Thursday, May 28, 2009

தாகம் அடங்குமோ தாமோதரனைக் காணாது இங்கே


கோபியர்களும் ஆழ்வார்களும் கண்ணனின் பிரிவால் வாடி வாடிப் பாடிய பாடல்களை நாம் படித்திருக்கிறோம். 'ஆசை முகம் மறந்து போச்சே இதை ஆரிடம் சொல்வேனடி தோழி' என்று புலம்புவான் பாரதியும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மதுரையில் வாழ்ந்த நாயகி சுவாமிகளும் அதே போன்ற உணர்வு கொண்டு அவன் பிரிவால் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். நடனகோபால நாயகி என்ற அவருடைய திருநாமத்திற்கு ஏற்றதொரு பாடல் இது. இந்தப் பாடலின் சில சரணங்களைத் திரு. தொ.மீ. சௌந்தரராஜன் (டி.எம்.எஸ்) அவர்களின் இனிய குரலில் இங்கே கேட்கலாம்.

அன்னம் புசி என்று உரையாதே அகன்று போடி
அன்னம் விஷமாய் இருக்கிறது அறிந்து கொள்ளாய் நாடி (அன்னம்)


உண்ணும் சோறு, பருகும் நீர் எல்லாம் கண்ணன் என்று இருக்கும் ஆழ்வார்களில் ஒருவராகக் கருதக் கூடிய நாயகி சுவாமிகளுக்கு கண்ணனின் பிரிவால் அன்னம் விஷமாக இருப்பது இயற்கையே. பாவம் தோழிகளாகச் சுற்றியிருக்கும் மற்ற உயிர்களான நமக்குத் தான் அது தெரியவில்லை. அன்னம் புசி என்று வற்புறுத்திக் கொண்டிருக்கிறோம்.

புன்னை மரத்தடியில் பெண்கள் புலம்பச் செய்த சோரன்
என்னை மறந்தானோ இப்போது இக்குல உபகாரன் (அன்னம்)


புன்னை மரத்தடியில் மற்ற பெண்களைப் புலம்ப வைத்து அவர்களுக்கு அருள் செய்த அந்தச் சோரன் இன்று எனக்கருள் செய்யாமல் மறந்தானோ? அங்கே செய்த அதே லீலை இங்கும் செய்து எனக்கு அருள மாட்டானோ? அப்படி அவன் அருளினால் எனது ஏழ்படிகாலும் வீடு பெற்று உய்வோமே! என் குல உபகாரன் என்னை மறந்தானோ? - என்கிறார்.

ஆள் செய்யாமலே நாள் இங்கே அகன்று போகுதேடி
வாழ்விப்பான் என்றே இருந்தேன் மாயம் செய்தானேடி (அன்னம்)


அவனுக்கு ஆட்செய்யாமலேயே, தொண்டு செய்யாமலேயே நாட்கள் இங்கே நகர்ந்து போய்கொண்டிருக்கிறதே; அவனுக்கே ஆட்செய்தல் என்ற வாழ்வினைத் தந்து வாழ்விப்பான் என்றே ஒன்றும் செய்யாமல் காத்திருந்தேனே; மாயம் செய்துவிட்டானே - என்கிறார்.

தாக நீரேனும் கொள் எனச் சாற்றுகிறாய் இங்கே
தாகம் அடங்குமோ தாமோதரனைக் காணாது இங்கே (அன்னம்)

அடடா. தாமோதரனைக் காணாது தாகம் அடங்குமோ இங்கே என்கிறாரே. என்ன ஒரு உணர்வு! தமரேஸ் தின்னு தமரேஸி; தாக் நீஸ்தெநு மோஸ் ஜாரியாசி; தாமோதரா தாமோதரா தொர தய கோன் கலம் அவய் தாமோதரா - ஓடுகின்றதே நாள் ஓடுகின்றதே; பயம் இல்லாதவர்கள் மோசம் போகின்றார்களே; தாமோதரா தாமோதரா உன் தயை எந்த காலம் வரும் தாமோதரா - என்று உருகியராயிற்றே.

சொல்லாதே அடைக்காய் அமுதால் சுகம் என்னேடி
எல்லாருக்கும் தெரியுமே என் இதயம் ஈதன்றோடி (அன்னம்)

உண்ணும் சோறு, பருகும் நீர் இவையெல்லாம் கண்ணன் என்று மேலே சொன்னார். அவை மட்டும் இல்லை தின்னும் வெற்றிலையும் கண்ணனே என்கிறார் இங்கே. தின்னும் வெற்றிலையாய், போகமாய், அவனே இருக்கும் போது வெறும் அடைக்காய் அமுதம் என்ன சுகம் தரும்? என் இதயம் தான் என்ன என்று உங்கள் எல்லோருக்குமே தெரியுமேடி என்கிறார்.

கண்ணேறு படும்படி எங்கெங்கே செல்கின்றானோ
நண்ணப் போய் அழைத்து வாடி நான் காணாது உய்வேனோ (அன்னம்)

நம்மாழ்வார் போல் பாடிக் கொண்டிருந்தவருக்கு கூடல் அழகன் நினைவு வந்துவிட்டது போலும். கூடல் மா நகரில் தானே விட்டுசித்தருக்கு எதிரே பெருமாள் வந்த போது அவனுக்குக் கண்ணேறு பட்டுவிடுமோ என்று பல்லாண்டு பாடினார். இங்கே என்னைத் தவிக்க விட்டுவிட்டு கண்ணேறு படும்படி இப்படி எத்தனை பேர் முன் போய் நிற்கின்றானோ? போய் அவனை அழைத்து வாடி என்கிறார்.

திடுக்குத் திடுக்கென என் நெஞ்சம் திகில் அடைகுது இங்கே
அடுக்கு முறி வெண்ணெய் கண்ணனுக்கு அமுது செய்வது எங்கே (அன்னம்)

கண்ணேறு படும்படி எங்கெல்லாம் சுற்றுகின்றானோ என்று எண்ணும் போதே எனக்கு திடுக் திடுக்கென்று நெஞ்சம் திகில் அடைகின்றதே. அவன் அப்படி கண்ணேறுபட்டு நோய் வாய்ப்பட்டால் அடுக்கு முறி வெண்ணெயை அவன் உண்ண முடியாதே என்று தவிக்கிறார். வெண்ணெய் நிறைய உண்டதற்கு மருந்தாக மண்ணை உண்டாயோ என்றார் நம்மாழ்வார். கண்ணேறு பட்டால் அந்த வெண்ணெயும் அமுது செய்ய இயலாதே என்கிறார் இவ்வாழ்வார்.

தயிர் கடையும் வேளை வந்து தழுவி விளையாடும்
மயிலிறகுக் கொண்டையன் மனம் என்று நம் பால் நாடும் (அன்னம்)

ஆழ்வார்களாய் பாடிக் கொண்டிருந்தவர் இங்கே கோபியரில் ஒருத்தி ஆனார் போலும். தயிர் கடையும் வேளையில் வந்து பின்னே தழுவிக் கொள்வானே. அந்த மயிலிறகுக் கொண்டையன் மனம் என்று நம் பால் விரும்பும்; ஆ ஆ என்று ஆராய்ந்து அருளும் என்று வியக்கிறார்.

மழை இல்லாப் பயிர் அது போல நான் மயங்குவேனோ வாடி
களை எடுக்காத பயிர்கள் தலையெடுக்குமோடி (அன்னம்)

வானம் பார்த்த பூமியில் வாழும் பயிர்கள் போல் வேறொன்றும் கதியாக எண்ணாமல் அவன் அருளே முதற்பொருளாய் கொண்டு வாழும் நாயகி சுவாமிகள் மழையில்லாமல் வாடும் பயிர் போல் அவன் அருள் இல்லாமல் வாடுவதைச் சொல்கிறார். முத்தும் ரத்தினமும் முத்திரைப் பசும்பொன்னும் முதற்பொருள் ஆகவில்லையே என்று இருப்பார்கள் நடுவில் முத்தும் ரத்தினமும் முத்திரைப் பசும்பொன்னும் போன்ற தன் முயற்சியால் அவனை அடைய இயலும் என்று அவ்வழிகளில் முயல்வார்களும் இருந்தால் அவர்களால் இவர்களும் மயங்குவார்களே. களை எடுக்காத பயிர்கள் தலையெடுக்குமோ? ஸர்வ தர்மான் பரித்யஜ்ய என்று ஒரு நிபந்தனை இட்டிருக்கிறானே. அதன் படியல்லவோ நடக்க வேண்டும். என் முயற்சியால் அவன் அருளைப் பெற்றுவிடுவேன் என்ற எண்ணம் களையாக இருக்கிறதே; அதனை அவன் அருளால் நீக்க மாட்டானோ? அவன் அருள் என்னும் மழையை நோக்கும் பயிரான நான் தழைக்க மாட்டேனோ - என்கிறார்.

செழித்திருந்தேனே கண்ணனைச் சேவிக்கும் போதெல்லாம்
குழைத்துக் கிடக்கின்றன பார் குழக்கன்றுகள் எல்லாம் (அன்னம்)

அவனுக்கே தொண்டு செய்து கிடந்த போதெல்லாம் பசுங்கன்றில் ஒன்றான நான் செழித்துக் கிடந்தேனே. இப்போது அவன் அருள் அகன்று போக நானும் என்னை ஒத்த பசுங்கன்றுகளும் குழைத்துக் கிடக்கின்றன பார். கோபாலன் தீண்டினால் அல்லவா அக்குழக்கன்றுகள் மீண்டும் செழிக்கும் - என்கிறார்.

நடனகோபால நாயகி சுவாமிகள் திருவடிகளே அடைக்கலம்.

Sunday, May 10, 2009

ஏழு மலை இருக்க நமக்கென்ன மனக்கவலை?

திருமுருகன் மீதே நிறைய பாடல்களைப் பாடியிருக்கும் கே.பி. சுந்தராம்பாள் அம்மா திருமலைத் தெய்வம் என்ற இந்த திரைப்படத்தில் திருமால் மீதான அருமையான இப்பாடலைப் பாடியிருக்கிறார். திருமுருகன் என்றாலே நினைவில் முன்னிற்கும் நம் அருமை நண்பர் திருமுருகன் அன்பர் முருகனருள் அன்பர்களில் முதல்வர் இராகவப் பெருமாள் இப்பாடலை நின்குழலில் வலையேற்றியிருக்கிறார். இன்று காலையில் தான் அதனைக் கண்டேன். உடனே கண்ணன் அன்பர்கள் இப்பாடலைக் கேட்டு இன்புற கண்ணன் பாடலில் இடுகிறேன்.ஏழு மலை இருக்க நமக்கென்ன மனக்கவலை?
ஏழு ஏழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை!
(ஏழு)

பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு!
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு!
(ஏழு)

கால்வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது!
கைவண்ணம் திரௌபதையின் மானம் காத்தது!
மால்வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது!
மணிவண்ணன் கருணை நம்மை மகிழவைத்தது!
(ஏழு)

ஒரு பிடி அவல் கொடுத்தே குசேலன் உறவு கொண்டான்!
ஓடத்தில் ஏற்றி வைத்தே குகன் உடன்பிறப்பானான்!
தான் சுவைத்தப் பழங்களையே தந்தனள் தாய் சபரி!
தருவதற்கு ஒன்றுமிலை தலைவனே எமை ஆதரி!
(ஏழு)

திரைப்படம்: திருமலைத் தெய்வம்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
இயற்றியவர்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: முருகனருள் கே.பி. சுந்தராம்பாள்
வலையேற்றியவர்: முருகனருள் கோ. இராகவன்

Wednesday, May 06, 2009

கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க..

கடந்த ஒரு மாசத்துக்கும் மேலாக நம்ம மதுரை மக்கள் திருவிழா கொண்டாட்டத்துல இருக்காங்க.. இப்போ தான் மிகச் சிறப்பாக வைகை நகர் அரசி, மதுரை அரசாளும் மீனாட்சி அம்மனுக்கும்,  நம்ம சொக்கருக்கும் திருக்குடமுழுக்கு ரொம்ப அற்புதமா நடந்து முடிந்தது. 

அடுத்ததா, மீனாட்சி அம்மன், சொக்கநாதர் திருக்கல்யாணம்.. பவளக்கனிவாய் பெருமாள் திருப்பரங்குன்றத்தில் இருந்து எழுந்தருளி அன்னையை தாரை வார்த்துக் கொடுக்க, பிள்ளைகள் இருவரும் கூடி இருந்து மற்ற சுற்றமும், ஊராரும் கண்டுகளிக்க திருக்கல்யாணம் சிறப்பே நடந்தேறியது. 

எல்லாம் நல்லாதான் நடந்தது... ஆனா முக்கியமா வரவேண்டிய ஒருவர் ஆளே காணோம்.. மதுரையை விட்டு கொஞ்சம் தொலைவில் இருந்தாலும் நெருங்கிய சொந்தம் தான்.. ஆனாலும் வரலை..  என்ன காரணமா இருக்கும் ??

ஒருவேளை பிரயாணம் பண்ணி வர்ற வசதியில்லையோ ? - அப்புடி சொல்ல முடியாது, தங்கப் பல்லக்கில் ஏறி சொகம்மா வரலாம்... இல்லன்னா.. குதிரையில் ஏறி காத்தா பறந்து வரலாம். இருந்தும் ஏன் வரல ?

ஒருவேளை வைகையில வெள்ளம் வந்து வர முடியாமப் போச்சோ ? அதுக்கும் வாய்ப்பு குறைவுதான்.. சரி அதெல்லாம் அவர் வந்ததுக்கப்புறம் கேட்டுக்கலாம்.. முதல்ல அவர் கிளம்பினாரா இல்லையான்னு தெரியலையே !!
கிளம்பிட்டாராம்பா... அழகர் இன்னைக்கு அழகர் மலையை விட்டு திருப்பல்லக்கில் சுந்தரராஜன் கள்ளழகனாக ஆரோகணித்து விட்டார். இதோ நாமும் கண்டு களிப்போம்... வரும் சனிக்கிழமை.. சித்திரை பெளர்ணமி அன்று அதிகாலை ஆற்றில் மண்டூக முனிக்கு சாப விமோசனம் அளிக்க கிளம்பி விட்டார்.. அழகர் ஆற்றில் இறங்கும் நாளில் அந்த நிகழ்ச்சியை காண்போம்.. இப்போ..

கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க
நம்ம கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க
பல்லாக்கு ஏறி..... மாமதுரை நோக்கி...
பல்லாக்கு ஏறி மாமதுரை நோக்கி கிளம்புறாரு.. வரம் எல்லாம் வாரி வாரி வழங்குறாரு
மீனாட்சி கல்யாணம் நடத்தி வைக்க அழகர் வேணும்
தங்கச்சி மீனாட்சி கல்யாணம் நடத்தி வைக்க அழகர் வேணும்

கள்ளழகரு.... நம்ம கள்ளழகரு
கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க
நம்ம கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க

தல்லாகுளம் வந்து சந்தோஷமா சேர்ந்துட்டாரு அழகரு..அழகரு
எதிர்சேவை முடிஞ்சு ராத்திரி தங்க கிளம்பிட்டாரு அழகரு.. அழகரு
வெட்டிவேர் சப்பரத்தில.. ஆயிரம்பொன் சப்பரத்துல
அழகர் ஆண்டாள் மாலையணிஞ்சு பட்டாடை உடுத்திருப்பாரு

தங்கக்குதிரை ஏறி அழகர் வரும் கண்கொள்ளாக் காட்சியைப் பாரு
வளம் கொழிக்கும் வைகை ஆறு மனுசங்களா ஒடும் பாரு

சனங்களோட சந்தோஷம் ஆர்ப்பாட்டம் அமர்க்களம் பாரு 
மதுரை சனங்களோட சந்தோஷம் ஆர்ப்பாட்டம் அமர்க்களம் பாரு

கள்ளழகரு.... நம்ம கள்ளழகரு
கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க
நம்ம கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க

திருமணம் முடிஞ்ச சேதியக் கேட்டு திரும்பிட்டாரு அழகரு.. அழகரு
வண்டியூர நோக்கி பயணம் போக கிளம்பிட்டாரு அழகர்.. அழகரு
ஓடிக்கிட்டே இருப்பாரு ஓரோரு மண்டபமா.
கூடும் சனம் கூட வரக் ஓடிக்கிட்டே இருப்பாரு

விண்ணதிர மண்ணதிர வானவெடி வேடிக்கையோட
விடிவிடியக் கொண்டாட்டம் கோலாகலக் காட்சி பாரு

ஷேசனோட வாகனத்தில் தேனூர நோக்கி கிளம்பிட்டாரு அழகரு.. அழகரு
முனி சாபம் தீர கருடனோட கிளம்பிட்டாரு அழகரு.. அழகரு
இராமராயர் மண்டபத்தில் கோடி சனம் காத்திருக்க
தசாவதார சேவையோடு முத்தங்கி சேவை தந்து 
கள்ளழகர் வேடத்துல மறுபடியும் கிளம்பிட்டாரு

மாமதுரை வீதியெல்லாம் கலக்கிப்புட்டு

கள்ளழகரு.... நம்ம கள்ளழகரு
கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க
நம்ம கள்ளழகரு கிளம்பிட்டாரு கல்யாணம் பார்க்க.

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP