Friday, May 23, 2008

93. யேசுதாஸ் குரலில், திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே!

பாடகர் யேசுதாஸ் பற்றியும் அவர் குரலில் குழைவு பற்றியும் பெரிதாக விளக்கித் தான் சொல்லவேண்டும் என்றில்லை! முருகன் பாடல்களில் எப்படி டி.எம்.எஸ் குழைவாரோ, அப்படிக் கண்ணன் பாடல்களில் யேசுதாஸ் குழைவார்!

பிரபந்தம், திருப்புகழ் போன்ற சில சந்தத் தமிழ் பாடல்களைப் பாடும் போது மட்டும் அவருக்கு உச்சரிப்பு கொஞ்சம் நாட்டியம் ஆடும்! :-)
மற்றபடி குருவாயூர் கண்ணனையும் உடுப்பி கண்ணனையும் யேசுதாஸ் அழைத்தால், கண்ணன் ஓடியே வந்திடுவான்!....கிருஷ்ணா நீ பேகனே...பாரோ!

நம்பூதிரிகள் வேண்டுமானால் அவரைத் தடுக்கலாம்! நம்புவோர் மனங்களில் தடுக்க இயலுமா? கண்ணன் மதங்களைக் கடந்து, மனங்களில் படர்வதை யார் தான் தடுக்க முடியும்?
இந்தப் பாடலைக் கேட்டு விட்டு, நீங்களே சொல்லுங்க! - சுவாமி ஐயப்பன் என்னும் படத்துக்காக, யேசுதாஸ் பாடுவது! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையில், கவியரசர் கண்ணதாசன் எழுதிய அழகிய இசைப்பாடல்!

ஒவ்வொரு வரியின் முடிவிலும் ஸ்ரீமன் நாராயணா என்று வரும்! அப்படியே யேசுதாஸ், பெருமாளிடம் டைரக்ட் லைன் போட்டுப் பேசுவது போலவே இருக்கும்! :-)

பாடலை இங்குக் கேட்கலாம்
இங்கே தரவிறக்கியும் கொள்ளலாம்!

SwamiAyyappan-Thir...
திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா - அங்கு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா

(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

உலகினைப் பாய் போல் கொண்டவன் நீயே ஸ்ரீமன் நாராயணா - அன்று
உரலுடன் நடந்த கண்ணனும் நீயே ஸ்ரீமன் நாராயணா
இரணியன் அகந்தை அழித்தவன் நீயே ஸ்ரீமன் நாராயணா - அன்று
இந்திர வில்லை முறித்தவன் நீயே ஸ்ரீமன் நாராயணா

(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே அறியாயோ நீயே - அவள்
கொடுமையை ஒழிக்க மறந்து விட்டாயோ ஸ்ரீமன் நாராயணா
தேவர்கள் உந்தன் குழந்தைகள் அன்றோ மறந்தாயோ நீயே - உன்
தெய்வ முனிவரைக் காப்பதற்கென்றே வருவாயோ நீயே

(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

தோளில் அந்தச் சாரங்கம் எடுத்து வர வேண்டும் நீயே
கணை தொடுத்திட வேண்டும் அரக்கியின் வாழ்வை அழித்திடுவாய் நீயே
அனந்த சயனத்தில் பள்ளி எழுந்து வாராய் திருமாலே - உன்
அன்பரை எல்லாம் துன்பத்தில் இருந்து காப்பாய் பெருமாளே

(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

ரதங்கள் படைகளென எழுந்து எழுந்து இன்று வீறுடன் வாருங்கள்
நாராயணன் என்னும் தலைவனின் துணையால் போர்க்களம் வாருங்கள்
வானம் இடிபடவும் பூமி பொடிபடவும் வேல் கொண்டு வாருங்கள் - இனி
வருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம் தேவர்கள் வாருங்கள்

(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

ஸ்ரீமன் நாராயணா
ஸ்ரீபதி ஜெகன்னாதா
வருவாய் திருமாலே - துணை
தருவாய் பெருமாளே


படம்: சுவாமி ஐயப்பன்
குரல்: KJ யேசுதாஸ்
வரிகள்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
அடுத்த வாரம், கண்ணன் பாட்டில், கண்ணன் பாட்டு வலைப்பூ குழுவினர் அனைவரும் பங்கேற்கும் சிறப்புக் கச்சேரி! என்னன்னு இந்நேரம் உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்!
7 Runs to Century! :-)
Boys & Girls! Ready for Field Strategy! Get, Set, Go! :-)

Sunday, May 04, 2008

92. தசாவதாரம்: கமல் பாட்டி பாடும் "முகுந்தா முகுந்தா"!

அட, நம்ம அசின் பொம்மலாட்டம் காட்டுறாங்கடே! தசாவதாரம் கதை இன்னும் ஃபுல்லாத் தெரியலை! ஆனா ஒரு விட்டுக்குள்ளாற மறைப்பாத் துணியைக் கட்டி, பின்னாடி இருந்து நிழல்-லயே பொம்மலாட்டம் நடத்துறாங்க அசின் & கோ. அசின் சும்மா துள்ளலாத் தான் இருக்காய்ங்க! :-)
(பொம்மலாட்டம் - தோல் பாவை ஆட்டம் பற்றித் திருக்குறள் கூட ஒன்னு இருக்கு! என்னான்னு கண்டு புடிங்க பார்ப்போம்)

சின்னப் பசங்க எல்லாம் கிருஷ்ணர்-கோபிகள் வேடம் கட்டி இருக்குதுங்க! வயசான பாட்டிகள் எல்லாம் கூட வேசம் கட்டுதுங்க! ஒரு பாட்டி இராவணன் மாதிரி பத்து தலையை வச்சிக்கிட்டு வாலாட்டது! திடுதிப்புனு பார்த்தா...பாட்டி இருமிக்கிட்டே பாடுது!
அடங் கொக்க மக்கா....நம்ம கமல் பாட்டியா அது??? :-)) நீங்களே பார்த்துச் சொல்லுங்க!


அழகான வீணை இசையுடன் துவங்குது பாட்டு! மிகவும் அழகான வாலி வரிகள்! நல்ல இசைக் கவிதை! அதுவும் துள்ளலான சாதனா சர்கம் குரலில்! குட் ஜாப் ஹிமேஷ் ரசம்சாதம்! :-) (அது என்னாங்க ரெஷாமிய்யா, மியா மியான்னு பேரு சரியா வாயில் வரலீங்க...)
இந்தாங்க...முழுப் பாடலையும் கேட்டுக்கிட்டே படிங்க!
முகுந்தா முகுந்தா - கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா - பிருந்தாவனந்தா அனந்தா
(முகுந்தா முகுந்தா)
வெண்ணை உண்ட வாயால் மண்ணை உண்டவா
பெண்ணை உண்ட காதல் நோய்க்கு மருந்தாக வா

(முகுந்தா முகுந்தா)
என்ன செய்ய நானோ தோல் பாவை தான்
உந்தன் கைகள் ஆட்டி வைக்கும் நூல் பாவை தான்

(முகுந்தா முகுந்தா)

(.....மிருதங்கம் கொட்டுகிறது!
ஜெய ஜெய ராம், ஜெய ஜெய ராம், சீதா ராம், ஜெய ஜெய ராம்
அசுரர் வந்தால் புன்னகைத்து பார்ப்பாய்...கொஞ்ச நேரம் ஆட விட்டு அவர் கணக்கைத் தீர்ப்பாய்-ன்னு அழகாச் சொல்லறாரு வாலி)


நீ இல்லாமல் என்றும் இங்கே - இயங்காது பூமி
நீ அறியாச் சேதி இல்லை - எங்கள் கிருஷ்ண சுவாமி
பின் தொடர்ந்து அசுரர் வந்தால் - புன்னகைத்து பார்ப்பாய்
கொஞ்ச நேரம் ஆட விட்டு - அவர் கணக்கைத் தீர்ப்பாய்


உன் ஞானம் போற்றிடாத - விஞ்ஞானம் ஏது?
அறியாதார் கதை போலே - அஞ்ஞானம் ஏது?
அன்று...அர்ஜுனனுக்கு நீ உரைத்தாயே - பொன்னான கீதை!
உன் மொழி கேட்க, உருகுகிறாளே - இங்கே ஓர் கோதை!


வாராது போவாயோ, வாசு தேவனே?
வந்தாலே வாழும், இங்கு என் ஜீவனே!
(ஜெய்..முகுந்தா முகுந்தா)

(இப்போ மனமயக்கும் கிட்டார் இசை....கூடவே ஜலதரங்கம்! சும்மாச் சொல்லக் கூடாது...ஹிமேஷ் ரெஷாம்மியா கலக்கி இருக்காரு! அவதாரங்கள் பட்டியல் - தசாவதாரத்தில் கிட்டத்தட்ட பாதிப் பட்டியல் போடறாங்க!)
மச்சமாக நீரில் தோன்றி மறைகள் தன்னைக் காத்தாய்
கூர்மமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய்
வாமனன் போல் தோற்றம் கொண்டு வானளந்து நின்றாய்
நரன் கலந்த சிம்மமாகி ஹிரணியனைக் கொன்றாய்
ராவணன் தன் தலையைக் கொய்ய ராமனாக வந்தாய்
கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய்


இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் நான்
உன் தாரம் ஆனேன்
உன் திருவடி பட்டால் திருமணமாகும்
ஏந்திழை ஏங்கு கிறேனே
மயில் பீலி சூடி நிற்கும் - மன்னவனே
மங்கைக்கு என்றும் நீயே - மணவாளனே!

(முகுந்தா முகுந்தா)

ஒவ்வொரு அவதாரத்திலும் பெருமாளுடன் திருமகளும் உருவமாகவோ, அருவமாகவோ வருவதை அழகா எளிய இனிய தமிழில் சொல்லுறாரு கவிஞர் - உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் நான் உன் தாரம் ஆனேன்!
அகலகில்லேன்! உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது! எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம்! உனக்கே நாம் ஆட் செய்வோம்! என்ற பாசுர வரிகள் எல்லாம் மனதில் இழையோடுகின்றன!


(பாட்டியின் ஸ்டைலான குரலில்...இருமிக் கொண்டே...)
உசுரோடு இருக்கான் - நான் பெற்ற பிள்ளே
ஏனோ இன்னும் தகவல் வரலே..
வானத்தில் இருந்து வந்து உதிப்பான்
சொன்னால் கேளுங்க அசடுகளே
வாடா மன்மதா...அழகா வாடா
உடனே வாடா.... வாடா.....
கோவிந்தா கோபாலா....)


முகுந்தா முகுந்தா - கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா - பிருந்தாவனந்தா அனந்தாபடம்: தசாவதாரம்
இசை: ஹிமேஷ் ரெஷாம்மியா
குரல்: சாதனா சர்கம், கமலஹாசன்
வரி: வாலி

Thursday, May 01, 2008

பல்லாண்டெனும் பதங்கடந்தானுக்கே பல்லாண்டு ..

தை மாதத்தில் சிறி வில்லிப்புத்தூர் போயிருந்தோம். "சார்! தமிழக அரசு முத்திரையில் உள்ள கோபுரம் இதுதான் " என்றவாறு பார்த்தசாரதியாய் வாய்த்த வாகனச்சாரதி ஆலயத்துள் அழைத்துச்சென்றார். கூட்டம் அதிகம் இல்லை என்றாலும் ஏதோ ஓர் முக்கிய விழா என்பது புலனாகியது. விசாரித்த போது, மார்கழி முடிந்து தை முதல் வெள்ளிக்கிழமையில் பல்லாண்டு பாடும் வைபவம் அன்று நடப்பதாகச் சொன்னார்கள்.

ஈழத்தில் சில சிவனாலாயங்களில், மார்கழிமாதம் முழுவதும் , மற்றைய திருமுறைகளைத் தவிர்த்து, மணிவாசகப்பெருமானின் திருவாசகத்துக்கே முன்னுரிமைகொடுத்து, வழிபாடுகள் அனைத்திலும் ஓதுவது வழக்கம். தைமாத முதலாம் நாளில் மறுபடியும் தேவாரத்திருமுறைகளைச் சேர்த்துக் கொள்வார்கள். இது சில இடங்கிளல் திருவெம்பாவைத் தினங்களில் மட்டும் கடைப்பிடிப்பதும் உண்டு.

ஏறக்குறைய அதுபோன்றே சிறிவில்லிப்புத்தூர் நாச்சியார் கோவில் பல்லாண்டு பாடல் வைபவமும் எனக்குத் தெரிந்தது. தீபாராதனைகள் முடிந்ததும், சூழவும் நின்றவர்கள் இணைந்து பல்லாண்டு பாடத் தொடங்கினார்கள். அழகான தமிழ இசையோடு கலந்து தேனாக ஒலித்தது.

இரு தினங்களுக்கு முன் வாகனத்தில் செல்லும் போது, ஒலித்த பாடல் மீளவும் சிறிவில்லிப்புத்தூர் காட்சிகளை நினைவுக்கொணர, வீடடிற்கு வந்து காட்சியாகவும் பார்த்து ரசித்தேன். ஆழ்வார் படத்தில் வரும் அந்தப்பாடலின் தொடக்கம் மட்டுமே பல்லாண்டு பல்லாண்டெனத் தொடங்கி, சரணத்தில் மாறுகிறது. ஆயினும் சரணத்தில் வரும் "..அவன் தாயாரைத் தாலாட்டீத் தாயாகிப்போனானே.."என்றவரிகளும், காட்சியும் , இசையும், ரொம்பவும் ரசிக்கும் படியாக இருந்தது. இங்கே உங்களோடும்...
அதைத் தேடியபோது, இதுவும் கிடைத்தது.பல்லாண்டெனும் பதங்கடந்தவனுக்குப் பல்லாண்டு கூறுதலா?. திருநெல்வேலிக்கே அல்வாவா? என்பதுபோலத் தோன்றுகிறதா?. நமக்கு விருப்பமானது, ஆண்டவனுக்கும் விருப்பமானது . வாழ்த்திப் பாடுவது நமக்குப் பிடிக்கிறது...

அடையுங்கள் அடையுங்கள் ஆண்டாள் திருவடி அடையுங்கள்

ஒருமுறை நாயகி சுவாமிகளின் வரகவிதுவத்தை ஆண்டாள் நாச்சியார் கேட்க எண்ணி அவர் கனவில் தோன்றி, தம்மை திருவில்லிபுத்தூரில் தம்மை சந்திக்கும்படி வேண்டியதை அவளிட்ட கட்டளையாக பாவித்து சுவாமிகளும் உடனே அங்கே எழுந்தருளி அங்கிருந்த அரங்கனையும், ஆண்டாளையும் தரிசித்து நின்று தமது கீர்த்தனைகளால் பாடி அங்கிருந்தவர்களை பரவச படுத்தியும் தாமும் பரவசப்பட்டார். இன்றைய ஆடி பூரம் “நல்ல நாளில்” மேலும் ஆடி வெள்ளிக்கிழமை முன்னிட்டும் அவர் அன்று பாடிய பாடல் இப்பதிவில். இப்பாடலை டி.எம்.எஸ்.அவர்கள் பாடியுள்ளார்.

பல்லவி
அடையுங்கள் அடையுங்கள் ஆண்டாள் திருவடி அடையுங்கள்
நம் ஆண்டாள் திருவடி அடையுங்கள் (அடையுங்கள்)


அநுபல்லவி
விடையேறும் சிவனாதி தேவர்கள் போற்றும்
நடனகோபாலனிடம் சேர்த்திடுவாள் (அடையுங்கள்)


சரணங்கள்
பவரோக அவதி தீரும் பஞ்சேந்திரியம் ஒன்றாய்ச் சேரும்
தவமாம் நல்வழி கைகூடும் தாரணியோர் வாய்புகழ் பாடும்
சவமாய் உடலம் தரைசாய்ந்திடுமுன்
புவனம்தனில் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

தாமசமாம் குணம் ஒழியும் சாகர சஞ்சலம் ஒழியும்
நேமமிகும் வழி தெரியும் நிஜமாகிய பக்தி விரியும்
பாமர வாழ்கையிலே கிடந்தலையாமல்
க்ஷேமம் தரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

நித்யானந்தவாழ்வு நிலை அடையாதிருப்பதே தாழ்வு
பக்திசெய்திடுவார்க்கே வாழ்வு பலநெறி நடப்பவர்கே தாழ்வு
செத்துப்போமாக்கை நித்தியமென்றிருக்காமல்
சித்திதரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

தன்னருட்காளாயிடலாம் தாஸர்களுக்குத் தாஸனாகலாம்
விண்ணவர் கிருபைக்காளாயிடலாம் வீதிகள்தோறும் பாடி ஆடலாம்
எண்ணம்பல வழிநண்ணி கெட்டலையாமல்
அண்ணல் வாழும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

கேட்ட வரம்தனை அளிப்பாள் கிருபாசாகரமாய் இருப்பாள்
கூட்டங்கூட்டமாய் அழைப்பாள் கொணர்ந்து ஸமர்ப்பித்ததே வகிப்பாள்
சேட்டைவளர் ஜெகம்தனில் திரிந்தலையாமல்
ஆட்டமிகும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

இகபர வாழ்வு பலிக்கும் எண்ணமது நல்வழி நிலைக்கும்
சுகமென்மேலும் பலிக்கும் தொண்டுசெய்திடும் பக்தி வலுக்கும்
இகவாழ்வே சுகமென்றிடரடையாமல்
அகமகிழும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

இருவினையும் குடிவாங்கும் இகமேற் பற்பல இடர் நீங்கும்
குருவருளும் தானோங்கும் கோபாலன் திருவடி தலை தாங்கும்
வறுமைதரும் வையம் திரிந்தலையாமல்
அரி அருளாய் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

பந்தமறும் பாத்தியமாம் பரமானந்த ஹிருதயமாம்
அந்தகன் வந்தனம் செய்வான் ஹரிவந்து கொடு நெறி செய்வான்
இந்தவகிலமே சொந்தமென் றலையாமல்
அந்தமிகும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

மிடியாரிருவினைகள் பொடியாம் மேலாமிடமேறப் படியாம்
நெடியோனடி குடியாம் நீங்கா செல்வத்துக்கடியாம்
படிவாழ்வதென அப்படி அலையாமல்
அடியார் மகிழ் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

துன்பவினை ஓடி வரும் துணை தொண்டரருள் கிருபை நாடி வரும்
இன்பகவி பாடவரும் ஹிருதயம் ஒளிவுதயமாகும்
துன்ப சரீர போகம் இன்பமென்றடையாமல்
அன்பர்குழாம் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

வித்தமதருளும் கைசேரும் விளையும் துன்பவினை தீரும்
நித்தமும் கைங்கர்யம் நேரும் நெஞ்சமதிலே வஞ்சம் தீரும்
பித்தமர் உலகுதனில் திரிந்தலையாமல்
அத்தன் தரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

வடபத்ராரியர் அருள்பெறலாம் மலராளை சந்நதிக்கே பெறலாம்
நடனகோபாலன் கிருபை பெறலாம் நாயகியார் எனும் பேர் பெறலாம்
சடலமதை நம்பி கெட்டலையாமல்
திடவில்லிபுத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

அடையுங்கள் அடையுங்கள் ஆண்டாள் திருவடி அடையுங்கள்
நம் ஆண்டாள் திருவடி அடையுங்கள் (அடையுங்கள்)


அடையுங்கள் ஸ்ரீஆண்டாளின் திருவடிகளை அடையுங்கள்.

விடையேறும் சிவனாதி தேவர்கள் போற்றும்
நடனகோபாலனிடம் சேர்த்திடுவாள் (அடையுங்கள்)


அந்த நந்தீஸர் மீது வலம் வரும் மஹாதேவன் ஈசனும் ஏனைய தேவர்களும் போற்றும், அந்த நடன கோபாலனிடம் சேர்த்திடுவாள். எனவே ஆன்றோர்களே! சான்றோர்களே! அடையுங்கள், அவளடியை அடையுங்கள். இந்த அனுபல்லவியில், மார்கழி மாத திருப்பாவை பாடினால் நடன கோபாலனிடம் சேர்ந்திடலாம் என்பதை மறைபொருளாக சொல்லியிருக்கிறார் சுவாமிகள்.

சரணங்கள்
பவரோக அவதி தீரும் பஞ்சேந்திரியம் ஒன்றாய்ச் சேரும்
தவமாம் நல்வழி கைகூடும் தாரணியோர் வாய்புகழ் பாடும்
சவமாய் உடலம் தரைசாய்ந்திடுமுன்
புவனம்தனில் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)


மாறி பிறவி எடுக்க வைக்கும் இப்பிறவி பிணிதன்னை அதிகரிக்கும் ஐந்திரியங்களும் ஒன்றாகும், பல காலம் தவம் செய்தாலும் கிட்டாத நல்வழியாம் வைகுண்ட வழி கைகூடும். உன்னை ஏசி திறிந்த உலக்கதார் வாய் உன்னை புகழ்வர், இறந்து தரை சேற்வதற்க்கு முன்னால், உலகிலிருக்கும் திருவல்லி புத்தூருக்கு சென்று ஆண்டாளை சரணனடையுங்கள்.


தாமசமாம் குணம் ஒழியும் சாகர சஞ்சலம் ஒழியும்
நேமமிகும் வழி தெரியும் நிஜமாகிய பக்தி விரியும்
பாமர வாழ்கையிலே கிடந்தலையாமல்
க்ஷேமம் தரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

எல்லாவற்றையும் தள்ளி போடும் தாமச குணத்தை ஒழிக்கும், சஞ்சலங்களை ஒழிக்கும், நேசம் மிகுந்து விடும், வைகுண்ட வழிதெரியும், என்றும் உண்மையான பக்தி வழி தெரியும், ஏதும் தெரியாத பாமர வாழ்வு வாழ்வதை விட, எல்லா நன்மைகளையும் அள்ளி தரும் அந்த திருவல்லிபுத்தூர்தனில் உறையும் தெய்வமான ஆண்டாளை சரணடையுங்கள்.

நித்யானந்தவாழ்வு நிலை அடையாதிருப்பதே தாழ்வு
பக்திசெய்திடுவார்க்கே வாழ்வு பலநெறி நடப்பவர்கே தாழ்வு
செத்துப்போமாக்கை நித்தியமென்றிருக்காமல்
சித்திதரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)


நித்யமும் ஆனந்த வாழ்வு தரும் நிலை அடைவதே வாழ்வு அதை அடையாமல் அடைய முயற்ச்சிக்காமல் இருப்பது வாழ்வல்ல அது தாழ்வு, என்றும் இருப்போம் என்று இருமாப்பு கொள்ளாமல் அனைத்து சித்திகளையும் தரும் திருவல்லிபுத்தூர்தனில் இருக்கும் ஆண்டாளை சரணடையுங்கள்.

தன்னருட்காளாயிடலாம் தாஸர்களுக்குத் தாஸனாகலாம்
விண்ணவர் கிருபைக்காளாயிடலாம் வீதிகள்தோறும் பாடி ஆடலாம்
எண்ணம்பல வழிநண்ணி கெட்டலையாமல்
அண்ணல் வாழும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

அவளை கரம் பற்றியவனின் அருளுக்கு ஆளாயிடலாம் அவனடியாருக்கு அடியாராகிடலாம், தேவர்களுக்கு ஆளாயிடலாம் வீதிகள் தோறும் ஆடி பாடிடலாம். பல வழி உண்டு என்ற எண்ணி கெட்டு அலையாமல், அண்ணலாம் திருவரங்கன் எழுந்து வந்து ஆண்டாளை கரம்பற்றிய திருவல்லிபுத்தூர்தனில் சென்றடையுங்கள்.

கேட்ட வரம்தனை அளிப்பாள் கிருபாசாகரமாய் இருப்பாள்
கூட்டங்கூட்டமாய் அழைப்பாள் கொணர்ந்து ஸமர்ப்பித்ததே வகிப்பாள்
சேட்டைவளர் ஜெகம்தனில் திரிந்தலையாமல்
ஆட்டமிகும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

கேட்டதை வரமாக தரும் கற்பக தருவான, அன்பு கடலான இருப்பவளை வணங்க, குழுவாக, கூட்டமாக ஒன்றாக வர அழப்பவளாம், அவளை பூ,இலைகளை சமர்ப்பித்து, சூட்டி, எப்போதும் அனர்த்தங்கள் அதிகரிக்கும் இவ்வுலகம் தன்னில் அலையாமல், எப்போதும், திருவிழாகோலம் கொண்டிருக்கும் திருவல்லிபுத்தூர் தனிலிருக்கும் ஸ்ரீஆண்டாளை சரணடையுங்கள்.

இகபர வாழ்வு பலிக்கும் எண்ணமது நல்வழி நிலைக்கும்
சுகமென்மேலும் பலிக்கும் தொண்டுசெய்திடும் பக்தி வலுக்கும்
இகவாழ்வே சுகமென்றிடரடையாமல்
அகமகிழும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

அவ்வுலக வாழ்வு கிட்டும், எண்ணங்கள் நல்வழியில் நிலைக்கும்,
சுகம் மென் மேலும் பெருகும் கிட்டும், தொண்டு செய்ய செய்ய பக்தி வலுக்கும், அதிகரிக்கும். இவ்வுலக வாழ்வே சுகம் என்று தளர்வடையாமல், உள்ளம் மகிழ வைக்கும் திருவல்லிபுத்தூரில் உறையும் ஸ்ரீஆண்டாளை அடையுங்கள்.

இருவினையும் குடிவாங்கும் இகமேற் பற்பல இடர் நீங்கும்
குருவருளும் தானோங்கும் கோபாலன் திருவடி தலை தாங்கும்
வறுமைதரும் வையம் திரிந்தலையாமல்
அரி அருளாய் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

வல்வினை, தீவினை இருவினைகளை, மறுபிறப்பை மீண்டும் மீண்டும் பற்பல முறை பிறவி எடுக்கும் இடரை நீக்கும், குருவருளையும், தான் ஆளும் கோபாலன் திருவடியை உன் தலைக்கு அளித்து, வறுமையான சிறுமை, அறியாமையை இவ்வுலகில் திரிந்தலையாமல், ஹரியின் அருளாக, அருளுடன் திருவல்லிபுத்தூருக்கு சென்றடையுங்கள்.

பந்தமறும் பாத்தியமாம் பரமானந்த ஹிருதயமாம்
அந்தகன் வந்தனம் செய்வான் ஹரிவந்து கொடு நெறி செய்வான்
இந்தவகிலமே சொந்தமென் றலையாமல்
அந்தமிகும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

பந்தங்களை அறுக்கும் பத்தியாமாம், அந்த பரமானந்த ஹிருதயமாம், அரங்கனிடம் சேர்ப்பாள், கண்தெரியாத அந்தகனாய், அறியாமை கண்மறைக்கும் அந்தகனை ஹரி வந்து ஆட்கொள்ள இருக்கும் நீ, இந்த உலகமே உன் எல்லை என்றில்லாமல், ஆதி அந்தமில்லா ஊரான திருவல்லிபுத்தூருக்கு சென்றடையுங்கள்.நேற்றைய பதிவின் தொடர்ச்சி,

மிடியாரிருவினைகள் பொடியாம் மேலாமிடமேறப் படியாம்
நெடியோனடி குடியாம் நீங்கா செல்வத்துக்கடியாம்
படிவாழ்வதென அப்படி அலையாமல்
அடியார் மகிழ் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

இவ்வுலக அடியார்களின் இருவினைகளும் தீர்ந்துவிடும், விண்மண் மண் அளந்த நெடியோனின் அடியார் குடியாம், குறையாத செல்வத்துக்கு அடித்தளமாம், அதன்படி தான் வாழ்கிறோம் என்று திரியாமல், அடியார்கள் கூடி மகிழும், திருவல்லிபுத்தூரதினில் சென்று ஆண்டாளின் பாதகமலங்களை பற்றி கொள்ளுங்கள்.

துன்பவினை ஓடி வரும் துணை தொண்டரருள் கிருபை நாடி வரும்
இன்பகவி பாடவரும் ஹிருதயம் ஒளிவுதயமாகும்
துன்ப சரீர போகம் இன்பமென்றடையாமல்
அன்பர்குழாம் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

துன்பவினைகள் உங்களை நோக்கி ஓடி வரும் அதை தடுக்க, அதன் பாதயிலுருந்து அகன்று தொண்டரருளை துணையாக கொண்டு விட்டால், அவனடியார்கள் கிருபை நாடி வரும், நீங்களும் பன்னெடுத்து பாடலாம், உங்கள் உள்ளத்தில் தெளிவும், ஒளியும் பிறக்கும், துன்பங்கொண்ட சரீரத்தால் போகத்தை நிலையான இன்பம் என்று இருக்காமல், அடியார் குழாத்துடன், ரெங்கமன்னர் வழும் தலமாம் திருவல்லிப்புத்தூர் தன்னில் சரணடையுங்கள்.

வித்தமதருளும் கைசேரும் விளையும் துன்பவினை தீரும்
நித்தமும் கைங்கர்யம் நேரும் நெஞ்சமதிலே வஞ்சம் தீரும்
பித்தமர் உலகுதனில் திரிந்தலையாமல்
அத்தன் தரும் புத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

வித்தைகளை தினமும் அருளி கைகூடவைக்கும், விளைகின்ற துன்பவினைகள் தீரும், நித்தமும் பகவத் கைங்கர்யம் செய்ய உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும், நெஞ்சத்தில் உள்ளத்தில் ஏற்படும் அழுக்கான அழுக்காறு, வஞ்சங்கள் தீர்ந்து விட செய்யும். துன்ப வினைகள் கொண்ட பித்தத்துடன் இந்த உலகில் திரியாமல், அத்தனையும் செல்வங்களும் தரும் திருவல்லிபுத்தூரதனில் சென்றடையுங்கள்.

வடபத்ராரியர் அருள்பெறலாம் மலராள் சந்நதிக்கே பெறலாம்
நடனகோபாலன் கிருபை பெறலாம் நாயகியார் எனும் பேர் பெறலாம்
சடலமதை நம்பி கெட்டலையாமல்
திடவில்லிபுத்தூரதனில் சென்றடையுங்கள் (அடையுங்கள்)

வடபத்ரரின் அருள்பெறலாம், மலராளாம், பூமகளின் திருஅவதாரமாம் ஆண்டாளின் சந்நதியை அடைந்தாள் அவை அனைத்தும் பெறலாம், உயிருள்ள சடலமான இவ்வுடலை நம்பி கெட்டலையாமல், உண்மையான-திடமான நம்பிக்கை தரும் திருவல்லிபுத்தூரதனில் சென்றடையுங்கள்.

தமிழக அரசின் சின்னத்திலும் இத்திருவல்லிபுத்தூரின் கோவிலின் கோபுரம் இடம்பெற்றிருப்பது குறிபிடத்தக்கது.

***

'மதுரையின் ஜோதி' பதிவில் நண்பர் சிவமுருகன் இட்ட இடுகை இது. கண்ணன் பாட்டில் கண்ணன் துணைவியின் மேலும் பாடல்கள் இடலாம் என்று நம்பி அதனை எடுத்து இங்கும் இடுகிறேன். :-)

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP