6. நாளை என்பதை யார் தான் கண்டார்?
நாளை நாளை நாளை என்கின்றாய்
நாரணன் நாமத்தை நீ சொல் என்றால்
நாளை என்பதை யார் தான் கண்டார்
நாளும் சொல்வாய் நாயகன் நாமம்
கண்ணன் மாதவன் காகுத்தன் கோவிந்தன்
எண்ணமெங்கும் நிறைந்து தித்திப்பான்
தண்ணந் தாமரைக் கண்ணன் அவனே
திண்ணமாய் அவன் திருநாமம் சொல்வாய்
குழகன் கோவிந்தன் கூடல் மாயவன்
பழக இனியவன் பாடும் அடியவரை
எழில்கொள் தன்னடி சேர்ப்பான் மனமே
அழகன் அவன் புகழ் அன்புடன் சொல்வாய்
கூடல் அழகர், திருக்கூடல் (மதுரை)
பாவைத்திருநாளில் அடியேனின் (குமரனின்) சிறிய பாமாலை.
மார்கழி 2 - வையத்து வாழ்வீர்காள் - இரண்டாம் பாமாலை
23 comments :
நாராயணன், கோவிந்தன், நினைப்போர்க்கு இனியவன்
ஓராயிரம்நாமம் உரக்கச் சொல்வீர் - நேராக
வருவான், அடியவர் வேண்டுவது அறிந்து
தருவான், தயாபரன் அவனே!
நாளை நாளை யார் அறிவார்? அந்
நாரணன் அன்றி வேறுயவர் அறிவார்.
நாளும் கோளும் அவனறிவன், திரு
மாலவன் தன்னை நாமறிந்தோம் !
ரவி,
உங்கள் ஆன்மிக எழுத்துக்கள் வலைப்பூக்களில் தொடுக்கப்படும் துளசிமாலை !
வாழ்த்துக்கள் !
வாத்தியார் ஐயா. வெண்பா மிக நன்றாக இருக்கிறது. பெருமாளுக்கு நாராயணன் என்பதும் கோவிந்தன் என்பதும் மிகச்சிறப்பான பெயர்கள் என்பார்கள். நாராயணன் என்பது பரத்வத்தையும் (எல்லோருக்கும் மேலாம் தன்மை) கோவிந்தன் என்பது சௌலப்யத்தையும் (எல்லோருக்கும் எளிவந்த தன்மை) குறிக்கும். அவ்விரணடையும் உங்கள் வெண்பாவில் இட்டு அவனது பெருமையையும் பக்தியுடைய அடியவர்களுக்கு அவன் எளியவன் என்பதையும் மிக நன்றாகச் சொன்னீர்கள்.
கட்டாயம் தருவான் தயாபரன் அவன்.
வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள் கோவி.கண்ணன் அண்ணா.
Very good song.
Kishore.
நாரணன் நாமம் நாளும் சொல்ல
காரணம் இன்றிப் பாவமும் தீருமே
நீரதைச் சொல்லி எமக்களித்தது
வேறென்ன சொல்ல! களிப்பே! களிப்பே!
நன்றி கிஷோர்.
நன்றி எஸ்.கே.
நல்ல பாடல் குமரன்
எண்ணமெல்லாம் நிறைந்து
தித்திக்கும் அவன் நாமம் சொல்ல
நாவெல்லாம் தித்திக்கும்
காகுத்தன் - ?????
//கோவி.கண்ணன் [GK] said:
ரவி,
உங்கள் ஆன்மிக எழுத்துக்கள் வலைப்பூக்களில் தொடுக்கப்படும் துளசிமாலை !//
GK ஐயா, மிக்க நன்றி!
ஆனால் அடியேன் எழுத்து அன்று!
இது குமரன் புனைந்த கவிதை ஐயா!
முன்பு ஒரு முறை அடியேன் விளக்கத்தைப் பாராட்டிக் குமரனுக்கு நன்று என்று சொன்னீர்கள்; இப்போது அதை நேர் செய்து விட்டீர்களா?:-))
//மதுமிதா said...
காகுத்தன் - ?????//
அக்கா,
காகுத்தன் = இராமன்.
ககுஸ்தன் என்பவர் இராமனின் மூதாதையரில் ஒருவர். அவர் பெயரை ஒட்டி, இந்தப் பெயர் இராமனுக்கு!
ககுஸ்தம்=எருதின் திமில்.
இந்திரன் எருதாக உருவம் எடுக்க அதன் மீது அமர்ந்து அசுரர்களை வென்றவன் புரஞ்செயன். அதனால்
ககுஸ்தன் என்ற அவன் பெயர் பெற்றான்.
இவன் இராமனின் முன்னோரில் ஒருவன்.
ககுஸ்தன் தமிழில் காகுத்தன் என்று ஆனது.
//குழகன் கோவிந்தன் கூடல் மாயவன்//
நல்ல எளிமையான கவிதை குமரன்!
பாடலில் கூடல் மாயவன் என்று போட்டு,
படத்திலும் கூடல் மாயவன் போட்டு விட்டீர்களே!
நன்றி.
இன்று போய் நாளை வா என்று தெய்வம் சொன்னதாகக் கருதுகிறவர்களுக்கு நாளை என்பதை அவன் கண்டான் என்பதும் உண்மைதானே ;-)
இறைவனே அனைத்தும் அறிய வல்லான். நாம் எவ்வளவு அறிந்தாலும் மெய்யறிவோடு ஒப்பிடுகையில் அதெல்லாம் அறியாமைதான்.
நன்றி மதுமிதா அக்கா. உங்கள் கேள்விக்கு இரவிசங்கர் பதில் சொல்லியிருக்கிறார் பார்த்தீர்களா?
ஆமாம் இரவிசங்கர். வேண்டிய வேதங்களோதி விரைந்து கிழியறுத்த வேயர் புகழ் வில்லிபுத்தூர் கோன் விட்டுசித்தர் பல்லாண்டு பாடிப் பரவிய எங்கள் கூடல் அழகருக்கான பாடலே இது.
பாருங்கள் இராகவன். நீங்கள் சொன்னதும் இந்தப் பாடலில் வந்துவிட்டது. கண்ணனைச் சொல்லிக் கொண்டே வரும் போது நடுவில் ஏன் காகுத்தன் வந்தான் என்று கேள்வியிருந்தது. இப்போது தெரிகிறது ஏன அவன் வந்து நுழைந்தான் என்று. :-) இன்று போய் நாளை வா என்று சொன்ன சத்திய சந்தன் இராமனுக்கு நாளை என்பது இன்றைக்கு மறு நாளாக இருந்து அதன் படி நடந்தது. அவனையும் நாம் தெய்வம் என்கிறோம். ஆனால் அடியேனைப் போன்றவர்களுக்கு அப்படியா? எப்படா வாய்ப்பு கிடைக்கும் எல்லாரையும் ஏமாற்றலாம் என்று திரிகிறேனே. அதனால் தான் என் மனதிற்குச் சொன்னேன்; நாளை என்பதை யார் தான் கண்டார்? நம்மைப் போன்ற அசத்தியசந்தர்களுக்கு நாளை என்பது என்றுமே நாளை தான். சொன்ன சொல் தவற மாட்டேன் என்று என்றுமே நாளை நாளை என்று நாளைத் தள்ளிப்போடுவோமே. :-)
மிக நல்ல பாடல் குமரன். அழகாக எழுதியிருக்கிறீர்கள்.
ரங்கா.
அன்புக் குமரன்!
காகுந்தன்;குழகன் கண்ணனின் மறு பெயர்களா???இன்றே கேள்விப்பட்டேன். தண்ணந் தாமரை என்பது குளிர்ந்த தாமரை எனக் கருதுகிறேன். நான் நினைப்பது சரியா??
மிக அழகான பாடல்கள்!!இவை வெண்பாவா..??? மிக நன்று
யோகன் பாரிஸ்
நன்றி ரங்கா அண்ணா.
ஆமாம் யோகன் ஐயா. காகுத்தன் என்பது இராமனின் மறு பெயர். பெயர் விளக்கம் மேலே இரவிசங்கர் கொடுத்திருக்கிறார். குழகன் என்றால் குமரன் என்ற பொருள் தரும். குழவி என்றால் சிறு குழந்தை. குழகு என்றால் இளமை. குழகன் என்றால் இளைஞன். குழகன் என்று கண்ணனை ஆழ்வார்கள் அழைத்திருக்கிறார்கள்.
உங்களின் மற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் விட்டுவிட்டேன்.
தண்ணந் தாமரை என்பது குளிர்ந்த தாமரை தான். இவை வெண்பா இல்லை. எந்த வகை மரபுப்பா என்று தெரியாது. சொல்லிப் பார்த்து சந்தத்தோடு அமைத்துப் பாடியது தான். எந்த மரபுப்பா இலக்கணமும் தெரியாது.
தங்கள் பாராட்டிற்கு நன்றி.
its a very timely post. i thought it was about saddam & bush.
tomorrow is bush? & got disappointed a little. its ok.
chinnathambi
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்
செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி,
நெய் உண்ணோம்; பால் உண்ணோம்; நாட்காலே நீராடி
மை இட்டு எழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யாதன செய்யோம்; தீக்குறளைச் சென்று ஓதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யும் ஆறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய்.
உலகத்தில் வாழ்பவர்களே! நாமும் நம் பாவை நோன்பிற்காகச் செய்ய வேண்டிய முறைகளைக் கேளுங்கள்! பாற்கடலில் அமைதியாக உறங்குகின்ற பரமனின் திருவடிகளைப் பாடுவோம். நெய் உண்ண மாட்டோம். பால் உண்ண மாட்டொம். அதிகாலையில் நீராடுவோம். கண்களில் மையிட மாட்டோம். கூந்தலில் மலர்களைச் சூடமாட்டோம். செய்யக் கூடாதவற்றைச் செய்ய மாட்டொம். தீமையான கோள் சொல்வதை செய்யமாட்டோம். மாணவர்களுக்கும் துறவிகளுக்கும் முடிந்த அளவிற்கு பொருள் உதவி செய்வோம். உய்யும் வழியினை எண்ணி மகிழ்ந்திருப்போம்.