Friday, September 28, 2007

68: மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!


நிலைத்த புகழைக் கொண்ட கோசலையின் பெருமை மிக்க வயிற்றில் வாய்த்தவனே! தென்னிலங்கை அரசனின் மகுடங்கள் தரையில் சிந்தும் படி செய்தவனே! செம்பொன்னால் அமைக்கப்பட்டு யாராலும் (எந்தப் பகைவராலும்) தொடப்படாத கன்னிநன்மா மதில் சூழ்ந்த திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கரிய மாணிக்கமே! என்னுடைய இனிய அமுதமே! இராகவனே! தாலேலோ!

புண்டரிக மலர் அதன் மேல் புவனியெல்லாம் படைத்தவனே!
திண் திறலாள் தாடகை தன் உரம் உருவச் சிலை வளைத்தாய்!
கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்தென் கருமணியே!
எண் திசையும் ஆளுடையாய்! இராகவனே! தாலேலோ!

தாமரை மலர் மேல் அமர்ந்து இந்த உலகை எல்லாம் பிரமன் உருவில் படைத்தவனே! மிகுந்த வலிமை கொண்ட தாடகையின் வலிமை எல்லாம் அழியும் படி வில்லை வளைத்தவனே! உன்னைப் பார்த்தவர் எல்லாம் தங்கள் மனத்தை உன்னிடம் வழங்கும் படி பேரழகுடைய, திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! எட்டு திசைகளையும் ஆளும் வல்லமையுடையாய்! இராகவனே! தாலேலோ!



கொங்கு மலி கருங்குழலாள் கோசலை தன் குலமதலாய்!
தங்கு பெரும் புகழ்ச் சனகன் திருமருகா! தாசரதீ!
கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்தென் கருமணியே!
எங்கள் குலத்தின்னமுதே! இராகவனே! தாலேலோ!

தேனும் மகரந்தங்களூம் நிறைந்த பூக்களைச் சூடியதால் அவை நிறைந்த கருங்குழலை உடைய கோசலையின் குலத்தில் உதித்த குழந்தையே! என்றும் தங்கும் பெரும் புகழ் கொண்ட சனகனின் மருமகனே! தசரதனின் மகனே தாசரதீ! கங்கையை விட புனித மிக்க தீர்த்தங்கள் நிறைந்த திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! எங்கள் குலத்தின் இன்னமுதே! இராகவனே! தாலேலோ!

தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே! தசரதன் தன்
மாமதலாய்! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே!
ஏமருவும் சிலை வலவா! இராகவனே! தாலேலோ!

தாமரை மேல் நான்முகப் பிரமனைப் படைத்தவனே! தசரதனின் பெருமை மிக்க குழந்தையே! மிதிலை இளவரசியின் மணவாளனே! வண்டு கூட்டங்கள் பூக்களில் மது உண்டு இசை பாடும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! வலக்கையில் மிகப் பெரிய வில்லினை ஏந்தியவா! இராகவனே! தாலேலோ!

பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே!
சீராளும் வரை மார்பா! திருக்கண்ணபுரத்தரசே!
தாராளும் நீண்முடி என் தாசரதீ! தாலேலோ!

நாட்டை ஆளும் உரிமையையும் அதோடு பெரும் செல்வத்தையும் பரத நம்பிக்கே அருளி தீராத அன்பு கொண்ட இளைய பெருமாள் இலக்குவனோடு அரிய காட்டை அடைந்தவனே! அழகை ஆளும் மலை போன்ற மார்பினை உடையவனே! திருக்கண்ணபுரத்தரசே! தார் (மாலை) அணிந்த நீண்ட திருமுடியை பூண்ட என் தசரதன் மகனே! தாலேலோ!



சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே!
அற்றவர்கட்கு அருமருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிற்றவை தன் சொல்கொண்ட சீராமா! தாலேலோ!

சுற்றம் (ஊரார் உறவினர்) எல்லாம் பின் தொடர்ந்து வர தொன்மையான காட்டை அடைந்தவனே! வேறு கதி அற்றவர்களுக்கு அரிய மருந்து போன்றவனே (எல்லாம் தரும் அமுதம் போன்றவனே)! அயோத்தி நகருக்கு உரிமையானவனே! கற்றவர்கள் என்றும் வாழும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! சிற்றன்னையாம் கைகேயியின் கட்டளையைத் தலை மேல் கொண்ட சீராமா! தாலேலோ!

ஆலின் இலைப் பாலகனாய் அன்றுலகம் உண்டவனே!
வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே!
காலின் மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே!
ஆலிநகர்க்கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ!

ஆலின் இலைமேல் சிறு பாலகனாய் உருக்கொண்டு பிரளயக் காலத்தில் உலகமெல்லாம் உண்டவனே! வாலியைக் கொன்று கிஷ்கிந்தை அரசை இளைய வானரமாம் சுக்ரீவனுக்குக் கொடுத்தவனே! தென்றல் காற்று (காலின் மணி) நதியின் கரையின் மேல் அலை அடிக்கும் படி செய்யும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! ஆலி நகருக்கு அதிபதியே! அயோத்தி மன்னனே! தாலேலோ!

மலையதனால் அணை கட்டி மதிளிலங்கை அழித்தவனே!
அலைகடலைக் கடைந்து அமரர்க்கு அமுதருளிச் செய்தவனே!
கலை வலவர் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிலை வலவா! சேவகனே! சீராமா! தாலேலோ!

பாறைகளால் அணை கட்டி மதிள் சூழ்ந்த இலங்கையை அழித்தவனே! அலை வீசும் பாற்கடலைக் கடைந்து அமரருக்கு அமுதம் அருளியவனே! கலைகள் எல்லாம் வல்லவர் நிறைந்து வாழும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! வலக்கரத்தில் வில் தாங்கியவனே! காவலனே! சீராமா! தாலேலோ!


தளை அவிழும் நறுங்குஞ்சித் தயரதன் தன் குலமதலாய்!
வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை அழித்தவனே!
களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்தென் கருமணியே!
இளையவர்கட்கு அருளுடையாய்! இராகவனே! தாலேலோ!

சுருண்டு விழும் நறுமணம் கொண்ட முடியை உடைய தயரதன் தன் குலத்தில் உதித்த குழந்தையே! வளைந்து நிற்கும் ஒரு வில்லைக் கொண்டு மதிள் சூழ்ந்த இலங்கையை அழித்தவனே! கழுநீர்ப்பூக்கள் எல்லாத் திசைகளிலும் அலரும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! பக்தர்களுக்கு அருள் தருபவனே! இராகவனே! தாலேலோ!

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கணபுரத்தென் கருமணியே!
ஏவரி செஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ!

தேவர்கள், அசுரர்கள், திசைகள் என்று எல்லாவற்றையும் படைத்தவனே! எல்லோரும் வந்து திருவடிகளை வணங்க திருவரங்க நகரில் துயில் கொண்டவனே! காவிரி என்னும் நல்ல நதி பாயும் திருக்கண்ணபுரத்தில் வாழும் என் கருமாணிக்கமே! நெடிய சிறந்த வில்லை வலக்கரத்தில் உடையவனே! இராகவனே! தாலேலோ!

கன்னி நன் மா மதிள் புடை சூழ் கணபுரத்தென் காகுத்தன்
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடைக்குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே!

பகைவர்களால் என்று தொடப்படாத பெரிய மதில்கள் சூழ்ந்த திருக்கண்ணபுரத்தில் வாழும் என் காகுத்தன் தன் திருவடி மேல் தாலேலோ என்று சொன்ன தமிழ்மாலையாம், பகைவரைக் கொல்லத் துடிக்கும் வேலை வலக்கையில் ஏந்திய வெண்கொற்றக் குடையைக் கொண்ட குலசேகர மன்னன் (சேர மன்னன்) சொன்ன இந்த வேத நூலைப் போன்ற பத்து பாடல்களும் வல்லவர்கள் இறைவனுடன் என்றும் தோழமை கொண்ட பக்தர்கள் ஆவார்கள்!

சேர மன்னராய் இருந்து அடியவர்களில் ஒருவரான குலசேகர ஆழ்வார் பாடியது.

பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் கேட்டு மகிழலாம்.

Sunday, September 23, 2007

67. திருக்கண்ணபுரத்து என் கருமணியே!

நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ள ஊர் கண்ணபுரம். அந்தத் திருக்கண்ணபுரம் கண்ணன் பற்றி, கண்ணன் பாட்டு வலைப்பூவில் இதோ இரு பாடல்கள். சீர்காழியின் கு(ழ)ரலில் கண்ணனை நம் கண் முன்னே நிறுத்துகிறார் கவிஞர்.

இதுவரை சென்றதில்லை அங்கு!-அதுவரை பாடலை கேட்கலாம் இங்கு!!
கருமை நிறக் கண்ணன்-அருமை குழல் மன்னன்
அவன் குடை நிழல்-இவன் மயங்கும் குழல்
அவன் அருள் மழை-இவன் காணும் கரை!

ஸ்தலம் பற்றி அறிய இங்கு சொடுக்கவும்..

கன்னிநன்மா மதிள்புடைசூழ் கண்ணபுரத்து என் கருமணியே
என்னுடைய இன்னமுதே ராகவனே தாலேலோ - என்று ஆழ்வார் தாலாட்டும் திருக்கண்ணபுரம் செளரிராஜனின் செளந்தர்யத் திருமேனி இதோ!


செளரிராஜப் பெருமாள்

கண்ணபுர நாயகித் தாயார்




பாடல் 1:

கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும்
கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும்

நின்றமணித் திருக்கோலம் நினைவினிலே நிறைந்திருக்கும்
என்றும் அவன் திருப்பாதம் நெஞ்சிலே உறைந்திருக்கும்

கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும்
கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் ..

முன்னழகும் பின்னழகும் கண்ணிலே நின்றிருக்கும்
முடியழகும் சடையழகும் ஒன்றை ஒன்று வென்றிருக்கும்
தன்னழகு ஈடில்லா தனியழகு சிறந்திருக்கும்
மன்னவனின் சன்னிதியில் மற்றதெல்லாம் மறந்திருக்கும்


கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும்
கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் …

சிங்கார புன்முறுவல் சிரிப்பை உதிர்த்திடுவான்
செக்ற்நிற பட்டாடை தக்கபடி உடுத்திடுவான்
சங்கு முழங்குதற்கு செங்கை பிடித்திடுவான்
சக்கரம் சுழற்றிடவே தனிக்கரம் எடுத்திடுவான்.


கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும்
கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் …

பூமாதும் புவிமாதும் புடை சூழ கண்ணனுக்கு
பூமாலை சூட்டியவள் புகழ் மாலை பாடிவர
வேறோர் வலைச்சி வலை வீசிட
நால்வருடன் விளையாடும் கோமானை வேறேங்கும் கண்டதுண்டோ

கண்டவர்தம் மனம் உருக்கும் திருக் கண்ணபுரம் வாழ்ந்திருக்கும்
கண்ணனவன் வண்ணமதே எண்ணமதில் சூழ்ந்திருக்கும் …

பாடலை ரசிக்க இங்கே சொடுக்க..


Get this widget
Track details
eSnips Social DNA




பாடல் 2:



கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன்.
கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன்.

திருக்கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன்.
வண்ண வடிவழகை கண்குளிரக் காண்பேன்
எண்ணமெல்லாம் அவனின் இணையடியே என்பேன்.


கண்ணபுரம்...

நித்திய புஷ்கரனி நீரினிலே குளிப்பேன்
நிமிர்ந்த கோபுரத்தை கண்டு கைகள் குவிப்பேன்
உத்பலாவதக விமானத்தை நினைப்பேன்
உள்ளத்தில் அள்ளி வைத்தே உவகையிலே திளைப்பேன்.


கண்ணபுரம்...

கருட மண்டபத்தை கடந்து தொடர்ந்திடுவேன்
கண்ணாடி சேவை கண்டு கண்கள் கசிந்திடுவேன்.
பெருமான் சன்னிதி முன் பித்தாகி நின்றிடுவேன்
பிறவிப் பிணி அறுத்து உலகை வென்றிடுவேன்.


கண்ணபுரம்..

எட்டெழுத்தைச் சொல்லி கிட்ட நெருங்கிடுவேன்.
ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா என்ற
என்னை தெரிகிறதா என்றே கேட்டிடுவேன்.
கட்டி அணைத்தெனக்கு கை கொடுப்பான் கண்ணன்.
கற்பூரம் மணக்கின்ற கால் பிடித்தே உய்வேன்.


கண்ணபுரம்..

பாடலை ரசிக்க இங்கே சொடுக்க..
Get this widget
Track details
eSnips Social DNA



அன்புடன், கி.பாலு

Wednesday, September 19, 2007

66. ட்ரிப்ளிக்கேன் - சீர்காழி பாட்டு!

சென்னையில் ஒரு பகுதி ட்ரிப்ளிக்கேன்!
ட்ரிப்ளிக்கேன், திருப்ளிக்கேன் என்று பலவாறாகச் சென்னைத் தமிழில் (ஆங்கிலேயர்) சிக்கிப் பாடுபடும் அழகுத் தமிழ்ச் சொல் திருவல்லிக்கேணி! அது என்னா அல்லிக் கேணி? அல்லி ராணி குளிச்ச குளமா? :-))
ஹிஹி...அப்படி இல்லீங்க!

அல்லி மலர்கள் பூத்துக் குலுங்கும் குளம் (கேணி) = அல்லிக் கேணி!
திருமகள் மணவாளன் வாழ்வதால், "திரு" சேர்ந்து = திருவல்லிக்கேணி ஆனது!
இப்போ கொஞ்சம் பராவாயில்லை!
குளத்தில் தண்ணீர் உள்ளது. சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு சுத்தமாகவும் உள்ளது!
அல்லி மலர்கள் தான் காணோம்! ஆறுதலான விடயம்: பேருந்துகள், தொடர்வண்டி நிலையம் எல்லாவற்றிலும் திருவல்லிக்கேணி என்றே எழுதியிருக்கிறார்கள்!

அந்நியன் படத்தில் அம்பி உலா வரும் இடம், அரெஸ்டாகும் குளம், எல்லாம் இது தான்! மாநிலக் கல்லூரி (Presidency College), கண்ணகி சிலை, மெரீனா கடற்கரை, பெரிய மசூதி, ஆர்க்காடு நவாப்பின் அமீர் மகால் என்று பல பிரபலங்கள் உள்ள திருவல்லிக்கேணி!
108 திவ்யதேசங்களில் ஒன்று! பாடியவர்கள்: பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கை மன்னன், இராமானுசர், மணவாள மாமுனிகள்! இவர்கள் எல்லாரும் கால்பட்ட இடமா சென்னை? ஆகா....!



பெருமாள் பெயர் வேங்கடகிருஷ்ணன். பெரிய மீசை வைத்த நெடிய மேனி நெடியோன்!
உற்சவருக்குத் தான் பார்த்தசாரதி என்னும் திருநாமம்!
பக்தன் பார்த்தனைக் காப்பாற்ற, பீஷ்மர் விட்ட அம்புகளை எல்லாம் தான் ஏற்றுக் கொண்டு, முகமே புண்ணாகிப் போன கண்ணனின் முகத்தை (ஊற்சவர்) இங்கு கண்கூடாகக் காணலாம்!

இன்னொரு முக்கியமான சேதி!
கண்ணபிரான் ஒரே குடும்ப சகிதமாக அருள் பாலிப்பது இந்தியாவிலேயே இந்த ஒரு தலத்தில் தான்!
நடுவில் வேங்கட கிருஷ்ணன்-உடன் ருக்மிணி பிராட்டி
அவர்களோடு கண்ணனின் தம்பி, சாத்தகி!
அவன் வலப்புறம் அண்ணன் பலராமன்
இடப்புறம் மைந்தன் அநிருத்தன், பேரன் பிரத்யும்னன்
- என்று குடும்ப சகிதமாக கண்ணன்! கருவறையில் சற்று எக்கிக் காண வேண்டும்!
இன்னும் எவ்வளவோ சொல்லலாம்...இப்போ பாட்டுக்கு வருவோம்!

அனானி optionஇல் பின்னூட்டம் இடும் அன்பு நண்பர் கி.பாலு, வரியும் ஒலியும் மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார்!
சீர்காழி கோவிந்தராஜன் பல பெருமாள் பாட்டுக்களைச் சினிமாவில் பாடியிருந்தாலும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிக்கு என்றே மிகவும் விரும்பிப் பாடிய கண்ணன் பாட்டு!
அதுவும் சும்மா பாட்டு மட்டும் இல்லை! - இது பேண்ட் (Band) வாத்தியப் பாட்டு!

கண்ணனின் உற்சவத்தில் சுவாமி வரும் நடையழகை "தொம் தொம்" என்று ஒலிக்கும் பாட்டு! நீங்களே கேட்டுச் சொல்லுங்க!


Geethaisonna-Seerg...
கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்
கேட்டவர்க்கு கேட்ட படி வாழ்வு தருகிறான்

வள்ளல் வருகிறான்
அன்பு வள்ளல் வருகிறான்..

நீலமேனி கோலம் காண கண்கள் மறுக்குமோ - அவன்
நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் நெஞ்சம் மறக்குமோ?
தீரன் வடிவும் மீசை அழகும் வெற்றி ரகசியம் - அவன்
பாரத போர் நடத்திவைத்த யுக்தி அதிசயம்

அது முக்தி ரகசியம்..
(கீதை சொன்ன கண்ணன்)


அல்லிக்கேணி குளத்தின் அருகில் கள்ளன் சிரிக்கிறான்.
அன்பு கொண்டு வருபவர்க்கு ஒன்று உரைகிறான்..
சொல்லும் மந்திரம் எட்டெழுத்தில் சொர்க்கம் தோன்றுதே
சொல்லச் சொல்ல ஐயன் தோற்றம் வானில் நீண்டதே
விஸ்வரூபம் தோன்றுதே..
(கீதை சொன்ன கண்ணன்)


பார்த்தனுக்குப் பாடம் சொன்ன கீர்த்தன் வருகிறான்
பசித்தவர்க்கு விருந்தளிக்க அமுது கொணர்கிறான்
காப்பதற்குக் கையில் ஏந்தும் சங்குச் சக்கரம் - அவன்

கழல்களுக்கு விளக்கம் தானே பிரம்ம சூத்திரம்
நான்கு வேத சாஸ்திரம்..

(கீதை சொன்ன கண்ணன்)

Wednesday, September 05, 2007

65. கண்ணன் பிலேடட் பிறந்தநாள் வாழ்த்து - TMS & சீர்காழி!

இந்த ஆண்டு கண்ணனின் பிறந்தநாள் ப்ரைவேட் பர்த்டே ஆகிவிட்டது!
கண்ணன் பிறந்த நாளான கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) நேற்று! (Tuesday, Sep 4th 2007).
Belated Birthday Wishes, கண்ணா!

உனக்கென்றே இருக்கும் கண்ணன் பாட்டு வலைப்பூவில்,
ஒருவர் கூட உனக்கு "Happy Birthday to you" பாடவில்லையே என்று கோபமா கண்ணா? :-) அதான் நேராக வந்து சொன்னோமே?
சரி சரி, உன் சிரித்த முகத்தைத் தூக்கிவைத்துக் கொள்ளாதேடா!
நீ சிரிச்சா தான் அழகு!
உம்மென்று இருந்தால் உதைபடுவாய் (birthday bump) சொல்லிவிட்டேன்! :-)
உருண்டை வெண்ணெய் திரட்டித் திரட்டித் தருகிறோம்! ஒரு சிரி சிரித்து விடு!




நானும் பதிவர் CVR-உம், நேற்று நியூயார்க் மாநிலத்தில் உள்ள பொமோனா அரங்கநாதன் ஆலயம், கண்ணன் சன்னிதிக்குச் சென்று இருந்தோம்!
அங்கே கண்ணன் அருளால் கோவில் பணியாளர் ஒருவரிடம், ஒரு சுவையான உரையாடல்!

என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே என்று ஆழ்வார் பாசுரத்தை நான் மெல்லிதாகப் பாட, எங்கிருந்தோ ஓடி வந்த அவர், என்னை ஒரு பிடி பிடித்துக் கொண்டார்.
மற்றொன்றினைக் காணாவே என்பதற்கு அவர் தவறான அர்த்தம் கொண்டு விட்டார் போலும்! பிற தெய்வங்களைக் காணக் கூடாது என்று அவர் சொல்ல, நான் அவரிடம் மென்மையாக மறுத்துரைக்க...

சரி அரங்கனின் முன் அனல் வாதம் வேண்டாம் என்று ஆழ்வாரின் "முக்கண் அப்பா" பாடலை மட்டும் அவருக்கு எடுத்துக்காட்டி விட்டு வந்து விட்டேன்! அவரும் தன் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்துவிட்டார்!
அவர் பேசும் பேச்சுக்கு, அவர் தமிழ்மணம் வந்தால் சொல்லால் அடித்தே துரத்தி விடுவார்கள் என்பது சர்வ நிச்சயம்! :-)

நீண்ட வார இறுதி (Long Weekend) விடுமுறையில், நண்பர்களோடு நெய்தல் நாட்டுச் சுற்றுலா சென்று வந்த களைப்பு இன்னும் தீரவில்லை!
இனி மேல் தான் பல மின்னஞ்சல்களுக்கு ரிப்ளை செய்யணும்!
அதற்கு முன், சற்று முன்,
இதோ கண்ணன் பிறந்தநாள் பாடல்!
கண்ணன் வந்தான் அங்கே
கண்ணன் வந்தான் - ஏழைக்
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்

TMS & சீர்காழி இணைந்து பாடி முழங்கும் உருக்கமான பாடல்!
அடையாத கதவிருக்கும் சன்னிதானம்!
அஞ்சாத சொல்லிருக்கும் சன்னிதானம்!!



பாடலைக் கேட்டு ரசிக்க இங்கே சொடுக்கவும்!

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவான்...
நோய்க்கு மருந்தாவான்...
பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே...


கண்ணன் வந்தான் அங்கே
கண்ணன் வந்தான் - ஏழைக்
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்

தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்பவர்க்கு கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்
தர்மம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்க கண்ணன் வந்தான்


கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்...
கண்ணன் வந்தான்...
(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)

முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்
குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம்
அடையாத கதவிருக்கும் சன்னிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும் சன்னிதானம்


சன்னிதானம் கண்ணன் சன்னிதானம்
சன்னிதானம்...
(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)

கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கனி மழலை குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள்செய்ய வருவாய் கண்ணா


கண்ணா...கண்ணா..கண்ணா..கண்ணா..
(கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்)


படம்: ராமு
பாடல்: கண்ணதாசன்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்திரராஜன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்



படங்களுக்கு நன்றி: krishna.com, radharani.com

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP