Sunday, February 27, 2011

ராம கோவிந்த ஹரி !


ரேடியோவில் வரும் சில விளம்பரங்கள் ஜாலியானவை. கேட்டாலே குதூகலம் அடைவோம். அப்படி சில வாரங்கள்(மாதங்கள்?) முன்பு கேட்டபொழுது மனதைக் கவர்ந்த விளம்பரம் இது:
"யார் யாரெல்லாம் ஃப்ரைட் ஃபூட் சாப்ட தயங்க்ராங்களோ
ஊ ! ஆ! ஆ !!  (கோரஸாக)
யார் யாரெல்லாம் ஜிம்ல ஜாலியா இருக்காங்களோ
ஊ ! ஆ! ஆ !!! (கோரஸாக)
யார் யாரெல்லாம் டேஸ்டுக்காக ஓட்றாங்களோ
ஊ ! ஆ! ஆ !!! (கோரஸாக)
....
ஹார்லிக்ஸ் நியூட்ரிபார் சாப்பிட ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.
உங்கள் காரணம் என்னவோ? "
என்று கேட்டுவிட்டு மிக வேகமாக ஒரு வாக்கியம் சொல்வர். கிட்டதிட்ட "இதை சாப்பிட்டால் வரும் பிரச்சனைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல" என்பது போன்ற ஒரு டிஸ்கியோ என்று தோன்றும். :-)
கொஞ்சம் உன்னிப்பாக கவனித்தால் "ஹார்லிக்ஸ் நியூட்ரிபார் இஸ் எ நரிஷிங்க் ஸ்னாக் டு பி டேக்கன் அஸ் பார்ட் ஆஃப் எ பேலன்ஸ்டு டயட்" என்பதைத் தான் அவ்வளவு வேகமாக சொல்வார்கள்.  [ஆஹா ! ஆங்கிதமிழ் - அதாவது ஆங்கிலத்தை தமிழ்ல - படிக்க எவ்ளொ கடினமா இருக்கு பாருங்க. :-) தாங்கிலமும் இவ்ளோ கடினமா தான் இருந்தது.  :-)  நல்ல வேலை/வேளையா நண்பர் கே.ஆர்.எஸ் தமிழ் தட்டச்சு பெட்டியை பின்னூட்டமிடும் பக்கத்தில் இணைத்தார். அவருக்கு ரொம்ப நன்றி. :-) ]
இப்போ எதுக்கு இதெல்லாம் சொல்றேன் ? கண்ணன் பாட்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீங்களா?
உடல் ஆரோக்கியம் போலவே உள்ள ஆரோக்கியமும் கவனிக்க வேண்டிய ஒன்றாம். "சித்த சுத்தி இறைவனின் நாமங்களை மீண்டும் மீண்டும் சொல்வதனால், நினைவு கூர்வதினால் ஏற்படுகிறது. " என்றெல்லாம் பெரியவங்க சொல்லி இருக்காங்க. மஹான் தியாகராஜர் நாள் ஒன்றிற்கு 1,25,000 ராம நாமம் சொல்வாராம். அன்னை சாரதா தேவி ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 15,000 முறை ஏதோவொரு இறை நாமத்தை நாவினால் உச்சரிக்க அல்லது உள்ளத்தில் ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்.
"நமக்கு இருக்கற ஆயிரத்தெட்டு அதிமுக்கியமான வேலைகளில் இதை எல்லாம் செய்யறது கஷ்டம்". 
அப்படின்னு என்னைப் போல நினைக்கறவங்க :-), எம்.எஸ் அம்மாவின் தெய்வீகக் குரலில் இந்தப் பாடலை (கபீர்தாஸ் பஜன்) கேளுங்க.  :-)


பாடலை இங்கே தரவிறக்கம் செய்யலாம். 

பஜோரே பையா ராம கோவிந்த ஹரி
ராம கோவிந்த ஹரி

ஜப தப சாதன கச்சு நஹி லாகத்
கரசத் நஹி கத்ரி (பஜோ)

சந்தத் சம்பத் சுக கே காரண
ஜாசோ போல் பரீ (பஜோ)

கஹத கபீரா ஜாமுத் ராம நஹீ
வா முக் தூள் பரீ (பஜோ)

"பாடல் பொருள் எங்க?" என்று கேட்போருக்கு - இது கிட்டதட்ட ஜுனியர் ஹார்லிக்ஸ் பாடல் தான். அப்படியே கேட்கலாம் :-) [ ஹி ஹி..பொருள் தெரியாதுன்னு சொல்றதுக்கு தான் என்னவெல்லாமோ எழுதி ஒப்பேத்தயிருக்கேன். :-) ]

பாடல் பொருளை பின்னூட்டத்தில் அளித்த சுப்பு தாத்தாவிற்கு நன்றி. :-)
பொருள் :
ராம கோவிந்தன் ஹரி இவர்கள் நாமங்களை ஜெபியுங்கள், நீங்கள் செய்யும் மற்ற ஜபங்கள், தவங்கள் எத்தினாலும் உங்கள் பழைய வினைப் பயன்கள் இருக்கும் பாண்டம் காலியாவதில்லை. புத்திரர்கள், சொத்துக்கள் ஆகிய மற்ற சுகம் தரும் சாதனங்களால் தவறுகள் தான் பாவங்கள்தான் சேருகின்றன. எந்த முகமானது ராமனை காண வில்லையோ, அந்த முகம் புழுதி நிறைந்ததே. அதனால் ராமனை விடாது ஜெபி. 

Wednesday, February 23, 2011

கமலக்கண்ணன் பாதகமலத்துக்கு ..

கமலக்கண்ணன் பாதகமலத்துக்கு ..
--------------------------------------------------------

                                                                                                                                                               

         கண்ணா! என் கவிதைக்குக் கருவாகி வா ;
         மன்னா! எந்நெஞ்சத்து மருள் நீக்க வா ;
         பொன்னே! என் வாழ்வுக்குப் பொருள் கூற வா;
         அன்பே! என் அஞ்ஞான  இருள் போக்க வா ;
          எந்நாளும் எனைக்காக்கும்  அரணாக வா !
    ஆதரிக்கப் பாஞ்சாலி அழைத்த வேளை
     மாதவாநீ  அவளுக்கு அளித்தாய் சீலை;
     ராதையுடன் செய்தாய் நீ ராஸ லீலை;
     கோதையும் உன்மேனிக்கிட்டாள் மாலை ..இந்த
     பேதைமேல்மட்டுமேன் இரக்கமில்லை? (கண்ணா...)     நோக்கும் முகம் யாவும் நினதாகணும்;
    வாக்கெல்லாம் உனைவாழ்த்தும் துதியாகணும்;
    கேட்பதுந்தன் குழலொலியாகணும்;
    நீக்கமற நினைவெல்லாம் நீயாகணும்;..நெஞ்சில்
    பூக்கும் பாமலருன் பதம் சேரணும்.(கண்ணா..)
  

        

Sunday, February 20, 2011

கண்ணனுக்கு வெண்ணெய் ஏன் அதிகப்ரியம்?

கண்ணனுக்கு வெண்ணெய் ஏன் அதிகப்ரியம் ?
==========================================
ஸர்ர்ர்ர் ..ஸர்ர்ர்ர் ..ஸர்ர்ர்ர் ..ஸர்ர்ர்ர்
                       ஸர்ர்ரூ ..ஸர்ர்ருன்னு தயிர் கடையும் சத்தம் கேட்குது
                      திரண்டவெண்ணெய் தாழி விளிம்பில் எட்டிப்பார்க்குது
                        வெள்ளைவெளேர் வெண்ணெய் வாசனை மூக்கைத்துளைக்குது
                      கள்ளக்ருஷ்ணன் உள்ளம் துள்ளி துள்ளிகுதிக்குது

 
        கைகழுவ யசோதை புறக்கடைக்குச் செல்கிறாள்
       தருணம்பார்த்து கண்ணன் ஒருகைவெண்ணெய் உண்கிறான்
       சின்னவாயில் வெண்ணெய் ஈஷி இருக்கக்கண்ட தாய்
       "தின்னையாநீ வெண்ணெய்?" என்று அதட்டிக்கேட்கிறாள்

                     "கழுவப்போன வழியில் உன்கையிருந்து சிந்திய
                      வெண்ணெய் வழுக்க விழுந்த என்வாயில் வெண்ணெய்பட்டது
                      வலிக்குதம்மா!இடுப்பில்என்னைத் தூக்கிவெச்சிக்கோ"
                      என்றுசொல்லி "உம்ம்ம்" என்றுவிசும்பிஅழுகிறான்


        அழும்பிள்ளையை அன்னை இடுப்பில் தூக்கிக்கொள்கிறாள்
        சேயைச் சினந்ததெண்ணி நெஞ்சம்நோக நிற்கிறாள்
        வெண்ணெயூட்டி சமாதானப்படுத்த நினைக்கிறாள்
         வெண்ணெய்த்தாழி நோக்கி அவள் விரைந்துநடக்கிறாள்
                        கடைந்துவைத்த வெண்ணெய் குறையக்கண்டு திகைக்கிறாள்
                        பதிந்திருந்த கைத்தடத்தைக்கண்டு மலைக்கிறாள்
                        "கள்ளக்க்ருஷ்ணா!வெண்ணெயில் உன்கைச்சுவடிருக்கு
                        பொய்சொன்னவாய்க்கு போஜனமில்லை" என்கிறாள்


         "பூனையொன்று பானையருகே போகக்கண்டேனே
           அதுவே வெண்ணெய்தின்னுருக்கும்"என்று அளக்கிறான்
           "பூனைநாக்கால் நக்கும்,கையால் அள்ளித்திங்காது
            நீயேவெண்ணெய் தின்னவனென்று அடிக்கவருகிறாள்
                            "குரங்கொன்று பானைதனை நெருங்கக்கண்டேனே
                             திருடியிருக்கும் அதுவேவெண்ணெய்" என்றுபுளுகறான்
                            "அடிஉதையால் இவன்வாயில் உண்மைவராது "
                              என்றுணர்ந்த தாயும் இனியகுரலில் கேட்கிறாள் :


              "விதவிதமாய் உணவுஉனக்கு ஊட்டிவிட்டாலும்
               வெண்ணெய்மட்டும்நீ விரும்பி உண்பதேனடா ?"
               அடிவிழாது என்றுகண்டுகொண்ட கண்ணனும்
               அன்னையுள்ளம் உருகுமாறு காரணம்சொல்கிறான் :

                                  "கோபியர்கள் `கருப்பா,கருப்பா!`'என்று கிண்டலாய்
                                     கூவியழைத்து என்னைரொம்பக்கேலி செய்யறா
                                   வெள்ளைவெண்ணெயுண்டால் கருமைகரைந்துபோகுமே
                                  என்றுஎண்ணி வெண்ணெய்விரும்பிஉண்டேன் "என்கிறான்
                  "கோபியரின்நீர்க்குடத்தை கல்லாலடித்து நீ
                   உடைத்ததாலே கோபங்கொண்டு கேலிசெய்கிறார்
                   பொல்லாத்தனம்விட்டால் கருமைகரைந்துமறையுமே
                   வெண்ணெயுண்ணத்தேவையில்லை"என்றுமறுக்கிறாள்


                                      கருமைக்காக தாய்தன்மேல் இரக்கம்காட்டுவாள்
                                      என்றுஎதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்த
                                       மாயக்கண்ணன் தாயவளின் மனத்தை இளக்கிட
                                       மழலையாக மாயாஜால வார்த்தை மொழிகிறான்:

                     "`அன்னை'போல `வெண்ணெய்' இனிமையாக ஒலிப்பதால்
                      உன்னைப்போல வெண்ணெய்மீதும் பிரியம் அதிகமே "
                      யசோதை இதுகேட்டு வெண்ணெயாய் உருகிவிடுகிறாள்
                      குட்டிக்கண்ணனைக்கட்டி அணைத்துமுத்தமிடுகிறாள்
=============================================================================================

                              
                           
                          

Monday, February 14, 2011

காதல் முல்லை

கேஆர்எஸ் - in காதல் முல்லை மாலையில் மலர்கிறது..

(கேஆர்எஸ் வெளியூர் பிரயாணத்தில் இருப்பதனால் அவர் சார்பாக இந்த கவிதையை பதிவு செய்கிறேன்.)


மாலையில் ஒருநாள் மல்லிகைத் தோட்டம்..
மதிபோல் குதித்து வந்தாயே
நகம்போல் வெளுப்பும் சிகப்பும் கலந்த
அரும்பைப் பறித்துச் சென்றாயே

அரும்பு உந்தன் மேனியில் விரிந்து
மணமும் பரப்ப வைத்தாயே
முருகா என்னைத் தனியாய் முகர்ந்து
தினமும் அரும்பச் செய்தாயே

--------------


மாலையில் ஒருநாள் மின்னல் பளிச்ச
மறைந்தே சென்று ஒளிந்தாயே
மழையில் நனைந்த மலரை ஒதுக்கி
தனியே பின்னர் எறிந்தாயே

மழையில் நனைந்து இதயம் நனைந்து
மயிலும் நடந்து விழுகின்றேன்
நனைதல் எந்தன் குற்றம் குறையோ
மழையில் நனைந்து எரிகின்றேன்
---------------


கண்ணன் மகளே என்றே அன்று
கையில் எடுத்து மகிழ்ந்தாயே
சங்கரிப் பூவைச் சபையினில் இன்று
காலால் மிதித்து நடந்தாயே

நடந்தாய் வாழி வேல்முருகா- உன்
தடந்தாள் கிடந்தாள் நொடிப்பொழுதும்
கிடந்தாள் மேலே நடந்தாய் நீயே
நடந்தாய் வாழி தமிழ்முருகா!

Sunday, February 13, 2011

லலிதா மிட்டல்-தசாவதார பஜனம்!

இன்று கண்ணன் பாட்டில் அன்பர் கவிதை! கண்ணன் பாட்டின் வாசகியான லலிதாம்மா என்னும் லலிதா மிட்டல் அவர்கள் வழங்குவது! அவர்களின் வேண்டற்பாடல்களின் வலைப்பூ இது!


தசாவதாரம் [மெட்டு - மீராபஜன் - paayoji maine ramrathanudhan paayo என்ற மெட்டு]


கண்ணா மண்ணை உண்ட மன்னா - கார்முகில் வண்ணா

அசுரன் அபகரித்த மறைகளை மீட்கவே
மீனாய்ப்பிறந்து பட்டபாட்டால் களைத்தேநீ
அரவணையில் அயர்ந்தாயோ? அரங்கநாதா!
[கண்ணா மண்ணை.. ]

அமிர்தம் கடைந்தெடுக்க ஆமையாய் அவதரித்து
மந்தரமலை சுமந்ததாலே சோர்வடைந்தேநீ
அரவணையில் துயின்றாயோ ? ஆராவமுதா!..
[கண்ணாமண்ணை]

வராகமாய்ப்பிறந்து இரண்யாக்ஷனை அழித்து
பூமியைக்கொம்பினில் தாங்கிக் களைத்தேநீ
பாம்பணையில் படுத்தாயோ? ஸ்ரீபாண்டுரங்கா!..
[கண்ணா மண்ணை..]

நரசிம்மரூபனாய் தூணைப்பிளந்துவந்து
இரண்யனின் உதரம் கிழித்தே உக்ரம் தணிய
சேஷ சயனம் செய்தாயோ ?சாரங்கபாணி!..
[கண்ணா மண்ணை ]

வாமனனாய் பலியை மூவடி நிலம்கேட்டு
ஓங்கி உலகளந்ததாலே ஓய்வேடுக்கவே
நாகத்தின் மேல் படுத்தாயோ?ஹரினாராயனா!..
[கண்ணா மண்ணை,.]

ஜமதக்கினிமகனாம் பரசுராமனாய் வந்து
க்ஷத்ரிய குலநாசம் செய்து களைத்தேநீ
சேஷசயனம் செய்தாயோ? ஜனார்தனா!
[கண்ணா மண்ணை...]

தசரதனின்மகனாம் ராமனாய் அவதரித்து
தசமுகமர்தனம் செய்தே இளைப்பாற
புஜங்கசயனம் செய்தாயோ ?புண்டரிகாக்ஷா!
[கண்ணா வெண்ணை ]

பலராமனாய்ப்பிறந்து கலப்பைதனைச் சுமந்து
பலவிதலீலை புரிந்தே களைப்படைந்து
பன்னகசயனம் கொண்டாயோ ?பரந்தாமா!
[கண்ணா வெண்ணை ]

கீதைதனை ஓத கண்ணனாய் அவதரித்து
பார்த்தனுக்க்காக தேரோட்டிக்களைத்தேநீ
பாம்பணையில் படுத்தாயோ? பண்டரினாதா!
[கண்ணா மண்ணை..]

தங்கத்தொட்டிலில் உன்னைத் தாலாட்ட நாங்களிங்கே
ஏங்கிஇருக்க தேவைதானோ பாம்புப்படுக்கை ?
எங்கள் கலிதீர வாராய் கல்கியுருவில் ?
[கண்ணா மண்ணை ...]

Friday, February 11, 2011

வரதனை நினைதொறும்...
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !

யது வீரனை நந்த குமாரனை நினைந்து
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !
மலரே இருவிழி பங்கஜ மலரே திருமுகமும்
மலரே இருகரம் தாமரை மலரே திருவடிகள் !
மந்தஹாசமும் தவழ்ந்த சுந்தர முகாரவிந்தம் நினைந்து
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !

அன்னை தந்தை பதியும் அவன் !
அருந்துணை நவநிதியும் அவன் !
இன்பமும் அழகும் அவனே - என்
இன்பமும் அழகும் அவனே !
எழில் தரும் அணி பணி பவனே ! 
மீரா ப்ரபு கிரிதர கோபாலனை வரதனை நினைதொறும்
எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே !


டிஸ்கி: இது ஓர் மீள் பதிவு. பக்த மீரா படத்தில் இடம்பெறும் மேலே உள்ள அற்புதமான பாடலை நம் குமரன் ஏற்கனவே பதிந்து விட்டார். இருந்தாலும் சில பாடல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். :-) 

பாடலை இங்கே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.  

Sunday, February 06, 2011

கண்ணீரில் கரைந்திடுமோ கர்மவினை?

மீராபாயைப் பற்றி அதிகம் தெரியாது, இப்போதான் முதல் முறையா படிச்சேன்… ரா.கணபதி அவர்களின் "காற்றினிலே வரும் கீதத்" திலிருந்து ஒரு நிகழ்வையும், அதன் தாக்கத்தில் பிறந்த கவிதையையும் இங்கே பகிர்ந்துக்கறேன்...
எத்தனையோ துன்பங்களுக்கு பிறகு மீராவுடைய ஆசை நிறைவேறுகிறது. கார்மேகக் கண்ணனே அவளுக்கு கணவனாக வாய்த்து விட்டான். எப்பேர்ப்பட்ட பேறு அது. மணமான அன்று கண்ணன் தன்னைப் பிரியும் முன் அவனைப் பார்த்து மீரா கேட்கிறாளாம்:

“கண்ணா, நான் அனுபவிக்க வேண்டிய துன்பம் எல்லாம் தீர்ந்ததா? என் கர்ம வினை கழிந்ததா?” என்று.

அதற்கு பதிலாக தன் நிறத்தைத் தாங்கி அலையும் ஒரு மேகத்தைக் காட்டறான் கண்ணன்.

“மீரா, அதோ பார். அந்த கார்மேகத்தை.”

“அடேயப்பா… கண்ணா, இந்த மேகம்தான் எவ்வளவு பெரிசா, விரிஞ்சு பரந்து இருக்கு!”

“நீ தினமும் கண்ணுக்கு இட்டுக் கொள்ளும் அஞ்சனத்தின் அளவு என்ன, மீரா?”

“அதுவா? அது இந்த கார்மேகத்தில் அணுவளவு கூட இருக்காதே?”

“அந்த மை அளவுதான் உன் கர்ம வினை கழிந்திருக்கிறது, மீரா. இன்னும் கழிய வேண்டியது இந்த கார்மேகம் அளவு இருக்கு. உன் கர்ம வினை கழியக் கழிய, இந்த மேகம் அளவில் குறைஞ்சுக்கிட்டே வரும்”, அப்படின்னு சொல்றான் கண்ணன்.

அன்றிலிருந்து அந்த கார்மேகத்தை பார்ப்பதே மீராவுக்கு வேலையாயிருந்ததாம். ஏதாவது துயரம் ஏற்படும் போது, குடம் குடமா கண்ணீர் பெருக்கிட்டு, மேகம் இப்போ நல்லா சின்னதாயிருக்குமேன்னு நினைச்சு அதைப் பார்ப்பாளாம். ஆனா அது கண்ணுக்கே தெரியாத அளவுதான் குறைஞ்சிருக்குமாம்…

போகப் போக துன்பம் அவளுக்கு பழகிடுது. எவ்வளவு துயரம் வந்தாலும் கலங்கறதில்லை. எப்படிப்பட்ட துன்பம் வந்தாலும் சந்தோஷப்படறா. ‘என் கர்ம வினையைக் கழிக்க என் கண்ணன் எனக்காக அனுப்பி வச்ச உதவி இது’ன்னு நினைச்சு பரவசப்படறளாம்…

கண்ணீர் பெருகப் பெருக, கார்மேகம் கரையத்தானே வேண்டும்?


கார்மேகம் கரைந்திடுமோ?
கர்மவினை கழிந்திடுமோ?
காலன்வரும் காலம்வரை
கண்ணீர்தான் சுகவரமோ?

பலப்பலவாம் பிறவிகளும்
பழவினையைக் கரைக்கவில்லை
நீளும்துன்ப மோஎன்னை
வேண்டாம்என்று வெறுக்கவில்லை

இப்பிறவியி லேனும்உன்னை
ஏற்றும்வரம் தந்துவிட்டாய்
தப்பாதுன் மலரடிகள்
மனதில்மணக்கச் செய்துவிட்டாய்!

--கவிநயா

சுப்பு தாத்தாவின் குரல் வண்ணத்தில்... நன்றி தாத்தா.

Thursday, February 03, 2011

சல்லாபம்இனிமையான மாலைப் பொழுது.. ஆலாபனை ஒன்று காற்றில் தவழ்ந்து வந்தது. என்ன ராகம் இது.. இப்படியும் மனம் மயக்க..

கண்ணனிடம் பொய்க் கோபம் கொண்ட ராதை, அவன் திரும்பி வர இப்படித்தான் முனகி இருப்பாளோ, என்று தோன்றியது.

காலம் பின்னோக்கி சென்றது..

பின் மாலை நேரம்.. பசுமையான வனத்தினில் அவன் வருவானென்று காத்திருக்கின்றாள். வானமெங்கும் படர்ந்திருந்த நீல நிறம், அவளுக்கு கண்ணனின் அங்கங்களை நினைவுறுத்தியது. கார்மேகம் இரண்டொன்று, அவள் மேல் பன்னீரைத் தூவிச் சென்றது. குளிரில் அவள் நடுங்கினாள். பசுமையான முல்லை புதர்களில் தோன்றிய மலர்கள், தன்னை கண்டு எள்ளி நகையாடுவதைப் போல அவளுக்கு தோன்றியது. தன் முன்கோபத்தை தானே நொந்து கொண்டாள். ஒரு முறை அவன் எழில் திருமேனியினை காணோமா!! அவன் பாதம் பணியோமா!! என்று ஏங்கினாள்... அதோ பாடுகிறாள் அவள், ஆள் இல்லாத வனமதனில், ஆண்டவனின் கருணையை நாடி....


நீ வேய்ங்குழல் ஊத நிதம் ஏங்கி நின்றேன் கண்ணா..

நினைவிலும் கனவிலும் மாயம் செய்யும் மாதவா மனமிரங்கி..


சரிந்திடும் கார்குழலும்

அசைந்திடும் மயில் பீலியும்

ஒளிர்ந்திடும் பட்டு துகிலும்

குவிந்திடும் செவ்விதழும் கொண்டு .. நீ


குன்றினை ஏந்தி நின்ற

குவலயா பீடம் கொன்ற

திரௌபதை மானம் காத்த

தோழனின் துயர் தீர்த்த.. நீ


சரணம் என்று நானும்

அடைந்தேன் உந்தன் பாதம்

உதிரம் எல்லாம் உனதே

என்ற உளறல் கேட்டிலையோ ... நீTuesday, February 01, 2011

என்னை உன் தாஸனாக ஏற்றுக் கொள்வாய்!

நாம் இன்று பார்க்கப் போகும் பாடலின் ஆசிரியர், த்வைத சித்தாந்தத்தில் 15ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு மகான். தாஸர். வேத, புராண, இதிகாசங்கள் அனைத்தின் சாரத்தையும், சர்வோத்தமனான பரந்தாமனின் பேர், குணம், அவதாரங்கள், சிறப்பு ஆகிய அனைத்தையும் அனைவருக்கும் புரியும்படியாக எளிய கன்னடத்தில் மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தவர்.

யார் அவர்? அவர்தான் - நாரதரின் மறுபிறவி என்று கருதப்படும் - ஸ்ரீ புரந்தரதாஸர்.


எதுக்கு இன்னிக்கு அவர் பாடலை எடுத்துக்கிட்டோம்? ஏன்னா, இன்று ஒரு சிறந்த தினம். புஷ்ய மாத அமாவாசையான இன்றுதான் ஸ்ரீ புரந்தரதாஸரின் புண்ய தினம். ஆராதனை. உலகெங்கிலுமுள்ள தாஸரின் தாஸர்கள் அவரது பாடல்களை பாடி கடவுளை வழிபடும் நன்னாள்.

ஸ்ரீ மத்வர் உருவாக்கிய த்வைத சித்தாந்தத்தில் வந்த ஸ்ரீ வியாஸராயரின் பிரதம சீடர் நம்ம புரந்தரதாஸர். பாடல்கள் மூலமாக மக்களின் அறியாமையை அகற்றி அவர்களை பக்தி மார்க்கத்திற்கு திருப்ப வேண்டுமென்ற தன் குருவின் கட்டளையை ஏற்று எண்ணற்ற பாடல்களை பாடியவர்.


கடவுளை தன் தலைவனாக, நண்பனாக, குழந்தையாக இன்னும் பல்வேறு ரூபங்களில் நினைத்து, வர்ணித்து, உருகி அவர் இயற்றிய பாடல்கள் அனைத்தும் அரிய பொக்கிஷங்கள். அட, இதேதானே நம்ம தமிழ் ஆழ்வார்களும் செய்திருக்காங்கன்னு உங்களுக்கு தோணும். மிகச் சரி. தமிழில் ஆழ்வார்கள் என்றால் கன்னடத்தில் ஹரி-தாஸர்கள். அதாவது ஹரிதாஸர்கள். (இதில் புரந்ததாஸர், கனகதாஸர்னு வரிசையா நிறைய பேர் இருக்காங்க).

மறுபடி புரந்தரதாஸருக்கே வருவோம்.

**

பக்தியில் ஐந்து விதமான பக்தி உண்டு என்று சொல்லப்படுகிறது. அது என்ன?

தாஸ்ய பாவம் - கடவுளை தலைவனாகவும், தன்னை அடிமையாகவும் நினைத்து வழிபடுவது; பாடுவது.

சக்ய பாவம் - கடவுளை நண்பனாக நினைத்து வழிபடுவது.

மதுர பாவம் - கடவுளை கணவனாக நினைத்து பாடுவது. (கோபிகைகள் கண்ணனை நினைத்து உருகுவது இதில் வரும்).

வாத்ஸல்ய பாவம் - கடவுளை ஒரு குழந்தையாக நினைத்துக் கொள்ளுவது.

சாந்த பாவம் - இதில் பக்தன் உணர்ச்சி வசப்படாதிருப்பவன். அமைதியே உருவானவன். இந்த நிலையில் கடவுளை நினைத்து பாடுபவன்.

நம்ம தாஸர் (மற்ற அனைத்து தாஸர்களைப் போலவே), மேலே சொன்ன இந்த ஐந்து பாவங்களிலும் ஏகப்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.


இன்று நாம் பார்க்கப்போகும் பாடல் - தாஸ்ய பாவத்தை சார்ந்தது.

அதாவது கடவுள் என்பவன்

தலைவன்.
முதலாளி.
அனைத்திற்கும், அனைவருக்கும் மேலானவன்.
சர்வோத்தமன்.

நானோ

அவன் தாஸன்
வேலைக்காரன்.
தலைவன் என்ன சொல்வானோ, அதை நான் செய்வேன்.
எனக்கு என்ன வேண்டுமோ அதை அவனே பார்த்து கொடுப்பான்.

இப்படியான உத்தமமான நிலைதான் தாஸ்ய மனோபாவம்.

இப்போ இந்த பாடலையும், அதன் பொருளையும் பாருங்க. உங்களுக்கே புரியும்.

**

தாஸன மாடிகோ என்ன
ஸ்வாமி சாசிர நாமத வேங்கடரமணா (தாஸன)


Infinity பெயர்களை கொண்ட வேங்கடரமணனே, ஸ்வாமி, என்னை உன் தாஸனாக ஏற்றுக் கொள்.

துர்புத்தி களனெல்ல பிடிஸோ
நின்ன கருணகவசவென்ன ஹரணக்க தொடிஸோ
சரணசேவே எனகெ கொடிஸோ
அபய கரபுஷ்பவ என்ன சிரதல்லி முடிஸோ (தாஸன)


கெட்ட எண்ணங்களை என் மனதிலிருந்து விடுவிப்பாய்
உன் கருணை என்னும் கவசத்தால் என் வாழ்க்கையை ரட்சிப்பாய்
உன் திருவடியை வணங்கி சேவை செய்யும் பாக்கியத்தை எனக்கு கொடுத்து
உன் அபயத்தை அளிக்கும் கரத்தை என் தலையில் வைத்து என்னை காப்பாற்று.

த்ருடபக்தி நின்னல்லி பேடி
நான் அடிகெரகுவேனய்ய அனுதின பாடி
கடெகண்ணிலே என்ன நோடி
பிடுவே கொடு நின்ன த்யானவ மனசுசி மாடி (தாஸன)


எப்போதும் மாறாதிருக்கும் திடமான பக்தியை உன்னிடத்தில் வேண்டி,
நான் உன் பாதத்தில் தினமும் விழுந்து உன் நாமத்தை பாடிக்கொடிருப்பேன்.
உன் கடைக்கண்ணால் என்னை பார்த்து
நான் என்றென்றும் உன்னை தூய மனதோடு நினைத்துக்கொண்டிருக்குமாறு அருள்புரிவாய்.

மரெஹொக்க வரகாய்வ பிரிது
என்ன மரெயதே ரஷணே மாடய்ய பொரது
துரிதகளெல்லவ தரிது
ஸ்ரீ புரந்தரவிட்டல என்னனு பொரெது (தாஸன)


காப்பாற்று என்று உன்னை வேண்டியவருக்கெல்லாம் சமயத்தில் வந்து உதவி புரிந்த வரலாறு இருக்கிறது
அதே போல் (நானும் வந்திருக்கிறேன்) என்னையும் கண்டிப்பாக காப்பாற்று
என் அனைத்து பாவங்களையும் போக்கி
உன் கருணையால் என்னை கரையேற்று ஸ்ரீ புரந்தர விட்டலா!

முதல் இரண்டு பத்திகளில் பக்தி மேலோங்க பெருமாளிடம் வேண்டுகோள் வைக்கும் தாஸர், கடைசி பத்தியில் உரிமையுடன் கேட்பது போல் பாடியிருக்கிறார். கஜேந்திர மோட்சம், த்ரௌபதிக்கு அபயம் அளித்தது இது போன்ற உதாரணங்கள் இருக்கிறதே, அதே போல் எனக்கும் அபய ஹஸ்தம் கொடுப்பாய் என்று கேட்கிறார்.

**

இப்படி தாஸ்ய பாவத்தில் உருகி பாடியிருக்கும் புரந்தரதாஸரின் பாடலை யாரு பாடினா பொருத்தமாயிருக்கும்?

தினந்தோறும் அந்த வேங்கடரமணனையே ‘சுப்ரபாதம்’ சொல்லி எழுப்பும் - அந்த திருப்பதி வேங்கடவனின் காலடியிலேயே நிரந்தரமாய் தங்கி சேவை புரியும் - நம்ம எம்.எஸ்.அம்மாதான். வேறே யாரு?. பாடலின் முழுமையான அர்த்தத்தை புரிந்தவாறு, ஆத்மார்த்தமான பக்தியுடன் அம்மா பாடுவதை பார்த்து, கேட்டு மகிழுங்கள்.

தாஸன மாடிகோ என்ன..

**

ஜெய் ஜெய் விட்டல ! பாண்டுரங்க விட்டலா !!
ஜெய் ஜெய் விட்டல ! புரந்தர விட்டல !!


**

நன்றி
ச்சின்னப் பையன்
http://dasar-songs.blogspot.com

**

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP