Friday, August 22, 2008

கண்ணன் பிறந்தான்… எங்கள் மன்னன் பிறந்தான்..!!


குட்டிக் கண்ணனை பார்த்ததுமே கட்டிக் கொள்ள ஆவல் பிறக்கிறதல்லவா!
நீல வண்ணக் கண்ணனுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!!

பூம்பிஞ்சுப் பாதம் எடுத்து
பூப்போல அடிகள் பதித்து
பூவைப்பூ வண்ணக் கண்ணன்
புவிமகிழ பிறந்து வந்தான்!!


ஏற்கனவே எழுதின ஒரு பாடலை இடலாம்னுதான் வந்திருக்கேன். ஆனாலும் கண்ணனை நினைச்சோன்ன பிறக்கிற கவிதையை தடுக்க முடியல :) பரவாயில்ல, இதை இப்ப முடிக்காம இன்னொரு மழைக்காலத்துக்கு சேமிச்சு வச்சுக்கறேன்!

கண்ணன்னாலே ஒரு தனி சிறப்பு இருக்கு. செல்லக் குழந்தையாகவும், விளையாட்டுப் பிள்ளையாகவும், தோள் கொடுக்கும் தோழனாகவும், உள்ளங்கவர் கள்வனாகவும், கீதாசிரியனாகவும், பரம்பொருளாகவும், இப்படி பல பரிமாணங்கள்ல அவனை சுலபமாக பாவித்துக் கொள்ளலாம்! ஆனா இன்னைக்குதானே அவனுடைய பிறந்த நாள்… அதனால அவனை இன்னைக்கு சின்னக் குழந்தையா மட்டும் பார்த்து கொஞ்சிக்கலாம் :) என்ன சொல்றீங்க?


நம்ம கண்ணன் (கேஆரெஸ்) முருகனருள் 100-வது பதிவுக்காக முருகன் மேல ஒரு காவடிச் சிந்து எழுதியிருந்தார். அதை பார்த்து எனக்கும் ஒரு காவடிச் சிந்து எழுதணும்னு ஆசை வந்தது, அப்போதான், “ஏங்க்கா, கண்ணன் காவடி சிந்து ஒண்ணு எழுதுங்களேன்; கண்ணன் பாட்டுல போடலாமே”ன்னு சொன்னார். அதன்படி எழுதின பாடல்தான் இங்கே.

இந்த பாடலை உற்றுக் கவனிச்சீங்கன்னா ஒரு ரெண்டு அல்லது மூணு இடத்துல கேஆரெஸ் உடைய முத்திரை (சுத்தத் தமிழ்ல சொன்னா அவருடைய ‘டச்’!) தெரியும் – அவர் இந்த பாடல்ல சில சொற்களை மாற்றியிருக்கார், அதைத்தான் சொல்றேன். எல்லாம் கண்டு பிடிக்க முடியலைன்னாலும், அவருடைய வாசகரா இருக்கவங்க, ஒரு இடம் கண்டிப்பா கண்டுபிடிச்சிரலாம்! எங்கே, சொல்லுங்க பார்ப்போம்!


இந்த பாடலை மாதவிப் பந்தலாரும், இந்த வார தமிழ்மண நட்சத்திரமும், மனமுவந்து பாடியும் தந்திருக்காங்க. அவங்க ரெண்டு பேருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

குமரன் குரலில்:




கேஆரெஸ் குரலில்:



பாடல் வரிகள்:

கண்ணன் என் னும்மன்னன் பிறந்தான் நெஞ்சம் தவழ்ந்தான் - நந்த
கோபனின் செல்வனாய் வளர்ந்தான் - அந்த
ஆயர் குடி ஆயர் இடை மாயன் அவன் ஆயன் என
நடந்தான் வையம் அளந்தான் - அவன்
திரிந்தான் லீலை புரிந்தான்


ஆவின் இனங்களை மேய்த்தான் வீடு சேர்த்தான் - கண்ணன்
பூவின மாதரை ஈர்த்தான் - வண்ண
மலர் கொய்துச் சூடி, அவள் ஆடை கள வாடி
சிரிப்பான் பின்னல் பிரிப்பான் - அதை
மறைப்பான் மனம் கரைப்பான்


கிண்கிணிச் சலங்கை ஒலிக்க சிந்து படிக்க - கண்கள்
குறும்பில் மின்னியே ஜொலிக்க - சின்னக்
கண்ணன் அவன் வெண்ணை இதழ் கன்னம் இட்டு மின்னல் எனக்
கவர்வான் தின்று மகிழ்வான் - பின்னர்
ஒளிவான் பிடி படுவான்


புல்லாங் குழலினை எடுப்பான் கானம் படிப்பான் - புவி
எல்லாம் மயங்கிட இசைப்பான் - கன்னல்
மொழி பேசும் கண்ணன் அவன் மயிற்பீலி அசைய
வருவான் உள்ளம் நுழைவான் - இன்பம்
தருவான் தமிழ்ப் பெருமான்!

***
முதல் பதிவே கண்ணன் பிறந்த நாளுக்கு எழுத முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. வாய்ப்பளித்த கேஆரெஸ்ஸுக்கும், கண்ணன் பாட்டு குழுவிற்கும், முக்கியமாய் கார்மேக வண்ணனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

படங்களுக்கு நன்றி: குமரன்,மற்றும், http://flickr.com/photos/swarupdas/2186797767/,


***

அன்புடன்
கவிநயா

21 comments :

Raghav said...

கண்ணா.. என் மன்னா.. எங்கள் மாணிக்கமே.. உனக்கு இந்த சிறியேனின் முதல் வாழ்த்து...

Kavinaya said...

குட்டிக் கிருஷ்ணனுக்கு மனங் கனிந்த வாழ்த்துகள்... மீண்டும் சொல்லிக்கிறேன் :)

Raghav said...

கண்ணனை எவ்வளவு அழகாக பாட்டு பாடி வரவேற்றுள்ளீர்கள் அக்கா.. அப்படியே சொக்கிப்போய் உள்ளேன்.

குமரனின் குரலும், நம் கண்ணனின் குரலும் நம்மை உருக்குகின்றன.. நானும் கூடச்சேர்ந்து பாடினேன்.. அப்படியே கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு...

Raghav said...

குமரன், அழகா அருமையா பாடிருக்கீங்க.. அவனை மனத்தில் இருத்தாமல் இவ்வளவு அருமையாக பாட முடியாது.

ரவி அண்ணா, அருமை..கண்ணனை வேற எங்கயும் போக விடாம, கண்ணன் பாட்டுலய இருக்குற மாதிரி பாடிருக்கீங்க...

Kavinaya said...

மிக்க நன்றி ராகவ். நீங்களும் பாடி அனுப்புங்களேன்... பதிவுல சேர்த்துடறேன்.

எல்லாருக்குமே சொல்லிக்கிறேன் - பாட ஆசையா இருந்தா பாடி அனுப்புங்க மக்களே! கண்ணன் மகிழ்வான்; நானும்... :)

Raghav said...

நான் ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சவன்னு நினைக்கிறேன். இப்போ தான் இங்க லக்ஷ்மி கோவிலுக்கு போயிட்டு வர்றேன்.. அங்கே கண்ணன் கோலாட்டம், கண்ணன் தெப்போத்ஸவம் எல்லாம் பாத்துட்டு வந்தா நம்ம வீட்டுக்கு கண்ணன் வந்து ஜம்முன்னு காவடி சிந்து கேட்டுகிட்டே உக்காந்துருக்கான்.. என்ன ஒரு சிரிப்பு அவன் முகத்தில்..பிறந்தநாள் பையன் அல்லவா..

சதங்கா (Sathanga) said...

கவிநயா,

கண்ணனைப் பற்றிய எழுத்துக்களும், அழகிய கவிதையும் அருமை அருமை. இன்னும் பாடலைக் கேட்கவில்லை. கேட்டுப் பார்க்கிறேன்.

Raghav said...

//கவிநயா said...
மிக்க நன்றி ராகவ். நீங்களும் பாடி அனுப்புங்களேன்... பதிவுல சேர்த்துடறேன்.//

ரொம்ப நன்றி அக்கா.. கண்ணன் நிரந்தரமா இங்கயே கண்ணன் பாட்டுலயே தங்கனும்னு நினைக்கிறேன். கண்ணனுக்கு கவிகளையும், குமரன், ரவி போன்ற குயில்களையும் தான் பிடிக்கும்.. கூட்டத்தோட சேர்ந்து கோவிந்தா வேணும்னா போடுறேன்.. பாட மட்டும் சொல்லாதிக..

சிவமுருகன் said...

அனைவருக்கும் ஜென்மாஷ்டமி வாழ்த்துக்கள்

சிவமுருகன் said...

கண்ணன் என் அழகன்
கண்ணன் என் ஆசான்
கண்ணன் என் இறைவன்
கண்ணன் என் ஈசன்
கண்ணன் என் உற்றான்
கண்ணன் என் ஊரான்
கண்ணன் என் எதிரி
கண்ணன் என் ஏகாந்தன்
கண்ணன் என் ஐயன்
கண்ணன் என் ஒளி
கண்ணன் என் ஓவியம்
கண்ணன் என் ஔஷதம்
அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்

முகுந்தன் said...

படங்களும் பாடல்களும் அற்புதம். எல்லாம் வல்ல
அந்த மாயக்கண்ணன்
உங்களை காத்து ரக்ஷிப்பானாக ....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

காவடிச் சிந்து அப்படியே இனிமை சிந்துது!
கண்ணன் பிறந்தநாளுக்குக் களிப்பான ஆட்டம்!

பாட்டு சூப்பர்-க்கா!

ராமலக்ஷ்மி said...

கண்ணன் பிறந்தான்
எங்கள் கவிநயாவின் வரிகளில்
கண்ணன் பிறந்தான்..
எங்கள் மன்னன் பிறந்தான்
குமரன் கேஆரெஸ் குரல்களில்
எங்கள் மன்னன் மீண்டும் பிறந்தான்...

உங்கள் மூவருக்கும் எங்கள் நன்றிகள்!

Kavinaya said...

நீங்க ரொம்ப நல்லூழ் செய்தவர்தான் ராகவ். சந்தேகமில்லை :) அதோட மட்டுமில்லாம, கவிகளையும் குயிலகளையும்தான் கண்ணனுக்கு பிடிக்கும்னு இல்லை. அன்பிருக்கும் இதயமெல்லாம் அவன் உறையும் இடமே. நீங்கள் அறியாததா? :)

Kavinaya said...

//கண்ணனைப் பற்றிய எழுத்துக்களும், அழகிய கவிதையும் அருமை அருமை. இன்னும் பாடலைக் கேட்கவில்லை. கேட்டுப் பார்க்கிறேன்.//

மிக்க நன்றி சதங்கா. பாடலை பாடிக் கேட்க இன்னும் ரொம்பப் பிடிக்கும். கேட்டு சொல்லுங்க :)

Kavinaya said...

வாங்க சிவமுருகன். அவனே எல்லாம்னு அழகா வரிசைப் படுத்தி சொல்லீட்டிங்க :) நன்றி.

Kavinaya said...

//படங்களும் பாடல்களும் அற்புதம். எல்லாம் வல்ல
அந்த மாயக்கண்ணன்
உங்களை காத்து ரக்ஷிப்பானாக ....//

மிக்க நன்றி முகுந்தன். உங்களுக்கும், அனைவருக்கும் அவன் அருள் கூடி நிற்கட்டும்.

Kavinaya said...

வாங்க ராமலக்ஷ்மி. "எங்கள் கவிநயா"ன்னு சொன்னதில உச்சி குளிர்ந்து போயிடுச்சு :) உங்களுடைய மாறாத அன்புக்கு மிக்க நன்றி.

Kavinaya said...

//காவடிச் சிந்து அப்படியே இனிமை சிந்துது!
கண்ணன் பிறந்தநாளுக்குக் களிப்பான ஆட்டம்!

பாட்டு சூப்பர்-க்கா!//

எழுதறதுக்கு நீங்க தந்த உற்சாகத்திற்கும் சிறப்பாகப் பாடினதுக்கும் உங்களுக்குதான் ரொம்ப நன்றி கண்ணா :)

jeevagv said...

ஆகா, அருமையாக இருந்தது தங்கள் சிந்து கவிநயா அக்கா.
குமரன், கே.ஆர்.எஸ் - இருவரும் அழகாக பாடி இருக்கிறார்கள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Kavinaya said...

//அருமையாக இருந்தது தங்கள் சிந்து கவிநயா அக்கா.
குமரன், கே.ஆர்.எஸ் - இருவரும் அழகாக பாடி இருக்கிறார்கள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி ஜீவா!

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP