உனக்காக!
சிற்றில் ஒன்று கட்டி வைத்தேன்
சின்னக் கண்ணா உனக்காக
சற்றே உன்றன் தண்டைக் காலால்
உதைத்துக் கலைப்பாய் அதற்காக!
வண்ணப் புது சிற்றாடையை
உடுத்தி வந்தேன் உனக்காக
ஆற்று நீரில் நீராடையில்
திருடிச் செல்வாய் அதற்காக!
கடைந்த வெண்ணெய் ஒளித்து வைத்தேன்
கள்ளக் கண்ணா உனக்காக
கறந்த பாலும் திரிந்ததென்று
திரித்துச் சொன்னேன் அதற்காக!
என்னைக் கொஞ்சம் உன்னைப் போல
மாற்றுவாயோ எனக்காக
உனக்குப் பதிலாய் தாம்புக் கயிற்றில்
கட்டுப் படுவேன் அதற்காக!
நிழலைப் போல உன்னைத் தொடர்ந்து
பணிகள் செய்வேன் உனக்காக
உயிரும் நோக உலகுக்கெல்லாம்
உழைத்தாய் கண்ணா அதற்காக!
கட்டுக் கொள்ளாக் காதல் கொண்ட
பேதை இங்கே உனக்காக
மீண்டும் மீண்டும் பிறக்கக் கூடச்
சலியேன் கண்ணா அதற்காக!
--கவிநயா
படத்துக்கு நன்றி: http://www.vikatan.com/sakthi/2011/09/ztrlmz/images/p25.jpg
8 comments :
சிற்றில் ஒன்று கட்டி வைத்தேன்
சின்னக் கண்ணா உனக்காக
சற்றே உன்றன் தண்டைக் காலால்
உதைத்துக் கலைப்பாய் அதற்காக!//
கற்பனையில் பிஞ்சு காலால் உதைப்பதை பார்த்து களித்தேன்.
அருமையான கண்ணன் பாட்டு.
மிக்க நன்றி கோமதி அம்மா!
//என்னைக் கொஞ்சம் உன்னைப் போல
மாற்றுவாயோ எனக்காக
உனக்குப் பதிலாய் தாம்புக் கயிற்றில்
கட்டுப் படுவேன் அதற்காக!//
கண்ணனைப்பற்றிய கவிதை அழகு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
fantastic-kka!
it captures the "heart", not the "words"
*புத்தாடை = அவன் களைய
*சிற்றில் = அவன் கலைக்க
*தாம்புக் கயிறு = அவனோடு கட்டிய உறவுக்கு
*பல பிறவிகள் = அவனோடு கூடும் ஆசைக்கு
u captured the "heart" of andal today... & mine too :)
மிக்க நன்றி திரு. கோபாலகிருஷ்ணன் ஐயா!
//u captured the "heart" of andal today... & mine too :)//
mine three! :)
சந்தோஷமும், நன்றியும் கண்ணா!
///நிழலைப் போல உன்னைத் தொடர்ந்து
பணிகள் செய்வேன் உனக்காக
உயிரும் நோக உலகுக்கெல்லாம்
உழைத்தாய் கண்ணா அதற்காக!////
திரும்பத் திரும்ப படித்தேன். மனம் உருகியது. அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.
எனக்கும் பிடித்த வரிகளைச் சுட்டியமைக்கு மிக்க நன்றி பார்வதி! கண்ணன் பாவம்ல... எவ்ளோ உழைச்சிருக்கான் தன் பக்தர்களுக்காக...