புது வருடம் பிறக்கிறது. உலகில் எத்தனை எத்தனை துயரங்கள்! பிறக்கும் புது வருடத்திலாவது இந்தத் துயரங்களுக்கு எல்லாம் விடிவு காலம் பிறக்காதா என்ற ஏக்கம் தான் மனத்தில் நிற்கிறது. இலங்கையில் நம் உடன்பிறந்தோர் படும் துயரங்கள் துன்பங்களில் இருந்து தொடங்கிச் சொன்னால் சொல்லி முடியாது. அதனால் புது வருட வாழ்த்துகள் அனுப்பும் நண்பர்களின் வாழ்த்துகளை அரைகுறை மனத்துடனே ஏற்றுக் கொள்ளத் தோன்றுகிறது. கொஞ்சம் தயங்கி, பின்னர் அவர்களின் அன்பிற்காக அந்த நண்பர்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டு, அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள் அனுப்பத் தோன்றுகிறது.
இறைவனின் எல்லையற்ற கருணையில் நம்பிக்கை வைத்து இந்த வருடத்தைத் துவக்கி அவன் நல்லருளால் எல்லாமே நன்மையாக நடக்க வேண்டும் என்று வேண்டி இந்தக் கவிதையை இன்று இயற்றி இறைவணக்கமாகவும் புது வருட வாழ்த்துகளாகவும் அன்பு நண்பர் இரவிசங்கர் கண்ணபிரானின் அன்புக் கட்டளைக்கேற்ப இங்கே இடுகிறேன்.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா இறைவா இறைவா! பித்தராய் நாங்கள் உன் பெருமை அறியாமல் பிதற்றுகிறோம் இறைவா! அத்தனை கோடி இன்பங்களும் இங்கே அனைவருக்கும் கிடைக்க அத்தனே உன்னை அடிபணிகின்றோம் அருள்வாய் அருள்வாய் அருள்வாய்!
காயிலே புளித்தாய் கனியிலே இனித்தாய் கடல்வண்ணா கருணைக்கடலே! நோய் நொடி இன்றி நீனிலத்தவர் வாழ நீயருள்வாய் கண்ணா! பேய்முலை உண்டு பெரும்பழி தீர்த்தப் பெருமான் உன்னருளாலே பேய்த்தனம் நீங்கி பேதைமை நீங்க பெற்றியைத் தந்தருள்வாய்!
மாயமாய் போனதே முந்தைய வருடங்கள், மாதவா உன்னருளால் நேயமாய் இரண்டாயிரத்தேழாம் வருடம் நினைவினில் நிற்க நிற்க! நீயருள் செய்க! நாயகன் அருளால் நானிலம் வாழ்க வாழ்க! நிறைமதி பெரும்புகழ் நிறைவுடன் பெற்றுமே அனைவரும் வாழ்க வாழ்க!
இது நம்ம dubukudisciple (சுதா) தயாரித்த பதிவு! அவர் தமிழ்மணத்துக்கு அனுப்பும் படி என்னிடம் கேட்டுக் கொண்டார்! Post-இல் அவர் பெயர் தெரிந்தாலும், தமிழ்மணம் மட்டும் அவர் பெயரில் ஏனோ எடுத்துக் கொள்ளவில்லை! எல்லாப் புகழும் dubukudisciple க்கே!
மதுரைப் பக்கம், சோலமல தெரியுங்களா சாமீ? சோலை மலை = திருமாலிருஞ்சோலை திருமால் இருஞ் சோலை; அது நறுஞ் சோலை. இழும் என இழிதரும் அருவி, பழமுதிர்ச் சோலை! திவ்ய தேசம்!
அட, நம்ம அழகர் கோவிலைச் சொல்றீங்களா! கள்ளழகர் தெரியாதா என்ன? ஆண்டாள் விரும்பிய கள்ளழகன், இந்தக் கோவிலில் இருப்பவன்! பரமசுவாமி, சுந்தரராஜன் என்று பெயர்; கொஞ்சு தமிழில் கள்ளழகர்!
அவனைப் பற்றிய கும்மிப் பாட்டு ஒன்று கிடைத்தது! எழுதியவர் யார் என்று தெரியவில்லை! ஆனால் அழகர் கோவில், மதுரைப் பக்கம் பரவலாகப் பாடப்படும் கும்மியாம்! இதை கண்ணன் பாட்டு வலைப்பூவுக்காக அனுப்பினார் நம் நண்பர் மெளலி சார். மதுரையம்பதி என்று பின்னூட்டம் இடுவார்!
இயலுடன் இசை சேர்ந்தால் கொண்டாட்டம் தானே! யார் பாடித் தருவது என்று யோசித்தேன்; கண்ணனை யாசித்தேன்! பாட்டை வாசித்தேன்! வாசிப்பதும், வடிவான குரலில் பாடுவதும் ஒன்றாகி விட முடியுமா?
நல்ல கணவன் வேண்டி மார்கழி நோன்பு இருப்பது தானே தத்துவம், வழக்கம்! அன்று ஆண்டாள் செய்ததை, அப்படியே நாட்டுப்புற வழக்கமாக செய்யும் இந்தச் சோலைமலைப் பெண்களைப் பாருங்கள்! முன்னாடி சாமியை கும்பிடடி பின்னே முத்துப் போல புருசன் வருவானடி என்றல்லவா பாடுகிறார்கள்! என்ன அழகான கும்மி! இன்னொரு முறை கேட்டு, நாமும் பாடி ஆடலாம் வாங்க! மார்கழி 15 - எல்லே இளங்கிளியே - பதினைந்தாம் பாமாலை.
கண்ணன் பாட்டு வலைப்பூவில் இது போன்ற கூட்டு முயற்சிகள் சிறக்க வேண்டும் என்று அந்தக் கண்ணனையே வேண்டுவோம்! நன்றி வல்லியம்மா, நன்றி மெளலி சார்!
பல அன்பர்கள், பாடல் வரிகளும், ஒலிச் சுட்டி்களும், தனி மடலில் தந்த வண்ணம் உள்ளார்கள்! அவர்கள் எல்லார்க்கும் இந்த வைகுந்த ஏகாதசி நன்னாளில் நன்றி! ஒவ்வொன்றாகப் பதிவில் இடுகிறோம்; இடும் முன்னர் தங்களுக்குத் தனி மடலிலும் தெரியப்படுத்துகிறோம்!
இந்தப் பாடலில் மூன்று பெரும் பக்தர்கள் பற்றிக் குறிப்பு வருகிறது! கடைசிக் பத்தியில்! யார் யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்!
யாரென்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே ஐயன் கருணையை பாடு ராக ஆலாபனம் உடனும் பாடு - முடிந்தால் அடவோடும் ஜதியோடும் ஆடு அருமை என வந்த பிறவிகளோ பல ஆயிரம் தந்தாலும் வருமோ - ஆதலின் (யாரென்ன)
நாரத கானமும் வேதமும் நாண கான்க் குழல் ஒன்று தான் ஊதுவான் நீரதர் கழலாட கோபியரும் பாட வெகு நேர் நேரெனச் சொல்லி தானாடுவான் - அந்த ஐயன் கருணையை பாடு... (யாரென்ன)
தோலை அரிந்து கனி தூர எறிந்து வெறும் தோலைத் துணிந்து ஒருவன் தந்தான் அல்லவோ மேலைப் பிடி அவலை வேணுமென்றே தெரிந்து விரும்பி ஒருவன் அன்று தந்தான் அல்லவோ
காலமெல்லாம் தவம் இருந்து கனிந்த கனி கடித்துச் சுவைத்து ஒருவள் தந்தாள் அல்லவோ - இந்த ஞாலமும் ஆயிரம் சொன்னாலும் நாம் அதை நமக்கு எதற்கு என்று தள்ளி நாமமும் ஆயிரம் சொல்லிச் சொல்லி
ஐயன் கருணையை பாடு... ராக ஆலாபனம் உடனும் பாடு - முடிந்தால் அடவோடும் ஜதியோடும் ஆடு அருமை என வந்த பிறவிகளோ பல ஆயிரம் தந்தாலும் வருமோ - ஆதலின்(யாரென்ன)
மார்கழி 14 - உங்கள் புழக்கடை - பதினான்காம் பாமாலை. எழுதியவர்: ஊத்துக்காடு வேங்கட கவி ராகம்: மணிரங்கு தாளம்: ஆதி 1. இந்தப் பாடலைத் திராச ஐயா முன்பே பதிந்துள்ளதாக நினைவு! சரியாகத் தெரியவில்லை! திராச ஐயா, சரி பார்த்து, சுட்டி தாருங்களேன்!
கண்ணன் வருவான் கதை சொல்லுவான் வண்ண மலர் தொட்டில் கட்டித் தாலாட்டுவான் குழலெடுப்பான் பாட்டிசைப்பான் வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான் வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான் (கண்ணன் வருவான்)
பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க பட்டு வண்ணச் சிட்டு வந்து மலர் கொடுக்க கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க முத்தம் கொடுக்க...முத்தம் கொடுக்க...
தத்தித் தத்தி நடக்கையில் மயில் போலே திக்கித் திக்கி பேசுகையில் குயில் போலே கொஞ்சிக் கொஞ்சி எடுக்கையில் கொடி போலே அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே
உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான் இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான் ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான் உண்மையை அதிலே உறங்க வைத்தான் உறங்க வைத்தான்...உறங்க வைத்தான்...
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே (புல்லாங்குழல்)
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள் பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள் ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே (புல்லாங்குழல்)
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் (புல்லாங்குழல்)
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான் பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம் படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம் படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் (புல்லாங்குழல்)
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி (தாயே)
தையலே கேளடி உந்தன் பையனைப் போலவே இந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை (தாயே)
காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க முத்து மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான் காலசைவும் கையசைவும் தாளமோடு இசைந்து வர நீலவண்ணக் கண்ணன் இவன் நர்த்தனம் ஆடினான்
பாலனென்று தாவி அணைத்தேன் அணைத்த என்னை மாலையிட்டவன் போல் வாயில் முட்டமிட்டாண்டி பாலனல்லடி உன் மகன் ஜாலம் மிக செய்யும் கிருஷ்ணன் நாலு பேர்கள் கேட்கச் சொல்ல நாணமிக ஆகுதடி (தாயே)
முந்தாநாள் அந்தி நேரத்தில் சொந்தமுடன் கிட்டே வந்து விந்தைகள் அனேகம் செய்து விளையாடினான் ஒரு பந்தளவாகிலும் வெண்ணை தந்தால்தான் விடுவேன் என்று முந்துகிலைத் தொட்டிழுத்துப் போராடினான்
அந்த வாசுதேவன் இவன் தான் அடி யசோதா! மைந்தன்என்று தொட்டுஇழுத்து மடிமேல் வைத்து சுந்தர முகத்தைக் கண்டு சிந்தை மயங்கும் நேரம் அந்தர வைகுந்தமோடு எல்லாம் காட்டினான் அடி! (தாயே)
இந்தப் பாடல் இன்னும் பல பத்திகள் (சரணங்கள்) கொண்டு உள்ளது; மொத்தம் ஆறு சரணங்கள் என்றாலும், மிகப் பிரபலமாகப் பாடப் படும் சரணங்களே மேலே கொடுக்கப்பட்டுள்ளன. முழுதும் அறிய இங்கே செல்லவும்.
மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா!... மரணத்தின் தன்மை சொல்வேன்!... மானிடர் ஆன்மா மரணம் எய்தாது... மறுபடிப் பிறந்திருக்கும்!... மேனியைக் கொல்வாய்...மேனியைக் கொல்வாய்... வீரத்தில் அதுவும் ஒன்று! நீ விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி, சென்று தான் தீரும் ஓர் நாள்...
(கண்ணா, உனக்கு எல்லாம் தெரியும், ஆனால் எனக்கு உன்னைத் தான் தெரியும், பரந்தாமனைத் தான் தெரியும்! நீயா என்னை இந்தப் பாவச் செயலுக்குத் தூண்டுவது?)
என்னை அறிந்தாய், எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய்! கண்ணன் மனது கல் மனதென்றோ... காண்டீபம் நழுவ விட்டாய், காண்டீபம் நழுவ விட்டாய்! மன்னரும் நானே, மக்களும் நானே, மரஞ் செடி கொடியும் நானே... சொன்னவன் கண்ணன், சொல்பவன் கண்ணன்... துணிந்து நில், தர்மம் வாழ்க!
(ஆனால் கொல்லப் போகிறவன் நான் அல்லவா? அந்தப் பழியெல்லாம் எனக்கல்லவா? கண்ணன் காட்டிய வழி என்று நீ எண்ணியதை நான் செய்து விட்டால், அதனால் வரும் பாவ பலனை யார் சுமப்பது? இந்தக் கொலைக்கு நீ உடந்தை ஆவாயா? சொல், சொல்!)
புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே!... போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும், போகட்டும் கண்ணனுக்கே!... கண்ணனே காட்டினான், கண்ணனே தாக்கினான், கண்ணனே கொலை செய்கின்றான்!... காண்டீபம் எழுக, நின் கைவண்ணம் எழுக, இக் களமெலாம் சிவக்க, வாழ்க! ஆஆஆஆஆ...
பகவத் கீதை - பாரதியாரின் முன்னுரை (பாகம் 8 & 12) (வடமொழிச் சொற்கள் நீக்கி சில பகுதிகள் மட்டும் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன! பின் வருவன பாரதியாரின் வரிகள்...)
பகவத் கீதையைச் சிலர் கொலை நூலாகப் பாவனை செய்கிறார்கள். துரியோதனாதிகளைக் கொல்லும்படி அர்ஜுனனைத் தூண்டுவதற்காகவே, இந்தப் பதினெட்டு அத்தியாயமும் கண்ணபிரானால் கூறப்பட்டன. ஆதலால்,இது கொலைக்குத் தூண்டுவதையே தனி நோக்கமாகவுடைய நூல் என்று சிலர் பேசுகிறார்கள்.
கொலை செய்யச் சொல்ல வந்த இடத்தே, இத்தனை வேதாந்தமும், இத்தனை சத்வ குணமும், இத்தனை துக்க நிவர்த்தியும், இத்தனை சாகாதிருக்க வழியும் பேசப்படுவது என்னே என்பதை அச்சில மூடர் கருதுகின்றனர்.
துரியோதனாதியர் காமக் குரோதங்கள். அர்ஜுனன் ஜீவாத்மா. ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா. இந்த ரகசியம் அறியாதவருக்குப் பகவத் கீதை ஒருபோதும் அர்த்தமாகாது.
இந்நூல் ஞான சாஸ்திர்களில் முதன்மைப் பட்டிருப்பதுபோல், காவிய வரிசையிலும் மிக உயர்ந்ததென்பதற்குச் சான்றாகும். ஆனால், அதிலிருந்து இது ஞான சாஸ்திரமேயில்லை என்று மறுக்கும் மூடர், முகவுரையை மாத்திரமே வாசித்துப் பார்த்தார்களென்று தோன்றுகிறது.
முகவுரையில் மாத்திரமன்றே? நூலில், நடுவிலும் இடையிடையே, 'ஆதலால், பாரதா, போர் செய்', என்ற பல்லவி வந்துகொண்டே இருக்கின்றது அன்றோ? என்று கூறிச் சிலர் ஆட்சேபிக்கலாம்.
அதற்குத்தான் மேலேயே கீதா ரகசியத்தின் ஆதார ரகசியத்தை எடுத்துச் சொன்னேன். அதனை, இங்கு மீண்டும் சொல்லுகிறேன். துரியோதனாதிகள் - காமம், குரோதம், சோம்பர், மடமை, மறதி, கவலை, துயரம், ஐயம் முதலிய பாவ சிந்தனைகள். அர்ஜுனன் ஜீவாத்மா. ஸ்ரீ கிருஷ்ணன் பரமாத்மா
இயற்கை விதியை அனுசரித்து வாழ வேண்டும். அதனால் எவ்விதமான தீமையும் எய்த மாட்டாது. எனவே, சாதாரண புத்தியே பரம மெய்ஞ்ஞானம். இதனை, ஆங்கிலேயர் 'common sense' என்பர். சுத்தமான - மாசு படாத, கலங்காத, பிழை படாத சாதரண அறிவே பரம மெய்ஞ்ஞானாகும்.
சாதாரண ஞானத்தைக் கைக்கொண்டு நடத்தலே எதிலும் எளிய வழியாம். சாதாரண ஞானமென்று சொல்லு மாத்திரத்தில் அது எல்லாருக்கும் பொது என்று விளங்குகிறது.
ஆனால் சாதாரண ஞானத்தின்படி நடக்க எல்லாரும் பின் வாங்குகிறார்கள். சாதாரண ஞானத்தின்படி நடக்க ஒட்டாமல் ஜீவர்களைக் காமக் குரோதிகள் தடுக்கின்றன. சாதாரண ஞானத்தில் தெளிவான கொள்கை யாதெனில், நம்மை மற்றோர் நேசிக்க வேண்டுமென்றால், நாம் மற்றோரை நேசிக்க வேண்டும்' என்பது.
நம்மிடம் பிறர் அன்பு செலுத்த வேண்டுமென்று எதிர்பார்த்துக் கொண்டும், ஆனால் அதே காலத்தில் நாம் பிறருக்கு எப்போதும் மனத்தாலும் செயலாலும் தீங்கிழைத்துகொண்டும் இருப்போமாயின் - அதாவது பிறரை வெறுத்துக்கொண்டும், பகைத்துக் கொண்டும், சாபமிட்டுக் கொண்டும் இருப்போமாயின் - நாம் அழிந்து விடுவோமென்பதில் ஐயமில்லை
இப்பதிவு நம் ஐயா ஞானவெட்டியான் அவர்களின் சார்பாக! மேலும் சில அழகான பாடல் ஒலி (ஆடியோ), அனுப்பி உள்ளார்; ஒவ்வொன்றாகப் பதிவில் இடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இன்று, "கோபியர் கொஞ்சும் ரமணா"
இப்பதிவு அன்பர் Dubuku Disciple - சுதா பிரசன்னா அவர்களின் சார்பாக! மேலும் சில அழகான பாடல் வரிகளும், படங்களும் அனுப்பி உள்ளார்; ஒவ்வொன்றாகப் பதிவில் இடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இன்று, "குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும், குறை ஏதும் எனக்கேதடி சகியே.... "
குழலூதி மனமெல்லாம் கொள்ளைகொண்ட பின்னும் குறை ஏதும் எனக்கேதடி சகியே (குழலூதி)
அழகான மயிலாடவும் - மிக மிக அழகான மயிலாடவும் காற்றில் அசைந்தாடும் கொடிபோலவும்
அகமகிழ்ந்து இலகும் நிலவொளி தனிலே தனைமறந்து புள்ளினம் கூவ அசைந்தாடி மிக இசைந்தோடி வரும் நலம் காண ஒரு மனம் நாட தகுமிது என ஒரு பதம் பாட தகிட ததிமி என நடமாட கன்று பசுவினமும் நின்று புடைசூழ என்றும் மலரும் முக இறைவன் கனிவோடு (குழலூதி)
மகர குண்டலம் ஆடவும் - அதற்கேற்ப மகுடம் ஒளி வீசவும் மிகவும் எழில் ஆகவும் - காற்றில் மிளிரும் துகில் ஆடவும் (அகமகிழ்ந்து இலகும் நிலவொளி தனிலே...) (குழலூதி மனமெல்லாம்...)
இப்பதிவு அன்பர் மதுமிதா அவர்களின் சார்பாக! அவரே கண்ணனுக்காக எழுதிய பாடல்! இந்தப் பாடல் மதுரை வானொலியில் இசையமைக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது. நாள்: Oct 19, 1996 - மாலை 6.45 மணி
இந்தப் பாடலை, இன்று மார்கழி முதல் நாளில், கண்ணன் பாட்டு வலைப்பூவில், முதல் மாலையாகச் சமர்ப்பிக்கிறோம்! ஆண்டாள் திருவடிகளே சரணம்!
காற்றினிலே வரும் கீதம் கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம் கல்லும் கனியும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம் பண்ணொலி கொஞ்சிடும் கீதம் காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் மதுர மோகன கீதம் நெஞ்சினிலே நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி நினைவழிக்கும் கீதம் காற்றினிலே வரும் கீதம்
துணை வண்டுடன் சோலை குயிலும் மனம் குவிந்திடவும் வானவெளிதனில் தாராகணங்கள் தயங்கி நின்றிடவும் ஆ என் சொல்வேன் மாயப்பிள்ளை வேய்ங்குழல் பொழி கீதம் காற்றினிலே வரும் கீதம்
நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில் நீலநிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான் காலமெல்லாம் காலமெல்லாம் அவன் காதலை எண்ணி உருகுமோ என் உள்ளம் காற்றினிலே வரும் கீதம் அருஞ்சொற்பொருள்: பண்ணொலி - இசையுடன் கூடிய ஒலி மதுர - இனிமை மோகன - மனம் மயக்கும் கீதம் - பாடல்; இசை தாராகணங்கள் - தாரா என்றால் விண்மீன்கள்; தாராகணங்கள் என்றால் விண்மீன்கள் கூட்டம் வேய்ங்குழல் - மூங்கில் குழல்
மோகன முறுவல் முகம் கண்டு - பிறவி சோகம் தவிர்க்கும் விழி அருளை உண்டு - உன் தாள் மலர் தழுவிடத் தாகம் கொண்டு - நாளும் தவித்திடும் எனக்கு உன் தரிசனம் தந்திட (வருக வருகவே)
பாடியவர்: எம்.எஸ். சுப்புலக்ஷ்மி இயற்றியவர்: அம்புஜம் கிருஷ்ணா இராகம்: மோகனம் தாளம்: ஆதி
அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில் (அலைபாயுதே)
நிலை பெயராது சிலை போலவே நின்று நேரம் ஆவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என் மனம் (அலைபாயுதே)
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே - உன் திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே கண்கள் சொருகி ஒரு விதமாய் மருகுதே
கதித்த மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா - ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கரைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையறு கழல் எனக்கு அளித்தவா கதறி மனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ இது முறையோ இது தருமம் தானோ குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனதில் வேதனை மிகவொடு (அலைபாயுதே)
அன்று பாரதி பாடினான் - கண்ணன் பாட்டு! இன்று நாமும் பாடுகிறோம் - கண்ணன் பாட்டு!!
மார்கழி மாதத்தில் இந்தப் புதிய வலைப்பூ. இதில், நம்மை உடையவன், நாராயணன் நம்பி! அவனைக் குறித்த தமிழ்ப் பாடல்களின்
வரி (lyrics),
ஒலி (audio clips),
ஒளி (video clips).
எல்லாம் இடம் பெறப் போகின்றன! திரை இசை மட்டும் இல்லை, பிரபலமான எல்லாப் பாடல்களும் தான்!
இந்த வலைப்பூ நன்கு பூத்து, நாளும் மணம் தந்து மகிழ்விக்க, கணபதியானை வணங்கித் துவங்குகிறோம்! என்றும் போல் உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டுகிறோம்!
கூட்டு முயற்சியாக, குமரன், பாலாஜி மற்றும் அடியேன்; நீங்களும் இந்த முயற்சியில் பங்கு கொண்டால் எல்லாரும் மகிழ்வோம்! குழுவில் சேர வேண்டுமா? வலப்பக்கச் சுட்டியை - சொடுக்குங்கள்! நற்றமிழ்ப் பாடல்களை - அடுக்குங்கள்!!