கோகுலத்தில் பசுக்கள் + எஸ்.ஜானகி + MSV + கண்ணன்!
நாளை...கண்ணன் பிறந்த நாள்!
ஒரு திரு முருகன் வந்து "உதித்தனன்" உலகம் உய்ய என்பது போல்...
ஆயர் குலத்தினில் "தோன்றும்" அணி விளக்கை!!
பிறப்பு அற்றவன் உலகில் பிறந்தால் அது = பிறந்தனன் அல்ல! உதித்தனன்/தோன்றினன்!
தாயைக் குடல் விளக்கம் செய்து, ஆயர் குலத்தில் "தோன்றும்" அணி விளக்கை!!
தோன்றும் அணி விளக்கு, தமிழ்க் கடவுளாம் மாயோனுக்கு, எம்.எஸ்.வி அலங்காரம் செய்வாரா?
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி முருகனுக்கு என்றே தந்த பாடல்கள் ஏராளம் ஏராளம்!
ஆனால் அவர் கண்ணனுக்குத் தந்த பாடல்கள் ஏராளம் இல்லை என்றாலும்...
ஒவ்வொரு பாடலும் தாராளம் தாராளம்!
அந்த இசை நுணுக்கத்திலும், இசை இன்பத்திலும் தாராளம், தாராளம்!
கிருஷ்ண கானம் என்ற தொகுப்பு! "வெளித் தோற்றம் போலவே உள்ளமும் கருப்பாய்க் கொண்டவனுக்கென்றே" எம்.எஸ்.வி தொடுத்த பாமாலை!
அந்த மாலையில் மொத்தம் எட்டு விதமான மலர்கள்! எட்டு விதமான வாசனைகள்! ஒவ்வொன்றுமே ஒவ்வொரு ஈர்ப்பு!
* சுசீலாம்மாவின் தேன் குரலும் உண்டு, ஜானகியின் கீச்கீச்-சும் உண்டு!
* TMS-இன் கம்பீரமும் உண்டு! SPB-யின் நளினமும் உண்டு!
* எல்.ஆர். ஈஸ்வரி-யின் கும்மாளம் பறக்கும்! வீரமணியின் ஏகாந்தமும் தொனிக்கும்!
* இத்தனை பாடகர்களுக்கு மத்தியில், கண்ணனுக்குத் தன் குரலையும் சேர்த்தே தரத் துடிக்கும் எம்.எஸ்.வி! துவக்கத்தையே எம்.எஸ்.வி தான் துவங்கி வைக்கிறார்!
1. அமர ஜீவிதம் சுவாமி, அமுத வாசகம் - எம்.எஸ்.வி
2. ஆயர்ப்பாடி மாளிகையில் - எஸ்.பி.பி
3. கோகுலத்தில் ஒரு நாள் ராதை - பி.சுசீலா
4. கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் - எஸ்.ஜானகி
5. கோபியரே கோபியரே - எல்.ஆர். ஈஸ்வரி
6. கோதையின் திருப்பாவை - கி. வீரமணி
7. குருவாயூருக்கு வாருங்கள் - பி.சுசீலா
8. புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - TMS
இப்போ சொல்லுங்க!
கண்ணனுக்கென்றே எம்.எஸ்.வி கட்டிய மலர்கள்...இன்னும் வாடாமல், மணம் வீசிக் கொண்டு தானே இருக்கின்றன?
வாடா மலர் கொண்டு, பாடீர் அவன் நாமம் நாடீர் நாள் தோறும், வீடே பெறலாமே!
தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து...பாட்டைக் கேட்போமா?
இசை அரசி சுசீலாம்மா தான்! - அனைத்து இசைகளுக்கும்!
இன்-இசை அரசி எஸ்.ஜானகி - இன்னிசைக்கு மட்டும்!
ஜானகிக்கே உரித்தான "கிக்"கான கீச் கீச் குரலில், கீசு கீசென்றெங்கும் கோகுலத்துப் பசுக்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு பாடுறாங்க! இதோ கேட்டுக் கொண்டே படியுங்கள்!
கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
கோபாலன் குழலைக் கேட்டு
நாலுபடி பால் கறக்குது இராமாரி! - அந்த
மோகனின் பேரைச் சொல்லி
மூடி வைத்த பாத்திரத்தில்
மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

கண்ணன் அவன் நடனமிட்டு
காளிந்தியில் வென்ற பின்னால்
தண்ணிப் பாம்பில் நஞ்சுமில்லை இராமாரி! - அவன்
கனிஇதழில் பால் கொடுத்த
பூதகியைக் கொன்ற பின்னால்
கன்னியர் பால் வஞ்சமில்லை கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)
குளத்தில் முங்கிக் குளிக்கையிலே
கோவிந்தன் பெயரைச் சொன்னால்
கழுத்திலுள்ள தாலி நிக்குது இராமாரி! - சேலை
திருத்தும் போது அவன்பெயரை
ஸ்ரீரங்கா என்று சொன்னால்
அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)
படிப்படியாய் மலையில் ஏறி
பக்திசெய்தால் துன்பம் எல்லாம்
பொடிப் பொடியாய் நொறுங்குதடி இராமாரி! - அட
படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!
(இராமாரி அரே கிருஷ்ணாரி - அரி அரி
இராமாரி அரே கிருஷ்ணாரி)

பாட்டைக் கொஞ்சம் பிரிச்சி மேஞ்சா அந்தரங்கச் சுகம் தெரியும்! அந்த ரங்கச் சுகம் புரியும்!
அட படிப்பில்லாத ஆட்கள் கூட
பாதத்திலே போய் விழுந்தால்
வேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ணாரி!
என்ன ஒரு அழுத்தம், வரிகளிலே! படிப்பில்லாத ஆட்களுக்குக் கூட, வேதத்துக்கே பொருள் விளங்குதாம்!
எப்படி? = பாதத்திலே போய் விழுந்தால்!
அதான் இதோ திருவடிகள்,
இதைப் பற்றிக் கொண்டார்க்கு எல்லாம்...
உலக சமுத்திரம் வெறும் முழங்கால் ஆழம் தான்!
என்று காட்டி நிற்கிறான் திருவேங்கடமுடையான்!

படிப்பில்லாத ஆட்களே எனக்குப் போதும்! கற்றாரை யான் வேண்டேன் என்கிறார் மாணிக்கவாசகப் பெருமான்!
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உன் தன்னை, பிறவிப் பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம் என்கிறாள் ஒரு இடைச்சி, என் தோழி!
வேதங்களுக்கே கிடைக்காத திருவடிகள், படிப்பில்லாதவர்க்கு எளிதில் கிடைப்பதால், அவர்களுக்கு வேதப் பொருள் தானாகவே விளங்கி விடுகிறது!
ஞான யோகம், கர்ம யோகம் என்றெல்லாம் படிப்பில்லாதவர்கள் ரொம்ப கஷ்டப்படுவதில்லை! தங்கள் அறிவைக் காட்டிலும் அவன் அன்பையே கைக்கொள்கிறார்கள்! "தாங்களே" தங்கள் ஞானத்தால் தேடி அடைந்தோம் என்ற தொனி படிக்காதவர்களிடத்தில் இல்லை!
அதனால் தான்.....தமிழ் மாலைகளே எமக்குப் பெரிதும் உவப்பு!
செய்ய தமிழ் மாலைகள் யாம் தெளிய ஓதி,
தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே - என்று வேதக் கடலான தேசிகனே பாடி விடுகிறார்!!
பொருள் புரியாமல் இத்தனை நாள் தவித்து, ஆழ்வார்களின் ஈரத் தமிழ் மாலைகளை ஓதிய பின்னால், புரியாத வேதங்களும் புரிந்து விடுகின்றனவாம் அவருக்கு! இப்படிச் சொன்னதற்காக அவரைத் தள்ளி வச்சிறாதீக! :)
நாலுபடி பால் கறக்குது இராமாரி!
மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!
ஒரு படி = எட்டு ஆழாக்கு!
நாலு படி = 32 ஆழாக்கு!
கிட்டத்தட்ட ஆறு லிட்டர்!
அது எப்படி ஆறு லிட்டர் பாலை ஒரே மாடு, அதுவும் படக்-க்குனு கொடுக்குது?
கறக்க எல்லாம் வேணாமாம்! சும்மா கண்ணன் பேரை ஜாலியாச் சொல்லிக்கிட்டே, பாத்திரத்தைக் காட்டினாலே போதுமாம்! ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப...!

கன்றுக்குட்டிகள் எல்லாம் முதல் முறையா மேய்ச்சலுக்குப் போகும் போது, தாகம் அடிக்குது! முல்லை நிலத்து ஆறோ வேகமா ஓடுது! நேரா ஆற்றில் இருந்து தண்ணி குடிக்க இதுங்களுக்குப் பயமா இருக்கு! அம்மா பசுவும் அருகில் இல்லை! இதுக என்ன பண்ணுங்க?
ஒரு முறை வேணும்-ன்னா, வாளியில் தண்ணி பிடிச்சிக் கொடுக்கலாம்! ஆனா இதுங்களுக்குன்னு எப்பத் தான் வீரம் வர்றது? மீனைக் கொடுப்பதை விட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடு என்பது தானே வாசகம்! கண்ணனும் அதையே செய்கிறான்! எப்படி? தன்னைத் தான் தாழ்த்திக் கொண்டே!
தன்னையே ஒரு மாடு ஆக்கிக் கொள்கிறான்!
ஆமாம்! கைகளையே முன்னங் கால் ஆக்கி, கால்களை மடிச்சி, கரையில் கால்களுக்கு முட்டுக் கொடுத்து ஊன்றி, ஆற்றின் வேகத்துக்கு அசைந்து கொடுப்பது போல் கொடுத்து, குடிச்சிக் காட்டுறான்!
அவனைப் பார்த்து ஒவ்வொரு கன்னுக்குட்டியும் அப்படியே செய்கிறது! செய்யாத கன்னுக்குட்டிகளையும் பயம் போக்கி, செஞ்சிக் காட்டுறான்! அத்தனை குட்டிகளுக்கும் முகத்தில் சிரிப்பு!
இதைப் பார்த்த தாய்ப் பசுக்கள் எல்லாம், கண்ணன் மேல் ஒரு இனம் புரியாத வாஞ்சை! அதான் நாலுபடி பால் கறக்குது இராமாரி! மூன்றுபடி நெய் இருக்குது கிருஷ்ணாரி!
கண்ணன் மாடுகளை மேய்க்கும் உழவுகோலை (சாட்டையை) ஒரு போதும் பயன்படுத்தியதே இல்லை! அவன் அன்பே அவற்றைக் கரை சேர்த்து விடுகின்றன! = நல்ல மேய்ப்பன்!
பிதா என்னை அறிந்திருக்கிறது போலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறது போலவும், மேய்ப்பன் உங்களுக்கு என் ஜீவனையே கொடுக்கிறேன்!! ஆமென்!

இப்போ லேடீஸ் மேட்டர்! யாராச்சும் லேடீஸ் வந்து இதுக்குப் பொருள் சொல்லுங்கப்பா! அப்பறமா நானும் சொல்லுறேன்! :)
சேலை திருத்தும் போது அவன் பெயரை
ஸ்ரீரங்கா என்று சொன்னால்
அழுத்தமான சுகம் கிடைக்குது கிருஷ்ணாரி!
என்ன அழுத்தம்? என்ன சுகம்? என்ன பொருள் மேற்கண்ட வரிகளுக்கு? :)
ஆங்...சொல்ல மறந்து போனேனே!
எட்டு பாடல்களும் ஏழு பேர் பாடுகிறார்கள்!
ஆனால் அத்தனையும் எழுதியது ஒரே ஒருவர் தான்!
யாராய் இருக்கும்-ன்னு நினைக்கறீங்க?
எம்.எஸ்.வி தொடுத்த வாடா மலர் மாலைக்கு, பூக் கொணர்ந்தவன் வேறு யார்? கண்ணனுக்கே தாசனான நம் கண்ணதாசனே!
வரிகள்: கண்ணதாசன்
குரல்: எஸ்.ஜானகி
இசை: எம்.எஸ்.வி
தொகுப்பு: கிருஷ்ண கானம்