டிரிப்ளிக்கேன்! ஆகா, என்ன அழகா வெள்ளைக்காரன் பேரு வச்சிருக்கான்!
Trip போனா Liquor & Cane Juice எடுத்துக்கிட்டு போகணும் - அப்போ தான் சரக்கு ஏறும்! அதான் Trip, Liq, Cane என்று வைத்தானோ? :)
இந்த மார்கழி வெள்ளிக் கிழமை, சும்மா காலாற, திருவல்லிக்கேணி போவலாம், வாரீகளா?
திருவல்லிக்கேணி = அல்லி மலர்கள் பூத்துக் குலுங்கும் கேணி!
தொட்டணைத்தூறும் மணற் கேணி - குறள் ஞாபகம் வருதா?
108 திருத்தலங்களுள் ஒன்று! ஆழ்வார்கள் பாசுரம் பெற்ற தலம்! இராமானுசர் பிறக்க, அவர் பெற்றோர்கள் வேண்டிக் கொண்ட தல
அட, "கூவம் மிகு" சென்னைக்கு இவ்வளவு பெருமையா-ன்னு ஆச்சரியமா இருக்கு-ல்ல? :)
திருஞானசம்பந்தர், ஆழ்வார்கள், அருணகிரி, வள்ளலார்-ன்னு சென்னையைப் பாடாதவர்களே இல்லை-ங்கிறேன்!
அந்தச் சென்னையின் கடலோரத்தில், நெய்தல் நிலத்தில், முல்லை நிலத் தலைவன் மாயோனுக்கு ஒரு பழமை வாய்ந்த ஆலயம்!
அல்லி மலர்கள் பூத்துக் குலுங்கும் கேணி!

இப்போ கொஞ்சம் பராவாயில்லை! குளத்தில் தண்ணீர் உள்ளது!
சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டுச் சுத்தமாகவும் உள்ளது! அல்லி மலர்கள் தான் காணோம்!
ஆறுதலான விடயம்: பேருந்துகள், தொடர்வண்டி நிலையம் எல்லாவற்றிலும் ட்ரிப்ளிக்கேன் என்று எழுதாமல், திருவல்லிக்கேணி என்றே எழுதி இருக்கிறார்கள்!
அந்நியன் படத்தில் அம்பி உலா வரும் இடம், Arrest-ஆகும் குளம், எல்லாம் இது தான்!:)
மாநிலக் கல்லூரி (Presidency College), கண்ணகி சிலை, மெரீனா கடற்கரை, பெரிய மசூதி, ஆர்க்காடு நவாப்பின் அமீர் மகால், ரத்னா கபே...
இப்படிப் பல பிரபலங்கள் உள்ள இடம் திருவல்லிக்கேணி! சென்னையின் மிகப் பெரிய "சேவல் பண்ணை", அதாங்க Mens Mansion-உம் இங்கே தான்! :)
மும்பை - Gateway of India போல், Gateway of Chennai = TiruvallikENi! :)
திருவல்லிக்கேணி ஆலயத்துக்குள் போலாமா?நான் சென்னை வரும் போதெல்லாம் - அல்லிக்கேணி & வடபழனி - Never Miss! ஒன்னு என் பொறந்த வீடு, இன்னொன்னு என் புகுந்த வீடு! :)

முதலில் முக்கியமான விஷயம் சொல்லிடறேன்! அப்பாலிக்கா பெருமாளைப் பார்ப்போம்!
1. இந்த ஆலயத்து சர்க்கரைப் பொங்கல் சூப்பர் டேஸ்ட்! ஒரு கிலோ அரிசின்னா, அரை கிலோ நெய், அரை கிலோ முந்திரி போட்டுச் செய்யும் சர்க்கரைப் பொங்கலை - மறக்காம கேட்டு வாங்கிச் சாப்பிடுங்க! :)
2. திருவல்லிக்கேணிப் பெண்கள், மரபு உடையில் இருந்தாங்க-ன்னா, கொள்ளை அழகு! :) திருமங்கை ஆழ்வாரே நோட் பண்ணிச் சொல்லி இருக்காரு! :) = மாதர்கள் வாழும் மாடமா மயிலைத் திரு அல்லிக்கேணி கண்டேனே!! :)
சரி, சரி, விளையாட்டு போதும்!
ஒருவனாய் நின்ற ஒருவனைப் பார்க்கலாமா?
அடியார்கள் எல்லாரும் பெருமாளைச் சேவித்துக் கொள்ளுங்கள்!
பிருந்தாரண்யம், துழாய்க் காடு என்னும் தலத்திலே....சேவை சாதிக்கும்....
இதோ..............மூலவராகிய எம்பெருமான்
வேங்கடகிருஷ்ணன்!பெரிய மீசை வைத்த நெடியோன்! மாயோன்! ஒன்பதடி உசரம்!
கீதை சொல்லும் கோலத்திலே, எம்பெருமான் நின்று சேவை சாதிக்கின்றான்!
பெரிய திருமுடி! வஜ்ர கிரீடம்!
அகன்ற நெற்றியிலே துலங்கும் திருமண் காப்பு!
நம்மைப் பார்த்து, "வா வா...குழம்பித் தவிக்கும் தோழா, கலியுக அர்ச்சுனா" என்னுமாப் போலே குறு குறு தோழமைக் கண்கள்!
அழகிய மேல் சுருக்கு மீசை!
மார்பிலே "அவள்" திகழ,....
தேரோட்டியின் கவசம் அணிந்து,
இடுப்பிலே குதிரை ஓட்டும் உழவு கோல்!
இப்படியாக, எடுத்துக் கொண்ட பொறுப்பிலே, சுய கெளரவம் பார்க்காது,
தேரினை ஓட்டியும், குதிரைகளைக் குளிப்பாட்டியும், புல் பிடுங்கிப் போட்டும், சாணம் அள்ளியும்,
குல வழக்கப்படி மீசை வைத்தும், தன் திருவுடம்பிலே உழவுகோல் தரித்தும்,
தோழனுக்காகக் கொண்ட கோலத்தைப் பெருமையோடு காட்டி நிற்கிறான்!
இடுப்புக் கச்சை! மேனியெங்கும் தவழ்ந்தோடும் சாளக்கிராம மாலை!
கருவறையெங்கும் அவன் வாசமா அல்லது துளசீ வாசமா அல்லது இரண்டும் கலந்த வாசமா?
வலது கையில் சங்கு மட்டுமே! சக்கரம் இல்லை! போரில் ஆயுதம் ஏந்தேன்-ன்னு சொன்னதால்!
இடது கை, மொத்த கீதையின் சாராம்சத்தையும் உணர்த்தி நிற்கிறது! =
மாம்-ஏகம்-சரணம் வ்ரஜ! என்னையே சரணமெனப் பற்றுக!
= பற்றுக பற்றற்றான் பற்றினை!
அப்பற்றை பற்றுக என்று வாழ்க்கைக்குப் பற்றுக்கோடாய், தாமரைத் திருவடிகள்! திருவடி எங்கும் துழாய் மலர்கள்!
அப்படியே குடும்ப சகிதத்தையும் சேவித்துக் கொள்ளுங்கள்! இதோ...

கண்ணபிரான் குடும்ப சகிதமாக, ஒரே கருவறையில் அருள் பாலிப்பது.....பாரத பூமியில், இந்த ஒரே தலத்தில் தான்!
வலப்புறம் ருக்மிணி பிராட்டி! இடப்புறம் கண்ணனின் தம்பி, சாத்யகி!
இன்னும் வலப்புறம் அண்ணன் பலராமன்! இன்னும் இடப்புறம் மைந்தன் பிரத்யும்னன், பேரன் அநிருத்தன்!!
உற்சவரான பார்த்த சாரதிப் பெருமாள்! இதோ...
உற்சவருக்குத் தான் பார்த்தசாரதி என்கின்ற திருநாமம்!
பக்தன் பார்த்தனைக் காப்பாற்ற, பீஷ்மர் விட்ட அம்புகளை எல்லாம் தான் ஏற்றுக் கொண்டு, முகமே புண்ணாகிப் போன கண்ணனின் கரு முகத்தை (உற்சவர்) இங்கே கண்கூடாகப் பாருங்கள்!
தோழனின் தற்கொலையைத் தடுக்க, தன் சத்தியம் மீறினாலும் பரவாயில்லை என்று...,
நட்புக்காகச் சக்கரம் ஏந்தியும், பீஷ்ம வடுக்களோடும் ஒருங்கே காட்சி அளிக்கின்றான்!
* மூலவர் = போருக்கு முந்தைய திருக்கோலம்!
* உற்சவர் = போரின் இடையே ஆன திருக்கோலம்!
பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கை மன்னனுமாய்,ஆளவந்தார்,
இவனை வேண்டிக் கொண்டு பிறந்த இராமானுசர்,
தேசிகன், மணவாள மாமுனிகள் என்று ஆசார்ய மங்களாசாசனங்களையும் ஒருங்கே பெற்று...
இதோ, கர்ப்பூர தீப மங்கள ஜோதியில் ஜொலிக்கும் பிரான்...!
இனிக்க இனிக்க உங்களைப் பார்த்துச் சிரிக்கும் எம்பெருமானை...
Paartha Saarathy PerumaaL - PSP என்று செல்லம் கொஞ்சிடும்...
எந்தை, எனக்கு உயிர் குடுத்த வித்தினை - அப்பா.....
என்று
கண்ணாரக் கண்டு கொள்ளுங்கள்!
கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே
கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே!
கோதில்-இன் கனியை, நந்தனார் களிற்றை,
குவலயத்தோர் தொழுது ஏத்தும்,
ஆதியை, அமுதை, என்னை ஆளுடை....அப்பா......
திருவல்லிக் கேணிக் கண் டேனே!
திருவல்லிக் கேணிக் கண் டேனே!!
கோவிந்தா! கோவிந்தா!
கோவிந்தா! கோவிந்தா!!
இதோ, மணக்க மணக்க, துளசீ தீர்த்தம் பருகிக் கொள்ளுங்கள்! = நாரணம் என்னும் நீர் என்று அவனையே பருகிக் கொள்கிறீர்கள்!
இதோ, சடாரியும் வாங்கிக் கொள்ளுங்கள்! = அவன் திருவடிகளை, மாறனாகிய நம்மாழ்வாரை, உங்கள் தலை மேல் ஏற்றுக் கொள்ளுங்கள்!
அவன் கால் பட்டு அழிந்தது,
உங்கள் தலை மேல், பிரமன் கையெழுத்தே!
உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் எம்பெருமான்...
முடிச் சோதியாய் உன் முகச் சோதி மலர்ந்ததுவோ?
அடிச் சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
ம்ம்ம்ம்...தரிசனம் ஆனவர்கள்-ல்லாம், அப்படியே சேவிச்சபடியே, நகருங்க-ம்மா, நகருங்க! ப்ளீஸ், நகருங்கோ சார்! நகருங்க.....
கருவறையை விட்டு வெளியே வந்து, காற்றாட ஊஞ்சல் மண்டபத்தில் உட்கார்ந்து கொள்வோமா?
இன்னொரு முக்கியமான சேதி!
கண்ணபிரான் குடும்ப சகிதமாக, ஒரே கருவறையில் அருள் பாலிப்பது இந்தியாவிலேயே இந்த ஒரு தலத்தில் மட்டுமே!
கருவறையில் சற்று எக்கிக் காண வேண்டும்!
அப்பவே சென்னையில் குடும்ப ஆட்சி-ன்னு சொல்லாமச் சொல்லி விட்டானோ, இந்த பார்த்தசாரதி? :) நோ பாலிடிக்ஸ் ப்ளீஸ்! :)
சொல்லப் போனா, இந்தத் தலம், முழுக்க முழுக்க, ஒரு குடும்பத் தலம்!
கண்ணன் மட்டும் அல்ல...,
திருவல்லிக்கேணியில் எல்லாக் கருவறையிலும், No Singular, Only Plural! :)
ஒரு கூட்டமாகத் தான் எல்லாக் கருவறைக் கடவுள்களும் இருப்பார்கள்! :)
* ஆலயத்துள் நுழைந்து, கொடிமரம் தாண்டி, கஜானனரை வணங்கி, கருடாழ்வாருக்கு ஹாய் சொல்லி...வரிசையில் சேர்ந்து கொண்டால்...
* திருக்கச்சி நம்பிகள், இராமானுசர், மாமுனிகள் என்று ஆசார்யர்களைக் கடந்து, முதலில்....என்
இராகவன் வீடு! :)
அங்கும் குடும்ப சகிதம் தான்!
பொதுவாக இராமன்-சீதை-இலக்குவன்-அனுமன் மட்டும் தானே இருப்பார்கள்! இங்கோ, மொத்த குடும்பமாய், பரதனும் சத்ருக்கனனும் கூட உண்டு!
இவர்களைப் பார்த்த வண்ணம், எதிர்ப் பக்கத்தில் ஆஞ்சநேயன்...
அதே வரிசையில் ஆழ்வார்கள், ஆசார்யர்கள், கருடன்-அனந்தன் முதலான நித்யசூரிகள்!
* அடுத்த சன்னிதியாகிய அரங்கன் சன்னிதி!
மன்னாதன்! மன+நாதன் என்று தாயார் அழைத்த பேரில்...இங்கும் கருவறையில் ஒருவர் மட்டும் இல்லை!
தலை மாட்டில் வராகப் பெருமாளும், கால் மாட்டில் நரசிம்மப் பெருமாளும் உண்டு!

* திருவல்லிக்கேணி தனிக் கோயில் நாச்சியாரான
வேதவல்லித் தாயார், இந்த அரங்கனின் தர்ம பத்தினியே!
இவளுக்கு வெள்ளி தோறும், மற்றும் அஸ்த நட்சத்திரம் அன்றும் உள் புறப்பாடு/ஊஞ்சல் உண்டு!
* அடுத்த சன்னிதி,
வரதப் பெருமாள்!
கருடனும் அதே கருவறைக்குள் இருப்பான்! இறைவனைத் தாங்கிப் பிடித்தபடி! = நித்ய கருட சேவை!
* முக்கியமான பின் சன்னிதி, ஆளரிப் பெருமாள் என்னும்
நரசிம்ம-அழகிய சிங்கர் சன்னிதி! மூலவர் மட்டுமே யோக நிலையில், சிங்க முகத்தோடு, "ஆ-வா" என்ற கரத்தோடு!
உற்சவருக்கு சிங்க முகம் இல்லை! சிரித்த முகம் மட்டுமே!
இந்த ஆலயத்தில் நாக்கில்லா மணிகள் தான் அத்தனையும்! கதவில் தொங்கும் மணிகள் உட்பட...
* அடுத்த சன்னிதியாக என்னுயிர்த் தோழி...கோதை...திருவாடிப் பூரத்துச் செகத்து உதித்தாள் வாழியே!
சரி சரி போதும், உனக்கு என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு?
ஹேய் வாடீ...அப்படியே விமானங்களைக் கண்டு, கண்ணாடியில் முகம் பார்த்து, தலைமுடி அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு, பிரசாதக் கடையில்...தோழனுக்கும் எனக்கும் பிடித்த அதிரசம் வாங்கித் தின்போம்! :)
கிறு கிறு புளியோ தரையில் கரைய
சுறு சுறு மிளகு வடையும் நொறுக்க
அதி ரசமான அதிரசம் தன்னைத்
அணி திருவல்லிக் கேணி கண்டேனே! :))

இந்த வலைப்பூ = கண்ணன் "பாட்டு"!
ஆனால் ஷைலஜா அக்கா பண்ண மாயம்...இப்பல்லாம் ஒரே கட்டுரையாப் போயிரிச்சி! :)
வாங்க கண்ணன் "பாட்டில்", பாட்டைப் பார்ப்போம்!
திருவல்லிக்கேணி-க்கென்றே உள்ள சில பாசுரங்களைக் கேட்போமா?
Pasurams - TIRUVLLIKENI and Tiruneermalai - Aruna Sairam
கேட்டுக் கொண்டே பதிவை வாசியுங்கள்!
பிரபல பாடகி, அருணா சாய்ராம், க்ஷேத்ரம்: சென்னைபுரி என்னும் தொகுப்பில் (Album: Ksetra Chennapuri) பாடும் பாட்டு!
திருமங்கையாழ்வார்: பெரிய திருமொழி
வேதத்தை, வேதத்தின் சுவைப்பயனை,விழுமிய முனிவர் விழுங்கும்
கோது-இல் இன்-கனியை, நந்தனார் களிற்றை, குவலயத்தார் தொழுது ஏத்தும்
ஆதியை அமுதை, என்னை ஆளுடை அப்பனை, ஒப்பவர் இல்லா!
மாதர்கள் வாழும் மாடமா மயிலைத் திரு அல்லிக்கேணி கண்டேனே!!

Shylajakka sent this pic of this year's maargazhi koshti at thiruvallikENi.
திருமங்கையாழ்வார்: பெரிய திருமொழி (இது சென்னை திருநீர்மலை தலம் பற்றியது, இருப்பினும் Album-இல் உள்ளதால், இங்கு காண்போம்!)
பாரார் உலகும், பனிமால் வரையும்
கடலும் சுடரும், இவை உண்டும் - எனக்(கு)
ஆராது என-நின்றவன் எம்பெருமான்
அலைநீர் உலகுக்கு அரசாகிய - அப்
பேரானை முனிந்த முனிக்கு-அரையன்
பிறரில்லை நுனக்கு-எனும் எல்லையினான்!
நீரார்ப் பேரான், நெடுமால் அவனுக்கு
இடம் மாமலை யாவது நீர்மலையே!
பேயாழ்வார் - 3ஆம் திருவந்தாதி:
வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்
அந்தி விளக்கும் அணி விளக்காம் - எந்தை
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,
திருவல்லிக் கேணி-யான் சென்று.
திருமழிசையாழ்வார் - நான்முகன் திருவந்தாதி:
தாளால் உலகம் அளந்த அசைவே கொல்,
வாளா கிடந்தருளும் வாய்திறவான் - நீள்-ஓதம்
வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான்
ஐந்தலைவாய் நாகத் தணை.
Here ends the "Triplicane" Tour! :)
Pl assemble @ Marina, for a Treat of Murukku, Sundal & Maangai Bathai, sponsored by Radha Mohan, Citizen of ThiruvallikENi! :)
Also, home made vEN pongal, for pongalO pongal from ILWK aka kaLvanin kaathali :)
- alo, KK, get me some good thakkaLi kothsu and vengaaya chutney, not as prasadam, but as side-dish :) மாம் ஏகம் பிரசாதம் வ்ரஜ! :))