Friday, January 05, 2007

26. கண்ணனைக் காண்பதெப்போ?

பாடல்: கண்ணனைக் காண்பதெப்போ?
வரிகள்: சுப்ரமணிய பாரதி
ராகம்: ராகமாலிகா
தாளம்: ஆதி

பாம்பே சகோதரிகள் பாடியதைக் கேட்க இங்கே சொடுக்கவும்!
சுதா ரகுநாதன் குரலில் இங்கே!


கண்ணனைக் காண்ப தெப்போ - கார்மேக
வண்ணனுக் கென்மேல் என்ன வெறுப்போ
(கண்ணனை)

விண்ணவரும் பணியும் வேணுவி லோலன்
மண்ணளைந்த வாயன் மாயன் கோபாலன்
(கண்ணனை)

புண்ணியன் வந்துபோய் பொழுது மிகவாகுது
கண்ணிரெண்டும் பூத்துக் கவலை உண்டாகுது
எண்ணியெண்ணி என்மனம் ஏங்கியே நோகுது
பண்ணின பண்டமெல்லாம் பயனின்றிப் போகுது
(கண்ணனை)


ஜாதிமுல்லை ரோஜா சம்பங்கிப் பூவெடுத்து
ஆதியந்தரகித்தன் அணிய மாலை தொடுத்து
சேதியெல்லாம் வரைந்து சேடியிடம் கொடுத்து
சோதிக்க வேண்டாமென்று சொல்லித்தூது விடுத்து
(கண்ணனை)

தாமதம் இல்லாமல் தாதிஉடனே சென்றாள்
நீ மலைக்காமல் நிமிடம் வரேனென்றாள்
ஜாம நேரம்பின் சாவதானமாய் வந்தாள்
சியாமளனைக் காணச் சமயமிதில்லை என்றாள்
(கண்ணனை)

மார்கழி 22 - அங்கண் மாஞாலத்தரசர் - இருபத்தி இரண்டாம் பாமாலை

7 comments :

ஷைலஜா said...

ம்ஹூம்..'ஆசைமுகம்' இன்னமும் மனத்திலேயே இருப்பதால் 'கண்ணனைக்காண்பதெப்போ?'
அவ்வளவு சுவாரஸ்யமாயிருக்கவில்லை!
ஷைலஜா

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

நல்ல பாடல் பாலாஜி! பல இசை நிகழ்ச்சிகளில் கேட்டுள்ளேன்! பாடகர் பாடும் போது சில வரிகள் அவ்வளவாகப் பிடிபடாது! நீங்கள் இங்கு கொடுத்ததற்கு நன்றி!

//பண்ணின பண்டமெல்லாம் பயனின்றிப் போகுது//

ஓ, அந்தக் காலத்தில் காதலி பண்டமெல்லாம் சுட்டுத் தான் காதலனுக்கு வெயிட்டிங்க போல இருக்கே! அப்படி என்றால் நோ மெரினா பீச் சுண்டல் என்று சொல்லுங்க:-)))

//ஆதியந்தரகித்தன் அணிய மாலை தொடுத்து//
ஆதியந்தரகித்தன் = ?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பாலாஜி
இதை எழுதியது பாரதியாரா? சரி எதற்கும் பார்த்து விட்டு வருகிறேன்!

Anonymous said...

//மண்ணளைந்த வாயன் மாயன் கோபாலன்//

அது என்ன மண்ணளந்த வாயன்? மண்ணளந்தது கால்கள் அன்றோ!

ஓ! யசோதைக்கு வாயிலேயே உலகைக் காட்டியதால் அப்படியா? இல்லை 'வாயாலேயே' (பேச்சு சாமர்த்தியத்தால்) உலகை அளப்பவன் என்பதாலா?

இது பாரதி கவித்துவம் போல் தெரியவில்லையே!

வல்லிசிம்ஹன் said...

நல்ல பாடல் பாலாஜி.
ஆசை முகம் மறந்ததாலேயே ,கண்ணனைக் காண்பது எப்போ என்று கேட்கிறாளோ.
அவனோ இங்கு ஒரு நிமிடம் அங்கு ஒரு நிமிடம் என்று ஓடுபவன்.
ஒரு ஜீவனுக்கு அருள் புரிந்தால் போதுமா. அதான் தோழி ஏமாந்து திரும்புகிறாள்.
விளையாட்டுப் பெருமாள்.
நன்றி பாலாஜி.

குமரன் (Kumaran) said...

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளி கட்டில் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய் செய்த தாமரைப் பூ போலே
செங்கண் சிறிச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்து ஏலோர் எம்பாவாய்

அழகு நிறைந்த மிகப் பெரிய உலகத்தின் அரசர்கள் எல்லாம் தங்கள் தங்கள் பெருமைகள் எல்லாம் உன் பெருமையால் குறைக்கப்பட்டு உன்னுடைய பள்ளிக்கட்டிலின் அருகே தரையில் கூடியிருப்பதைப் போல் நாங்களும் நெருங்கி வந்து இருக்கிறோம். கிண்கிணியின் வாயைப் போலவும் சற்றே திறந்த செந்தாமரையைப் போலவும் விளங்கும் உன் சிவந்த தாமரைக் கண்கள் சிறிது சிறிதாகத் திறந்து எங்கள் மேல் நோக்காதோ? திங்களும் பகலவனும் (சந்திரனும் சூரியனும்) ஒரே நேரத்தில் உதித்ததைப் போல் உன் அழகிய இரு கண்களாலும் எங்களை நோக்கினாய் என்றால் உன்னை அடையத் தடையாக எங்கள் மேல் இருக்கும் பாவ புண்ணியங்கள் எல்லாம் நீங்கிப் போகும்.

ஷைலஜா said...

எனக்குத் தெரிந்து இது பாரதி பாடல் இல்லை என்றே தோன்றுகிறது. எதற்கும் நானும் பாரதிதொகுப்பில் ஒருமுறை பார்த்துச் சொல்கிறேன்
ஷைலஜா

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP