சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடு ஷ்யாமா !
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடு ஷ்யாமா !
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
நவநீதா !உறி வெண்ணையுண்டு களிப்பாய்.
இருள்நிறை சிறைதனில் பரிதியாய் உதித்த
அருட்பெருஞ்ஜோதியே,தேவகிநந்தனனே !,
நாகம் குடைபிடிக்க , நதிவழிகொடுக்க ,
கோகுலம் விரைந்த வசுதேவமைந்தனே !
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
நவநீதா !உறிவெண்ணையுண்டு களிப்பாய்.
பாலூட்டிக்கொல்லவந்த பூதனையை
பல்லால் கடித்துயிர்குடித்த ஸ்ரீதரா !
கயிற்றாலுனை உரலில் கட்டிய தாய்முன்
உரலை இழுத்தவண்ணம் தவழ்ந்த தாமோதரா!
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
நவநீதா !உறிவெண்ணையுண்டு களிப்பாய்
.
பெருமழையில் பரிதவித்தோரைக்காக்க
சிறுவிரலால் கிரிசுமந்த கோவர்த்தனா !
விடநாகததையடக்கி அதன்மேல்
களிநடம்புரிந்த காளிங்கநர்த்தனா !
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
நவநீதா !உறிவெண்ணையுண்டு களிப்பாய்.
கோபியர்சுமந்த நீர்க்குடந்தன்னை
கல்லெறிந்துடைத்த நந்தகிஷோரா !
குறும்புத்தோழர் தோள்மேலேறி
உரிவெண்ணை திருடிய நவநீதசோரா !
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
நவநீதா !உறிவெண்ணையுண்டு களிப்பாய்.
குளிக்குங்கோபியர் ஆடையை மறைத்து
குறும்பாய்ச்சிரித்த கோகுலபாலா !
ஈனர்கை சிக்கிய பாஞ்சாலியவள்
மானங்காத்த தீனதயாளா !
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
நவநீதா !உறிவெண்ணையுண்டு களிப்பாய்.
கால்விரல்ருசிக்கும் சிசுவாய்ப்ரளய
காலத்தில் தோன்றிய ஆலிலைப் பாலா!
ஓரடியால் உலகளந்து பலியை
காலால்வதைத்த வாமனக்கோலா !
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
நவநீதா !உறிவெண்ணையுண்டு களிப்பாய்.
சேய் அழைத்ததுமே தூணிலே தோன்றி
தீயனை மாய்த்த தூயா! நரசிங்கா!
எங்களுக்கிரங்கி இங்கின்று வருவாய்,
பங்கஜ நயனா! ஹே பாண்டுரங்கா!
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
நவநீதா !உறிவெண்ணையுண்டு களிப்பாய்.
5 comments :
சேய் அழைத்ததுமே தூணிலே தோன்றி
தீயனை மாய்த்த தூயா! நரசிங்கா!
எங்களுக்கிரங்கி இங்கின்று வருவாய்,
கண்ணன் பாட்டு
கருத்தை நிறைத்தது ..!
கண்ணனின் லீலைகளை அருமையாகச் சொல்லும் மிகவும் அழகான பாடல் அம்மா. நன்றி.
nice:)
nice:)
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_6058.html) சென்று பார்க்கவும்... நன்றி...