100: கிருஷ்ணா நீ பேகனே, வாராய்! - மலைநாடான், குமரன், KRS குரலில்!
கண்ணன் பாட்டு வலைப்பூவின் 100-வது பதிவு இதோ! 100-ஆம் பாடல், மிகவும் பிரபலமான பாடல்!
கிருஷ்ணா நீ பேகனே, பாரோ!
தமிழ் வடிவில், கிருஷ்ணா நீ வேகமாய், வாராய், என்று தந்துள்ளோம்!
மங்கள இசையுடன் துவங்கலாமா? ஷேக் சின்ன மெளலானா அவர்கள் இதே பாட்டை வாசிப்பதை இங்கு கேட்டு மகிழுங்கள்!இன்னிக்கு பல பதிவர்களின் குரலை எல்லாம் ஒன்னாக் கேக்கப் போறீங்க! இது நாள் வரை அவர்கள் எழுத்தை மட்டுமே படித்த பலருக்கும், இன்னிக்கி பதிவர்களின் குரலைக் கேக்கப் போற அபாயம்! எனவே எச்சரிக்கை! நில், கவனி, பின்னூட்டு! :-)
கிட்டத்தட்ட அதே மெட்டில், தமிழாக்கி உள்ளேன்! அந்தத் தமிழை, மலைநாடான் ஐயாவும், குமரனும் அடியேனும் பாடி உள்ளோம்! இந்த நூறாம் பதிவை, வழி நடத்திச் செல்லப் போவது, நம் ஷைலஜா அக்கா! அவர் பாட்டுக்குத் தரும் முன்னுரை இதோ! Over to Shylaja!
வாராய் நீ வாராய்!- இந்த திரைப் பாடல் எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் இப்படிக் கடவுளை வாராய் நீ வேகமாக வாராய் என்றார் ஒரு பக்தர்! யார் அவர்?
அதற்கு முன், கண்ணனைப் பெரியாழ்வார் எனும் பெரும்பக்தர் எப்படி அனுபவித்துப் பாடினார் என்பதைப் பார்ப்போமா?
கண்ணன், அழகான குழந்தை வடிவோடு பெரியாழ்வாருக்கு சேவை தந்தாராம். அந்த அழகான குழந்தையின் முகம் பார்த்ததும், குழந்தைக்குத் தொட்டில் போட அவருக்கு ஆசை வந்ததாம்.
மாணிக்கங்கட்டி வயிரம் இடைகட்டி ஆனிப்பொன்னால் செய்த வண்னச் சிறுதொட்டில் என்று பாட்டில் அதைச் செய்தார்!
தொட்டிலில் கண்ணனைக் கிடத்தி அவனுடைய பாதக் கமலங்கள் காண வாரீரே என்று பாசுரம் பாடுகிறார்! - 'வையம் அளந்தானே தாலேலோ!' வையம் அளந்த கால் அது!
முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும் தத்திப் பதிந்துத் தலைப் பெய்தாற்போல் எங்கும் பத்து விரலும் மணிவண்னனின் பாதங்கள், ஒத்தி இருந்தவா காணீரே!
ஒத்தார் போலிரூக்கும் விரல்கள்! அந்தப் பாத அழகு! கண்ணனின் திருவடியில் மனம் சரணடைவதை பெரியாழ்வார் இப்படிச் சொன்னார் என்றால் கண்ணன் திருவடி எண்ணுக மனமே என்கிறார் பாரதியும்.
கிருஷ்ணா நீ பேகனே-விலும், அந்த திருவடியைத் தான் வியாசராயர் தன் பாடலில் முதலில் சொல்கிறார் பாருங்கள்!
வியாசராயர் பெரிய மகான். மத்வ மடாதிபதி!
மன்னர் கிருஷ்ண தேவராயரின் அரசவையில் மந்திரியாக விளங்கியவர். ஒரு சமயம் குஹு யோகத்தின் பலனாக மன்னரின் உயிருக்கு ஆபத்து நேர்ந்த போது வியாசராயரே சிம்மாசனம் ஏறி மன்னரின் உயிரைக் காப்பாற்றினாராம்.
"ஸ்ரீக்ருஷ்ண" என்னும் கன்னட முத்திரையுடன், கன்னட மொழியில் பல பதங்களை இயற்றி உள்ளார். இந்த வியாசராயரிடம் தீட்சை பெற்றவர் தான் புரந்தர தாசர்.
வியாசராயா எழுதிய கன்னட மொழிப்பாடல் இந்தக் கிருஷ்ணா நீ பேகனே!
நாமெல்லாம் கடவுளை நோக்கிச் செல்ல விரும்புவோம்! ஆனால் இவரோ க்ருஷ்ணனை வா வேகமாய் வா என்று அன்புக் கட்டளையிடுகிறார்.
அவருடைய மனக்கண்ணில்....
![]() | ![]() |
முனியே நான்முகனே முக்கண்ணப்பா!
நம் கண்ணன் குழந்தைக்கு, பெருமாளாகவும்-சிவசக்தியாகவும் அலங்காரம்!
என்னப்பன், பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், தன்னொப்பார் இல்லப்பன்! - அவனே நம் கண்ணன்!
அவனுக்குப் பாடிக் கொடுத்தோம் நற் பாமாலை!
பூமாலை சூடிக் கொடுத்தோமைச் சொல்லு!
மலைநாடான் பாடுகிறார்!
குமரன் பாடுகிறார்!
கேயாரெஸ் குரலில்!
கிருஷ்ணா நீ பேகனே பாரோ
கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!
பேகனே பாரோ முகவன்னு தோரோ
வேகமாய் வாராய், திருமுகம் தாராய்!
(கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்!)
காலாலந்திகே கெஜ்ஜே நீலாத பானவுலி
நீலவர்ணனே நாட்யம் ஆடுத பாரோ
காலிலே கிண் கிணிகள்! கையில் மணிக் கங்கணங்கள்!
நீல வண்ணக் கண்ணா, நடனம் நீ ஆடி வாராய்!
(கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)
ஒடியல்லி ஒடிகெஜ்ஜே பெரலல்லி ஒங்குர
கொரலல்லி ஹாகித வைஜயந்தீ மாலே
இடுப்பிலே ஒட்டியானம், விரல்களில் மோதிரங்கள்
கழுத்திலே தவழ்ந்திடும் வைஜயந்தி வனமாலை!
(கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)
காசி பீதாம்பர கையல்லி கொலாலு
பூசித ஸ்ரீகந்த மையல்லோ லாகம்மா
காசிப் பீதாம்பரமும் கையில் புல்லாங் குழலும்
பூசிய சந்தனம் உன், மேனி எங்கும் மணக்க
(கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)
தாயிகே பாயல்லி ஜகவன்னு தோரித
ஜகதோத் தாரக நம்ம உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா
வாயினில் வையத்தைத் தாயிற்கே காட்டியவா
உலகத்தின் காவலா, நம்ம உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா
(கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)
ராகம்: யாமுன கல்யானீ
தாளம்: சாபு
வரிகள்: வியாசராய தீர்த்தர்
மொழி: கன்னடம்
Back to Shylaja...

வியாசராயரின் மனக்கண்ணில்....
குழந்தைக் கண்ணன் யசோதை வீட்டின் கூடத்தில் தவழ்ந்து ஓடிக் கொண்டிருக்கிறான்.
குழந்தைக்கு எத்தனை சுறுசுறுப்பு! ஓரிடத்தில் இல்லாமல் தவழ்ந்து நகர்ந்து நீஞ்சிச் செல்கிறது.
வியாசராயரால் அவனைப் பிடிக்க முடியவில்லை. அந்தத் திருமுகத்தை அருகில் பார்க்க ஆவலாகிறார்! ஆகவே க்ருஷ்ணா நீ வேகமாய் வா அப்பா என்று கெஞ்சுகிறார்.
வந்தால் மட்டும் போதாதாம்! வேகமாய் நீ வந்து உன் திருமுகத்தைக் காட்டுவாய் என்கிறார்.
முகம் கண்டவுடனேயே மனம் கண்ணனின் திருவடிக்கே செல்கிறது. அங்கே காலில் கொலுசைப் பார்க்கிறார்!
காற்சலங்கையை இங்கு முதலில் குறிப்பிடுவது நம் தாயகத்தில்!
இதற்கு ஓரு கதை உண்டு! சதங்கை மணிஒலி அதிர்ஷ்ட வரவின் அறிகுறி. அந்த ஒலி கேட்டு கெட்டவைகள் ஓடிவிடுமாம்.
கைகளில் நீலமணி கொண்ட கங்கணங்கள் பிடித்துக் கிடக்கிறதாம்..இடுப்பில் ஒட்டியாணம்! கையில் மோதிரம்!
அந்தக் கையால் அருளோ அன்றி குட்டோ அதே பாக்கியம் அல்லவா?
வைஜயந்தி மாலை! அது பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமனின் வெற்றி மாலை!
பக்தனின் இதயத்திலும் அதே வெற்றி உணர்வு ,அதைப் பார்த்த மாத்திரத்தில் வந்து விடாதோ?
காசி! உலகின் பழைய நகரம்! புண்ணீய நகரம். காசிக்கு பனாரஸ் என்றும் பெயர் உண்டு.
பனாரஸ் பட்டு உசத்தியானது, அதைக் கடவுளுக்கு அணியவைத்து அழகு பார்க்கிறார். சிவப்பு நிறப்பட்டு அண்ணலுக்கு உகந்த உடை. அந்த சிவந்த ஆடை, தன் சிந்தையைக் கவந்ததை திருப்பாணாழ்வாரும் அனுபவித்துப் பாடி இருக்கிறார்.
அடுத்து புல்லாங்குழல்!அதன் இன்னிசை ஒலி காற்று வெளியில் அமைதியை பரப்பி மனதை வருடி அங்கே தூய்மையை நிரந்தரமாக்குவது!
சந்தன மரம்! தியாகத்தின் மறுவடிவம். தன்னை அழித்து மணம் தருவது.
பக்தியின் உச்சமே தன்னை மறப்பதும் இழப்பதும் தானே? அதற்கு சந்தனத்தை விட வேறு உதாரணம் சொல்லவும் இயலுமோ? அத்தகைய சந்தனம் மணக்கும் மேனி அழகன்,கண்ணன்!
வாயில் தன் தாயினுக்கு உலகத்தையேக் காட்டியவன் !
உலகத்தைக் காத்து ரட்சிக்கும் நம் உடுப்பி ஸ்ரீகிருஷ்ணனே!
வாராய் நீ வேகமாக வாராய்! - எங்களின்
நூறாவது பதிவிற்கு வாராய்!
தாராளமாய் அருள் வெள்ளம், ஏராளமாய் இங்கு வரும்
பாரோர்க்குத் தாராய்!
சர்வம் க்ருஷ்ணார்ப்பணம்!
- திருவரங்கப்ரியா (எ) ஷைலஜா
சக பதிவர்களின் வாழ்த்துச் சேதி இதோ:
மதுரையம்பதி (எ) மெளலி அண்ணா:

உடுப்பி-ன்னா கிருஷ்ணன் மட்டுமா? உடுப்பி ஓட்டலும் கூடத் தான்! :-)
சுடச்சுடத் தோசை! அம்பியின் ஆசை!
மக்களே, கண்ணன் பாட்டை இன்னும் பாங்காகக் கொண்டு செல்ல உங்கள் யோசனைகளை அறியத் தாருங்கள்!
இது நாள் வரை, நீங்கள் அத்தனை பேரும் காட்டி வந்த அன்புக்கும், ஆதரவுக்கும், எங்கள் பத்து பேரின் மகிழ்ச்சியையும் நன்றியையும் ஒரு சேரத் தெரிவித்துக் கொள்கிறோம்!
என்றும் வேண்டும், உங்கள் இன்ப அன்பு!
- இப்படிக்கு, கண்ணன் பாட்டுக் குழுவினர்
* தி. ரா. ச.(T.R.C.)
* வெட்டிப்பயல்
* மடல்காரன்
* மலைநாடான்
* Raghavan
* "முருகனருள்" கோ.இராகவன்
* dubukudisciple
* குமரன் (Kumaran)
* ஷைலஜா
* kannabiran, RAVI SHANKAR (KRS)

Colonial Cousins, ஹரிஹரன் மற்றும் லெஸ்லி லூயிஸ் சேர்ந்து, அனைத்துச் சமய நல்லிணக்கம் வேண்டிப் பாடுகிறார்கள்! இடையிடையே அருமையான ஆங்கில வரிகள் ! இதோ!
So Come down and help us, Save all the little ones
They need a teacher, And you are the only one
Come back as Jesus, Come back and save the world
We need a teacher, and You are the only one
Come back as Rama, Forgive us for what we've done
Come back as Allah, Come back for every one.......
ஒரே நிறுத்தக் கடையாக (One Stop Shop)
இதோ...அதே பாடல், பலப்பல வடிவங்களில்!
* சாக்சபோன்-கத்ரி கோபால்நாத்
* புல்லாங்குழல்-என்.ரமணி
* வீணை-காரைக்குறிச்சி சகோதரர்கள்
* Fusion
* ஜான் ஹிக்கின்ஸ்
* மகராஜபுரம் சந்தானம்
* எம்.எல்.வசந்த குமாரி
* யேசுதாஸ்
* சித்ரா
* இந்துஸ்தானி இசையில் ஹரிஹரன்...
கண்ணனின் இனிமை காசினிக்கே இனிமை சேர்க்கட்டும்!
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!
(கண்ணன் பாட்டு வலைப்பூவின் அன்பர், திரு. மலைநாடான் ஐயாவின் அன்புத் தந்தையாருக்கு
இவ்வமயத்தில் அஞ்சலிகள் செலுத்தி, அவர் இன்னுயிர் அமைதி பெற, இறைவன் எம்பெருமானை வேண்டிக் கொள்கிறோம்!)