கலையாத கனவொன்று...
கலையாத கனவொன்று தந்தாய் – நீயே
நிலையாக வந்தென்றன் நெஞ்சிலே
நின்றாய்!
மலைபோல நம்பிக்கை தந்தாய் – வான்
மழைபோல அன்பினைப் பொழிந்தென்னை
வென்றாய்!
வனமான என்வாழ்வில் வந்தாய் –
வந்து
வளம்தந்து வசந்தமாய் எனையேந்திக்
கொண்டாய்!
மனமெங்கும் உனைநிரப்பி வைத்தேன்
– பூ
மணம்வீசும் உன்பெயரில் உயிரெழுதி
வைத்தேன்!
சுனைபோலப் பெருகு மென்னன்பு
– என்
வினையெல்லாம் நில்லாமல் ஓடுமுன்
முன்பு!
உனைமிஞ்சும் அன்பெங்கும் இல்லை
– உனை
நினையாது ஒருகணமும் கழிவதே இல்லை!
--கவிநயா