Monday, March 29, 2010

பி. சுசீலா - ஒரே பாட்டில் கண்ணன்+முருகன் பாட்டு!

முருகனருள்-150 உற்சவத்தின் தொடர்ச்சியாக...
கண்ணன் பாட்டிலே, சுசீலாம்மாவின் ஒரு மோகனமான பாட்டு!
இந்தப் பாட்டில், சுசீலாம்மா, கண்ணனையும் முருகனையும் மாற்றி மாற்றிப் பாடி, இசைமாலை சூட்டுவார் மாயோனுக்கும் சேயோனுக்கும்!

அட, அப்படி ஒரு பாட்டு இருக்கா என்ன?

இருக்கே! கண்டு புடிங்க பார்ப்போம்! இந்தப் படத்தில் வரும் இன்னொரு பாடல்...ரொம்பவே ஹிட்!
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல!
நீ இல்லாமல் நானும் நானல்ல!
தெய்வத்தின் முன்னே...நீயும் நானும் வேறல்ல!

இந்தப் பாட்டை...இப்பல்லாம்...தினமுமே கேட்பதால்...அப்படியே தங்கி விட்டதா? அதான் டக்-குன்னு இந்த முருகன்+கண்ணன் பாட்டும் ஞாபகத்துக்கு வந்துருச்சி! சரி முருகனருள்-150 உற்சவத்துக்கு வசதியா இங்கு இட்டு விட்டேன்! :)



என்ன கண்டு புடிச்சாச்சா? :)
படம் = இதய கமலம்! சரி தான்! ரவிச்சந்திரன் - கே.ஆர்.விஜயா

எந்தப் பாட்டு? = மலர்கள் நனைந்தன பனியாலே!

இது அவர் பாடிய மற்ற பக்திப் பாடல்கள் போலவே இருக்காது! ஏதோ வசீகரமான காதல் பாட்டு போலத் தான் இருக்கும்! (ஒரு வேளை என் காதுக்குத் தான் இப்படித் தோனுதோ? :)

நடுநடு-ல கண்ணன், முருகன்-ன்னு வருவதால், இது ஏதோ சாமிப் பாட்டு-ன்னு சொல்லலாமே தவிர...
இந்த இனிய மோகன மெலடி...என் மனம் மயக்கும் காதல் பாட்டே தான்! சந்தேகமே இல்லை!

கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி-ன்னு அவங்க கண்ணனைப் பாடும் போது, கண்ணாடி முன்னாடி போய் நின்னுக்குவேன், முருகனால் காயம் இருக்கா-ன்னு பார்க்கத் தான்! :)
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
உன்னோடிருப்பேன் மலர் அடி போற்றி-ன்னு அவங்க முருகனைப் பாடும் போது...என்ன சொல்ல.....முருகா, முருகா, நான் உன்னோடு இருப்பேன்! என்னிக்கும் இருப்பேன்! நீ இல்லாமல் நானும் நானல்ல!



* பாடலின் துவக்கத்தில் வரும் புல்லாங்குழல் இசை! Prelude - Dont Miss!
* பாடலின் நடுவில் வரும் மிருதங்க பீட்! போராடி-நீராடி-கண்ணாடி-முன்னாடி! That Interlude - Dont Miss!

மயக்கும் மோகன ராகத்தில்...
மயக்கும் சுசீலாம்மா மெலடியை...
கேட்டுக்கிட்டே படிங்க!


படம்: இதயக் கமலம்
குரல்: பி.சுசீலா
இசை: கே.வி. மகாதேவன்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
ராகம்: மோகனம்

ஆண்டிக் கோல முருகனும், கண்ணனும்! - யார் இதுல தண்டாயுதபாணி? :)


மலர்கள் நனைந்தன பனியாலே!
என் மனதும் குளிர்ந்தது நிலவாலே!
பொழுதும் விடிந்தது கதிராலே!
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே!
(மலர்கள் நனைந்தன)

கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்!
இரு கன்னம் குழி விழ நகை செய்தான்!
என்னை நிலாவினில் துயர் செய்தான்!
அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்!

சேர்ந்து மகிழ்ந்து போராடி!
தலை சீவி முடித்தே நீராடி!
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி!
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி!
(மலர்கள் நனைந்தன)

இறைவன் முருகன் திருவீட்டில்,
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி,
உயிரெனும் காதல் நெய்யூற்றி,
உன்னோடிருப்பேன் மலரடி போற்றி!
(மலர்கள் நனைந்தன)


இதே மெட்டில் வேற என்ன பாட்டெல்லாம் ஞாபகம் வருது-ன்னும் சொல்லுங்க பார்ப்போம்!
சாம்பிளுக்கு நான் துவங்கி வைக்கிறேன்!
* ஆஹா இன்ப நிலாவினிலே - மாயாபஜார்
* கங்கை யமுனை இங்குதான் சங்கமம் - இமயம்

பாட்டு நல்லா இருந்திச்சா?
இப்போ சொல்லுங்க,
சுசீலாம்மா பாடுவது...கண்ணன் பாட்டா? முருகன் பாட்டா? :)

Tuesday, March 23, 2010

கணபுரத்தென் கருமணியே ! இராகவனே தாலேலோ !



மன்னுபுகழ் கௌசலை தன் மணிவயிறு வாய்த்தவனே !
தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் ! செம்பொன் சேர்
கன்னிநன் மாமதிள்  புடைசூழ்  கணபுரத்தென் கருமணியே !  
என்னுடைய இன்னமுதே ! இராகவனே தாலேலோ !

[பெருமாள் திருமொழி (8-1)]

மேலே உள்ள திவ்ய பிரபந்த பாசுரம், குலசேகர ஆழ்வார் ராமனைக் குழந்தையாக பாவித்து தாலாட்டாக பாடியது.   இன்று ராம நவமியை முன்னிட்டு இந்தப் பாடல்களை பதிவு செய்யலாம் என்று வந்தால், நம் குமரன் ஏற்கனவே இங்கே பொருளுடன் பதிவு செய்துள்ளார். :)

சரி, அதனால் என்ன? இந்த முறை ஆழ்வார்களின் பாசுரங்களே வாழ்வாகக் கொண்ட "அரையர் சுவாமி ஸ்ரீ ராமபாரதி"யின் குரலில் இந்த பாசுரங்களை இங்கு கேட்டு மகிழலாம்.


புண்டரிக மலர் அதன் மேல் புவனியெல்லாம் படைத்தவனே!
திண் திறலாள் தாடகை தன் உரம் உருவச் சிலை வளைத்தாய்!
கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்தென் கருமணியே!
எண் திசையும் ஆளுடையாய்! இராகவனே! தாலேலோ!

கொங்கு மலி கருங்குழலாள் கோசலை தன் குலமதலாய்!
தங்கு பெரும் புகழ்ச் சனகன் திருமருகா! தாசரதீ!
கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்தென் கருமணியே!
எங்கள் குலத்தின்னமுதே! இராகவனே! தாலேலோ!



தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே! தசரதன் தன்
மாமதலாய்! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே!
ஏமருவும் சிலை வலவா! இராகவனே! தாலேலோ!



பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே!
சீராளும் வரை மார்பா! திருக்கண்ணபுரத்தரசே!
தாராளும் நீண்முடி என் தாசரதீ! தாலேலோ!
 
 
சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே!
அற்றவர்கட்கு அருமருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிற்றவை தன் சொல்கொண்ட சீராமா! தாலேலோ!
 
ஆலின் இலைப் பாலகனாய் அன்றுலகம் உண்டவனே!
வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே!
காலின் மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே!
ஆலிநகர்க்கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ!
மலையதனால் அணை கட்டி மதிளிலங்கை அழித்தவனே!
அலைகடலைக் கடைந்து அமரர்க்கு அமுதருளிச் செய்தவனே!
கலை வலவர் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிலை வலவா! சேவகனே! சீராமா! தாலேலோ!


தளை அவிழும் நறுங்குஞ்சித் தயரதன் தன் குலமதலாய்!
வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை அழித்தவனே!
களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்தென் கருமணியே!
இளையவர்கட்கு அருளுடையாய்! இராகவனே! தாலேலோ!



தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கணபுரத்தென் கருமணியே!
ஏவரி வெஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ!





கன்னி நன் மா மதிள் புடை சூழ் கணபுரத்தென் காகுத்தன்
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடைக்குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே!

அப்படியே, ராம நவமியை முன்னிட்டு திருவரங்க ப்ரியா (என்ற நம் ஷைலஜா அக்கா)
பாடிய பஜன் - "ராமா ராகவா ஜெய சீதா நாயகா" இங்கே கேட்கலாம். :-)

~
கிரிதாரியின்,
ராதா

Thursday, March 18, 2010

பி.சுசீலா - ஜெயதேவர் அஷ்டபதி - காதலா? காமமா?

பிருந்தாவனம்! யமுனைத் துறை!
புன்னை மரத்து நிழல் கீழே, நினைவென்னும் காதல் மடி மேலே, தலை வைத்து மெல்லியதொரு தூக்கம்! கலங்காது கை கோர்த்து சேரும்...கண்ணோரம் ஆனந்த ஈரம்...

அப்போது, இசையரசி பி.சுசீலாம்மா பாடிக் கொண்டே, தலையைத் தடவிக் கொடுத்தால் எப்படி இருக்கும்?
அந்த உறக்கத்தின் கிறக்கத்தில் உதித்தது தான்.....இந்தப் பதிவு! இப்போது என் துக்கங்கள்-தூக்கங்கள் எல்லாமும் அப்படியே!!




ஜெயதேவர்-ன்னா ஒரு சிலருக்கு தெரிஞ்சிருக்கும்-ன்னு நினைக்கிறேன்! (1200 CE)
அஷ்டபதி-ஜெயதேவர்-ன்னு சொன்னாக்கா, இன்னும் சில பேருக்குத் தெரிஞ்சிருக்கலாம்!
ஒரிஸ்ஸா மாநிலக் கவிஞரான, அவர் எழுதிய காதல் காவியம் தான்.....அஷ்டபதி என்கிற கீத-கோவிந்தம்!

பேரில் என்னமோ கீத கோவிந்தம்-ன்னு "கோவிந்தம்" இருக்கு!
ஆனால் படிக்கறப்போ "வேற மாதிரி" இருக்கே!
இது பக்திக் காவியமா? காதல் காவியமா? காமக் காவியமா? :)

எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது! காதலே காமம் ஆகி, காமமே காதலாகி விட்டால்...எனக்கு எதுவும் தெரியாது! :)

சரி, அது என்ன அஷ்ட-பதி?
கல்யாணம் ஆகும் போது, தீவலம் செய்து, 7 அடி எடுத்து வைப்பதை, சப்த-பதி-ன்னு சொல்லுவாய்ங்க!
இது கல்யாணம் ஆவதற்கும் முன்னாடியே (Pre Marital) என்பதால், ஒரு "அடி" கூடவா? அதான் அஷ்ட-பதியா?? :)

மொத்தம் 12 சர்க்கம், 24 பாடல்கள்!
ஒவ்வொரு பாட்டும் 8 பத்திகள், பதிகள்! அதுவே அஷ்ட பதி!

அஷ்டபதி என்பது சிருங்கார ரசம் சொட்டச் சொட்ட ஒரு நாட்டிய நாடகம்!
புன்னை இலைகளால் ஒரு படுக்கை தயார் செய்யும் கண்ணன்...
அவன் அருகில் வரும் வேளையில், அவனை ஒதுக்கி, கீழே தள்ளிவிடும் ராதை!
கண்ணன் உடம்பிலும் அடி, உள்ளத்திலும் அடியா?? ஹைய்யோ! திடீரென்று, என்னவாயிற்று இந்த ராதைக்கு?


* ராதையின் அகங்காரம், ராதையின் திமிர்,
* ராதையின் கோபம், ராதையின் தாபம்,
* ராதையின் ஊடல், ராதையின் தேடல்,
* ராதையின் சாதல், ராதையின் காதல்,
* ராதையின் பேதை, ராதையின் மேதை,
இவை எல்லாமே நாடகத்தில் போட்டி போட்டுக் கொண்டு நடிக்கின்றன!

அதனால் தான், பின்னாளில்...
கண்ணனின் வாழ்வு கூட்டத்தில் கலக்க, ராதையின் வாழ்வு தனிமையில் கலந்து போனது!
கண்ணன் தனக்கா? உலகத்துக்கா? என்று வந்த போது...
தன் முகம் காட்ட மறுத்தாள்! முகவரியை மறைத்தாள்!

வியாசரும், சுகப் பிரம்மும் கூட, அவளை, அவர்கள் காவியத்தில் எழுதத் திணறி...முடியாமலயே போனது!
இன்றும் கூட, ராதை என்பவள் இருந்தாளா? = மகாபாரதத்திலும் ஸ்ரீமத் பாகவதத்திலும்...தேடினாலும் கிடைக்காது!

அவள் இருந்தாளா? = அவளுக்கும் அவனுக்கும் மட்டுமே தெரியும்! எனக்கும் தெரியும்!
கண்ணனின் சோலையில் அவள் சுகந்த பரிமள வாசத்தை...காண முடியாது! முகர மட்டுமே முடியும்! முகர...முகர...முருகா!

* என் பால் நோக்காயே ஆகிலும்...உன் பற்றல்லால் பற்றில்லேன்!!
அவள் "பரிசுத்தமான காமம்"! = அதுவே "கீத கோவிந்தம்"!!!


திரைப் பாடலைக் கேட்டுக் கொண்டே, பதிவை வாசியுங்க!


அல்லது...கேட்க/தரவிறக்க மட்டும் இதோ!
பதிவின் இறுதியில் இதர கலைஞர்களின் குரலில், இதே பாடல்!



வடமொழியில் உள்ள வரிகளை, கிட்டத்தட்ட அதே மெட்டில் தமிழாக்கி உள்ளேன்!
தமிழில் சரியாப் பொருந்தி வருதா?-ன்னும் பார்த்துச் சொல்லுங்க!


படம்: தெனாலி ராமகிருஷ்ணா (தெலுங்கு)
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - பி.ராமமூர்த்தி
(மயக்கும்) குரல்: சுசீலாம்மா
கலைஞர்கள்: ஜமுனா, பானுமதி, என்.டி.ஆர், நாகேஸ்வர ராவ்

சந்தன சர்ச்சித நீல கலேவர
பீத வசன வனமாலி
கேலி சலத் மணி குண்டல மண்டித
கண்ட யுக ஸ்மித ஷாலி
ஹரி ரிஹ முக்த வதூ நிகரே
விலாசினி விலசதி கேலிபரே

சந்தனம் சிந்திடு்ம் நீல மேனி தனில்
பொன்பட்(டு) உடை வனமாலை!
தந்தன தந்தன குண்டலம் ஆடிட
மோகனப் புன்னகை லீலை!!
கண்ணனின் கன்னியர் நாணமும் ஆசையும்
கண்டு கொண்டே விளை யாடினரே!

காபி விலாச விலோல விலோசன
கேலன ஜனித மனோஜம்
த்யாயதி முக்த வதூ அதிகம் - மது
சூதன வதன சரோஜம்!
(ஹரி ரிஹ...கேலி பரே)

அவளொரு தாரகை, அவள்விழி முந்திட,
அவன் மனம் முந்திய நேரம்!
அவன்முகத் தாமரை, அவள்முகம் விரிந்திட,
மதுசூ தனன் இதழ் ஈரம்!

ஸ்லிஷ்யதி காமபி சும்பதி காமபி
காமபி ரம்யதி ராமம்
பஷ்யதி சஸ்மித சாருதராம் அப
ராமனு கச்சதி வாமம்!
(ஹரி ரிஹ...கேலி பரே)

துழவினள் இதழை, துடித்தனள் உடலை,
துவண்டனள் அவனிடம் பேதை!
நகைத்தனன் அவனும், பகைத்தனள் அவளும்,
இருப்பினும் கூடினள் கோதை!
(கண்ணனின் கன்னியர்...விளையா டினரே)

ஸ்ரீஜய தேவ பணிதம நேமம்
அத்புத கேசவ கேளி ரகஸ்யம்
பிருந்தாவன விபினே லலிதம் வித
நோது சுபாமி யஷாஸ்யம்!

இதுஜெய தேவர் அருளிய தாஸ்யம்
பிருந்தா வன விளை யாடல் ரகஸ்யம்
அற்புத மோகன கீத கோவிந்தம்!
அருளிடும் அவன்திரு் பாதர விந்தம்!!

ராகம்: காமவர்த்தினி
தாளம்: ஆதி
மொழி: வடமொழி
வரிகள்: ஜயதேவர்
காவியம்: அஷ்டபதி



சுசீலாம்மா தனியாகப் பாடுவது: (Dont miss the veeNai interlude at the beginning)


சுசீலாம்மாவின் முன்பு, பூஜா என்ற பெண் முயற்சி செய்கிறார்!


கர்நாடக இசையில்:
* Priya Sisters

சற்றே மெல்லிசையில்:
* உன்னி கிருஷ்ணன்

பரதேசி என்னும் தெலுங்குப் படத்தில்:
* மனோ,சங்கீதா,சுபா (Just opening lines for a cinema song)

ஒரிய மொழி இசையில்:
* In Oriya Style, Prafulla Mohanty & Bhubaneshwari Mishra (The 1st one min is intro)
* Chorus, Nirmala Mishra & Rakhal Mohanty

சுசீலாம்மாவை நினைவிருத்தி...தமிழில் யாரேனும் எனக்குப் பாடித் தருகிறீர்களா?
உறக்கத்தின் கிறக்கத்தில் உறங்கச் செல்கிறேன்.....சிற்றஞ் சிறுகாலே 4:45!




குறிப்பு:
முற்றிலும் தமிழ்ப் பாட்டான கண்ணன் பாட்டிலே,
* கன்னடம் - கிருஷ்ணா நீ பேகனே,
* மலையாளம் - வழிகாட்டுக வழிகாட்டுக,
* தெலுங்கு - ஷீராப்தி கன்யககு,
* செளராஷ்டிரம் - பகவத் நமமூஸ்
* வடமொழி் - பாவன குரு/அமர ஜீவிதம்/அஷ்டபதி,
* இந்தி் - பஸோ மொரே...மேம் நந்தலாலா
* ஆங்கிலம் - The Child in Us (Enigma)
என்பன போன்றவை, எப்போதாவது ஒன்னு ரெண்டு வரும்!

Saturday, March 13, 2010

வாராதிருப்பானோ...



அந்தி படர்ந்த வானிடை,
ஆம்பல் மலரிடை, யாழுடைத்
தந்தி அதிரும் ஒலியிடைத்
தங்க மதிய மழையிடை
நந்தன் திருமகன் நாயகன்
நாதப் பெருவொளி காண்கிறேன்.
வந்தெனைச் சேருவ தென்று
வருந்தி யழிதல் வெயில்பூ.

மண்ணில் தவழ்ந்த வயதிலும்
மங்கை மலர்ந்த பொழுதிலும்
வெண்ணெய்க் குழையும் இதழ்களை
வேதம் பொழியும் விழிகளை
எண்ணி யுருகி அழுகிறேன்.
ஏங்கி மருகிக் கரைகிறேன்.
கண்ணன் கரங்கள் தழுவிடும்
காலம் வரைநான் தரைமீன்.

ஆண்டாள். அவளுடை நாளில்
அகிலம் தருமெதும் கைக்கொள
வேண்டாள். அரங்கன் அணிந்திடா
வேற்றுவர்க் கார மெனிலதைத்
தீண்டாள். அவன்கைத் தலம்பிடித்
துத்திருப் பெண்ணுறை மாரினை
யாண்டாள். கனவில் களிமனக்
கண்ணனே, வேண்டும் புரைநீர்.

மீரா, கிரிதரன் பாலொரு
மீளா அன்பினை ஏந்தினாள்.
வேறா ருமிசைத் தாலும்
வெளியிடா சொல்லால், அவனுடன்
சேரா திருக்கும் மனதைச்
சுமந்துத் திரியும் கவலையைத்
தீரா வரியால் எழுதிட,
தீனனே, நானோர் உளிக்கல்.

சூடிக் கொடுத்தக் கொடியுமல்ல
சூழ்ந்த நகரப் பெருமானைப்
பாடித் தொடுத்த மொழியுமல்ல
பாதஞ் சரணஞ் செயுவாரைத்
தேடி நடக்கத், திருக்கோயில்
தூணில் அமர்ந்துத் தரிசனைக்கு
வாடிப் பறக்கும் வெளுத்தபுறா
வடித்த வரிகள் கருப்பிள்ளை.

(தொடரும்...)

***

Pic Courtesy :: http://www.dollsofindia.com/dollsofindiaimages/paintings2/religious_poster_QD16_l.jpg

Wednesday, March 10, 2010

குருவாயூரில் ஒரு தினம்.

குறிப்பு :: இக் கட்டுரை 2008ம் ஆண்டில் மார்ச் கடைசியில் சென்ற குருவாயூர்ப் பயணம் பற்றியது. Off the topic-ஆக கண்ணன் பதிவிற்கு இது தரமாயிருக்குமா என்று யோசித்தேன். எனினும் ஒரு முயற்சி செய்து பார்க்கலாமே என்று!

பாதையிலிருந்து விலகி குதிரை போஸ்டர்களில் நின்றாலும், சாட்டைக்காரன் சரியாக ஓட்டிச் சென்று விடுகிறான்.

***


(படம் நன்றி :: விக்கிபீடியா.)

"Your kind attention please. Train number six two one seven from Chennai Egmore to Guruvayur via Alappey is expected to arrive on platform number two at zero hours thirty minutes...."

இருளான தூண்களின் உச்சியில் இருந்த ஸ்பீக்கர்களில் இருந்து காற்றின் அலைகளில் சிதறிய இயந்திரக் குரல், காத்திருக்கலுக்கான மணற்துகள்களைத் தெறித்து விட்டுப் போனது. இந்த இரயில் 23 அல்லது 23:30 மணிக்கு திருவனந்தபுரம் சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு வர வேண்டியது. தாமதம்.

வாங்கிய பத்திரிக்கைகளை மீண்டும் ஒரு முறை மேய்ந்து விட்டு, செல்லில் பாட்டு கேட்க ஆரம்பித்தேன். இரவு கவிழ்ந்து தம் மீது முகாம் இட்டிருந்ததை எவ்வளவு சொல்லியும் கேளாமல், இமைகள் தள்ளாடித் தள்ளாடி கண்களை மூடத் தடுமாறியதில் தெரிந்தது.

'மறந்து விடாதே. மறந்தும் இருந்து விடாதே. எப்படியாவது இன்று இரவு இந்த வண்டியைப் பிடித்தாக வேண்டும். எனவே தூங்காதே தம்பி தூங்காதே'.

நாளை காலை எப்படியாவது குருவாயூர் அடைந்தாக வேண்டும்.

வ்வாரம் சுற்றுலா எங்கே போவது என்று சிந்தித்துக் கொண்டே பல் குத்திக் கொண்டிருக்கையில், கால் வந்தது. இது Call. உறவினர் குடும்பம் குருவாயூர் செல்வதாக அறிந்தேன். ஆஹா ! ரொம்ப நல்லதாகப் போயிற்று. கண்ணனே நம்மைக் கூப்பிடுகிறான் போலும் என்று மனதுக்குள் விசிலடித்துக் கொண்டே, 'நானும்.. நானும்' என்று ஒட்டிக் கொண்டேன்.

என்ன பிரச்னை என்றால் அவர்கள் ஏற்கனவே பயணச்சீட்டு பதிவு செய்து விட்டார்கள். 'சரி! நான் வேறு ஏதாவது முறையில் சனிக்கிழமை காலை குருவாயூர் வந்து சேர்ந்து விடுகிறேன் என்று உறுதி அளித்தேன்.

பேருந்தா, இரயிலா?

சில முறை பேருந்து வழியாகவே பயணம் செய்து விட்டதால், இம்முறை இரயில் என்று டிக் அடித்தேன். இரயிலில் மீண்டும் அன்ரிசர்வ்டு ப்ளாக்கில் செல்ல வேண்டும் என்ற எண்ணமே கொஞ்சம் திகிலையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியது.

சரியாக 00:30 மணியளவில் இரண்டாம் பிளாட்பார்ம் வந்தடைந்தது. முன்பே விசாரித்திருந்தேன். கடைக் காரர்கள் 'கூட்டம் எதுவும் அவ்வளவாக இருக்காது. எனவே அமர (அட.. உட்கார..)இடம் கிடைக்க பெரிய அளவில் சிரமம் இருக்காது' என்று கூறி இருந்தார்கள்.

ஆனால், என்ன பரிதாபம்! திருவனந்தபுரத்தில் நிறைய இறங்குவார்கள். இடம் கிடைத்து விடும் என்ற நினைப்பு பணால் ஆனது. எதிர்பார்த்த அளவில் கூட்டம் இறங்கவில்லை...இரங்கவில்லை.

சில ஆண்டுகளாக ஒரு பழக்கம்! இரயிலில் முன் பதிவற்ற பெட்டியில் பயணிக்கையில் சிட்டு பெற பெரிய அடிதடியே நடக்கும். அதில் எதிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன். ஓரமாக நின்று வேடிக்கை பார்ப்பேன். அந்த சமயங்களில் மனித மனமும், மொழியும் எந்த அளவிற்கு தரை மட்டத்தையும் தாண்டி பாதாளம் அளவிற்கு பாயும் என்று தெரிந்து கொள்ளலாம். அழகுத் தமிழ் மொழியில் சண்டை போடுவதற்கு எத்தனை எத்தனை அற்புதமான வார்த்தைகள் இருக்கின்றன என்பது அவ்வளவு எளிதில் கிடைக்கக் கூடிய வாய்ப்பு அன்றே? அதிலும் முக்கியமாக மதியம் 14:30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை கிளம்பும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸிலும், பின்னிரவு 22:30 மணிக்கு ஈரோடு கிளம்பும் ஏற்காடு எக்ஸ்பிரஸிலும் முன்பதிவற்ற ப்ளாக்குகளில் ஏறி சீட்டு கிடைத்து அமர்ந்து விடுவது என்பது குதிரைக் களைப்பே!

ஆனால் எப்போதும் நான் கவலைப்பட்டதில்லை. கடவுள் எனக்கு இன்று எங்கு சீட்டு கிடக்க வேண்டுமென்று முடிவு செய்திருக்கிறாரோ அங்கு கண்டிப்பாக கிடைக்கும் என்பதில் திடமான நம்பிக்கை உடையவன் ஆதலால், இடம் கிடைப்பது பற்றிய எந்த சிந்தனையும் இன்றி நின்று கொண்டிருப்பேன். நம்ப மாட்டீர்கள், எப்படியும் திருவள்ளூர் செல்வதற்குள் உட்கார இடம் கிடைத்து விடும். இது என் நம்பிக்கையை மேலும் மேலும் இறுக்கப் படுத்தி விடும்.

இன்றும் அப்படித்தான்! ஆனால் அவ்வளவாக அடிதடி எதுவும் நடக்கவில்லை. நானும் நின்று கொண்டிருந்து, பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பின் அங்குமிங்கும் பார்வையை அலை பாய விட்டதில், ஓர் நீள் இருக்கையில் நான்கு பேர் மட்டும் அமர்ந்து உறக்கத்தின் பிடியில் உருண்டு கொண்டிருப்பது தெரிந்தது. மெல்ல அங்கு முனை அமர் நபரை எழுப்பி, மெல்லிய சிரிப்போடு 'கொஞ்சம் நகருங்கள்' என்று மெல்ல கேட்க, இடம் கிடைத்தது. இதில் சிரிப்பு எதற்கு என்றால், இரண்டு காரணங்கள். 1. புன்னகையோடு எதையும் கேட்பதில் மிகப் பெரும்பாலும் கேட்கும் பொருள் கிடைத்து விடும் என்று எங்கோ படித்த ஞாபகம். அப்போதிருந்து கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கும் போது கூட 'கொஞ்சம் சிரிச்ச மாதிரி' முகத்தை வைத்துக் கொள்வது என்று பழக்கப் படுத்திக் கொண்டாயிற்று. இது அலுவலக சூடான தருணங்களைக் கொஞ்சம் cool நிலைக்கு கொண்டு வரவும் உதவுகிறது. 2. அவரே தூங்கிக் கொண்டிருக்கிறார். அவரை எழுப்பி, 'ஒக்காரணும். நகருய்யா' என்றால் யாராக இருந்தாலும் கொஞ்சம் கடியாவார்கள். ஏதாவது முனகிக் கொண்டே தரலாம். அல்லது தரப்படாமலும் போக பெரிய வாய்ப்பு இருக்கின்றது. அதுவும் நேரம் இரவு 1 மணியைத் தொட்டுக் கொண்டிருந்தது. எனவே தான் புன்னகை.

மனித மனம் தான் பெரிய குரங்காயிற்றே! கொஞ்சம் உட்கார இடம் கிடைத்தவுடன், 'இன்னும் கொஞ்சம் நகர்ந்து உட்கார்ந்தால் தான் என்னவாம். நானும் கொஞ்சம் நல்லா உட்காருவேன் இல்லையா?' என்று நினைத்த கொஞ்ச நேரத்திற்குள் அதிலேயே படுத்துக் கொண்டிருந்த ஒருவர், எழுந்து அமரவே, இன்னும் கொஞ்சம் இடம் கிடைக்க, செளகரியமாக அமர்ந்தேன்.

இதற்கெல்லாம் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா என்ன? இதெல்லாம் அவனது குழந்தைகள் மேல் அவன் காட்டுகின்ற அன்பின் அடையாளம் தானே! இருந்தாலும் 'போனாப் போகின்றது' என்று அவனுக்கு ஒரு நன்றி சொல்லி விட்டு, கொண்டு வந்திருந்த 'ஒரு யோகியின் சுயசரிதத்தை' மீண்டும் ஆரம்பத்தில் இருந்து படிக்கத் தொடங்கினேன்.

எதிரெதிராய் முகம் பார்த்துக் கொண்டே வந்த கழிவறைகளின் அருகிலேயே அழுக்குப் பையோடு நாற்றமும், அழுக்கும் கொண்ட ஒரு பைத்தியக்காரர் / பிச்சைக்காரர். பெரும்பாலும் (அவரது) பயணம் முழுதும் படிக்கட்டுகளிலேயே அமர்ந்து வந்தார். எங்கே இறங்கினார் என்றே தெரியவில்லை. பாதியில் அவரைக் காணவில்லை.

பின் கண்களில் தூக்கம் சொக்கிக் அவ்வப்போது சாய்ந்து, தடாரென விழித்து, எழுந்து, நடந்து ஒருமாதிரி பயணித்துக் கொண்டே வந்தேன்.

வரிசையாகப் பல ஊர்கள். மஞ்சள் ஒளி விசிறியடித்துக் கதிர் எட்டிப் பார்க்க காற்றின் வாசம் எங்கும் 'ச்ச்சும்மா குளிருதுல்ல' என்ற வகையில் பனிப்புகை பரவி இருந்தது. எர்ணாகுளம், திருச்சூர், சாலக்குடி, இரிஞாலக் குடா என்று கடந்து ஏழு மணி நேரத்தில் குருவாயூர் வந்தடைந்து பெருமூச்சிட்டது இரயில்.

பயணம் முழுதும் செல் பாடல்களைக் கேட்டுக் கொண்டே வந்ததில், அடுத்த நாள் நல்ல பலன் கிடைத்தது. பேட்டரி முழுதும் காலி ஆகி விட, தங்கிய லாட்ஜின் பவர் சார்ஜர் ப்ளக் பாய்ண்ட் காலை வாரி விட்டு விட, நாள் முழுதும் செல் தொல்லை இன்றி நிம்மதியாகச் சுற்றினோம்.



தே இரயிலில் உறவினர் குடும்பமும் வர, எல்லோரும் லாட்ஜ் சென்று புதுப்பித்துக் கொண்டோம்.

முதன் முறையாக வேட்டி கட்டப் புகுந்து, அதில் இருக்கின்ற சில Techniques புரியாமல், சரி நாம் fresher தானே என்று லுங்கி கட்டுவது போல் ஓர் இறுக்கி இறுக்கி, மடித்து விட்டு, சுருட்டிக் கொண்டதில் ஓரளவிற்குச் செட்டிலானது. ஆனால் உண்மையாலுமே நல்ல Comfortness இருந்தது. ஆனால் ஒரு கவனத்தை வேட்டி மேல் வைத்துக் கொள்வது அனைவர்க்கும் நலம் பயக்கும்.

நானும் அவ்வப்போது ஒரு நுனியைக் கையில் மடித்துப் பிடித்து, கீழிறக்கி, மடித்து ஒரு கட்டு கட்டி, பின் தாழ இறக்கி என்று நாள் முழுதும் ஒரே 'வேட்டியோடு விளையாடு' தான்...!

இப்போதே அப்பன் கோயிலுக்குச் செல்ல முயன்றால், வரிசையில் பல மணி நேரம் நிற்க வேண்டி வரும் என்று தெரிந்த நண்பர் ஒருவரால் கூறப் பட்டு இருந்ததால், ஓர் ஆட்டோவை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த வேறு சில கோயில்களுக்குச் சென்று விட்டு, மதியம் 12 மணி அளவில் வரிசையில் நின்று கொண்டால், மதியம் 2 மணிக்கு நடை சாத்தும் முன்பு அப்பனை தரிசித்து விடலாம் என்று Planning.

முதலில் இரயில் நிலையத்தை விட்டு வெளியே வரும் போதே பார்த்து வைத்திருந்த பார்த்தசாரதி கோயில்! அங்கு சென்றோம். மூலவர் பார்த்தசாரதி தான். மூலவருக்கு இடது மூலையில் கணபதி. வலது மூலையில் சாஸ்தா. மற்றும் நாகர், பகவதி என்று எல்லாக் கோயில்களிலும் இருப்பது போலவே அனைவரும் இருந்தனர். எல்லோருக்கும் ஒரு ஹாய்!

பின் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்குச் சென்றோம். ஹையா..! இது தெலுங்கு கோயிலு! டீஸர்ட்டை கழட்டலு, வேண்டாம்லு என்று நினைத்துச் சென்றால், போர்டு 'ஹி..ஹி' என்றது. இது வேங்கடப்பன் கோயிலாம். இங்கே இவர் பேர் வேங்கடப்பன். அம்மன் பேர்.. கரெக்ட். வேங்கடம்மன் என்று தமிழில் எழுதி விட்டு, மலையாளத்திலும் இந்தியிலும் பகவதி என்று எழுதி வைத்திருந்தார்கள். பேரில் என்ன இருக்கின்றது?

நாங்கள் போன சமயம் வெடி வழிபாட்டிற்கு ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. நாங்கள் இருக்கும் வரை வெடிக்கவேயில்லை. எல்லா தெய்வங்களையும் சென்று கும்பிட்டு விட்டு, அடுத்த கோயிலுக்குச் செல்ல ஆட்டோவில் ஏறி கொஞ்ச தூரம் சென்ற பின் 'பட...பட...' சத்தங்கள் கேட்டன.



அடுத்து மம்மியூர் சிவன் கோயிலுக்குச் சென்றோம்.

Mummyயூர்..?

இதற்கும் ஒரு விளக்கப் போர்டு இருக்கிறது. 'மஹிமா'-ஊர் தான் மருவி, மம்மியூர் என்றானதாம். ஆனால் முன்னோர்கள் பெரிய தீர்க்கதரிசிகள் தான்!! இப்பெயர்க் காரணம் இன்னோர் இடத்தில் தெளிவானது.

இது கொஞ்சம் பெரிய கோயிலாகத் தான் இருந்தது. குளம், சிவன், விஷ்ணு, அம்மன், கண்பதி, முருகன் (தமிழில் 'முருகன்' என்றும், மலையாளத்திலும் , இந்தியிலும் 'சுப்ரமணியர்' என்று எழுதி இருந்தது. Linguistic Politics..?) என்று எல்லாக் கோயில்களிலும் தரிசனம் செய்து விட்டு, கொஞ்ச தொலைவில் 'ஆனக் கொட்டாரம் உண்டு' என்று அங்கு செல்ல முடிவெடுத்தோம்.

செல்லும் வழியில், கணபதி கோயில் ஒன்றும், பகவதி கோயில் ஒன்றுக்கும் சென்றோம். இந்த பகவதி அம்மன் கோயிலில் அம்மனிடம், சிரித்து தான் பேச வேண்டுமாம். அதாவது ' அத்தைக் குடு! இத்தைக் குடு!' என்று பஞ்சப் பாட்டுப் பாடாமல், 'என்னை இவ்ளோ சந்தோஷமா வெச்சிருக்கியே! ரொம்ப நன்றி! இன்னும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கற மாதிரி செய்!' என்று மகிழ்வாகச் சொல்லி விட்டு வர வேண்டுமாம்.

இந்தக் கோயிலுக்கு தான் உன்னிகிருஷ்ண பணிக்கரின் ஆலோசனைப்படி நம்ம ஊர் அம்மா, யானை காணிக்கை வழங்கினாராம். (இப்போது புரிகிறதா முன்னோர்களின் தீர்க்கதரிசனம், Mummyயூர்!) அது பெரிய அளவில் பிரபலமாகி, மனிஷங்கர் அய்யரை ஓட விட்டு அடித்தது வரை நடந்தது, தெரிந்த கதை!

ஆனக் கொட்டாரத்தில் 65 யானைகள் வரை இருந்தன. எல்லோரும் ஜாலியாக மண் வாரித் தூற்றிக் கொண்டும், நீரில் விளையாடியும், மூங்கில் புற்களை தின்று கொண்டும் இருந்தனர். அவ்வளவு யானைகளையும் அங்கே ஒன்றாகக் காண்பது நன்றாக இருந்தாலும், கொஞ்சம் திகிலாகவும்...!









ஒற்றைக் கொம்பு யானை, கோபத்தைக் கண்களில் காட்டிய யானை, குட்டி யானை என்று பல வகைகளில் இருந்தன. நடுவில் இருந்த ஒரு வீடு பழைய மாடலில் இருந்தது. இங்கு தான் 'வடக்கன் வீரகதா' என்ற மம்முட்டி படம் எடுக்கப்பட்டது என்று முகத்தில் ஒரு பெருமிதமாகச் சொன்னார்கள். எல்லா ஊரிலும் இப்படி ஒரு பெருமிதப் படுவார்கள் போலும்! நாங்களும் 'அடடே! அப்படியா! இங்கே தான் நடந்தாரா? இப்படித் தான் உட்கார்ந்தாரா?' என்று பிரமிப்பு காட்டி விட்டு, வெளி வந்தோம். இதே ரஜினி சூட்டிங் நடந்தது என்றால், 32-ஐயும் காட்டி இருப்பேனோ என்னவோ..?

பின் அறைக்கு வந்து, சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு, அப்பன் திருக்கோயிலுக்குச் சென்றோம். பெரிய மலைப்பாம்பு போல் வளைந்து நின்று கொண்டிருந்த ஒரு பெரிய வரிசையில் நாங்களும் இணைந்தோம்.

வெளிர் மஞ்சள் அல்லது சந்தன நிறத்தாலானதும் பட்டு ஜரிகைகள் போட்டதுமான பாவாடை,அதே நிறத்தாலான இறுக்கப் பிடித்த சிறுமிகள் சட்டை, தலைக்கு குளித்து விட்டு ஈரத்தோடோ, காய வைத்தோ, அடிக்கின்ற காற்றில் அலைபாய்கின்ற நீள் கூந்தலை விரித்த படி வைத்து, இரு செவி மடல்களின் மேல் இருந்து, இரு கற்றை முடியை எடுத்து, இணைத்து முடிச்சு போட்டு, ஒரு சன்னமான பாம்பைப் போல் பின்னலிட்டு, நெற்றியில் சின்னக் கீற்றாக சந்தனம் இட்டு உலா வந்து கொண்டிருந்த பூக்களின் கூட்டங்கள், இது 'கடவுளின் சொந்த Country' மட்டும் அல்ல, 'தேவதைகளின் தேசமும்' தான் என்று தெள்ளத் தெளிவாக உணர்த்தியது.



அந்தக் கள்ளன், காதலன் மாயக்கண்ணன் இருக்கும் இடத்தில் கோபியர்கள் கூட்டம் இருப்பது இயல்பு தானே? வேறு எங்கே கோபியர்கள் இருக்க முடியும்? நாம் தான் கோயிலுக்கு வந்திருக்கிறோம். அலைபாயும் மனத்தை, கண்களை கொஞ்சமாவது அடக்க வேண்டியதாகின்றது. என்ன செய்ய? (இந்த வழிசலைப் பற்றியும், கண்களுக்கு அளவிறந்த வேலை கொடுத்ததைப் பற்றியும் இங்கு ரொம்ப பேச வேண்டாம் என்று நினைக்கிறேன் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். மலை நாடு வளம் மிகுத்தது. அவ்வளவு தாங்க..! ;) )

12:30க்கு நிற்க ஆரம்பித்து, மெது மெதுவாக நகர்ந்து உள்ளே செல்ல நேரம் 2 ஆகி விட்டிருந்தது. சுற்றுமுற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டே (சொன்னால் மனம் கேட்டால் தானே..?) வளைவான வரிசைகளில் நடந்து, நகர்ந்து, கோயிலின் உள்ளே சென்று விட்டோம். பின் அங்கு வரிசை கலைந்து முந்தி முந்திச் செல்ல, அங்கே காட்சி அளித்தான் குருவாயூரப்பன்.

சின்னக் கண்ணன் தான். சந்தனக் காப்பு அலங்காரம். அவனது கருவறைக்கு முன்பு பலப் பல விளக்குகள் ஒளியைச் சிந்திக் கொண்டே இருந்தன. இருட்டான கருவறையின் மத்தியில் அபயக் கரம் காட்டி, முகத்தில் மந்தகாசப் புன்னகை பொழிய அந்த அழகுக் கண்ணன் நிற்கிறான். கண்கள் நிரம்ப, மனதில் மகிழ்வு பெருக அவனது திவ்யதரிசனம் கிடைத்தது.

இங்கே 'ஜருகண்டி' எதுவும் அவ்வளவாக இல்லை.

சுற்று வளைவுகளில் சுற்றி வர பிரசாதம் தீர்ந்து விட்டது என்றார்கள்.

'என்ன கண்ணா இது?' என்று மனம் குமைந்த வேளையில், வெல்லப்பாயாசம் கிடைத்தது. பின்னே, அவன் பக்தர்களைச் சும்மா விட்டு விடுவானா என்ன? வெண்ணெய் பிரசாதம் கிடைத்தது. அவனுக்கே பிடித்த வெண்ணெய், நமக்குப் பிடிக்காமல் இருக்குமா? அள்ளி அள்ளி வாயெல்லாம் பூசிக் கொண்டு, விரல்களால் இலையை வழித்து நக்கிக் காலி செய்ததில் Fat கொஞ்சம் அதிகமாகுமே என்ற பயம் புறந்தள்ளப் பட்டது.

உறவினர்கள் மீண்டும் ஒருமுறை அவனை கண்ணார தரிசித்துக் விட்டு வருகிறோம் என்று மீண்டும் வரிசையில் நின்று கொள்ள (அடுத்த நடை திறப்பு 4 மணிக்கு!), நான் 'போதும் ஒருமுறை பார்த்ததே ஒரு ஜென்மத்திற்குத் தாங்கும்' என்று சுற்றக் கிளம்பினேன்.

கோயிலை வலம் வருகையில் கருவறையின் பின்புறம், பெரிய திருக்குளம் என்று பார்த்தேன். தேவசம் போர்டின் புத்தக சாலையில் நுழைந்து சில புத்தகங்கள் வாங்கினேன். கதகளி முக அலங்காரச் சிலை ஒன்று, திருவிழாவின் போது யானை முகத்தில் போர்த்தப் படும் அலங்காரம் ஒன்றின் மாடல், சில குருவாயூரப்பன் படங்கள் என்று கலந்து கட்டி வாங்கியதில் பர்ஸின் கனம் குறைந்தது; மகிழ்வில் மனம் நிறைந்தது.

அடுத்து கிடைத்தனு தான் அற்புத தரிசனங்கள்.

திருக்கோயிலின் பக்கத்தில் இருந்த மேடைக்கு அருகில் இருந்து பாடல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. சரி என்ன அங்கே என்று பார்க்கப் போக, நல்ல நடன நிகழ்வு ஒன்று நடந்து கொண்டிருந்தது.

நான் செல்கையில் 'தோடுடைய செவியன்..' என்று பாடல் ஒலித்துக் கொண்டிருக்கக் கொஞ்சம் பெரிய சிறுமிகள் (10 - 13 வயதிருக்கலாம்) நல்ல நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அவ்வப்போது Sync தப்பினாலும், அதற்கெல்லாம் குறை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.



அடுத்து வந்தது சின்னச் சின்னச் சிறுமிகள் (10 வயதிற்குள்) நடனமாடிய ஒரு மலையாளப் பாடல்! என்ன ஒரு நடனம்! எல்லோரும் குட்டிக் குட்டி கிருஷ்ணன்களாக வேடம் இட்டிருந்தார்கள். நடனம் போகப் போக ஒவ்வொரு குழந்தையும் அந்தக் குறும்பனைப் போலவே ஆளுக்கொரு புறம் ஆடத் தொடங்கினர். சிரத்தில் வைத்திருந்த மயிலிறகு கீழே விழுந்தது; கிரீடம் வழுக்கிக் கொண்டே வந்தது; நடன அசைவை நிறுத்தி அதைச் சரி பண்ண வேண்டியது; நழுவிச் சென்று விட்ட மீண்டும் அருகில் ஆடிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்துச் சரி செய்து கொள்ள வேண்டியது. நடனத்தில் கையில் வைத்திருந்த குழல் பறந்து எங்கோ விழுந்தது;



அந்த குருவாயூரப்பனைக் காண வந்ததில், அவன் 'நான் என்றும் சிறு குழந்தை தான்! என் பால லீலைகளைப் பார்க்கிறாயா?' என்று எனக்குச் சொல்வது போல், இந்தக் குட்டி பாலகிருஷ்ணன்கள் மேடையில் விளையாடி விட்டுச் சென்றார்கள்.

ஆனால் ஒன்று! அத்தனை பேர்க்கும் முன்னால், பாட்டை முடித்து விட்டுத் தான் குழந்தைகள் கிளம்பின. அதற்கே பாராட்ட வேண்டும்.

மற்றொருமுறை அவனைப் பார்க்க வரவில்லையென்று ஏதாவது நினைத்துக் கொள்வானோ என்ற ஒரு சின்ன கேள்வி இருந்தது. 'இல்லை! என்னை இந்தக் குழந்தைகளின் ஆட்டத்தின் வழி பார்!' என்று கூறியது போல் எடுத்துக் கொண்டேன்.



பின் 'அலைபாயுதே' என்று ஒரு சிறுமி சோலோவாக வந்து அரங்கை கலக்கி எடுத்துச் சென்றாள்.

உறவினர்களும் வந்து விட, நேரமாகி விட்டதே என்று அருகில் இருந்த தேவசம் போர்டின் மியூஸியத்திற்கும், ஓர் அரச மரத்தின் அடியில் அமர்ந்து விளக்குகளின் ஒளியில் ஜெகஜ் ஜோதியாக பிரகாசித்துக் கொண்டிருந்த பிள்ளையாருக்கும் (என்ன தான் கணபதி, விநாயகர் என்று சொன்னாலும், இந்த பிள்ளையார் என்றால் தான் மனதிற்கு இன்னும் நெருக்கமாகிறார், எனக்கு.!) ஒரு வணக்கம் சொல்லி, கிளம்பினோம்.

ரவு 9 மணிக்கு அதே குருவாயூர் - சென்னை எழும்பூர் செல்லும் இரயிலில் ஏறிக் கொள்ள, அதிகாலை 3:30 மணி சுமாருக்கு திருவனந்தபுரம் வந்தடைந்தேன். விடைபெற்று, கரியாவட்டம் செல்லும் பேருந்தில் ஏறி, 4:15 மணிக்கு வீட்டை அடைந்தேன்.

மீண்டும் ஒரு முறை குருவாயூர்க் குட்டியைச் சென்று பார்த்து நிதானமாக இரண்டு நாட்களாவது அங்கு இருந்து பல முறை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்த மனத்தை, நித்திரை தேவி தன்வயப்படுத்திக் கொள்ள... Zzzzzz..!

Sunday, March 07, 2010

மாநிலம் மயங்க கானம் பயில்வான் !




கண்டதுண்டோ கண்ணன் போல் - புவியில்
கண்டதுண்டோ கண்ணன் போல  ! சகியே !

வானமுகில் போலும் மேனி வண்ணம் கொண்டான் !
மாநிலம் மயங்க கானம் பயில்வான் ! (கண்டதுண்டோ)

ஆயர்பாடி தன்னில் ஆநிரைகள் மேய்ப்பான் !
நேயமாகப் பேசி நெஞ்சம் புகுவான் ! (கண்டதுண்டோ)

"கண்மணி நீ" என்பான் ! "கை விடேன்" என்பான் !
கணந்தான் ! கண்ணை இமைத்தால் காணான் !
"கண்ணா !!! " என்று நான் கதறிடும் போதினில்
["கண்ணா ! கண்ணா ! கண்ணா ! கண்ணா !"
 என்று நான் கதறிடும் போதினில்]
பண்ணிசைத்தே வருவான் - சகியே !

பாடலாசிரியர்: அமரர் கல்கி

பாடலை எம்.எஸ் அவர்களின் தேன் போன்ற குரலில் இங்கே கேட்கலாம்.

~
கிரிதாரியின்,
ராதா

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP