Tuesday, May 29, 2007

வா... வா.. கண்ணா...வா ...வா

தன்னைக் கொல்ல ஆயுதம் ஏந்தி வருகின்றவனையும் முகமலர்ச்சியுடன் யாராவது வா.. வா.. என்று வரவேற்பவர்கள் உண்டா?
பின்னால் அவனால் கொல்லப்படும் நிலை வந்தும் அவன் தன்னைப் பார்க்க வரும்போது அவனை துதித்து 1000 பெயர்களால் புகழ்ந்து பாடியவர் யார்?ஆமாம் அப்படி வரவேற்றவரும் பாடியவரும் ஒருவர்தான்.
யார் அவர்? மேலே படியுங்கள்.



மஹாபாரதத்தில் கண்ணன் ஆயுதம் ஏந்தி போராடமாட்டேன் என்று பஞ்சபாண்டவர்களுக்கு உறுதி அளித்தார். அதன்படியே போர்க்களத்தில் இருந்தும் வந்தார். பாண்டவர்களுக்கும் கௌவுரவர்களுக்கும் பயங்கர யுத்தம் நடந்தது. கௌவுரவர்களின் சேனாபதியான பீஷ்மர் மிகவும் உக்கிரமாக போரிட்டார்.
அவ்ருடைய அம்பு மழைக்கு பார்த்தனால் பதில் சொல்ல முடியவில்லை. இப்படியே விட்டால்அவர் பாண்டவர்களை காலி செய்துவிடுவார் என்று நினைத்த கண்ணன் பார்த்தனிடம் சொன்னார்.
"அர்சுனா தாத்தாவை உடனே எப்படியாவது நிறுத்தப் பார்". தனஞ்ஜயன் சொன்னான் "என்னுடைய முழு முயற்சியும் பலனளிக்கவில்லை. என்னுடைய அம்புகளால் தாத்தாவை ஒன்றும் செய்ய முடியவில்லை.அவருடைய பராக்கிரமம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது" என்றான். (நீங்கள் படித்துக்கோண்டு இருப்பது மஹாபாரதம். வேறு எதையும் நினத்து குழப்பிக் கொண்டால் நான் பொறுப்பல்ல)
பார்த்தனின் சோர்வைப் பார்த்த கண்ணனுக்கு கோபம் வந்து உன்னால் முடியாவிட்டால் இதோ நானே ஆயுதம் எடுக்கிறேன் என்று கூறி தேர்தட்டிலிருந்து இறங்கி தன் சக்கராயுதத்தை பீஷ்மர் கையில் எடுத்துக் கொண்டு பீஷ்மரை நோக்கிச் சென்றார்.
கண்ணனைக் கண்டதும் மலர்ந்த முகத்துடன்ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு வரவேற்றார் பீஷ்மர் "வா.. வா.. கண்ணா..வா...வா...உன்கையால் மரணமடைய காத்திருக்கிறேன்." நீயே ஆயுதம் எடுத்து வந்தபின் எனக்கு என்னகுறை" என்றார். உடனே கண்ணனுக்கு தன் சத்தியம் ஞாபகம் வந்து தேர்தட்டுக்கு வந்து சாட்டையை கையில் எடுத்துக் கொண்டான்.
பின்பு யோசித்து சிகண்டியை பார்த்தனுக்கு முன்னால் உட்காரவைத்து இருவரையும்அம்புகளைஎறியச் சொன்னார். ஆனால் பீஷ்மர் தன் சத்தியத்தை(சிகண்டிக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதில்லை என்பதை) மனதில் நிறுத்தி வில்லையும் அம்பையும் கீழேபோட்டுவிட்டு ,பார்த்தனது பாணங்களை ஏற்றுக்கொண்டு உடம்பெல்லாம் அம்பு பாய்ந்து கீழே விழுந்தார். வானவர்கள் பூமாரி பொழிந்தனர்.மரணப்படுக்கையில் மிகுந்த வலியுடன் கஷ்டப்படுகின்ற பீஷ்மரை பார்க்க வந்த கண்ணனை கண்டதும் பீஷ்மர் எந்த விரோதமும் பாராட்டாமல் கண்ணனை 1000 பெயர்களால் துதி செய்தார்.
தன்னைக் கொல்ல வந்த கண்ணனை யுத்தகளத்தில் பீஷ்மர் எப்படி வரவேற்றார் என்பதை ஊத்துகாடு வேங்கட கவியின் பாடல் மூலமாகக் கேளுங்கள்
பாடல் வடமொழியில் இருந்தாலும் சொற்கட்டும் தாளக்கட்டும் வர்ணணையும் மிகுந்தது. நடையும் யுத்தநடை.
ராகம்:- மோஹனம் தாளம்:- ஆதி
பல்லவி
ஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் கிருஷ்ணா
மதுராபுரி ஸதனா ம்ருது வதனா மதுசூதனா இஹ....(ஸ்வாகதம்)


அனுபல்லவி
போகதாப்த ஸுலபா ஸுபுஷ்ப கந்த களபா
கஸ்த்தூரி திலக மஹிபா மம காந்த நந்த கோப கந்த..(ஸ்வாகதம்)


சரணம்
முஷ்டிகாசூர சாணுர மல்ல
மல்ல விசாரத குவலாயபீட
மர்த்தன களிங்க நர்த்தன
கோகுலரக்ஷ்ண ஸகல ஸுலக்ஷ்ண தேவ
ஸிஷ்ட ஜன பால ஸ்ங்கல்ப கல்ப
கல்ப ஸதகோடி அஸமபராபவ
தீர முனி ஜன விஹார மதனஸூ
குமார தைத்ய ஸ்ம்ஹாரதேவ
மதுர மதுர ரதி ஸாஹஸ ஸாஹஸ
வ்ரதயுவதி ஜன மானஸ பூஜித
இந்தப் பாடலின் மற்றொரு பொருத்தம் பாடலின் நடையும் யுத்த நடையில் உள்ளது.
கண்ணனின் பக்தரான திரு ஜேசுதாஸ் தன் இனிய குரலில் அருமையாக பாடியுள்ளார்.பாடலைக் கேட்க '><"இங்கே">"> கிளிக்

Monday, May 28, 2007

52. கங்கைக் கரைத் தோட்டம், கன்னிப் பெண்கள் கூட்டம்!

ஒரு பெண்ணின் காதலை, ஒரு ஆண் பரிபூர்ணமாக, முழு மனதுடன் புரிந்து கொள்ள முடியுமா?
கவியரசர் கண்ணதாசனின் சொற்களைக் கொஞ்சம் கடன் வாங்கினால், முடியும்!
"கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை
கண்ணன் வரும் நாளில், கன்னி இருப்பேனோ" என்ற ஏக்கம், அப்போது நன்றாகவே புரியும்!

இந்தப் படத்தில், இதைப் பாடுவது யார்?
தேவிகாவா? இல்லை விஜயகுமாரியா?
இரண்டு பேரும் கண்ணன் பாட்டு பாடியிருக்கிறார்கள். ரெண்டுமே கொஞ்சம் சோகமான பாட்டு தான். அதான் கொஞ்சம் குழப்பம்! :-)
"அதே பாட்டு, அதே பாவம்...பாடம்மா....நீ பாடு" என்று "பாடு சாந்தா பாடு" டயலாக் இந்தப் பாடலிலும் வரும்!

பாடலை இதோ கேளுங்கள்!

சுந்தரம் என்ற நண்பர் கேட்ட நேயர் விருப்பம்!


bhojan-lila_01

கங்கைக் கரைத் தோட்டம்
கன்னிப் பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே...ஓஓ...கண்ணன் நடுவினிலே


காலை இளம் காற்று
பாடி வரும் பாட்டு
எதிலும் அவன் குரலே...ஓஓ...எதிலும் அவன் குரலே


கண்ணன் முகத்தோற்றம் கண்டேன்
கண்டவுடன் மாற்றம் கொண்டேன்
கண்மயங்கி ஏங்கி நின்றேன்
கன்னி சிலையாகி நின்றேன்

என்ன நினைந்தேனோ...தன்னை மறந்தேனோ!
கண்ணீர் பெருகியதே...ஓ...கண்ணீர் பெருகியதே!!
(கங்கைக்கரை)

கண்ணன் என்னைக் கண்டுகொண்டான்
கை இரண்டில் அள்ளிக் கொண்டான்
பொன்னழகு மேனி என்றான்
பூச்சரங்கள் சூடித் தந்தான்


கண் திறந்து பார்த்தேன் கண்ணன் அங்கு இல்லை!
கண்ணீர் பெருகியதே...ஓ...கண்ணீர் பெருகியதே!!


அன்று வந்த கண்ணன் அவன்
இன்று வர வில்லை அவன்!
என்றோ அவன் வருவான்...ஓ...என்றோ அவன் வருவான்!


கண்ணன் முகம் கண்டகண்கள்
மன்னன் முகம் காண்பதில்லை
கண்ணனுக்குத் தந்த உள்ளம்
இன்னொருவர் கொள்வதில்லை


கண்ணன் வரும் நாளில், கன்னி இருப்பேனோ...
காற்றில் மறைவேனோ!
நாடி வரும் கண்ணன், கோல மணி மார்பில்
நானே தவழ்ந்திருப்பேன்!!
கண்ணா...!!கண்ணா...!!கண்ணா...!!




படம்: வானம்பாடி
வரிகள்: கண்ணதாசன்
குரல்: பி. சுசீலா
இசை: கே.வி. மகாதேவன்
ராகம்: ஆபேரி (கரெக்டா?...:-)

Saturday, May 26, 2007

51. திருப்பதி மலை வாழும் வெங்கடேசா

திருமலை தென்குமரி படத்தில் இடம்பெற்ற பாடல். சீர்காழியில் குரலில் அருமையாக அமைந்த பாடல். வீடியோ தேடலாம்னு பார்த்தா திருப்பதினு போட்டா அஜித் படம் வருது, திருமலைனு தேடினா விஜய் படம் வருது. என்ன கொடுமை கோவிந்தா?

உங்க யாருக்காவது வீடியோ லிங் கிடைத்தால் கொடுக்கவும்.


பாடலை கேட்க இங்கே சொடுக்கவும்...



திருப்பதி மலைவாழும் வெங்கடேசா


திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்

மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா


திருப்பதி...

அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்
அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்

என் மனம் உருகிடவே பாடி வந்தேன்
உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்


திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா
திருப்பதி...


நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா

மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா
உரைத்தது கீதை என்ற தத்துவமே
அதை
உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே

திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலை வாசா


திருப்பதி...

இந்த விடியோவையும் பார்க்கவும்


Tuesday, May 22, 2007

50. குருவாயூருக்கு வாருங்கள்...

கடலூர்ல நான் St.Joseph ஹாஸ்டல்ல தங்கி படிச்சிட்டு இருந்தப்ப ஞாயித்திக்கிழமை காலைல சாமி பாட்டு போடுவாங்க. அதுல கண்ணன் பாட்டு இரண்டு இருக்கும். முதல் பாடல் புல்லாங்குழல் கொடுத்த முங்கில்களே அடுத்து இந்த குருவாயூருக்கு வாருங்கள். அதனாலயே நமக்கு இந்த ரெண்டு பாட்டும் கேட்டால் ஹாஸ்டல்ல இருக்கற மாதிரி இருக்கும்.

அதுல என்ன சந்தோஷம்னா ஒவ்வொரு ஞாயிறும் எங்க அப்பா, அம்மா என்னை பார்க்க வருவாங்க. நான் பத்தாவது படிக்கிற வரைக்கும் தொடர்ந்து 4 வருஷமும் வாரம் தவறாம வருவாங்க... இந்த பாட்டை கேட்டா அந்த நியாபகமெல்லாம் வருது. சரி இப்ப பாட்டை கேக்கலாம்

பி.சுசீலா பாடியதை கேட்க இங்கே சொடுக்கவும்


ராதா வீரமணி பாடியதை கேட்க இங்கே சொடுக்கவும்...

MP3

குருவாயூருக்கு வாருங்கள் - ஒரு
குழந்தை சிரிப்பதை பாருங்கள்

குருவாயூருக்கு வாருங்கள் - ஒரு
குழந்தை சிரிப்பதை பாருங்கள்
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன்
உட்கார்ந்திருப்பதை காணுங்கள்



(குருவாயூருக்கு...)

கண்ணனின் மேனி கடல் நீலம்
அவன்
கண்கள் இரண்டும் வான் நீலம்
கடலும் வானும் அவனே என்பதை
காட்டும் குருவாயூர் கோலம்

(குருவாயூருக்கு...)

சந்தியா காலத்தில் நீராடி அவன்
சந்நிதி
வருவார் ஒரு கோடி
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண

சந்தியாகாலத்தில் நீராடி அவன்
சந்நிதி
வருவார் ஒரு கோடி
மந்திர குழந்தைக்கு வாகைசாத்து

மாலைகள் இடுவார் குறை ஓடி


(குருவாயூருக்கு...)

உச்சிக்காலத்தி சிங்காரம் அவன்
ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்

பச்சைக்குழந்தையை பார்க்கும் போதே
பாவையர் தாய்மை ரீங்காரம்

நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண

(குருவாயூருக்கு...)

மாலை நேரத்தில் சீவேலி
அவன் மாளிகை முழுவதும் நெய்வேலி

நெய்விளக்கேற்றி பொய் இருள் அகற்று

நித்தம் தருவாள் ஸ்ரீதேவி
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண


சாத்திரம் தந்த கண்ணனுக்கு
ராத்திரி பூஜை ஜகஜோதி
பாத்திரம் கண்ணன் பால் போல் மக்கள்

பக்தியில் பிறந்த உயர்நீதி


குருவாயூருக்கு வாருங்கள் - ஒரு
குழந்தை சிரிப்பதை பாருங்கள்
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன்
உட்கார்ந்திருப்பதை காணுங்கள்

(குருவாயூருக்கு...)

நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண

Friday, May 18, 2007

49. காற்றில் வரும் கீதமே, என் கண்ணனை அறிவாயா?

தில்லாலங்கடி தாங்கு என்று நம்ம வெட்டிப்பயல் போட்டாரே ஒரு கண்ணன் பாட்டு, அதை விட தில்லாலங்கடி இந்தப் பாட்டு! - ஒரு நாள் ஒரு கனவு என்ற படம்.
இந்த வாரம் வெளிநாட்டுக்குப் போயிருந்த போது, சும்மா விமானத்தில் பாத்துக்கிட்டே போனேன். படம் நல்லாத் தான் இருந்துச்சு. நம்மள தான் ஊர் போய்ச் சேர்ந்தவுடன், ஆபிசில் போட்டுத் தாக்கிட்டாங்க! :-)

ஸ்ரீகாந்த் (இவருக்குக் கல்யாணம் ஆகப் போகுதாமே! - வாழ்த்துக்கள்).
இவருடன் சோனியா அகர்வால் நடிச்ச படம்.
யாராச்சும் தமிழ்மணத்தில் விமர்சனம் போட்டாங்களான்னு தெரியலை, மறந்து போச்சு!
ஆனா, இந்தப் படத்தில் ஒரு டாப்-டக்கர் கண்ணன் பாட்டு உள்ளது!
அஞ்சு பேர் சேர்ந்து பாடறாங்க டோய், இந்தப் பாட்டை!

அம்மன் பாட்டு வலைப்பூவில், bas என்பவர், நேயர் விருப்பம் கேட்டிருந்தார் - காற்றில் வரும் கீதமே, என் கண்ணனை அறிவாயா?
ஓ அறிவேனே என்று பாட்டும் வீடியோவும் அனுப்பி வைத்தார் நம்ம பாலராஜன் கீதா - பதிவுலகத் தென்றல்! - அவருக்கு நம் நன்றி!

காற்றினிலே வரும் கீதம் - எம்.எஸ் பாட்டு அந்தக் காலத்து ஹிட் என்றால், அதே போல்
காற்றில் வரும் கீதமே என்று தான் இதுவும் தொடங்குகிறது!
பாட்டும் மெல்லிய தென்றல் போலத் தான் ஒலிக்கிறது!
எல்லாவற்றுக்கும் மேலாக, ஆங்கில வார்த்தைகள் எல்லாம் இல்லாமல், எளிய தமிழில், சுகமான ராகத்தில், வாலி-ஞானியின் கூட்டு முயற்சி!

பாடலைக் காண வேண்டாம். கேட்டு மட்டும் மெய் மறப்போம் என்று நீங்கள் நினைத்தால் இதோ சுட்டி
கீழே இசைஞானி இளையராஜாவின் கச்சேரியில், ஒரு குழுவே பாடுகிறது பாருங்கள்!

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய்க் குழலில் அழகாக........
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து
(காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா? )

பசு அறியும் அந்தச் சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
வருந்தும் உயிருக்கு ஒரு மருந்தாகும்
இசை அருந்தும்
முகம் மலரும்...ஒரு அரும்பாகும்
இசையின் பயனே இறைவன் தானே
(காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா? )


ஆதார ஸ்ருதி அந்த அன்னை அன்பே
அதுக்கேற்ற லயம் என் தந்தை அன்பே
ஸ்ருதி லயங்கள் தன்னைச் சுற்றும்...
ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்


திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
இது போல் இல்லம் எது சொல் தோழி
(காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா?)


இசையின் பயனே இறைவன் தானே!
ஆகா...அருமையான வரிகள்!
கும்தலக்கடி கும்மாவா என்று பொழுதுபோக்குக்கும் இசை வேண்டும் தான் என்றாலும்
இசையின் பயன், நிலைத்த பயன் என்று வரும் போது, எது நிலைக்கும்?
நிலைத்து நிற்கக் கூடியவனின் பாட்டு தானே நிலைத்தும் நிற்கும்!
ஒத்த வரியில அழகாச் சொல்லிப்புட்டாரு வாலி!


வரிகள்: கவிஞர் வாலி
குரல்:
இளையராஜா, ஹரிஹரன், ஸ்ரேயா கோஷல், பவதாரிணி, சாதனா சர்கம்

இசை: இளையராஜா
படம்: ஒரு நாள் ஒரு கனவு

ராகம்: கல்யாணி (அப்படின்னு நினைக்கிறேன்...
கோட்டீஸ்வரக் கொத்தனார், கோட்டீஸ்வரர் எழுதிய பாட்டைப் போட்டு பட்டையக் கிளப்பினார். அவரே வந்து சொல்லவும் :-)

Monday, May 14, 2007

திருமால் பெருமைக்கு நிகரேது!!!





திருமால் பெருமைக்கு நிகரேது - உன்றன்

திருவடி நிழலுக்கு இணையேது!
பெருமானே உன்றன் திருநாமம் - பத்து
பெயர்களில் விளங்கும் அவதாரம்

(திருமால்)



கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம் - தனைக்
காப்பதற்கே கொண்ட அவதாரம்
- மச்ச அவதாரம்!

அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் - எங்கள்
அச்சுதனே உன்றன் அவதாரம்
- கூர்ம அவதாரம்!

பூமியைக் காத்திட ஒரு காலம் -நீ
புனைந்தது மற்றொரு அவதாரம்
- வராக அவதாரம்!

நாராயணா என்னும் திருநாமம் - நிலை
நாட்டிட இன்னும் ஒரு அவதாரம்
- நரசிம்ம அவதாரம்!

மாபலிச் சிரம் தன்னில் கால் வைத்து - இந்த
மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம்
- வாமன அவதாரம்!

தாய் தந்தை சொல்லே உயர் வேதம் - என்று
சாற்றியதும் ஒரு அவதாரம்
- பரசுராம அவதாரம்!

ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் - எனும்
உயர்வினைக் காட்டிய அவதாரம்
- ராம அவதாரம்!

ரகு குலம் கொண்டது ஒரு ராமன் - பின்பு
யது குலம் கண்டது பலராமன்
- பலராமன்

அரசு முறை வழிநெறி காக்க - நீ
அடைந்தது இன்னொரு அவதாரம்
- கண்ணன் அவதாரம்


விதி நடந்ததென மதி முடிந்ததென
வினையின் பயனே உருவாக,
நிலைமறந்தவரும், நெறியிழந்தவரும்
உணரும் வண்ணம் தெளிவாக,
இன்னல் ஒழிந்து புவி காக்க - நீ
எடுக்க வேண்டும் ஒரு அவதாரம்
- கல்கி அவதாரம்!

(திருமால்)

பாடலை கேட்க இங்கே சொடுக்கவும்...


Wednesday, May 02, 2007

ஆற்றில் இறங்கினார் அழகர்....





திருமாலிருஞ்சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குருமா மணி உந்து வைகை வடபால்
திருமால் வந்து சேர்விடம் மக்கள் கடலே

பச்சை வண்ணன் பவளக்கனிவாய்ப்பெருமான்
இச்சையுடன் இசைந்தவரைக் காக்கும் அழகன்
பச்சை வண்ணப் பட்டுடுத்தித் பரியில் ஏறி
இச்சகத்தோர் வாழ்ந்திடவே வைகை சேர்ந்தான்

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP