Saturday, June 30, 2007

யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே!!!


யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே
ஐயன் கருணையைப் பாடு
இராக ஆலாபனமுடனும் பாடு
முடிந்தால் அடவோடும் ஜதியோடும் ஆடு

அருமை என வந்த பிறவிகளோ பல
ஆயிரம் தந்தாலும் வருமோ ஆதலில் (யார்)

நாரதர் நாதமும் வேதமும் நாண
கானக் குழல் ஒன்று ஊதுவான்
நீரதக் கழல் ஆட
கோபியரும் பாட
வெகு
நேர் நேர் எனச் சொல்லித் தான் ஆடுவான்
அந்த
ஐயன் கருணையைப் பாடு ...

தோலை உரித்து கனி தூர எரிந்து
வெறும் தோலைத் துணிந்தொருவன் தந்தான் அல்லவோ?!
மேலைப் பிடி அவலை வேணும் என்றே தெரிந்து
விரும்பி ஒருவன் அன்று தந்தான் அல்லவோ?!
காலமெல்லாம் தவம் இருந்து கனிந்து கனி
கடித்துச் சுவைத்து ஒருவள் தந்தாள் அல்லவோ?!
ஞாலம் ஆயிரம் சொன்னாலும் நாம் அதை நமக்கெதற்கு என்று தள்ளி
நாமமும் ஆயிரம் சொல்லிச் சொல்லி
ஐயன் கருணையைப் பாடு ...


பாடலைக் கேட்க

Friday, June 22, 2007

57. "தல" அஜீத் படத்தில் "ரண்டக்க" பாடும் கண்ணன் பாட்டு!

"தல" அஜீத்குமார், லைலா நடித்து வந்த படம் பரமசிவன்!
பி.வாசு நம்ம தல-ய இயக்குகிறார்!

கல்யாணி மேனன் - இவங்க ஏற்கனவே மார்னிங் ராகா படத்துல பிரபலமாகி இருந்தாங்க! அலை பாயுதே பாட்டில் அலை பாயுதே-ன்னு இவங்களும் பாடுவாங்க!
சைந்தவி-இவங்க நான் கேள்விப்பட்ட வரைக்கும் +2 மாணவி...
இதுக்கு மேல விவரமானவங்க வந்து சொல்லுங்கப்பூ!
இவங்க ரண்டக்க ரண்டக்க பாட்டின் பிரபலம்!


இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பாடும் பாட்டு!
ஒரு கண்ணன் பாட்டு...
சின்னப் பாட்டு தான் என்றாலும் சிறப்பான பாட்டு...உங்களுக்கும் பிடிக்கும், கேட்டுப் பாருங்க!

மலைநாடான் ஐயாவுக்குப் பிடித்தமான பாடல் என்று நேற்று பேசும் போது சொன்னார்!
மாயன் கண்ணன் முல்லை நாட்டின் தெய்வம்.
முல்லைத் திணை வைத்த பதிவருக்கு, இதோ கண்ணன் பாட்டிலே நேயர் விருப்பம்! - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா!

கேட்டு மகிழ இதோ சுட்டி

பாட்டைப் பார்க்கணுமா? இந்தாங்கோவ்!


playing-vina



கண்ணன் மணி வண்ணன் - அவன் அருமை சொல்லப் போமோ!
மன்னன் மழை வண்ணன் - அவன் மகிமை எளிய தாமோ!

ஆயன் அலங் காரன் - கடல் பாயில் துயிலானோ
மாயன் மலர் தூயன் - என் இசைக்கே இசையானோ

(கண்ணன் மணி வண்ணன்)

பாற்கடலில் அவன் இருக்க
பாம்பணையாய் நான் இருப்பேன்
துவாரகையில் அவன் வசிக்க
துளசி வனம் ஆயிருப்பேன்


கீதையினை அவன் விதைக்க
பாதையிலே விழுந்திருப்பேன்
யமுனை நதி தீரத்திலே
ராதை எனக் காத்திருப்பேன்


வெண்ணைய் திருடும்
பூவிரல் என்னைத் தழுவ
ஆசையில் கன்னம் மிளிர
மாணவன் இன்னல் புரிய

நடந்தது கனவா நனவா
மயக்கத்தில் கிடந்த நான்
இன்னும் என்ன சொல்ல ஆ....

(கண்ணன் மணி வண்ணன்)


படம்: பரமசிவன்
வரிகள்: Dr. க்ருதியா
குரல்: கல்யாணி மேனன், சைந்தவி, லக்ஷ்மி ரங்கராஜன்
இசை: வித்யாசாகர்

Thursday, June 14, 2007

56. இதோ, சிவாஜி பாடிய கண்ணன் பாட்டு!

தலைவர் படம் ரிலீஸ் ஆவ சொல்ல, கண்ணன் பாட்டில் மட்டும் தலைவரின் கொண்டாட்டம் இல்லைன்னா எப்படி?

என்ன பாட்டு போடறது-ன்னு, கொஞ்ச நேரம் பிச்சிக்கிட்டது தான் மிச்சம்!
வா ஜி வா ஜி...சிவா ஜி -யை,
வாரும் ஐயா, வாரும் ஐயா, சிவனின் ஜீவனே
- என்று ஏதாச்சும் உல்டா பண்ணி, இதுவும் கண்ணன் பாட்டு தான்னு போட்டுறலாம்! :-) ஆனா வெட்டிப்பயல் இந்த சமயம் பாத்து ஊரில் இல்லை!
இல்லீன்னா, சஹானா, சஹாரா-ன்னு சிவாஜி பாட்டுக்களைப் பிரிச்சு மேய்ந்திடலாம்!

சரி, மெய்யாலுமே தலைவர் படத்தில் வந்த ஒரு நல்ல கண்ணன் பாட்டைப் போடலாம்-னு தோணியது! கண்ணன் பாட்டு - ராமன் பாட்டு எல்லாமே ஒண்ணு தானே!

தலைவரின் நூறாவது படம்...நூறு நாள் தாண்டியும் ஓடியது!
ரஜினியைத் திரையில் இப்படியும் பாக்க முடியுமா? ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

சண்டைக் காட்சிகள் ஒன்று கூட இல்லாமல்....
தலைவர் ஸ்டைல் ஒன்று கூட இல்லாமல்...
பஞ்ச் டயலாக் ஒன்று கூட இல்லாமல்...
கதாநாயகி-தலைவர் குறும்புகள் இல்லாமல்...
அதுவும் குறிப்பா, ஒரு வில்லி இல்லாமல்....
இப்படியொரு ரிஸ்கை நூறாவது படத்தில் தானா செய்ய வேண்டும்?


ஆனால் அதையும் திறம்படச் செய்து காட்டினார் ரஜினி!
வசன உச்சரிப்புகளில் ஒரு மகானின் வாடை வீசா விட்டாலும்...படம் என்னவோ ஹிட் தான்!
பொதுவாத் தலைவரை நடிப்புக்கு இலக்கணம் என்றெல்லாம் சொல்ல முடியாது-ன்னு ஒரு சாரார் குறை சொல்வார்கள்....
ஆனால் தில்லு முல்லு, மற்றும் அவரது இந்த நூறாம் படத்தைப் பார்த்தவர்கள், கொஞ்சம் அசந்து தான் போவார்கள்!

அன்று இளைஞர் ரஜினிகாந்த், படம் முழுதும் தாத்தா வேடத்தில் நடித்தார்!
இன்று தாத்தா ஆகி விட்ட சந்தோஷ ரஜினிகாந்த், இளைஞர் வேடத்தில் பட்டைய கெளப்ப தயாராகி விட்டார்!

இதோ...டோட்டல் கெட்டப் சேஞ்சில், தலைவர்...
ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் வரும் எசப் பாட்டு ஒன்று!
இனிமையான பாட்டு, இசைப் பாட்டு, எசப் பாட்டு, கேட்க சொடுக்குங்கள் இங்கே!




ராம நாமம் ஒரு வேதமே
ராக தாளமொடு கீதமே

மனம் எனும் வீணை மீட்டிடுவோம்
இசை எனும் மாலை சூட்டிடுவோம்

(அருள்மிகு...ராம நாமம் ஒரு வேதமே)

அவன் தான் நாரணன் அவதாரம்
அருள் சேர் ஜானகி அவன்தாரம்
கெளசிக மாமுனி யாகம் காத்தான்
கெளதமர் நாயகி சாபம் தீர்த்தான்

(ராம நாமம் ஒரு வேதமே)

ஓர் நவமி் அதில், நிலவெலாம் புலர, நினைவெலாம் மலரவே - உலகு புகழ்
தாய் மடியில் ஒரு மழலையாய் உதிக்க, மறை எலாம் துதிக்கவே - தயரதனின்

வம்சத்தின் பேர் சொல்ல, வாழ்த்துக்கள் ஊர் சொல்ல - விளங்கிய திருமகனாம்
ஜனகர் மகள் வைதேகி பூச்சூட, வைபோகம் கொண்டாட, திருமணம் புரிந்தவனாம்


மணிமுடி இழக்கவும் மரவுரி தரிக்கவும்
அரண்மனை அரியணை துறந்தவனாம்
இனியவள் உடன்வர இளையவன் தொடர்ந்திட
வனங்களில் உலவிடத் துணிந்தவனாம்

ஸ்ரீ... ராம சங்கீர்த்தனம்
நலங்கள் தரும் நெஞ்சே...
மனம் இனிக்க, தினம் இசைக்க, குலம் செழிக்கும்...

தினம் நீ சூட்டிடு பாமாலை
இது தான் வாசனைப் பூமாலை
இதைவிட ஆனந்தம் வாழ்வினில் ஏது
இசைத்தே நாமமே நாளும் ஓது

(ராம நாமம் ஒரு வேதமே)



இசைஞானி இளையராஜா போட்ட அக்மார்க் மரபிசைப் பாடல் இது...
சந்தங்கள் கொஞ்சும் பாடல்....மாய மாளவ கெளளை ராகத்தில்...வேகமான பாட்டு.
கூடவே சேர்ந்து பாடினால், இன்னும் இனிக்கும்!


ராகம்: மாய மாளவ கெளளை
படம்: ஸ்ரீ ராகவேந்திரா
வரிகள்: வாலி
குரல்: ஜேசுதாஸ்
இசை: இளையராஜா

Friday, June 08, 2007

55. பாரதியாரும் கண்ணதாசனும் கூட்டு சேர்ந்து போட்ட பாட்டு!

பாரதியாரும் கண்ணதாசனும் கூட்டாச் சேர்ந்து ஒரு பாட்டு எழுதினாங்க! :-)
என்ன.......அது ஆப்பரேஷன் கில்மா-ன்னு நினைக்கறீங்களா?
இல்லை இல்லை! அது எல்லாம் நம்ம வெட்டிப்பயல் தான் பதிவு போடுவாரு!
நான் சொல்வது உண்மை, உண்மை, உண்மையைத் தவிர வேறு ஒண்ணுமே இல்லீங்கோ!

கண்ணன் என் சேவகன் பாட்டு, பாரதியார் எழுதினார்.
ஆனால் அதைச் சினிமாவிற்கு அப்படியே எடுத்தாள முடியாது!
வரகவி கண்ணதாசனுக்கு, கண்ணன் மேல் இல்லாத உரிமையா?
பாரதியையும் கண்ணனையும் கோடம்பாக்கம் ஸ்டூடியோவில் உலவ விட்டுவிட்டார், நம்ம கவிஞர்!

மொதல்ல பாரதி பாட்டைக் கொஞ்சம் தொட்டுக்குவோம்!
ஹூம்......இந்தக் காலத்துல எங்க நல்ல வேலைக்காரங்க கிடைக்கறாங்க?
அப்படியே கிடைச்சாலும் "வேலைக்காரங்களையும் ட்ரைவர்களையும் வேலைய விட்டுத் தூக்கவே முடியாது...அப்பிடி ஒரு பாசம்"-னு நம்ம கவுண்டமணி ஒரு படத்துல மந்திரவாதியா அருள்வாக்கு டயலாக் கொடுப்பாரு!
ஆனா எல்லாக் காலங்களிலும் நெலமை, இதே தான் போலும்!
பாரதியாரே புலம்புவதைப் பாருங்க! :-)

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்:
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;
'ஏனடா, நீ நேற்றைக்கு இங்குவர வில்லை' யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;

வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்;
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்;
தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவார்;

உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊர அம்பலத்து உரைப்பார்;
எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்;
சேவகரால் பட்ட சிரமம் மிக உண்டு கண்டீர்;



சோர்ந்தான் பாரதி....வந்து சேர்ந்தான் கண்ணன்!

எங்கிருந்தோ வந்தான், 'இடைச்சாதி நான்' என்றான்;
மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன்
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;
.....
காட்டுவழி யானாலும், கள்ளர் பயமானாலும்;
இரவிற் பகலிலே எந் நேரமானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே
சுற்றுவேன், தங்களுக்கோர் துன்பமுறாமல் காப்பேன்;
கற்ற வித்தை ஏதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே!


......என்று கண்ணன் தன் பாட்டுக்கு அடுக்குகிறான்!

கண்ணனுக்கு இடம் கொடுத்த பாரதியின் கதி என்னவாயிற்று?
ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு,
நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது


கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன்
......

நண்பனாய், மந்திரியாய், நல் ஆசிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதியென்று சொன்னான்
இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்!

கண்ணன் எனது அகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவும் அவன் பொறுப்பாய்ச்
செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,
கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம்,
தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண்!



இதைச் சினிமாவிற்கு அப்படியே போட்டா,
மினிமா ஆக வேண்டியது தான்:-)

பாருங்க, கண்ணதாசன் கலக்கும் சுவையான காப்பியை!
இதைக் காப்பின்னு சொல்லுறதே பெருங்குற்றம்...ஆனாலும் சுவைக்காகச் சொல்கிறேன்....
பாரதியை டிகாஷனில் இறக்கி, மணக்க மணக்க, ஏ.ஆர்.ரகுமான் தந்த லியோ காப்பியைப் போல் கொடுக்கிறான்!

படிக்காத மேதை படத்தில் ரங்காராவின் கவலையும் துக்கமும், சிவாஜியின் குணங்களையும் மனசு முன்னால கொஞ்சம் ஓட விட்டுக்குங்க!
ஓடலைன்னா....இருக்கவே இருக்கு youtube காட்சி....பதிவின் இறுதியில்!


சீர்காழியாரின் உருக்கும் குரலில், இதோ கேளுங்கள்!

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
கண்ணன்...
(எங்கிருந்தோ வந்தான்)


சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன்
கண்ணன்...
(எங்கிருந்தோ வந்தான்)


பற்று மிகுந்து வரப் பார்க்கின்றேன் - கண்ணனால்
பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
நண்பனாய் ...
மந்திரியாய் ...
நல்லாசிரியனுமாய் ...

(யதா யதா ஹி தர்மஸ்ய க்ளானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய தத் ஆத்மானம் ச்ருஜாம் அகம்)

பண்பிலே தெய்வமாய் ...
பார்வையிலே சேவகனாய் ...
ரங்கன்.....

எங்கிருந்தோ வந்தான்

ரங்கன் ரங்கன் ரங்கன்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்!
ரங்கா ரங்கா ரங்கா ரங்கா!




படம்: படிக்காத மேதை
இசை: K.V.மகாதேவன்
வரிகள்: கண்ணதாசன்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்

Monday, June 04, 2007

54. கே.பி.சுந்தராம்பாளா?



ஏலா ஒனக்குக் கே.பி.சுந்தராம்பாள் தெரியுந்தானே?

ஆமு. தெரியும்.

எப்படில தெரியும்.

அவங்கதானல ஔவையாரு.

அவங்க ஔவையாரா? ஒரு விதத்துல அப்படித்தாம்ல. ஆனா அவங்க ஔவையாரா நடிச்சவங்க. நெறைய பாட்டுக பாடியிருக்காங்க.

ஆமு. ஆமு. தெரியும். முருகன் பாட்டுக எக்கச்சக்கமா பாடியிருக்காங்க. நாங்களும் கேட்டுருக்கம்லேய்! கேட்ருக்கம். வாழைப்பழத்தைப் பிழிந்து....

ஏலேய் நிப்பாட்டு....தெரியலைன்னா வாயப் பொத்து...அப்பு அப்புனேன்னா...யாரு பாட்டல கிண்டல் பண்ணுத..அது வாழைப்பழமில்ல...ஞானப்பழம்.

என்ன...கோவிக்க..உண்மைக்குந் தெரியாமத்தாம்ல பாடுனேன். தப்புன்னா திருத்தாம கோவிக்கான். அவங்கதான் முருகன் பாட்டு பாடியிருக்காங்கன்னு சொன்னம்லா. அது சரிதான.

அது என்னவோ சரிதான். அவங்க முருக பக்தை. முருகன் மேல நெறைய பாட்டுப் பாடியிருக்காங்க. திருவிளையாடல் படத்துல....காரைக்கால் அம்மையார் படத்துல.....சிவபெருமான் மேலையும் பாடியிருக்காங்க. சக்திலீலை படத்துல அம்மன் மேல பாடியிருக்காங்க....அதெல்லாம் எப்ப? எழுவது வயசுக்கு மேல. ஆனா....அவங்க ஏழுமலை மேலையும் பாடியிருக்காங்க தெரியுமா!

என்னல சொல்லுத! ஏழுமலைல இருக்காரே வெங்கடேசரு. அவரு மேலையா....ஆச்சிரியமா இருக்கே! என்ன பாட்டு? வெவரமாச் சொல்லுல!

திருமலைத் தெய்வம்னு ஒரு படம். ஏ.பி.நாகராஜன் எடுத்தாரு. அதுல கே.பி.சுந்தராம்பாள் நாராயணியம்மா அப்படீங்குற பாத்திரத்துல நடிச்சாங்க. அந்தப் பாத்திரத்துக்காகத்தான் ரெண்டு பாட்டு பாடியிருக்காங்க. ஒன்னு "நாளெல்லாம் உந்தன் திருநாளே மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே"ங்குற பாட்டு. இது அவங்க ஏற்கனவே பாடுன "நாளெல்லாம் பூசம் திருநாளே"ங்குற பாட்டு மெட்டுதான். ஆனா இன்னொரு பாட்டு செம பாட்டு. அப்ப புதுப்பாட்டு. குன்னக்குடி இருக்காரு தெரியும்ல..

யாரு...சிலுக்குச் சட்டை போட்டுக்கிட்டு வருவார்ல...பிடில் வாசிப்பாரே?

அவரேதான். அவரு இசையமைச்ச படம் அது. அந்தப் பாட்டு "ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை"ன்னு ஜம்முன்னு இருக்கும்லா! கேட்டுப் பாக்கியா?

சரி போடு, கேக்கேன். மாட்டேன்னா விடவா போற?






ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை
ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை


பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு
ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை

கால்வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது
கைவண்ணன் திரவுபதையின் மானம் காத்தது
மால்வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது
மணிவண்ணன் கருணை நம்மை மகிழவைத்தது
ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை

ஒரு பிடி அவல் கொடுத்தே குசேலன் உறவு கொண்டான்
ஓடத்தில் ஏற்றி வைத்தே குகன் உடன் பிறப்பானான்
தான் சுவைத்த பழங்களையே தந்தனள் தாய் சபரி
தருவதற்கொன்றுமில்லை தலைவனே எமை ஆதரி
ஏழுமலையிருக்க நமக்கென்ன மனக்கவலை


அன்புடன்,
கோ.இராகவன்

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP