Saturday, January 17, 2009

கூரேசன் சீர் கேளீரோ!

நீங்கள் திருவரங்கம் கோயிலுக்குப்போயிருக்கிறீர்களா

பிரதான வாயில்வழியாக அதாவது ரங்கா ரங்கா கோபுரம்வழியாக திருக்கோவிலில் காலடி எடுத்துவைத்ததுமே உங்களின் வலப்புறத்திலிருக்கும் இருக்கும் முதல்சந்நிதியை ஏறெடுத்துப்பார்த்திருக்கிறீர்களா

அது என்ன பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரின் சந்நிதியா அல்லது

பரமபக்தன் அனுமனின்சந்நிதியா

அல்லது பக்தபிரஹாலதனின் சந்நிதியா

எது என்று கேட்கிறீர்களா

ம்ஹூம் அவர்கள் யாரும் இல்லை.

பகவானுக்குத்தன் அடியார்களை மிகவும் பிடிக்கும்.

ஆனால் அடியாரைநேசிக்கும் அடியாரை அதைவிடப்பிடிக்கும்.

தன் அடியாரை குருவாக ஏற்று அவருக்குத்தொண்டு செய்யும் அடியவர்தான் ஆண்டவனின் மனத்தில் முதலில் இருப்பவர்.

கூரத்தாழ்வாரின் குருபக்திக்கு பலபல சொல்லலாம் . ஒன்றைமட்டும் இப்போது பார்க்கலாம்!


குருவுக்குமுன்பாய் தனக்கு திருநாடு (வைகுந்தம்) ஏக அரங்கனிடம் இறைஞ்சுகிறார் கூரர்.அரங்கன் வியப்புடன் அவரை நோக்க, அரங்கபெருமானே நான் வைகுண்டத்திற்கு முன்னே சென்று எம்பெருமானை இருகரம்நீட்டிவரவேற்கவேணுமே அதற்குத்தான் என்றபோது அவரது ஆசார்யபக்தியை மெச்சிய அரங்கன் , கூரத்தாழ்வாரின் விருப்பத்திற்கிணங்கி அவருக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் முக்தியளிக்க முன் வந்தார். அதன்படி ராமானுஜருக்கு சுமார் ஏழு ஆண்டுகள் முன்னதாகவே இவ்வுலக வாழ்க்கையைவிட்டு திருமாலிடம் இணைந்தார் கூரத்தாழ்வார்


குருபக்தியில் சிறந்த கூரத்தாழ்வாருக்கே, அரங்கன், அ(ந்த)ரங்கத்தில் உயர்பதவி கொடுத்திருக்கிறான்!

ஆமாம் !கோவிலின் முதல் சந்நிதி கூரத்தாழ்வாருடையதுதான் !

இனி திருவரங்கம் செல்லும்போது கோவிலில் நுழைந்ததும் முதலில் குருபக்தியில் சிறந்துவிளங்கியவரின் திருச்சந்நிதிக்கு சென்றுவாருங்கள்! அரங்கனுக்கு தன் அடியவர்களைக்கணடு வணங்கியபின்னர் தன்னைக்காணவருவதே பிடிக்கும்!

கூரத்தாழ்வாரின் மகிமையைச்சொல்வது என்பது கடலைக்கைக்குள் கொண்டுவருவது என்பதுபோல...சிறு அலையொன்றைமட்டும் இங்கே வீசிச்செல்ல எனக்கு இயலுவதை
பாக்கியமாகக் கருதுகிறேன்!


.


ஸ்ரீ ராமானுசரின் பிரதம சீடரான கூரத்தாழ்வார் காஞ்சீபுரம் அருகே கூரம் என்னும் கிராமத்தில் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். அவரது இயற்பெயர்திருமறுமார்பினன். (ஸ்ரீவத்சாங்கர்).தனது செல்வத்தை ஏழை எளியோர்க்கு வாரிவழங்குவதிலேயே செலவிட்டார்.

அவரது அரண்மனை போன்ற பெரிய மாளிகையில் நள்ளிரவு வரை பெறுங்கள் கொடுங்கள் மகிழுங்கள் என்ற கோஷமே கேட்கும்.

ஒவ்வொரு நாளும் காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயில் திருக்கதவுகள் மூடிய பின் தான் இவரது வீட்டுக் கதவுகள் மூடப்படும். ஆனால்ஒரு நாள் ஊர் திருவிழாவிற்கு செல்ல வேண்டியிருந்ததால் சற்று முன்பாகவே அவர் இல்லக்கதவை மூடிவிட்டார். அந்தக் கதவில் கட்டப்பட்டிருந்த விலைஉயர்ந்த மணிகளின் ஒலி, கதவை சாத்தும்போது கோயில் வரை கேட்கும்.

திருக்கச்சி நம்பிகள் என்பவர் காஞ்சி வரதராசப்பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்து வந்தார் . கூரத்தாழ்வார் வீட்டு மணியொலி வரஜராஜப்பெருமாள் சன்னதி வரை கேட்கவும் பெருந் தேவித்தாயார், சுவாமியிடம் "என்ன! அதற்குள் கோயில் அடைக்கும் சத்தம்.. நடை சாத்த நேரமாகிவிட்டதா?" என்று வினவினாள்.

குழம்பிய சுவாமி தனக்கு சேவை செய்து வந்த திருக்கச்சி நம்பிகளிடம் இதைப் பற்றிக் கேட்க, அவரும் நடந்ததைச் சொன்னார்.

அதைக் கேட்ட பெருமாள், "ஆழ்வானின் செல்வத்திற்கு அத்தனை சிறப்பா? கோயில் கதவு மூடும் முன்னே அவன் வீட்டுக்கதவு மூடப்பட்டதே!" என்றார்

தாயார் நம்பியிடம் உத்தம ஆத்மாவான கூரேசனைதான் காணவிரும்புவதாய் கூறினாள்

இதைக்கேட்ட திருக்கச்சி நம்பி கூரத்தாழ்வாரிடம் இதைப் பற்றிச் சொல்லக் கூரத்தாழ்வார் மனம் வருந்தி “ மகாபாவியான நானா உலகமாதாவை வந்துப்பார்ப்பது! செல்வம் என்ற குப்பையை இத்தனைகாலமும் சேர்த்துவைத்திருந்த நான் நாயினும் கடையேன் எனக்குத்தாயாரை தரிசிக்கும் பாக்கியமும் இல்லை தகுதியும் இல்லை என்றார்.

செல்வம் அல்ல உய்ய வழி” என்பதைப் புரிந்து கொண்டு எல்லாச் செல்வங்களையும் தானம் செய்ய ஆரம்பித்தார். தாயாரின் தாமரைப்பாதம் தரிசிக்க என்னைத்தகுதி உள்ளவனாக ஆக்கிக்கொள்ள இப்போதே என்மனத்தையும் உடலையும் தூய்மையாக்கிக் கொள்கிறேன் என்று
அதற்கு சித்தமானார்.சிறு வயதிலிருந்தே நிறைந்த கல்வியுடன் நற்பண்புகள் அவரிடம் காணப்பட்டன. எல்லோருக்கும் பிடித்த பாத்திரமாக விளங்கிய அவருக்குத் தகுந்தாற்போல, ஆண்டாள் என்ற பெயர் கொண்ட ஒரு நல்ல குணவதி அவருக்கு மாலையிட்டாள்.

தன் செல்வத்தை எல்லாம் தானம் செய்த பின்னர் குருவைத் தேடிய அவர், ஸ்ரீராமானுஜரைச் சரணடைந்தார். அவருக்குத் தொண்டு செய்து வாழும் எண்ணத்தில் மனைவியிடம் ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீராமானுஜருக்கு சேவை செய்வோம் என்று கூறினார்.

"எத்தனை தூரம் போக வேண்டும். வழியில் எதாவது பயம் உண்டா?"

"மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம்! ஏன் எதாவது எடுத்து வந்திருக்கிறாயா?

"ஆம் சுவாமி,தாங்கள் சாப்பிட என்று ஒரு தங்க வட்டில் கொண்டு வந்திருக்கிறேன்".

அதை வாங்கி வீசி எறிந்தார் ஆழ்வார்.

பின் நீண்ட பயணத்திற்குப் பின் திருவரங்கம் அடைந்து அங்கு ஒரு வீட்டில் தங்கினார்கள். கீழச்சித்திரை வீதியில் தேருக்கு நேராக அமைந்த அந்த வீட்டில் உணவில்லாமல் மூன்று நாட்கள் பட்டினி கிடந்தனர்.

ஆண்டாளம்மாள் தன் கணவர் இப்படிப் பட்டினியாக இருப்பதைப் பார்த்து தவித்துப் போபோய்விட்டாள். அவளுக்குத் தானும் பட்டினி கிடப்பது தெரியவில்லை. நேராக மனதில் ஸ்ரீரங்கநாதனைக் கண்டு பேசினாள், "அப்பா, திருவரங்கனே! உனக்கு மட்டும் மூன்று வேளைகளும் இனிப்புடன் பிரசாதம் போகிறது. உன் பக்தன் இங்கு மூன்று நாட்கள் பட்டினியாக இருப்பது தெரியவில்லையா? நீ மட்டும் அங்கு வயிறாற அமுது உண்கிறாயே!"

என்ன ஆச்சரியம்! உடனேயே கதவைத் தட்டிய ஒரு பரிசாரகன், ஒரு பொட்டலத்தைக் கொடுத்து, "அரங்கன் என்னை அனுப்பி, இதைக் கொடுத்து வரச் சொன்னார்" என்றான். அதைப் பிரித்துப் பார்த்தால் அதில் அரவணைப் பிரசாதம் இருந்தது. ஆண்டாள் அதை எடுத்துத் தன் கணவரிடம் கொடுத்தாள்.

கூரத்தாழ்வார் தன் மனைவியிடம், அரங்கனை வேண்டினாயா என்று வினவ, "ஆம், மூன்று நாட்கள் என் கணவர் பட்டினி கிடக்கிறார். உனக்கு மட்டும் பிரசாதம் போகிறதே என்று ரங்கநாதனிடம் கேட்டேன் " என்றாள்.

அனைத்தையும் விட்டு வந்தபின்னும் அரங்கனிடம் நீ இப்படிவேண்டிக்கொள்ளலாமா சரி இனி இம்மாதிரி செய்யாதே எனச்சொல்லி அவர் அரங்கபிரசாதத்தில் தானும் சிறிது எடுத்துக்கொண்டு மனைவிக்கும் சிறிதுகொடுத்துவிட்டு இரவு முழுதும் திருவாய்மொழியை ஓதியவண்ணமே கழித்தார்.

(பரமனின் பிரசாதம் உண்ட பலனாய் பத்துமாததில் அவர்களுக்கு இரட்டைக்குழந்தைகள் பிறந்தன.
பராசரபட்டர் வியாசபட்டர் என்று பேரறிவும் மிகுந்த ஞானமும்கொண்டஅவர்களைப்பற்றி பிறகுவிவரமாய் எழுத அரங்கன் அருளவேண்டும்!)

சுமார் 12 வருட காலம் கழித்து ராமானுஜரும், கூரத்தாழ்வாரும் காஞ்சியில் சந்தித்தனர். அப்போது ராமானுஜர் காஞ்சிப் பேரருளாளனிடம் வேண்டிக் கொண்டதால், கூரத்தாழ்வார் இழந்த பார்வையை மீண்டும் பெற்றார்.

.
குணங்களில் சிறந்தவரும், ஜீவகாருண்யம், குரு பக்தி, வைராக்யம், பகவத் பாகவத தொண்டு மற்றும் பாண்டித்யம் பெற்றவரும், தான் கண்களை இழக்கக் காரணமாயிருந்த "நாலூரான்' என்பானும் நற்கதியடைய திருமாலிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டவருமான கூரத்தாழ்வாரை வேண்டிக் கொண்டால் நமது கண் பார்வைக் கோளாறுகள் நிவர்த்தியடையும்.

இவ்வருடம் இன்று( 17.1.2009) அமையும் இவரின் அவதார தினம், இவரது ஆயிரமாவது ஆண்டாக அமைகிறது.

கூரத்தாழ்வார் திருவடிகளே சரணம்!

24 comments :

மெளலி (மதுரையம்பதி) said...

கூரத்தாழ்வார் திருவடிகளே சரணம்.

//நான் வைகுண்டத்திற்கு முன்னே சென்று எம்பெருமானை இருகரம்நீட்டிவரவேற்கவேணுமே அதற்குத்தான் என்றபோது//

என்ன ஒரு குரு பக்தி.

//முதலில் குருபக்தியில் சிறந்துவிளங்கியவரின் திருச்சந்நிதிக்கு சென்றுவாருங்கள்!//

கண்டிப்பாக!

//ஸ்ரீவத்சாங்கர்//

ஆஹா, என்ன அருமையான நாமம்...

//தங்க வட்டில் //

இந்த நிகழ்ச்சியினைப் பற்றி படித்திருக்கிறேன். இவர்தான் என்று இப்போது தான் தெரிந்து கொண்டேன்.

ஆஹா, பராசர பட்டர் இவர் வாரிசா?..


மிக அருமையான செய்திகளை தொகுத்து அளித்துள்ளீர்கள் அக்கா. ஸ்ரீ வைஷ்ணவத்தின் ஆச்சார்யார்கள் பற்றி நிறைய எழுதுங்கள், தெரிந்து கொள்ள ஏதுவாகும். நன்றிகள் பல.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கூரேசன் சீர் சொல்லும் பதிவு, ஆயிரமாவது பிறந்த நாள் பதிவு மட்டுமல்ல!
ஆயிரம் பதிவுகளின் பதிவு! வாராது வந்த பதிவு!

கூரேசன் சொல்லும் சீர் கோவிந்தா உன் தன்னை
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்...

திருவரங்கப்ரியா தந்த சம்மானம்!
அக்கா-இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பகவானுக்குத்தன் அடியார்களை மிகவும் பிடிக்கும்.
ஆனால் அடியாரைநேசிக்கும் அடியாரை அதைவிடப்பிடிக்கும்//

அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே
- என்று நம்மாழ்வார் அதனால் தான் "மிகுந்த தன்னடக்கத்துடன்" பாடுகிறார்! பார்ப்பதற்குப் "போலியான தன்னடக்கம்" போல ஒரு சிலருக்கு இருக்கலாம்! ஆனால் பாகவதானுபவத்தில் (தொண்டரொடுக்கத்தில்) திளைத்தால் தான் அதான் தாத்பர்யம் புரியும்!

//தன் அடியாரை குருவாக ஏற்று அவருக்குத்தொண்டு செய்யும் அடியவர்தான் ஆண்டவனின் மனத்தில் முதலில் இருப்பவர்//

ஆமாம்-க்கா!
இராமானுசரை விட வயதில் மூத்தவர் கூரத்தாழ்வான்! அறிவில், ஞானத்தில், வைராக்கியத்தில் மூத்தவர் என்று கூடச் சொல்லலாம்! ஆனாலும் சீடர் ஆனார்!

கூரத்தாழ்வான் இல்லாமல் ஸ்ரீபாஷ்யமா?
உடையவருக்கே ஒரு ஸ்ரீபாஷ்ய விளக்கத்தை மாற்றிச் சொன்னவர். இராமானுசர் ஒத்துக் கொள்ளாது கோபித்துச் சென்ற போதும், கருத்தில் உறுதி, ஆனால் அதே சமயம் பெரும் பணிவும் காட்டியவர். இதை அடியேன் கதையாகச் சொல்கிறேன்!

இராமானுசர் தம் தவறை உணர்ந்து, அடுத்த சில மணி நேரங்களில், கூரேசனிடம் ஓடோடி வந்து மன்னிப்பும் கேட்டாராம்!
கூரேசனைப் பெற்றது இராமானுசரின் அதிர்ஷ்டமா? அல்லது இராமானுசரை உற்றது கூரேசனின் நற்பயனா?

அப்படி ஒரு பிணைப்பு இருவருக்குள்ளும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கூரத்தாழ்வாரின் விருப்பத்திற்கிணங்கி அவருக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் முக்தியளிக்க முன் வந்தார்//

ஆமாம்!

நாமெல்லாம் இராமானுஜ சம்பந்தத்தால் மோட்சம் என்னும் போது, இராமானுசரோ, தனக்கு கூரேசன் சம்பந்தத்தால் மோட்சம் என்றாராம்! :)

கேட்டால், "முன்பு திருக்கோட்டியூர் நம்பி சொன்ன சொல்லை மீறி மந்திரத்தைப் பொதுவில் வைத்தேன்; அது நல்லதற்குத் தான் என்றாலும் கூட குருவின் ஆக்ஞையை மீறியது, மீறியது தான்! நரகம் தான் புகுவேன் என்று இருந்த போது, அரங்கன் கூரேசன் சம்பந்தா சம்பந்தம் உள்ளவர்க்கு முக்தி என்றானே! அதனால், கூரேசனைச் சிஷ்ய சம்பந்தமாகப் பெற்ற அடியேன்! நான் செய்த ஆசார்ய-துரோகம் தீர்க்கப்பட்டவனாகி, எனக்குக் கூரேச சம்பந்தத்தால் மோட்சம்!" என்று கொண்டாடினாராம்!

இப்படி ஒரு குரு-சிஷ்ய பாவம்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இனி திருவரங்கம் செல்லும்போது கோவிலில் நுழைந்ததும் முதலில் குருபக்தியில் சிறந்துவிளங்கியவரின் திருச்சந்நிதிக்கு சென்றுவாருங்கள்!//

தங்கள் உத்தரவு-க்கா!
இப்போதும் அப்படித் தான் செய்கிறேன்!
உங்கள் உத்தரவை ஏற்று, இனி எப்போதும், முப்போதும், அப்படியே செய்வேன்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அவரது இயற்பெயர் திரு மறு மார்பன்//(ஸ்ரீவத்சாங்கர்).

ஆகா! திரு+மறு என்ன அழகான திருப்பெயர்!

ஸ்ரீவத்சாங்கம்-ன்னு அவ்ளோ பெருசா இல்லாம.....திருமறு-ன்னு எளிமை, இனிமை! ஆகா! :)

ஸ்ரீவத்சாங்கம் கெளஸ்துபோத் பாசிதாங்கம்-ன்னு சகஸ்ரநாமம் வேற இல்லியாக்கா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//"என்ன! அதற்குள் கோயில் அடைக்கும் சத்தம்.. நடை சாத்த நேரமாகிவிட்டதா?" என்று வினவினாள்//

//மகாபாவியான நானா உலகமாதாவை வந்துப்பார்ப்பது! செல்வம் என்ற குப்பையை இத்தனைகாலமும் சேர்த்துவைத்திருந்த நான் நாயினும் கடையேன் எனக்குத்தாயாரை தரிசிக்கும் பாக்கியமும் இல்லை தகுதியும் இல்லை என்றார்//

ஏன் தாயாரே கூப்பிட்டும், இப்படி ஆழ்வான் சொன்னார் என்பதை...அக்கா உணர்ச்சி மிகுதியில் கோர்வையாச் சொல்லும் போது விடுபட்டு விட்டது! தம்பி நாம் முடிச்சி வைக்கிறேன்!

என் வீட்டுக் கதவுகளை அப்படிச் சத்தம் வராப் போலே சாத்தி, என் செல்வத் திமிரைக் காட்டி விட்டேனோ? அந்தச் சத்தம் கேட்டா, அது கோயில் அடைக்கும் சத்தம் என்று தாயார் குழம்பிப் போனார்கள்?-என்பதால் தான் கூரேசன் மிகவும் வருந்தி, வெட்கப்பட்டுப் போகாமல் இருந்தார்.

அப்படியான உள்ளம் கூரத்தாழ்வானுக்கு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தான் கண்களை இழக்கக் காரணமாயிருந்த "நாலூரான்' என்பானும் நற்கதியடைய திருமாலிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டவருமான கூரத்தாழ்வாரை//

இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண
நன்னயம் செய்து "விடல்"!

இப்படி ஒரு வாழும் வள்ளுவம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆண்டாள் என்ற பெயர் கொண்ட ஒரு நல்ல குணவதி அவருக்கு மாலையிட்டாள்//

ஆண்டாள் என்னும் கூரேசன் மனைவியும் பெரிய ஞானி!
அவளிடமும் தன் சந்தேகங்கள் குறித்துப் பேசுவார் கூரேசன்! அவள் உடையவர் மகளிர் அணியில் இருந்து கொண்டு, ஒரு முறை உடையவருக்கே வேதப் பொருளை எடுத்துக் கொடுத்தது தனிக் கதை! :)

நல்ல கணவன் - நல்ல மனைவி!

கவிநயா said...

கூரத்தாழ்வார் திருவடிகள் சரணம். அவர் பற்றிய அரிய பதிவிற்கு நன்றிகள் பல அக்கா.

ஷைலஜா said...

மதுரையம்பதி said...
கூரத்தாழ்வார் திருவடிகளே சரணம்.

//நான் வைகுண்டத்திற்கு முன்னே சென்று எம்பெருமானை இருகரம்நீட்டிவரவேற்கவேணுமே அதற்குத்தான் என்றபோது//

என்ன ஒரு குரு பக்தி. \\\\\>>>>

ஆமாம் மௌலி...குருபக்திக்கு இலக்கணமே வைணவத்தில் இவர்தானாம்!

\\\\.


ஆஹா, பராசர பட்டர் இவர் வாரிசா?..\\\\\

ஆமாம் மௌலி.அரங்கனின் குமாரன் என்றும் கூறுவர் அரங்கப்ரசாதம் உண்டுபின்பிறந்தவர் அல்லவா ஞானஜோதிகள் இவரும் இவரது உடன்பிறப்பும்!\\\மிக அருமையான செய்திகளை தொகுத்து அளித்துள்ளீர்கள் அக்கா. ஸ்ரீ வைஷ்ணவத்தின் ஆச்சார்யார்கள் பற்றி நிறைய எழுதுங்கள், தெரிந்து கொள்ள ஏதுவாகும். நன்றிகள் பல.]\\\

நன்றி மௌலி தெரிந்த அளவு சொல்லி இருக்கிறேன்...மேலும் எழுத ஆவல்தான் இறையருளோடு மறுபடி எழுத நேரம் வரட்டும்.

ஷைலஜா said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
கூரேசன் சீர் சொல்லும் பதிவு, ஆயிரமாவது பிறந்த நாள் பதிவு மட்டுமல்ல!
ஆயிரம் பதிவுகளின் பதிவு! வாராது வந்த பதிவு!

கூரேசன் சொல்லும் சீர் கோவிந்தா உன் தன்னை
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்...

திருவரங்கப்ரியா தந்த சம்மானம்!
அக்கா-இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
>>>>>>
ரவி! இதே பதிவை நீங்க எழுதி இருந்தா இன்னமும் சிறப்பா வந்திருக்கும் என்பது உலகறிந்த உண்மை! அதுதான் சம்மானம் இங்கு ! அன்புக்கு நன்றி.
11:09 AM, January 17, 2009

ஷைலஜா said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
கூரேசன் சீர் சொல்லும் பதிவு,
டியார் தமக்கு
அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே
- என்று நம்மாழ்வார் அதனால் தான் "மிகுந்த தன்னடக்கத்துடன்" பாடுகிறார்! பார்ப்பதற்குப் "போலியான தன்னடக்கம்" போல ஒரு சிலருக்கு இருக்கலாம்! ஆனால் பாகவதானுபவத்தில் (தொண்டரொடுக்கத்தில்) திளைத்தால் தான் அதான் தாத்பர்யம் புரியும்!\\\\

>>>>>>>
போலியா!! அபசாரம் ரவி! நினைப்பவர்கள் நினைக்கட்டும் நமக்கென்ன! இறைவனை உணர்வது ஒருநிலை நினைப்பது ஒரு நிலை! நாம் உணர்வோம்!

//

ஆமாம்-க்கா!
இராமானுசரை விட வயதில் மூத்தவர் கூரத்தாழ்வான்! அறிவில், ஞானத்தில், வைராக்கியத்தில் மூத்தவர் என்று கூடச் சொல்லலாம்! ஆனாலும் சீடர் ஆனார்!

கூரத்தாழ்வான் இல்லாமல் ஸ்ரீபாஷ்யமா?
உடையவருக்கே ஒரு ஸ்ரீபாஷ்ய விளக்கத்தை மாற்றிச் சொன்னவர். இராமானுசர் ஒத்துக் கொள்ளாது கோபித்துச் சென்ற போதும், கருத்தில் உறுதி, ஆனால் அதே சமயம் பெரும் பணிவும் காட்டியவர். இதை அடியேன் கதையாகச் சொல்கிறேன்!

இராமானுசர் தம் தவறை உணர்ந்து, அடுத்த சில மணி நேரங்களில், கூரேசனிடம் ஓடோடி வந்து மன்னிப்பும் கேட்டாராம்!
கூரேசனைப் பெற்றது இராமானுசரின் அதிர்ஷ்டமா? அல்லது இராமானுசரை உற்றது கூரேசனின் நற்பயனா?

அப்படி ஒரு பிணைப்பு இருவருக்குள்ளும்!

\\\\
>>>>>>>>>>>>>>
அரிய தகவல் இது. அதேபோல் கூரேசனின் கண்பார்வைபோனதை ராமானுஜர் வருத்தமுடன் அவரிடம் பேசும்போது கூரேசர் சொன்னாராம்

யாராவது பாகவதரின் நெற்றித்திருமண் சற்று சாய்ந்து இருக்கிறதே என பாகவத அபசாரம் செய்திருப்பேன் அதான் பகவான் என்பார்வையை பறித்துக்கொண்டிருக்கிறார் தண்டனை தேவைதான் எனக்கு என்றாராம் அடக்கத்தின் திரு உருவம் கூரத்தாழ்வார்!

12:32 PM, January 17

ஷைலஜா said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
\\\ குருவின் ஆக்ஞையை மீறியது, மீறியது தான்! நரகம் தான் புகுவேன் என்று இருந்த போது, அரங்கன் கூரேசன் சம்பந்தா சம்பந்தம் உள்ளவர்க்கு முக்தி என்றானே! அதனால், கூரேசனைச் சிஷ்ய சம்பந்தமாகப் பெற்ற அடியேன்! நான் செய்த ஆசார்ய-துரோகம் தீர்க்கப்பட்டவனாகி, எனக்குக் கூரேச சம்பந்தத்தால் மோட்சம்!" என்று கொண்டாடினாராம்!

இப்படி ஒரு குரு-சிஷ்ய பாவம்! :)
\\\\\

ஒருவரை ஒருவர் அடக்கத்தில் அன்பில் மிஞ்சுகிறார்கள்!
12:38 PM, January 17, 2009

ஷைலஜா said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//அவரது இயற்பெயர் திரு மறு மார்பன்//(ஸ்ரீவத்சாங்கர்).

ஆகா! திரு+மறு என்ன அழகான திருப்பெயர்!

ஸ்ரீவத்சாங்கம்-ன்னு அவ்ளோ பெருசா இல்லாம.....திருமறு-ன்னு எளிமை, இனிமை! ஆகா! :)

ஸ்ரீவத்சாங்கம் கெளஸ்துபோத் பாசிதாங்கம்-ன்னு சகஸ்ரநாமம் வேற இல்லியாக்கா
>>>>>
ஆமாம் ரவி நீங்க சொல்லியதும் நினைவுக்கு வருகிறது

ஷைலஜா said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
\\\\ நான் நாயினும் கடையேன் எனக்குத்தாயாரை தரிசிக்கும் பாக்கியமும் இல்லை தகுதியும் இல்லை என்றார்//

ஏன் தாயாரே கூப்பிட்டும், இப்படி ஆழ்வான் சொன்னார் என்பதை...அக்கா உணர்ச்சி மிகுதியில் கோர்வையாச் சொல்லும் போது விடுபட்டு விட்டது! தம்பி நாம் முடிச்சி வைக்கிறேன்!

என் வீட்டுக் கதவுகளை அப்படிச் சத்தம் வராப் போலே சாத்தி, என் செல்வத் திமிரைக் காட்டி விட்டேனோ? அந்தச் சத்தம் கேட்டா, அது கோயில் அடைக்கும் சத்தம் என்று தாயார் குழம்பிப் போனார்கள்?-என்பதால் தான் கூரேசன் மிகவும் வருந்தி, வெட்கப்பட்டுப் போகாமல் இருந்தார்.

அப்படியான உள்ளம் கூரத்தாழ்வானுக்கு!\\\\\

ஆஹா! இப்படியெல்லாம் நாம் வாழ வேண்டுமென வழிகாட்டும் முன்னோடியாக வாழ்ந்திருக்கிறார் என்னும்போது பெருமையாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது.

1:46 PM, January 17, 2009

ஷைலஜா said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//தான் கண்களை இழக்கக் காரணமாயிருந்த "நாலூரான்' என்பானும் நற்கதியடைய திருமாலிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டவருமான கூரத்தாழ்வாரை//

இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண
நன்னயம் செய்து "விடல்"!

இப்படி ஒரு வாழும் வள்ளுவம்!

1:49 PM, January 17, 2009
>>>>>>>>>>>>>>>>>>>>>>>....
உயர்ந்தோர் குணம் அது!

ஷைலஜா said...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//ஆண்டாள் என்ற பெயர் கொண்ட ஒரு நல்ல குணவதி அவருக்கு மாலையிட்டாள்//

ஆண்டாள் என்னும் கூரேசன் மனைவியும் பெரிய ஞானி!
அவளிடமும் தன் சந்தேகங்கள் குறித்துப் பேசுவார் கூரேசன்! அவள் உடையவர் மகளிர் அணியில் இருந்து கொண்டு, ஒரு முறை உடையவருக்கே வேதப் பொருளை எடுத்துக் கொடுத்தது தனிக் கதை! :)

நல்ல கணவன் - நல்ல மனைவி\\\


இந்தக்கதையை நீங்களே சொல்லவும்ரவி..

ஷைலஜா said...

கவிநயா said...
கூரத்தாழ்வார் திருவடிகள் சரணம். அவர் பற்றிய அரிய பதிவிற்கு நன்றிகள் பல அக்கா.

9:16 PM, January 17, 2009
>>>>>>>>>>>>>> நன்றி கவிநயா

முகுந்தன் said...

ரொம்ப அழகாக சொல்லி இருக்கிறீர்கள் ஷைலஜா ...

ஷைலஜா said...

முகுந்தன் said...
ரொம்ப அழகாக சொல்லி இருக்கிறீர்கள் ஷைலஜா ...

8:57 AM,
>>>>>>>>>>>>>>>>>

ரொம்ப நன்றி முகுந்தன்! உங்க வலைல வழக்கொழிந்த சொற்களுக்கு பின்னூட்டமிட்டேன் பார்த்தீங்களா!

குமரன் (Kumaran) said...

கூரேசரின் ஆயிரமாவதாண்டு தொடக்கம் நன்றாக இருக்கிறது ஷைலஜா அக்கா. இனி தொடர்ந்து கூரேசரைப் பற்றி எழுதிக் கொண்டாட வேண்டியது தான்.

ஷைலஜா said...

குமரன் (Kumaran) said...
கூரேசரின் ஆயிரமாவதாண்டு தொடக்கம் நன்றாக இருக்கிறது ஷைலஜா அக்கா. இனி தொடர்ந்து கூரேசரைப் பற்றி எழுதிக் கொண்டாட வேண்டியது
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>நன்றிகுமரன். கூரேசரைப்பற்றி நீங்களும் எழுதுங்க படிக்கக்காத்திருக்கிறேன்.

sa said...

சிறு பிள்ளைகளுக்கு கதை சொல்ல பெரியவர்களுக்கு இந்த விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டுமல்லவா. நிறைய எழுதுங்கள் தெரிந்து கொள்கிறோம்.

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP