Showing posts with label *மா ரமணன் உமா ரமணன். Show all posts
Showing posts with label *மா ரமணன் உமா ரமணன். Show all posts

Saturday, August 11, 2007

ஆயிரம் பெயரால் அழைப்பினும் ஆயிரம் உரு மாறினும் ...


சிவனையும் விஷ்ணுவையும் ஓருருவாகப் பாடும் ஒரு கர்நாடக இசைப் பாடல். திரு. பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றியது. வார்த்தை விளையாட்டு இந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்தது.

பல்லவி:

மா ரமணன் உமா ரமணன்
மலரடி பணி மனமே தினமே (மா ரமணன்)

அனுபல்லவி:


மார ஜனகன் குமார ஜனகன்
மலை மேல் உறைபவன் பாற்கடல்
அலை மேல் துயில்பவன் பாவன (மா ரமணன்)

சரணம்:

ஆயிரம் பெயரால் அழைப்பினும்
ஆயிரம் உரு மாறினும் உயர்
தாயினும் மிகு தயாபரன் பதம்
தஞ்சம் என்பவரை அஞ்சல் என்றருளும் (மா ரமணன்)

பல்லவி:

மா என்றால் திருமகள். மா ரமணன் என்றால் திருமகள் மணவாளன் திருமாலவன். உமா ரமணன் என்றால் உமையன்னையின் மணவாளன் சிவபெருமான். அவன்(அவர்கள்) மலரடி பணி மனமே. தினமே.

அனுபல்லவி:

மாரன் என்றால் மன்மதன். அவன் தந்தை கண்ணன். அதனால் மார ஜனகன் விஷ்ணு. குமார ஜனகன் குமரனின் தந்தையான நடராஜன். கைலாய மலை மேல் உறைபவன் முக்கண்ணன். பாற்கடல் அலை மேல் துயில்பவன் மாயவன். தூயவர்கள் இவர்கள்.

சரணம்:

ஆயிரம் பெயர் கொண்டு அழைத்தாலும், ஆயிரம் உருவங்களால் வழிபட்டாலும், உயர்ந்த தாயை விட கருணையுடைய தயாபரன் அவன். அவனுடைய திருவடிகளைத் தஞ்சம் என்று வந்தவர்களை அஞ்சேல் என்று அருளுபவன் அவன்.

பாடலை பிரியா சகோதரிகள் பாடி இங்கே கேட்கலாம்.

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP