Wednesday, April 25, 2007

கிரிதர கோபாலா - மீராவின் கதை!

ராஜபுதனத்து அரண்மனை அதன் உப்பரிகையிலிருந்து கீழே பார்த்துக்கொண்டிருக்கிறாள் அந்த அழகான சிறுமி.
வீதியில் ஒரே ஆரவாரம், கோலாகலம் ! ஏதோகல்யாண ஊர்வலம்! அலங்கரிக்கப்பட்ட யானை மீது மாப்பிள்ளை அமர்ந்திருக்கிறார்.

சட்டென தன் தாயைப்பார்த்து அந்தச் சிறுமி கேட்கிறாள்.
'அம்மா யார் அது குதிரைமீது?"
'அவர் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளப்போகும் மாப்பிள்ளை"
"அம்மா என் மணவாளன் யார்?"

கள்ளங்கபடமற்ற குழந்தையின் கேள்வி அந்தத் தாயைப் பரவசப்படுத்த அங்கே உயர்ந்த பீடத்திலிலிருந்த கிரிதரகோபாலனின்
சிலையைக் காண்பித்தாள்." இவன்தான் உன் மணவாளன்" என்கிறாள்
அந்தக் கணமே அந்தச் சிறுமியின் மனதை ஆட்கொண்டுவிட்டான் கிரிதரகோபாலன்.

அந்தச் சிறுமி தான் மீரா.
மீராபாய் என்பார்கள் வடக்கில் பெரும்பாலும்.
அரசகுமாரியாய்ப் பிறந்து அனைத்தையும் துறந்து ஆண்டவனைத் தேடிக்கொண்ட மாபெரும் பக்தை, மீரா.
ராதையின் மறு அவதாரம் மீரா என்பார்கள் வடநாட்டில்.

ராஜபுத்ர சிற்றரசனின் மகளாய் கிபி1547ல் அவதரித்தாள் மீரா.
அவளுடைய மூன்றவது வயதில் அரண்மனைக்கு வந்த துறவி அளித்த
கிரிதரகோபாலனின் சிலையைத் தான் அவள் தாய் காண்பித்து அவளுடைய மணவாளன் என வேடிக்கையாய் சொன்னாள்.
ஆனால் மீராவுக்கு அது வேடிக்கையாய் விளங்காமல் உயிரில் கலந்த உறவாய் வியாபிக்க ஆரம்பித்தது. விக்கிரஹத்துக்கு நீராட்டி
அலங்கரித்து அதனுடன் ஆடிப்பாடி என பக்தியோடு வளர ஆரம்பித்தாள்.

அவளுடைய எட்டாவது வயதில்(சில குறிப்பு 13வயது என்கிறது) சித்தூர் இளவரசன் போஜராஜனுடம் மீராவுக்குத் திருமணம் நடந்தது. மீரா கிரிதர கோபாலனின் விக்ரகத்துடன் சித்தூர் சென்றாள்.
மேவார் ராணாக்களின் குலதெய்வம் சிவனும் சக்தியும்.
மீராவோ கண்ணனைத் தவிர வேறு தெய்வங்களைத் தொழாதவள். இதிலேயே பிரச்சினை ஆரம்பித்தது.

ஆயினும் மீரா பணிவோடு தன் கொள்கையைக் கணவனிடம் கூறி
அவனுக்கு வேண்டிய பணிவிடைகளைக் குறைவின்றி செய்தாள்; குடும்பகாரியங்களை சரியாக கவனித்து முடித்தபின்னரே தனது தெய்வ மணாளனுக்கு வழிபாடுசெய்வாள்; ஆடல்பாடல் சேவைகளில் மனதைப் பறி கொடுப்பாள்.

போஜராசன் ராஜபுத்ரவீரன் ..அழகன் ..மீராவிடம் காதல்கொண்ட அன்புக் கணவன். அவளை உயிரினும் மேலாய் நேசித்தான். அவளோ ஆண்டவனிடமே மனதைச் செலுத்தினாள். தெய்வீக்காதலைப் புரிந்துகொள்ளாத புகுந்த வீட்டார் அவள் கற்பில் மாசு கூற, ஒரு நாள் போஜன் உருவிய வாளோடு மிராவின் பூஜை அறைக்குள் நுழைந்தான்.


அங்கே மீரா கிரிதர கோபால விக்கிரஹத்திடம் மனமுருக பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் அவன் கோபம சட்டென மறைந்தது .
ஆனாலும் மனைவிக்கு புத்தி பேதலித்து விட்டதென வருத்தமாயும் வந்தது .
மீரா மீதுள்ள அன்பில் அவளுடைய கண்ணனுக்காக ஆலயம் கட்டி கொடுத்தான்.

அக் கோயில் மூலமாய் மீராவின் வெளி உலக உறவு வளர்ந்தது. சத்சங்கம் சாதுக்கள் என மீரா பக்தியுடன் பாடிஆடி பக்தியின் உச்சத்திற்கே போய்விட்டாள். மீராவின் புகழ் நாடெங்கும் பரவியது.
மொகலாய மன்னர் அக்பர் காதுக்கு அது எட்டியது.
மன்னர் சர்வ சமய சமரசத்தை ஆதரித்தவர். அவர் மீராவின்ன் பக்தியால் கவரப்பட்டு அவளைக் காண விரும்பினார்.

காலங்காலமாய் இரு பிரிவினருக்குள் கடும்பகை வேறு .அதனால் அக்பர் தன்னை ஹிந்து சாது போல மாறுவேடம் போட்டுக்கொண்டு சித்துர் வந்து மீராவின் பாதங்களை பயபக்தியுடன் தொட்டார். அவளுடைய கிருஷ்ணனுக்கு விலை உயர்ந்த முத்து மாலைகளை அளித்துச் சென்றார்.
இந்தச் செய்தி போஜனுக்கு எட்டி விட்டது, வந்துபோனது அக்பரென்றும் சித்துரின் ஜன்மசத்ரு மீராவின் பாதங்களைத் தொட்டது
மன்னிக்க முடியாத குற்றம் என்றும் ராஜபுத்திர குலதிற்கே அது களங்கம் என்றும் கொதித்தனர்.

மீராவை ஆற்ரில் குதித்து உயிரைவிட போஜன் கட்டளையிட்டான்.
மீராவும் அதை ஏற்று ஆற்றில் குதித்தாள் ஆனால் பின்னாலேயெ கண்னனின் அன்புக்கரங்கள் அவளை அணைத்து மேலேற்றியது.
காதோரம் 'இன்றோடு உலகபந்தம் உனக்கு அற்றது, ஸ்ரீ பிருந்தவனம் சென்று அங்கே நீ என்னைச் சந்திப்பாய் 'எனக் கூறி மறைகிறார்

ப்ருந்தாவனத்தில் மீரா கண்ணனுக்காக பாடிய பாடல்கள் அனைத்தும் அற்புதமானவை.சூர்தாஸ் துளசிதாஸ் மீரா என ஹிந்தி கவிகளில் மூவரே முதல் சிறப்பு வாய்ந்தவர்கள்.
குஜராத்தியிலும் கவிதை எழுதினாள். குஜராத்தி இலக்கியத்தில் நர்சீ மேத்தாவுக்கு அடுத்த இடம் மிராவுக்கு உண்டு.

வையந் தகளியாக வார் கடலே நெய்யாக இந்த பிரபஞ்ச விசாலத்தின் அழகொளியிலும் பின்னர் உருகி உருகி
'அன்பே தகளியா, ஆர்வமே நெய்யா இன்று சிந்தை இடு திரியா' ஏற்றிய அன்பு விளக்கின் ஒளியிலும் முதலாழ்வார்கள் இறைவனைக்
காணவில்லையா! அப்படியே மீராவும் பாடுகிறாள்.

எந்தன் உடலை விளக்காக்கி
இடுதிரியாக்கி இதயத்தை
உன்பால் உள்ள காதலையே
எண்ணை ஆக ஏற்றிடுவேன்
இரவும்பகலும் எரியட்டும்
அருள்மிகுஅடியார் கூடிடும் உன்
அழகிய சந்நிதி முன்னிலையில்
உன்னைப் பிரிந்து ஒருக்கணமும்
இருக்கமாட்டேன் இனி ஐயா
என்னை உனதாய் ஏற்றுக்கொள்
என்னை உனைப்போல் ஆக்கிவிடு

தமிழ்நாட்டு ஆண்டாளுக்கும் ராஜபுதனத்து மீராவிற்கும் வாழ்வின் நோக்கம் ஒன்றாகவே இருந்தது.
கண்ணனையே மணாளனாய் மனத்தில் வரித்துக்கொண்ட மாமங்கையர்கள் இருவரும்.

' மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கிலேன்' என்ற ஆண்டாளை ஸ்ரீரங்கதிற்கே அரங்கன் அழைத்தான்.
மீராவையும் கண்ணன் ப்ருந்தாவனத்திற்கு அழைத்தான்.
திருஅரங்கத்தில் இறைவனுடன் இரண்ரடறக் கலந்தாள் ஆண்டாள்.
துவாரகையில் ஆடிப்பாடியபடியே கண்ணன் சந்நிதியில் மீராவும் இறைவனோடு ஒன்றாகக் கலந்தாள் என்கிறது மீராவின் வரலாறு.

பல்லாண்டுகள் மறைந்தாலும் மீராவின் பாடல்கள்
காற்றினிலே வரும் கீதமாய்
இன்னமும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.

******************************************************************************************************************

Sunday, April 22, 2007

உடையவர், உறைபவர்!

கண்ணன் ராதை - இவர்கட்கு மட்டும் தான் இடமா? - இந்த வலைப்பூவில்?
யார் சொன்னது? அவனைக் காட்டிலும் இரக்கம் உள்ளவர்க்கு எல்லாம், இப்பதிவில் இடம் உண்டே!

அவனைக் காட்டிலும் இரக்கம் "உடையவர்" யார் அப்பா?

அதான் உங்க கேள்வியிலேயே பதில் சொன்னீரே அப்பா!
உடையவர், அவரே தானப்பா! உடையவர், அனபர் நெஞ்சில் உறைபவரப்பா!

இராமானுசரின் திரு அவதார நாள் இன்று! அவர் மறைந்த (பரமபதித்த) தினமும் கூட! சித்திரைத் திருவாதிரை.

அது என்ன உடையவர்?
பெருமாளின் தர்ம பத்தினி சாட்சாத் மகாலக்ஷ்மி, அவருக்கு இட்ட பெயர்!
நம் பெரும் குல தனத்துக்கு எல்லாம் உடையவர் இவர்! அதனால் உடையவர்!
எல்லாச் சாதிக்கும் மதங்களுக்கும் உடையவர்.
அவர்களை எல்லாம் பெருமாளுக்கு உடையவர் ஆக்கும் உத்தமர்!
அதனாலும் உடையவர்!!

ramanuja_1.0ramanuja_2.0ramanuja_3.0

1. இளையாழ்வார் - பிறப்புப் பெயர் - பெரிய திருமலை நம்பிகள் இட்டது
2. ராமானுஜர் (ராம+அனுஜர்=ராமனின் உடன் பிறந்தான்=இலக்குவன்) - பெரிய திருமலை நம்பிகள் தந்தது
3. பரதபுரீசர் - பெரிய திருமலை நம்பிகள் தந்தது
4. யதிராசர் (யதி+ராசர்=முனிவர்க்கு அரசர்) - காஞ்சி வரதராஜப் பெருமாள் தந்தது
5. உடையவர் - ரங்கநாதனும், ரங்கநாயகியும் தம் சொத்தைத் தந்து, பேரையும் தந்தது
6. தேசிகேந்திரன் - திருமலை வேங்கடேசன் தந்தது
7. ஸ்ரீ பாஷ்யகாரர் - கலைமகள், சரஸ்வதி தேவி தந்தது
8. திருப்பாவை ஜீயர் - பெரிய நம்பிகள் தந்தது
9. எம்பெருமானார் - திருக்கோட்டியூர் நம்பி தந்தது
10. நம் கோயில் அண்ணன் - வில்லிபுத்தூர் ஆண்டாள் தந்தது
11. சடகோபன் பொன்னடி - திருமலையாண்டான் தந்தது
12. லக்ஷ்மண முனி - திருவரங்கப் பெருமாள் அரையர் தந்தது


இறும்பூதெய்தும் மனம்
இராமானுஜனை நினைக்கும் கணம்


வைணவத்தின் வைரமணி
வேதாந்த சிகாமணி
சூடிகொடுத்த நற்பெண்மணி
அவளுக்கு முன்னான மாமுனி


அரங்கனுக்கு உடையவன்
அன்பருக்குள் உறைபவன்

சீரார் மதில்கள் சூழ்
திருவரங்கத் திரு நகரினில்
காரார்ந்த மேனியனின்
காலடியைத் துதிப்பவன்


ஆதிரைநட்சத்திரம் கொண்ட
தீதிலா வைணவ ஜோதி
(அவன்)ஓதியதெல்லாம்

'அண்ணலின் அடியார்
அனைவரும் ஒரே ஜாதி!"

******************************

இராமானுச ஜெயந்தியை முன்னிட்டு
ஷைலஜா (திருவரங்கப்ரியா) எழுதிய பாடல்

Friday, April 20, 2007

44. அவள் மெல்லச் சிரித்தாள், ஒன்று சொல்ல நினைத்தாள்!

சிரித்தாள், சொல்ல நினைத்தாள், வெட்கினாள், கண்ணை மூடினாள்.
பிரித்தாள், விரித்தாள், கிடந்தாள், மிதந்தாள்
கொச்சைப் படுத்தாமல் இச்சைகளைப் பாடக்
கண்ணனின் தாசனால் மட்டும் தானே முடியும்!

காதலன் கண்ணனின் வருகைக்காக காத்திருந்தாள், காதலி ராதை. என்னன்னமோ நினைப்பு! கண்ணன் வந்தான். ராதை என்ன செய்வாள்? அவள் ஒவ்வொரு அசைவுகளும் எப்படி இருந்தன என்பதை slow motion-இல் பதிக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.

நீங்களே கேளுங்கள்!
அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை - ராதை

நெஞ்சில் நாணம் கொண்டாள் கண்ணை மூடிக்கொண்டாள்
அந்தப் புல்லாங்குழல் மொழிக் கோதை

ஒரு பட்டு பிரித்தாள் முல்லை மொட்டு விரித்தாள்
தங்கத் தட்டு போலே அவள் கிடந்தாள்

அவன் ஏங்கி வந்தான் சுகம் வாங்க வந்தான்
அங்கு தூங்கிய பெண்மயில் எழுந்து நின்றாள்


பாரடி பாரடி பாவையின் ஆசையை
ஓரடி ஈரடி நடக்கின்றாள்

(அவள் மெல்லச் சிரித்தாள்)

அந்தத் தங்கப் பதுமை உடல் பொங்கும் இளமை
அந்த ஆனந்த கங்கையில் விழுந்தாள்
அவன் தாங்கிக் கொண்டான் நெஞ்சில் வாங்கிக் கொண்டான்
பெரும் சந்தோஷப் படகினில் மிதந்து வந்தாள்

காதலன் காதலி நாடகம் ஆடிடும்
நாளெனான்று போனது இளமையிலே
(அவள் மெல்லச் சிரித்தாள்)
படம்: பச்சை விளக்கு
வரிகள்: கண்ணதாசன்
குரல்: பி.சுசீலா
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி

Wednesday, April 11, 2007

ஆடினயே கண்ணா!!!
அம்புஜம் கிருஷ்ணா இயற்றியது.


ஆடினயே கண்ணா பிருந்தாவனம் தனில்
ஆனந்த ரசமய அற்புத நடனம்
(ஆடினயே)

ஈடிலா அழகிய கோபியர் உனைத்தேடி
நாடி வந்தார் நதிக்கரை நிலவொளியில்
(ஆடினயே)

மயில் பீலி சற்றே கொண்டைதனில் அசைய
நவரத்ன மகுடம் சிரம்தனில் ஒளிர
மகர குண்டலங்கள் இருசெவி இலங்க
மதிமுகம் தனிலே முறுவல் விளையாட

மணம் கமழ் மாலைகள் மார்பில் அசைந்தாட
மயங்கும் அந்திவண்ண ஆடை இடையாட
மதுர மோகன குழலிசை கூட்ட
மங்கையர் கண்கள் மையல் காட்ட

மலர்கழல் சதங்கை ஜதிலயம் கூட்ட
மனமறிந்து அருள்சொறிந்து
இணைந்து ஒன்றாய்
(ஆடினயே)

இதனை மேண்டலினில் கேட்க இங்கே சொடுக்கவும்.

Saturday, April 07, 2007

42. புல்லாய்ப் பிறவி தரவேண்டும்!

யாராச்சும் புல்லாய், பூண்டாய் பிறக்க ஆசைப்படுவார்களா?
அதுவும் மற்றவர் காலின் கீழ் மிதிபட்டு அழிய?
ஆனால், இந்த ஊத்துக்காட்டுக் கவிஞர் அப்படி ஆசைப்படுகிறார்!

இதே போல், இவருக்கு முன்னர்,
"உன் கோவிலின் வாசல், படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே",
"திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே",
"எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே", என்று ஒரு கவிஞர் - குலசேகராழ்வார் பாடியுள்ளார்!

இதே போல், இவருக்குப் பின்னர்
"மண்ணானாலும் திருச்செந்தூர் மண்ணாவேன், ஒரு மரமானாலும் பழமுதிர்சோலையில் மரமாவேன்", என்று இன்னொரு கவிஞரும் பாடியுள்ளார்!

இப்படி ஒரு ஆசையா இவர்களுக்கு எல்லாம்?
ஏன் இவர்கள் எல்லாம் கல், மண், மரம், புல் ஆக ஆசைப்பட வேண்டும்?
பாடலை இங்கே கேட்டு மகிழலாம்!
Sowmya
Sudha Raghunathan
Bombay Sisters

புல்லாய்ப் பிறவி தரவேண்டும் - கண்ணா
புல்லாய்ப் பிறவி தரவேண்டும் - கண்ணா
புனிதமான பல கோடிபிறவி தந்தாலும்
பிருந்தாவனம் அதில் ஒரு

(புல்லாய்)

புல்லாகிலும் நெடுநாள் நில்லாது - ஆதலினால்
கல்லாய்ப் பிறவி தரவேண்டுமே - கண்ணா
கமலமலர் இணைகள் அணைய எனதுஉள்ளம்
புளகிதம் உற்றிடும் பவம அற்றிடுமே
(புல்லாய்)
(புளகிதம்=இன்பம்; பவம்=பிறவி)

ஒருகணம் உன்பதம் படும் என்மேலே
மறுகணம் நான் உயர்வேன் மென்மேலே
திருமேனி என்மேலே
அமர்ந்திடும் ஒருகாலே


திருமகள் எனமலர் பெயர்ந்தடி உன்னைத்
தொடர்ந்த ராதைக்கு இடம் தருவேனே
திசைதிசை எங்கணும் பரவிடும் குழலிசை
மயங்கி வரும் பல கோபியருடனே


சிறந்த ரசமிகு நடம் நீயாடவும்
சுருதியொடு லயமிக கலந்து பாடவும்
திளைப்பிலே வரும் களிப்பிலே
எனக்கிணை யாரென மகிழ்வேனே

தவமிகு சுரரொடு முனிவரும் விய நான்
தனித்த பெரும்பேர் அடைவேனே
எவ்வுயிர்க்கும் உள் கலக்கும் இறைவனே
யமுனைத் துறைவனே

(புல்லாய்)வரிகள்: ஊத்துக்காடு வெங்கடசுப்பையர்
ராகம்: செஞ்சுருட்டி
தாளம்: ஆதி

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP