7. குழந்தை கண்ணன் என்றால் குறும்பல்லவா!!
அழகான அவன் செயல்கள் அமிழ்தல்லவா..
பழகவே அவனும் நல்ல தோழனல்லவா
வழங்கும் தமிழில் நானும் அதைச் சொல்லவா...
(குழந்தை கண்ணன்..)
வெண்ணை பானை உடைத்து சிரிக்கின்றான்
உண்டிவில் கொண்டு தயிர்பானை தகர்க்கின்றான்
அண்ணன் பலராமன் பலசொல்லி கேளாதவன்
கண்ணன் குறும்புகளில் என்றும் குறையாதவன்
(குழந்தை கண்ணன்..)
அரக்கரை அழித்திடவே அவனும் வந்தான்
அரவம் ஒன்றின்மேல் நடமாடி நின்றான்
உரலொன்றில் அன்னைதான் கட்டி வைத்தால்
மரம்மோதி ஆங்கே மோட்சம் தந்தான்.
(குழந்தை கண்ணன்..)
தின்ன இவன் மண்கொண்டான் என்றே
அன்னை கேட்க வாய்திறந்து வையகம்
தன்னை காட்டியவன் மயங்க வைத்தான்.
இன்னும் என்னென்ன இவனே செய்வான்.
குன்றொன்றை அவனும் குடையாய் கொண்டான்
கன்றுபசுக்கள் யாவிற்கும் அபயம் தந்தான்.
இன்றுஇக் கண்ணன் யாது செய்வான்
என்று யாவரையும் நோக்கச் செய்தான்.
குழந்தை கண்ணன் என்றால் குறும்பல்லவா
அழகான அவன் செயல்கள் அமிழ்தல்லவா...
***
பாவைத்திருநாளில் சாத்வீகனின் பாமாலை.
மார்கழி 3 - ஓங்கி உலகளந்த - மூன்றாம் பாமாலை
