கிரிதாரிக்கு திருநீர்
மீரா என்று ஒரு முறை கூறிப்பார்க்கின் இனம் விளங்காத ஒரு வலி நம்மை பற்றிக் கொண்டு விடுகிறது. நாம் இப்போது அறியப் போகும் அவளின் பாடல், அவளுடைய இளம் பிராயத்தினது அன்று, தன்னுடைய முதிர்ந்த அகவையில் இயற்றியது. தன்னை மறுதளித்து கொண்டே வருகிறானே இந்த மாய கிரிதாரி; ஒருவேளை அவனுக்கு அவளின் பிரேமை என்பதும் சலித்தும் போனதோ? அன்று பெண்கள் என்றால் ஒவ்வாத நோயும் கொண்டானோ ? இல்லை துறவியாகி விட்டானோ ? என்று பலவாறு எண்ண அலைகள் தோன்றி மறைந்தன அந்த அடிமைக்கு!
அவன் ஒரு வேளை துறவியாக மாறிவிட்டனானால்; இனி ஒரு முறை எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்ப்பதற்கில்லை, தன்னிடம் வாராததர்க்கும் காரணம் கேட்டு அறிவதற்கில்லை; பிரேம பக்தியில் தான் அவிழ்க்க இயலாத புதிர்களின் விடைகளை அறிவதர்க்குமில்லை. ஹே ! கிரிதாரி நீ துறவியாகவே ஆகியிருப்பினும் எனக்கு ஒரு வழி சொல்லியே தீர வேண்டும்..
அந்தோ! மாயவ .. நீ துறவியாக வந்து சேர்ந்தால், உனக்கு என்னால் என்னதான் தர இயலும். வனமாலை தான் தொடுத்து சூட்ட முடியுமா ? பட்டு பீதாம்பரங்களை உடுத்த தர முடியுமா ? சுகந்தம் வீசும் திரவியங்களை அள்ளி உன் மார்பில் பூச முடியுமா ? உன் கண்களை தீரா மோகத்துடன் பார்க்க முடியுமா ? கட்டி அணைக்க முடியுமா ?
இல்லை மூச்சு முட்ட முத்தம்தான் இட முடியுமா ? எதற்கும் இம்மி அளவும் சாத்தியம் இல்லை..
அந்த துறவிக்கு அவளால் தர இயன்ற ஏதேனும் ஒன்று உண்டா? உண்டென்றால் அது என்ன? துறவிக்கு உகந்த வஸ்து ..மீராவால் தர இயன்ற ஒன்று.. சாம்பல்!
ஆம், துறவியாக வரும் அவனுக்கு இவள் தர முடிவு செய்தது, துறவிகள் அங்கமெல்லாம் பூசிக்கொள்ளும் சாம்பல்தான்.. அதென்ன அவ்வளவு சாதாரணமான ஒரு வஸ்துவை தருகிராளே, என்று யாரும் எண்ணக் கூடாது என்றேதான், அதன் செய்முறையையும் தன் பாடலில் இயற்றி உள்ளாள். துறவியும் விரும்பும் சாம்பலாகவே மாறி அவன் அங்கம் தழுவி நிற்கவும் தயாரானாள்.
ஹே பிரபு.. நீ சந்தனமென்றால் நான் தண்ணீர்..
ஹே பிரபு.. நீ சூரியனென்றால் நான் சந்திரன்
ஹே பிரபு.. நீ முத்துக்கள் என்றால் நான் நூல்..
ஹே பிரபு.. நீ துறவியானால் நான் சாம்பல்..
ஹே பிரபு..நீ கிரிதாரி நான் உந்தன் தாசி..
பாடல்..
9 comments :
Really enjoyed reading it with translation.
சொல்வதற்கு ஒன்றும் வார்த்தையில்லை சங்கர்.
// ஹே பிரபு.. நீ முத்துக்கள் என்றால் நான் நூல்.. //
கண்ணன் கீதையில் உயிர்கள் அனைத்திற்கும் தானே ஆதாரம் என்று பெருமை அடித்துக் கொண்டதை எல்லாம் விஞ்சிய வரி.
யாருக்கு யார் ஆதாரம்? மீராவே கண்ணனைத் தாங்குகிறாள் போல...
பாட்டு அருமை! நீ உருகி உருகி பாடியிருப்பதோ அவனைப் போக முடியாமல் தடுத்திருக்கும் என்பது திண்ணம்!
@ Kala BN:
Thanks. :)
@ராதா அண்ணா: பாடலை post செய்ய உதவி செய்தமைக்கு நன்றி. அண்ணா, இதே மாதிரி அர்த்தம் பொதிந்த பாசுரம் ஏதாது இருக்கா? தமிழ்லையும் இதே போல் ஒரு பாசுரம் கற்க ஆசை அண்ணா..
@லலிதா அம்மா ! எனக்கும் மிகவும் பிடித்த பஜனை இது. பாடியதில் இரண்டு வரிகள் விடு பட்டுபோய் விட்டன . :(
மீராவின் வலிகளின் உள்ளேயும் அவனின் ஆனந்தமே ஒளிந்துள்ளது!
(அ)
அவனின் ஆனந்தத்தின் உள்ளேயும் மீராவின் வலியே ஒளிந்துள்ளது!
பாடலும் பதிவும் அருமை!
செத்தாலும் அவன் மேனி தவழும் சாம்பலாய் இருக்க வேணும்-ன்னு ஒரு உள்ளம் நினைக்குது-ன்னா...
அது காதலா? காமமா? போகமா? பேரன்பா? மனநோயா? மனமலரா?
என்ன பேர் சொல்லி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள்!
திருமேனித் தீண்டல் என்பதே வாழ்வாகிப் போனாதோ?
அவனே எண்ணமென்று ஏனாகிப் போனதோ? முருகா!
KRS: நன்றி. :)
//அது காதலா? காமமா? போகமா? பேரன்பா? மனநோயா? மனமலரா?//
எல்லாம் கலந்த ஒன்றாக இருக்கலாமோ?
"துறவியானால் சாம்பல் " - என்ற பொருள் பொதிந்த பாசுரம் எதுவும் நினைவிற்கு வரவில்லை சங்கர். நம்மாழ்வார், தன் நெஞ்சம் திருமாலின் மேனிக்குப் பூசும் சந்தனமாக இருப்பதாகப் பாடி இருக்கிறார்.
நம்மாழ்வார் திருவாய்மொழிப் பாசுரம்:
கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய், மதிளிலங்கைக்
கோவை வீயச் சிலைகுனித்தாய், குலநல் யானை மருப்பொசித்தாய்,
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.
பாசுரப் பொருள் (not perfect):
கண்ணா! நப்பின்னை பிராட்டியை மணம் முடிக்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட பந்தயத்தில் எருதுகளை அடக்கினாய். முன்னர் ராமனாய் இலங்கை நகரம் வீழ விற்போர் புரிந்தாய். பின்னர் கண்ணனாய் மதுராவில் கம்சனுடைய குவலாயாபீடம் என்ற யானையின் தந்தங்களை முறித்தாய். உன் சிரமம் தீருமாறு, உனக்கு நறுமணம் மிகுந்த பன்னீர் தூவி மலர்களால் நான் வணங்கவில்லை. எனினும் உன் மென்மையான மேனிக்கு என் நெஞ்சம் பூசும் சந்தனம் ஆகும். அதனை ஏற்பாய்.