சென்னையில் ஒரு பகுதி ட்ரிப்ளிக்கேன்!
ட்ரிப்ளிக்கேன், திருப்ளிக்கேன் என்று பலவாறாகச் சென்னைத் தமிழில் (ஆங்கிலேயர்) சிக்கிப் பாடுபடும் அழகுத் தமிழ்ச் சொல் திருவல்லிக்கேணி! அது என்னா அல்லிக் கேணி? அல்லி ராணி குளிச்ச குளமா? :-))
ஹிஹி...அப்படி இல்லீங்க!
அல்லி மலர்கள் பூத்துக் குலுங்கும் குளம் (கேணி) = அல்லிக் கேணி!
திருமகள் மணவாளன் வாழ்வதால், "திரு" சேர்ந்து = திருவல்லிக்கேணி ஆனது!
இப்போ கொஞ்சம் பராவாயில்லை!
குளத்தில் தண்ணீர் உள்ளது. சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு சுத்தமாகவும் உள்ளது!
அல்லி மலர்கள் தான் காணோம்! ஆறுதலான விடயம்: பேருந்துகள், தொடர்வண்டி நிலையம் எல்லாவற்றிலும் திருவல்லிக்கேணி என்றே எழுதியிருக்கிறார்கள்!
அந்நியன் படத்தில் அம்பி உலா வரும் இடம், அரெஸ்டாகும் குளம், எல்லாம் இது தான்! மாநிலக் கல்லூரி (Presidency College), கண்ணகி சிலை, மெரீனா கடற்கரை, பெரிய மசூதி, ஆர்க்காடு நவாப்பின் அமீர் மகால் என்று பல பிரபலங்கள் உள்ள திருவல்லிக்கேணி!
108 திவ்யதேசங்களில் ஒன்று! பாடியவர்கள்: பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கை மன்னன், இராமானுசர், மணவாள மாமுனிகள்! இவர்கள் எல்லாரும் கால்பட்ட இடமா சென்னை? ஆகா....!
பெருமாள் பெயர்
வேங்கடகிருஷ்ணன். பெரிய மீசை வைத்த நெடிய மேனி நெடியோன்!
உற்சவருக்குத் தான் பார்த்தசாரதி என்னும் திருநாமம்! பக்தன் பார்த்தனைக் காப்பாற்ற, பீஷ்மர் விட்ட அம்புகளை எல்லாம் தான் ஏற்றுக் கொண்டு, முகமே புண்ணாகிப் போன கண்ணனின் முகத்தை (ஊற்சவர்) இங்கு கண்கூடாகக் காணலாம்!
இன்னொரு முக்கியமான சேதி! கண்ணபிரான் ஒரே குடும்ப சகிதமாக அருள் பாலிப்பது இந்தியாவிலேயே இந்த ஒரு தலத்தில் தான்!நடுவில் வேங்கட கிருஷ்ணன்-உடன் ருக்மிணி பிராட்டி
அவர்களோடு கண்ணனின் தம்பி, சாத்தகி!
அவன் வலப்புறம் அண்ணன் பலராமன்
இடப்புறம் மைந்தன் அநிருத்தன், பேரன் பிரத்யும்னன்
- என்று குடும்ப சகிதமாக கண்ணன்! கருவறையில் சற்று எக்கிக் காண வேண்டும்!
இன்னும் எவ்வளவோ சொல்லலாம்...இப்போ பாட்டுக்கு வருவோம்!
அனானி optionஇல் பின்னூட்டம் இடும் அன்பு நண்பர்
கி.பாலு, வரியும் ஒலியும் மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார்!
சீர்காழி கோவிந்தராஜன் பல பெருமாள் பாட்டுக்களைச் சினிமாவில் பாடியிருந்தாலும்,
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிக்கு என்றே மிகவும் விரும்பிப் பாடிய கண்ணன் பாட்டு!
அதுவும் சும்மா பாட்டு மட்டும் இல்லை! - இது பேண்ட் (Band) வாத்தியப் பாட்டு!
கண்ணனின் உற்சவத்தில் சுவாமி வரும் நடையழகை "தொம் தொம்" என்று ஒலிக்கும் பாட்டு! நீங்களே கேட்டுச் சொல்லுங்க!
கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்
கேட்டவர்க்கு கேட்ட படி வாழ்வு தருகிறான்
வள்ளல் வருகிறான்
அன்பு வள்ளல் வருகிறான்..
நீலமேனி கோலம் காண கண்கள் மறுக்குமோ - அவன்
நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் நெஞ்சம் மறக்குமோ?
தீரன் வடிவும் மீசை அழகும் வெற்றி ரகசியம் - அவன்
பாரத போர் நடத்திவைத்த யுக்தி அதிசயம்
அது முக்தி ரகசியம்..
(கீதை சொன்ன கண்ணன்)
அல்லிக்கேணி குளத்தின் அருகில் கள்ளன் சிரிக்கிறான்.
அன்பு கொண்டு வருபவர்க்கு ஒன்று உரைகிறான்..
சொல்லும் மந்திரம் எட்டெழுத்தில் சொர்க்கம் தோன்றுதே
சொல்லச் சொல்ல ஐயன் தோற்றம் வானில் நீண்டதே
விஸ்வரூபம் தோன்றுதே..
(கீதை சொன்ன கண்ணன்)
பார்த்தனுக்குப் பாடம் சொன்ன கீர்த்தன் வருகிறான்
பசித்தவர்க்கு விருந்தளிக்க அமுது கொணர்கிறான்
காப்பதற்குக் கையில் ஏந்தும் சங்குச் சக்கரம் - அவன்
கழல்களுக்கு விளக்கம் தானே பிரம்ம சூத்திரம்
நான்கு வேத சாஸ்திரம்..
(கீதை சொன்ன கண்ணன்)