Showing posts with label ச்சின்னப் பையன். Show all posts
Showing posts with label ச்சின்னப் பையன். Show all posts

Monday, April 18, 2011

சுத்தி சுத்தி குழப்பியடிக்கும் ஒரு கண்ணன் பாட்டு!

ஹரிதாசர்கள் பாட்டுன்னா எப்படி இருக்கும்?


கிருஷ்ணா நீ பேகனே பாரோ.


அல்லி நோடலு ராமா இல்லி நோடலு ராமா.


இப்படி பெரும்பாலும் மிகவும் எளிமையாக, கன்னடமே தெரியலேன்னாக்கூட தட்டுத் தடுமாறி, ஓரளவுக்கு புரிஞ்சிக்கக்கூடியதா இருக்கும். ஆனா, இன்னிக்கு பார்க்கப் போகிற பாடல் அப்படி இல்லை.


ஸ்ரீ கனகதாசர் எழுதியுள்ள - ஈதநீக வாசுதேவனு - என்ற இந்த பாடல் - முழுக்க முழுக்க குறியீடுகளால் நிரம்பியுள்ளது. மற்ற பாடல்களைப் போல் எளிதாக விளக்கமுடியாமல் எவ்வளவு விரிவாக சொல்ல வேண்டியிருக்குன்னு நீங்களே பாருங்க. ஒவ்வொரு வார்த்தையும் பிரித்து எழுதி, அதன் பொருளை புரிந்து கொண்டு, பிறகு மொத்த சரணத்தையும் ரசிச்சி அனுபவிக்குமாறு இருக்கும். மொதல்லே இந்த பாடலையும், அதன் பொருளையும் பாத்துடுலாம்.


****


ஈதநீக வாசுதேவனு லோகதொடேயா


தாசகொலிது தேரலேறி தேஜி பிடிது நடேசிதாத (ஈதநீக)


உலகத்தைக் காக்கும் கடவுள், இந்த வாசுதேவன் இவனே


தன் பக்தனுக்காக தேரேறி சாரதியாக சென்றவன் இவனே


தனுஜேயாள்வ தன்னநய்யன பிதன முந்தே கௌரவேந்திரன


அனுஜயாளிதவன சிரவ கத்தரிசுதா


அனுஜயாளிதவன பெங்கி முட்டதந்தே காய்தா ருக்மன


அனுஜயாளிதவன மூர்த்தியன்னு நோடிரோ (ஈதநீக)


சூரிய அஸ்தமனத்திற்கு முன் ஜயத்ரதனின் தலையை துண்டிப்பேன் - இல்லையேல் தீக்குளிப்பேன் என்று சொன்ன அர்ஜுனனை தீக்குளிக்காமல் காத்த ஸ்ரீ வாசுதேவனின் அழகான மூர்த்தியை பாருங்கள் (ஈதநீக)


க்ரூரனாத பணிபபான தருணிஜனு நிரீக்ஷிசி யாக


வீரநெஜ்ஜே எசுகே ஒப்புதன்னு ஈக்ஷிசி


தாருணிய பததளொங்கி சரண பஜப நரன காய்தா


பாரகர்த்தனாத தேவ ஈத நோடிரோ (ஈதநீக)


சூரிய புத்திரனான கர்ணன் போரின்போது நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மேல் எய்தபோது பூமியை காலால் அழுத்தி தேரை கீழே அழுத்தி அர்ஜுனனைக் காத்த ஸ்ரீ கிருஷ்ணனை பாருங்கள் (ஈதநீக)


வ்யோமகேஷ இப்ப தெஷேய ஆமஹா மஹிமேயுள்ள


சாமஜவனு ஏறி பருவ சக்தியனு ஈக்ஷிசி


பிரேமதிந்தா எரவநோட்டி டிங்கரிகன காய்தா


சார்வபௌம படதாதி கேசவன நோடிரோ (ஈதநீக)


ஈசன் இருக்கும் திசையிலிருந்து மிகவும் பலம் பொருந்திய யானையின் மீதேறி வந்து சண்டையிட்ட (பகதத்தனின்) விஷ்ணு அஸ்திரத்தை தன் மார்பில் மாலையாக ஏந்தி அர்ஜுனனைக் காத்த அந்த கேசவனை பாருங்கள் (ஈதநீக)


***


என்னடா, பாட்டுக்கும் பொருளுக்கும் சம்மந்தம் இருக்கற மாதிரியே தெரியலையேன்னு நினைக்கிறீங்களா? பொறுமை பொறுமை.


விளக்கத்துக்கு போவதற்கு முன், இந்த பாட்டின் காணொளியை பாத்துடுவோம். PBS தன் அருமையான குரலில் மிகமிக பக்தி/ உணர்ச்சிபூர்வமாக பாடி, ராஜ்குமார் நடித்துள்ள காட்சியில் இந்தப் பாடல்.



***


இப்போ பாடலின் விளக்கம். முதலில் பல்லவி, பிறகு ஒவ்வொரு சரணமா பார்க்கலாம். ரெடி? ஜூட்.


பல்லவி:


அருஞ்சொற்பொருள்:


ஈத = இவர்


ஈக = இப்போ


தாசகொலிது = தாச + கொலிது = பக்தன், இந்த இடத்தில், அர்ஜுனன். So, அர்ஜுனனைக் காப்பாற்ற


தேஜி = குதிரை


விளக்கம்:


தன் பக்தன் அர்ஜுனனைக் காப்பாற்ற, தேரிலேறி பார்த்த-சாரதியாய் சென்ற, இந்த உலகத்தை ரட்சிக்கும் வாசுதேவன் இவனே.


சரணம் 1:


அருஞ்சொற்பொருள்:


தனுஜே = த + அனுஜே = அரக்கன் + சகோதரி = அரக்கனின் சகோதரி = (மகாபாரதத்தில் வரும்) ஹிடிம்பா


ஆள்வ தன்னநய்யன பிதன = ஆள்வ + அண்ண + அய்யன + பிதன = கணவனின் அண்ணனின் தந்தையின் தந்தை. அதாவது, ஹிடிம்பாவின் கணவன் பீமன், அவர் அண்ணன் தருமர், அவர் தந்தை யமதேவன் (அம்சம்), அவர் தந்தை சூரியதேவன்.


கௌரவேந்திரன அனுஜெயாளிதவன = கௌரவேந்திரனின் + அனுஜே + ஆளிதவன. அதாவது, துரியோதனின் + சகோதரியின் + கணவனின் = ஜயத்ரதனின்


மூன்றாம் வரி:


அனுஜெயாளிதவன பெங்கி முட்டதந்தே காய்த


அனுஜே + ஆளிதவன = சகோதரியின் + கணவன் = (கிருஷ்ணனின் சகோதரி) சுபத்ராவின் கணவன் அர்ஜுனன்.


பெங்கி = நெருப்பு


முட்டதந்தே = சுடாமல்,


எரிக்காமல் காய்த = காப்பாற்றிய அதாவது, அர்ஜுனனை நெருப்பு சுடாமல் காப்பாற்றிய


நான்காம் வரி:


அனுஜே + ஆளிதவன = சகோதரியின் + கணவன் = (ருக்மனின்) சகோதரி ருக்மிணி. அவர் கணவர் கிருஷ்ணன்.


மூர்த்தியன்னு நோடிரோ = ரூபத்தை பாருங்கள்.



விளக்கக் கதை:


சக்கர வியூகத்துக்குள் நுழைந்த அபிமன்யு, வெளியில் வர முடியாதவாறு அந்த வியூகத்தை மூடிய ஜெயத்ரதனே, அபிமன்யுவின் மரணத்திற்கு காரணம் என்ற அர்ஜுனன், அடுத்த நாள் மாலைக்குள், ஜயத்ரதனை கொல்வேன் என்று சபதம் செய்தான். அப்படி கொல்ல முடியாவிடில், அன்று மாலையே நெருப்பில் குதித்து தன்னுயிரையும் மாய்த்துக் கொள்வேன் என்றும் கூறினான். பின்னர் கிருஷ்ணனின் உதவியால், ஜயத்ரதனை கொன்றான் அர்ஜுனன். இப்படியாக, அர்ஜுனன் உயிருக்கு பங்கம் வராமல், அர்ஜுனனைக் காப்பாற்றினான் கிருஷ்ணன்.


சரணம் 2 :


அருஞ்சொற்பொருள்:


க்ரூரனாத = மிகவும் அபாயமான


பணிபபான = பணிப + பாண = நாகம் + அஸ்திரம் = நாகாஸ்திரம்


தருணிஜனு = தருணி + ஜனு = சூரியனுக்கு + பிறந்த. அதாவது, சூரியனுக்கு பிறந்த, கர்ணன்.


நிரீக்ஷிசி = தக்க சமயத்துக்கு, தக்க சமயத்தில்


வீரநெஜ்ஜே எசுகே = மிகவும் வீரத்துடன், எய்த அம்பு


பப்புதன்னு = வருவதை


ஈக்ஷிசி = பார்த்து


தாருணிய பததளொங்கி = பூமியை காலால் அழுத்தி


சரண பசப நரன காய்த = சரணாகதி செய்த நரனை (அர்ஜுனனை) காப்பாற்றிய


பாரகர்த்த = அனைத்து செயல்களுக்கும் காரணமானவன். அதாவது, பிறப்பு, இறப்பு, காத்தல் ஆகிய அனைத்திற்கும் காரணமான


விளக்கக் கதை:


நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மேல் மட்டும்தான் பிரயோகிக்க வேண்டுமென்றும், அதுவும் ஒரே ஒருமுறைதான் பயன்படுத்த வேண்டுமென்றும், கர்ணனிடம் குந்தி வரம் பெற்றிருந்தார். அதன்படி, கர்ணன் அதை பிரயோகிக்கும்போது, அர்ஜுனனைக் காக்க வேண்டி, கிருஷ்ணன், பூமியை அழுத்தி, தேரை சற்று கீழே அழுத்தி, அர்ஜுனன் மார்புக்கு வந்த அந்த நாகாஸ்திரத்தை, கிரீடத்தில் படுமாறு செய்து, அர்ஜுனனைக் காப்பாற்றினார்.


சரணம் 3 :


அருஞ்சொற்பொருள்:


வ்யோமகேஷ = வ்யோம + கேஷ = காற்று + முடி. அதாவது, தன் தலைமுடியை காற்றில் வலை போல் விரித்து, பாய்ந்து வரும் கங்கையை அடக்கியதால், சிவனுக்கு 'வ்யோமகேசன்' என்று பெயர்.


இப்ப தெஷேய = இருக்கும் திசையில்.


சாமஜ = யானை


சக்திய = (இந்த இடத்தில்) நாராயண அஸ்திரம்


எரவநோட்டி = இடையில் (நடுவில்) புகுந்து


டிங்கரிகன = தாசனை (பக்தனை)


விளக்கக் கதை:


சிவன் இருக்கும் திசை. அதாவது கைலாயம் இருக்கும் திசை வடகிழக்கு. அந்த திசையில் இருந்த ப்ரக்ஜ்யோதிஷா என்னும் ஊரின் அரசன் பகதத்தன். தன் யானையான 'சுப்ரதீபன்' மீதேறி, கௌரவர்கள் சார்பாக போரிட்ட மாவீரன். அந்தப் போரில் ஒரு முறை, பகதத்தன், வைஷ்ணவாஸ்திரம் என்னும் அஸ்திரத்தை ஏவ, அதனால் அர்ஜுனனுக்கு கண்டிப்பாக மரணம் ஏற்படுமென்று தெரிந்து கொண்ட ஸ்ரீ கிருஷ்ணன், நடுவில் புகுந்து அதை தன் மார்பில் ஏற்றார். அது அவர் கழுத்தில் மாலையாக விழுந்தது.


***


அவ்வளவுதான். இப்படியாக, இந்த பாட்டில், அர்ஜுனனைக் காப்பாற்றிய கிருஷ்ணனின் மகிமையை புகழ்ந்து பாடியுள்ளார் ஸ்ரீ கனகதாசர். இப்போ மறுபடி அந்த காணொளியை பாருங்கள். சூப்பரா புரியும்.


அனைத்தும் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.


***


Tuesday, February 01, 2011

என்னை உன் தாஸனாக ஏற்றுக் கொள்வாய்!

நாம் இன்று பார்க்கப் போகும் பாடலின் ஆசிரியர், த்வைத சித்தாந்தத்தில் 15ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு மகான். தாஸர். வேத, புராண, இதிகாசங்கள் அனைத்தின் சாரத்தையும், சர்வோத்தமனான பரந்தாமனின் பேர், குணம், அவதாரங்கள், சிறப்பு ஆகிய அனைத்தையும் அனைவருக்கும் புரியும்படியாக எளிய கன்னடத்தில் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தவர்.

யார் அவர்? அவர்தான் - நாரதரின் மறுபிறவி என்று கருதப்படும் - ஸ்ரீ புரந்தரதாஸர்.


எதுக்கு இன்னிக்கு அவர் பாடலை எடுத்துக்கிட்டோம்? ஏன்னா, இன்று ஒரு சிறந்த தினம். புஷ்ய மாத அமாவாசையான இன்றுதான் ஸ்ரீ புரந்தரதாஸரின் புண்ய தினம். ஆராதனை. உலகெங்கிலுமுள்ள தாஸரின் தாஸர்கள் அவரது பாடல்களை பாடி கடவுளை வழிபடும் நன்னாள்.

ஸ்ரீ மத்வர் உருவாக்கிய த்வைத சித்தாந்தத்தில் வந்த ஸ்ரீ வியாஸராயரின் பிரதம சீடர் நம்ம புரந்தரதாஸர். பாடல்கள் மூலமாக மக்களின் அறியாமையை அகற்றி அவர்களை பக்தி மார்க்கத்திற்கு திருப்ப வேண்டுமென்ற தன் குருவின் கட்டளையை ஏற்று எண்ணற்ற பாடல்களை பாடியவர்.


கடவுளை தன் தலைவனாக, நண்பனாக, குழந்தையாக இன்னும் பல்வேறு ரூபங்களில் நினைத்து, வர்ணித்து, உருகி அவர் இயற்றிய பாடல்கள் அனைத்தும் அரிய பொக்கிஷங்கள். அட, இதேதானே நம்ம தமிழ் ஆழ்வார்களும் செய்திருக்காங்கன்னு உங்களுக்கு தோணும். மிகச் சரி. தமிழில் ஆழ்வார்கள் என்றால் கன்னடத்தில் ஹரி-தாஸர்கள். அதாவது ஹரிதாஸர்கள். (இதில் புரந்ததாஸர், கனகதாஸர்னு வரிசையா நிறைய பேர் இருக்காங்க).

மறுபடி புரந்தரதாஸருக்கே வருவோம்.

**

பக்தியில் ஐந்து விதமான பக்தி உண்டு என்று சொல்லப்படுகிறது. அது என்ன?

தாஸ்ய பாவம் - கடவுளை தலைவனாகவும், தன்னை அடிமையாகவும் நினைத்து வழிபடுவது; பாடுவது.

சக்ய பாவம் - கடவுளை நண்பனாக நினைத்து வழிபடுவது.

மதுர பாவம் - கடவுளை கணவனாக நினைத்து பாடுவது. (கோபிகைகள் கண்ணனை நினைத்து உருகுவது இதில் வரும்).

வாத்ஸல்ய பாவம் - கடவுளை ஒரு குழந்தையாக நினைத்துக் கொள்ளுவது.

சாந்த பாவம் - இதில் பக்தன் உணர்ச்சி வசப்படாதிருப்பவன். அமைதியே உருவானவன். இந்த நிலையில் கடவுளை நினைத்து பாடுபவன்.

நம்ம தாஸர் (மற்ற அனைத்து தாஸர்களைப் போலவே), மேலே சொன்ன இந்த ஐந்து பாவங்களிலும் ஏகப்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.


இன்று நாம் பார்க்கப்போகும் பாடல் - தாஸ்ய பாவத்தை சார்ந்தது.

அதாவது கடவுள் என்பவன்

தலைவன்.
முதலாளி.
அனைத்திற்கும், அனைவருக்கும் மேலானவன்.
சர்வோத்தமன்.

நானோ

அவன் தாஸன்
வேலைக்காரன்.
தலைவன் என்ன சொல்வானோ, அதை நான் செய்வேன்.
எனக்கு என்ன வேண்டுமோ அதை அவனே பார்த்து கொடுப்பான்.

இப்படியான உத்தமமான நிலைதான் தாஸ்ய மனோபாவம்.

இப்போ இந்த பாடலையும், அதன் பொருளையும் பாருங்க. உங்களுக்கே புரியும்.

**

தாஸன மாடிகோ என்ன
ஸ்வாமி சாசிர நாமத வேங்கடரமணா (தாஸன)


Infinity பெயர்களை கொண்ட வேங்கடரமணனே, ஸ்வாமி, என்னை உன் தாஸனாக ஏற்றுக் கொள்.

துர்புத்தி களனெல்ல பிடிஸோ
நின்ன கருணகவசவென்ன ஹரணக்க தொடிஸோ
சரணசேவே எனகெ கொடிஸோ
அபய கரபுஷ்பவ என்ன சிரதல்லி முடிஸோ (தாஸன)


கெட்ட எண்ணங்களை என் மனதிலிருந்து விடுவிப்பாய்
உன் கருணை என்னும் கவசத்தால் என் வாழ்க்கையை ரட்சிப்பாய்
உன் திருவடியை வணங்கி சேவை செய்யும் பாக்கியத்தை எனக்கு கொடுத்து
உன் அபயத்தை அளிக்கும் கரத்தை என் தலையில் வைத்து என்னை காப்பாற்று.

த்ருடபக்தி நின்னல்லி பேடி
நான் அடிகெரகுவேனய்ய அனுதின பாடி
கடெகண்ணிலே என்ன நோடி
பிடுவே கொடு நின்ன த்யானவ மனசுசி மாடி (தாஸன)


எப்போதும் மாறாதிருக்கும் திடமான பக்தியை உன்னிடத்தில் வேண்டி,
நான் உன் பாதத்தில் தினமும் விழுந்து உன் நாமத்தை பாடிக்கொடிருப்பேன்.
உன் கடைக்கண்ணால் என்னை பார்த்து
நான் என்றென்றும் உன்னை தூய மனதோடு நினைத்துக்கொண்டிருக்குமாறு அருள்புரிவாய்.

மரெஹொக்க வரகாய்வ பிரிது
என்ன மரெயதே ரஷணே மாடய்ய பொரது
துரிதகளெல்லவ தரிது
ஸ்ரீ புரந்தரவிட்டல என்னனு பொரெது (தாஸன)


காப்பாற்று என்று உன்னை வேண்டியவருக்கெல்லாம் சமயத்தில் வந்து உதவி புரிந்த வரலாறு இருக்கிறது
அதே போல் (நானும் வந்திருக்கிறேன்) என்னையும் கண்டிப்பாக காப்பாற்று
என் அனைத்து பாவங்களையும் போக்கி
உன் கருணையால் என்னை கரையேற்று ஸ்ரீ புரந்தர விட்டலா!

முதல் இரண்டு பத்திகளில் பக்தி மேலோங்க பெருமாளிடம் வேண்டுகோள் வைக்கும் தாஸர், கடைசி பத்தியில் உரிமையுடன் கேட்பது போல் பாடியிருக்கிறார். கஜேந்திர மோட்சம், த்ரௌபதிக்கு அபயம் அளித்தது இது போன்ற உதாரணங்கள் இருக்கிறதே, அதே போல் எனக்கும் அபய ஹஸ்தம் கொடுப்பாய் என்று கேட்கிறார்.

**

இப்படி தாஸ்ய பாவத்தில் உருகி பாடியிருக்கும் புரந்தரதாஸரின் பாடலை யாரு பாடினா பொருத்தமாயிருக்கும்?

தினந்தோறும் அந்த வேங்கடரமணனையே ‘சுப்ரபாதம்’ சொல்லி எழுப்பும் - அந்த திருப்பதி வேங்கடவனின் காலடியிலேயே நிரந்தரமாய் தங்கி சேவை புரியும் - நம்ம எம்.எஸ்.அம்மாதான். வேறே யாரு?. பாடலின் முழுமையான அர்த்தத்தை புரிந்தவாறு, ஆத்மார்த்தமான பக்தியுடன் அம்மா பாடுவதை பார்த்து, கேட்டு மகிழுங்கள்.

தாஸன மாடிகோ என்ன..





**

ஜெய் ஜெய் விட்டல ! பாண்டுரங்க விட்டலா !!
ஜெய் ஜெய் விட்டல ! புரந்தர விட்டல !!


**

நன்றி
ச்சின்னப் பையன்
http://dasar-songs.blogspot.com

**

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP