எம்பெருமான் ஐந்து ரூபங்களுடன் விளங்குகிறான் என்கிறார்கள் படித்த சான்றோர்கள் - பரம், வ்யூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சைஎன ஐந்து ரூபங்களய் விளங்கும் அவனை நாம் காணமுடிவது ஐந்தாவதில் தான்.
பரம் எனப்படும் பரம ரூபம் ஸ்ரீவைகுண்டத்திலிருக்கும் அவனது திருமேனி. அது நமக்கு அகப்படாது.
பாற்கடலில் வாசுதேவன்,சங்கர்ஷணன்,ப்ரத்யும்நன்,அநிருத்தன்
என்கிற திருமேனிகளோடு நிற்கிறான். அவைகளுக்கு வியூஹம் எனப் பெயர். அவைகளையும் நாம் அறிவதற்கு அரிது.
ஸ்ரீராம, கிருஷ்ண அவதாரங்களுக்கு விபவம் எனப் பெயர்.
அவைகள் எல்லாம் எடுத்து முடிந்து விட்டபடியால் நாம் காண இயலவில்லை.
நமக்குள்ளே அந்தர்யாமி என்பது கட்டைவிரல் அளவில் இருக்கும் ரூபம்.
அந்த ரூபத்தையும் யோக சாதனையாலன்றி பார்க்க இயலாது. சாமான்ய மனிதர்களான நம்மால் அது இயலாது.
ஆகவே அவனுடைய ஐந்தாவது திருமேனியான அர்ச்சாவதாரம் (ஆலயங்களில் அவன் திருவுருவச் சிலைகள்) தான் நமக்குப் பார்த்து அனுபவிக்க முடியும்.
பின்னானார் வணங்கும் ஜோதி என்று அனுபவிக்கும்படி எல்லா திவ்ய தேசங்களிலும் அவன் சேவை சாதிக்கிறான். ஆண்டாள் திருப்பாவையில் சொல்லியபடி கூடி இருந்து குளிரக் குளிர பெருமானைக் காணவேண்டும்.
என்னரங்கத்தின் இன்னமுதர் குழலழகர் விழியழகர் கண்ணழகர் என்றெல்லாம் பெருமாளின் திருவழகில் மயங்கி நிற்கிறாள் மங்கை ஆண்டாள். அர்ச்சாவதார மூர்த்தியான அரங்கனின் மேனி அழகைக் கண்ட தொண்டரடிப்பொடிஆழ்வார் இச்சுவை தவிர இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்கிறார்.
பாடலைப் படித்துக் கேட்டு இன்புறுவோமா?
மந்திர ஒலியில் இங்கு கேளுங்கள்! அருணா சாயிராம்
உன்னி கிருஷ்ணன் குரலில் இங்கு கேளுங்கள்!
பச்சை மா மலை போல் மேனி பவள வாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகர் உளானே.
திருமதி ஆர்.வேதவல்லியின் குரலில் வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவர் ஏலும், பாதியும் உறங்கிப் போகும் நின்று அதில் பதினை ஆண்டு, பேதை பாலகன் அதாகும் பிணி பசி மூப்புத் துன்பம், ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மா நகர் உளானே
திருமால் பெருமை படத்தில் TMS பாடுவது இங்கே! ஊர் இலேன் காணி இல்லை உறவு மற்று ஒருவர் இல்லை, பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி, காரொளி வண்ணனே என் கண்ணனே கதறு கின்றேன், ஆருளர் களைக் கணம்மா. அரங்க மா நகர் உளானே பதிவுலக நண்பர்கள் எல்லோருக்கும் இதயங் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
- திருவரங்கப்ரியா
ஹீரோவே இல்லாம ஒரு படம் தமிழ் சினிமாவில் வந்திருக்கா? ஹீரோயின் இல்லாமத் தான் படம் வரக் கூடாது! ஹீரோ இருந்தா என்ன, இல்லாட்டி என்ன-ன்னு யாருப்பா அங்கன சவுண்ட் வுடறது? :-) எதுவா இருந்தாலும் நம்ம கானா பிரபா அண்ணாச்சி கிட்ட போயி கேளுங்க! ஏன்னா அவரு தான் இந்த லேடீஸ் ஒன்லி பாட்டைப் போடணும் ரொம்ப அக்கறை எடுத்துக்கிட்டாரு! :-)
Y2K போது, நம்ம சோதிகா அக்கா நடிச்சி ஒரு படம் வந்திச்சி! சிநேகிதியே-ன்னு படம் பேரு! அவங்க கூட இஷிதா, ஷப்ரானி முகர்ஜி, தபு-ன்னு ஒரே பொண்ணுங்க கூட்டம் தான் படம் ஃபுல்லா! இயக்குனர்: பிரியதர்ஷன் (அதாங்க காலாபாணி, கோபுர வாசலிலே எல்லாம் பண்ணாரே! அவரே தான்! மலையாள எழுத்தாளர்-இயக்குனர்)
படத்துல சோதிகா அக்கா, அவிங்க சிநேகிதி ஷப்ரானியைக் காப்பாத்த ஒரு கப்சா விடுவாங்க! ஒரு லண்டன் பையன் ஷப்ரானியைக் காதலிக்கிறதா. ஆனா அது நெசமாலுமே நெசம் ஆகிடும்! வலைக்குள் சிக்கிய இதயம் கணக்கா, ஒரு பையன் மாட்டிக்குவான்!
ஓட்டலுக்கு பொண்ணு பாக்க வந்த பையன் கொலை செய்யப்படுவான்! பழி நம்ம சோதிகா மேல! தபு, ACP போலீஸ் ட்ரெஸ்ஸூல வந்து விஜாரணையெல்லாம் தூள் கெளப்புவாங்க! பொண்ணுங்க எஸ்கேப்புக்கு ஓட, போலீஸ் துரத்த, கடைசீல பாத்தாக்கா...ACP தபு தான் கொலைகாரக் கட்டழகி! :-)
இது இந்தில வேறு, Friendshipன்னு டப் பண்ணி வந்துச்சு! ஆனா ரெண்டுத்தலேயும் பெருசா ஓடினா மாதிரி தெரியலை! ஹீரோ, பஞ்ச டயலாக் எல்லாம் இல்லாம, வெறும் நாயகிகளை மட்டுமே வெச்சு ஓட்ட முடியுமா-ன்னு கேக்குறீங்களா? அது என்னமோ சரி தான்!:-) படத்துலயும் ஏகப்பட்ட ஓட்டைகள்! பிரியதர்ஷன் படமா இது என்று கேட்கும்படி ஆனது!
படத்துல ஒரு சூப்பர் கண்ணன்-ராதை பாட்டு! என்னமா ஒரு பீட்டு! ஒரு பஞ்சாபி பாங்க்ரா போல் துவங்கும்! ஆனா நம்ம மரபிசை போலத் தான் பாடல் வரிகள் ஒலிக்கும்! Song to Dance என்பார்களே! அதான் இது! சும்மா, அத்தனை இசைக்கருவியும் இந்தப் பாட்டுல கொட்டி இருக்காங்க! புல்லாங்குழல், ட்ரம்ஸ், தபேலா, Bansuri Flute, ஜலதரங்கம் இன்னும் என்னென்னமோ...தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா!
ஒரு Opera இசை மாதிரி, நடுவுல ஒரு பிட்டு வந்து வந்து போகும்! Bass Guitar, Violin, Piano, Long Flute, Xylophone...ன்னு மேற்கத்தி வாத்தியங்களும் பிச்சி உதறும்! நீங்களே கேளுங்க! உங்களுக்கு மிகவும் பிடித்துப் போகும்!
நேயர் விருப்பம்: கானா பிரபா அண்ணாச்சி, முனைவர் நா.கண்ணன் ஐயா
பாடலை இங்கே கேட்கவும்! இல்லையென்றால் கீழே தரவிறக்கம் செய்தும் கொள்ளலாம்!
ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ? கண் ரெண்டும் தந்தியடிக்க, கண்ணா வா கண்டுபிடிக்க! கண் ரெண்டும் தந்தியடிக்க, கண்ணா வா கண்டுபிடிக்க!
கொள்ளை நிலவடிக்கும் - வெள்ளை ராத்திரியில் - கோதை ராதை நடந்தாள் மூங்கில் காட்டிலொரு - கானம் கசிந்தவுடன் - மூச்சு வாங்கி உறைந்தாள் பாடல் வந்தவழி - ஆடை பறந்ததையும் - பாவை மறந்து தொலைத்தாள் நெஞ்சை மூடிக்கொள்ள - ஆடை தேவையென்று - நிலவின் ஒளியை எடுத்தாள்.
நெஞ்சின் ஓசை ஒடுங்கி விட்டாள், நிழலைக் கண்டு நடுங்கி விட்டாள் கண்ணன் தேடி வந்த மகள், தன்னைத் தொலைத்து மயங்கி விட்டாள் தான் இருக்கின்ற இடத்தினில், நிழலையும் தொடவில்லை - எங்கே? எங்கே?? சொல்! சொல்!! கண் ரெண்டும் தந்தியடிக்க, கண்ணா வா கண்டுபிடிக்க கண் ரெண்டும் தந்தியடிக்க, கண்ணா வா கண்டுபிடிக்க (ராதை மனதில் ராதை மனதில்)
கண்ணன் ஊதும் குழல் - காற்றில் தூண்டி விட்டுக் - காந்தம் போல இழுக்கும் மங்கை வந்தவுடன் - மறைந்து கொள்ளுவது - மாயக் கண்ணன் வழக்கம் காடு இருண்டு விட - கண்கள் சிவந்து விட - காதல் ராதை அலைந்தாள் அவனைத் தேடி அவள் - தன்னைத் தொலைத்துவிட்டு - ஆசை நோயில் விழுந்தாள்
உதடு துடிக்கும் பேச்சு இல்லை, உயிரும் இருக்கும் மூச்சு இல்லை வந்த பாதை நினைவு இல்லை, போகும் பாதை புரியவில்லை உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால், பேதை ராதை ஜீவன் கொள்வாள் - கண்ணா எங்கே? வா வா! கண்ணீரில் உயிர் துடிக்க, கண்ணா வா உயிர் கொடுக்க! கண்ணீரில் உயிர் துடிக்க, கண்ணா வா உயிர் கொடுக்க! (ராதை மனதில் ராதை மனதில்)
கன்னம் தீண்டியதும் - கண்ணன் என்று அந்தக் - கன்னி கண்ணை விழித்தாள் கன்னம் தீண்டியதும் - கண்ணன் இல்லை வெறும் - காற்று என்று திகைத்தாள் கண்கள் மூடிக் கொண்டு - கண்ணன் பேரைச் சொல்லிக் - கைகள் நீட்டி அழைத்தாள் காட்டில் தொலைத்துவிட்ட - கண்ணின் நீர்த்துளியை - எங்கு கண்டு பிடிப்பாள்?
விழியின் சிறகை வாங்கிக் கொண்டு, கிழக்கை நோக்கிச் சிறகடித்தாள் குயிலின் குரலை வாங்கிக் கொண்டு, கூவிக் கூவி அவள் அழைத்தாள் அவள் குறை உயிர் கரையும் முன், உடல் மண்ணில் சரியும் முன், கண்ணா கண்ணா நீ வா! கண்ணீரில் உயிர் துடிக்க, கண்ணா வா உயிர் கொடுக்க!
(பாடலின் இறுதியில் Opera போல் இசையைத் தவறாது கேளுங்க! நம்ம வித்யாசாகரா இப்படி? கலக்கீட்டீங்க வித்யா!)
நண்பர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! Wish you a very Happy New Year, 2008! புது மணத் தம்பதிகளுக்கு கண்ணன்-ராதை சார்பாக, Happy Thala New Year :-)
மாவிலை தோரணம் வாயில்கள் தாண்டிட கோயில் ஒளிர்கின்றது மத்தளம் மேளங்கள் கொட்டி முழக்கிட மண்டபம் மலர்கின்றது மணி மண்டபம் மலர்கின்றது.. பாரெங்கும் சுற்றினும் அவனருள் கிட்டிடும் ஓர் இடம் ஸ்ரீரங்கமே அந்தரங்கம் யாவும் அந்த ரங்கன் அறிவான் அவன் தான் வைகுந்தமே போனது போகட்டும் இனி யாகிலும் நெஞ்சம் புனிதம் ஆகட்டுமே.. புன்னகை புரிந்திடும் மன்னவன் பொற்பாதம் கண்கள் காணட்டுமே..
கண்ணனைக் குழந்தையாகஅனுபவித்தவர்களின் பட்டியலில் ஆழ்வார்கள்,பாரதி, ஊத்துக்காடுவேங்கட கவி போன்றோர்கள் சிறப்பானவர்கள். குறிப்பாக ஊத்துக்காடு அவர்களின் அணுகுமுறை கொஞ்சம் வித்தியாசமானது. அவர் வாழ்ந்த காலம் 1700 -1765, இதே காலத்தில்தான் சங்கீத மும்மூர்த்திகளும் வாழ்ந்தனர்.
ஆனால் இவருடைய பாடல்கள் வித்தியாசமாக உள்ளது. வடமொழியிலும்,தமிழிலும் அடுக்கு மொழிச் சொற்களை கையாள்வதில் திறமை மிக்கவர். அதுவும் குறிப்பாக தஞ்சை மண்ணில் அக்காலத்தில் வழங்கி வந்த பேச்சுத்தமிழில் எல்லோருக்கும் எளிதாக புரியும் வண்ணம் அமைந்திருந்தது இவரது பாடல்கள்.
கண்ணனின் விளையாட்டை இவர் வர்ணிக்கும் விதமே தனிச்சுவை கொண்டது.வெண்ணை திருடியது,அதை யசோதையிடம் கோள் சொன்ன பெண்களின் கதி இவர் பாட்டில் நகைச்சுவை மிளிரும் வண்ணத்தில் இருக்கும். விஷமக்கார கண்ணன் என்ற பாட்டில் நமக்கு சங்கீதத்தையும் கற்றுத்தருகிறார். முகாரி ராகம் எப்போது பாடுவார்கள் அது வெளிப்படுத்தும் ரசம் என்ன என்பதை இப்படி நகைச்சுவையாகத் தருகிறார்
பக்கத்து வீட்டு பெண்ணை அழைப்பான் முகாரி ராகம் பாடச்சொல்லி வம்புகிழுப்பான் எனக்கு அது தெரியாது என்றால் நெக்குருகக் கிள்ளி விட்டு விக்கி விக்கி அழும்போது இதுதான்டி முகாரி ராகம் என்பான் சரி நீங்களே முழுப்பாட்டையும் கேட்டுப் பார்த்துதான் சொல்லுங்களேன்
ராகம் : செஞ்சுருட்டி
தாளம்: ஏகம்
பல்லவி
பொல்லாத விஷமக்காரக் கண்ணன்
வேடிக்கையாய் பாட்டுப் பாடி
வித விதமாய் ஆட்டம் ஆடி
நாழிக் கொரு லீலை செய்யும்
நந்த கோபால கிருஷ்னன்.
(விஷமக்காரக் கண்ணன்)
அனுபல்லவி
வெண்ணை பானை மூடக் கூடாது - இவன் வந்து
விழுங்கினாலும் கேட்கக் கூடாது
இவன் அம்மா கிட்டே சொல்லக் கூடாது -சொல்லிவிட்டால்
அட்டகாசம் தாங்க ஒண்ணாது
இவனை சும்மாவது பேச்சுக்காக திருடன் என்று சொல்லிவிட்டால்
நம்ம கோவி.கண்ணன் அண்ணாச்சி, தலை குனிந்த வண்ணம், வெட்கத்துடன், ஒரு கண்ணன் பாட்டை மனமுருகப் பாடினார். அதுவும் வீரமணி ஐயாவின் ஊக்கத்தால்! பாரதப் போர் முடிச்ச கண்ணன், பெரிய மீசையுடன் காட்சி தரும் திருவல்லிக்கேணி கோயில் பற்றி ஒரு அற்புதமான பாட்டு!
அடங் கொக்கமக்கா! கோவி எப்போ ரகசியமா ட்ரிப்ளிக்கேன் கோயிலுக்குப் போனாரு? திருவல்லிக்கேணி தான் ட்ரிப்ளிக்கேன்-ன்னு வழக்கு மாறிப் போச்சு, சரி! எங்க கோவி எப்போய்யா வழக்கு மாறினாரு? சொல்லவே இல்ல! சிங்கையின் சிங்கங்களுக்குக் கூடத் தெரியாதேப்பா! டிபிசிடி...ஒங்களுக்கு ஏதாச்சும் வெவரம் தெரியுமுங்களா? SK ஐயா, நீங்கனாச்சும் கோவியை ட்ரிப்ளிக்கேன் மார்க்கெட்ல பாத்தீங்களா?
பாட்டு பாடி முடிஞ்சதும், கண்ணன் அருளால், கோவி கண்ணனுக்குக் கை மேல பரிசு! என்னடா இது கலியுக கப்ஸா-ன்னு நினைக்கறீங்களா? :-) மேல படியுங்க! ஓவர் டு கோவி அண்ணா!
கண்ணன் பாட்டு இடுகைகளைத் தொடர்ந்து படித்து ரசித்து வரும் வாசகன் என்ற முறையில் எனக்கும் அவர்களைப் பாராட்டும் வண்ணம் ஒரு இடுகை எழுத ஆவல் தான். வெறும் இடுகையாக எழுதாமல் நான் அறிந்த கண்ணன் பாடல்கள் பலவற்றில் ஒன்றை இந்த இடுகையில் சிறப்பிக்கலாம் என்று கருதி இதனை எழுதுகிறேன். கண்ணன் பாடல்கள் பதிவு குழுவினருக்கு எனது பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.
சிறுநகரங்களில் வளர்பவர்களுக்கே கிடைக்கும் சில அனுபவம் எனக்கும் கிடைத்தது. சிறுநகரத்தில் சிறுவயதில் வாழ்ந்து வளர்ந்ததால் மார்கழிக் குளிரினையும் சோம்பலையும் விரட்டும் அதிகாலை வேளை, கோவில்களில் போடப்படும் பக்திப் பாடல்களை கேட்டும், பரங்கிப் பூவில் அலங்கரிக்கப்பட்ட வண்ணக் கோலங்களைப் பார்த்தும் வளர்ந்தவன் என்ற முறையில் மார்கழி மாதத்தில் எனக்கு நெருக்கம் அதிகம்; கூடவே எனது பிறந்த நாள் மார்கழியில் வந்து செல்கிறது என்பதால் தமிழ் மாதத்தில் மார்கழி மீது தனிப்பட்ட ஈர்ப்பு :) இனி இடுகைக்கு.
கருப்புச் சட்டைக்காரர் K.வீரமணி என்றாலே இருவர் தான் நினைவுக்கு வருவர் :-) அதில் ஒருவர் தமிழ்ப் பற்றாளர். இன்னொருவர் இறைப் பற்றாளர். இரண்டாமவர் பாடிய ஐயப்பன் பாடல்கள் நினைவுக்கு வராமல் இருக்குமா?
ஐயப்பன் பாடல்களால் அவர் புகழ்பெற்றாரா? அவரால் ஐயப்பன் பாடல்கள் புகழ்பெற்றதா? என்றால் நான் சொல்வது இரண்டாவது தான். கார்த்திகை - மார்கழி மாதங்களில் அந்த குரல் கேட்காத தமிழகக் கோவில்களே இல்லை எனலாம். ஐயப்பன் பாடல் மட்டுமின்றி அவர் மனைவி ராதாவுடன் இணைந்து பாடிய அம்மன் பாடல்கள், கண்ணன் பாடல்கள் மிகவும் பரவசமூட்டுபவை.
எங்கள் வீடு பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ளதால், மார்கழி மாதம் முழுவதும் காலை 4 மணி முதல் காலை 8 மணி வரையிலும் அதே போன்று மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை பக்திப் பாடல்கள் நாள் தோறும்! கேட்டு மனப்பாடமே ஆகி இருக்கிறது; திருவிளையாடல், சரஸ்வதி சபதம் ஆகிய படங்களின் வசனங்கள் மனப்பாடம் ஆனது. கார்த்திகை ஒண்ணாம் தேதியில் தொடங்கி காணும் பொங்கல் வரை, நாள் தோறும் இருமுறை ஒவ்வொரு பாடல்களையும் கேட்டு வ(ளர்)ந்திருக்கிறேன்.
அப்படிப்பட்ட பாடலில் ஒன்றாக K.வீரமணி - அவரது துணைவியார் பாடிய கண்ணன் பாடல்களில் ஒன்றான 'பாரெல்லாம் புகழ்ந்திடும் சாரதி' என்ற பாடல் மிகவும் பிடித்த பாடல்.
ஏழாம் வகுப்பு படிக்கும் போது பாட்டுப் போட்டி நடக்கிறது என்று பெற்றோர்களிடம் சொல்ல, இந்த பாடலைப் பள்ளியில் பாடச் சொல்லி பயிற்சி கொடுத்தார் அப்பா. வீட்டில் நன்றாகப் பாடினாலும் பள்ளியில் பலர் முன்னிலையில் பாடுவதற்கு கூச்சமாகத் தான் இருந்தது. இசைக்கருவிகள் எதுவும் இல்லாமல் வாய்பாட்டாகப் பாடவே ஐந்து நிமிடங்கள் பிடிக்கும் நீளமான பாடல்.
எவர் முகத்தையும் பார்க்காது தரையைப் பார்த்து வெட்கத்துடன் நடுக்கத்துடன் பாடியது நன்றாக நினைவிருக்கிறது. பாடி முடித்ததும் பலத்த கைத்தட்டுகள் கிடைத்தது; அதன் பிறகு ஒவ்வொரு வகுப்பிற்கும் அழைத்துச் சென்று பாடச் சொன்னார்கள். நன்றாகப் பாடினேன். ஆண்டுவிழாவில் முதல் பரிசு என்று அறிவித்து. நூல் ஒன்றைப் பரிசாக கொடுத்தார்கள்.
இந்த பாடலின் சிறப்பு பன்னிரெண்டு மாதமும் கண்ணுக்கான உற்சவங்களைக் குறிப்பிட்டு பாடுவது...சித்திரை முதல் பங்குனி வரை நடக்கும் சிறப்பான உற்சவங்களைத் தொட்டு எழுதப்பட்ட பாடல். வீரமணி அவர்கள் கண்ணனைக் குறித்து பாட, ராதா அவர்கள் கண்ணனின் தேவியரின் உற்சவங்களைக் குறிப்பிட்டு பாடுவார். பன்னிரெண்டு மாதங்களில் மார்கழி குறித்துப் பாடும் போது பூபாள ராகத்தில் பாடி அசத்தி இருப்பார்கள்.
பதினேழு வருடங்களுக்கு முன்பு மறைந்து போன தந்தையை என் அருகில் கொண்டு வரும் பக்திப் பாடல்கள் பலவற்றில் இதுவும் ஒன்று. கொஞ்சம் பெரிய பாட்டு தான்! கேட்டுப்பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும். இதோ சுட்டி
பாரெல்லாம் புகழ்ந்திடும் ஓர் சாரதி - அவர் பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதி - அவர் பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதி எங்கள் சாரதி பார்த்த சாரதி எங்கள் சாரதி பார்த்த சாரதி பார்த்த சாரதி பார்த்த சாரதி
சித்திரை மாதத்தில் தேவகி மைந்தனுக்கு பத்து நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா கருட வாகனத்தில் காட்சி தரும் கண்ணன் அருள் தந்து நமைக் காப்பான் அனுமந்த வாகனத்தில்...
வைகாசி மாதம் தன்னில் வரதராஜ பெருமாளும் மனம் மகிழ்ந்து பவனி வரும் அலங்காரத் திருவிழா
(ராதா) ஆனி மாதம் லட்சுமி நரசிம்மன் அழகோடு ஆனந்தக் காட்சி தரும் அரியதோர் திருவிழா ஆனந்த முகில் வண்ணன் மாதேவியருடனே ஆனந்த ஊஞ்சல் ஆடும் ஆனித் திருவிழா
சூடிக் கொடுத்த சுடர் கொடிக்கோர் திருவிழா ஆடி மாதம் அன்னை ஆண்டாளின் திருவிழா பாடினள் பாசுரங்கள் பரந்தாமனைப் புகழ்ந்து நாடினள் நாரணனை நாயகனாய் கொண்ட ஆடிப்பூரத் திருவிழா ஆண்டாளின் திருவிழா
(வீரமணி) ஆயர்குலத்துதித்த அரசன் நம் கண்ணனுக்கு ஆவணி பிறந்ததும் அவன் லீலை புரிவதற்கு உரலிலே கட்டுண்ட உத்தமன் மாயனுக்கு உறியடித் திருவிழா உயர்ந்த ஓர் திருவிழா
(ராதா) வன்னிமரப் பார்வேட்டை கண்டருள வலம் வரவே மன்னவனும் எழுந்தருள்வான் புரட்டாசி மாதம் தன்னில் அவனியெல்லாம் காக்கும் அன்னை வேதவல்லிக்கு அலங்காரம் ஒன்பது நாள் நவராத்திரி நன்னாள் புரட்டாசித் திருநாள்... புரட்டாசித் திருநாள்
(வீரமணி) கைத்தல சேவையாம் ஐப்பசத் திங்களில் இத்தரை மீதில் எங்கும் காணாத சேர்வையாம் வித்தகன் வேதப்பொருள் வேணுவி லோலனை பக்தி கொண்டே பணியும் தீபாவளித் திருநாள்
கார்த்திகை மாதம் தன்னில் கார்முகில் வண்ணனும் ஊர்வலம் வந்து வன போஜனமே கண்டருளி சீர்மிகும் வனம் தன்னை சிறப்புடன் வலம் வந்த சாரதியாம் கண்ணனுக்குத் தைலக்காப்பு திருவிழா
(பூபாளம்...) மார்கழி மாதத்தில் துவாரகை மன்னனாம் பார்த்தனின் சாரதிக்கு பகல் பத்து திருநாளாம் காருண்ய சீலனின் இராப் பத்து உற்சவத்தில் நாரணன் ஏகாந்த சேவையைக் காணலாம்
(ராதா) வங்கக்கடல் கடைந்த மாயனை மணம் முடித்த மங்கை திருப்பாவை ஆண்டாளும் மனம் மகிழ மங்கலத் திருவிழா, மஞ்சள் நீராட்டு விழா எங்கும் திருப்பாவை இசைத்திடும் தனுர் விழா
(வீரமணி) காளிங்க நர்த்தனனாய் திருக்கோலம் கொண்ட கண்ணன் தாள் பணிந்தோரை என்றும் தயவுடன் காப்பவன் தர்ம மிகும் சென்னையில் ஈக்காடு கிராமம் சென்று சர்வ நிலம் பார்க்கும் தர்மத்தின் தலைவனுக்கு தைமாதத் திருவிழா தைப்பூசத் திருவிழா
(ராதா) கேசவனாம் ஸ்ரீமன்னாதன் பிருகு மகள் வேதவல்லியை மாசிமாதம் துவாதிசியில் மணம் புரிந்த திருவிழா வாசுதேவன் மகிழ்ந்திடவே மாசியில் வரும் விழா - நல் ஆசி தந்து மாதவனும் அருள் புரியும் திருவிழா அப்பனுக்குப் பாடம் சொன்ன ஆறுமுகன் மாமனுக்கு தெப்போற்சவத்திருவிழா திருவிழா
(இருகுரல்) நம் இராமருக்கு வரதராஜரருக்கு பார்த்த சாரதிக்கு நரசிம்மனுக்கு ஸ்ரீமன்னாதருக்கு தெப்போற்சவத் திருவிழா...திருவிழா
(வீரமணி) மங்கல வாழ்வழிக்கும் மன்னன் ஸ்ரீராமனுக்கு பங்குனி மாதத்தில் பாரெங்கும் திருவிழா (இருகுரல்) திங்கள் முகத்தானுக்கு திருவல்லிக் கேணியிலேயே சிங்காரத் திருவிழா ராமநவமி திருவிழா
பாரெல்லாம் புகழ்ந்திடும் ஓர் சாரதி - அவர் பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதி - அவர் பார்த்தனுக்கு தேரோட்டும் சாரதி எங்கள் சாரதி பார்த்த சாரதி எங்கள் சாரதி பார்த்த சாரதி பார்த்த சாரதி பார்த்த சாரதி
குரல்: வீரமணி, ராதா வரிகள்: K சோமு இசை: சோமு, கஜா இராப் பத்து திருநாளில், இனிய பாட்டை தட்டச்சும் செய்து, பதிவும் அளித்த கோவி அண்ணாவுக்கு, கண்ணன் பாட்டு அன்பர்களின் சார்பாக எங்கள் நன்றி! கண்ணன் பாட்டில் இது 75 ஆம் பதிவு!
பொழுது மிகவாச்சுதே சகியே என்னை விட்டுப் போன கண்ணன் வரக் காணேனே (பொழுது)
குழலோசை கேட்டு கூடிடும் மங்கையர் விழியால் வலை வீசி அழைத்துச் சென்றனரோ (பொழுது)
புழுவென நான் இங்கு புலம்பித் துடிக்கையிலே பூவையருடன் அங்கு பேசிச் சிரிக்கப் போமோ? பைங்கிளி உனைக்கணம் பிரியேன் என்ற பேசும் மறந்தானோ பேதையைத் துறந்தானோ? (பொழுது)
மார்கழியில் முடிந்தளவுக்குக் கண்ணன் பாடல்களைப் பதிவு செய்ய ரவி அழைப்பு விடுத்தார். எனக்குக் கண்ணன் பாடல்கள் எவ்வளவு பிடிக்குமோ, அந்தளவுக்கு வீரமணிஐயரின் பாட்டுக்களும் பிடிக்கும். இந்த இரண்டும் சேர்ந்திருந்தால் அது எவ்வளவு நன்றாகவிருக்கும். என்பங்குக்கு அப்படி ஒரு பாடலைப் பதிவு செய்தால் என்ன என்று எண்ணிய போது, யாழ்ப்பாணம் பொன்னாலை வரதராஜப்பெருமானை நினைந்து, வீரமணிஐயர் பாடிய இப்பாடல் நினைவுக்கு வந்தது. ஆனால் பாடல் ஒலிவடிவத்தில் கிடைக்கவில்லை. உங்களைச் சும்மா விடலாமோ? :)
கல்யாண வசந்தராகத்தில், கல்யாணக் கோல வர்ணனையாக அமைந்த இப் பாடலை, முறையாக இசைகற்காத நான், என்னால் முடிந்தவரையில் பாடிப் பதிவு செய்துள்ளேன்.
சென்ற ஆண்டு மார்கழி மாதம், கண்ணன் பாட்டு வலைப்பூவில், தினம் ஒரு கண்ணன் பாட்டாய் போட்டு, பாவம் தமிழ்மணத்தைக் கலங்கடித்துக் கொண்டு இருந்தோம்! :-) இதைப் பார்த்து விட்டு, சக பதிவர்கள் மற்றும் பெனாத்தலார் எல்லாம், "வா முனிம்மா வா" எல்லாம் நேயர் விருப்பமாய் போட மாட்டீங்களா-ன்னு கலாய்ச்சிக்கிட்டு இருந்தாங்க முருகபிரான் ராம் சங்கர் (MRS) என்கிற ஒரு பதிவரை! :-)
சரி, இந்த வருஷம், அதே கொலை வெறியோட எறங்கலாமா-ன்னு ஒரு எண்ணம்! தலைவர் குமரன், தளபதி ஜிரா எல்லாரும் என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்!!
சிங்கம் சிங்களா இல்ல, மேரீட் ஆகவும் வரும்-னு வந்த வெட்டிப்பயலாரைப் பாட்டு போடச் சொல்லலாம். ஆனா அவுரு தில்லாலங்கடி தாங்கு, கண்ணா திருப்பிப் போட்டு வாங்கு-ன்னு பாட்டைப் போடுவாரு! அந்தப் பாட்டுக்கு நான், நரிமேல்குழகர் உரையை வாங்கிப் படிச்சாலும், என் போன்ற ஞான சூன்யங்களுக்கு ஒன்னும் புரியாது! சரி அவரையும் இஸ்துக்கலாம்! :-)
கண்ணன் பாட்டில் உள்ள அன்பர்கள் ஷைலஜா, டிடி அக்கா, திராச, மலைநாடான் ஐயா, மடல்காரன்-ன்னு எல்லோரும் ஒரு ரவுண்டு கட்டி வாசிக்கத் தொடங்கியாச்சுன்னா, பிச்சிக்கிட்டு போயிடாதா! சரி, தினம் ஒன்னா இல்லீன்னாக் கூட, அடிக்கடி வந்து மார்கழி பூச்சாண்டி காட்டி பயமுறுத்தலாம்! என்ன சொல்றீங்க மக்களே? அக்கவுண்ட்டை இதோ நானே ஓபன் பண்ணறேன்! ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே!! நம்ம டீச்சருக்குப் புடிச்ச பாட்டாம்-ல?
பாடலை இங்கு கேட்கவும்! இதையே கொஞ்சம் மறுகலவை செய்து (Remix) பாடியிருக்காங்க! அதுவும் நல்லாத் தான் இருக்கு! இதோ..
குரல்: எம்.கே.டி (தியாகராஜ பாகவதர்) இசை: ஜி.ராமநாதன் வரிகள்: பாபநாசம் சிவன் படம்: ஹரிதாஸ் (1944) - 768 நாட்கள் ஓடியது. ராகம்: நவ்ரோஜ்
பாட்டு-ல தமிழ்ச் சொற்கள் இல்லீன்னாக் கூட, இந்தப் பாடல் ஒரு பெரிய ஹிட் என்பதால் இங்கிட்டு கொடுத்தோம்! இதை எழுதிய பாபநாசம் சிவன் அவர்கள் தமிழ் மேதை; தமிழில் பல இசைப்பாடல்கள் செய்து கொடுத்து, தமிழ்த் தியாகராஜர் என்ற சிறப்பு பெற்ற தமிழ்க் கவி! அவரு சினிமாவில் பாப்புலர் ட்யூனுக்கும் என்ன அருமையா பாடல் கொடுத்திருக்கார் பாருங்க! அதுவும் நவ்ரோஜ் ராகத்துல!
இதைக் குத்துப்பாட்டு-ன்னு எப்படி மாப்ள சொன்னே-ன்னு என் கிட்ட சண்டைக்கு வராதீங்க மக்கா!
இந்தப் பாட்டு வந்த காலத்தில், குத்துப்பாட்டுக்கு இலக்கணம் கூட இருந்திருக்காது! ஆனா குத்துக்கு உரிய அதே துள்ளல், ஸ்பீடு, ஆட்டம்-னு எல்லா இலக்கணமும் இந்தப் பாட்டுக்கும் இருக்கு! இதில் மயங்காத மனமும் உண்டோ? Dandiya, Garba, கோலாட்டத்துக்கு மட்டும் இந்தப் பாட்டை வச்சாக்கா எப்படி இருக்கும்! ...ஆகா!
இன்று வைகுண்ட ஏகாதசி (Dec 20, 2007)! கண்ணன் பாட்டில், இந்த இனிமையான பாட்டை, எஸ்.பி.பி - ஷோபனாவின் தேன்குரலில் கேட்போம், வாரீங்களா?
இந்தப் படத்தைப் பார்த்த பின்னர், மனம் ரொம்ப கனத்துப் போனதால், மீண்டும் பார்க்கவில்லை! ஆனால் பாட்டை மட்டும், பல முறை, மீண்டும் மீண்டும் கேட்டதுண்டு!
பாடகி ஷோபனாவை, மகாநதி ஷோபானாவாக ஆக்கிய பாட்டு!
அருமையான வாலி வரிகள்.
சொந்த ஊர்ஸ் பாசத்துல அப்படியே தமிழை ஊற்றித் தந்திருக்கிறார்! இசையில் இளையராஜாவும் பின்னி இருப்பார். அதுவும் வீணை பிட் ஒன்னு வரும்!
கோவில் தூண்களை அப்படியே பாஸ்ட் மோஷனில் காட்டுவார்கள்! அப்போது ஒலிக்கும் வீணையை, கொஞ்சம் நிறுத்தி, இன்னொரு முறை கேட்டுப் பாருங்கள்! அப்படியே அரங்கம் என்னும் சுரங்கத்தில் கிறங்கிப் போவீர்கள்!
பாடலை இங்கு கேளுங்கள்!
கீழே கோவில் காட்சிகளைத் தொகுத்து, இதே பாடலின் பின்னணியில், ஒரு வீடியோ உள்ளது! பாருங்கள்!
பதிவின் இறுதியில் திரைப்படப் பாடல் காட்சியின் youtube video...
ஸ்ரீரங்க ரங்கநாதனி்ன் பாதம் வந்தனம் செய்யடி ஸ்ரீதேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல்லடி இன்பம் பொங்கும் தென்கங்கை நீராடி, தென்றல் போல நீ ஆடடி மஞ்சள் குங்குமம் மங்கை நீ சூடி, தெய்வ பாசுரம் பாடடி(ஸ்ரீரங்க ரங்கநாதனி்ன் பாதம்)
கொள்ளிடம் நீர்மீது நர்த்தனம் ஆடும் மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும் செங்கனி மீதாடும் மாமரம் யாவும் ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும் அந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்தனர் ஆலயம் அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம் தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வப் பூந்தமிழ்ப் பாயிரம்(ஸ்ரீரங்க ரங்கநாதனி்ன் பாதம்)
கன்னடம் தாய்வீடு என்றிருந்தாலும் கன்னி உன் மறுவீடு தென்னகமாகும் கங்கையின் மேலான காவிரி தீர்த்தம் மங்கல நீராட முன்வினை தீர்க்கும்
நீர் வண்ணம் எங்கும் மேவிட நஞ்சை புஞ்சைகள் பாரடி ஊர் வண்ணம் என்ன கூறுவேன் தெய்வ லோகமே தானடி வேறெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி (ஸ்ரீரங்க ரங்கநாதனி்ன் பாதம்)
(இன்னிக்கி எங்க திரும்பினாலும் ஒரே ஹம்சத்வனி-யா இருக்கேப்பா! நம்ம கானா பிரபா அண்ணனும் இசையரசி வலைப்பூவில் அருமையான ஒரு ஹம்சத்வனியை சுசீலாம்மா குரலில் கொடுத்துள்ளார். தேர் கொண்டு சென்றவன், யாரென்று சொல்லடி தோழீன்னு, பாட்டு)
பூலோக வைகுந்தம் என்னும் திருவரங்கத்தில், இன்று வைகுந்த ஏகாதசிப் பெருவிழா!
மோட்ச ஏகாதசி என்றும் முக்கோடி ஏகாதசி என்றும் சொல்லுவார்கள்!
கீதை பிறந்ததும் இன்று தானே! மூலவர் அரங்கநாதனுக்கு முத்தங்கி சேவை! உற்சவர் நம்பெருமாளுக்கோ ரத்னாங்கி சேவை! நம்மைக் கடைத்தேற்றி, நம் விதி மாற்ற வந்தார் ஒருவர் - மாறன் சடகோபன்! அவர் தான் நம்முடைய ஆழ்வார், நம்மாழ்வார்! அவருக்காக இன்று மட்டும் திறக்கப்படும் வைகுந்த வாசல்.
குருநாதரின் தாளைப் பற்றிக் கொண்டு, தாயுடன் ஒட்டிக்கொண்ட குட்டியைப் போல், நாமும் நுழையலாம், வாங்க!
அவருடன் சேர்ந்து, நாம் எல்லாரும் நுழைவதே சொர்க்கவாசல் சேவை! உண்மையில், சொர்க்க வாசல் என்பதை விட வைகுந்த வாசல், பரமபத வாசல் என்று சொல்வது இன்னும் பொருத்தமானது!
விடியற் காலை, பிரம்ம முகூர்த்தம், வாசல் திறக்கப்படுகிறது!
ரங்கா, ரங்கா, ரங்கா என்று விண்ணதிரும் கோஷம்!
நல்லோர் நெஞ்சமெல்லாம் நிறைய, அரங்கன், சிம்ம கதி போட்டு வரும் அழகே அழகு! அரங்கன் நடை அழகு! ரத்னாங்கி உடை அழகு! சக்கரப் படை அழகு! சதிராடும் குடை அழகு!
கீழே கண்குளிரக் கண்டு களியுங்கள் அரங்கனை!
முன்னழகு, (பரமபத வாசல் சேவை)
பாயுநீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட மாயனார் திருநன் மார்பும், மரகத உருவும், தோளும் தூய தாமரைக் கண்களும், துவர்இதழ் பவள வாயும் ஆயசீர் முடியும், தேசும், அடியோர்க்கு அகல லாமே முன்னிலும் பின் அழகன், திருக்குடை அழகு!
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகருளானே! ரங்கா! ரங்கா!! ரங்கா!!!