கிரிதாரிக்கு திருநீர்
மீரா என்று ஒரு முறை கூறிப்பார்க்கின் இனம் விளங்காத ஒரு வலி நம்மை பற்றிக் கொண்டு விடுகிறது. நாம் இப்போது அறியப் போகும் அவளின் பாடல், அவளுடைய இளம் பிராயத்தினது அன்று, தன்னுடைய முதிர்ந்த அகவையில் இயற்றியது. தன்னை மறுதளித்து கொண்டே வருகிறானே இந்த மாய கிரிதாரி; ஒருவேளை அவனுக்கு அவளின் பிரேமை என்பதும் சலித்தும் போனதோ? அன்று பெண்கள் என்றால் ஒவ்வாத நோயும் கொண்டானோ ? இல்லை துறவியாகி விட்டானோ ? என்று பலவாறு எண்ண அலைகள் தோன்றி மறைந்தன அந்த அடிமைக்கு!
அவன் ஒரு வேளை துறவியாக மாறிவிட்டனானால்; இனி ஒரு முறை எந்த பெண்ணையும் ஏறெடுத்தும் பார்ப்பதற்கில்லை, தன்னிடம் வாராததர்க்கும் காரணம் கேட்டு அறிவதற்கில்லை; பிரேம பக்தியில் தான் அவிழ்க்க இயலாத புதிர்களின் விடைகளை அறிவதர்க்குமில்லை. ஹே ! கிரிதாரி நீ துறவியாகவே ஆகியிருப்பினும் எனக்கு ஒரு வழி சொல்லியே தீர வேண்டும்..
அந்தோ! மாயவ .. நீ துறவியாக வந்து சேர்ந்தால், உனக்கு என்னால் என்னதான் தர இயலும். வனமாலை தான் தொடுத்து சூட்ட முடியுமா ? பட்டு பீதாம்பரங்களை உடுத்த தர முடியுமா ? சுகந்தம் வீசும் திரவியங்களை அள்ளி உன் மார்பில் பூச முடியுமா ? உன் கண்களை தீரா மோகத்துடன் பார்க்க முடியுமா ? கட்டி அணைக்க முடியுமா ?
இல்லை மூச்சு முட்ட முத்தம்தான் இட முடியுமா ? எதற்கும் இம்மி அளவும் சாத்தியம் இல்லை..
அந்த துறவிக்கு அவளால் தர இயன்ற ஏதேனும் ஒன்று உண்டா? உண்டென்றால் அது என்ன? துறவிக்கு உகந்த வஸ்து ..மீராவால் தர இயன்ற ஒன்று.. சாம்பல்!
ஆம், துறவியாக வரும் அவனுக்கு இவள் தர முடிவு செய்தது, துறவிகள் அங்கமெல்லாம் பூசிக்கொள்ளும் சாம்பல்தான்.. அதென்ன அவ்வளவு சாதாரணமான ஒரு வஸ்துவை தருகிராளே, என்று யாரும் எண்ணக் கூடாது என்றேதான், அதன் செய்முறையையும் தன் பாடலில் இயற்றி உள்ளாள். துறவியும் விரும்பும் சாம்பலாகவே மாறி அவன் அங்கம் தழுவி நிற்கவும் தயாரானாள்.
ஹே பிரபு.. நீ சந்தனமென்றால் நான் தண்ணீர்..
ஹே பிரபு.. நீ சூரியனென்றால் நான் சந்திரன்
ஹே பிரபு.. நீ முத்துக்கள் என்றால் நான் நூல்..
ஹே பிரபு.. நீ துறவியானால் நான் சாம்பல்..
ஹே பிரபு..நீ கிரிதாரி நான் உந்தன் தாசி..
பாடல்..
மத் ஜா! மத் ஜா ! மத் ஜா ! - ஜோகி ..
பாவ் பரூன் மே.. சேரி தேரி..
செல்லாய்! செல்லாய்! செல்லாய்! ஸ்வாமி..
பாதம் பணிந்தேன் பேதை உந்தன்..
பிரேம பக்தி கி பெந்தோ ஹி ந்யாரோ..
ஹம்கோ கேல் பதா ஜா..
பிரேம பக்தியின் பாதையில் புதிர்கள் ..
பகர்ந்திடு பதில் ஒன்று எனக்கு ..
அகர் சந்தன் கி சிதா பனாஊன்
அப்னே ஹாட் ஜலா ஜா
சந்தனத்து விறகினில் சிதையொன்று செய்தால்
உந்தனது கையினால் எரியூட்டு..
ஜல் பல் பை பஸ்முஹீ டெரி..
அப்னே அங்கு லகா ஜா
மத் ஜா! மத் ஜா ! மத் ஜா ! - ஜோகி ..
என் சவமது எரிந்து சாம்பலாய் குறைந்தால்
உனது மேனியில் பூசிக்கொள் - ஸ்வாமி
செல்லாய்! செல்லாய்! செல்லாய்! ஸ்வாமி..
மீரா கஹே பிரபு கிரிதர நாகர
ஜோத் சே ஜோத் மிலா ஜா - ஜோகி ..
மீரா கோரும் பிரபு கிரிதர நாகர
உந்தன் ஜோதியில் கலந்திடு என்னை ..
செல்லாய்! செல்லாய்! செல்லாய்! ஸ்வாமி..