கண்கள் சொல்கின்ற கவிதை - இளம்வயதில் எத்தனை கோடி? இசைஞானி, இசைஞானி என்று பெயர் வாங்குவதற்கு முன்னரே, தன் ஞானத்தை மிக அருமையாக வெளிப்படுத்திய பாடல் இது. எளிமையான வரிகள் - ஆனால் இதைப் பாட அவர் அழைத்தது யாரை? கனராகப் பாடகர் என்று அப்போது அறியப்பட்ட, கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி அவர்களை.
கண்ணன்-ராதை காதலாக இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம், ஒரு மாஸ்டர் பீஸ் பாடலைக் கேட்கும் திருப்தி கிடைக்கும். இதை ஜானகியும் அதே படத்தில் பாடியிருப்பார். பாலமுரளி பாடிய வெகு சில திரைப்பாடல்களில் இது தலைசிறந்த ஒன்று! (வேறு பாடல்கள் என்னென்ன என்று சொல்லுங்க பார்க்கலாம்?)
ராஜா, இந்தப் பாட்டில் வரும் வாத்திய இசைக்கு, ஐரோப்பிய Baraoque பாரம்பரியத்தைப் பயன்படுத்தியதாகச் சொல்லுவார்கள்; ரீதிகெளளை ராகம் ஒரு பக்கம், Baraoque மறு பக்கம்! ஆனால் ஒன்றை ஒன்று விழுங்காது, பாடல் வரிகளும் விழுங்காது வந்து விழும் இனிய இசை! ராஜாவின் இசை ஆய்வு (experiment) அப்போதே தொடங்கி விட்டது!
எல்லாம் சரி; பாடல் எதோ? - இதோ! மாயனின் லீலையில் மயங்குது உலகம்! நாமும் மயங்குவோம்!
கண்கள் சொல்கின்ற கவிதை - உன் புன்னகை சொல்லாத அதிசயமா?
இந்தப் பதிவிலேயே கேட்க play button-ஐச் சொடுக்கவும்!
சின்னக் கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி சின்னக் கண்ணன் அழைக்கிறான் சின்னக் கண்ணன் அழைக்கிறான்
கண்கள் சொல்கின்ற கவிதை இளம்வயதில் எத்தனை கோடி என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே புதுமை மலரும் இனிமை அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை (சின்ன கண்ணன்)
நெஞ்சில் உள்ளாடும் ராகம் இதுதானா கண்மணி ராதா? உன் புன்னகை சொல்லாத அதிசயமா அழகே இளமை ரதமே அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம் (சின்ன கண்ணன்)
நண்பர்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று வேளாண் மக்கள் மகிழும் திருநாள்! மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் மகிழ்ந்திருக்கும் திருநாளும் கூட! கிராமங்களில் குரவைக் கூத்துக்கு கேட்கவும் வேண்டுமோ!
கண்ணனுக்காக மார்கழி முழுதும் காத்திருந்தோம், ராதையும் நாமும்! அதான் இப்போது மார்கழி நோன்பு முடிந்து, தை பிறந்து விட்டதே! தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்! - கண்ணனோடு ஆடிப்பாடி ஓடலாமே தங்கமே தங்கம்! வாங்க, அனைவரும் ஆயர்ப்பாடியில் பொங்கல் கொண்டாடி ஆடலாம்!
அசைந்தாடும் மயில் ஒன்று காணும் - நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்! (அசைந்தாடும்)
இசையாறும் குழல் கொண்டு வந்தான் இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான் திசைதோறும் நிறைவாக நின்றான் - என்றும் திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈந்தான்
எங்காகிலும் எமது இறைவா இறைவா என மனநிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான் - அருள் பொங்கும் முகத்துடையான்
ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி - நின்றாட மயிலின் இறகாட மகர குழையாட மதி வதனமாட மயக்கும் விழியாட மலரணி களாட மலர்மகளும் பாட இது கனவோ நனவோ என மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட (அசைந்தாடும்)
அசை போடும் ஆவினங்கள் கண்டு இந்த அதிசயத்தில் சிலைபோல நின்று நிஜமான சுகம் என்று ஒன்று - இருந்தால் ஏழுலகில் இதையன்றி வேறெதுவும் அன்று! திசைதோறும் கோபாலன் நின்று - மிக எழில் பொங்க நடமாட எதிர் நின்று ராதைபாட (எங்காகிலும் எமது இறைவா இறைவா)