Wednesday, August 28, 2013

சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடு ஷ்யாமா !

 
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடு ஷ்யாமா !

ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
    தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
    நவநீதா !உறி வெண்ணையுண்டு களிப்பாய்.


இருள்நிறை சிறைதனில் பரிதியாய் உதித்த
அருட்பெருஞ்ஜோதியே,தேவகிநந்தனனே !,
            நாகம் குடைபிடிக்க , நதிவழிகொடுக்க ,
           கோகுலம் விரைந்த வசுதேவமைந்தனே !
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
    தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
    நவநீதா !உறிவெண்ணையுண்டு களிப்பாய்.


பாலூட்டிக்கொல்லவந்த  பூதனையை
பல்லால் கடித்துயிர்குடித்த ஸ்ரீதரா !
   கயிற்றாலுனை  உரலில் கட்டிய தாய்முன்
   உரலை இழுத்தவண்ணம் தவழ்ந்த தாமோதரா!
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
    தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
    நவநீதா !உறிவெண்ணையுண்டு களிப்பாய்
.

பெருமழையில் பரிதவித்தோரைக்காக்க
சிறுவிரலால் கிரிசுமந்த கோவர்த்தனா !
         விடநாகததையடக்கி அதன்மேல்
         களிநடம்புரிந்த காளிங்கநர்த்தனா !
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
    தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
    நவநீதா !உறிவெண்ணையுண்டு களிப்பாய்.


கோபியர்சுமந்த நீர்க்குடந்தன்னை
கல்லெறிந்துடைத்த  நந்தகிஷோரா !
      குறும்புத்தோழர் தோள்மேலேறி
      உரிவெண்ணை திருடிய நவநீதசோரா !
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
    தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
    நவநீதா !உறிவெண்ணையுண்டு களிப்பாய்.
 

குளிக்குங்கோபியர் ஆடையை மறைத்து
குறும்பாய்ச்சிரித்த கோகுலபாலா !
        ஈனர்கை சிக்கிய பாஞ்சாலியவள்
        மானங்காத்த  தீனதயாளா !
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
    தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
    நவநீதா !உறிவெண்ணையுண்டு களிப்பாய்.

கால்விரல்ருசிக்கும் சிசுவாய்ப்ரளய
காலத்தில் தோன்றிய ஆலிலைப் பாலா!
         ஓரடியால் உலகளந்து பலியை
         காலால்வதைத்த வாமனக்கோலா !
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
    தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
    நவநீதா !உறிவெண்ணையுண்டு களிப்பாய்.

சேய் அழைத்ததுமே  தூணிலே தோன்றி
தீயனை மாய்த்த  தூயா! நரசிங்கா! 
       எங்களுக்கிரங்கி  இங்கின்று வருவாய், 
      பங்கஜ நயனா! ஹே  பாண்டுரங்கா!
      
 
ஷ்யாமா ! இன்றெங்கள் தொட்டிலில் படுப்பாய்.
சேஷனுக்கொருநாள் ஓய்வு கொடுப்பாய்.
    தவழ்ந்தெங்கும் தளிர்விரல் தடங்கள் பதிப்பாய்.
    நவநீதா !உறிவெண்ணையுண்டு களிப்பாய்.

கண்ணன் பிறந்த இரவு: நாத்திக ஆராரோ!

கண்ணன் பிறந்த இரவு - இன்று! (Aug-28-2013)

எத்தனையோ தாலாட்டுகள் பின்னாளில் பாடினாலும், குழந்தையின் முதல் தாலாட்டு = மோகனத் தாலாட்டு அல்லவா?
அதுவும்... அதை நாத்திகக் கருத்து கொண்டவர் எழுதினால்?:)

அனைவரையும் வம்பிழுக்க வந்த குழந்தைக்கு = ஆத்திகமாவது? நாத்திகமாவது? எல்லாருமே அதற்கு "வெண்ணெய்" தான்! :)


இந்த இரவு மிகவும் கடினமான இரவு, குழந்தைக்கு!
* சிறை விட்டு, ஆற்றைக் கடந்து, ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து, இடி மின்னல், புயல் மழையில்...
* பிறந்ததுமே பயணம் தொடங்கி விட்டது!

உலகத்தையே பயணிக்க வைக்கும் குழந்தை,
இன்று, தானே பயணிக்கிறது!
ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒர் இரவில், ஒருத்தி மகனாய் வளர..
விதிப்பவன் தனக்கே விதித்துக் கொண்டான்!!

இன்று கண்ணக் குழந்தைக்குத் தாலாட்டு பாடுபவர் யார்?
= கவிஞர். பெரியாழ்வார்;  படம்: பெரியாழ்வார் திருமொழி:)
= கவிஞர். வைரமுத்து;       படம்: சிப்பிக்குள்-முத்து


முதலில்: ஆத்திகத் தாலாட்டு

பாடுவது:  தமிழ் மொழியில், பிள்ளைத் தமிழ் உருவாக வித்திட்ட பெரியாழ்வார்! என் தோழியின் தந்தை!

உலக அம்மை-அப்பனான, சிவபெருமானே வந்து தாலாட்டுறாராம்;
பாடுவது பெரியாழ்வார்:
பாடப்படுவது: "தேவகி சிங்கம்"; யசோதை இளஞ்சிங்கம் அல்ல:)

உலக முதல்வனையே, "நாராயணா அழேல்" -ன்னு பாட, இவருக்கு எம்புட்டுத் துணிவு இருக்கணும்?
கடவுளை மற, மனிதனை நினை -ன்னு இவரு தான் உண்மையான  நாத்திகரோ?:))

மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி 
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில் 
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் 
மாணிக் குறளனே, தாலேலோ 
வையம் அளந்தானே, தாலேலோ (1) 

உடையார் கன மணியோடு  ஒண் மாதுளம்பூ 
இடை விரவிக் கோத்த எழில் தெழ்கினோடு 
விடையேறு கபாலி  ஈசன் விடுதந்தான் 
உடையாய் அழேல் அழேல் தாலேலோ 
உலகம் அளந்தானே, தாலேலோ (2)

சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும் 
அங்கைச் சரி வளையும் நாணும் அரைத் தொடரும் 
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார் 
செங்கண் கருமுகிலே தாலேலோ 
தேவகி சிங்கமே தாலேலோ (4)

இந்தப் பாட்டை, அரங்கனின் அரையர் ஸ்ரீராம பாரதி அவர்கள், மிக உருக்கமாகப் பாடுவார்கள்!
நான், இங்கு, உன்னி கிருஷ்ணன் அவர்கள் பாடியதை மட்டும் குடுக்கின்றேன்!




அடுத்து: நாத்திகத் தாலாட்டு:

கவிஞர் பகுத்தறிவுக் கவிஞர் தான்! ஆனால் பாசத்தில் குறை வைத்தாரில்லை!

* தன்னையே தாயாக்கிக் கொள்கிறார், பெரியாழ்வார் வழியில்!
கெளசல்யை நானே! யசோதை நானே! மலையன்னை நானே! பார்வதியும் நானே!

* தன்னையே அடியார் ஆக்கிக் கொள்கிறார்!
= ஆழ்வாரும் நானே! கம்பநாடன் நானே! வால்மீகி நானே! தியாகய்யர் நானே!

இதே பாடல், ஸ்வாதி முத்யம் என்ற தெலுங்குப் படத்திலும் சிறப்பாக இருக்கும்!
சுசீலாம்மாவின் தேன் குரலில், இன்று கண்ணக் குழந்தை பயணக் களைப்பு தீரத் தூங்கட்டும்!

படம்: சிப்பிக்குள் முத்து
வரிகள்: வைரமுத்து
இசை: இளையராஜா
குரல்: பி.சுசீலா

லாலி லாலி லாலி லாலி!
லாலி லாலி லாலி லாலி!

வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி!
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி!
குறும்பான கண்ணனுக்குச் சுகமான லாலி!
ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி!

(வரம் தந்த சாமிக்கு)
ஆரி-ராரி ஆரி-ராரோ
ஆரி-ராரி ஆரி-ராரோ

கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே!
யது வம்ச வீரனுக்கு யசோதை நானே!
கரு யானை முகனுக்கு மலையன்னை நானே!
பார் போற்றும் முருகனுக்குப் பார்வதியும் நானே!

(வரம் தந்த சாமிக்கு)
ஆரி-ராரி ஆரி-ராரோ
ஆரி-ராரி ஆரி-ராரோ

ஆனந்தக் கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே!
ஸ்ரீராமன் பாட வந்த கம்ப நாடன் நானே!
ராம ராஜனுக்கு வால்மீகி நானே!
ஆகாய வண்னனுக்குத் தியாகைய்யர் நானே!

(வரம் தந்த சாமிக்கு)

அதே பாடல்: தெலுங்கில் (ஸ்வாதி முத்யம்)

Tuesday, August 27, 2013

கோகுலத்தில் கோலாகலம்!


கோகுலமே ஒரே நிசப்தமாக இருந்தது. கொலுசுச் சப்தம் கூட பூதாகரமாகக் கேட்பது போல் இருந்ததால், நிசப்தமான இடத்தில் குரலெழுப்பாமல் இரகசியக் குரலில் பேசிக் கொள்வது போல், சப்தம் எழுப்பாமல் கொலுசணிந்த பாதங்களை மெதுவாக எடுத்து வைத்து நடந்தாள், ராகினி.

ராகினி அவள் அம்மாவுடன் கோகுலத்தில் வசிக்கும் அத்தை மகள் லலிதை வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள்.

கிருஷ்ணன் பிறந்தது முதல் கோகுலத்தை விட்டு எங்கேயும் வருவதில்லை, லலிதை. அதனால் அவளை (கிருஷ்ணனையும்) பார்க்கும் ஆவலில், அம்மாவையும் இழுத்துக் கொண்டு இங்கேயே வந்து விட்டாள், ராகினி!

ஆளரவமேயின்றி திறந்து கிடந்த வீடுகளை வியப்போடு வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தார்கள், இருவரும். பகல் நேரத்தில் இப்படி ஒரு நிசப்தமா? கொஞ்சம் அச்சமாகக் கூட இருந்தது இருவருக்கும்.
இதோ… லலிதையின் வீடு!

லலிதையின் வீடும், இவர்கள் பார்த்த மற்ற வீடுகள் போலவே திறந்துதான் கிடந்தது. வீட்டில் யாரும் இருப்பது போலவே தெரியவில்லை. எல்லோரும் எங்கே போயிருப்பார்கள்? ‘லலிதை’ என்று சப்தமாகக் கூப்பிடக் கூட ஒரு மாதிரியாக இருந்தது. உள்ளே சென்று பார்க்கலாம்…


உள்ளே… கூடத்தில்… அவர்கள் கண்ட காட்சி!

ஒரு பெரிய பையன் குனிந்து கொண்டிருக்க, அவன் மீது ஒரு சின்னப் பையன் ஏறிக் கொண்டு, உறியிலிருந்த பானையை எடுத்துக் கொண்டிருந்தான்.

“ஆ!” என்று தன்னையுமறியாமல் சப்தமிட்டாள் ராகினி.

திடீரென்று கேட்ட குரலால் திடுக்கிட்டு, பானையைத் தவற விட்டு விட்டான், அந்த நீல வண்ணச் சிறுவன். பானை கீழே விழுந்து உடைய, அதிலிருந்த வெண்ணெய் வெள்ளை வெளேரன்று பந்து பந்தாய் ஆங்காங்கே சிதறியது. சட்டென்று கீழே குதித்த அவன், ராகினியும் அவள் அம்மாவும் அங்கே வாய் பிளந்து நிற்பதைக் கண்டும் காணாதது போல், சாவகாசமாகக் கீழே உட்கார்ந்து வெண்ணெயைக் கைகள் நிறைய அள்ளி வாய் நிரம்ப வைத்து உண்ண ஆரம்பித்தான். அந்த இன்னொரு சிறுவனையும் உண்ணும்படி சைகை செய்தான்.

“மாட்டிக் கொண்டாயா!”

என்ற உற்சாகக் குரலைக் கேட்டுத் திரும்பினாள், ராகினி.

அங்கு நின்றிருந்தவள், சாட்சாத் அவள் அத்தையேதான்! லலிதையின் அம்மா.

ராகினியையும், அவள் அம்மாவையும் பார்த்தவள், “வாருங்கள் அக்கா, வா ராகினி. உங்களைப் பார்த்ததில் ரொம்பவும் சந்தோஷம். ஆனாலும் உங்களைக் கவனிப்பதற்கு முன், இந்தப் பயலை அவன் அம்மாவிடம் கொண்டு ஒப்புவித்து விட்டு வந்து விடுகிறேன்.”

நீலப் பையன் தப்பிச் செல்ல எந்த அவசரமும் காட்டவில்லை. யாரோ என்னவோ நமக்குச் சம்பந்தமில்லாததைப் பேசுகிறார்கள் என்பது போன்ற பாவனையுடன், குறும்புச் சிரிப்புடன், வெண்ணெயை அள்ளித் தின்று கொண்டிருந்தான்.

“இந்தக் கள்ளக் கிருஷ்ணன் வெண்ணெய் திருடுகிறான் என்று நான் சொன்ன போதெல்லாம் இவன் அம்மா யசோதா என்னை நம்பவே இல்லை. அவனைக் கையோடு பிடித்துக் கொண்டு வா, அப்போது பார்க்கலாம் என்று சொல்லி விட்டாள்! இவனைப் பிடிக்கத்தான் இத்தனை நேரம் ஒளிந்து கொண்டு காத்திருந்தேன்! இதோ இப்போது கையும் களவுமாக மாட்டிக் கொண்டானே!”

என்று சொல்லியபடி, லலிதையின் அம்மா நீலக் கிருஷ்ணனின் ஒரு கரத்தை இறுகப் பற்றி இழுத்துக் கொண்டு, யசோதையின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். ராகினியும், அவள் அம்மாவும் கூடவே, என்ன நடக்கப் போகிறதோ என்ற ஆவலுடன் அவளைப் பின் தொடர்ந்தார்கள்.

இவர்கள் போகும் வழியில் இன்னொருத்தியும் ஒரு கையை நீட்டிப் பிடித்தபடி வந்து கொண்டிருந்தாள். யாரையோ பிடித்திருப்பது போல பாவனை இருந்தாலும், அவளுடன் வேறு யாரும் வருவதாகத் தெரியவில்லை; அவள் மட்டும் வருவதாகவே ராகினிக்குத் தெரிந்தது.

கொஞ்ச தூரம் சென்றதும், இன்னொருத்தியும் அதே போல கையை நீட்டிப் பிடித்தபடி வந்தாள். (அதாவது, ஒருத்தி பிடித்திருந்த கிருஷ்ணனை இன்னொருத்திக்குத் தெரியவில்லை!) இப்படியே ஒவ்வொருத்தியாகச் சேரச் சேர, ஒரு பெரிய கூட்டமே சேர்ந்து விட்டது. பெரியதொரு ஊர்வலம் போல அனைவரும் சேர்ந்து யசோதையின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்கள்!

“யசோதா!”
     “யசோதா!”
             “யசோதா!”

ஆளுக்கொரு குரலெழுப்பிக் கூப்பிட்டார்கள். யசோதா வெளியில் வந்தவள், இத்தனை பெரிய கூட்டத்தைப் பார்த்துத் திடுக்கிட்டாள்.

“என்னடி இது? அத்தனை பேரும் ஒன்றாகச் சேர்ந்து வந்திருக்கிறீர்கள்? அது மட்டுமில்லாமல் எல்லோரும் ஒரு கையை ஒரு பக்கமாக நீட்டிக் கொண்டே வேறு இருக்கிறீர்கள்? எல்லோருக்கும் ஒரே சமயத்தில் கை சுளுக்கிக் கொண்டு விட்டதா?”, முகவாயில் கை வைத்துக் கொண்டு ஆச்சரியமாகக் கேட்டாள். அவளுக்கும் அவர்கள் எல்லோரும் பிடித்திருந்ததாக நினைத்த கிருஷ்ணர்கள் தெரியவில்லை.

“யசோதா! உன் பிள்ளை எங்கள் வீடுகளில் வெண்ணெய் திருடுகிறான் என்று சொன்ன போது நம்ப மாட்டேனென்றாயே? கையோடு பிடித்துக் கொண்டு வா, பார்க்கலாம் என்றாயல்லவா? பார் உன் பிள்ளையை! வெண்ணெய் அள்ளிய கையோடு, அதை உண்ட வாயோடு, அப்படியே பிடித்துக் கொண்டு வந்திருக்கிறேன்! இப்போதாவது நம்புவாயல்லவா?”, லலிதையின் அம்மா, கையில் பிடித்திருந்த கிருஷ்ணனை யசோதையின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினாள்.

“ஆமாம்… பார், நாங்களும் உன் பிள்ளையைப் பிடித்து வந்திருக்கிறோம்”, என்று எல்லோரும் அவரவர் பிடித்து வைத்திருந்த கிருஷ்ணனை யசோதையின் முன்னால் நிறுத்தினார்கள்.

ஒவ்வொருத்திக்கும் தன் கையில் பிடித்திருந்த கிருஷ்ணன் மட்டுமே தெரிந்தான். மற்றவர்கள் கையில் பிடித்திருந்த கிருஷ்ணன் தெரியவில்லை. யசோதைக்கோ இவர்கள் கூட்டி வந்த எந்த கிருஷ்ணனுமே தெரியவில்லை!

இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்ட யசோதைக்குக் கோபம் வந்து விட்டது!

“என்னடி, விளையாடுகிறீர்களா? என் பிள்ளை காலையிலிருந்து எங்குமே போகவில்லை! இப்போது கூட உள்ளே ததியோன்னம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். பார்க்கிறீர்களா?” என்றவள் உள் பக்கம் திரும்பி, “கிருஷ்ணா! கிருஷ்ணா! இங்கே வா!”, என்று உரக்கக் கூப்பிட்டாள்.

“என்னம்மா… கூப்பிட்டாயா?” என்றபடி ததியோன்னமும் கையுமாக கிருஷ்ணன் உள்ளிருந்து வந்தானே பார்க்க வேண்டும்!

வந்திருந்த அத்தனை கோபிகளின் வாயும் அடைத்து விட்டது! “என்ன இது? கிருஷ்ணன் உள்ளே இருந்து வருகிறானே!” என்று தன் கையில் இருந்த கிருஷ்ணனை ஐயத்துடன் பார்த்தார்கள்.

தயிர் வழியும் வாயோடு, உள்ளிருந்து வந்த கள்ளக் கிருஷ்ணன் சிரிக்க, எல்லோருடைய கிருஷ்ணர்களும் வெண்ணெயுண்ட வாயோடு இப்போது எல்லோர் கண்களுக்கும் தெரிய… கோகுலம், ஒரு நொடியில் கோலாகலமானது!

“தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு”,  தளர்நடை இட்டு வருவான்;
பொன்னேய் நெய்யொடு பாலமுது உண்டொரு புள்ளுவன் பொய்யே தவழும்!
மின்னேர்  நுண்ணிடை வஞ்ச மகள் கொங்கை துஞ்ச வாய்வைத்த பிரானே!
அன்னே  உன்னை அறிந்துகொண்டேன் ; உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே

தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு = இரண்டு விதமாப் பொருள் சொல்லுவார்கள்:
1.   தானும், தன் ஆயிரம் தோழர்களும்-ன்னு = 1000 friends, is too big a number, of the same age group:)
2.   “தன் நேர்” = தன்னைப் போலவே ஆயிரம் பிள்ளைகள்; ஆயிரம் கண்ணன்கள்!!!
தளர்நடை இட்டு வந்து, நெய் உண்டு, உண்ணவே இல்லை-என்று சாதிக்கும், பொய்யே தவழும்
குட்டிக் கிருஷ்ணனைக் கண்டு யசோதையும் அஞ்சுகிறாள்!

“அம்மா, அம்மா! லலிதையோடு நானும் இனி கோகுலத்திலேயே இருக்கிறேனம்மா!” என்று நச்சரிக்க ஆரம்பித்திருந்தாள், ராகினி!

அனைவருக்கும் இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள்!

[நன்றி: பாசுரம், உதவி - KRS என்ற கண்ணபிரான் ரவிசங்கர்]
படத்துக்கு நன்றி: http://artstudio108.com/inspirational/Krsna_stealing_butter.jpg

நன்றி: வல்லமை
 

Friday, August 09, 2013

ஆண்டாள் பிறந்தநாள்! ஆடியில் சிறந்தநாள்!

இன்று Aug 9
என் இன்-உயிர்த் தோழி, கோதையின் பிறந்தநாள்!

அவளுக்கு, என்னவன் முருகவன் சொல்லும் வாழ்த்து = இங்கே!

இதோ முத்தாய்ப்பாக ஒரு காட்சி! அப்பாவும் பொண்ணும் போட்டி போட்டு பாடும் கண்ணன் பாட்டு!
இந்தப் பாட்டின் வேகம்... கேட்கும் போதெல்லாம் என்னை என்னமோ பண்ணும்!
இந்தப் பாட்டின் காட்சி... பார்க்கும் போதெல்லாம் என்னை என்னமோ பண்ணும்!

*அப்பாவாக = நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
*சின்னப் பொண்ணாக = குட்டி பத்மினி
*பெரிய பொண்ணாக = கே.ஆர்.விஜயா

வரிகள் போட்டி போட்டுக் கொண்டு வந்து விழுகின்றன = கண்ணனின் தாசனான கண்ணதாசன் தூரிகையில்!
TMS ஒரு பாய்ச்சல் பாய்ஞ்சா, சுசீலாம்மா எட்டு பாய்ச்சல் பாயறாங்க!

சிறுமி கோதைக்கு குரல் கொடுப்பது: மாஸ்டர் டி.எல்.மகாராஜன்
(ஆண் குரல் நல்லாத் தெரியுது; சின்னப் பொண்ணு கோதை ஒரு வேளை ஆம்பிளைப் புள்ளை போல் ரொம்ப பிடிவாதமோ? அதான் ஆம்பிளைக் குரலோ? :)

பெரியவள் கோதைக்கோ குரல் கொடுப்பது: பி.சுசீலா
இந்தப் பாட்டைக் கேட்டு, சுசீலாம்மாவிடம், நீங்க தான் அந்தக் கடவுள்-ன்னு யாரோ சொல்ல, அவர்கள் புன்னகையுடன் மறுத்தார்களாம்! :)
http://psusheela.org/fans/subbu_pothigai.html

இதோ: அரி அரி கோகுல ரமணா உந்தன் - திருவடி சரணம் கண்ணா!



அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா!
அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா!

பாரத தேவா பாண்டவர் நேசா
பதமலர் பணிந்தோமே - உன்
பதமலர் பணிந்தோமே!
(அரி அரி கோகுல ரமணா)

ஞான மலர்க் கண்ணா, ஆயர்க் குல விளக்கே
வானமும் கடலும் வார்த்து எடுத்த பொன் உருவே
கானத்தில் உயிர் இனத்தைக் கட்டுவிக்கும் கண்ணா!

(தானே உலகாகி தனக்குள்ளே தான அடங்கி
மானக் குல மாதர் மஞ்சள் முகம் காத்து
வாழ்விப்பாய் என்றும் மலர்த்தாள் கரம் பற்றி
நானும் தொழுதேன் நம்பி பரந்தாமா - உன்
நாமம் உரைக்கின்ற நல்லோர் நலம் வாழியவே!)

அரி அரி கோகுல ரமணா உந்தன்
திருவடி சரணம் கண்ணா!

படம்: திருமால் பெருமை
வரிகள்: கண்ணதாசன்
குரல்: TMS, பி.சுசீலா, டி.எல்.மகாராஜன்
இசை: கே.வி.மகாதேவன்


Happy Birthday Kothai!
உனக்கு அவனோடு (கண்ணனோடு) பல்லாண்டு பல்லாண்டு...
எனக்கு அவனோடு (முருகவனோடு) பல்லாண்டு பல்லாண்டு...



Thursday, August 08, 2013

உனக்காக!



சிற்றில் ஒன்று கட்டி வைத்தேன்
சின்னக் கண்ணா உனக்காக
சற்றே உன்றன் தண்டைக் காலால்
உதைத்துக் கலைப்பாய் அதற்காக!

வண்ணப் புது சிற்றாடையை
உடுத்தி வந்தேன் உனக்காக
ஆற்று நீரில் நீராடையில்
திருடிச் செல்வாய் அதற்காக!

கடைந்த வெண்ணெய் ஒளித்து வைத்தேன்
கள்ளக் கண்ணா உனக்காக
கறந்த பாலும் திரிந்ததென்று
திரித்துச் சொன்னேன் அதற்காக!

என்னைக் கொஞ்சம் உன்னைப் போல
மாற்றுவாயோ எனக்காக
உனக்குப் பதிலாய் தாம்புக் கயிற்றில்
கட்டுப் படுவேன் அதற்காக!

நிழலைப் போல உன்னைத் தொடர்ந்து
பணிகள் செய்வேன் உனக்காக
உயிரும் நோக உலகுக்கெல்லாம்
உழைத்தாய் கண்ணா அதற்காக!

கட்டுக் கொள்ளாக் காதல் கொண்ட
பேதை இங்கே உனக்காக
மீண்டும் மீண்டும் பிறக்கக் கூடச்
சலியேன் கண்ணா அதற்காக!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.vikatan.com/sakthi/2011/09/ztrlmz/images/p25.jpg

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP