Showing posts with label *காசினியோர் தாம் வாழும் காஞ்சி நகர் வந்துதித்து. Show all posts
Showing posts with label *காசினியோர் தாம் வாழும் காஞ்சி நகர் வந்துதித்து. Show all posts

Monday, September 28, 2009

காஞ்சிபுரம் டு திருவரங்கம் - கப்பலில் போக முடியுமா?

காஞ்சிபுரம் டு திருவரங்கம் - பேருந்தில் போகலாம்! ரயில்ல போகலாம்! கார்-ல போவலாம்! எங்களைப் போல வருத்தப்படாத வாலிபர்கள் பைக்-ல கூட ஜாலியாப் போகலாம்! ஆனா கப்பல்-ல போக முடியுமா? - முடியும்!

எப்படி? அதைத் தான் இன்னிக்கி பதிவில் பார்க்கப் போகிறோம்!


ராமாநுஜதயா பாத்ரம் ஜ்ஞாந வைராக்ய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் !!
ஜெகதாசார்யரான இராமானுஜரின் கருணைக்கு பாத்தியமானவரும், ஞானம் மற்றும் வைராக்ய குணக்கடலாகிய வேங்கடநாதன் எனும் வேதாந்த தேசிகரை வணங்குகிறேன்.

வேதாந்த தேசிகர் திரு அவதார தினமாகிய இன்று அவரைப் பற்றிய ஒரு பாடலை அனுபவிப்போமா.. அது ஒரு கப்பல் பாட்டு!
திருவில்லிபுத்தூரில் இன்றைய தினம் நடக்கும் உற்சவத்தைப் பற்றி பரவஸ்து. நாராயணதாஸன் (எனது பெரியப்பா) விவரித்ததை இங்கு சென்று அனுபவியுங்கள்.
இங்கே!


இன்று,


புரட்டாசித் திருவோணம் எனும் உத்தமமான நாள்!
வகுளாபரணப் பெருமாள் தமிழின் வாசியறிந்திருநாள்-
திக்கெட்டும் புகழ் ஸ்ரீபாஷ்யத்தைத் தெளிய உரைத்திடுநாள்
தீதாகிய பல மாயக் கலிகளை சிக்கென வென்றிடுநாள்.
பேச்சொன்றுக்குச் சததூஷணியைப் பேசிய தேசிக நாள்
வாதியர் வாழ்வறுத்த கவிதார்க்கிக சிம்மம், பற்பல
கலை வல்ல பாவலன் வேதாந்தார்யன் உதயம் செய்திடுநாள்
_____________________________________________________


108 திருப்பதிகளில் முதலாவதான திருவரங்கம். ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் தலைநகரம். அங்கு ஒருநாள்,

ஸ்ரீமத் ராமானுஜரின் ஸ்ரீபாஷ்யத்திற்கு, ஸ்ருதப் பிரகாசிகை எனும் விளக்கவுரை எழுதிய ஸ்ரீசுதர்ஸன பட்டரை சந்திக்க நாலாயிர திவ்ய ப்ரபந்த வ்யாக்யானகர்த்தா திரு. பெரியவாச்சான் பிள்ளை அவர்களும், 18 ரகஸ்ய க்ரந்தங்கள் ஸாதித்தருளிய திரு. பிள்ளை லோகாசார்யர் அவர்களும் வந்தன்ர்.

பெரியவாச்சான் பிள்ளை: தேவரீர் ! அடியோங்களின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ள வேணும் !

சுதர்ஸன பட்டர் : வாரும் வாரும் ! ஏன் இந்த ஓட்டம் ?

பிள்ளை லோகாசார்யர் : ஸ்வாமி, வடக்கிலிருந்து மாயாவாதிகள் சிலர் வாதப்போர் புரிய வந்துள்ளனர். விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை நிலைநிறுத்துவதற்கு தேவரீர் தான் ஆலோசனை வழங்க வேண்டும்.

சுதர்ஸன பட்டர்: ராமானுஜ சித்தாந்தத்திற்கு ஒருநாளும் ஒரு குறையும் வராது. வந்திருக்கும் மாயாவாதிகளை தூப்புல் வேங்கடநாதன் ஒருவனால் தான் எதிர்கொள்ள முடியும். உடன் அவரை வரவழையுங்கள்.
_______________________________________________________________________


தூப்புல்

விஷயம் கேள்விப்பட்ட வேங்கடநாதன், இராமானுஜ சம்ப்ரதாயம் செழித்து விளங்க புறப்படுகிறார்...
வேங்கடநாதன் எனும் கப்பல் காஞ்சியில் இருந்து கஸ்தூரி ரங்கரின் கோவிலை நோக்கி புறப்படப் போகிறது.
ஜெயத்தை பறைசாற்ற வடகலைக் கொடி பட்டொளி வீசிப் பறக்க,
திருவேங்கடமுடையான், பார்த்தசாரதி, வீரராகவனும் கப்பலில் முதலில் ஏறிக் கொள்ள,
ஆழ்வார்கள் பதின்மரும் கப்பலில் ஏறியவுடன்..
மாலுமியாக ஹயக்ரீவர் அமர
________________________________________________________________________


ஓம்கார சத்தத்தை எழுப்பிக் கொண்டு கப்பல் செல்லும் அழகையும், ஸ்வாமி வேதாந்த தேசிகரின் வெற்றியை பறைசாற்றும் ஒரு அருமையான பாடலையும் கேட்டு அனுபவியுங்கள்.



காசினியோர் தாம் வாழும் காஞ்சி நகர் வந்துதித்து
தேசமெல்லாம் பவனி வரும் எங்கள் தேசிகக் கப்பல் இது !!

நாலு வேதங்களும் நங்கூரமாக
நலமுடைய வடகலைக் கொடியொன்றை நாட்டி
திருமொழிகள் முதலான பிரபந்தங்கள் எல்லாம்
திடமான கொடியிலே கயிறாக மாட்டி
ஆழ்வார்கள் பதின்மரும் அதன்மேலே ஏறி
அடைவுடன் வழிதேடி சுக்கான் திரும்ப
காஞ்சி நகர் விட்டு கிளம்பியே கப்பல்
ஸ்தூரி ரங்கருடை கோவிலைத் தேடி

பரமகுரு எங்களுடை தேசிக கப்பல்
பாலாறு கரை தாண்டி வருகுதய்யா கப்பல்
ஏலேலோ விபுதேஷா கோவிந்தா
ஏலேலோ குருராஜா

கருணை எனும் கடல் நடுவே
ஞானம் எனும் பாய் விரித்து
மறையவர்கள் ஜெய ஜெயவென
மகிழ்ந்து வரும் கப்பல் இது

ஆறு சாஸ்திரங்களும் பீரங்கியாக
ஹயக்ரீவர் அவர்களுக்கு அதிகாரியாக
கப்பலின் மேல்வரும் துரைகளின் பேர்கள்
கணக்குடன் சொல்லுவேன் ஞானமுடன் கேளீர்

திருமலையிலே வாழும் திருவேங்கடத்தான்
திருவலிக்கேணியில் பார்த்தசாரதியும்
திருவள்ளூர் அதிகாரி வீரராகவனும்
திருவிடந்தை மேவு லக்ஷ்மிவராகன்
இத்தனை துரைகளும் இதன்மேலே ஏற
விசையுடன் கப்பலும் இவ்விடம் விட்டு

தெளிவுடை பெண்ணை நதிக் கரைதன்னில் வந்து
திருக்கோவலூர் கண்டு திரும்புதய்யா கப்பல்
ஏலேலோ விபுதேஷா கோவிந்தா
ஏலேலோ குருராஜா

உலகமெலாம் இருள் நீங்க
உடையவர் தம் மதம் விளங்க
அறு சமயக் கொடியறுத்து
அமர்ந்து வரும் கப்பல் இது

தர்மங்கள் ஆனதொரு பலகைகள் சேர்த்து
தர்ப்பங்கள் ஆனதொரு பாய்மரம் நாட்டி
அருமறைகள் ஆனதொரு ஆணிகள் தைத்து
அரங்க மாநகர் தேடி அதிவேகமாக
பதிகள் நூற்றெட்டிலும் முதலான கோயில்
பிரதிவாதியாலே ஒரு பழுதாகாதென்று

திருக்கோவலூர் விட்டு கிளம்பியே கப்பல்
திருச்சோழ் நாட்டை ஓர் நொடியிலே தாண்டி
காவேரிக் கரைதன்னில் உதயத்தில் வந்து
கஸ்தூரி ரங்கருடைக் கோவிலைக் கண்டு
கண்ணாலே ஆனந்த பாஷ்பங்கள் உதிர
கமலங்கள் போல இரு கைகளைக் கூப்பி
அத்தலத்துள்ளோர் அனைவர்களாலே ஆராதனம் நின்ற செய்தியைக் கேட்டு

செழிப்புடைய வடதிருக்காவேரி தாண்டி
ஸ்ரீரங்க நகர் வந்து சேர்ந்ததைய்யா கப்பல்
ஏலேலோ விபுதேஷா கோவிந்தா
ஏலேலோ குருராஜா

பதின்மர்கள் துதிசெய்ய கோவிந்தா
பாம்பணை மேல் பள்ளி கொள்ளும்
ரவிகுலத்தோர் குலதெய்வம் எங்கள் ரங்கருடை சன்னிதிக்கு
இவ்வுலகில் ஒருவரும் ஈடில்லையென்று
எங்கள் குரு தேசிகரை லேசாக எண்ணி
கிருஷ்ணமிஷ்ரன் வந்து கட்சிகள் சொல்ல

கண்டாவதாரரை கண்டித்து மேலும் சாஸ்திரங்களான
பீரங்கியாலே சண்டப்ரசண்டமாய் சண்டைகள் செய்து
எதிரிகள் கவிவாதி சிம்ஹத்தின் முன்னே
எதிரிகள் கவிவாதி சிம்ஹத்தின் முன்னே
எதிர் நிற்க மாட்டாமல் எழுந்திருந்தோட
அப்போது ரங்கருக்கு ஆராதனை செய்ய

அங்குள்ள பேர்களுக்கு ஆக்ஞைகள் பண்ணி
ஸ்ரீரங்க நகர் விட்டு கிளம்பியே கப்பல்
திருப்பேர்நகர் தாண்டி ஆடுதுறை வந்து
கும்பகோணம் வந்து ஒருநாள் இருந்து
கோதண்டபாணியுடை பாதங்கள் கண்டு
திருவாழி திருநகரி சீர்காழி வந்து
திரைகடல் போல் வரும் கொள்ளிடம் தாண்டி
சித்திர கூடம் வந்து ஒருநாள் இருந்து
தேவாதி நாதனை கண்டு கை தொழுது

அழகுடைய கருடநதி கரைதனில் வந்து
அயிந்தை மாநகர் வந்து சேர்ந்ததைய்யா கப்பல்
ஏலேலோ விபுதேஷா கோவிந்தா
ஏலேலோ குருராஜா

பாடியவர்கள் : என் அத்தைகள் ஸ்ரீவில்லிபுத்தூர் கமலா மற்றும் அவர் சகோதரி கோமளம்.

Get this widget Track details eSnips Social DNA
புரட்டாசித் திருவோணத்தில் அவதரித்த எங்கள் தூப்புல் கவிதார்க்கிக சிங்கம், வேதாந்த தேசிகர் அடிபணிகிறேன்.

நானிலமும் தான் வாழ, நான்மறைகள் தாம் வாழ,
மாநகரில் மாறன் மறை வாழ - ஞானியர்கள்
சென்னி அணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே
இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP