Monday, March 25, 2013

கலையாத கனவொன்று...




கலையாத கனவொன்று தந்தாய் – நீயே
நிலையாக வந்தென்றன் நெஞ்சிலே நின்றாய்!
மலைபோல நம்பிக்கை தந்தாய் – வான்
மழைபோல அன்பினைப் பொழிந்தென்னை வென்றாய்!

வனமான என்வாழ்வில் வந்தாய் – வந்து
வளம்தந்து வசந்தமாய் எனையேந்திக் கொண்டாய்!
மனமெங்கும் உனைநிரப்பி வைத்தேன் – பூ
மணம்வீசும் உன்பெயரில் உயிரெழுதி வைத்தேன்!

சுனைபோலப் பெருகு மென்னன்பு – என்
வினையெல்லாம் நில்லாமல் ஓடுமுன் முன்பு!
உனைமிஞ்சும் அன்பெங்கும் இல்லை – உனை
நினையாது ஒருகணமும் கழிவதே இல்லை!

--கவிநயா

Thursday, March 14, 2013

கண்ணனைக் காணாதே...

மோக நிலவிதுவே - குளிர்
மோதிக் களித்திடும் இரவினிலே
சோகம் அறிந்திலையோ - கவி
சொன்ன நிலையும் இதுவன்றோ?
போகம் மறந்தினையோ - மது
பொங்கி வழிகின்ற வயதினிலே
தேகம் அழிகிறதே - கண்ணன்
தீண்டும் விரல்நுனி காணாதே!

உண்ணும் நினைப்பிலையே - உடை
உடுத்தும் எண்ணமும் வரவிலையே!
பண்ணை இசைத்திடும் பாங்கியரும்
பாவம் இவளென்று சொல்லினரே!
கன்னம் காயவிலையே - வானில்
காலை மாலை கண்டதிலையே
கண்ணன் உடனுறை காலமெலாம்
கண்கள் தூங்கிப் போனதிலையே!*

கூவி யுனையழைத்து இருள்
கூட்டிலே இருவர் தானமர்ந்து மலர்த்
தூவி மகிழ்ந்திட்டு உடல்
தூரிகை மேல்வரை எழிலுடன்
தாவி உனைக் கட்டி - மனம்
தாங்கொணா இன்பமே போதெலாம்
பாவி சுகித்திருப்பேன், அன்றேல்
பாலை நிலத்துப் பாலொளியாய்
ஆவி பிரிவதன்றோ - உடல்
ஆக்கினை பூமிக் கானதன்றோ!

***
*வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை
ஆரஅஞர் உற்றன கண். (1179)

Friday, January 25, 2013

மலை மீது வாழும் ஸ்ரீ ஸ்ரீநிவாசா!



மலை மீது வாழும் ஸ்ரீ ஸ்ரீநிவாசா!
எனைக் காக்கும் உன் பாதமே!
எனைக் காக்கும் உன் பாதமே! (மலை)

கண்ணன் ஆகி வந்தவா! மன்னன் ஆகி வந்தவா!
மண் காக்க அவதாரம் செய்தவா! (கண்ணன்)

மாயம் செய்த மாயவா! காயம் தந்த தூயவா!
உனைக் காக்க பல தாரம் கொண்டவா!

என்றன் ஜீவனே! வாழும் தெய்வமே!
உன்றன் பாதமே மோக்ஷமாகுமே!
உலகெங்கும் உன் லீலை சுகமானதே!
அருள் தந்து தினம் காக்கும் கிரிநந்தனா! (மலை)

கீதை சொல்லி மாதவா பாதை தந்த ஆதவா!
உனைத் தேடி உயிர் ஒன்று சூழுமே! (கீதை)

சங்கெடுத்து ஊதியே பங்களித்த மேன்மையே
உன் சேவை தர்மத்தின் சேவையே!

அன்பு நேசனே! ஆதி ஜோதியே!
இன்பம் இன்பமே ஏழு மாமலை!
மனம் எங்கும் உன் கோவில் அழகானதே!
பொருள் வந்து குவிகின்ற மலை நின்றவா! (மலை)

ஞானம் என்ற தேரினை ஓட்டும் பார்த்த சாரதி!
வினை தீர ஒளி வந்து சேருமே! (ஞானம்)

மோனம் என்ற உண்மையில் மூழ்கி நின்ற ஸ்ரீபதி!
எனைக் காக்க உன் பாதம் வேண்டுமே!

வந்த காரணம் வாழும் காரணம்
அந்த காரணம் அறியவில்லையே!
அறிவினை அறிவுறுத்தும் அமரேந்திரா!
அதைத் தேடி அலைகின்ற எனைக் காக்க வா! (மலை)

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP