Thursday, June 26, 2008

100: கிருஷ்ணா நீ பேகனே, வாராய்! - மலைநாடான், குமரன், KRS குரலில்!

கண்ணன் பாட்டு வலைப்பூவின் 100-வது பதிவு இதோ! 100-ஆம் பாடல், மிகவும் பிரபலமான பாடல்!
கிருஷ்ணா நீ பேகனே, பாரோ!
தமிழ் வடிவில், கிருஷ்ணா நீ வேகமாய், வாராய், என்று தந்துள்ளோம்!
மங்கள இசையுடன் துவங்கலாமா? ஷேக் சின்ன மெளலானா அவர்கள் இதே பாட்டை வாசிப்பதை இங்கு கேட்டு மகிழுங்கள்!

இன்னிக்கு பல பதிவர்களின் குரலை எல்லாம் ஒன்னாக் கேக்கப் போறீங்க! இது நாள் வரை அவர்கள் எழுத்தை மட்டுமே படித்த பலருக்கும், இன்னிக்கி பதிவர்களின் குரலைக் கேக்கப் போற அபாயம்! எனவே எச்சரிக்கை! நில், கவனி, பின்னூட்டு! :-)

கிட்டத்தட்ட அதே மெட்டில், தமிழாக்கி உள்ளேன்! அந்தத் தமிழை, மலைநாடான் ஐயாவும், குமரனும் அடியேனும் பாடி உள்ளோம்! இந்த நூறாம் பதிவை, வழி நடத்திச் செல்லப் போவது, நம் ஷைலஜா அக்கா! அவர் பாட்டுக்குத் தரும் முன்னுரை இதோ! Over to Shylaja!வாராய் நீ வாராய்!- இந்த திரைப் பாடல் எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் இப்படிக் கடவுளை வாராய் நீ வேகமாக வாராய் என்றார் ஒரு பக்தர்! யார் அவர்?

அதற்கு முன், கண்ணனைப் பெரியாழ்வார் எனும் பெரும்பக்தர் எப்படி அனுபவித்துப் பாடினார் என்பதைப் பார்ப்போமா?
கண்ணன், அழகான குழந்தை வடிவோடு பெரியாழ்வாருக்கு சேவை தந்தாராம். அந்த அழகான குழந்தையின் முகம் பார்த்ததும், குழந்தைக்குத் தொட்டில் போட அவருக்கு ஆசை வந்ததாம்.

மாணிக்கங்கட்டி வயிரம் இடைகட்டி ஆனிப்பொன்னால் செய்த வண்னச் சிறுதொட்டில் என்று பாட்டில் அதைச் செய்தார்!
தொட்டிலில் கண்ணனைக் கிடத்தி அவனுடைய பாதக் கமலங்கள் காண வாரீரே என்று பாசுரம் பாடுகிறார்! - 'வையம் அளந்தானே தாலேலோ!' வையம் அளந்த கால் அது!

முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும் தத்திப் பதிந்துத் தலைப் பெய்தாற்போல் எங்கும் பத்து விரலும் மணிவண்னனின் பாதங்கள், ஒத்தி இருந்தவா காணீரே!
ஒத்தார் போலிரூக்கும் விரல்கள்! அந்தப் பாத அழகு! கண்ணனின் திருவடியில் மனம் சரணடைவதை பெரியாழ்வார் இப்படிச் சொன்னார் என்றால் கண்ணன் திருவடி எண்ணுக மனமே என்கிறார் பாரதியும்.

கிருஷ்ணா நீ பேகனே-விலும், அந்த திருவடியைத் தான் வியாசராயர் தன் பாடலில் முதலில் சொல்கிறார் பாருங்கள்!
வியாசராயர் பெரிய மகான். மத்வ மடாதிபதி!
மன்னர் கிருஷ்ண தேவராயரின் அரசவையில் மந்திரியாக விளங்கியவர். ஒரு சமயம் குஹு யோகத்தின் பலனாக மன்னரின் உயிருக்கு ஆபத்து நேர்ந்த போது வியாசராயரே சிம்மாசனம் ஏறி மன்னரின் உயிரைக் காப்பாற்றினாராம்.

"ஸ்ரீக்ருஷ்ண" என்னும் கன்னட முத்திரையுடன், கன்னட மொழியில் பல பதங்களை இயற்றி உள்ளார். இந்த வியாசராயரிடம் தீட்சை பெற்றவர் தான் புரந்தர தாசர்.
வியாசராயா எழுதிய கன்னட மொழிப்பாடல் இந்தக் கிருஷ்ணா நீ பேகனே!
நாமெல்லாம் கடவுளை நோக்கிச் செல்ல விரும்புவோம்! ஆனால் இவரோ க்ருஷ்ணனை வா வேகமாய் வா என்று அன்புக் கட்டளையிடுகிறார்.

அவருடைய மனக்கண்ணில்....


முனியே நான்முகனே முக்கண்ணப்பா!
நம் கண்ணன் குழந்தைக்கு, பெருமாளாகவும்-சிவசக்தியாகவும் அலங்காரம்!என்னப்பன், பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், தன்னொப்பார் இல்லப்பன்! - அவனே நம் கண்ணன்!
அவனுக்குப் பாடிக் கொடுத்தோம் நற் பாமாலை!
பூமாலை சூடிக் கொடுத்தோமைச் சொல்லு!

மலைநாடான் பாடுகிறார்!குமரன் பாடுகிறார்!கேயாரெஸ் குரலில்!கிருஷ்ணா நீ பேகனே பாரோ
கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!

பேகனே பாரோ முகவன்னு தோரோ
வேகமாய் வாராய், திருமுகம் தாராய்!
(கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்!)

காலாலந்திகே கெஜ்ஜே நீலாத பானவுலி
நீலவர்ணனே நாட்யம் ஆடுத பாரோ

காலிலே கிண் கிணிகள்! கையில் மணிக் கங்கணங்கள்!
நீல வண்ணக் கண்ணா, நடனம் நீ ஆடி வாராய்!

(கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)

ஒடியல்லி ஒடிகெஜ்ஜே பெரலல்லி ஒங்குர
கொரலல்லி ஹாகித வைஜயந்தீ மாலே

இடுப்பிலே ஒட்டியானம், விரல்களில் மோதிரங்கள்
கழுத்திலே தவழ்ந்திடும் வைஜயந்தி வனமாலை!

(கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)

காசி பீதாம்பர கையல்லி கொலாலு
பூசித ஸ்ரீகந்த மையல்லோ லாகம்மா

காசிப் பீதாம்பரமும் கையில் புல்லாங் குழலும்
பூசிய சந்தனம் உன், மேனி எங்கும் மணக்க

(கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)

தாயிகே பாயல்லி ஜகவன்னு தோரித
ஜகதோத் தாரக நம்ம உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா

வாயினில் வையத்தைத் தாயிற்கே காட்டியவா
உலகத்தின் காவலா, நம்ம உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா

(கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)

ராகம்: யாமுன கல்யானீ
தாளம்: சாபு
வரிகள்: வியாசராய தீர்த்தர்
மொழி: கன்னடம்Back to Shylaja...

வியாசராயரின் மனக்கண்ணில்....
குழந்தைக் கண்ணன் யசோதை வீட்டின் கூடத்தில் தவழ்ந்து ஓடிக் கொண்டிருக்கிறான்.
குழந்தைக்கு எத்தனை சுறுசுறுப்பு! ஓரிடத்தில் இல்லாமல் தவழ்ந்து நகர்ந்து நீஞ்சிச் செல்கிறது.
வியாசராயரால் அவனைப் பிடிக்க முடியவில்லை. அந்தத் திருமுகத்தை அருகில் பார்க்க ஆவலாகிறார்! ஆகவே க்ருஷ்ணா நீ வேகமாய் வா அப்பா என்று கெஞ்சுகிறார்.

வந்தால் மட்டும் போதாதாம்! வேகமாய் நீ வந்து உன் திருமுகத்தைக் காட்டுவாய் என்கிறார்.
முகம் கண்டவுடனேயே மனம் கண்ணனின் திருவடிக்கே செல்கிறது. அங்கே காலில் கொலுசைப் பார்க்கிறார்!
காற்சலங்கையை இங்கு முதலில் குறிப்பிடுவது நம் தாயகத்தில்!
இதற்கு ஓரு கதை உண்டு! சதங்கை மணிஒலி அதிர்ஷ்ட வரவின் அறிகுறி. அந்த ஒலி கேட்டு கெட்டவைகள் ஓடிவிடுமாம்.

கைகளில் நீலமணி கொண்ட கங்கணங்கள் பிடித்துக் கிடக்கிறதாம்..இடுப்பில் ஒட்டியாணம்! கையில் மோதிரம்!
அந்தக் கையால் அருளோ அன்றி குட்டோ அதே பாக்கியம் அல்லவா?

வைஜயந்தி மாலை! அது பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமனின் வெற்றி மாலை!
பக்தனின் இதயத்திலும் அதே வெற்றி உணர்வு ,அதைப் பார்த்த மாத்திரத்தில் வந்து விடாதோ?

காசி! உலகின் பழைய நகரம்! புண்ணீய நகரம். காசிக்கு பனாரஸ் என்றும் பெயர் உண்டு.
பனாரஸ் பட்டு உசத்தியானது, அதைக் கடவுளுக்கு அணியவைத்து அழகு பார்க்கிறார். சிவப்பு நிறப்பட்டு அண்ணலுக்கு உகந்த உடை. அந்த சிவந்த ஆடை, தன் சிந்தையைக் கவந்ததை திருப்பாணாழ்வாரும் அனுபவித்துப் பாடி இருக்கிறார்.

அடுத்து புல்லாங்குழல்!அதன் இன்னிசை ஒலி காற்று வெளியில் அமைதியை பரப்பி மனதை வருடி அங்கே தூய்மையை நிரந்தரமாக்குவது!

சந்தன மரம்! தியாகத்தின் மறுவடிவம். தன்னை அழித்து மணம் தருவது.
பக்தியின் உச்சமே தன்னை மறப்பதும் இழப்பதும் தானே? அதற்கு சந்தனத்தை விட வேறு உதாரணம் சொல்லவும் இயலுமோ? அத்தகைய சந்தனம் மணக்கும் மேனி அழகன்,கண்ணன்!

வாயில் தன் தாயினுக்கு உலகத்தையேக் காட்டியவன் !
உலகத்தைக் காத்து ரட்சிக்கும் நம் உடுப்பி ஸ்ரீகிருஷ்ணனே!

வாராய் நீ வேகமாக வாராய்! - எங்களின்
நூறாவது பதிவிற்கு வாராய்!
தாராளமாய் அருள் வெள்ளம், ஏராளமாய் இங்கு வரும்
பாரோர்க்குத் தாராய்!
சர்வம் க்ருஷ்ணார்ப்பணம்!
- திருவரங்கப்ரியா (எ) ஷைலஜா


சக பதிவர்களின் வாழ்த்துச் சேதி இதோ:

மதுரையம்பதி (எ) மெளலி அண்ணா:
உடுப்பி-ன்னா கிருஷ்ணன் மட்டுமா? உடுப்பி ஓட்டலும் கூடத் தான்! :-)
சுடச்சுடத் தோசை! அம்பியின் ஆசை!

அம்பி:
மக்களே, கண்ணன் பாட்டை இன்னும் பாங்காகக் கொண்டு செல்ல உங்கள் யோசனைகளை அறியத் தாருங்கள்!
இது நாள் வரை, நீங்கள் அத்தனை பேரும் காட்டி வந்த அன்புக்கும், ஆதரவுக்கும், எங்கள் பத்து பேரின் மகிழ்ச்சியையும் நன்றியையும் ஒரு சேரத் தெரிவித்துக் கொள்கிறோம்!

என்றும் வேண்டும், உங்கள் இன்ப அன்பு!
- இப்படிக்கு, கண்ணன் பாட்டுக் குழுவினர்
* தி. ரா. ச.(T.R.C.)
* வெட்டிப்பயல்
* மடல்காரன்
* மலைநாடான்
* Raghavan
* "முருகனருள்" கோ.இராகவன்
* dubukudisciple
* குமரன் (Kumaran)
* ஷைலஜா
* kannabiran, RAVI SHANKAR (KRS)
Colonial Cousins, ஹரிஹரன் மற்றும் லெஸ்லி லூயிஸ் சேர்ந்து, அனைத்துச் சமய நல்லிணக்கம் வேண்டிப் பாடுகிறார்கள்! இடையிடையே அருமையான ஆங்கில வரிகள் ! இதோ!
So Come down and help us, Save all the little ones
They need a teacher, And you are the only one
Come back as Jesus, Come back and save the world
We need a teacher, and You are the only one
Come back as Rama, Forgive us for what we've done
Come back as Allah, Come back for every one.......ஒரே நிறுத்தக் கடையாக (One Stop Shop)
இதோ...அதே பாடல், பலப்பல வடிவங்களில்!

* சாக்சபோன்-கத்ரி கோபால்நாத்
* புல்லாங்குழல்-என்.ரமணி
* வீணை-காரைக்குறிச்சி சகோதரர்கள்
* Fusion

* ஜான் ஹிக்கின்ஸ்
* மகராஜபுரம் சந்தானம்
* எம்.எல்.வசந்த குமாரி
* யேசுதாஸ்
* சித்ரா
* இந்துஸ்தானி இசையில் ஹரிஹரன்...


கண்ணனின் இனிமை காசினிக்கே இனிமை சேர்க்கட்டும்!
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!(கண்ணன் பாட்டு வலைப்பூவின் அன்பர், திரு. மலைநாடான் ஐயாவின் அன்புத் தந்தையாருக்கு
இவ்வமயத்தில் அஞ்சலிகள் செலுத்தி, அவர் இன்னுயிர் அமைதி பெற, இறைவன் எம்பெருமானை வேண்டிக் கொள்கிறோம்!)

Thursday, June 19, 2008

99. krs பாட்டு எழுதுவானா? ஷைலஜா பாடுவாங்களா?

KRS பதிவு எழுதுவான்! பாட்டு எழுதுவானா? அதை ஷைலஜா பாடுவாங்களா?

இனிமேல் அரங்கன் மாதவிப் பந்தலில் இடம் பெற மாட்டான்-ன்னு நட்சத்திர வாரத்தில் நடைபெற்ற அரசியல் சூட்டில் ஏதோ வீறாப்பாகச் சொல்லிட்டேன்! கதையும் பாதியில் நிக்குது! ஆனால் மனசு மட்டும் சுத்தி சுத்தி அங்கே தான் வருது!
ஒய்யார நடை அழகு, சக்கரப் படை அழகு, வெண்முத்துக் குடை அழகு, பிரசாத வடை அழகு - இப்படி இத்தனை அழகு இருந்தா, வீறாப்பு எம்புட்டு நாள் தாங்கும்?
வீறாப்பை உடைக்க வந்த வீராங்கனை...அவங்க பேரு ஷைலஜா!

திருவரங்கப்ரியா என்ற புனை பெயரில் அரங்கனே வந்தான் போலும்!
* ஷைலஜாவின் குரல் நம்மில் பலருக்கும் அறிமுகம் தான்! அக்கா பாடினால் கனகதாரா(பொன்மழை) கொட்டாது, ஆனா மைசூர்பாக் நிச்சயமாக் கொட்டும்!
* நாகி என்பவர் ஷைலு அக்காவின் தோழீ! தேர்ந்த கர்நாடக இசைப் பாடகி! பல கச்சேரிகள் செய்துள்ளார்!
* கேஆரெஸ் என்பவன் ஷைலுவின் செல்லத் தம்பி! திருட்டுத்தனமா பல கவுஜ எழுதி இருக்கான்! ஆனால் பதிவுலகத்தில் பல பேருக்குத் தெரியாது! இதோ இன்னிக்கி தெரிஞ்சி போச்சு!:-)

முதலில், பாடலைப் படிச்சி எப்படி இருக்கு-ன்னு சொல்லுங்க! பாடல் பிறந்த கதையை அப்பறம் சொல்லுறேன்!
ஷைலஜாவும், நாகியும் சேர்ந்து பாடறாங்க! ரொம்ப அழகா ராகம் எல்லாம் போட்டு, இனிமையாப் பாடுறாங்க! இந்தாங்க கேட்டுக்கிட்டே படிங்க!
(அமீர் கல்யாணி ராகம்)
கண்டேன் அரங்கத்தில் ஓரழகை - கண்டு
கொண்டேன் அவன்முத்துப் பேரழகை!
தின்றேன் அரங்கத்தின் தீஞ்சுவையை - தின்று
மென்றேன் அவனிதழ் தமிழ்ச்சுவையை!

கருநாகப் பாயில் உறங்கிடும் கரியவன் - என்
மருதேகப் பாயில் உறங்கிட உரியவன்!
வாரானோ அந்த வாமனச் சிறியவன் - அளந்து
பாரானோ என்னை மாமலைப் பெரியவன்?

(கண்டேன் அரங்கத்தில்)

(பாகேஸ்ரீ ராகம்)
காவேரி பாய்ந்து ஓடிடும் சோலைகள்
காதலன் தோளினில் சூடிடும் மாலைகள்
கோவிலின் கோபுரம் ஓம்-கிடும் ஓங்கிடும்
கோதையின் பூமனம் ஏன்-கிடும் ஏங்கிடும்!


(ஹம்சாநந்தி ராகம்)
மத்தள வரிசங்க நாதம் வரும் - தள
தத்தள தளாங்கு கீதம் வரும்!
தித்திக்கும் தீந்தமிழ் வேதம் வரும் - அதில்
எத்திக்கும் அவனிரு பாதம் வரும்!


வீணையில் விரகச் சேர்த்தம் வரும் - அவன்
வியர்வையில் துளசீ தீர்த்தம் வரும்!
காதினில் மந்திர ஓதல் வரும் - அவன்
கலந்திடக் கலந்திடக் காதல் வரும்!


(பெஹாக் ராகம்)
காதல் வரும், குழல் பாடல் வரும் - கேலிச்
சீடல் வரும், உடன் ஊடல் வரும்!
மோதல் வரும், பின் மோகம் வரும் - அந்த
மோகத்தில் ஏங்கிடக் கூடல் வரும்!


(சிந்துபைரவி ராகம்)
ஆழ்ந்த பின்னாலொரு ஆடல் வரும் - எல்லாம்
ஆழ்வாரே என்றொரு ஆவல் வரும்!
ஆண்டாள் ஆண்டான் தேடல் வரும் - பெண்ணே
யாவுமே அவனென்ற நாடல் வரும்!

(கண்டேன் அரங்கத்தில்)என்னாங்க! பாட்டு புடிச்சி இருந்துச்சா? கவுஜ ஓக்கேவா? :-)
கண்ணன் பாட்டின் 99-ஆம் பாட்டை, அடியேன் புனைந்து, அக்கா பாடணும் என்பது அரங்கன் திருவுள்ளம் போலும்! அரங்க நகரப்பனுக்குப் பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை! பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு!

மக்களே! கவிதை உருவான கதை இது தான்!

"கேஆரெஸ், ஆழ்வார்-ன்னா யாருங்க? ஏதோ பன்னிரெண்டு பேரு-ன்னு சொல்றாங்களே! அவங்களா?"

"எதுக்குப்பா மாப்பி கேக்குற? அதுவும் திடீர்னு? தல அஜீத் நடிச்ச ஆழ்வார் படம் பத்தி கூட ரொம்ப பேஸ் மாட்டியே நீ?"

"அடச் சும்மா தான்! நான் ஒன்னு கேட்டா, கோச்சிக்க மாட்டியே கேஆரெஸ்?"

"அடச்சீ, நமக்குள்ள என்ன இம்புட்டு பீடிகை? சும்மா கேளுமா!"

"இல்லை, வெறும் பன்னெண்டு பேரை மட்டூம் ஆழ்வார்-னு சொல்லிட்டுப் போயிட்டாங்க! அப்படின்னா, அவங்களுக்கு அப்புறம் வேற யாருமே பெருமாள் மேல பக்தி பண்ணலையா? எதுக்கு பன்னெண்டு பேரை மட்டும் எப்பவும் கொண்டாடிக்கறாங்க? அப்படின்னா மத்தவன் எல்லாம் என்ன ஒன்னும் பக்தி இல்லாதவனா? எதுக்கு குறிப்பிட்ட சிலரை மட்டும் இப்பிடி Institutionalize பண்ணனும்?"

"உம்...."

"என்ன ரவி, உம்-கொட்டுற? நான் சொல்லட்டுமா? ஆழ்வார்கள் எல்லாம் அந்தணர்கள்! அதுனால, இப்படியெல்லாம் சும்மா செட்டப் பண்ணி வச்சிட்டுப் போயிட்டாங்க! சரி தானே?"

"ஹிஹி! நீ இங்கிட்டு வரியா? ஆழ்வார்கள் பன்னிரெண்டு பேர்ல, ஒன்பது பேர் ஸோ கால்ட் தாழ்ந்த சாதி! சிலர் பிறப்பு அறியாத குழந்தைகளும் கூட!"

"என்னாது??? என்னடா சொல்லுற நீயி?"

"ஆமாம்! அந்தப் பன்னிரெண்டு பேர்ல, யார் யார் என்னென்ன சாதி-ன்னு இன்னோரு நாள் பட்டியல் போட்டுக்கலாம்! அதை விட, இப்போ நீ கேட்ட இன்னோரு முக்கியமான கேள்விக்கு வாரேன்! அவிங்களுக்கு அப்பறம் யாருமே பக்தி பண்ணலையா? எதுக்கு அவிங்களுக்கு மட்டும் இவ்ளோ சிறப்பு?"

"ஆமாம்! அதையே தான் நானும் கேக்குறேன்! அது என்னா பன்னண்டே பன்னண்டு பேரு கணக்கு?"

"எத்தனி பேருன்னு சொன்ன மாப்பி நீ?"

"பன்னிரெண்டு பேரு டா!"

"இல்லை! ஆழ்வார்கள் இன்னிக்கி தேதியில் மட்டும் 660 கோடி!"

"ஆகா...இது என்னடா புது கணக்கு சொல்ற நீ? இது என்ன கணக்கா? கப்சாவா?? இல்லை புதிரா? புனிதமா??"


Hymns of The Drowning!


வாழ்க்கையில் எப்பேர்பட்ட கொடியவனும், ஒரு நொடியாவது,
எம்பெருமானிடத்தில் அம்மா, அப்பா, இறைவா என்று ஏதோ ஒரு வழியில், மனசறிய ஆழ்கிறான்! இளமையிலோ, முதுமையிலோ, குழந்தையாகவோ, பெரியவனாகவோ,
ஆத்திகனோ, நாத்திகனோ...யாராயினும்
அழாதவர்களும் இல்லை! ஆழாதவர்களும் இல்லை!

ஆக, அழுதவர் எல்லாரும் ஆழ்வார்கள் தான்!
ஆழ்ந்தவர் எல்லாரும் ஆழ்வார்கள் தான்!

நாம் எல்லோருமே ஒரு வகையில் பார்த்தால், ஆழ்வார்கள் தான்! என்ன, நாம் நமக்காக மட்டும் அழுகிறோம்! அந்தப் பன்னிரெண்டு பேர், நம் அனைவருக்காகவும் ஆழ்ந்தார்கள்!
மறைகளில் மறைந்து இருந்ததை, முதன் முதலாக, எல்லாருக்கும் பொதுவில் கொண்டு வந்து வைத்தார்கள்! தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!

போதாக்குறைக்கு, தேன் தமிழை, தெய்வத் தமிழாய் ஆக்கினார்கள்!
அதனால் தான் இந்தப் பன்னிரெண்டு என்ற கணக்கே தவிர, அவர்களுக்குப் முன்னும் பின்னும் பல பேர் வந்தார்கள் தான்! அவர்கள் அனைவருக்கும் சிறப்பு தான்!
எந்தரோ மகானு பாவுலு தான்! அந்தரிகி வந்தனமுலு தான்!

நீயே கூட ஒரு ஆழ்வார் தான் மாப்பி! உன் பேர்ல-யே பாட்டு எழுதிறட்டுமா?
அதான் எழுதினேன்! பாத்து சொல்லு! நீயும் ஒரு ஆழ்வார் தானே?
ஆழ்ந்த பின்னாலொரு ஆடல் வரும் - எல்லாம்
ஆழ்வாரே
என்றொரு ஆவல் வரும்!
ஆண்டாள் ஆண்டான் தேடல் வரும் - பெண்ணே
யாவுமே அவனென்ற நாடல் வரும்!அடுத்த பதிவு: கண்ணன் பாட்டு - 100
என்ன பாட்டாக இருக்கும்? சொல்லுங்க பார்ப்போம்!
யாரு பாடப் போறா? சொல்லுங்க பார்ப்போம்?? Stay tuned till Monday:-)

Wednesday, June 18, 2008

98. பதிவர் கவிநயாவின் கனவில் வந்த கண்ணன்!

உங்க கனவில் இது வரை யார் யாரெல்லாம் வந்திருக்காங்க? சத்தியமா தசாவதார அசின் இல்லை-ன்னு நீங்க சொல்லுறது காதில் விழுகிறது! :-)
* கனவுல காதலன், காதலி தான் பொதுவா வருவாங்க! வில்லன் எதிரி யாராச்சும் வந்திருக்காங்களா?
* கனவுல பார்த்த இடத்தையோ, பொருளையோ கொஞ்ச நாள் கழிச்சி நேரில் பார்த்து இருக்கீங்களா?
* எத்தனை பேர் கனவில் ஆலயமோ, இறைவனோ வந்திருக்கான்? ஒளிவு மறைவு இல்லாமச் சொல்லுங்க பார்ப்போம்!

சூழலுக்கும் சமயத்துக்கும் ஏற்றாற் போல, நமக்கு விதம் விதமா கனவு வருது இல்லீங்களா? கனவைப் பற்றித் தனியா கனவு சாஸ்திரமும் இருக்கு! ஃபிராய்டு தியரியும் இருக்கு! இது ரெண்டுத்துக்கும் நடுவுல பலப்பல புராணக் கதைகள், இதிகாசங்கள்-னு பல உலக மொழிகளில் இருக்கு!

"கனவைப் பற்றிய ஒரு தொடர் பதிவை இடுங்களேன் அண்ணா" என்று முன்பொரு முறை அன்புத் தம்பி சீவீஆர் கேட்டிருந்தார்! அதற்கான நேரம் இப்போ வந்துருச்சின்னு தான் நினைக்கிறேன்! :-)
அதுக்கு முன்னாடி இன்னிக்கி ஒரு கண்ணன் பாட்டு! அது கனவுப் பாட்டா மலரப் போகுது!

கவி அக்கா என்று நான் அழைக்கும் பதிவர் கவிநயா அவர்களைப் பற்றி, நான் தனியாக என்ன சொல்லி விட முடியும்?
காலச் சக்கரம் சுத்துதோ இல்லியோ, இவர் பதிவுச் சக்கரம் சுத்திக் கொண்டே இருக்கும்! தானும் பதிவிட்டு, பல பதிவுகளில் பல விதமான மறுமொழிகளையும் இட்டு, ஒட்டு மொத்த நேரத்தையும் கைக்குட்டைக்குள் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டுமா? அக்காவை அணுகுங்கள்!

முடிந்தால் அவர் குரலை ஒரு முறை கேளுங்கள்! பாட்டு பாடிக் கொடுக்க ஏற்ற வாகான குரல்! சாக்கு சொன்னால், சாக்கைப் போக்காக்கிப் பாட்டை அவரிடம் வாங்கி விடுங்கள்!
வாஷிங்டன் ஏரியாவில் உள்ள ஆலயத்தில், முருகப் பெருமான் மேல் பாட்டெழுதி, ஒரு குழுவையே பாட வைத்தவர் கவிதாயினி கவிநயா!

அவர் கனவில் கண்ணன் எப்படி வந்தான் என்பதை, அவர் மை போட்டுச் சொல்கிறார்! பார்க்கலாமா?கனவில் வந்த கண்ணன்

நீல இரவில் வண்ணக் கனவில்
சின்ன ஓலை வந்தது!
ஓலை அதிலே புன்னகைக் கண்ணனின்
அழைப்பு இருந்தது

அழைப்பை ஏற்றுச் சென்றதும் கண்ணன்
என்னுடன் வந்து விட்டான்

என்னுடன் வந்த சின்னக் கண்ணன்

முல்லைப் பூ மொட்டவிழ்ந்தது போலே
மெதுவாய்ச் சிரிக்கிறான்

மல்லிகைப் பூப் போல் மலர்ந்தே கண்ணன்
மகிழ்வாய்ச் சிரிக்கிறான்

தாமரைப் பூப் போல் இதழ்களை விரித்தே
அழகாய்ச் சிரிக்கிறான்

ரோஜாப் பூப் போல் சிரித்தே கண்ணன்
வாவா என்கிறான்

நீல வண்ணக் கண்ணனை அணைக்க
நெஞ்சம் ஏங்கியதே

பாலன் அவனைப் பிடிக்கக் கைகள்
இரண்டும் தாவியதே


தாவிய கைகளில் தட்டுப் பட்டதோ
தலையணை மட்டுந்தான்

தேடிக் களைத்த மனமும்
இது கனவே என்றது

அறிந்து கொண்ட அறிவும் வந்து
ஆறுதல் சொன்னது

கனவில் வந்த சின்னக் கண்ணன்
நனவில் வருவானோ

நனவில் வந்தே கண்ணன் என்னை
மகிழச் செய்வானோ?


-- கவிநயாவள்ளுவர் கனவு பற்றி எந்த அதிகாரத்தில் சொல்கிறார்? சொல்லுங்க?

கோதையின் கனவு பற்றி எல்லாருக்கும் தெரியும்! மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத, மாதவிப் பந்தல் கீழ்(ஹா ஹா ஹா), கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி என்று பாடிய கோதையரும் உண்டு! இதோ இன்னொரு கனவுப் பாசுரம்!

நாளை வதுவை மணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற் கீழ்,
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான்,ஓர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.


ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை,
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயு நன்மக்களைப் பெற்று மகிழ்வரே!


இங்கு இவரைத் தட்டி, என்ன ஆச்சு கோதைக் கனவு? என்று உரிமையாகத் தட்டி, அ-தட்டியே கேட்கலாம்! பாசுரப் பொருளும் அங்கிட்டே இருக்கு!:-)
துயில்பவனுக்குக் கனவு வரும்!
துயில்பவனே கனவில் வந்தால்?
ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தமே!

Sunday, June 15, 2008

97. ஜிரா தரவேற்றிய நம்பியார் கண்ணன் பாட்டு!

தசாவதாரம் படத்துல நெப்போலியன், கமல் கிட்ட ரொம்ப பீலா விடுவான்! "உங்களைப் போல வைணவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பதை அறி-வோம்! உங்கள் குரு இராமானுசர் எங்கே ஓடிக் கொண்டு இருக்கிறார் என்பதையும் அறி-வோம்!"
இப்படி அறி-வோம், அறி-வோம் என்று சொல்ல...
அதுக்கு கமல், "மன்னா! உன் வாயாலேயே ஹரி-ஓம்! ஹரி-ஓம்! என்று வந்து விட்டது பார்த்தாயா?" என்று வார்த்தை விளையாட்டு வெளையாடுவாரு!

இதைப் பார்த்தாரு நம்ம ஜிரா!
அ"றி"-வோம் என்பதை ஹ"ரி"-ஓம் ன்னு ஆக்கினீல்ல கமலஹாசா?
இப்போ, ஹ"ரி"-ஓம் என்பதை ஹ"றி"-ஓம் ன்னு நானும் ஆக்குறேன் பாரு-ன்னு சவால் வுட்டாரு! ர-வில் இருந்து ற-வுக்கு மாறி, ந"ற"ந"ற"-ன்னு பதில் வெளையாட்டு விளையாடினாரு அவரோட சூப்பர் விமர்சனப் பதிவுல! :-)

இதைப் பார்த்துட்டு நானும்,
ஹரி-ஓம், ஹறி-ஓம், எதுவானாலும் சரி, ஆனா நாம இப்ப, Hurry ஓம்!
படத்தை முதல் காட்சியில் இருந்தே மிஸ் பண்ணாமப் பாக்கச் சொல்லி இருக்காரு இவரு!
அதனால் Hurry-ஓம்னு பதிலுக்கு விளையாடிக்கிட்டு இருந்தேன்! ஜிராவின் ஃபார்முலா படி, ராகவன் றாகவன் ஆனாரு! ஜிராவும் ஜிறா ஆனாரு! :-)))

ஆனால் நம்ம ஜிரா நிஜமாலுமே அப்படித் தானா? அதெல்லாம் சும்மா உல்லல்லுலாலாயி...
கண்ணன் மேலும்,
கண்ணன் பாட்டு மேலும்,
கண்ணன் அடியார் (கேஆரெஸ்) மேலும் அதீத பாசம் கொண்டவரு! நல்லவரு! வல்லவரு!:-)

பலரும் அறியாத மிக அபூர்வமான கண்ணன் பாடல்கள்! இணையத்தில் தேடினாலும் கிடைக்காத பாடல்கள் சிலவற்றை, எனக்காகவே yotube-இல் தரவேற்றினாரு!
அதில் ஒன்று தான் இன்னிக்கி கண்ணன் பாட்டில் நாம் கேட்கப் போகும் 97th கண்ணன் பாட்டு!சுப்ரபாதம் என்றொரு படம் வந்துச்சி! இறையருட் செல்வர் கே.சங்கர் இயக்கிய படம்!

புராணக் கதைகளை வைத்தும், பக்திக் கதைகளை வைத்தும் படம் பண்ணினா, அதோ கதி தான் என்ற மாறுபட்ட காலத்தில், அதை உடைத்த பெருமக்கள் இருவர்! * ஏ.பி.நாகராஜன்! ** கே.சங்கர்!!
ஏ.பி.நாகராஜன் பேரைத் திருவிளையாடல் என்றும் சொல்லும்! அதே போல் கே.சங்கரின் பேரை தாய் மூகாம்பிகை என்றும் சொல்லும்!

சுப்ரபாதம் படத்தில், நம்பியார் பெருமாளின் மிகச் சிறந்த பக்தர்!
பக்தர் என்பதைக் காட்டிலும் அன்பர்! உயிர் நண்பர்! உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே என்று இருப்பவர்!
அவர் பெருமாளுக்குக் கோயில் ஒன்னு கட்ட நினைப்பாரு! அதுக்குப் பல முயற்சிகள் எடுப்பாரு! ஆனால் பல தடங்கல்கள் வரும், பொதுவிலும், சொந்த வாழ்விலும்!

கடந்தும், கிடந்தும், நடந்தும் அதை எல்லாம் நம்பியார் எப்படிச் சமாளிக்கிறார் என்பதைப் படத்தில் காட்டி இருப்பார்கள்! ஜிரா வந்து படத்தின் கதைச் சுருக்கத்தைச் சொல்லட்டும்!
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையமைக்க, கவியரசர் கண்ணதாசன் எழுதிய அருமையான பாடல்கள் இந்தப் படத்தில்!

* கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் - வாணி/யேசுதாஸ் - கண்ணன் பாட்டில் முன்பே வந்தது! இதோ!
* அடி ராதா! ஸ்ரீ கிருஷ்ணன் வந்தான் - வாணி
* உண்மை தெரிந்திருக்கும் ஒருவனய்யா - வாணி
* உன்னைத் நீ அறிவாய், உலகெங்கும் நான் அறிவேன் - TMS/சுசீலாம்மா
* வடதிசையில் சில வைகுந்தங்கள் - பாலமுரளி/வாணி
* திருக்கோவில் கட்ட எண்ணி - சீர்காழி/வாணி

சீர்காழி முருகன் பாட்டுக்குப் பிரபலம் என்றாலும், பெருமாள் மீதும் பல பாடல்கள் பாடி இருக்காரு! அவரும், வாணி ஜெயராமும் சேர்ந்து பாடி இருக்காங்க இந்தப் பாட்டை!
பாருங்க, கேளுங்க! (பாட்டு இணையத்தில் இல்லை! கேட்டுக் கொண்டே டைப்பினேன்! பிழை இருந்தால் சுட்டிக் காட்டவும்)


பாட்டில் சில திவ்யதேசங்கள் (108 திருப்பதிகள்) வரிசையா வருகின்றன! பாட்டை ஒழுங்காப் படிச்சிட்டு, எவை எவை என்று பின்னூட்டதில் சொல்லுணும் ஆமா!:-)

திருக்கோயில் கட்ட எண்ணி
பொறுப்போடு வந்த என்னை
வெறுப்போடு பார்த்தாயே பெருமாளே! - பலர்
சிரித்தாலும் விடமாட்டேன் திருமாலே!


காஞ்சி நகர் வரத ராஜா - உன் கருணை பெருமை என்ன லேசா?
வாஞ்சை யுடன் எனக்கு அருள - காஞ்சி வரதா, நீ விரைந்தோடி வருக!


திருப்பணி செய்வதற்கு உடந்தை - நீ திருக்கோயில் கொண்டிருக்கும் குடந்தை!
தினம்தோறும் சேவை செய்ய வரவா? - அந்த ஸ்ரீ வில்லி புத்தூரின் தலைவா!


பூலோக வைகுந்த வாசா, புகழ் ஓதும் ஸ்ரீ ரங்க நாதா
திருவரங்கத்து ரங்க நாதா, என் சேவைக்குத் துணைபுரிய வா,வா!


அனந்த பத்ம நாபா, ஆனந்த விஸ்வ ரூபா
திரு அனந்தை பத்ம நாபா, உனக்குச் சிங்காரக் கோயில் கட்ட வா,வா!

குருவாயூர் தன்னில் ஒரு குழந்தை, நடக்கக் கொஞ்சு தம்மா இரண்டு சலங்கை
வர வேண்டும் ஸ்ரீகிருஷ்ண பாலா, நிறைந்த வரத்தோடு ஆனந்த லாலா!


பழமை நிறைந்த திருப்பதியே, எங்கள் அழகர் மலைக் கருணை நிதியே!
சோளிங்கர் ஆள்கின்ற முகமே, பாவம் தொலைவதற்கு நீராடும் குளமே!

தொண்டு செய்யும் அடியார் தமக்கு உன் சோதனை போதுமடா!
சோதனை தீர்த்து உன் பாத மலர்களில் எங்களைச் சேர்த்திடடா!
கொண்டது கொள்கை என்றது ஈன்றவர் கூறுதல் கேளுமடா!
கோயில் திறந்திட வில்லை எனில் வைகுண்டத்தில் சேர்த்திடடா! வைகுண்டத்தில் சேர்த்திடடா! வைகுண்டத்தில் சேர்த்திடடா!


நரசிம்மா நரசிம்மா நரசிம்மா
வைகுந்தா வைகுந்தா வைகுந்தா
ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா


மைவண்ண மேனி கொண்ட ஸ்ரீ நாதா!
திருமகள் தன்னை மார்பில் வைத்த மலர் மார்பா!
மெய்க்கூந்தல் வேதவல்லி தலை மகனே (?) - கனல்
நிறைந்திருக்கும் அலமேலு வளர்ந்தவனே! (?)


எத்தனையோ உலகில் வடி வெடுத்தாய் - அன்று
எல்லா வடிவினிலும் பெண்ணெடுத்தாய்!
பித்துப் பிடித்து பெண்ணை அறியாயோ - இன்று
சித்தம் தெளிந்தது என்று அருள்வாயோ!

பாண்டுரங்கா பண்டரிநாதா பன்னக சயனா மணிவண்ணா!
பத்மாநாபனே வீரராகவா ஆதிகேசவா ஸ்ரீகிருஷ்ணா!
ரிஷிகேசா ஸ்ரீரங்கா திருமாலே நரசிம்மா!
ரிஷிகேசா ஸ்ரீரங்கா திருமாலே நரசிம்மா!

குரல்: சீர்காழி கோவிந்தராஜன், வாணி ஜெயராம்
வரி: கவியரசர் கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
படம்: சுப்ரபாதம்


பி.கு:
இந்தத் "திருக்கோயில் கட்ட எண்ணி" பாட்டைக் கேட்கும் போதெல்லாம் கொஞ்சம் உணர்ச்சி மயமாகி விடுவேன்! ஏன்னா, சிறு வயதில்,
எங்கள் வாழைப்பந்தல் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் (ஆனைக்கருளிய அழகப்பெருமாள் - கஜேந்திர வரதராஜப் பெருமாள்) சிதிலம் அடைந்து இருந்தது!
அப்போது அதை மீண்டும் ஒழுங்கு செய்து கட்டணும்னு, ஒரு சின்னப் பையன் மனசு ரொம்பவே துடிக்கும்! மனசுக்குள்ளேயே குடமுழுக்கு, அபிசேகம், உற்சவம்-ன்னு வேற நடத்திப் பாத்துக்குவான்! கனவு வேற!! :-)

சின்னப் பசங்கள கூட்டுச் சேத்துக்கிட்டு அவுங்களுக்குப் பாடம் நடத்துறது; குடுங்கடா குரு தட்சணை-ன்னு, அப்பால எல்லாரும் கோயில்-ல புல்லு புடுங்கறது, ஒடைஞ்ச வாகனத்தை அரக்கு வச்சிப் பீஸ் பீஸா ஒட்டுறது-ன்னு ஒரே கலாட்டா!

வீட்டுல வேற இவன் அட்டகாசம் தாங்க முடியலை! சும்மா சும்மாக் காசு கேட்டுக்கிட்டே இருப்பான்! அப்பல்லாம் வீட்டுல இம்புட்டு வசதி போதாது! அப்போ-ன்னு பார்த்துக் குடும்பமும் சென்னைக்குக் குடி பெயர்ந்தது!

பின்னாடி என்னென்னமோ எல்லாம் நடந்து, ஊர்ப் பெரியவங்க கொஞ்சம் கண்ணைத் தொறந்தாங்க! ஃபாதர் ரோசாரியோ கிருஷ்ணராஜ் அவர்கள் பரிந்துரையில், ஊர் மாதா கோயிலின் மரப்பலகை எல்லாம் நன்கொடையாக வந்து சேர, பெரிய திருமலை ஜீயர் விஷயம் தெரிஞ்சி வந்து உதவி செய்ய, கோயில் ஒரு வழியாச் சரியானது!

கோயிலில் கொசுத் தொல்லை ஜாஸ்தியா இருக்குன்னு, அர்ச்சனைத் தட்டில் டார்ட்டாய்ஸ் கொசுவத்தி வச்சிக் குடுத்து, அய்யிரு கிட்ட அடி வாங்குனது, அய்யமாரு வூட்டுப் பொண்ணுங்க எல்லாம் அவன் சப்போர்ட்டுக்கு வந்தது! இதெல்லாம் தனிக் கதை!
இப்ப நெனச்சாக் கூடச் சிரிப்பு சிரிப்பா வருது! :-)))

Wednesday, June 11, 2008

96. எம்.எஸ்.வி-இளையராஜாவைச் சேர்த்து வைத்த கண்ணன் பாட்டு!

"மெல்லத் திறந்தது கதவு-ன்னு ஒரு படம் வந்துச்சி! அதுல யாரு மீஜீக் போட்டாங்க-ன்னு சொல்லுங்க பார்ப்போம்!
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி - இசை ஞானி இளையராஜா ரெண்டு பேரும் சேர்ந்து!"

"ஆகா...இப்படி ஒரு உலக அதிசயம் நம்ம தமிழ் சினிமாவிலா?"

"ஆமா! ஆமா!"

"அட, என்ன தான் குரு-சிஷ்யன் உறவு ரெண்டு பேருக்கும் இருந்துச்சி என்றாலும், இவிங்கள இப்படிச் சேர்த்து வச்சது யாருப்பா?"

"சாட்சாத், நம்ம கண்ணபிரான் தான்!"

"யாரு? கேயாரெஸ் கேயாரெஸ்-ன்னு கூப்புடறாங்களே? அந்தக் கண்ணனா?"

"அடச்சே! அவன் பொடிப் பையன்! படம் வந்தப்போ அவனுக்குப் பத்து வயசு கூட இருக்காது! நான் சொல்லுறது ஒரிஜினல் கண்ணன், பரந்தாமன்! கிருஷ்ண பரமாத்மா!
சண்டை வேணாம்-னு தூது எல்லாம் போவாரே! ஆனாப் போயிட்டு வந்து சண்டையைச் சூப்பரா போடுவாரே! அவரு!"

"அடங்கொக்கமக்கா! கண்ணனா சேர்த்து வச்சாரு? எத வச்சி சொல்லுற நீயி?"

"மெல்லிசை மன்னரு, "குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டு கேக்குதா"-ன்னு இசை அமைக்க...
இளையாராஜா, "பாவன குரு-பவன-புராதி ஈசம் ஆச்ரயே"-ன்னு இன்னொரு கண்ணன் பாட்டுக்கு அதே படத்தில் இசை அமைச்சாரு!"

"சூப்பரு! கண்ணன் லீலையே லீலை! மேல தகவலைச் சொல்லு மக்கா!"

"சரி, கொஞ்சம் இதன் பின்னணி என்னான்னு சொல்லுறேன்! மத்த கதை எல்லாம் எம்.எஸ்.வி-யின் சிஷ்யப் பிள்ளையான எங்க ஜிரா வந்து சொல்லுவாரு!"இளையராஜாவின் கொடி பறக்க ஆரம்பித்து விட்டது, அப்போது!
வெகுஜனக் கலைஞர்-னா அது ராஜா தான்! புதுசு புதுசா இசை கொடுப்பாரு!
கிராமத்து இசையும் கொடுப்பாரு! அதே சமயத்தில் தமிழ் சினிமா இது வரை பார்த்திராத மெட்டுகளையும் அள்ளித் தருவாரு!

இளையராஜா வீட்டு இட்லி சட்டி கூட இசை அமைக்கும்!
தோசைத் தட்டு கூடத் தோடி பாடும்! - அப்படி, இப்படி-ன்னு ஒரே புகழ்மாலை தான்!

எந்த ஒரு மகோன்னதமான இசை அமைப்பாளருக்கும், ஆறுமுகத்தால், முதலில் ஏறுமுகம், பின்னர் இறங்குமுகம்-னு இருக்கும்-ல? எல்லாமே அவன் திருவிளையாடல் தானே? மெல்லிசை மன்னருக்கு அப்போது இறங்கு முகம்!
அவரால் சூப்பர் ஹிட்களைத் தொடர்ச்சியாகத் தர முடியாத காலகட்டம்! MSV இசை out-of-date என்றெல்லாம் பேசப்பட்ட காலகட்டம்!

ராஜா-ராஜாதி ராஜன் இந்த ராஜா! ராஜா-தூக்காதே வேறு எங்கும் கூஜா!
இப்படி எல்லாம் ஒரு இசை அமைப்பாளரைப் பாடல் வரிகளில் கொஞ்சம் ஓவராகவே கொண்டாடி, கட்-அவுட் வைத்த கதையைத் தமிழ் சினிமா எப்போதும் கண்டதில்லை!

இத்தனைக்கும் ராஜா, எம்.எஸ்.வி மீது மதிப்பு வைத்திருப்பவர் தான்! ஆனால் தொழில்-னு வந்துட்டா குருவாவது? சிஷ்யராவது?? என்கிற நிலைமை!

பஞ்சு அருணாச்சலம் மூலமாகக் கச்சேரியைத் துவங்கிய ராஜா, எம்.எஸ்.வி-யின் ஆஸ்தான இயக்குனர்களை எல்லாம் கூட வலை வீசிப் பிடித்து விட்டார்!
ஸ்ரீதர், கே.பாலாஜி என்று பழைய ஆட்களும் கூட கட்சி மாறிய நேரம்! போதாக்குறைக்கு, எம்.எஸ்.வி சொந்தப் படம் எடுத்து அதனால் பணப் பிரச்சனை!

அப்போது ராஜா, தன் படங்களின் பின்னணி இசைக்கு மட்டும் எம்.எஸ்.வி அவர்களை இசை அமைக்கச் சொல்லி நிலைமையை ஓரளவு சரி செய்ய உதவியதாகச் சொல்லுவார்கள்! ஆனால் இப்படிச் செய்யப்பட்ட இசையமைப்பு பரவலாக வெளிப்படுத்தப் படவில்லை!

அந்தச் சமயத்தில் வந்த படம் தான் "மெல்லத் திறந்தது கதவு"!
ராஜா-விஸ்வநாதன் ஒற்றுமைக்காக - மெல்லத் திறந்தது கதவு!

இளையராஜாவும்-எம்.எஸ்.வியும் இணைந்து இசை அமைக்கிறார்கள் என்று பயங்கரமாக விளம்பரப் படுத்தப் பட்டது!


முதல் பாட்டே கண்ணன் பாட்டு! - கண்ணன் எம்பெருமானே ஒற்றுமைக்கு வழி வகுத்தான்!
* குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா?
அதுக்குப் பின்னாடியே இன்னொரு கண்ணன் பாட்டு! ஆனா மீனிங் தான் புரியலை!
* பாவன குரு-பவன-புராதி ஈசம் ஆச்ரயே

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி பாடல்களுக்கு இசை அமைப்பாரு!
பாடல்களின் பின்னணிக்கு, துவக்கம் மற்றும் Interlude-களுக்கு இசைஞானி இளையராஜா இசை அமைப்பாரு!
இப்படி ஒரு ஜென்ட்டில் மேன் அக்ரீமென்ட்டு போட்டுகிட்டாங்க!
பாடல்கள் அத்தனையும் இனிமை! படத்தில் மற்ற பாடல்களும் ஹிட் தான்!

* தில் தில் தில் மனதில் - SPB/சுசீலாம்மா
* வா வெண்ணிலா உன்னைத் தானே - SPB/ஜானகி
* ஊரு சனம் தூங்கிருச்சி - ஜானகி
* சக்கர கட்டிக்கு சிக்குற குட்டிக்கு - சசிரேகா & குழுவினர்
* இன்னும் ரெண்டு பாட்டு...யாராச்சும் கொமென்ட்டுல சொல்லுங்க!

கண்ணன் பாட்டுல, இன்னிக்கி அந்த ஒற்றுமைப் பாட்டு(க்கள்)!
இன்னிக்கி 96th பதிவு! 100க்கு என்ன பண்ணலாம் மக்கா?


முதலில் MSV இசையமைக்க, ராஜா பின்னணி!
* குழலூதும் கண்ணனுக்கு! - இங்கு கேட்கலாம்!

குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா?
குக்கூ குக்கூ குக்கூ!
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா?
குக்கூ குக்கூ குக்கூ!

இலையோடு பூவும், தலையாட்டும் பாரு!
இலையோடு பூவும் காயும், தலையாட்டும் பாரு பாரு!
(குழலூதும்)

மலைக்காத்து வீசுற போது, மல்லிகைப் பூ பாடாதா?
மழைமேகம் கூடுற போது, வண்ண மயில் ஆடாதா?
என் மேனி தேனரும்பு! என் பாட்டு பூங்கரும்பு!!
மச்சான் நான் மெட்டெடுப்பேன்! உன்னைத் தான் கட்டிவைப்பேன்!
சுகமாகத் தாளம் தட்டிப் பாடட்டுமா?
உனக்காச்சு எனக்காச்சு, சரிஜோடி நாமாச்சு,கேளைய்யா!

(குழலூதும்)

கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா?
கற்கண்டு சக்கரை எல்லாம் இப்பத் தான் கசக்குறதா?
வந்தாச்சு சித்திரை தான்! போயாச்சு நித்திரை தான்!
பூவான பெண்ணைத் தொட்டா, ராவானா ஏங்குது தான்!
மெதுவாகத் தூது சொல்லிப் பாடட்டுமா?
விளக்கேத்தும் பொழுதானா, இளநெஞ்சு படும்பாடு, கேளைய்யா!

(குழலூதும்)

குரல்: சித்ரா
வரிகள்: ???
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் (பாட்டுக்கு), இளையராஜா (பின்னணிக்கு)
படம்: மெல்லத் திறந்தது கதவு


இப்போ ரோல் சேஞ்ச்!
ராஜா இசையமைக்க, MSV பின்னணி!

** பாவன குரு பவன புரா! - இங்கே கேட்கலாம்!


பாவன குரு-பவன-புராதி ஈசம் ஆச்ரயே!
ஜீவன தர சங்காசம், கிருஷ்ணம் கோலோகேசம்!
பாவித நாரத கிரீசம், திரிபுவனா வனாவேசம்!!
(பாவன குரு-பவன-புராதி)

பூஜித விதி புரந்தரம், ராஜித முரளீதரம்!
விரஜ லலா (ஆ)னந்த கரம், அஜித முதாரம்!! - கிருஷ்ணா
ஸ்மர சத சுபகா (ஆ)காரம், நிரவதி கருணா பூரம்!
ராதா வதன-ச கோரம், லலிதா சோதரம் பரம்!!

(பாவன குரு-பவன-புராதி)

(இந்தப் பாட்டின் மெலடி சூப்பரா இருக்குப்பா, தப்லா-வுல வாசிப்பு!
பாட்டின் பொருள் யாராச்சும் சொன்னீங்கனா புண்ணியமாப் போகும்! அனுபவிச்சிக் கேட்கலாம்....)


குரல்: சித்ரா (தானே ???)
வரிகள்: லலிதா தாசர்
இசை: இளையராஜா (பாட்டுக்கு), எம்.எஸ்.விஸ்வநாதன் (பின்னணிக்கு),
படம்: மெல்லத் திறந்தது கதவு
ராகம்: ஹம்சானந்தி
தாளம்: ரூபகம்


படத்தில் மோகன், ராதா, நம்ம அமலா!
இசைக் கல்லூரியில் பர்தா போட்டுக் கொண்டு "பாவன குரு பவன புரா"-ன்னு பாடும் போது, பர்தாவுக்குள் அந்தக் கண்கள் சூப்பர் தான்!
என்றாலும்...படத்திலும், மனத்திலும் எப்போதும் நிக்குறது
அமலா! அமலா! அமலா! :-)

Sunday, June 08, 2008

95. சு-வா? ஜா-வா?? கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே!

அந்தக் கணத்தில், என் உதட்டில், தன் உதட்டால், முத்தெடுப்பான்-னு ரொமாண்டிக்கா பாட, இளமை ததும்பும் குரல் வேணும்-னா யாரைப் பாடக் கூப்பிடலாம்? சு-வா? ஜா-வா? :-))

எத்தனை வயதானாலும், குரல் மட்டும் என்றும் பதினாறாய், கட்டிளங் கன்னியாய் இருக்கும் S.ஜானகி அம்மா தானே அதுக்கு வந்தாகணும்!- சரி தானே சர்வேசன்? சரியல்ல தானே ஜிரா? :-))

ரொமான்டிக் கிக் இருக்குற பாடலுக்கு ஜானகி ரொம்ப பொருந்துவாங்க! - ஏன்னா ஜானகி கொஞ்சம் குரலை மாத்தி மாத்திப் பாடுவாங்க! (முக்கல் முனகல் பாட்டுக்கு ஜானகி தான் ஈசி்யாச் சரிப்பட்டு வருவாங்க)!
மற்றபடி...மெலடி, இன்னிசை, மரபு வழி இசை, மெல்லிய காதல், சோகம், ஏக்கம், தாலாட்டு-ன்னு எல்லாம் எடுத்துக்கிட்டா அப்போ சுசீலாம்மா தான்!

மயூரி புகழ் சுதா சந்திரன் பல நடனப் பாடல்கள் ஆடியிருக்காங்க. அதுல ஒரு கண்ணன் நடனப் பாட்டு இன்னிக்கு! மெல்லிசை மன்னர் MSV இசையில் ஜானகி, அவுங்களுக்கே உரிய ரொமாண்டிக் குரலில் பாடின பாட்டு!
இந்தப் பாட்டுக்கு பல தனிக் கச்சேரிகளிலும் மவுசு. தனி மேடைகளில் இந்தப் பாட்டுக்குப் பரதமும் ஆடியிருக்காங்க பொண்ணுங்க!

மயூரி சுதா சந்திரன் பற்றி மேலதிக தகவல்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்க மக்கா!

பாட்டை, இங்கே வீடீயோ-வில் பாருங்க!
கண்ணன் மனம் என்னவோ கண்டு வா தென்றலே
கங்கைக் கரை அல்லவோ காதலின் மன்றமே


அந்த மீராவைப் போல் ஏங்கினேன்
தினம் வாடாமல் நான் வாடினேன்
(கண்ணன் மனம் என்னவோ)


கானத்தில், குழல் நாதத்தில்,
ஒரு கந்தர்வ லோகத்தில் எனைக் கொண்டு சேர்ப்பான்!
மோனத்தில், அந்தி நேரத்தில்,

அவன் முந்நூறு முத்தங்கள் ஒன்றாகக் கேட்பான்!

கார் கூந்தல் தனை நீவுவான்
அதில் கல்யாண சுகம் தேடுவான்
அந்தக் கணத்தில், என் உதட்டில், தன் உதட்டால், முத்தெடுப்பான்.

வானம் எந்தன் காலில் வந்து கோலம் போடாதோ....
(கண்ணன் மனம் என்னவோ)


மோகத்தில், விழி ஓரத்தில்,
கண்ணன் பார்த்தாலும் என் நெஞ்சில் பசி ஆறிப் போகும்
காமத்தில், நடு ஜாமத்தில்,

இமை மூடாத என் கண்ணில் நதி ஓடிப் பாயும்

மை கூட கரைகின்றதே

இன்று பன்னீரும் சுடுகின்றதே
அந்தி இருட்டில் என் விழிக்குள் நின்றிருப்பான் - கண்மணிக்குள்

இங்கும் அங்கும் எங்கும் காதல் கண்ணன் கோலங்கள்!
(கண்ணன் மனம் என்னவோ)

படம்: வசந்தராகம்
குரல்: S.ஜானகி
வரிகள்:
இசை: M.S. விஸ்வநாதன்

கார் கூந்தல் தனை நீவுவான்
அதில் கல்யாண சுகம் தேடுவான்
- இதுக்குப் பொருள் என்னாங்க? கூந்தல் நீவினவங்க யாராச்சும் பெரிய மனசு பண்ணிச் சொல்லுங்கப்பா சொல்லுங்க! :-)

Thursday, June 05, 2008

94. தாயார் குளிக்கும் அழகு - வெள்ளிக்கிழமை நீராட்டம் காணுங்கள்!

குளிப்பதைக் காணலாமா? குளிர்விப்பதைக் காணலாமா?
இறைவன் இறைவிக்குச் செய்யும் திருமுழுக்கு (அபிஷேகம்), திருமஞ்சனங்கள் வெறுமனே குளிப்பாட்டும் செயல் அல்ல!
உலகையும் உலகைத் தாங்கி நிற்கும் அகண்ட பரிபூர்ண சக்தியையும் குளிர்விக்கும் செயல் அது! கண்ணாரக் கண்டு தரிசிக்க வேண்டிய காட்சி!

உங்கள் வீட்டுக் குழந்தையைக் குளிப்பாட்டும் காட்சியை எத்தனை பேர் ரசித்துப் பார்த்து இருக்கீங்க?
என்ன என்னவெல்லாம் பாப்பாவுக்கு வீட்டில் பண்ணுவாங்க?
முதலில் மிதமான இதமான வெந்நீரில் சுகந்தப் பொடிகள் தூவி, நீர் வார்த்து விளவி வைப்பாங்க! பின்பு எண்ணெய்க் காப்பு! பின்பு வாசனைத் தூள் சீயக்காய் சேர்த்து, பூசி நீராட்டுவாங்க!

குளித்து முடித்ததும், தலையும் மேனியும் துவட்டி, பஞ்சுத் துவாலையால் ஒத்தி ஒத்தி எடுப்பாங்க!
கூடைக்கு அடியில் சாம்பிராணிப் புகை போட்டு, பாப்பாவின் கூந்தலை கூடை இடுக்கில் காட்டி நறுமணம் சேர்ப்பாங்க! ஆகா...அந்தக் காட்சியே காட்சி அல்லவா? இப்பவும் யாராச்சும் கூடை-சாம்பிராணிப் புகை காட்டுறாங்களா?

பின்பு மேனியெங்கும் பவுடர் பூசி, நெற்றியில் திலகமிட்டு, கன்னத்தில் கருஞ்சாந்து பொட்டு வைத்து திருஷ்டி கழிப்பாங்க! பட்டாடை உடுத்தி, நவமணி நகைகள் பூட்டி, கண்ணே நவமணியே என்று கண்ணேறு கழிப்பாங்க! "நாரணா நீராட வாராய்"-ன்னு பெரியாழ்வார் குழந்தைக் கண்ணனின் நீராட்டுக்கு என்றே பல பாசுரங்கள் பாடியுள்ளார்!குழந்தைக்குச் செய்வதையே தான், இங்கு தாயாருக்கும் செய்கிறார்கள்!
தாயார் யார்? யாருக்குத் தாயார்? - எனக்கா? உனக்கா? உங்களுக்கா?
அவனுக்கா? அவளுக்கா? தேவனுக்கா? அசுரனுக்கா? விலங்குக்கா?
அனைவருக்கும் தாயார் அவள்! உலகன்னை! ஜகன் மாதா! ஜன்ம மாதா!

நம்மை ஈன்ற தாய் இந்த ஒரு ஜன்மத்துக்கு மட்டும் தான் அன்னை ஆகிறாள்! ஆனால் இவளோ ஜென்ம ஜென்மத்துக்கும் அன்னை!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நம் ஜீவனுக்குப் பாலூட்டிச் சீராட்டும் அம்மா!

அவளை நீராட்டும் திருமஞ்சனக் காட்சி கீழே! கீழ்த் திருப்பதி என்று சொல்லப்படும் திருச்சுகனூர்! (திருச்சானூர்).
அங்கே அன்னைக்குப் பார்த்து பார்த்துச் செய்யும் ஸ்நானாதி தூப தீப சேவை! கீழுள்ள வீடியோவில் கண்ணாரக் காணுங்கள்!

சிவாலயங்களில் அபிஷேகம் என்றால் பெருமாள் ஆலயங்களில் திருமஞ்சனம்...நீரில் கொஞ்சம் மஞ்சள் கலந்து நீராட்டுவதால் இந்தப் பெயர்! அவ்வளவு தான் இரண்டிற்கும் வித்தியாசம்! அந்த நீரில் சுகந்த பரிமள பொருட்களான பச்சைக் கர்ப்பூரம், ஏலக்காய், வெட்டிவேர், மலர்கள்,
எல்லாவற்றுக்கும் மேலாக மிக மிகப் பவித்திரமான துளசீ தளம்!
நீர்-பால்-தயிர்-தேன்-இளநீர் என்று பஞ்சாமிர்த முழுக்கு!


ஒவ்வொரு அபிஷேகம் முடிந்ததும் தூபம் காட்டி, பட்டுத் துணியால் ஒத்தி எடுப்பது வழக்கம்!
ஐந்து அபிஷேகங்களும் முடிந்த பின் மஞ்சள் காப்பு செய்து, குங்குமப் பூ இடுகிறார்கள்! ஆயிரம் துளைகள் கொண்ட தாம்பாளத் தட்டின் வழியாக, தாரை தாரையாக அபிஷேகம்! சஹஸ்ர தாரை என்று பெயர்!
Shower Bath என்று சொல்லலாமா? :-)

கண்ணாரச் சேவித்துக் கைகூப்பி மகிழுங்கள்! நம்மைச் சிறுவயதில் குளிப்பாட்டிய அன்னைக்கு, இன்று நாம் செய்யும் திருமஞ்சனம்!
இசையரசி எம்.எஸ்.அம்மாவின் தேன் குரலில், அன்னமாச்சார்ய கீர்த்தனை பின்னணியில் ஒலிக்கிறது! அதை எளிமையான தமிழாக்கம் செய்துள்ளேன்! பாட்டின் மெட்டு மாறாமல்!

படித்துக் கொண்டே பாடிப் பார்த்து தமிழாக்கம் எப்படி இருக்குன்னும் சொல்றீங்களா?
ஒலிச்சுட்டிகள் இதோ:
* இசையரசி எம் எஸ் அம்மா
* பாலமுரளி
* பம்பாய் சகோதரிகள்
* வீணை - காயத்ரி


ஷீராப்தி கன்யககு ஸ்ரீ மகாலக்ஷ்மி கினி
நீரஜா லயகுனு நீராஜனம்

பாற்கடல் பாவையாம் திருமகள் லட்சுமிக்கு
தாமரைத் தாய்க்கொரு தீப ஆரத்தி


ஜலஜாக்ஷி மோமுனகு ஜக்குவ குசம்பு லகு
நெலகொன்ன கற்பூரப்பு நீராஜனம்
பங்கயக் கண்ணினள் பால்முலைத் தாயினள் - அவள்
நிலையழகு கற்பூரத் தீப ஆரத்தி

அளிவேணி துருமுனகு, ஹஸ்த கமலம் புலகு
நிலுவு மாணிக்யமுல நீராஜனம்

மட்டுவார் குழலிக்கு, அவள் பங்கயக் கைநலம்
மாணிக்க மணியினால் தீப ஆரத்தி


பகடு ஸ்ரீ வேங்கடேசப் பட்டப் புராணீயை
நெகடு சதி களல குனு நீராஜனம்

அழகனவன் வேங்கடவன் பட்டத்து அரசிக்கு
நற்குண நங்கைக் கொரு தீப ஆரத்தி

ஜகதி அலமேலு மங்கா சக்கதன முல கெல்ல
நிகுடு நிஜ ஷோபனபு நீராஜனம்

அவனி அலர்மேல் மங்கைச் செல்வ நாயகி அவள்
அழகான வடிவுக்கு ஒரு தீப ஆரத்தி


ஷீராப்தி கன்யககு நீராஜனம்!ஸ்ரீ மகாலக்ஷ்மி கினி நீராஜனம்!நீரஜா லயகுனு நீராஜனம்!
பாற்கடல் பாவைக்குத் தீப ஆரத்தி!
திரு மகாலட்சுமிக்குத் தீப ஆரத்தி!
தாமரைத் தாய்க்கொரு தீப ஆரத்தி!


பாடல்: க்ஷீராப்தி கன்யககு
ராகம்: குறிஞ்சி
தாளம்: கண்டசாபு
வரிகள்: அன்னமாச்சார்யர்கண்ணன் பாட்டு இன்னும் சில நாட்களில் செஞ்சுரி அடிக்கப் போகிறது! நூறைத் தொடும் இந்த நல்வேளையில்,
அடுத்த வாரம் முழுதும் திருவரங்கப் ப்ரியா என்னும் பதிவரின் தலைமையில் சிறப்புக் கச்சேரிகள் இருக்கு! எல்லாரும் வந்து கொண்டாடி மகிழுங்கள்!
Stay Tuned! :-))

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP