சிக்கும் நம் உடுப்பி ஸ்ரீகிருஷ்ணனே!

வாராய் நீ வேகமாக வாராய்! - எங்களின்
நூறாவது பதிவிற்கு வாராய்!
தாராளமாய் அருள் வெள்ளம், ஏராளமாய் இங்கு வரும்
பாரோர்க்குத் தாராய்!
சர்வம் க்ருஷ்ணார்ப்பணம்!
- திருவரங்கப்ரியா (எ) ஷைலஜா


சக பதிவர்களின் வாழ்த்துச் சேதி இதோ:

மதுரையம்பதி (எ) மெளலி அண்ணா:




உடுப்பி-ன்னா கிருஷ்ணன் மட்டுமா? உடுப்பி ஓட்டலும் கூடத் தான்! :-)
சுடச்சுடத் தோசை! அம்பியின் ஆசை!

அம்பி:




மக்களே, கண்ணன் பாட்டை இன்னும் பாங்காகக் கொண்டு செல்ல உங்கள் யோசனைகளை அறியத் தாருங்கள்!
இது நாள் வரை, நீங்கள் அத்தனை பேரும் காட்டி வந்த அன்புக்கும், ஆதரவுக்கும், எங்கள் பத்து பேரின் மகிழ்ச்சியையும் நன்றியையும் ஒரு சேரத் தெரிவித்துக் கொள்கிறோம்!

என்றும் வேண்டும், உங்கள் இன்ப அன்பு!
- இப்படிக்கு, கண்ணன் பாட்டுக் குழுவினர்
* தி. ரா. ச.(T.R.C.)
* வெட்டிப்பயல்
* மடல்காரன்
* மலைநாடான்
* Raghavan
* "முருகனருள்" கோ.இராகவன்
* dubukudisciple
* குமரன் (Kumaran)
* ஷைலஜா
* kannabiran, RAVI SHANKAR (KRS)




Colonial Cousins, ஹரிஹரன் மற்றும் லெஸ்லி லூயிஸ் சேர்ந்து, அனைத்துச் சமய நல்லிணக்கம் வேண்டிப் பாடுகிறார்கள்! இடையிடையே அருமையான ஆங்கில வரிகள் ! இதோ!
So Come down and help us, Save all the little ones
They need a teacher, And you are the only one
Come back as Jesus, Come back and save the world
We need a teacher, and You are the only one
Come back as Rama, Forgive us for what we've done
Come back as Allah, Come back for every one.......



ஒரே நிறுத்தக் கடையாக (One Stop Shop)
இதோ...அதே பாடல், பலப்பல வடிவங்களில்!

* சாக்சபோன்-கத்ரி கோபால்நாத்
* புல்லாங்குழல்-என்.ரமணி
* வீணை-காரைக்குறிச்சி சகோதரர்கள்
* Fusion

* ஜான் ஹிக்கின்ஸ்
* மகராஜபுரம் சந்தானம்
* எம்.எல்.வசந்த குமாரி
* யேசுதாஸ்
* சித்ரா
* இந்துஸ்தானி இசையில் ஹரிஹரன்...


கண்ணனின் இனிமை காசினிக்கே இனிமை சேர்க்கட்டும்!
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!



(கண்ணன் பாட்டு வலைப்பூவின் அன்பர், திரு. மலைநாடான் ஐயாவின் அன்புத் தந்தையாருக்கு
இவ்வமயத்தில் அஞ்சலிகள் செலுத்தி, அவர் இன்னுயிர் அமைதி பெற, இறைவன் எம்பெருமானை வேண்டிக் கொள்கிறோம்!)

Friday, May 23, 2008

93. யேசுதாஸ் குரலில், திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே!

பாடகர் யேசுதாஸ் பற்றியும் அவர் குரலில் குழைவு பற்றியும் பெரிதாக விளக்கித் தான் சொல்லவேண்டும் என்றில்லை! முருகன் பாடல்களில் எப்படி டி.எம்.எஸ் குழைவாரோ, அப்படிக் கண்ணன் பாடல்களில் யேசுதாஸ் குழைவார்!

பிரபந்தம், திருப்புகழ் போன்ற சில சந்தத் தமிழ் பாடல்களைப் பாடும் போது மட்டும் அவருக்கு உச்சரிப்பு கொஞ்சம் நாட்டியம் ஆடும்! :-)
மற்றபடி குருவாயூர் கண்ணனையும் உடுப்பி கண்ணனையும் யேசுதாஸ் அழைத்தால், கண்ணன் ஓடியே வந்திடுவான்!....கிருஷ்ணா நீ பேகனே...பாரோ!

நம்பூதிரிகள் வேண்டுமானால் அவரைத் தடுக்கலாம்! நம்புவோர் மனங்களில் தடுக்க இயலுமா? கண்ணன் மதங்களைக் கடந்து, மனங்களில் படர்வதை யார் தான் தடுக்க முடியும்?
இந்தப் பாடலைக் கேட்டு விட்டு, நீங்களே சொல்லுங்க! - சுவாமி ஐயப்பன் என்னும் படத்துக்காக, யேசுதாஸ் பாடுவது! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையில், கவியரசர் கண்ணதாசன் எழுதிய அழகிய இசைப்பாடல்!

ஒவ்வொரு வரியின் முடிவிலும் ஸ்ரீமன் நாராயணா என்று வரும்! அப்படியே யேசுதாஸ், பெருமாளிடம் டைரக்ட் லைன் போட்டுப் பேசுவது போலவே இருக்கும்! :-)

பாடலை இங்குக் கேட்கலாம்
இங்கே தரவிறக்கியும் கொள்ளலாம்!

SwamiAyyappan-Thir...




திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா - அங்கு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா

(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

உலகினைப் பாய் போல் கொண்டவன் நீயே ஸ்ரீமன் நாராயணா - அன்று
உரலுடன் நடந்த கண்ணனும் நீயே ஸ்ரீமன் நாராயணா
இரணியன் அகந்தை அழித்தவன் நீயே ஸ்ரீமன் நாராயணா - அன்று
இந்திர வில்லை முறித்தவன் நீயே ஸ்ரீமன் நாராயணா

(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே அறியாயோ நீயே - அவள்
கொடுமையை ஒழிக்க மறந்து விட்டாயோ ஸ்ரீமன் நாராயணா
தேவர்கள் உந்தன் குழந்தைகள் அன்றோ மறந்தாயோ நீயே - உன்
தெய்வ முனிவரைக் காப்பதற்கென்றே வருவாயோ நீயே

(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

தோளில் அந்தச் சாரங்கம் எடுத்து வர வேண்டும் நீயே
கணை தொடுத்திட வேண்டும் அரக்கியின் வாழ்வை அழித்திடுவாய் நீயே
அனந்த சயனத்தில் பள்ளி எழுந்து வாராய் திருமாலே - உன்
அன்பரை எல்லாம் துன்பத்தில் இருந்து காப்பாய் பெருமாளே

(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

ரதங்கள் படைகளென எழுந்து எழுந்து இன்று வீறுடன் வாருங்கள்
நாராயணன் என்னும் தலைவனின் துணையால் போர்க்களம் வாருங்கள்
வானம் இடிபடவும் பூமி பொடிபடவும் வேல் கொண்டு வாருங்கள் - இனி
வருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம் தேவர்கள் வாருங்கள்

(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

ஸ்ரீமன் நாராயணா
ஸ்ரீபதி ஜெகன்னாதா
வருவாய் திருமாலே - துணை
தருவாய் பெருமாளே


படம்: சுவாமி ஐயப்பன்
குரல்: KJ யேசுதாஸ்
வரிகள்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்




அடுத்த வாரம், கண்ணன் பாட்டில், கண்ணன் பாட்டு வலைப்பூ குழுவினர் அனைவரும் பங்கேற்கும் சிறப்புக் கச்சேரி! என்னன்னு இந்நேரம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்!
7 Runs to Century! :-)
Boys & Girls! Ready for Field Strategy! Get, Set, Go! :-)

Monday, April 21, 2008

என்னெஞ்சில் பள்ளி கொண்டவன்...



ஓம் நாராயணாய நம:
ஓம் நாராயணாய நம:
ஓம் நாராயணாய நம:

என்னெஞ்சில் பள்ளி கொண்டவன் ஸ்ரீ ரங்கநாயகன்
என்னெஞ்சில் பள்ளி கொண்டவன் ஸ்ரீ ரங்கநாயகன்
சயனத்தில் ஆதி சேஷன் மேலே
திருவடி திருமகள் மடி மேலே
பூலோக நாயகன் ஸ்ரீ ரங்கன் (என்னெஞ்சில்)

சயனிக்கும் பெருமாளின் தொப்புள் கொடி
கமலத் தொப்புள் கொடி மேல் ப்ரம்ஹன் அமர்ந்த படி (சயனிக்கும்)
உலகத்தின் உயிர்களைப் படைத்த படி
அப்படைப்பினைத் திருமால் காத்தபடி (உலகத்தின்)
அண்டம் பகிரண்டம் அதைக் காக்கும் அவன் கோதண்டம்
விண்ணையும் மண்ணுலகையும் அளக்கும் அவ்வாமனனின் பாதம் (அண்டம்)
ஹரி ஹரி ஹரி என தினம் ஸ்மரி
ஹரி ஹரி ஹரி என தினம் ஸ்மரி
நான் வணங்கிடும் இறைவனோ சங்கு சக்ர தாரி (என்னெஞ்சில்)

திருப்பதியில் எழுந்தருளும் திருமாலும் நீயே - உன்
திருமார்பினில் அமர்ந்திருப்பது பத்மாவதி தாயே (திருப்பதியில்)
உடுப்பியினில் தவழ்கின்ற ஸ்ரீ க்ருஷ்ணன் நீயே - உன்
அருள் வேண்டி நிற்கின்றேன் நான் உந்தன் சேயே (உடுப்பியினில்)
நெறியையும் அற வழியையும் எமக்குணர்த்த பல அவதாரம்
எடுத்தாய் எடுத்துரைத்தாய் அதுவே வாழ்வின் ஆதாரம் (நெறியையும்)
அருள் தரும் தேவா வரம் தர வா வா
அருள் தரும் தேவா வரம் தர வா வா
மூவுலகையும் ஆள்கின்ற த்ரிவிக்ரம ரூபா (என்னெஞ்சில்)

இயற்றியவர்: சேலம் ஈஸ்வர்
இராகம்: கல்யாணி
தாளம்: ஆதி

இந்தப் பாடலை தன் கந்தர்வ கானக் குரலில் ஜேசுதாஸ் பாடியதைக் கேட்க இங்கே அழுத்தவும்.

Thursday, January 17, 2008

84. முருகனுக்கு மட்டுமா? கண்ணனுக்கும் காவடி எடுக்கறாங்க டோய்!

காவடி-ன்னாலே அது முருகனுக்கு மட்டும் தானே! அது எப்படிடா கண்ணனுக்குப் போயி எடுப்பாங்க? எங்கிட்டு எடுப்பாங்க-ன்னு தானே கேக்கறீங்க! மேலே படிங்க! தமிழ்க் கடவுளுக்குக் காவடி எடுக்கும் வழக்கம், தமிழ் மக்களிடையே காலம் காலமாக வந்த ஒன்று! - தெரிஞ்சது தான்!

சரி, தமிழ்க் கடவுள் யாரு? - முருகப் பெருமான்! - மிகவும் சரியான விடை! ஆனா கேள்விக்குண்டான எல்லா விடைகளையும் சொன்னாத் தான் மதிப்பெண்ணு, மதிப்பொண்ணு எல்லாம் கொடுக்கப்படும் :-) இன்னொரு தமிழ்க் கடவுள் யாருன்னும் சொல்லுங்க!

223

பழந்தமிழ் மக்கள் வணங்கிய இரு பெரும் தெய்வங்கள் சேயோன், மாயோன்!
குறிஞ்சிக் கடவுள் = சேயோன் = முருகன் = பெருமான்
முல்லைக் கடவுள் = மாயோன் = கண்ணன் = பெருமாள்
மற்ற திணைகளான மருதம், நெய்தற், பாலைக்கு எல்லாம் தனித்தனித் தெய்வங்கள் இருந்தாலும், பெரும் தெய்வங்களாக எல்லா இலக்கியங்களிலும் பேசப்படுவது இந்த மாயனும், சேயனும் மட்டுமே!

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் முதற்கொண்டு, சிலப்பதிகாரம் முதலான காப்பியங்கள், பிற்கால இலக்கியங்கள் - என்று எல்லாவற்றிலும் இந்த இருவரின் ஆளுமை அதிகமாகத் தான் இருக்கு!
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
என்பது தொல்காப்பியம்! சிலப்பதிகாரத்திலும் விழாக் காலங்களில் இவர்கள் இருவரின் கோயில்களில் நடக்கும் வழிபாடு பற்றிச் சிறப்பாகப் பேசப்படுகிறது! ஒருவேளை மக்கள் அதிகம் புழங்கிய இடங்களாகக் குறிஞ்சியும் முல்லையும் இருந்திருக்கலாம்; அதனால் தானோ இவர்கள் மட்டும் இத்தனை பெரிதாகப் பேசப்படுகிறார்கள்?

ஆக தமிழ்க் கடவுள் என்றாலே அது மாயோனும், சேயோனும் ஆகிய இந்த இருவருமே தான்!
நண்பர் ஜிராவின் உதவியுடன், இது பற்றித் தனி ஆராய்ச்சிப் பதிவாகப் பின்னொருகால் இடுகிறேன்!
இராம.கி ஐயாவையும் சில பாடல்களுக்குப் பொருள் கேட்டுத் தெளிய வேண்டும்! இன்னிக்கி காவடி மேட்டருக்கு மட்டும் வருவோம்!


சின்ன வயசுல (மூனாங் கிளாஸ்-னு நினைக்கிறேன்) என்னைய திருப்பதிக்குக் கூட்டிக்கிட்டு போயிருக்காய்ங்க வூட்டுல!
விளையும் பயிர் தான் முளையிலேயே தெரியுமாமே! சரியான டகால்டி பார்ட்டின்னு அப்பவே என்னை முடிவு கட்டிட்டாங்களாம்! :-)

ஏன்னா....திருப்பதியில நான் அரோகரா அரோகரா-ன்னு கூவிக்கிட்டு இருந்தேனாம்!
வர்ற வழியில, திருத்தணியில் ஹால்ட்டு! அங்கிட்டு கோவிந்தா கோவிந்தா-ன்னு கோஷம் போட்டுக்கிட்டு இருந்தேனாம்! நான் கல்லூரி லெவலுக்கு வந்த பின்னும் கூட, இதச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பாங்க எங்க மறைந்த ஆயா!(பாட்டி)

நான் மட்டும் தான் இப்படி டகால்ட்டி பேர்வழின்னு நெனைக்கறீங்களா? நம்மள விட ஒருத்தர் செம டகால்ட்டியா இருக்காரு!
ஊத்துக்காடு வேங்கட கவி-ன்னு ஒருத்தரு! அழகான பல தமிழிசைப் பாடல்களை எல்லாம் கொடுத்திருக்காரு! அலைபாயுதே கண்ணா பாட்டு அவர் எழுதினது தான்! ஏ.ஆர். ரஹ்மான் ராயல்டி ஏதாச்சும் கொடுத்தாரான்னு தெரியலை! அவரு கண்ணன் மேலே காவடிச் சிந்து பாடி இருக்காரு!

பொதுவா காவடிச் சிந்து-ன்னா அது முருகனுக்குத் தான்!
காவடி எடுக்கும் களைப்பு தெரியாம இருக்க, வழிநடைப் பாடலா இதைப் பாடுவாங்க! செஞ்சுருட்டி இல்லீன்னா சிந்து ராகத்தில் இருக்கும்! சும்மா பாட்டைக் கேட்டாலே போதும்,
தையத் தையத் தக்கத் தானா - திமி
தையத் தையத் தக்கத் தானா -ன்னு கால்கள் தானாவே ஆடும்!
அப்படி ஒரு அருமையான காவடிச் சிந்தை, கண்ணபிரான் மேல் பாடி இருக்காரு இந்த ஊத்துக்காட்டுக் கவி!
வாங்க...இன்னிக்கி கண்ணன் பாட்டுல, கண்ணனுக்குக் காவடி எடுப்போம்! கண்ணான கண்ணனுக்கு அரகரோகரா!:-)


மேலே மலேசிய பத்து மலைக் காவடிய உத்துப் பாருங்க! என்னாத் தெரியுது? :-)



எது பிடிச்சிருக்கோ, அதைக் கேட்டுக்கோங்க! என் தெரிவு அருணா சாய்ராம்! தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் நச்சரிப்பு பண்ணாலும், இவங்க சும்மா கும்மறாங்க! காவடி-ன்னாலே கும்ம வேணாங்களா? :-)
யேசுதாஸ் பாடும் காவடிச் சிந்து
அருணா சாய்ராம்
நித்ய ஸ்ரீ பாடுவது
பம்பாய் சகோதரிகள்

கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்
தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக்
கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென
தரமான குழலிசை கேளும் - போன
ஆவி எல்லாம் கூட மீளும்!

(கண்ணன்)

சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல்
தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல
துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென
துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ்
சொல்லிச் சொல்லி இசைபாடும்!

(கண்ணன்)

கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை - என்று
கண்டதும் வண்டொன்றும் வர்லை
இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு
காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள்
கண்ணன் அன்றி வேறு இல்லேன்!
(கண்ணன்)

தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் - என்ன
செளக்கியமோ என்று கேட்கும் - அட
மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ - மாதவனின்
முத்து முடி தனில் சேர்வோம் - அங்கே
மெத்த மெத்தப் பேசி நேர்வோம்!

(கண்ணன்)



கீழே ஒருத்தரு இந்தப் பாட்டுக்கு நாட்டியம் ஆடறாங்கப்பா! சும்மா கெடைச்சுது யூ-ட்யூப்பில்! சுட்டுப் போட்டுட்டேன்!

ஷைலஜாவுக்குப் புத்தாண்டு சபதம்! அப்புறம் அம்பிக்கு 2007 இல் புடிச்ச பதிவு! சீனா சாருக்கு மொக்கைச் சரம் பதிவு! - எல்லாம் எக்கச் சக்கமாப் பாக்கி இருக்கு!
சீனா சார் - இந்தப் பதிவை எல்லாம் ப்ளீஸ், மொக்கையில் கணக்கு எடுத்துக்க மாட்டீங்களா? :-)


இன்னிக்குத் தைக் கிருத்திகை-யாம்ல! திராச முருகனருள்-ல பாட்டு போட்டுருக்காரு! இங்கிட்டு கண்ணனுக்குக் காவடி எடுத்துட்டு, அங்கிட்டு முருகனுக்கு ஒரு கும்புடு போட்டுட்டு வந்துருங்க!

Thursday, October 25, 2007

70. வாணி ஜெயராம்: கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்!

அன்னிக்கி நம்ம ஜிராவுடன், ஜிடாக்கில், ஜிலுஜிலு என்று சாட்டிக்கிட்டு இருந்தேன்;
ஏண்ணா......முருகனருள் ராகவன்-னு போர்டு போட்டுக்குனு,
கண்ணன் பாட்டுத் திண்ணையில காலாற உட்காந்துகிட்டு இருக்கீக!
நீங்க கண்ணன் பாட்டுல பதிவு போட்டு எம்புட்டு நாள் ஆச்சுது? கொஞ்சம் எட்டிப் பாருங்கோண்ணா என்றேன்!

மனுசன் நெசமாலுமே எட்டிப் பார்த்தாரு! எட்டுமா எட்டுமா-ன்னு எட்டி எட்டிப் பாத்தாரு!
யாரை இப்பிடி எட்டி எட்டிப் பாக்குறீங்க? கண்ணனையா? அதான் ஒங்க முன்னாடி நானே இருக்கேனே-ன்னு சொன்னது தான்! மனுசன் ஒரு மொறை முறைச்சுப் பாத்தாரு!
எங்கடா அந்த ராதா? அவளுக்கோசரம் தான் கண்ணன் பாட்டு வலைப்பூவுக்கே வர ஒத்துக்கிட்டேன் தெரியுமா?-ன்னாரு!



அத்தோட நிக்காம ராதா மேல பல பாட்டுகளை அள்ளி அள்ளி வீசினாரு!
எல்லாம் அவர் குருநாதர் எம்.எஸ்.வி போட்ட பாட்டாம்!
நான் எல்லாத்தையும் ஒடனே லபக் லபக்-னு ட்ராவிட் கணக்கா கேச் புடிச்சிக்கிட்டேன்! இந்தப் பாட்டுலயே ஏதாச்சும் ஒன்னைப் போடுங்க-ன்னு கேட்டேன்!
நீயே என் பேரைச் சொல்லிப் போட்டுக்க போடா! நான் பாட்டு போட்டா என்னா, நீயி பாட்டு போட்டா என்ன-ன்னு சொல்லிப்புட்டாரு!

வெறுமனே பாட்டு போட்டா போதுமா? பேக்கிரவுண்டு கொடுங்க! எல்லாம் ஒங்க காலத்துப் படம்...
எங்களுக்கு எல்லாம் யுவன், ஹாரிஸ் இப்படித் தான் தெரியும்-னு வேண்டிக் கொள்ள...இதோ ஜிரா!




இயக்குநர் கே.சங்கர் தெரியுமா? பல பக்திப் படங்களைக் கூடச் சமூக நோக்கில், எளிமையா கொடுப்பாரு! அவர் இயக்கிய ஒரு படம் சுப்ரபாதம்!
இந்தப் படத்தில் சாதாரண தட்டு மக்களையும், பல வைணவக் கோவில்களையும், அதை ஒட்டினாற் போலச் சில கதைகளையும் சோடிச்சி படம் பிடிச்சிக் காட்டி இருப்பாரு!

அதுல வாணி ஜெயராம் பல பாடல்களைப் பாடி இருப்பாங்க! ஆனா அவங்களும் ஜேசுதாசும் சேர்ந்து பாடின இந்த டூயட் செம ஹிட்!
கண்ணா கோபாலா ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா

அப்படின்னு ஒவ்வொரு பத்தியிலும், எடுப்பா முடிப்பாங்க!

என்னது டூயட்டா? ஆமா கண்ணன் பாட்டுல நான் கொடுக்கறேன்னா, டூயட் இல்லாம என்னவாம்? படத்துல ஜெய்கணேஷும் லதாவும் ஆடுவாங்க!
கண்ணா கோபாலா ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா என்று நீங்களும் டூயட் ஆடிக்கிட்டே பாடுங்க!
இந்தா, கேளுங்க!
KannanaiNinaithaal...




கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா


பொன்மணி வண்ணன் சொன்னது கீதை
பூமகன் மார்பினில் தவழ்ந்தவள் ராதை
நல்லவர் செல்வது அவனது பாதை
நாடிய மனிதன் உலகத்தில் மேதை
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
(கண்ணனை நினைத்தால்)

ஆற்றினில் பெண்கள் சேலையை எடுத்தான்
அதையே திரெளபதி கேட்டதும் கொடுத்தான்
காற்றிலும் இசையிலும் கண்ணனின் குரலே
பாட்டினில் வருவது புல்லாங் குழலே
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா


கோபியர் நடுவே கண்ணனின் நாதம்
குருவாயூரில் குழந்தையின் கீதம்
குருவாயூரில் குழந்தையின் கீதம்
தேவர்கள் சபையில் ஸ்ரீகிருஷ்ண வேதம்
திருமலை தனிலே தவ சுப்ரபாதம்
தவ சுப்ரபாதம் தவ சுப்ரபாதம்

(கண்ணனை நினைத்தால்)



படம்: சுப்ரபாதம்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
குரல்: வாணி ஜெயராம், ஜேசுதாஸ்
இசை: மெல்லிசை மன்னர், எம்.எஸ்.விஸ்வநாதன்

Saturday, July 14, 2007

59. வருஷம் 16 - கங்கைக்கரை மன்னனடி, கண்ணன் மலர்க் கண்ணனடி

வருஷம் 16 என்னும் படத்தில், இளையராஜா போட்டாரு பாருங்க ஒரு தோடி! அதுவும் பாடலின் இறுதியில் கம கம என்று கமகம் பொங்கிப் பிரவாகமாய்.....
யேசுதாஸ் பாடும் போது, இசை கேட்க எழுந்"தோடி" வருவார் அன்றோ?
நடன மெட்டில் அமைந்த நல்ல கண்ணன் பாட்டு!

கார்த்திக் பாடல் கலைஞர்; குஷ்பு ஆடல் கலைஞர்!
படத்தில் கார்த்திக்கை அந்தச் சிவப்பு சால்வை போட்ட கெட்டப்பில் பார்க்கவே வித்தியாசமாக இருக்கும்!:-)
குஷ்புவும் வேறு யாரோ ஒருவர் வந்து பாட, பரத நாட்டியத்தை நிறுத்தி விடுவார்!
கார்த்திக் பாடினால் மட்டுமே ஆடுவார் போல! இந்தப் பாடல் படத்தின் க்ளைமாக்ஸோ என்னவோ...கடைசியில் துப்பாக்கி பேசிடுமோ? நீங்களே பாருங்க!

பாடலைக் கேட்டு ரசிக்க - இங்கே சுட்டுங்கள்!
பாடலின் ஆரம்பத்தில் வரும் ஒரு முன்னுரை (விருத்தம்)....ஆடை கட்டும் பைங்கிளியே....அதில் அப்படியே யேசுதாஸ் குழைவதைக் கேட்கலாம்!




(கண்மணியே ராதை என்னும் - காதலியே நான் விரும்பும்
பெண்மணியே..... ஆடை கட்டும் பைங்கிளியே!
கண்ணன் வந்தான் பாட்டிசைக்க - கவலைகளை விட்டு விடு
காற் சலங்கை சத்தமிட - மேடையிலே வட்டமிடு....)


கங்கைக்கரை மன்னனடி - கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி - உள்ளம் கவர் கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே - நீச்சல் விடும் இளைஞனடி
வஞ்சிக் கொடி மடியினிலே - மஞ்சம் இடும் தலைவனடி


உள்ளத்தை எடுத்தேன் - உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தைப் பிரிந்த - மீனைப் போல் துடித்தேன்
(கங்கைக்கரை மன்னனடி - கண்ணன் மலர்க் கண்ணனடி)


தத்தும் சிறு தாமரைப் பாதங்கள் - நடை தான் பழக
கத்தும் கடல் நீரலை போல் - இங்கு குழல் தான் நெளிய
இல்லை என யாவரும் கூறிடும் - இடை தான் ஒடிய
இன்பம் என என் விழி பார்ப்பது - இமை தான் விரிய

காற் சலங்கை ஆடுதடி ஆள் வரத்தான் வாழுதடி
காற் சலங்கை ஆடுதடி ஆள் வரத்தான் வாழுதடி


முன்னம் பல ஜென்மம் வழியே - உண்டானது உன் உறவே!
இன்னும் என்னைத் தொட்டுத் தொடர்ந்தே - பந்தாடுது உன் நினைவே?
உயிர் வாழும் பெண்ணா - வா வா கண்ணா
(கங்கைக்கரை மன்னனடி - கண்ணன் மலர்க் கண்ணனடி)

தாம் தரிகிட, தாம் தரிகிட, தீம் தரிகிட, தீம் தரிகிட.........

சந்தம் தரும் ஆடலும் பாடலும் சுகமாய் மலரும்
சுட்டும் விழிப் பார்வையில் ஆயிரம் நிலவாய் பொழியும்
அங்கம் ஒரு ஆலிலை போல் இங்கு நடனம் புரியும்
அன்பே என மாதவன் தோள் தொட நெடுநாள் உருகும்


காத்திருப்பான் கை அணைக்க - காதலியாள் மெய் அணைக்க
காத்திருப்பான் கை அணைக்க - காதலியாள் மெய் அணைக்க

கண்ணன் மனம் அந்தப்புரமே - வந்தாடிடும் முத்துச் சரமே
அச்சம் விடும் பச்சைக் கிளியே - அவற்றால் தினம் நத்தும் கனியே
நாளும் ஓதும்......காதல் வேதம்!
(கங்கைக்கரை மன்னனடி - கண்ணன் மலர்க் கண்ணனடி)



படம்: வருஷம் 16
குரல்: KJ ஜேசுதாஸ்
இசை: இளையராஜா
வரிகள்: ?
ராகம்: தோடி

Thursday, June 14, 2007

56. இதோ, சிவாஜி பாடிய கண்ணன் பாட்டு!

தலைவர் படம் ரிலீஸ் ஆவ சொல்ல, கண்ணன் பாட்டில் மட்டும் தலைவரின் கொண்டாட்டம் இல்லைன்னா எப்படி?

என்ன பாட்டு போடறது-ன்னு, கொஞ்ச நேரம் பிச்சிக்கிட்டது தான் மிச்சம்!
வா ஜி வா ஜி...சிவா ஜி -யை,
வாரும் ஐயா, வாரும் ஐயா, சிவனின் ஜீவனே
- என்று ஏதாச்சும் உல்டா பண்ணி, இதுவும் கண்ணன் பாட்டு தான்னு போட்டுறலாம்! :-) ஆனா வெட்டிப்பயல் இந்த சமயம் பாத்து ஊரில் இல்லை!
இல்லீன்னா, சஹானா, சஹாரா-ன்னு சிவாஜி பாட்டுக்களைப் பிரிச்சு மேய்ந்திடலாம்!

சரி, மெய்யாலுமே தலைவர் படத்தில் வந்த ஒரு நல்ல கண்ணன் பாட்டைப் போடலாம்-னு தோணியது! கண்ணன் பாட்டு - ராமன் பாட்டு எல்லாமே ஒண்ணு தானே!

தலைவரின் நூறாவது படம்...நூறு நாள் தாண்டியும் ஓடியது!
ரஜினியைத் திரையில் இப்படியும் பாக்க முடியுமா? ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

சண்டைக் காட்சிகள் ஒன்று கூட இல்லாமல்....
தலைவர் ஸ்டைல் ஒன்று கூட இல்லாமல்...
பஞ்ச் டயலாக் ஒன்று கூட இல்லாமல்...
கதாநாயகி-தலைவர் குறும்புகள் இல்லாமல்...
அதுவும் குறிப்பா, ஒரு வில்லி இல்லாமல்....
இப்படியொரு ரிஸ்கை நூறாவது படத்தில் தானா செய்ய வேண்டும்?


ஆனால் அதையும் திறம்படச் செய்து காட்டினார் ரஜினி!
வசன உச்சரிப்புகளில் ஒரு மகானின் வாடை வீசா விட்டாலும்...படம் என்னவோ ஹிட் தான்!
பொதுவாத் தலைவரை நடிப்புக்கு இலக்கணம் என்றெல்லாம் சொல்ல முடியாது-ன்னு ஒரு சாரார் குறை சொல்வார்கள்....
ஆனால் தில்லு முல்லு, மற்றும் அவரது இந்த நூறாம் படத்தைப் பார்த்தவர்கள், கொஞ்சம் அசந்து தான் போவார்கள்!

அன்று இளைஞர் ரஜினிகாந்த், படம் முழுதும் தாத்தா வேடத்தில் நடித்தார்!
இன்று தாத்தா ஆகி விட்ட சந்தோஷ ரஜினிகாந்த், இளைஞர் வேடத்தில் பட்டைய கெளப்ப தயாராகி விட்டார்!

இதோ...டோட்டல் கெட்டப் சேஞ்சில், தலைவர்...
ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் வரும் எசப் பாட்டு ஒன்று!
இனிமையான பாட்டு, இசைப் பாட்டு, எசப் பாட்டு, கேட்க சொடுக்குங்கள் இங்கே!




ராம நாமம் ஒரு வேதமே
ராக தாளமொடு கீதமே

மனம் எனும் வீணை மீட்டிடுவோம்
இசை எனும் மாலை சூட்டிடுவோம்

(அருள்மிகு...ராம நாமம் ஒரு வேதமே)

அவன் தான் நாரணன் அவதாரம்
அருள் சேர் ஜானகி அவன்தாரம்
கெளசிக மாமுனி யாகம் காத்தான்
கெளதமர் நாயகி சாபம் தீர்த்தான்

(ராம நாமம் ஒரு வேதமே)

ஓர் நவமி் அதில், நிலவெலாம் புலர, நினைவெலாம் மலரவே - உலகு புகழ்
தாய் மடியில் ஒரு மழலையாய் உதிக்க, மறை எலாம் துதிக்கவே - தயரதனின்

வம்சத்தின் பேர் சொல்ல, வாழ்த்துக்கள் ஊர் சொல்ல - விளங்கிய திருமகனாம்
ஜனகர் மகள் வைதேகி பூச்சூட, வைபோகம் கொண்டாட, திருமணம் புரிந்தவனாம்


மணிமுடி இழக்கவும் மரவுரி தரிக்கவும்
அரண்மனை அரியணை துறந்தவனாம்
இனியவள் உடன்வர இளையவன் தொடர்ந்திட
வனங்களில் உலவிடத் துணிந்தவனாம்

ஸ்ரீ... ராம சங்கீர்த்தனம்
நலங்கள் தரும் நெஞ்சே...
மனம் இனிக்க, தினம் இசைக்க, குலம் செழிக்கும்...

தினம் நீ சூட்டிடு பாமாலை
இது தான் வாசனைப் பூமாலை
இதைவிட ஆனந்தம் வாழ்வினில் ஏது
இசைத்தே நாமமே நாளும் ஓது

(ராம நாமம் ஒரு வேதமே)



இசைஞானி இளையராஜா போட்ட அக்மார்க் மரபிசைப் பாடல் இது...
சந்தங்கள் கொஞ்சும் பாடல்....மாய மாளவ கெளளை ராகத்தில்...வேகமான பாட்டு.
கூடவே சேர்ந்து பாடினால், இன்னும் இனிக்கும்!


ராகம்: மாய மாளவ கெளளை
படம்: ஸ்ரீ ராகவேந்திரா
வரிகள்: வாலி
குரல்: ஜேசுதாஸ்
இசை: இளையராஜா

Tuesday, May 29, 2007

வா... வா.. கண்ணா...வா ...வா

தன்னைக் கொல்ல ஆயுதம் ஏந்தி வருகின்றவனையும் முகமலர்ச்சியுடன் யாராவது வா.. வா.. என்று வரவேற்பவர்கள் உண்டா?
பின்னால் அவனால் கொல்லப்படும் நிலை வந்தும் அவன் தன்னைப் பார்க்க வரும்போது அவனை துதித்து 1000 பெயர்களால் புகழ்ந்து பாடியவர் யார்?ஆமாம் அப்படி வரவேற்றவரும் பாடியவரும் ஒருவர்தான்.
யார் அவர்? மேலே படியுங்கள்.



மஹாபாரதத்தில் கண்ணன் ஆயுதம் ஏந்தி போராடமாட்டேன் என்று பஞ்சபாண்டவர்களுக்கு உறுதி அளித்தார். அதன்படியே போர்க்களத்தில் இருந்தும் வந்தார். பாண்டவர்களுக்கும் கௌவுரவர்களுக்கும் பயங்கர யுத்தம் நடந்தது. கௌவுரவர்களின் சேனாபதியான பீஷ்மர் மிகவும் உக்கிரமாக போரிட்டார்.
அவ்ருடைய அம்பு மழைக்கு பார்த்தனால் பதில் சொல்ல முடியவில்லை. இப்படியே விட்டால்அவர் பாண்டவர்களை காலி செய்துவிடுவார் என்று நினைத்த கண்ணன் பார்த்தனிடம் சொன்னார்.
"அர்சுனா தாத்தாவை உடனே எப்படியாவது நிறுத்தப் பார்". தனஞ்ஜயன் சொன்னான் "என்னுடைய முழு முயற்சியும் பலனளிக்கவில்லை. என்னுடைய அம்புகளால் தாத்தாவை ஒன்றும் செய்ய முடியவில்லை.அவருடைய பராக்கிரமம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது" என்றான். (நீங்கள் படித்துக்கோண்டு இருப்பது மஹாபாரதம். வேறு எதையும் நினத்து குழப்பிக் கொண்டால் நான் பொறுப்பல்ல)
பார்த்தனின் சோர்வைப் பார்த்த கண்ணனுக்கு கோபம் வந்து உன்னால் முடியாவிட்டால் இதோ நானே ஆயுதம் எடுக்கிறேன் என்று கூறி தேர்தட்டிலிருந்து இறங்கி தன் சக்கராயுதத்தை பீஷ்மர் கையில் எடுத்துக் கொண்டு பீஷ்மரை நோக்கிச் சென்றார்.
கண்ணனைக் கண்டதும் மலர்ந்த முகத்துடன்ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு வரவேற்றார் பீஷ்மர் "வா.. வா.. கண்ணா..வா...வா...உன்கையால் மரணமடைய காத்திருக்கிறேன்." நீயே ஆயுதம் எடுத்து வந்தபின் எனக்கு என்னகுறை" என்றார். உடனே கண்ணனுக்கு தன் சத்தியம் ஞாபகம் வந்து தேர்தட்டுக்கு வந்து சாட்டையை கையில் எடுத்துக் கொண்டான்.
பின்பு யோசித்து சிகண்டியை பார்த்தனுக்கு முன்னால் உட்காரவைத்து இருவரையும்அம்புகளைஎறியச் சொன்னார். ஆனால் பீஷ்மர் தன் சத்தியத்தை(சிகண்டிக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதில்லை என்பதை) மனதில் நிறுத்தி வில்லையும் அம்பையும் கீழேபோட்டுவிட்டு ,பார்த்தனது பாணங்களை ஏற்றுக்கொண்டு உடம்பெல்லாம் அம்பு பாய்ந்து கீழே விழுந்தார். வானவர்கள் பூமாரி பொழிந்தனர்.மரணப்படுக்கையில் மிகுந்த வலியுடன் கஷ்டப்படுகின்ற பீஷ்மரை பார்க்க வந்த கண்ணனை கண்டதும் பீஷ்மர் எந்த விரோதமும் பாராட்டாமல் கண்ணனை 1000 பெயர்களால் துதி செய்தார்.
தன்னைக் கொல்ல வந்த கண்ணனை யுத்தகளத்தில் பீஷ்மர் எப்படி வரவேற்றார் என்பதை ஊத்துகாடு வேங்கட கவியின் பாடல் மூலமாகக் கேளுங்கள்
பாடல் வடமொழியில் இருந்தாலும் சொற்கட்டும் தாளக்கட்டும் வர்ணணையும் மிகுந்தது. நடையும் யுத்தநடை.
ராகம்:- மோஹனம் தாளம்:- ஆதி
பல்லவி
ஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் கிருஷ்ணா
மதுராபுரி ஸதனா ம்ருது வதனா மதுசூதனா இஹ....(ஸ்வாகதம்)


அனுபல்லவி
போகதாப்த ஸுலபா ஸுபுஷ்ப கந்த களபா
கஸ்த்தூரி திலக மஹிபா மம காந்த நந்த கோப கந்த..(ஸ்வாகதம்)


சரணம்
முஷ்டிகாசூர சாணுர மல்ல
மல்ல விசாரத குவலாயபீட
மர்த்தன களிங்க நர்த்தன
கோகுலரக்ஷ்ண ஸகல ஸுலக்ஷ்ண தேவ
ஸிஷ்ட ஜன பால ஸ்ங்கல்ப கல்ப
கல்ப ஸதகோடி அஸமபராபவ
தீர முனி ஜன விஹார மதனஸூ
குமார தைத்ய ஸ்ம்ஹாரதேவ
மதுர மதுர ரதி ஸாஹஸ ஸாஹஸ
வ்ரதயுவதி ஜன மானஸ பூஜித
இந்தப் பாடலின் மற்றொரு பொருத்தம் பாடலின் நடையும் யுத்த நடையில் உள்ளது.
கண்ணனின் பக்தரான திரு ஜேசுதாஸ் தன் இனிய குரலில் அருமையாக பாடியுள்ளார்.பாடலைக் கேட்க '><"இங்கே">"> கிளிக்

Sunday, January 14, 2007

35. அசைந்தாடும் மயில் ஒன்று காணும்!

நண்பர்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று வேளாண் மக்கள் மகிழும் திருநாள்!
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் மகிழ்ந்திருக்கும் திருநாளும் கூட!

கிராமங்களில் குரவைக் கூத்துக்கு கேட்கவும் வேண்டுமோ!

கண்ணனுக்காக மார்கழி முழுதும் காத்திருந்தோம், ராதையும் நாமும்!
அதான் இப்போது மார்கழி நோன்பு முடிந்து, தை பிறந்து விட்டதே!
தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்! - கண்ணனோடு
ஆடிப்பாடி ஓடலாமே தங்கமே தங்கம்!
வாங்க, அனைவரும் ஆயர்ப்பாடியில் பொங்கல் கொண்டாடி ஆடலாம்!

நித்யஸ்ரீ அவர்களின் குரலில், அழகான பாடல் இதோ!

223

அசைந்தாடும் மயில் ஒன்று காணும் - நம்
அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்!
(அசைந்தாடும்)

இசையாறும் குழல் கொண்டு வந்தான்
இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான்
திசைதோறும் நிறைவாக நின்றான் - என்றும்
திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈந்தான்


எங்காகிலும் எமது இறைவா இறைவா
என மனநிறை அடியவரிடம்
தங்கு மனத்துடையான் - அருள்
பொங்கும் முகத்துடையான்


ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி - நின்றாட
மயிலின் இறகாட மகர குழையாட
மதி வதனமாட மயக்கும் விழியாட
மலரணி களாட மலர்மகளும் பாட
இது கனவோ நனவோ என
மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட

(அசைந்தாடும்)

0042

அசை போடும் ஆவினங்கள் கண்டு
இந்த அதிசயத்தில் சிலைபோல நின்று
நிஜமான சுகம் என்று ஒன்று - இருந்தால்
ஏழுலகில் இதையன்றி வேறெதுவும் அன்று!
திசைதோறும் கோபாலன் நின்று - மிக
எழில் பொங்க நடமாட
எதிர் நின்று ராதைபாட

(எங்காகிலும் எமது இறைவா இறைவா)

(அசைந்தாடும்...)


மற்ற கலைஞர்களின் குரலில்.
Sudha Raghunathan
Bombay Sisters
K.J.Yesudas

தை 1 - தையொரு திங்கள் - முப்பத்தோராம் பாமாலை


வரிகள்: ஊத்துக்காடு வேங்கட கவி
ராகம்: சிம்மேந்திர மத்யமம்
தாளம்: ஆதி

Monday, January 08, 2007

29. நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!

கண்ணே கனியமுதே என்ற ஒரு படம் வந்தது! ஞாபகம் இருக்கா? அதில் வரும் இந்தப் பாரதியார் பாடல் மிகவும் இனிமை! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையில், ஜேசுதாஸின் தேன் குரல்!

எப்பவும் ராதை தானே கண்ணனுக்கு ஏங்குகிறாள்!
அடுத்த கண்ணன் பாட்டில், ராதைக்காக அந்தக் கண்ணன் ஏங்க வேண்டும், சொல்லிட்டேன், ஆமா! - அப்படின்னு நம்ம திருவரங்கப்ரியா ஒரு போடு போட்டார்கள்! இதோ நிறைவேற்றியாகி விட்டது அரங்கன் ஊர் ஆணையை! :-)

பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்! (Opens in Real Player)
கண்ணம்மா, கண்ணம்மா என்று கண்ணன் துடிக்கிறானே! பாவம்பா அந்தக் கண்ணன்! :-)

நண்பர் இலவசக்கொத்தனார், மகராஜபுரம் சந்தானம் அவர்கள் பாடிய mp3 ஒன்றைத் தனி மடலில் அனுப்பியுள்ளார்; அவருக்கு நம் நன்றி. இதோ சுட்டி!
San Diegoவில் சந்தானம் அவர்கள் பாடுவது என்று நினைக்கிறேன். ராகம்: பாகேஸ்ரீ





நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா
தன்னையே சசியென்று சரணம் எய்தினேன்

(நின்னையே)

பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே

கண்ணம்மா

மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீசநீ
கண் பாராயோ வந்து சேராயோ
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா


யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்குன் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

(நின்னையே)

மார்கழி 25 - ஒருத்தி மகனாய்ப் பிறந்து - இருபத்தி ஐந்தாம் பாமாலை



வரிகள்: சுப்ரமணிய பாரதியார்
குரல்: கே.ஜே ஏசுதாஸ், S.சசிரேகா
படம்: கண்ணே கனியமுதே
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP