Thursday, April 18, 2013

நாவே!ராமரஸம் பருகு!

சதாசிவ பிரம்மேந்திரரின்  "பிபரே  ராமரஸம் "என்ற பாட்டை 
பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் குரலில் கேட்கும்போதெல்லாம் 
நான் மிகவும் உணர்ச்சிவசப்படுவதுண்டு .காரணம் ?
1)இயற்றியவர் சதாசிவ பிரம்மேந்திரர் என்பதாலா?
2)அந்தப்பாடலின் வரிகளா ?
3)பாடியவரின்  இழையும் குரலா?
4) எல்லாவற்றையும் விட முக்கியமானது  அது ஸ்ரீராமநாம மகிமையை 
    சொல்வதனாலோ ?

இன்றுவரை  காரணம் புரிபடவில்லை !

பாட்டைத்தழுவி அதே ராகத்தில் பொருந்தும்வகையில் 
தமிழில் எழுதிவிட்டேன் .கண்ணன்பாட்டு  அன்பர்களுக்கு 

 இனிய ராமநவமி  வாழ்த்துக்கள்!

1)சுப்புசார்  ராமரஸத்தை  ரசித்துருசித்து  உருகி 
    அனுபவிக்கும் ஆனந்தத்தைப் பகிர்ந்துகொள்ள :
http://www.youtube.com/watch?v=KuWu4VX_z8I&list=UUw4TCj3_an8TqdGY6TNaixA&index=1

2)கலாவின்  குரலில்  ராமரஸ  இனிமையைச்
    சுவைக்க   கீழே:

நாவே!ராமரஸம்  பருகு!





பிபரே ராமரஸம் ரஸனே பிபரே ராமரஸம்

அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம் 

தூரிக்ருத பாதக ஸமஸர்க்கம் 
பூரித நானாவித பல வர்க்கம் 

புன்மையைப் போக்கும் புனித நன்னாமம்.
நன்மைகளனைத்தும் நல்கும் சுநாதம்.
அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம் 


ஜனனமரணபய சோக விதூரம் 
சகல சாஸ்த்ர நிகமாகம சாரம் 

பிறவிமரணபயம்  மாய்க்கும் மாமந்த்ரம்.
மறைகளிலே நிறை ஞானத்தின் சாரம்.
அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம் 
 

பரிபாலித சரசிஜ கர்ப்பாண்டம் 
பரம பவித்ர க்ருத பாஷாண்டம்

நான்முகன் படைப்பினைக் காத்திடும் கவசம். 
நாத்திகநோய் நீக்கும் ஔடதக்கலசம் . 
அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம் 
 

சுத்த பரமஹம்ச ஆஸ்ரம கீதம் 
சுக சௌனக  கெளசிக முக பீதம்

யோகியர் திளைத்திடும் திவ்விய கானம் .
ஞானியர் பருகிடும் தேனிசைப் பானம் . 
அருந்துவாய் ராமரஸம் -நாவே !
விருந்திது அமுதமயம் !-நாவே!
அருந்துவாய் ராமரஸம் 



THANKS: http://sujamusic.wordpress.com/2012/06/07/pibare-ramarasam/

 FROM GOOGLE SEARCH

Monday, March 25, 2013

கலையாத கனவொன்று...




கலையாத கனவொன்று தந்தாய் – நீயே
நிலையாக வந்தென்றன் நெஞ்சிலே நின்றாய்!
மலைபோல நம்பிக்கை தந்தாய் – வான்
மழைபோல அன்பினைப் பொழிந்தென்னை வென்றாய்!

வனமான என்வாழ்வில் வந்தாய் – வந்து
வளம்தந்து வசந்தமாய் எனையேந்திக் கொண்டாய்!
மனமெங்கும் உனைநிரப்பி வைத்தேன் – பூ
மணம்வீசும் உன்பெயரில் உயிரெழுதி வைத்தேன்!

சுனைபோலப் பெருகு மென்னன்பு – என்
வினையெல்லாம் நில்லாமல் ஓடுமுன் முன்பு!
உனைமிஞ்சும் அன்பெங்கும் இல்லை – உனை
நினையாது ஒருகணமும் கழிவதே இல்லை!

--கவிநயா

Thursday, March 14, 2013

கண்ணனைக் காணாதே...

மோக நிலவிதுவே - குளிர்
மோதிக் களித்திடும் இரவினிலே
சோகம் அறிந்திலையோ - கவி
சொன்ன நிலையும் இதுவன்றோ?
போகம் மறந்தினையோ - மது
பொங்கி வழிகின்ற வயதினிலே
தேகம் அழிகிறதே - கண்ணன்
தீண்டும் விரல்நுனி காணாதே!

உண்ணும் நினைப்பிலையே - உடை
உடுத்தும் எண்ணமும் வரவிலையே!
பண்ணை இசைத்திடும் பாங்கியரும்
பாவம் இவளென்று சொல்லினரே!
கன்னம் காயவிலையே - வானில்
காலை மாலை கண்டதிலையே
கண்ணன் உடனுறை காலமெலாம்
கண்கள் தூங்கிப் போனதிலையே!*

கூவி யுனையழைத்து இருள்
கூட்டிலே இருவர் தானமர்ந்து மலர்த்
தூவி மகிழ்ந்திட்டு உடல்
தூரிகை மேல்வரை எழிலுடன்
தாவி உனைக் கட்டி - மனம்
தாங்கொணா இன்பமே போதெலாம்
பாவி சுகித்திருப்பேன், அன்றேல்
பாலை நிலத்துப் பாலொளியாய்
ஆவி பிரிவதன்றோ - உடல்
ஆக்கினை பூமிக் கானதன்றோ!

***
*வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை
ஆரஅஞர் உற்றன கண். (1179)

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP