Monday, September 15, 2008

இசையின் ராணி பிறந்தநாள் - குலம் தரும் செல்வம் தந்திடும் பாடல்இசைக்கு ஒரு ராணி என்று நம் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களால் கெளரவிக்கப் பெற்றவர்... இசையின் ஒரே ராணிக்கு இன்று செப்டம்பர் 16 பிறந்த நாள்.

திருவேங்கடமுடையானை தினமும் பள்ளியெழுப்பும் பாக்கியம் பெற்றவர். தன் தெய்வீகக் குரலால் உலகத்துக்கே மகிழ்ச்சி உண்டாக்கியவர். ”குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா” என்று மனம் உருகி பாடும்போது உண்மையிலேயே அவருக்கு குறை ஒன்றும் இல்லை என்பதை அறியலாம். அதிலும் “ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா” எனும்போது அவருடைய முகபாவனையில் ஒரு கம்பீரம் தெரியும், “எனக்கு ஒரு குறையும் இல்லை கண்ணா, ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்று சொல்வது போல் இருக்கும்.

அவரின் இசையை மட்டுமே கேட்டு மயங்கியதை தவிர வேறொன்றும் அறியாதவன். அவர் பாடல் மூலமாக அம்மாவின் பாதங்கள்லில் நமஸ்கரிக்கிறேன். குறை ஒன்றும் இல்லா கோவிந்தன் அருள் கிடைக்க வாழ்த்துங்கள் அம்மா.


திருமங்கையாழ்வார் கண்டு கொண்ட நாராயணா எனும் நலம் தரும் சொல்லை, கண்டுணர்ந்து அவன் அடி பணிவோம்.


”குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்

படுதுயர் ஆயின எல்லாம்

நிலம்தரம் செயும் நீள்விசும்பு அருளும்

அருளொடு பெருநிலம் அளிக்கும்

வலம்தரும் மற்றும் தந்திடும் பெற்ற

தாயினும் ஆயின செய்யும்

நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்

நாராயணா என்னும் நாமம்”

அடியேன் அவசரமாக போட்ட பதிவு, பிழையிருந்தால் மன்னிக்கவும்.

Tuesday, September 02, 2008

கண்ணனைப் பணி மனமே!நமக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். எதிரிகளே இல்லை என்று எண்ணிக் கொள்ளத் தான் ஆசை; ஆனால் இல்லாமலா இருக்கிறார்கள். அவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் நண்பர்களும் பகைவர்களும் இல்லை என்று ஆன்றோர்களும் ஆசாரியனும் சொல்கிறார்கள். அவர்கள் இல்லை என்றால் வேறு யார் தான் நண்பனும் பகைவனும்?

'தாமே தமக்கு சுற்றமும்' என்கிறார் மாணிக்கவாசகர். 'ஆத்மைவ ஹி ஆத்மனோ பந்து: ஆத்மைவ ரிபு: ஆத்மன: - தனக்குத் தானே உறவு; தனக்குத் தானே பகை' என்கிறான் கீதாசாரியன்.

இப்படி தனக்குத் தானே உறவாகவும் பகையாகவும் எப்படி இருக்க முடியும்? அதற்கும் விளக்கம் சொல்லியிருக்கிறார்கள் பெரியவர்கள்.

திருப்பாவையில் ஆறாம் பாசுரம் முதல் பதினைந்தாம் பாசுரம் வரை தோழியரை எழுப்பும் பாசுரங்களாக அமைந்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் மனமென்னும் தோழிக்கு அறிவென்னும் தோழி கூறும் அறிவுரைகள் என்று பெரியவர்கள் பொருள் சொல்லுவார்கள். இது சரி இது தவறு என்பது அறிவிற்குத் தெரிகிறது; இது பிடிக்கும் இது பிடிக்காது என்பது தான் மனதிற்குத் தெரிகிறது. மனதிற்குப் பிடித்ததெல்லாம் நன்மை அளிப்பன இல்லை. அதனால் தான் அடிக்கடி அறிவு நடுவே வந்து எது நலமோ அதனைச் சொல்ல வேண்டியிருக்கிறது. நல்லதொரு தோழன் என்பான் நம் நலம் விரும்புபவன். அதனால் மனத்திற்கு நல்லதொரு தோழன் அறிவே.

அறிவு சொல்வதை மனம் கேட்டு நடக்கும் போது நமக்கு நாமே நண்பன். அப்படி சொல் பேச்சு கேட்காமல் மனம் போன படி நடந்து கொள்ளும் போது நமக்கு நாமே எதிரி. ஒரு தடவை சொன்னால் கேட்க மாட்டாயா? போகட்டும். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். அப்போதாவது கேட்கிறாயா பார்க்கிறேன் - என்று சொல்வது போல் நிறைய பாடல்கள் மனத்திற்குச் சொல்பவையாக அமைந்திருக்கின்றன.

நம்மாழ்வாரின் முதல் பாசுரமே 'துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே' என்று மனத்திற்குச் சொல்லும் அறிவுரையாகத் தான் அமைந்திருக்கின்றது. நாயகி சுவாமிகளின் கீர்த்தனைகளிலும் பல மனத்திற்குச் சொல்லுவதாகவே அமைந்திருக்கின்றன.

அப்படி மனத்திற்குச் சொல்லுவதாக அமையும் பாடல்கள் பல தத்துவங்களைச் சொல்லிச் செல்வதையும் பார்க்கலாம். அப்படி இன்றி எளிமையாக ஒரு நாமசங்கீர்த்தனமாக நாமாவளியாக ஒரு கீர்த்தனையை திரு. பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றியிருக்கிறார்கள். மருகனுக்குப் பிடித்த இராகத்தில் மாமனைப் போற்றும் அந்தப் பாடலை இங்கே பார்ப்போம்.

கண்ணனை பணி மனமே - தினமே
கண்ணனை பணி மனமே

மண்ணில் யசோதை செய் புண்ய ஸ்வரூபனை
மாதவனை நமது யாதவ தீபனை (கண்ணனை)

பாண்டவர் நேயனை பக்தர் சகாயனை
பவள செவ்வாயனை பரமனை மாயனை (கண்ணனை)

மங்கள மூலனை கோகுல பாலனை
மனம் மிகு துளசி மாலனை பாலனை (கண்ணனை)

விண்ணவர் போற்றவே மண்ணில் வரும் வேத
பண்ணனை ஸ்யாமள வண்ணனை தாமரைக் (கண்ணனை)இராகம்: ஷண்முகப்ரியா
தாளம்: ஆதி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
பாடியவர்கள்: கே.எஸ். சித்ரா, எஸ்.காயத்ரி, நித்யஸ்ரீ, ப்ரியா சகோதரிகள்

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP