மேகங்களை கண்டு மிரள்கிறேன்

பல்லவி:
மேகங்களை கண்டு மிரள்கிறேன் - கண்ணா
தேகத்தை மட்டுமே நனைக்கவரும் - நீர்
(மேகங்களை)
அனுபல்லவி:
பாகனின் கட்டை மீறிய மதக்களிறென
வேகவேகமாய் வந்து சூழ்ந்திடும் - கரு
(மேகங்களை)
சரணங்கள்:
மின்னல்களே வேள்வித் தீயாக - அந்தப்
பேரிடிகள் மந்திரங்கள் தான் முழங்க
குளிர்காற்றே என்னை புகையாய்த் தழுவி
பலனாக பிரிவை மேலுமுணர்த்த வரும்
(மேகங்களை)
கூடும் பொழுதை எதிர்காணும் பேடைமுன்
ஆடும் மயிலின் அகவல் சத்தமும்
நாடும் நங்கையரின் கலியை தீர்த்திட
ஓடும் ஆடவரின் காலோசையும் தந்திடும்..
(மேகங்களை)
வெள்ளம் புரளும் யமுனைக் கரையில்
கள்ளன் வருகைக்கு காக்கக் கண்டு
வெள்ளை நிலவு எள்ளாத குறையை
முல்லை மலர்களே போக்கத் தூண்டும்
மேகங்களை கண்டு மிரள்கிறேன் - கண்ணா
தேகத்தை மட்டுமே நனைக்கவரும் - நீர்









