Saturday, December 31, 2011

அன்புடன் ஒன்றாய் நாமும் யமுனைக்கரையில் சந்திப்போமே!

ஓ கிருஷ்ணா...

என்னாசை இராதா..
என்னன்பு இராதா...
என்றென்றும் நீயே என் ஜீவன் தானே...
கண்ணன் அழைக்கின்றேனே யமுனைக்கரைக்கு வா நீ...
என்னாசை கண்ணா...
என்னன்பு கண்ணா...
என்றென்றும் நீயே என் உயிர் கண்ணா...
இராதை அழைக்கின்றேனே யமுனைக்கரைக்கு வா நீ...
ஓ இராதா....
ஓ கிருஷ்ணா...
ஆதவன் நீ என்றால் ஒளிக்கதிர் நான் தானே...
விண்மீன்கள் நீ என்றால் முழுமதி நானே...
நம் வாழ்வின் இனிமேல் என்றும் ஆனந்தம் தானே...
(என்னாசை கண்ணா)
 
ஏழேழு ஜன்மமுமாய் உனக்கென்றும் நான் தானே...
என் வாழ்வில் எது வந்தாலும் எந்தன் துணை நீயே...

உன்னை விட்டு நானும் நொடியும் பிரிந்தே வாழ்ந்திட மாட்டேன்...
என்னாசை இராதா...
என்னன்பு இராதா...
என்றென்றும் நீயே என் தெய்வம் தானே...
அன்புடன் ஒன்றாய் நாமும் யமுனைக்கரையில் சந்திப்போமே! ஓ இராதா...
ஓ கிருஷ்ணா...

Saturday, December 24, 2011

சத்தம் போடாதே!

முன்னெல்லாம் ஆயர்பாடியில் திருட்டு பயமே இல்லையாம். அதனால, யாருமே வீட்டை பூட்ட மாட்டாங்களாம். கிருஷ்ணன் பொறந்தோன்ன, கதையே மாறிப் போச்சு. இந்த வெண்ணெய் திருடிக்கு பயந்து எல்லாரும் வீட்டை பூட்டி வெக்க ஆரம்பிச்சிட்டாங்க! ஆனா, எப்படிப் பூட்டினாலும் அவன் திருடறதை தடுக்கவே முடியறதில்லை.


ஒரு நாள், யசோதா வெண்ணெய் கடைஞ்சு உறியில் கட்டி வெச்சிட்டு, அடுக்களைல வேலையா இருந்தாளாம். அப்ப மெதுவா பூனை போல அங்கே வந்த கண்ணன், இருந்த வெண்ணெயெல்லாம் வழிச்சு எடுத்து சாப்பிட்டுட்டானாம். கையில வெண்ணெய் ஒட்டியிருந்தா தெரிஞ்சு போயிரும்னு, எல்லா விரலையும் அழகா நாக்கால சுத்தம் பண்ணிட்டான். கை ரெண்டையும் உத்தரீயத்தில் நல்லா தொடச்சிட்டான். அப்பதான் அடுப்பு வேலைய முடிச்சிட்டு வந்தா யாசோதா. அவ எங்கே போயிட்டு வந்தாலும், அவளோட மொத வேலை என்ன தெரியுமோ? வெண்ணெய் இருப்பை செக் பண்றதுதான்! இப்பவும் அதான் செய்தா. ஆனா, வெண்ணெய் இருந்த இடமே தெரியலை!

“கண்ணா, இங்கே வா!”, அம்மா குரல்ல இருந்தே, கண்டுபிடிச்சிட்டான்னு தெரிஞ்சு போச்சு கண்ணனுக்கு.

எப்படிடா சமாளிக்கிறதுங்கிற யோசனையோட, “என்னம்மா?”, அப்படின்னு கொஞ்சிக் கொஞ்சி குழலைப் போலவே குழையற குரல்ல அப்படி ஒரு செல்லமா கேக்கறான்.

அம்மாவுக்கு மனசு உருகின உருக்கத்துல கோவமே மறந்துரும் போல ஆயிருச்சு! நினைவுபடுத்தி வரவழைச்சுக்கிட்ட கோவத்தோட, “வெண்ணெய் தின்னியா?”ங்கிறா.

“ஊஹூம். இல்லையேம்மா. நீ வேணா பாரு…”, தாமரைப்பூ போல செவந்த உள்ளங்கை ரெண்டையும் விரிச்சு, இப்படியும் அப்படியுமா திருப்பித் திருப்பிக் காட்டறான். “ஐயோ பாவம், இந்த பால் வடியும் மொகத்தையா சந்தேகப்பட்டோம்”, அப்படின்னு சொல்ற மாதிரி மொகத்தில் அப்படி ஒரு பாவம்!

ஆனா என்ன, மொகத்தில் பாலுக்கு பதிலா வெண்ணெய்! அவ்வளவு கவனமா ரெண்டு கையையும் சுத்தம் பண்ணினவன், வாயைத் துடைக்க மறந்துட்டான்! வாய் ஓரமா, வெண்ணெய் மெய் மறந்து உட்கார்ந்திருந்தது! அதோட ஆனந்தம் அதுக்கு! அம்மாகிட்ட நல்ல்லா மாட்டிக்கிச்சு புள்ளை!

“உன்னை என்ன பண்றேன் பாரு!”

விறிவிறுன்னு போயி தாம்புக்கயிறை எடுத்துக்கிட்டு வர்றா. அவன் இடுப்பைச் சுத்தி கயிறைக் கட்டி, பிறகு அந்தக் கயிறை உரலோட கட்டி அவனை உக்கார வெக்கிறா.


ஆனா, மறு நாளும் இதே கதை! அடுத்த நாளும்; அதற்கு அடுத்த நாளும்… இப்படியே. உறியை எப்படி இடம் மாத்தி வெச்சாலும், கண்ணன்கிட்ட இருந்து வெண்ணெயைக் காப்பாத்த முடியலை. என்ன பண்ணலாம்னு மண்டையைப் பிச்சிக்கிட்ட பிறகு, யசோதைக்கு ஒரு யோசனை தோணுது!

அன்றைக்கு குட்டிக் கண்ணனுக்கு குளிப்பாட்டி, அலங்காரம் பண்ணும்போது, அவனுக்கு கழுத்துல, இடுப்புல, கைல, கால்ல, இப்படி, நெறய்ய நகை போட்டு விடறா. சாதாரண நகை இல்லை, லேசா அசைஞ்சாலும் சத்தம் செய்யற மாதிரி நகை! அவன் கொஞ்சம் அசைஞ்சாலும், இவ எங்கே இருந்தாலும் கேக்குமாம்! அதோட மட்டும் இல்லாம, வெண்ணெயை உறில கட்டும் போது, மூடியைத் தொறந்தா, உடனே சத்தம் போடற மாதிரி, ஒரு மணியையும் கட்டி வெக்கிறா! “இன்னிக்கு எப்படித் திருடறான்னு பாக்கிறேன்”, அப்படின்னு மனசுக்குள்ள நினைச்சுக்கறா.

அவன் மேல கிடந்த நகையெல்லாம், “ஆகா, நம்ம பரந்தாமனை அலங்கரிக்க என்ன பாக்கியம் பண்ணியிருக்கோம்”னு நினைச்சு, சந்தோஷத்தில் இயல்பை விட அதிகமாவே சத்தம் போட்டுச்சாம்! ஆனா நம்ம குட்டிப் பயல், தன் மேல கிடந்த நகைகளோட ஒரு ரகசிய ஒப்பந்தம் பண்ணிக்கிறான்: “நீங்கள்லாம் என்மேல அன்பு வெச்சிருக்கது உண்மையா இருந்தா, நான் வெண்ணெய் திருடப் போகும் போது நீங்கள்லாம், சத்தமே போடாம இருக்கணும்!” அப்படின்னு! அவன் வார்த்தைக்கு மறு வார்த்தை உண்டா, என்ன? “என் உகப்பு பெரிதில்லை; உன் திருமுக உகப்போ பெரிது”, அப்படின்னு அவையும் பேசாம, சத்தம் போடாம, அவன் அசையும் போதெல்லாம் மூச்சைப் பிடிச்சுக்கிட்டு, கஷ்டப்பட்டு சும்மா இருந்ததாம். அப்படியே மெதுவா பானையை எட்டிட்டான். அப்பதான் அங்கே இருந்த மணியை பார்த்தான்!

“ஆகா, நம்ம அம்மா இவ்வளவு ப்ளான் பண்ணியிருக்காளா”ன்னு நெனச்சவன், அந்த மணிகிட்டயும் அதே மாதிரி ஒப்பந்தம் செய்துகிட்டானாம். “நான் வெண்ணெய் திருடும் போது நீ சத்தம் போடக் கூடாது”, அப்படின்னு! அந்த மணியும் ஒத்துக்கிச்சாம்.

பானையை எடுத்தான், மணி அடிக்கலை.
மூடியைத் தொறந்தான், மணி அடிக்கலை.
வெண்ணெயை அள்ளினான், மணி அடிக்கலை.
அள்ளின வெண்ணெயை வாயில் வெச்சான், அவ்வளவுதான்! ‘கிணி கிணி’ன்னு மணி வேகமா அடிச்சிருச்சு!

கண்ணனுக்கே ஷாக் ஆயிடுச்சு! “நான் சொன்னது மறந்து போச்சா! ஏன் அடிச்சே?” அப்படின்னு கோவிச்சுக்கறான்.

“என்ன கண்ணா பண்ணுவேன்? உனக்கு நெய்வேத்தியம் பண்ணும்போதெல்லாம் சத்தம் போட்டே பழகிட்டேனே? அந்த பழக்க தோஷம்தான். என்னை மன்னிச்சிரு”, அப்படின்னு சொல்லுச்சாம், அந்த மணி!

அன்றைக்கும் தாம்புக் கயிறுதான், உரல்தான். பா…வம் நம்ம குட்டிக் கண்ணன்!

--கவிநயா

பி.கு.: மணி விஷயம், ஒரு உபன்யாசகர் சொல்லக் கேட்டது.

Friday, December 23, 2011

தூண்டிற் புழுவினைப் போல்...

          (கணிக்)கண்ணபிரான் [&co] ஒலிபரப்பிய
கோதைத்தமிழ்ப்பா(வை)காதைத்தீண்டி இழுக்க,
அரங்கன் பைந்நாகப்பாய் சுருட்டிக்கொண்டு
மாதவிப்பந்தல் நோக்கி நடை கட்டிட்டான் ;
பாய் ஜாக் பண்ணப்பட்ட அரங்கனை இங்கு
மீட்டு வர பாரதியின் காதல்கீதம் கீழே!கண்ணன்  என் காதலன்

தூண்டிற்  புழுவினைப்போல் ---வெளியே
           சுடர்விளக்கினைப் போல் ,
நீண்ட பொழுதாக-- எனது
          நெஞ்சந்துடித்ததடீ!
கூண்டுக்கிளியினைப்போல் --தனிமை
           கொண்டு மிகவும் நொந்தேன் ;
வேண்டும் பொருளையெல்லாம்--மனது
          வெறுத்து விட்டதடீ!

பாயின்மிசை நானும் --தனியே
             படுத்திருக்கையிலே,
தாயினைக்கண்டாலும்,--சகியே!
              சலிப்பு வந்ததடீ!
வாயினில் வந்ததெல்லாம் ,--சகியே!
              வளர்த்துப் பேசிடுவீர்;
நோயினைப்போலஞ்சினேன் ;--சகியே!
               நுங்களுறவையெல்லாம் .

உணவு செல்லவில்லை ;--சகியே!
               உறக்கங் கொள்ளவில்லை.
மணம்   விரும்பவில்லை;--சகியே!
              மலர் பிடிக்கவில்லை;
குணமுறுதி யில்லை ;--எதிலும்
               குழப்பம் வந்ததடீ !
கணமும் உள்ளத்திலே --சுகமே
               காணக் கிடைத்ததில்லை.

பாலுங் கசந்ததடீ!--சகியே!
              படுக்கை  நொந்ததடீ!
கோலக்கிளி மொழியும் --செவியில்
              குத்தலெடுத்ததடீ !
நாலு வயித்தியரும் --இனிமேல்
            நம்புதற்கில்லைஎன்றார்;
பாலத்துச் சோசியனும் --கிரகம்
            படுத்துமென்றுவிட்டான்

கனவு கண்டதிலே-- ஒருநாள்
             கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்கவில்லை --எவனோ
              என்னகந் தொட்டுவிட்டான் .
வினவக் கண் விழித்தேன் ;--சகியே!
              மேனி மறைந்து விட்டான்;
மனதில் மட்டிலுமே --புதிதோர்
                மகிழ்ச்சி கண்ட தடீ !

உச்சி குளிர்ந்ததடீ;--சகியே!
            உடம்பு நேராச்சு ;
மச்சிலும் வீடுமெல்லாம் --முன்னைப்போல்
            மனத்துக் கொத்ததடீ!
இச்சை பிறந்ததடீ!--எதிலும்
             இன்பம் விளைந்ததடீ!
அச்சமொழிந்ததடீ!--சகியே!
            அழகு வந்ததடீ !

எண்ணும்  பொழுதிலெல்லாம் --அவன்கை
           இட்ட விடத்தினிலே
தண்ணென்றிருந்ததடீ !--புதிதோர்
           சாந்தி பிறந்ததடீ!
எண்ணி  எண்ணிப் பார்த்தேன் ;--அவன்தான்
            யாரெனச் சிந்தை  செய்தேன்;
கண்ணன் திருவுருவம் --அங்கனே
            கண்ணின் முன் நின்றதடீ!
.


  

Monday, December 19, 2011

கண்ணம்மா எனது குலதெய்வம்

ராகம் - புன்னாக வராளி
பல்லவி
நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா !
நின்னைச் சரணடைந்தேன் !

சரணங்கள்
 பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று (நின்)

மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று (நின்)

 தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம் (நின்)

 துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட (நின்)

 நல்லது தீயது நாமறியோம் அன்னை
நல்லது நாட்டுக ! தீமையை ஓட்டுக ! (நின்)

கண்ணம்மா எனது குலதெய்வம்
காரைக்குறிச்சி பி.அருணாச்சலம் அவர்களின் நாதஸ்வர இசை.

Saturday, December 10, 2011

பாஞ்சாலியின் பிரார்த்தனை

                                               
[Bharathi.jpg]   
             பாரதியாரின்  பிறந்தநாளான  இன்று (11.12.11)அவரது நினைவாக  பாஞ்சாலிசபதத்தில்  கணவர்களும்   
 உதவாத நிலையில்  பூரண சரணாகதி நிலையில்  
திரௌபதி கண்ணனை ப்ரார்த்திக்கும் பகுதி
கண்ணன் பாட்டு அன்பர்களுக்காக:

               பாஞ்சாலியின் பிரார்த்தனை  

                                              

"அரி, அரி, அரி!"என்றாள் ."கண்ணா!
       அபயமபயமுனக்கபயம்" என்றாள்.
கரியினுக்கருள் புரிந்தே-அன்று
      கயத்திடை முதலையின் உயிர் மடித்தாய்!
கரிய நன்னிறமுடையாய்!-அன்று
     காளிங்கன் தலைமிசை நடம்புரிந்தாய்!
பெரியதோர் பொருளாவாய்!-கண்ணா!
    பேசரும் பழமறைப் பொருளாவாய்!
சக்கரமேந்தி நின்றாய் ! -கண்ணா!
    சார்ங்கமென்றொரு வில்லைக் கரத்துடையாய்!
அக்கரப் பொருளாவாய் ! -கண்ணா!
    அக்கார அமுதுண்ணும் பசுங்குழந்தாய்!
துக்கங்கள் அழித்திடுவாய்! -கண்ணா!
    தொண்டர்கண்ணீர்களைத்   துடைத்திடுவாய்!
தக்கவர் தமைக் காப்பாய்,--அந்தச்
    சதுர்முக வேதனைப் படைத்துவிட்டாய் !
வானத்துள்  வானாவாய்,--தீ,
    மண்,நீர்,காற்றினில் அவையாவாய்;
மோனத்துள் வீழ்ந்திருப்பார் -தவ
   முனிவர்தம் அகத்தினிலொளிர் தருவாய்;
கானத்துப் பொய்கையிலே -தனிக்
   கமலமென் பூமிசை வீற்றிருப்பாள்,
தானத்து சீதேவி, -அவள்
    தாளிணை கைக்கொண்டு -மகிழ்ந்திருப்பாய்!
ஆதியிலாதியப்பா!--கண்ணா!
    அறிவினைக்கடந்த விண்ணகப்பொருளே !
சோதிக்குஞ்சோதியப்பா !--என்றன்
    சொல்லினைக்கேட்டருள் செய்திடுவாய் !
மாதிக்கு வெளியினிலே -நடு
    வானத்திற் பறந்திடும் கருடன்மிசை
சோதிக்குள் ஊர்ந்திடுவாய்--கண்ணா!
    சுடர்ப்பொருளே ,பேரடற்பொருளே!
"கம்பத்திலுள்ளானோ?--அடா !
     காட்டுன்றன் கடவுளைத் தூணிடத்தே!
வம்புரை செயுமூடா!"--என்று
     மகன்மிசையுறுமியத் தூணுதைத்தான்
செம்பவிர்குழலுடையான்;--அந்தத்
     தீயவல்லிரணியனுடல் பிளந்தாய்!
நம்பி நின்னடி தொழுதேன்;--என்னை
     நாணழியாதிங்கு காத்தருள்வாய்.
வாக்கினுக்கீசனையும் --நின்றன்
    வாக்கினிலசைத்திடும் வலிமையினாய் ,
ஆக்கினை கரத்துடையாய் --என்றன்
    அன்புடை எந்தை !என் அருட்கடலே!
நோக்கினிற்கதிருடையாய் !--இங்கு
     நூற்றுவர் கொடுமையைத் தவிர்த்தருள்வாய்!
தேக்குநல் வானமுதே!--இங்கு
    சிற்றிடையாய்ச்சியில் வெண்ணையுண்டாய்!
வையகம் காத்திடுவாய்!--கண்ணா!
    மணிவண்ணா,என்றன் மனச்சுடரே!
ஐய,நின்பதமலரே    --சரண்
   அரி,அரி, அரி, அரி, அரி!"என்றாள்.


  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP