Monday, September 28, 2009

மதுரச் சிற்பம்.



ருளைப் பூசி இருந்தது காற்று. குளுமையின் குரலில் ஒரு மெளன கானத்தை இசைத்தவாறே, வீசிக் கொண்டிருந்தது. 'ஸ்... ஸ்' என்று உச்சரித்தவாறு, காற்றை எச்சரித்தவாறு தன் குட்டிகளைச் சிறகுகளால் மெல்லப் போர்த்திக் கொண்டு, கண்கள் வழி உறக்கத்தைக் கசிய விட்டுக் கொண்டிருந்தன தாய்ப் பறவைகள்.

விழிகள் போல் அகண்டும், விரிந்தும் இருந்த பச்சை இலைகள் மேல், இரவின் கருமை இழைந்திருந்தது. வெள்ளிக் கதிர்களின் வெள்ளோட்டம் இன்னும் இந்த கானகத்தின் கடைக்கண் பாதைகளுக்குள் பதியவில்லை.வெண் பனி முத்துக்கள் விழவா, வேண்டாமா என்று சிந்தித்துக் கொண்டிருக்க, இலைகளின் மேல் தடவிச் சென்ற தென்றலின் கரங்கள் அவற்றைத் தள்ளிச் சென்றதில் சிந்தித்தவை சிந்தின.

வானில் இருந்து மினுமினுத்துக் கொண்டிருந்த மீன்களின் ஒளித் துணுக்குகள் சிதறிக் கொண்டிருந்தன. கானகக் குளத்தின் அலையாடிய நீரில் மிதந்து கொண்டிருந்த தாமரை இலைகள் ஒத்திசைவோடு அசைந்து கொண்டிருந்தன. செந்தாமரையின் இதழ்கள் கதிரவனின் ஒளியைக் காணாமல் கூம்பிப் போயிருந்தன.

மயக்கும் குளிரின் ரீங்காரங்கள் மட்டும் இசைந்து கொண்டிருந்த இந்த இரவின் ஆடையில் ஒரு ஜரிகை விளிம்பாக ராதை நடந்து வந்து கொண்டிருந்தாள்.

பட்டு வண்ண ஆடையின் ஓரங்களில் பதித்திருந்த வெண் முத்துகளுக்குப் போட்டியாக அவளது கண்ணீர்த் துளிகள் புள்ளி இட்டிருந்தன. நடக்கையில் தெறித்திட்ட பொற்காசுகளும், நகைகளும், மணியாரங்களும் அவளது கவனத்தைப் பெறவில்லை. பின் எதன் மீது தான் அவளது கவனமெல்லாம்? அவலது கைகளில் பிடித்திருந்த பொற்கூடையில் தான்.

வளது வீட்டுத் தோட்டத்தில் இராதா ஒரு மலர்ப் பந்தல் வளர்த்து வந்தாள். ஆநிரைகளை மேய்த்து விட்டு, மாலை மயங்கும் அந்தியில் மனை திரும்பிய பின், அவளை வேறு எங்கும் காணவியலாது. மலர்த் தோட்டத்தில் தான் காண முடியும்.

சும்மாவா அங்கு மலர்களை வளர்த்தாள்...?

"பூச் செடிகளே! என்னைக் காணவில்லை என்று வருந்தினீர்களா? இதோ வந்து விட்டேன். இது என்ன, நான் வந்தும் நீங்கள் முகம் வாடி இருப்பது ஏன்? ஓ.. நீங்கள் உங்கள் காதலனான கதிரவன் சென்று விட்டானே என்று கவலைப்படுகிறீர்களா? இந்த ஆண்களே இப்படித் தான். நீங்கள் ஏன் அவ்வளவு உயரத்தில் இருக்கும் ஆதவனைக் கண்டு காதல் கொள்ள வேண்டும்? உங்களுக்கு வேண்டியது தான்.

இக் காதலன் வருவான் என்று நாம் இரவெல்லாம் கண் விழித்திருக்க வேண்டியது. ஆனால் அவன் வருவதில்லை. உறங்காமல் பூத்த கண்களோடு, மனதை தேற்றிக் கொண்டு பகல் பொழுதிற்காக காத்திருப்போம். காலம் கண் முன்னே நழுவிச் செல்ல, காதலனது திருமுகம் காண்பதற்குள் கையசைத்து காணாமல் சென்று விடுகிறான். வாழ் நாளெல்லாம் இவ்வாறே கழிகின்றது.

உங்களுக்காவது தினமும் கதிரவன் வருகிறான்.

இந்த மாயக் கண்ணன் இருக்கிறானே? அவனை என்ன சொல்லிச் செல்வது என்றே தெரியவில்லை. வருவான் என்று கை நிறைய பட்சணங்களும் , தின்பண்டங்களும் எடுத்துச் சென்று பார்த்தால் நாளெல்லாம் அவன் வருவதில்லை. மண்ணிற்கும், மரங்களுக்கும் அவற்றை தாரை வார்ப்பதிலே நான் இழக்கின்ற மகிழ்வெல்லாம் அவை பெற்று உய்கின்றன.

வர மாட்டான் என்ற வருத்தத்தில் வாடி அமர்ந்திருக்கையில், எங்கிருந்தோ வந்து குதிப்பான். 'ஏனடி ராதே, எனக்கென்று என்ன கொண்டு வந்தாய்?' என்பான். கோடைக் கால மழைத்துளிகள் போல் அவன் கூறும் மொழிகள் கேட்ட பின் பூக்கின்ற கண்ணீர்த் துளிகள் அவன் கைகளில் துவண்டு விழுகின்றன.

ஆயர்பாடியின் நாயகன், நந்தரின் செல்வமகன் என் முன் கையேந்தி நிற்கையில், கொடுக்க ஏதுமில்லை என்ற வார்த்தைகள் எனக்குள்ளேயே வட்டமிட்டுச் செல்லும். தலை கவிழ்ந்து நான் நிற்பதைக் கண்ணுற்றதும், ஒரு விஷமச் சிரிப்போடு, அந்த மாயவன் குழல் இசைக்கத் தொடங்குவான்.

கேட்பது என்ற ஒன்றை மட்டுமே அறிந்த உயிர் போல் என் அத்தனை உணர்வுகளும் அவன்பால் இழுக்கப்பட்டுச் செல்லும். செவிப் புலன்களின் மடல்களில் தவழ்ந்து செல்லும் அக் குழலோசை, மாய லோகத்தின் மழைக் காலத்தைக் கண் முன் காட்டும். நம்மிடம் கேட்டு வரும் கண்ணன் கொடுத்து மறைவான், பிரபஞ்சத்தின் நாதம் தன்னை..!

இரவின் பிடிக்குள் சிக்கிய வெண்ணிலா மெல்ல மெல்ல கண்களுக்கு முன் மறைந்து, பகலின் வெம்மை இரவி எழுவது போல், மெதுவாகத் தேய்ந்த பின், நிஜவுலகுக்கு நம்மை இழுத்து வரும் அவனது இசை.

மொட்டுக்களே..! மெதுவாகப் புலருங்கள். அவசரம் வேண்டாம். நீங்கள் அலங்கரிக்கப் போவது அக் கருமேனியனின் திருப் பாதங்களை..! வண்டுகள் வருமிடத்து உங்கள் வாசல்களை அடைத்து வையுங்கள். 'இத் தேன் துளிகள் அவனது பாத அணிகளின் பொட்டுத் துளிகள்' என்று கூறி விடுங்கள். இலைகளே! இரவெல்லாம் சேகரித்து வைத்திருக்கும் பனித் துளிகளைப் பகலவனின் கைகளில் அள்ளிக் கொடுத்து விடாதீர்கள்.

பகலெல்லாம் பசுக்களை மேய்த்து விட்டு, வெம்மையின் சூட்டில் பொறிந்து போயிருக்கும் அவன் கால்களை நனைத்து பேறு பெறுங்கள்...."

அப்படியொரு ஆசையோடு வளர்த்து வந்த தோட்டத்தில் இருந்து பார்த்துப் பார்த்துப் பொறுக்கி எடுத்த மலர்களையும், குளிர்ந்த இலைகளையும், மண்ணின் மணம் வீசும் வேர்களையும் அல்லவா அவள் அள்ளிப் போட்டுக் கொண்டு வருகிறாள்!

யர்பாடியில் இருந்து கானகத்திற்குச் செல்லும் பாதை இரவால் போர்த்தப்பட்டிருந்தது. ஒளியின் சிறு துகள்களும் அங்கே தென்படவில்லை. தோட்டத்தின் நீர்க்குளத்தில் அவளோடு சிறகடித்து விளையாடும் அன்னப் பறவைகளை அழைத்துக் கொண்டு ராதா வருகிறாள்.

வேறு ஏதேனும் ஒளி வேண்டுமா என்ன? உயிரின் கயிற்றைப் பிடித்து அசைக்கின்ற மென் அசைவில் அழைக்கின்ற நாத இசை அல்லவா அங்கு ஒளி ஊட்டிக் கொண்டிருந்தது..! காட்டின் இலைகளிலும், கிளைகளிலும், பூக்களிலும், தென்றல் காற்றின் கைப் பிடித்து கானகமெங்கும், வானகமெங்கும் வியாபித்திருந்த கண்ணனின் மென் குழலோசை அல்லவா அங்கு வழி அமைத்துக் கொண்டிருந்தது! தேன் துளிகள் நிரம்பிய காற்றின் அணுக்களில் மயங்கிய மரங்களின் மோனத்தில் இலயித்த இலயிப்பும் அல்லவா அங்கே அவளுக்கு வழி காட்டிக் கொண்டிருந்தது..!

இராதா வந்தே விட்டாள்.

"இராதே..! என் அன்புக்குரியவளே..! ஈதென்ன இவ்வளவு காலம் எடுத்துக் கொள்கிறாய்..? உனக்காக எவ்வளவு காலம் காத்துக் கொண்டிருப்பது..?" அந்த மதுசூதனன் கேட்டான்.

கண்களில் பெருகிய ஈரத்தோடு அவன் முன் தண்டனிட்ட ராதா மொழிந்தாள்.

"கண்ணா..! இரவின் கர்ப்பத்தில் ஆயர்பாடி நுழைந்த மாயவா! சிறிது நேரம் காத்திருப்பதற்குச் சொல்கிறாயே?

உனக்காக எத்தனை யுகங்கள் நான் காத்திருந்தேன்? கழிந்த பிறவிகளின் நிழல்களைச் சுமந்து இப்பிறவியில் உனைக் கண்டு கொண்டேன். பகலின் வெம்மையில் நனைந்த தேகத்தில் பூக்கின்ற வேர்வைத் துளிகள் போல், எத்தனை நினைவுகள்? யமுனா நதிக்கரையில் தோணி ஓட்டிக் கொண்டு செல்கையில், அந்த நீல நிற நீர் உன்னை அல்லவா காட்டியது? நிமிர்ந்து பார்க்கையில் பிரபஞ்சமெங்கும் சூழ்ந்திருந்த அந்தக் கரு வானம், உனது மேனி வண்ணத்தை அல்லவா சொல்லிச் சென்றது?

மனையின் ஒவ்வொரு தூணையும் கேட்டுப் பார். இறந்த அந்த மரங்கள் இன்னும் வளர்ந்து கொண்டே செல்கின்றன, ஏன் தெரியுமா? எனது கண்ணீரால் அவற்றுக்கு நீர்ப் பாய்ச்சுகிறேன். உளறிச் சென்ற தெருக்களின் மண்ணைக் கேட்டுப் பார்.என் பாதங்களின் தடங்களின் அருகில் உனது நிழல் விழுகின்றதா என்று நான் நின்று, நின்று சென்ற நேரங்களைச் சொல்லும். வைகறையில் குளிக்கின்ற யமுனையின் கரைகளைக் கண்டாயானால், நான் பொழிந்த கண்ணீரின் தாரைகள் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறதா என்று கேள். நீ காளிங்கனை வதம் செய்து, குருதியில் கரைய வைத்த யமுனையைத் தூய்மை செய்தது அவை தான் என்று சொல்லும்.

இக்கானகத்தின் மரங்களில் சாய்ந்து பார். உனது மேனியில் வலி உண்டாக்கக் கூடாதென, நான் செதுக்கி வைத்த வனப்பில், வலியைக் கூறும்.

காலங் காலமாய், கற்ப கோடி ஆண்டுகளாய் நாம் சேர்ந்திருந்த கனவுப் பொழுதுகளின் மிச்சங்கள் உனக்கு நினைவிருந்தால், அவை உனக்குச் சொல்லும். ராதா உனக்காக காத்திருந்த வலி நிறைந்த பொழுதுகளின் நிழல்களை..!"

"ராதே..! உனக்குக் கோபம் ஆகாதேடி..! இசை கேளடி ஆதுரமாய்..!" குழலின் நாயகன் இசைக்கலானான்.

"ஏ மாதவா! வெயிலின் வெப்பத்தில் கொதித்திருக்கும் குளத்தின் நீரைக் குளிரச் செய்கின்றது மோகன நிலவின் மயக்கும் கிரணங்கள். புழுக்கத்தின் மேனியிலும் ஈரத்தைத் தூவிப் பூக்கச் செய்யும் பனிக்காற்றின் பரவல். ஆண்டாண்டு காலத்தின் இரவையெல்லாம் கணப்பொழுதில் கலைத்துச் செல்லும் சிறு பொறியின் ஒளி...! அது போல் எத்துணை கோபத்தோடு உன்னோடு ஊடல் கொள்ள ஓடோடி வந்த என் இதயத்தை சாந்தப் படுத்துகின்றது உனது மாயக் குழலோசை.

உனக்காகப் பூத்திருந்த இம் மலர்களை எடுத்துக் கொள். உனது பாதங்களில் ஒரு பூ போல் நானும் விழுந்திருக்க, உனது நாதக் குரலில் இசைக்கின்ற இந்த இரவின் காலத்தில் விடிவே இருக்கக் கூடாதென அருள் செய்ய மாட்டாயா...?"

அங்கே அரங்கேறுகிறது காதலின் பொன் அர்ச்சனை...!

காஞ்சிபுரம் டு திருவரங்கம் - கப்பலில் போக முடியுமா?

காஞ்சிபுரம் டு திருவரங்கம் - பேருந்தில் போகலாம்! ரயில்ல போகலாம்! கார்-ல போவலாம்! எங்களைப் போல வருத்தப்படாத வாலிபர்கள் பைக்-ல கூட ஜாலியாப் போகலாம்! ஆனா கப்பல்-ல போக முடியுமா? - முடியும்!

எப்படி? அதைத் தான் இன்னிக்கி பதிவில் பார்க்கப் போகிறோம்!


ராமாநுஜதயா பாத்ரம் ஜ்ஞாந வைராக்ய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் !!
ஜெகதாசார்யரான இராமானுஜரின் கருணைக்கு பாத்தியமானவரும், ஞானம் மற்றும் வைராக்ய குணக்கடலாகிய வேங்கடநாதன் எனும் வேதாந்த தேசிகரை வணங்குகிறேன்.

வேதாந்த தேசிகர் திரு அவதார தினமாகிய இன்று அவரைப் பற்றிய ஒரு பாடலை அனுபவிப்போமா.. அது ஒரு கப்பல் பாட்டு!
திருவில்லிபுத்தூரில் இன்றைய தினம் நடக்கும் உற்சவத்தைப் பற்றி பரவஸ்து. நாராயணதாஸன் (எனது பெரியப்பா) விவரித்ததை இங்கு சென்று அனுபவியுங்கள்.
இங்கே!


இன்று,


புரட்டாசித் திருவோணம் எனும் உத்தமமான நாள்!
வகுளாபரணப் பெருமாள் தமிழின் வாசியறிந்திருநாள்-
திக்கெட்டும் புகழ் ஸ்ரீபாஷ்யத்தைத் தெளிய உரைத்திடுநாள்
தீதாகிய பல மாயக் கலிகளை சிக்கென வென்றிடுநாள்.
பேச்சொன்றுக்குச் சததூஷணியைப் பேசிய தேசிக நாள்
வாதியர் வாழ்வறுத்த கவிதார்க்கிக சிம்மம், பற்பல
கலை வல்ல பாவலன் வேதாந்தார்யன் உதயம் செய்திடுநாள்
_____________________________________________________


108 திருப்பதிகளில் முதலாவதான திருவரங்கம். ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் தலைநகரம். அங்கு ஒருநாள்,

ஸ்ரீமத் ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யத்திற்கு, ஸ்ருதப் பிரகாசிகை எனும் விளக்கவுரை எழுதிய ஸ்ரீசுதர்ஸன பட்டரை சந்திக்க நாலாயிர திவ்ய ப்ரபந்த வ்யாக்யானகர்த்தா திரு. பெரியவாச்சான் பிள்ளை அவர்களும், 18 ரகஸ்ய க்ரந்தங்கள் ஸாதித்தருளிய திரு. பிள்ளை லோகாசார்யர் அவர்களும் வந்தன்ர்.

பெரியவாச்சான் பிள்ளை: தேவரீர் ! அடியோங்களின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ள வேணும் !

சுதர்ஸன பட்டர் : வாரும் வாரும் ! ஏன் இந்த ஓட்டம் ?

பிள்ளை லோகாசார்யர் : ஸ்வாமி, வடக்கிலிருந்து மாயாவாதிகள் சிலர் வாதப்போர் புரிய வந்துள்ளனர். விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதற்கு தேவரீர் தான் ஆலோசனை வழங்க வேண்டும்.

சுதர்ஸன பட்டர்: ராமானுஜ சித்தாந்தத்திற்கு ஒருநாளும் ஒரு குறையும் வராது. வந்திருக்கும் மாயாவாதிகளை தூப்புல் வேங்கடநாதன் ஒருவனால் தான் எதிர்கொள்ள முடியும். உடன் அவரை வரவழையுங்கள்.
_______________________________________________________________________


தூப்புல்

விஷயம் கேள்விப்பட்ட வேங்கடநாதன், இராமானுஜ சம்ப்ரதாயம் செழித்து விளங்க புறப்படுகிறார்...
வேங்கடநாதன் எனும் கப்பல் காஞ்சியில் இருந்து கஸ்தூரி ரங்கரின் கோவிலை நோக்கி புறப்படப் போகிறது.
ஜெயத்தை பறைசாற்ற வடகலைக் கொடி பட்டொளி வீசிப் பறக்க,
திருவேங்கடமுடையான், பார்த்தசாரதி, வீரராகவனும் கப்பலில் முதலில் ஏறிக் கொள்ள,
ஆழ்வார்கள் பதின்மரும் கப்பலில் ஏறியவுடன்..
மாலுமியாக ஹயக்ரீவர் அமர
________________________________________________________________________


ஓம்கார சத்தத்தை எழுப்பிக் கொண்டு கப்பல் செல்லும் அழகையும், ஸ்வாமி வேதாந்த தேசிகரின் வெற்றியை பறைசாற்றும் ஒரு அருமையான பாடலையும் கேட்டு அனுபவியுங்கள்.



காசினியோர் தாம் வாழும் காஞ்சி நகர் வந்துதித்து
தேசமெல்லாம் பவனி வரும் எங்கள் தேசிகக் கப்பல் இது !!

நாலு வேதங்களும் நங்கூரமாக
நலமுடைய வடகலைக் கொடியொன்றை நாட்டி
திருமொழிகள் முதலான பிரபந்தங்கள் எல்லாம்
திடமான கொடியிலே கயிறாக மாட்டி
ஆழ்வார்கள் பதின்மரும் அதன்மேலே ஏறி
அடைவுடன் வழிதேடி சுக்கான் திரும்ப
காஞ்சி நகர் விட்டு கிளம்பியே கப்பல்
ஸ்தூரி ரங்கருடை கோவிலைத் தேடி

பரமகுரு எங்களுடை தேசிக கப்பல்
பாலாறு கரை தாண்டி வருகுதய்யா கப்பல்
ஏலேலோ விபுதேஷா கோவிந்தா
ஏலேலோ குருராஜா

கருணை எனும் கடல் நடுவே
ஞானம் எனும் பாய் விரித்து
மறையவர்கள் ஜெய ஜெயவென
மகிழ்ந்து வரும் கப்பல் இது

ஆறு சாஸ்திரங்களும் பீரங்கியாக
ஹயக்ரீவர் அவர்களுக்கு அதிகாரியாக
கப்பலின் மேல்வரும் துரைகளின் பேர்கள்
கணக்குடன் சொல்லுவேன் ஞானமுடன் கேளீர்

திருமலையிலே வாழும் திருவேங்கடத்தான்
திருவலிக்கேணியில் பார்த்தசாரதியும்
திருவள்ளூர் அதிகாரி வீரராகவனும்
திருவிடந்தை மேவு லக்ஷ்மிவராகன்
இத்தனை துரைகளும் இதன்மேலே ஏற
விசையுடன் கப்பலும் இவ்விடம் விட்டு

தெளிவுடை பெண்ணை நதிக் கரைதன்னில் வந்து
திருக்கோவலூர் கண்டு திரும்புதய்யா கப்பல்
ஏலேலோ விபுதேஷா கோவிந்தா
ஏலேலோ குருராஜா

உலகமெலாம் இருள் நீங்க
உடையவர் தம் மதம் விளங்க
அறு சமயக் கொடியறுத்து
அமர்ந்து வரும் கப்பல் இது

தர்மங்கள் ஆனதொரு பலகைகள் சேர்த்து
தர்ப்பங்கள் ஆனதொரு பாய்மரம் நாட்டி
அருமறைகள் ஆனதொரு ஆணிகள் தைத்து
அரங்க மாநகர் தேடி அதிவேகமாக
பதிகள் நூற்றெட்டிலும் முதலான கோயில்
பிரதிவாதியாலே ஒரு பழுதாகாதென்று

திருக்கோவலூர் விட்டு கிளம்பியே கப்பல்
திருச்சோழ் நாட்டை ஓர் நொடியிலே தாண்டி
காவேரிக் கரைதன்னில் உதயத்தில் வந்து
கஸ்தூரி ரங்கருடைக் கோவிலைக் கண்டு
கண்ணாலே ஆனந்த பாஷ்பங்கள் உதிர
கமலங்கள் போல இரு கைகளைக் கூப்பி
அத்தலத்துள்ளோர் அனைவர்களாலே ஆராதனம் நின்ற செய்தியைக் கேட்டு

செழிப்புடைய வடதிருக்காவேரி தாண்டி
ஸ்ரீரங்க நகர் வந்து சேர்ந்ததைய்யா கப்பல்
ஏலேலோ விபுதேஷா கோவிந்தா
ஏலேலோ குருராஜா

பதின்மர்கள் துதிசெய்ய கோவிந்தா
பாம்பணை மேல் பள்ளி கொள்ளும்
ரவிகுலத்தோர் குலதெய்வம் எங்கள் ரங்கருடை சன்னிதிக்கு
இவ்வுலகில் ஒருவரும் ஈடில்லையென்று
எங்கள் குரு தேசிகரை லேசாக எண்ணி
கிருஷ்ணமிஷ்ரன் வந்து கட்சிகள் சொல்ல

கண்டாவதாரரை கண்டித்து மேலும் சாஸ்திரங்களான
பீரங்கியாலே சண்டப்ரசண்டமாய் சண்டைகள் செய்து
எதிரிகள் கவிவாதி சிம்ஹத்தின் முன்னே
எதிரிகள் கவிவாதி சிம்ஹத்தின் முன்னே
எதிர் நிற்க மாட்டாமல் எழுந்திருந்தோட
அப்போது ரங்கருக்கு ஆராதனை செய்ய

அங்குள்ள பேர்களுக்கு ஆக்ஞைகள் பண்ணி
ஸ்ரீரங்க நகர் விட்டு கிளம்பியே கப்பல்
திருப்பேர்நகர் தாண்டி ஆடுதுறை வந்து
கும்பகோணம் வந்து ஒருநாள் இருந்து
கோதண்டபாணியுடை பாதங்கள் கண்டு
திருவாழி திருநகரி சீர்காழி வந்து
திரைகடல் போல் வரும் கொள்ளிடம் தாண்டி
சித்திர கூடம் வந்து ஒருநாள் இருந்து
தேவாதி நாதனை கண்டு கை தொழுது

அழகுடைய கருடநதி கரைதனில் வந்து
அயிந்தை மாநகர் வந்து சேர்ந்ததைய்யா கப்பல்
ஏலேலோ விபுதேஷா கோவிந்தா
ஏலேலோ குருராஜா

பாடியவர்கள் : என் அத்தைகள் ஸ்ரீவில்லிபுத்தூர் கமலா மற்றும் அவர் சகோதரி கோமளம்.

Get this widget Track details eSnips Social DNA
புரட்டாசித் திருவோணத்தில் அவதரித்த எங்கள் தூப்புல் கவிதார்க்கிக சிங்கம், வேதாந்த தேசிகர் அடிபணிகிறேன்.

நானிலமும் தான் வாழ, நான்மறைகள் தாம் வாழ,
மாநகரில் மாறன் மறை வாழ - ஞானியர்கள்
சென்னி அணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

Wednesday, September 09, 2009

மனதார அழைக்கிறேன் நான் முகுந்தா



தன்னந்தனியாக அமர்ந்திருக்கும் போது தானாக வந்து விழும் வார்த்தைகளுக்கு ஒரு உருவம் தந்தால் எப்படியிருக்கும்? இதை கவிநயா அக்காவிடம் இரவிசங்கர் கண்ணபிரானிடமும் தான் கேட்கவேண்டும். அது போன்ற நிலை எப்போதாவது ஒரு முறை தான் அபராத சக்ரவர்த்தியான இந்தப் பித்தனுக்கு ஏற்படும்.

மொன்னு க3னி பொ4வரேஸ் மீ முகு3ந்தா – மொகொ3
மோக்ஷி தெ2வன் மொன்னு தோவி கோவிந்தா3
பொன்னா ஜா2ட் ஹிங்கி3 க2ளே மாத3வா - மொர
பொ3ன்னொ பு2ட்டி ஜேட3ரேஸ்ரே கேஸவா

மனதார அழைக்கிறேன் நான் முகுந்தா - எனக்கு
மோட்சம் தர மனம் வைப்பாய் கோவிந்தா
புன்னை மரம் ஏறி ஆடிய மாதவா - எனது
பானை உடைந்து போகின்றதே கேசவா

பாய்ம்பொடே3த் தூ ஹாத் சொட்னா அச்யுதா3 - தொர
பாயிர் பொடேஸ் ஹாத் தே3 ஸ்ரீ அனந்தா
மாய் பா3பு3ன் மொகொ3 தூஸ் ரே மாத3வா – ரெங்க3
ஸாயி மொகொ3 ஸாரே ஸ்ரீ கேஸவா

வணங்கினால் நீ கைவிடாய் அச்சுதா - உந்தன்
தாள் அடைந்தேன் கை கொடு ஸ்ரீ அனந்தா
தாய் தந்தை எனக்கு நீயே மாதவா - ரெங்க
சாயி என்னைப் பார்ப்பாய் ஸ்ரீ கேசவா

ராத் தீ3ஸுந் நாவ் மெனரெஸ் ராக3வா – தொகொ3
ராக் காய்ரே ராக் ஸோட்ரே ராக3வா
ஸாத் லோகு3ம் பொ4ரி ரியெஸி வாமனா - மொர
ஸாத் ரனோ மெல்லரேஸி உத்தமா

இராப்பகலாய் பெயர் சொல்கிறேன் இராகவா - உனக்கு
சினம் என்ன சினம் விடுவாய் இராகவா
ஏழுலகும் நிறைந்திருந்தாய் வாமனா - என்
உடனிருக்க வேண்டும் சொன்னேன் உத்தமா

***

திருமந்திரமாம் எட்டெழுத்து மந்திரத்திற்குப் பொருளுரைக்கும் ஒரு தொடரை எழுதி நிறைவு செய்து மாதவிப் பந்தலும் நிறைவு பெற்றது என்று அறிவித்திருக்கிறார் சிறு வயதிலேயே நிறைய பட்ட, எம்பெருமானாரின் இன்றைய தோற்றம் என்று சொல்லலாம்படியான, நம் நண்பர் இரவிசங்கர். எங்கே ஆனாலும் என்றைக்கு ஆனாலும் தொடர்ந்து அவருடைய் தொண்டு நிகழ்ந்து கொண்டு வரவேண்டும். அதற்கு என் கண்ணன் அருள் புரியவேண்டும்.

என்னை இப்படி தனியன் ஆக்கத் தானா இவன் மேல் தனியன் எழுதவைத்தாய் எம்பெருமானே?!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP