84. முருகனுக்கு மட்டுமா? கண்ணனுக்கும் காவடி எடுக்கறாங்க டோய்!
காவடி-ன்னாலே அது முருகனுக்கு மட்டும் தானே! அது எப்படிடா கண்ணனுக்குப் போயி எடுப்பாங்க? எங்கிட்டு எடுப்பாங்க-ன்னு தானே கேக்கறீங்க! மேலே படிங்க! தமிழ்க் கடவுளுக்குக் காவடி எடுக்கும் வழக்கம், தமிழ் மக்களிடையே காலம் காலமாக வந்த ஒன்று! - தெரிஞ்சது தான்!
சரி, தமிழ்க் கடவுள் யாரு? - முருகப் பெருமான்! - மிகவும் சரியான விடை! ஆனா கேள்விக்குண்டான எல்லா விடைகளையும் சொன்னாத் தான் மதிப்பெண்ணு, மதிப்பொண்ணு எல்லாம் கொடுக்கப்படும் :-) இன்னொரு தமிழ்க் கடவுள் யாருன்னும் சொல்லுங்க!
குறிஞ்சிக் கடவுள் = சேயோன் = முருகன் = பெருமான்
முல்லைக் கடவுள் = மாயோன் = கண்ணன் = பெருமாள்
மற்ற திணைகளான மருதம், நெய்தற், பாலைக்கு எல்லாம் தனித்தனித் தெய்வங்கள் இருந்தாலும், பெரும் தெய்வங்களாக எல்லா இலக்கியங்களிலும் பேசப்படுவது இந்த மாயனும், சேயனும் மட்டுமே!
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் முதற்கொண்டு, சிலப்பதிகாரம் முதலான காப்பியங்கள், பிற்கால இலக்கியங்கள் - என்று எல்லாவற்றிலும் இந்த இருவரின் ஆளுமை அதிகமாகத் தான் இருக்கு!
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
என்பது தொல்காப்பியம்! சிலப்பதிகாரத்திலும் விழாக் காலங்களில் இவர்கள் இருவரின் கோயில்களில் நடக்கும் வழிபாடு பற்றிச் சிறப்பாகப் பேசப்படுகிறது! ஒருவேளை மக்கள் அதிகம் புழங்கிய இடங்களாகக் குறிஞ்சியும் முல்லையும் இருந்திருக்கலாம்; அதனால் தானோ இவர்கள் மட்டும் இத்தனை பெரிதாகப் பேசப்படுகிறார்கள்?
ஆக தமிழ்க் கடவுள் என்றாலே அது மாயோனும், சேயோனும் ஆகிய இந்த இருவருமே தான்!
நண்பர் ஜிராவின் உதவியுடன், இது பற்றித் தனி ஆராய்ச்சிப் பதிவாகப் பின்னொருகால் இடுகிறேன்!
இராம.கி ஐயாவையும் சில பாடல்களுக்குப் பொருள் கேட்டுத் தெளிய வேண்டும்! இன்னிக்கி காவடி மேட்டருக்கு மட்டும் வருவோம்!
சின்ன வயசுல (மூனாங் கிளாஸ்-னு நினைக்கிறேன்) என்னைய திருப்பதிக்குக் கூட்டிக்கிட்டு போயிருக்காய்ங்க வூட்டுல!
விளையும் பயிர் தான் முளையிலேயே தெரியுமாமே! சரியான டகால்டி பார்ட்டின்னு அப்பவே என்னை முடிவு கட்டிட்டாங்களாம்! :-)
ஏன்னா....திருப்பதியில நான் அரோகரா அரோகரா-ன்னு கூவிக்கிட்டு இருந்தேனாம்!
வர்ற வழியில, திருத்தணியில் ஹால்ட்டு! அங்கிட்டு கோவிந்தா கோவிந்தா-ன்னு கோஷம் போட்டுக்கிட்டு இருந்தேனாம்! நான் கல்லூரி லெவலுக்கு வந்த பின்னும் கூட, இதச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பாங்க எங்க மறைந்த ஆயா!(பாட்டி)
நான் மட்டும் தான் இப்படி டகால்ட்டி பேர்வழின்னு நெனைக்கறீங்களா? நம்மள விட ஒருத்தர் செம டகால்ட்டியா இருக்காரு!
ஊத்துக்காடு வேங்கட கவி-ன்னு ஒருத்தரு! அழகான பல தமிழிசைப் பாடல்களை எல்லாம் கொடுத்திருக்காரு! அலைபாயுதே கண்ணா பாட்டு அவர் எழுதினது தான்! ஏ.ஆர். ரஹ்மான் ராயல்டி ஏதாச்சும் கொடுத்தாரான்னு தெரியலை! அவரு கண்ணன் மேலே காவடிச் சிந்து பாடி இருக்காரு!
பொதுவா காவடிச் சிந்து-ன்னா அது முருகனுக்குத் தான்!
காவடி எடுக்கும் களைப்பு தெரியாம இருக்க, வழிநடைப் பாடலா இதைப் பாடுவாங்க! செஞ்சுருட்டி இல்லீன்னா சிந்து ராகத்தில் இருக்கும்! சும்மா பாட்டைக் கேட்டாலே போதும்,
தையத் தையத் தக்கத் தானா - திமி
தையத் தையத் தக்கத் தானா -ன்னு கால்கள் தானாவே ஆடும்!
அப்படி ஒரு அருமையான காவடிச் சிந்தை, கண்ணபிரான் மேல் பாடி இருக்காரு இந்த ஊத்துக்காட்டுக் கவி!
வாங்க...இன்னிக்கி கண்ணன் பாட்டுல, கண்ணனுக்குக் காவடி எடுப்போம்! கண்ணான கண்ணனுக்கு அரகரோகரா!:-)

மேலே மலேசிய பத்து மலைக் காவடிய உத்துப் பாருங்க! என்னாத் தெரியுது? :-)
எது பிடிச்சிருக்கோ, அதைக் கேட்டுக்கோங்க! என் தெரிவு அருணா சாய்ராம்! தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் நச்சரிப்பு பண்ணாலும், இவங்க சும்மா கும்மறாங்க! காவடி-ன்னாலே கும்ம வேணாங்களா? :-)
யேசுதாஸ் பாடும் காவடிச் சிந்து
அருணா சாய்ராம்
நித்ய ஸ்ரீ பாடுவது
பம்பாய் சகோதரிகள்
கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்
தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக்
கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென
தரமான குழலிசை கேளும் - போன
ஆவி எல்லாம் கூட மீளும்!
(கண்ணன்)
சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல்
தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல
துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென
துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ்
சொல்லிச் சொல்லி இசைபாடும்!
(கண்ணன்)
கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை - என்று
கண்டதும் வண்டொன்றும் வர்லை
இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு
காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள்
கண்ணன் அன்றி வேறு இல்லேன்!
(கண்ணன்)
தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் - என்ன
செளக்கியமோ என்று கேட்கும் - அட
மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ - மாதவனின்
முத்து முடி தனில் சேர்வோம் - அங்கே
மெத்த மெத்தப் பேசி நேர்வோம்!
(கண்ணன்)
கீழே ஒருத்தரு இந்தப் பாட்டுக்கு நாட்டியம் ஆடறாங்கப்பா! சும்மா கெடைச்சுது யூ-ட்யூப்பில்! சுட்டுப் போட்டுட்டேன்!
ஷைலஜாவுக்குப் புத்தாண்டு சபதம்! அப்புறம் அம்பிக்கு 2007 இல் புடிச்ச பதிவு! சீனா சாருக்கு மொக்கைச் சரம் பதிவு! - எல்லாம் எக்கச் சக்கமாப் பாக்கி இருக்கு!
சீனா சார் - இந்தப் பதிவை எல்லாம் ப்ளீஸ், மொக்கையில் கணக்கு எடுத்துக்க மாட்டீங்களா? :-)
இன்னிக்குத் தைக் கிருத்திகை-யாம்ல! திராச முருகனருள்-ல பாட்டு போட்டுருக்காரு! இங்கிட்டு கண்ணனுக்குக் காவடி எடுத்துட்டு, அங்கிட்டு முருகனுக்கு ஒரு கும்புடு போட்டுட்டு வந்துருங்க!

