காலங்கலமா இதே வழக்கம்ப்பா இந்த ஆண்களுக்கு! அழகான பெண்களைக் காதலிக்கவேண்டியது ,அப்புறமா மனசு மாறிட வேண்டியது!
பாருங்களேன் இந்த அழகான பெண்ணும், ஒரு கோபிகை தான்(கோபிகா அல்ல பாவனா அல்லன்னு KRS Ragav Rishan பின்னூட்டமிடு முன்பாக நான் முந்திட்டேனே:))) ம்ம்ம் என்ன சொன்னேன் அழகான் பெண் என்றேனா அவளைக் குழலூதும் கண்ணன் தன் இசையில் மயக்கி இருக்கிறான்.
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்னு அந்தப் பொண்ணும் மயங்கிட்டா... அவளை நல்லா மருக வைத்துவிட்டு நைசா ப்ருந்தாவனத்துக்கு வந்துட்டான், அங்க இருக்கற கோபிகைகளுடன் குதூகலமாய் விளையாட ஆரம்பிக்கிறான் கண்ணன்.
காதலிக்கிறவ்ரை அ(எ)ந்த ஆணையும் ஒரு எதிர்பார்ப்போட ஏறெடுத்தும் பார்க்க மாட்டாங்க பொண்ணுங்க, ஆனா, காதலிச்சிட்டால் அவன் என்ன பண்றான் எங்க போறான் வேற எந்த ஃபிகர்கிட்ட செல்லுல சொல்லுல ஜொல்லுவிடறான்னு மோப்பம் பிடிக்கறதேதான் அவங்கவேலை!
ஆணை விட பெண்ணுக்கு அன்பின் ஆளுமையும் பொஸஸிவ் நெஸ்ஸும் ஜாஸ்திங்க!மோதிரத்தை தொலைச்சி மனைவியை மறந்தது துஷ்யந்தன் தானே!! காற் சிலம்பை அடகுவச்சி கண்ணகியை அம்போன்னு விட்டது கோவலன் தானே! இன்னும் மீதம் இருப்பதை மகளிர் பொங்கி எழுந்து நினைவுபடுத்தக்கேட்டுக்கறேன்!(முடிஞ்சா மறக்கலேன்னா ஆண்களும்:))))
சரி இருங்க கதைக்கு வருவோம்...கண்ணன் ப்ருந்தாவனத்துக்குப் போனால் விஷயம் தெரியாம போயிடுமா, நம்ம தமிழ்நாட்டு தங்க மகளுக்கு, ஆல்ரெடி ஸ்மார்ட்னெஸ் தமிழ்ப் பெண்களுக்கு நிறைய உண்டுன்னு சொல்வாங்க இதுல கண்ணபெருமானின் கடைக்கண்பார்வை வேறு பெற்றுவிட்ட்வள்!!காதல் பார்வையையும் கூட!
so,சும்மா இருப்பாளா வாரேன் சுவாமி உங்க ப்ருந்தாவனத்துக்கே நேரா வரேன் வந்து க்ருஷ்ணா நான் ஒருபாவியோன்னு கேட்பேன் அதுக்கு நீ பக்கத்துல ஏகப்பட்ட கோபிகைகளை வச்சிட்டு என்னை கேலியா பார்த்தா அதை தாங்கிப்பேன்னு நினைக்காத...என் கேள்விக்கு பதில் என்ன கேலியோன்னு கேட்காம விடமாட்டேன்,,,
நீ காயிலே புளிப்பாய் கனியிலே இனிப்பாய் ! நோன்பிலே உயிர்ப்பாய்கண்ணா ! ஆமா நான் இப்போ இருப்பது உயிர் நோன்பு ! காதல் நோன்பு! பாவை நோன்பு கொண்டாட இதோ மார்கழி பிறக்கப் போகிறது! உன்னையும் நப்பின்னை முதல் நந்தகோபனின் வாயிற்காப்பான் வரை வரை எல்லாரையும் விரட்டிக்கேட்க வில்லிப்புத்தூர் வீரப்பெண் வேறு வந்து விடுவாள். ஆகவே அப்போதைக்கிப் போதே வந்தேன் அடியாளை ஏறிட்டுப்பார்த்து ஏற்றுக்கொள்ளும் சுவாமி! என்கிறாள்.
ஒருபொண்ணு நினச்சா, நினச்சா.....எதுக்கு அதை ஒரு பெண்ணே இப்போ சொல்லணும், பாடலைக் கேளுங்க கல்லும் கனியாகும்!
பிருந்தாவனத்துக்கு வருகின்றேன்! - என் பெருமான் உன்னிடம் கேட்கின்றேன்! கிருஷ்ணா நான் ஒரு பாவியோ? - என் கேள்விக்கு பதில் என்ன கேலியோ? (பிருந்தாவனத்துக்கு)
கீதையில் உன் குரல் கேட்டேனே! - என் கிருஷ்ணனின் திருமுகம் பார்த்தேனே! பாதையில் உன் துணை வரவில்லையே! பகவான் திருவருள் தரவில்லையே! (பிருந்தாவனத்துக்கு)
குங்குமம் அணிந்தால் உன் தேவி! - தன் கூந்தலை முடித்தாள் பாஞ்சாலி! சங்கமம் என்பது எனக்கில்லையோ? - அந்த மங்கல மரபுகள் உனக்கில்லையோ?
கங்கையின் வெள்ளம் தண்ணீரோ? - இல்லை கன்னியர்கள் விடும் கண்ணீரோ? கண்ணனின் மனமும் கல் மனமோ? - எங்கள் மன்னனுக்கு இது தான் சம்மதமோ? (பிருந்தாவனத்துக்கு)
சிறுவயதில் நிறைய தடவை இந்தப் பாடலின் அழகில் மயங்கிக் கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறேன். அப்போதெல்லாம் யார் எழுதியது, யார் பாடியது என்றெல்லாம் தெரியாது. இது ஒரு முதன்மையான வடமொழித் துதி நூலின் மொழிபெயர்ப்பு என்றும் தெரியாது.
அன்று பெற்ற அமைதி இன்றைக்கும் இந்தப் பாடலைக் கேட்கும் போது கிடைக்கிறது. நீங்களும் கேட்டுப் பாருங்கள்.
இயற்றியவர் (மொழிபெயர்த்தவர்): கவியரசர் கண்ணதாசன் இசையமைத்துப் பாடியவர்: மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்
பாடுவதை விட்டுவிட்டுப் பாணினி இலக்கணத்தைப் பற்றுவதில் நன்மை வருமோ? பாய் விரித்த வேளை தனில் காலனவன் சன்னிதியில் பாணினியம் காவல் வருமோ?
(பாடிடுக பாடிடுக)
மாடு மனை தேடுவதும் வல்ல நிலை கூடுவதும் வாலிபம் இருக்கும் வரை தான்! வாசமொடு பாசமொடு வந்துறவு நாடுவதும் வரவுகள் நிலைக்கும் வரை தான்! ஓடி விடும் மேனிதனில் கோடி நரை தோன்றிய பின் கூடுவது என்ன சுகமோ? கூடும் விறகோடு வெறும் கூடு என வீழ்ந்த பி(ன்)னர் கோவணமும் கூட வருமோ?
என்ன இது.. இத்தனை பேரு மஞ்சள் ஆடை உடுத்தி எம்பெருமான் திருச்சின்னங்களை கையில் ஏந்திக் கொண்டு.. பாத்தா கோவில் வாசல்ல யாருக்கோ வரவேற்பு கொடுப்பதற்காக நிக்கிறாங்களோன்னு நினைக்கிறீங்களா ?
அதான் இல்லை.. இவங்கெல்லாம் ஒரு ஐந்து நாள் எமனேஸ்வரம் ஊரை விட்டு ஊர் சுத்தப் போறாங்க.. யாரோட சுத்தப் போறாங்கன்னு கேக்குறீங்களா.. இதோ கீழ இருக்கார் பாருங்க.. அவரோட தான்
பெருந்தேவி மணாளன்.. தேவர் பிரான்.. பேரருளாளன்.. ஸ்ரீவரதராஜன்..
எங்க ஊர் வரதராஜனை பற்றி எழுதலாம்னு உக்காந்தப்போ சில நாள் முன்பு கேட்ட திருச்சின்னமாலை ஞாபகம் வந்தது..
அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்
ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்
என்று ஸ்ரீமத் வேதாந்த தேசிகர், பேரருளாளனை அழகுற வர்ணித்திருப்பார். பேரருளாளனை உடனே தரிசிக்கணும்னு மனதில் ஆசை.. அப்புறம் என்ன.. உடனே பஸ்ஸை பிடிச்சு கிளம்பிட்டோம்ல.. அந்த திவ்யமான அனுபவம் இன்னொரு நாள் சொல்லுறேன்.
சாமிக்கு கோவில் கட்டி, நித்யப்படி பூஜையும் செஞ்சு.. முக்கிய தினங்களில் வீதி உலாவும் பண்ணுறோம்.. இருந்தும் ஸ்ரீவரதராஜன், ஒரு 5 நாள் சேந்தாப்புல ஊர் சுத்தணும்கிறார்.. எதுக்காம்??
காரணன்.. காரியம் இரண்டுமாகி இருப்பவன் ஆயிற்றே..
காரணமில்லாமலா, வெளியில் கிளம்புவார்.. துர்வாச முனிவரால் சபிக்கப்பட்டு மண்டூகமாக மாறி இருந்த சுதபஸ் என்ற முனிவருக்கு சாப விமோசனம் தர வேண்டியே இந்த விஜயம்
எமனேஸ்வரத்தில் மிகச் சிறப்பான திருவிழா.. திருவிழா நடக்கும் 18 நாட்களும் ஊரே கொண்டாட்டமா இருக்கும். அழகரை “அழகரப்பன்” என்று செளராஷ்ட்ர மக்கள் அழைப்பர்.
மேல உள்ள படத்துல தெரியற அர்ச்சகர் யாரா இருக்கும்னு சொன்னா.. அவர்களுக்கு அடையார் ஆனந்த பவனில் ஒரு கிலோ மை.பா வாங்கி அனுப்பப்படும் :).
புறப்படுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள், பயணத் திட்டம் யார் யாருக்கு என்ன பொறுப்பு எல்லாம் விஷ்வக்ஷேனர் ஆகிய சேனை முதலி தயாரா வைச்சிருக்கார்.
பயணத்திட்டத்தின் படி.. அதிகாலை கள்ளர் திருக்கோலத்துடன்.. புஷ்பப் பல்லக்கில் ஏறி.. பெருந்தேவி தாயாரிடமும், சக்கரத்தாழ்வானிடமும் மற்றும் முக்கியமாக காவல் தெய்வம் கருப்பண்ண சுவாமியிடமும் விடை பெற்றுக் கொண்டு,
எந்த வருடமும் தவற விடாத.. என் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும்.. ஊரார் அனைவரும் மிக்க சந்தோஷத்துடனும்.. பக்தியுடனும் எம்பெருமான்.. பேரருளாளன்.. வரதனை.. அழகனை கொண்டாடும்.. இப்பாடலை கண்டு களிப்போமா..
புஷ்பப் பல்லக்கு அசைந்தாடி வர.. குதூகலத்துடன்.. கோவிந்தா.. ஹரி என்ற கோஷம் முழங்க.. ஒரு துள்ளலுடன் எழுந்தருளுகிறார் வரதன்.
புஷ்பத்தின் மணங்களுடன்.. காலை குளிரில் பக்தர்களின் மரியாதைகளை ஏற்றுக் கொண்டு.. ஆற்றில் இறங்க தயாராகிறார்..
சரி.. இனி பாடலுடன் எம்பெருமான் ஆடலையும் பாப்போமா..
ஆடி வரார் ஓடி வரார் அழகழகாய்
அசைந்து வரார் வரதராஜ பெருமாள்
நம்மை வாழவைக்கும் திருமால்
அவர் கள்ளழகர் கோலத்திலே களிப்புடனே வருவார்..
கோவிந்த கோவிந்த கோவிந்தா.. ஹரி
கோவிந்த கோவிந்த கோவிந்தா..
வைகாசி மாசத்திலே பிரம்மோத்ஸவம் பாரு
அந்த வைபவத்தில் காட்சி தரும் வாகனங்கள் பாரு..
கல்யாண வைபவத்தில் வரதராஜனைப் பாரு..
கல்யாண வைபவத்தில் வரதராஜனைப் பாரு..
நாம் வடம்பிடித்து வலம் வருகின்ற தேரோட்டம் பாரு
ஆடி வரார் ஓடி வரார் அழகழகாய்
அசைந்து வரார் வரதராஜ பெருமாள்
நம்மை வாழவைக்கும் திருமால்
அவர் கள்ளழகர் கோலத்திலே களிப்புடனே வருவார்..
கோவிந்த கோவிந்த கோவிந்தா.. ஹரி
கோவிந்த கோவிந்த கோவிந்தா..
வஸந்தோத்ஸவ வைபவத்தில் வாண வேடிக்கை பாரு.. பூ பல்லாக்கிலே பவனி வரும் கள்ளழகரை பாரு..
அவர் கள்ளழகர் கோலத்திலே தல்லாகுளம் போய் அமர்வார்..
ஆடி வரார்..
தங்க நிற குதிரையிலே கள்ளழகரை பாரு
அவர் தங்கமென ஜொலித்து நிற்கும் வண்ணவராம் பாரு
சொர்ணமய சப்பரத்தில் சொர்க்க வாசல் பாரு
சொர்ணமய சப்பரத்தில் சொர்க்க வாசல் பாரு
நம்ம வரதராஜப் பெருமாளும் வண்டியூரில் அமர்வாரு..
ஆடி வரார்..
மண்டூக மகரிஷிக்கு மோட்சம் தரார் பாரு அந்த மண்டகப்படியில் எழுந்தருளி தசவதாரம் பாரு..
கோவிந்தா கோவிந்தா... கோவிந்தோவ்..
நகரெங்கும் வலம் வருகின்ற நாராயணனை.. நம் வரதராஜனை தரிசித்து மகிழுங்கள்.
பேரருளாளன் அருள்வானாக.. மூன்று அழகர்களை பற்றி சொல்லலாம் என்று நினைத்துள்ளேன்.. அடுத்ததா.. பரமக்குடி சுந்தரராஜனையும்.. இறுதியாக.. சோலைமலை அழகனையும் வரும் வாரங்களில் பார்ப்போம்.
பாடல் எழுதி பாடியவர்: திரு. குங்கா. கே. நாகநாத அய்யர் அவர்கள் குழு, எமனை.
வாங்க மக்கா, கண்ணன் பாட்டு வலைப்பூவில் பாட்டு போட்டே ரொம்ப நாள் ஆவுது! எவ்வளவு நாள் தான் கண்ணன் ரொமான்ஸ் மட்டுமே பண்ணிக்கிட்டு இருக்க முடியும்? அப்பப்போ பாட்டும் கேக்கணும்-ல?
கண்ணன் பாட்டு நூறாம் பதிவுக் கொண்டாட்டம்-ன்னு சொல்லிட்டு, அது முடிஞ்சவுடன் குமரன் கிட்ட கண்ணனைக் கொடுத்துட்டு, நடையைக் கட்டிறலாம்-னு பார்த்தேன்! நொங்-ன்னு ஒரு குட்டு, புல்லாங்குழல்-லயே! அடிங்க...ன்னு வாய் வந்திரிச்சி! திரும்பிப் பாத்தா....
ராதை...ஓ அடிச்சது ராதையா? அப்படின்னா பரவாயில்லை! அந்த மாட்டுக்காரப் பையன் கண்ணன் தான் கைய வச்சானோ-ன்னு நினைச்சேன்! ராதா சமேதா கிருஷ்ணா-ன்னா ஓக்கே தான்! :)
கம்பீரக் குரல் அரசி, அம்மா, கேபி சுந்தராம்பாள் முருகன் பாட்டு பாடுவாங்க! கலக்குவாங்க! தெரியும்! கண்ணன் பாட்டு பாடுவாங்களோ? இல்லீன்னா...முருகனை அல்லால் வேறோர் குறுகனைப் பாட மாட்டேன்-ன்னு சொல்லிருவாங்களோ?? சேச்சே! அம்மையாருக்கு கனிவான மனசு! கண்ணக் குழந்தையை விரும்பாதாவரும் உண்டோ?
இந்தப் பாட்டு சினிமா, ரீ-மிக்ஸ், Fusion, கச்சேரி-ன்னு எல்லா இடத்திலேயும் பிரபலம்! ஏன்னா ரொம்ப ரொம்ப சின்னப் பாட்டு! அதே சமயம் வெஸ்டர்ன் இஷ்டைல்-ல, வேகமா வரும் பாட்டு! Band Music போல களை கட்டும் பாட்டு! கேளுங்க, கே.பி.எஸ் குரலில்!
இசைக்கு ஒரு ராணி என்று நம் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் கெளரவிக்கப் பெற்றவர்... இசையின் ஒரே ராணிக்கு இன்று செப்டம்பர் 16 பிறந்த நாள்.
திருவேங்கடமுடையானை தினமும் பள்ளியெழுப்பும் பாக்கியம் பெற்றவர். தன் தெய்வீகக் குரலால் உலகத்துக்கே மகிழ்ச்சி உண்டாக்கியவர். ”குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா” என்று மனம் உருகி பாடும்போது உண்மையிலேயே அவருக்கு குறை ஒன்றும் இல்லை என்பதை அறியலாம். அதிலும் “ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா” எனும்போது அவருடைய முகபாவனையில் ஒரு கம்பீரம் தெரியும், “எனக்கு ஒரு குறையும் இல்லை கண்ணா, ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று சொல்வது போல் இருக்கும்.
அவரின் இசையை மட்டுமே கேட்டு மயங்கியதை தவிர வேறொன்றும் அறியாதவன். அவர் பாடல் மூலமாக அம்மாவின் பாதங்கள்லில் நமஸ்கரிக்கிறேன். குறை ஒன்றும் இல்லா கோவிந்தன் அருள் கிடைக்க வாழ்த்துங்கள் அம்மா.
திருமங்கையாழ்வார் கண்டு கொண்ட நாராயணா எனும் நலம் தரும் சொல்லை, கண்டுணர்ந்து அவன் அடி பணிவோம்.
நமக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். எதிரிகளே இல்லை என்று எண்ணிக் கொள்ளத் தான் ஆசை; ஆனால் இல்லாமலா இருக்கிறார்கள். அவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் நண்பர்களும் பகைவர்களும் இல்லை என்று ஆன்றோர்களும் ஆசாரியனும் சொல்கிறார்கள். அவர்கள் இல்லை என்றால் வேறு யார் தான் நண்பனும் பகைவனும்?
'தாமே தமக்கு சுற்றமும்' என்கிறார் மாணிக்கவாசகர். 'ஆத்மைவ ஹி ஆத்மனோ பந்து: ஆத்மைவ ரிபு: ஆத்மன: - தனக்குத் தானே உறவு; தனக்குத் தானே பகை' என்கிறான் கீதாசாரியன்.
இப்படி தனக்குத் தானே உறவாகவும் பகையாகவும் எப்படி இருக்க முடியும்? அதற்கும் விளக்கம் சொல்லியிருக்கிறார்கள் பெரியவர்கள்.
திருப்பாவையில் ஆறாம் பாசுரம் முதல் பதினைந்தாம் பாசுரம் வரை தோழியரை எழுப்பும் பாசுரங்களாக அமைந்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் மனமென்னும் தோழிக்கு அறிவென்னும் தோழி கூறும் அறிவுரைகள் என்று பெரியவர்கள் பொருள் சொல்லுவார்கள். இது சரி இது தவறு என்பது அறிவிற்குத் தெரிகிறது; இது பிடிக்கும் இது பிடிக்காது என்பது தான் மனதிற்குத் தெரிகிறது. மனதிற்குப் பிடித்ததெல்லாம் நன்மை அளிப்பன இல்லை. அதனால் தான் அடிக்கடி அறிவு நடுவே வந்து எது நலமோ அதனைச் சொல்ல வேண்டியிருக்கிறது. நல்லதொரு தோழன் என்பான் நம் நலம் விரும்புபவன். அதனால் மனத்திற்கு நல்லதொரு தோழன் அறிவே.
அறிவு சொல்வதை மனம் கேட்டு நடக்கும் போது நமக்கு நாமே நண்பன். அப்படி சொல் பேச்சு கேட்காமல் மனம் போன படி நடந்து கொள்ளும் போது நமக்கு நாமே எதிரி. ஒரு தடவை சொன்னால் கேட்க மாட்டாயா? போகட்டும். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். அப்போதாவது கேட்கிறாயா பார்க்கிறேன் - என்று சொல்வது போல் நிறைய பாடல்கள் மனத்திற்குச் சொல்பவையாக அமைந்திருக்கின்றன. நம்மாழ்வாரின் முதல் பாசுரமே 'துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே' என்று மனத்திற்குச் சொல்லும் அறிவுரையாகத் தான் அமைந்திருக்கின்றது. நாயகி சுவாமிகளின் கீர்த்தனைகளிலும் பல மனத்திற்குச் சொல்லுவதாகவே அமைந்திருக்கின்றன.
அப்படி மனத்திற்குச் சொல்லுவதாக அமையும் பாடல்கள் பல தத்துவங்களைச் சொல்லிச் செல்வதையும் பார்க்கலாம். அப்படி இன்றி எளிமையாக ஒரு நாமசங்கீர்த்தனமாக நாமாவளியாக ஒரு கீர்த்தனையை திரு. பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றியிருக்கிறார்கள். மருகனுக்குப் பிடித்த இராகத்தில் மாமனைப் போற்றும் அந்தப் பாடலை இங்கே பார்ப்போம்.
கண்ணனை பணி மனமே - தினமே கண்ணனை பணி மனமே
மண்ணில் யசோதை செய் புண்ய ஸ்வரூபனை மாதவனை நமது யாதவ தீபனை (கண்ணனை)
மூன்றாம் இரவில், முத்தாய்ப்பான இரவில், குழந்தையை மட்டுமல்லாது, நம்மையே சொக்க வைக்கும் ஒரு அருமையான தாலாட்டைக் கேட்கலாம்! இது தமிழில் இல்லை! அதனால் என்ன? நேற்று இரண்டு இரவுகளும் தமிழ்த் தாலாட்டைக் கேட்டோம் அல்லவா? இன்று சற்று வித்தியாசமாக! நாட்டியத் தாலாட்டு! நடனம் ஆடிக் கொண்டே தாலாட்டு!
இந்தப் பாடலை எழுதியது "அலை பாயுதே" புகழ் - ஊத்துக்காடு வேங்கடகவி! பல அருமையான தமிழிசைப் பாடல்களைத் தந்துள்ளார்! கொஞ்சம் போல வடமொழிப் பாடல்களும் எழுதி உள்ளார்!
இந்தப் பாட்டுக்கு மெளலி அண்ணா/குமரன்/கவி அக்கா யாராச்சும் பொருள் சொன்னாங்கனா, மிகவும் மகிழ்வேன்!
மன்னார்குடி இராஜகோபால ஸ்வாமி (மன்னார்சாமி) மேல் பாடிய பாட்டு இது! மன்னார்குடி 108 திவ்ய தேசங்களுள் ஒன்றல்ல எனினும் இது ஒரு அபிமான ஸ்தலம்!
மன்னார்குடி இராஜகோபாலனை இன்னிக்கி எல்லாம் வைச்ச கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டு இருக்கலாம்! அம்புட்டு அழகு! சொக்கத் தங்கம்! அவன் கையில் குழலும், காலடியில் பசுவும், தங்க விக்ரகமாய் மின்னும்! நீங்களே பாருங்க! படங்களைக் கிளிக்கிப் பெரிதாக்கிப் பாருங்க!
குழந்தை இல்லாதவர்கள், எம்பெருமான் கண்ணனை, இராஜகோபாலனை, இங்கு மடியேந்தப் பண்ணுவார்கள்! தட்சிணத் துவாரகை என்று பெயர் பெற்ற தலம்! மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்துள்ளார்!
ஊத்துக்காடு கவியின் பல பாடல்கள், மன்னார்குடி இராஜகோபாலனைச் சுற்றியே இருக்கும்! * பாடலை நாட்டியப் பாணியில் இங்கே கேட்கலாம்! * பம்பாய் சகோதரிகள் பாட, இங்கே கேட்கலாம்!
அருணா சாய்ராம்:
மணி நூபுர தாரி ராஜ கோபால மணி நூபுர தாரி கங்கண கிங்கிணி கண (மணி நூபுர தாரி)
(மணி=மாணிக்கம்; நூபுரம்=சிலம்பு, கொலுசு; மணி நூபுர தாரி = மாணிக்க மணிச் சதங்கைகள், கங்கண-கிங்கிணி-கண என்று ஒலிக்க, இராஜ கோபாலக் குழந்தை ஓடி வருகிறான்!)
மணி கோமேதக லோகிதக நீல மரகத வால வாயுஜ ஜால மகுட விராஜித சிகுர மனோகர முடிர சமகர களேபர கிங்கிணி கண (மணி நூபுர தாரி)
மாணிக்கம், கோமேதகம், செம்பவழம், நீலம், பச்சை மரகதம் என்று பல அணிமணிகள் குழந்தைக்கு! தலையில் மகுடம் அலங்கரிக்க, அழகான கூந்தல் மேகம் போல் பரவ, குழந்தை ஓடி வரும் களேபரத்தில், கங்கண-கிங்கிணி-கண என்று ஒலிக்கிறதே!
இன்னிக்கு கண்ணன் பிறந்த இரண்டாம் இரவு! வாங்க ஒரு அருமையான தாலாட்டை, தமிழில் தாலாட்டை, இன்னிக்கி இரவு கேட்டுக் கொண்டே தூங்குவோம்! * நேற்று சிறையில்! இன்று ஆயர் துறையில்! * நேற்று தேவகி! இன்று யசோதை! * நேற்று தனிமை! இன்று கோகுலக் கூட்டம்! * நேற்று புயல் வெள்ளம்! இன்று இன்ப வெள்ளம்! இப்படி ஒரே நாளில், ஒரே இரவில், எப்படி எப்படியெல்லாம் மாற்றம்!
பொதுவாக பெரிய இசைக் கலைஞர்களிடம் ஒன்றைக் கவனித்திருக்கலாம்! விருத்தம் என்ற இயற்பாவைப் பாடி விட்டு, அப்புறம் இசைப்பாவை பாடுவாங்க! இங்கும் அதே போல் திருப்பாணாழ்வார் விருத்தத்தை முதலில் பாடி விட்டு, அப்புறம் கிருதியைப் பாடுறாங்க நித்யஸ்ரீ!
திருப்பாணாழ்வாரைப் பற்றிப் பலரும் அறிந்திருக்கலாம்! தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்து, அரங்கன் மேல் கொண்ட காதலால், அர்ச்சகரிடம் கல்லடி வாங்கியவர்! பாணர் மேல் பட்ட கல்லால், அரங்கன் நெற்றியில் இரத்தம்! பிழையுணர்ந்த அர்ச்சகர், பாணரைத் தோள் மேல் தூக்கி வைத்து, சன்னிதிக்குள் அழைத்து வருகிறார்! பாணரும் அமலன் ஆதிப் பிரான் என்னும் பாசுரம் பாடி, பெருமாளின் அடி முடி சேவையைச் சேவிக்கிறார்!
அதில் இருந்து ஒரு விருத்தம் + பின்னால் ஒரு கிருதி! கிருதி என்னும் கீர்த்தனையைப் பாடியது தமிழ்த் தியாகராஜர்! தமிழ்த் தியாகராஜரா? யாருங்க அவரு?
பாபநாசம் சிவன் என்னும் பெரும் இசைக்கலைஞர்! இசைப்பாடல்கள் புனைந்தவர்! நம் அண்மைக் காலத்தில் வாழ்ந்தவர்! தமிழிசைக்குப் பெரும் தூண்! பல தமிழிசைப் பாடல்களை ராகங்களோடு எழுதிக் குவித்தவர்! அவர் தரும் அருமையான தமிழ்த் தாலாட்டு! அதுவும் தமிழ் இராகமான குறிஞ்சியில்!
குறிஞ்சிப் பாட்டைக் கேட்டுக்கிட்டே தூங்கலாமா? அப்படியே கண்ணனின் தொட்டிலை ஆட்டி விட்டுக் கொண்டே நீங்களும் தூங்குங்க! இன்னிக்கி காலை முழுதும் கோகுலத்தில் கண்ணன் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்! ஓய்வு ஒழிச்சலே இருந்திருக்காது உங்களுக்கு! இதோ பாட்டு, நித்யஸ்ரீ அவர்களின் ஏகாந்தமான குரலில்!
ஆலமா மரத்தின் இலைமேல், ஒரு பாலகனாய், ஞாலம் ஏழும் உண்டான், அரங்கத்து அரவின் அணையான், கோல மாமணி ஆரமும், முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில், நீல மேனி ஐயோ! நிறை கொண்டது என் நெஞ்சினையே!
இங்கே ஐயோ என்பது ஆனந்த ஐயோ! நீல மேனி ஐயோ! ஆலமர இலை! பாலகன்! உலகமேழும் உண்டான்! உண்டு விட்டு அரங்கத்துப் பாம்பில் தூங்குகின்றான்! அவன் மணியாரம்! முத்துமாலை! முடிவில்லாத அழகு! நீல மேனி ஐயோ! என் நெஞ்சினையே எடைக்கு எடை நிறை கொண்டு, நிறைத்து விட்டதே!
கண்ணே என் கண்மணியே! கண்ணனே கண் வளராய்! மண்ணுலகில் என் வாழ்வு, வளம் பெற வந்துதித்த (கண்ணே)
குயிலிசை குழலோசை உன் கொஞ்சு மொழிக்கு இணையாமோ? கொண்ட மனச் சஞ்சலங்கள் பஞ்சாய்ப் பறந்திடுமே! (தாலோ தாலேலோ)
கண்ணன் பிறந்தநாள் இன்று இரவு! எத்தனையோ தாலாட்டுகள் பின்னாளில் பாடினாலும், குழந்தையின் முதல் தாலாட்டு, மோகனத் தாலாட்டு அல்லவா? அதுவும் அதை நாத்திகக் கருத்து கொண்டவர் எழுதிப் பாடினால்? அனைவரையும் வம்பிழுக்க வந்த குழந்தைக்கு ஆத்திகமாவது? நாத்திகமாவது? எல்லாருமே அதற்கு வெண்ணெய் தான்! :)
இந்த இரவு மிகவும் கடினமான இரவு, குழந்தைக்கு! சிறை விட்டு, ஆற்றைக் கடந்து, ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து, இடி மின்னல், புயல் மழையில்... பிறந்ததுமே அதற்குப் பயணம் தொடங்கி விட்டது! உலகத்தையே பயணிக்க வைக்கும் குழந்தை, இன்று, தானே பயணிக்கிறது! ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒர் இரவில், ஒருத்தி மகனாய் வளர, விதிப்பவன் தனக்கே விதித்துக் கொண்டான்!!
கண்ணனை, நாஸ்தி நாஸ்தி - இல்லை இல்லை! என்று சொன்ன ஒருவன், தூண் முழுதும் தேடினான்! இன்னொருவன் ஊர் முழுதும் தேடினான்! நாஸ்தி நாஸ்தி என்பவர்களும் அண்ணலிடம் காட்டும் ஆஸ்தி அலாதியானது! :) மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே! எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே!(மங்களமே)!!
இன்று கண்ணக் குழந்தைக்குத் தாலாட்டு பாடுபவர் யார்? கவிஞர் வைர-முத்து! படம் சிப்பிக்குள்-முத்து! :) கவிஞர் பகுத்தறிவுக் கவிஞர் தான்! ஆனால் பாசத்தில் குறை வைத்தாரில்லை!
தேர்ந்த சொற்களை எளிமையாகப் போட்டு, தன்னையே தாயாக்கிக் கொள்கிறார், பெரியாழ்வார் வழியில்! கெளசல்யை நானே! யசோதை நானே! மலையன்னை நானே! பார்வதியும் நானே! அன்பான சொற்களைப் போட்டு, தன்னையே அடியார் ஆக்கிக் கொள்கிறார்! ஆழ்வாரும் நானே! கம்பநாடன் நானே! வால்மீகி நானே! தியாகய்யர் நானே! கவிஞர் வைரமுத்து அவர்களே! - இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
இதே பாடல், ஸ்வாதி முத்யம் என்ற தெலுங்கு படத்திலும் சிறப்பாக இருக்கும்! சுசீலாம்மாவின் தேன் குரலில், இன்று கண்ணக் குழந்தை பயணக் களைப்பு தீரத் தூங்கட்டும்! இன்று இரவு இந்தத் தாலாட்டு! தொடர்ந்து மூன்று இரவுகள், மூன்று தாலாட்டுகளைத் தர முயல்கிறேன்!
அது சரி, லாலி என்றால் என்ன? ஆரிராரோ என்றால் என்ன? தமிழகத் தாய்மார்கள் பெரும்பாலும் பாடுவது ஆரிராரோ! ஆனால் இந்தப் பாட்டில் வைரமுத்து இரண்டையுமே பாடித் தூங்க வைக்கிறார்! லாலி, லாலி - கேட்க இங்கே சொடுக்கவும்.
லாலி லாலி லாலி லாலி! லாலி லாலி லாலி லாலி!
வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி! ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி! குறும்பான கண்ணனுக்குச் சுகமான லாலி! ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி! (வரம் தந்த சாமிக்கு) ஆரிராரி ஆரிராரோ ஆரிராரி ஆரிராரோ
கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே! யது வம்ச வீரனுக்கு யசோதை நானே! கரு யானை முகனுக்கு மலையன்னை நானே! பார் போற்றும் முருகனுக்குப் பார்வதியும் நானே! (வரம் தந்த சாமிக்கு) ஆரிராரி ஆரிராரோ ஆரிராரி ஆரிராரோ
ஆனந்தக் கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே! ஸ்ரீராமன் பாட வந்த கம்ப நாடன் நானே! ராம ராஜனுக்கு வால்மீகி நானே! ஆகாய வண்னனுக்குத் தியாகைய்யர் நானே! (வரம் தந்த சாமிக்கு)
ஆரி-ராரி ஆரி-ராரோ ஆரி-ராரி ஆரி-ராரோ
யார் தவம் ஈந்து வந்துதித்தாய் இருநிலத்தில்? யார் ஈந்தவன் நீ?
யார் ஈ? யார் ஈ? யார்-ஹரி-ரோ? உன்னை யார் ஈ? யார் ஈ? யார்-அறி-ரோ? கண்ணா, யார்-அறி-வாரோ? (இந்தப் பாடல் என்னைப் பல நினைவுகளுக்கு இட்டுச் செல்லும்! எத்தனை முறை பாடியிருப்பேன் என்று எனக்கே தெரியாது! இரவில் துவங்கிடும் இந்தப் பாடல், விடிய விடிய, விடிந்து, அலுவலகம் செல்லும் வரை ஒலித்த பாடல்! கண்ணைப் பார்த்து, ஆரி-ராரோ என்ற வாயசைப்புக்கே அமைதி வந்து விடும்!) பாடல்: வரம் தந்த சாமிக்கு படம்: சிப்பிக்குள் முத்து வரிகள்: வைரமுத்து இசை: இளையராஜா குரல்: பி.சுசீலா
இது, இவர்கள் வீட்டுக் கண்ணன்! தொங்கக் கிருஷ்ணுடா நூவு? :)
ஸ்வாதி முத்யம் படத்தில்! (தமிழ் வீடியோ இருந்தா, யாராச்சும் கொடுங்கப்பா!)
குட்டிக் கண்ணனை பார்த்ததுமே கட்டிக் கொள்ள ஆவல் பிறக்கிறதல்லவா! நீல வண்ணக் கண்ணனுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!!
பூம்பிஞ்சுப் பாதம் எடுத்து பூப்போல அடிகள் பதித்து பூவைப்பூ வண்ணக் கண்ணன் புவிமகிழ பிறந்து வந்தான்!!
ஏற்கனவே எழுதின ஒரு பாடலை இடலாம்னுதான் வந்திருக்கேன். ஆனாலும் கண்ணனை நினைச்சோன்ன பிறக்கிற கவிதையை தடுக்க முடியல :) பரவாயில்ல, இதை இப்ப முடிக்காம இன்னொரு மழைக்காலத்துக்கு சேமிச்சு வச்சுக்கறேன்!
கண்ணன்னாலே ஒரு தனி சிறப்பு இருக்கு. செல்லக் குழந்தையாகவும், விளையாட்டுப் பிள்ளையாகவும், தோள் கொடுக்கும் தோழனாகவும், உள்ளங்கவர் கள்வனாகவும், கீதாசிரியனாகவும், பரம்பொருளாகவும், இப்படி பல பரிமாணங்கள்ல அவனை சுலபமாக பாவித்துக் கொள்ளலாம்! ஆனா இன்னைக்குதானே அவனுடைய பிறந்த நாள்… அதனால அவனை இன்னைக்கு சின்னக் குழந்தையா மட்டும் பார்த்து கொஞ்சிக்கலாம் :) என்ன சொல்றீங்க?
நம்ம கண்ணன் (கேஆரெஸ்) முருகனருள் 100-வது பதிவுக்காக முருகன் மேல ஒரு காவடிச் சிந்து எழுதியிருந்தார். அதை பார்த்து எனக்கும் ஒரு காவடிச் சிந்து எழுதணும்னு ஆசை வந்தது, அப்போதான், “ஏங்க்கா, கண்ணன் காவடி சிந்து ஒண்ணு எழுதுங்களேன்; கண்ணன் பாட்டுல போடலாமே”ன்னு சொன்னார். அதன்படி எழுதின பாடல்தான் இங்கே.
இந்த பாடலை உற்றுக் கவனிச்சீங்கன்னா ஒரு ரெண்டு அல்லது மூணு இடத்துல கேஆரெஸ் உடைய முத்திரை (சுத்தத் தமிழ்ல சொன்னா அவருடைய ‘டச்’!) தெரியும் – அவர் இந்த பாடல்ல சில சொற்களை மாற்றியிருக்கார், அதைத்தான் சொல்றேன். எல்லாம் கண்டு பிடிக்க முடியலைன்னாலும், அவருடைய வாசகரா இருக்கவங்க, ஒரு இடம் கண்டிப்பா கண்டுபிடிச்சிரலாம்! எங்கே, சொல்லுங்க பார்ப்போம்!
கண்ணன் என் னும்மன்னன் பிறந்தான் நெஞ்சம் தவழ்ந்தான் - நந்த கோபனின் செல்வனாய் வளர்ந்தான் - அந்த ஆயர் குடி ஆயர் இடை மாயன் அவன் ஆயன் என நடந்தான் வையம் அளந்தான் - அவன் திரிந்தான் லீலை புரிந்தான்
ஆவின் இனங்களை மேய்த்தான் வீடு சேர்த்தான் - கண்ணன் பூவின மாதரை ஈர்த்தான் - வண்ண மலர் கொய்துச் சூடி, அவள் ஆடை கள வாடி சிரிப்பான் பின்னல் பிரிப்பான் - அதை மறைப்பான் மனம் கரைப்பான்
கிண்கிணிச் சலங்கை ஒலிக்க சிந்து படிக்க - கண்கள் குறும்பில் மின்னியே ஜொலிக்க - சின்னக் கண்ணன் அவன் வெண்ணை இதழ் கன்னம் இட்டு மின்னல் எனக் கவர்வான் தின்று மகிழ்வான் - பின்னர் ஒளிவான் பிடி படுவான்
புல்லாங் குழலினை எடுப்பான் கானம் படிப்பான் - புவி எல்லாம் மயங்கிட இசைப்பான் - கன்னல் மொழி பேசும் கண்ணன் அவன் மயிற்பீலி அசைய வருவான் உள்ளம் நுழைவான் - இன்பம் தருவான் தமிழ்ப் பெருமான்!
*** முதல் பதிவே கண்ணன் பிறந்த நாளுக்கு எழுத முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. வாய்ப்பளித்த கேஆரெஸ்ஸுக்கும், கண்ணன் பாட்டு குழுவிற்கும், முக்கியமாய் கார்மேக வண்ணனுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
திருமகள் நாயகனாம் திருமால் அர்ச்சாவதாரம் கொண்டு விளங்கும் 108 திவ்யதேசங்களில், இந்த நெஞ்சை அள்ளும் தஞ்சை மாவட்டத்தில் திருவிண்ணகர் என்று போற்றப்படும் துளஸீ வன ஷேத்ரத்தில் எம்பெருமான் தன் ஒப்பார் இல் அப்பனாக எழுந்தருளியுள்ளார். அவரோட திருக்கல்யாண வைபவம் எவ்வளவு சிறப்பா நடக்குதுன்னு உங்களோட இருந்து நானும் ஸேவிக்கிறேன்.
"மார்க்கண்டேய மகரிஷி பூமிதேவித் தாயாரை மகளாக அடையும் பாக்கியம் பெற்றவர். தேவியின் ஐந்து வயது இருக்கும் போது, பங்குனி மாசம், சிராவணத்தின் போது, எம்பெருமான் வயோதிகர் வேடத்தில் பெண் கேட்டு வந்து நின்றார். மார்க்கண்டேயருக்கு முதல்ல வந்துருக்கிறது யாருன்னு தெரியல, அதனால போயும் போயும் ஒரு கிழவருக்கா நம்ம சின்னப்பொண்ணக் கொடுக்குறது, அதுதான் தகுமோ என்று முடியாதுங்குறார். பெருமாள் விடுறதா இல்லை, பிடிவாதமா நிக்குறார். பெரியவாள் பிடிவாதம் பிடிப்பா தெரியும், இங்க பெருமாளே பிடிவாதமா இருக்கார். என்ன பண்ணலாம்னு மகரிஷி யோசிச்சார். அய்யா, எம் பொண்ணுக்கு அஞ்சு வயசு தான் ஆகுறது, சமைக்கக் கூட தெரியாது, உப்பு கூடப் போடத் தெரியாது, அதனால நீவீர் நல்லா சமைக்கத் தெரிஞ்ச பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கங்கோ அப்படின்னார். "
"வயசானாலே கண்டிப்பா நல்ல சாப்பாடு வேணும்னு நினைப்பு வரும், உப்பு கூட சரியாப் போடத் தெரியாதுங்கிற உண்மைய சொன்னா வந்தவர் போயிருவார்னு நினைததார். "
"எங்க போரது.. விடாப்பிடியா நின்னுட்டார்.. உம்ம பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக நான் உப்பை தியாகம் பண்றேன் ஓய்.. இப்போ என்ன சொல்றேள்னார், மகரிஷி ஆடிப்போயிட்டார். அப்புறம் புறக்கண்ணை மூடி அகக்கண்ணை திறந்து பாததா, நிக்கிறவர் ஓங்கி உலகளந்த உத்தமன், பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பன் தன் ஒப்பார் இல் அப்பன் அல்லவா இவன் என்று மனமகிழ்ந்து தன் பெண்ணை பூமிதேவிப்பிராட்டியை கன்னிகாதானம் பண்ணிக் கொடுக்குறார். அந்த வைபவத்தை தான் சேவிக்கப் போறோம். அப்படியே உக்காந்து ஸேவிங்கோ. "
"என்னடா வரது, எல்லாம் தயாரா. சரி ஆத்துல போய் மாமியை ஆரத்தி கரைச்சுண்டு சீக்கிரம் வரச் சொல்லு, டீ.வி பாத்துண்டே உக்காந்துரப்போறா. டிரஷ்டி வந்துட்டார் போலிருக்கே நான் ஆரம்பிக்கிறேன். "
"சீர்பாதம் தாங்கி ... எல்லாரும் இருக்கேள் தானே, சரி வாத்யம் , பந்தம் எல்லாம் ரெடியா.. மாலை மாற்றுக்கு பெருமாளை ஏளப்பண்ணுங்கோ.. "
பெருமாளும், தாயாரும் திருமஞ்சனம் கண்டருளி தயாராக இருக்கிறார்கள். பெருமாள் ஒரு புறம், தாயார் மறுபுறம் இருக்க, ஒரு அர்ச்சகர் பெருமாள் அணிந்திருந்த மாலை ஒன்றை எடுத்துக் கொண்டு கையிலே உயர்த்திப் பிடித்துக் கொண்டு அபினயத்துடன் தாயாரை நோக்கி செல்கிறார், அதே போன்று தாயாரிடம் இருந்து ஒரு அர்ச்சகர், கையில் தாயார் மாலையுடன், அபினயத்துடன் பெருமாளை நோக்கி வருகிறார். இப்படி பெருமாளும், தாயாரும் மூன்று முறை மாலை மாற்றிக் கொள்கின்றனர்.
"சரி ஊஞ்சலுக்கு ஏழப் பண்ணுங்கோ.. வழி வழி.. சீர்பாதம்... புறப்படலாம்.. முதல்ல பெருமாளை ஏழப்பண்ணு, தாயாரை கொஞ்சம் பெருமாளை பாத்த மாதிரி ஏழப்பண்ணு."
பெருமாள் திருக்கல்யாணத்தை ஸேவிக்க வந்த அனைவருக்கும் எம்பெருமான் கிருபை உண்டாக பிரார்த்திக்கிறேன். நீங்காத செல்வம் நிறைந்து வாழ அடியேன் பெருமாளிடம் விண்ணப்பிக்கிறேன். பெருமாளை அடிக்கடி ஸேவிக்க வங்கோ. நான் உத்தரவு வாங்கிக்கிறேன்.
இராகவன்: ஒப்பிலா அப்பன் திருக்கல்யாணத்தை நல்லபடியா சொல்லனும்கிற ஒருவித பயத்தோடே எழுதியிருக்கேன். நல்லா இருந்தா ஒருமுறை ஒப்பிலாஅப்பனை வணங்கவும். தவறுகள் இருப்பின் உங்களால முடிஞ்ச அளவு என்னை கோவிச்சுக்கலாம்.
ஸ்ரீதேவி, பூமிதேவி, நீளாதேவி, ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள், முனிவர்கள், தேவாதி தேவர்கள் உனது தாள் தொழ.. கமலக் கண்ணாடி கண்டருளும்.. எங்கள் கண்ணா, கார்மேக வண்ணா..
இன்றோ உன்னை விட்டு எக்கணமும் பிரிந்திராத ஆதிசேஷன் மட்டும் இருக்க, மலர்மாலை கூட இல்லாமல் இருப்பதன் காரணம் என்னவோ.. ??
ஆதிசேஷனே, நீ மீண்டும் ஒருமுறை முருகனருள் சென்று விட்டு வாயேன்.. என் மருகனுக்கு பாம்பு-அணியாய் இருந்து விட்டு வரலாம்.
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகா!,
"சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரஅடியாம் நீள்கடலுள்- என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு"
என்றிருக்க நான் எப்படி உங்களை விட்டு விலக முடியும்.. வேண்டுமானால் நாம் இருவரும் செல்வோம்..
இப்படி உரையாடிக் கொண்டிருந்த கண்ணன், வேறொருவர் குரல் கேட்டு திரும்புகிறான்..
சரி கதையை தொடரும் முன் சிறு விண்ணப்பம்.. அடியேன் இராகவன்.. ரவி அண்ணாவுக்கு மட்டும் ராகவ். கண்ணன் பாட்டு நூறை தொட்டு இரண்டு வாரம் ஆகி விட்டது. முருகனருளும் நூறை தொட்டு விட்டது. கண்ணன் பாட்டின் 101வது பாடலாக.. இந்த கந்தவடி பதிவு.
சரி கதைக்கு வருவோம். முருகனருளின் 100 வது பதிவை அனைவரும் சேர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, பெருமாள் மட்டும் வைகுண்டம் திரும்பி விட்டார். தற்போது தொடருவோம்..
"பெருமாளே ஏன் இந்த கோலம்? .. நாடு தோறும் வீடு தோறும் .. உன்னைத்தேடி ஓடி வந்துள்ளேன்.. அருள் புரிய வேண்டும். "
பக்தனே யார் நீ? என் மருகன் 100 வது பதிவு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வரும் வழியில் பாதை மாறி வந்து விட்டாயா?
இல்லை பரந்தாமா. .உன் மருகன்.. இந்த பித்தன் முருகதாஸனை, உன்னை சந்தித்து வரத்தான் இங்கு அனுப்பியுள்ளான். உலகத்தின் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் பரந்தாமன் நீ..
உன்னை அலங்காரப்பிரியன் என்றல்லவோ பூஜிக்கிறோம். இன்று தாங்கள் தனியே, மலர்மாலை கூட சூடாமல் இருப்பதன் காரணம் தெரியவில்லை.
முருகதாஸா, நான் உட்பட அனைவரும் என் மருகன், முருகனின் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டோம். உலக ஷேமத்திற்காக நான் விரைவில் வந்து விட்டேன். தேவியர்களுக்கு இன்னும் அங்கிருந்து வர மனமில்லை.. என்ன இருந்தாலும் தமிழர் விருந்தோம்பலில் சிறந்தவன். அது தான் அனைவரும் அங்கேயே உள்ளனர். ஆறுமுகத்தானின் கொண்டாட்டத்திற்கு நிறைய மலர்கள் தேவை, அதனால் தான் எனக்கு கூட மாலை இல்லா பற்றாக்குறை.
கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயா, "பூமாலைக்கு பதிலாக என் பாமலையை சூட்டிக்கொள்ள வேண்டுகிறேன்."
ம்ம்.. முன்பெல்லாம் பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கலாம் என்பர்... இன்று அதுவும் போய்.. பூமாலை வைக்கும் இடத்தில் பாமாலை வைக்கிறாய்.
சரி இந்த அலங்கார பிரியனுக்கு உன் பாடல்களே அழகு சேர்க்கட்டும்.
நாடே நாடாய் வீடே வீடாய் நாடி தேடினேன் கண்ணா! நாளும் உன்னை பாடிப்பாடி நானோர் பைத்தியம் ஆனேன் கண்ணா ! நாடே நாடாய் வீடே வீடாய் நாடி தேடினேன் கண்ணா! நாளும் உன்னை பாடிப்பாடி நானோர் பைத்தியம் ஆனேன் கண்ணா !
காத்திருக்கோம் காத்திருக்கோம் கமலக் கண்ணா வா வா! பார்த்திருப்போம் உன் வரவை குழழ்ஊதி வா வா! கால் சிலம்பு கொஞ்சிடவே கமலக் கண்ணா வா வா! கானக்குரல் கேட்க வேண்டும் கமலக் கண்ணா வா வா!
கண்ணன் பாட்டு வலைப்பூவின் 100-வது பதிவு இதோ! 100-ஆம் பாடல், மிகவும் பிரபலமான பாடல்! கிருஷ்ணா நீ பேகனே, பாரோ! தமிழ் வடிவில், கிருஷ்ணா நீ வேகமாய், வாராய், என்று தந்துள்ளோம்! மங்கள இசையுடன் துவங்கலாமா? ஷேக் சின்ன மெளலானா அவர்கள் இதே பாட்டை வாசிப்பதை இங்கு கேட்டு மகிழுங்கள்!
இன்னிக்கு பல பதிவர்களின் குரலை எல்லாம் ஒன்னாக் கேக்கப் போறீங்க! இது நாள் வரை அவர்கள் எழுத்தை மட்டுமே படித்த பலருக்கும், இன்னிக்கி பதிவர்களின் குரலைக் கேக்கப் போற அபாயம்! எனவே எச்சரிக்கை! நில், கவனி, பின்னூட்டு! :-)
கிட்டத்தட்ட அதே மெட்டில், தமிழாக்கி உள்ளேன்! அந்தத் தமிழை, மலைநாடான் ஐயாவும், குமரனும் அடியேனும் பாடி உள்ளோம்! இந்த நூறாம் பதிவை, வழி நடத்திச் செல்லப் போவது, நம் ஷைலஜா அக்கா! அவர் பாட்டுக்குத் தரும் முன்னுரை இதோ! Over to Shylaja!
வாராய் நீ வாராய்!- இந்த திரைப் பாடல் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இப்படிக் கடவுளை வாராய் நீ வேகமாக வாராய் என்றார் ஒரு பக்தர்! யார் அவர்?
அதற்கு முன், கண்ணனைப் பெரியாழ்வார் எனும் பெரும்பக்தர் எப்படி அனுபவித்துப் பாடினார் என்பதைப் பார்ப்போமா? கண்ணன், அழகான குழந்தை வடிவோடு பெரியாழ்வாருக்கு சேவை தந்தாராம். அந்த அழகான குழந்தையின் முகம் பார்த்ததும், குழந்தைக்குத் தொட்டில் போட அவருக்கு ஆசை வந்ததாம்.
மாணிக்கங்கட்டி வயிரம் இடைகட்டி ஆனிப்பொன்னால் செய்த வண்னச் சிறுதொட்டில் என்று பாட்டில் அதைச் செய்தார்! தொட்டிலில் கண்ணனைக் கிடத்தி அவனுடைய பாதக் கமலங்கள் காண வாரீரே என்று பாசுரம் பாடுகிறார்! - 'வையம் அளந்தானே தாலேலோ!' வையம் அளந்த கால் அது!
முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும் தத்திப் பதிந்துத் தலைப் பெய்தாற்போல் எங்கும் பத்து விரலும் மணிவண்னனின் பாதங்கள், ஒத்தி இருந்தவா காணீரே! ஒத்தார் போலிரூக்கும் விரல்கள்! அந்தப் பாத அழகு! கண்ணனின் திருவடியில் மனம் சரணடைவதை பெரியாழ்வார் இப்படிச் சொன்னார் என்றால் கண்ணன் திருவடி எண்ணுக மனமே என்கிறார் பாரதியும்.
கிருஷ்ணா நீ பேகனே-விலும், அந்த திருவடியைத் தான் வியாசராயர் தன் பாடலில் முதலில் சொல்கிறார் பாருங்கள்! வியாசராயர் பெரிய மகான். மத்வ மடாதிபதி! மன்னர் கிருஷ்ண தேவராயரின் அரசவையில் மந்திரியாக விளங்கியவர். ஒரு சமயம் குஹு யோகத்தின் பலனாக மன்னரின் உயிருக்கு ஆபத்து நேர்ந்த போது வியாசராயரே சிம்மாசனம் ஏறி மன்னரின் உயிரைக் காப்பாற்றினாராம்.
"ஸ்ரீக்ருஷ்ண" என்னும் கன்னட முத்திரையுடன், கன்னட மொழியில் பல பதங்களை இயற்றி உள்ளார். இந்த வியாசராயரிடம் தீட்சை பெற்றவர் தான் புரந்தர தாசர். வியாசராயா எழுதிய கன்னட மொழிப்பாடல் இந்தக் கிருஷ்ணா நீ பேகனே! நாமெல்லாம் கடவுளை நோக்கிச் செல்ல விரும்புவோம்! ஆனால் இவரோ க்ருஷ்ணனை வா வேகமாய் வா என்று அன்புக் கட்டளையிடுகிறார்.
அவருடைய மனக்கண்ணில்....
முனியே நான்முகனே முக்கண்ணப்பா! நம் கண்ணன் குழந்தைக்கு, பெருமாளாகவும்-சிவசக்தியாகவும் அலங்காரம்!
காலாலந்திகே கெஜ்ஜே நீலாத பானவுலி நீலவர்ணனே நாட்யம் ஆடுத பாரோ காலிலே கிண் கிணிகள்! கையில் மணிக் கங்கணங்கள்! நீல வண்ணக் கண்ணா, நடனம் நீ ஆடி வாராய்! (கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)
காசி பீதாம்பர கையல்லி கொலாலு பூசித ஸ்ரீகந்த மையல்லோ லாகம்மா காசிப் பீதாம்பரமும் கையில் புல்லாங் குழலும் பூசிய சந்தனம் உன், மேனி எங்கும் மணக்க (கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)
தாயிகே பாயல்லி ஜகவன்னு தோரித ஜகதோத் தாரக நம்ம உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா வாயினில் வையத்தைத் தாயிற்கே காட்டியவா உலகத்தின் காவலா, நம்ம உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா (கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)
ராகம்: யாமுன கல்யானீ தாளம்: சாபு வரிகள்: வியாசராய தீர்த்தர் மொழி: கன்னடம் Back to Shylaja... வியாசராயரின் மனக்கண்ணில்.... குழந்தைக் கண்ணன் யசோதை வீட்டின் கூடத்தில் தவழ்ந்து ஓடிக் கொண்டிருக்கிறான். குழந்தைக்கு எத்தனை சுறுசுறுப்பு! ஓரிடத்தில் இல்லாமல் தவழ்ந்து நகர்ந்து நீஞ்சிச் செல்கிறது. வியாசராயரால் அவனைப் பிடிக்க முடியவில்லை. அந்தத் திருமுகத்தை அருகில் பார்க்க ஆவலாகிறார்! ஆகவே க்ருஷ்ணா நீ வேகமாய் வா அப்பா என்று கெஞ்சுகிறார்.
வந்தால் மட்டும் போதாதாம்! வேகமாய் நீ வந்து உன் திருமுகத்தைக் காட்டுவாய் என்கிறார். முகம் கண்டவுடனேயே மனம் கண்ணனின் திருவடிக்கே செல்கிறது. அங்கே காலில் கொலுசைப் பார்க்கிறார்! காற்சலங்கையை இங்கு முதலில் குறிப்பிடுவது நம் தாயகத்தில்! இதற்கு ஓரு கதை உண்டு! சதங்கை மணிஒலி அதிர்ஷ்ட வரவின் அறிகுறி. அந்த ஒலி கேட்டு கெட்டவைகள் ஓடிவிடுமாம்.
கைகளில் நீலமணி கொண்ட கங்கணங்கள் பிடித்துக் கிடக்கிறதாம்..இடுப்பில் ஒட்டியாணம்! கையில் மோதிரம்! அந்தக் கையால் அருளோ அன்றி குட்டோ அதே பாக்கியம் அல்லவா?
வைஜயந்தி மாலை! அது பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமனின் வெற்றி மாலை! பக்தனின் இதயத்திலும் அதே வெற்றி உணர்வு ,அதைப் பார்த்த மாத்திரத்தில் வந்து விடாதோ?
காசி! உலகின் பழைய நகரம்! புண்ணீய நகரம். காசிக்கு பனாரஸ் என்றும் பெயர் உண்டு. பனாரஸ் பட்டு உசத்தியானது, அதைக் கடவுளுக்கு அணியவைத்து அழகு பார்க்கிறார். சிவப்பு நிறப்பட்டு அண்ணலுக்கு உகந்த உடை. அந்த சிவந்த ஆடை, தன் சிந்தையைக் கவந்ததை திருப்பாணாழ்வாரும் அனுபவித்துப் பாடி இருக்கிறார்.
அடுத்து புல்லாங்குழல்!அதன் இன்னிசை ஒலி காற்று வெளியில் அமைதியை பரப்பி மனதை வருடி அங்கே தூய்மையை நிரந்தரமாக்குவது!
சந்தன மரம்! தியாகத்தின் மறுவடிவம். தன்னை அழித்து மணம் தருவது. பக்தியின் உச்சமே தன்னை மறப்பதும் இழப்பதும் தானே? அதற்கு சந்தனத்தை விட வேறு உதாரணம் சொல்லவும் இயலுமோ? அத்தகைய சந்தனம் மணக்கும் மேனி அழகன்,கண்ணன்!
வாயில் தன் தாயினுக்கு உலகத்தையேக் காட்டியவன் ! உலகத்தைக் காத்து ரட்சிக்கும் நம் உடுப்பி ஸ்ரீகிருஷ்ணனே!
வாராய் நீ வேகமாக வாராய்! - எங்களின் நூறாவது பதிவிற்கு வாராய்! தாராளமாய் அருள் வெள்ளம், ஏராளமாய் இங்கு வரும் பாரோர்க்குத் தாராய்! சர்வம் க்ருஷ்ணார்ப்பணம்! - திருவரங்கப்ரியா (எ) ஷைலஜா சக பதிவர்களின் வாழ்த்துச் சேதி இதோ:
மக்களே, கண்ணன் பாட்டை இன்னும் பாங்காகக் கொண்டு செல்ல உங்கள் யோசனைகளை அறியத் தாருங்கள்! இது நாள் வரை, நீங்கள் அத்தனை பேரும் காட்டி வந்த அன்புக்கும், ஆதரவுக்கும், எங்கள் பத்து பேரின் மகிழ்ச்சியையும் நன்றியையும் ஒரு சேரத் தெரிவித்துக் கொள்கிறோம்!
என்றும் வேண்டும், உங்கள் இன்ப அன்பு! - இப்படிக்கு, கண்ணன் பாட்டுக் குழுவினர் * தி. ரா. ச.(T.R.C.) * வெட்டிப்பயல் * மடல்காரன் * மலைநாடான் * Raghavan * "முருகனருள்" கோ.இராகவன் * dubukudisciple * குமரன் (Kumaran) * ஷைலஜா * kannabiran, RAVI SHANKAR (KRS) Colonial Cousins, ஹரிஹரன் மற்றும் லெஸ்லி லூயிஸ் சேர்ந்து, அனைத்துச் சமய நல்லிணக்கம் வேண்டிப் பாடுகிறார்கள்! இடையிடையே அருமையான ஆங்கில வரிகள் ! இதோ! So Come down and help us, Save all the little ones They need a teacher, And you are the only one Come back as Jesus, Come back and save the world We need a teacher, and You are the only one Come back as Rama, Forgive us for what we've done Come back as Allah, Come back for every one.......
கண்ணனின் இனிமை காசினிக்கே இனிமை சேர்க்கட்டும்! எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்! (கண்ணன் பாட்டு வலைப்பூவின் அன்பர், திரு. மலைநாடான் ஐயாவின் அன்புத் தந்தையாருக்கு இவ்வமயத்தில் அஞ்சலிகள் செலுத்தி, அவர் இன்னுயிர் அமைதி பெற, இறைவன் எம்பெருமானை வேண்டிக் கொள்கிறோம்!)